Sunday, April 21, 2013

2016 தேர்தலில் ம.தி.மு.க தலைமையில் புதிய அணி உருவாகும்.-தமிழருவிமணியன்

காந்திய மக்கள் இயக்கம் சார்பில் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கலந்தர் முன்னிலை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் இலக்கியராஜா வரவேற்றார்.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி காந்திய மக்கள் இயக்க நிறுவன தலைவர் தமிழருவிமணியன் பேசினார். கூட்டத்தில் மாநில பொது செயலாளர்கள் கணேசன், லட்சுமிகாந்தன்பாரதி, மாநில துணைத்தலைவர்கள் நரசிம்மன், கந்தசாமி, மாநில துணை பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொருளாளர் குமரய்யா, தலைமை நிலைய செயலாளர் இனியண்ணன், மாநில செயலாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மறைந்த தினத்தந்தி அதிபர் சிவந்திஆதித்தனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.



முடிவில் சக்திவேல் நன்றி கூறினார்.

கூட்டத்திற்கு பின்னர் தமிழருவிமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி பாடங்கள் வருவதாக செய்தி வருகிறது. இது வரவேற்கத்தக்கது அல்ல. அரசு பள்ளிகளில் கட்டுமானங்கள், கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் கடந்த 22 ஆண்டுகளாக தூக்கு தண்டனையை எதிர்பார்த்து மரண வாயிலில் நிற்கின்றனர். இவர்களது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும் 3 பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

தமிழகத்தில் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் மதுவுக்கு அடிமையாகி உள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. மது விற்பனையில் இலக்கை நிர்ணயித்து செயல் படும் அரசின் போக்கு கண்டனத்துக்குரியது. கல்வி, தொழில், விவசாயம், மின் சாரம் இவற்றில் இலக்கை நிர்ணயித்து அரசு செயல்பட வேண்டும். பூரண மது விலக்கை அமல்படுத்தக்கோரி முதல் கட்டமாக கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 15 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி உள்ளோம். இதை கலால் துறை யிடம் ஒப்படைப்போம். வருகிற 29–ந்தேதி கலால் துறை சம்பந்தப்பட்ட விவா தம் சட்டசபையில் நடக்கிறது. அதே நாளில் மதுவுக்கு எதிராக சென்னை யில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் இனத்துக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் கைகோர்த்துள்ள கட்சிகளை முறியடிக்கும் வகையில் காந்திய மக்கள் இயக்கம் பாடுபடும். தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தக்க பாடம் புகட்டுவோம். பாலியல் வன்முறை குறைய மாணவர்களுக்கு ஒழுக்கம், உயர்பண்பாடு ஆகியவற்றை பாடங்களில் சேர்க்க வேண்டும்.

வருகிற 2016 தேர்தலில் ம.தி.மு.க தலைமையில் புதிய அணி உருவாகும். வைகோ முதல்–அமைச்சராக வர விரும்புகிறோம். அவர் மதுவுக்கு எதிராக வும், அரசியலில் நேர்மையாகவும் செயல்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment