Monday, April 29, 2013

பாவேந்தர் பாரதிதாசன், பாவலர் செய்குதம்பி பாடல்களில் மதுவிலக்கு

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு”

என்று வாழ்நாள் எல்லாம் முழங்கிக் கொண்டிருந்தவர் பாவேந்தர் பாரதிதாசன் (29.04.1891 புதன் இரவு 10.15 மணி - 1964 ஏப்ரல் 21; வாழ்ந்தகாலம் 72 ஆண்டுகள்
71 மாதங்கள் மூன்று வாரங்கள், இரண்டு நாட்கள்)

தமிழர் தலைவர் வைகோ அவர்களை ஆசிரியராகக் கொண்டு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் அதிகார பூர்வ வார ஏடாக உலாவரும் சங்கொலி ஏட்டின் தலைப்பு வரிகளாக ‘பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு’ வரிகளும் புரட்சிக்கவிஞரின் வரிகளாகும். நெஞ்சு றுதிமிக்க வீர உள்ளத்திற்குச் சொந்தமான பாவேந்தர் மதுவிலக்கு பற்றி பாடிய பாடல்கள் இதோ:



21.11.1922 தேசசேவகன்

கே.எஸ்.பாரதிதாசன் என்னும் பெயரில் 21.11.1922 ‘தேசசேவகன்’ இதழில், குடித் துப் பழக்கப்பட்டுக் கெட்டுப் போனவர் பாரத தேவியிடம் தாம் திருந்தி தெளிவு பெற்றுவிட்டோம் என்று கூறுவதைப் போன்று பராபரக்கண்ணி அமைப்பில் பாரதிதாசனார் எழுதிய பாடலின் பகுதிகள் இதோ:

“அம்மா இனிக் குடிக்க மாட்டோம் அதன் தீமை
கைமேற் கனிபோலக் கண்டுவிட்டோம் ஏழைகள்!
பொய்ம்மானைப் பின்பற்றி ராமன் புரிந்தது போல்
இம்மதுவின் மாயங் கண்டிடறித்தலை கவிழ்ந்தோம்!
நஞ்சிருந்த பாண்டத்தை நக்கி வசமிழந்து
நெஞ்சிலும் உரமிழந்து, நிதியிழந்தோம் எந்தாயே!
அறிவு விளக்கை அவிக்கும் மதுக்குடத்தை
மறுபடியும் காசு தந்து வாங்கோம் மறந்துவிட்டோம்!
அறம் உணர்ந்து கொண்டோம் கடைவைத்து அதை விற்கும்
குறிப்பினையும் மாற்றிவிட்டோம் கொற்றத்தனித்தேவி!
ஈன்றாள் வெறுக்க இல்லாள் நடுநடுங்கச்
சான்றோர் அவமதிக்கச் சம்மதியோம் இம்மதுவால்!
கள் என்னும் தாயோடு காமம் கொலை களவு
பிள்ளைக்கும் பெண்ணு மாய்ப்பின் தொடர்தல் கண்டு
கொண்டோம்!
தள்ளாப் பெரியோர் சமூகம் எனையே வெறுத்துத்
தள்ளவைத்த தீ மதுவைத் தள்ளிவிட்டோம் எந்தாயே!
சோர்வு மதிமயக்கம் துன்பம் எல்லாம் ஒன்றாக்கி
ஆர் அனுப்பினார் மது என்று அறியோம் அருந்தேவீ
பருந்துபோல் ஊன் அனைத்தும் தின்னவைக்கும் பாழ் மதுவை
மருந்துக்கும் வேண்டோமே, எங்கள் மலர்த்தேனீ!
குடிக்கும் போதே உயிர்ப்போம்; கூத்தாடும் போதுயிர்போம்!
இடித்து விழுந்தாலுமுயிர்போம்!
இம்மதுவால் நன்மை உண்டோ?

மதுவிலக்கு இயக்கத்தில் பெரும்பங்கு கொண்டு உழைத்த பாவேந்தர் பிறி தொரு சந்தர்ப்பத்தில் பாடிய 16 வரி பாடலில் சில வரிகள்...

மதுவிலக்கு மதுவிலக்கு; மனைவி மக்கள் வாழியே!
மதிகலக்கும் மதுவைவிட்டு மகிழ்வு பெற்று வாழ்குவாய்;
நிதியனைத்தும் வீணில் ஆக்கும்; நிலைமை கண்டு நீங்குவாய்;
நிதிமிகுந்து நலியவைக்கும்; நேசர் கையிலேங்குவாய்
பொறுமை கொண்டு புகழ் அடைந்து பொன்மிகுந்த தமிழிலே
புலமை கொண்டு வாழ்வதென்ற புதுநினைவு கொள்ளுவாய்!
திறல் இழந்து, செயல் இழந்து, தெருவில் எங்கும்
வெறியனாய்த்
திரியவைக்கும் குடியை விட்டுத், தேசசேவை செய்குவாய்!

பாவேந்தர் 1922களில் அப்போதைய காங்கிரஸ்

இயக்கத்தின் மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்திய பாடல்கள்தான்இவை.

செய்குதம்பி பாவலர்

சதாவதானி செய்குதம்பி பாவலர் 1874 சூலை 31 இல் தோன்றியவர். 1907 மார்ச் 10 இல் சென்னை விக்டோரியா நினைவு மண்டபத்தில் கண்ணபிரான் தலை மையில் பாவலர் நூறு செயல்களைக் கொண்ட சதாவதானம் செய்து காட்டி யவர். மகாமதி, தேவாமிர்த பிரசங்கக் களஞ்சியம் போன்ற பட்டங்களைப் பெற்றவர். இந்திய சுதந்திரப் போரில் பங்கேற்றவர். ‘கள்ளைக் குடியாதே’ எனும் தலைப்பில் பாவலர் பாடிய பாடல் இதோ:

கள்ளைக் குடியாதே, ஐயா நீ
கள்ளைக் குடியாதே
கொள்ளை வியாதி மிகும்
கொண்ட அறிவு அழியும்
சள்ளை மலிந்த பல
சங்கடங்கள் சூழ்ந்து வரும்
மானம் அழிவாகும்
மதிப்புக் குறைவாகும்
ஈனம் மலிவாகும்
இடரோ பெருகிவிடும்
உற்றபொருள் அழியும்
ஊரார் பகைவளரும்
குற்ற மிருந்துபல கூடா ஒழுக்கமுறும்
பெண்டு பிள்ளை தாயென்ற
பேதமறியாமற்
கண்டபடி திட்டிக்
கலகமிட நாட்டமிகும்
பித்தம் பிடித்தலையும்
பேய்ப்பட்டி போலுமெத்த
சித்தத் தியக்கேற்றி
சீரழிவில் ஆழ்த்திவிடும்
தந்தை தாய் சுற்றமெலாஞ்
சஞ்சலத்திலாழ வெகு
நிந்தைத் துயருறுத்தி
நிருமூலமாக்கிவிடும்
கண் சுழல வாய் உளறக்
கை கால் தடுமாற
மண் சுழல விண் சுழல
மாயமயக்கம் அளிக்கும்
கள்ளைக் குடியாதே! அய்யா நீ
கள்ளைக் குடியாதே!

என மதுவினால் விளையும் தீமைகளை எளிய நடையில் இதயத்தில் பதியும் வகையில் விவரிக்கிறார் செய்குதம்பி பாவலர்!

தமிழர் தலைவர் வைகோ

‘முழு மதுவிலக்கே நமது இலக்கு’ என தமிழர் தலைவர் வைகோ பொள்ளாச்சி யில் இருந்து நடைப்பயணத்தை மூன்றாவது கட்டமாகத் தொடங்கிவிட்டார். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பூமியாம் ஈரோட்டில் நிறைவு செய் கிறார்.


மதுவின் தீமையை அறிந்து தனது தோப்பிலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்திய பெருந்தகை யாளர் தந்தை பெரியார். அவரது வழியில் மது விலக்கை வலியுறுத்தி நித்தமும் உழைத்திடும் தலைவர் வைகோவின் முயற் சிகளுக்கு தமிழ்ச் சமுதாயமே திரண்டு வந்து முழு ஆதரவு தர வேண் டும். அப்போது முழு மதுவிலக்கு வந்தே தீரும்.


நன்றிகள் 

கட்டுரையாளர் :- செ.திவான்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment