Saturday, April 13, 2013

சவுதி அரேபியாவிலுள்ள கணவரை மீட்க மனைவி கோரிக்கை

வெளிநாட்டில் வேலையின்றி சிக்கித் தவிக்கும் கணவரை மீட்க வலியுறுத்தி அவரது மனைவி மற்றும் மகள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கை மனு அளித்தனர்.

கோவில்பட்டி முகமதுசாலியாபுரத்தைச் சேர்ந்தவர் ஷேக்தாவுத் மகன் பக்கீர் மைதீன் . இவருக்கு ஐசாபானு  என்ற மனைவியும், 11வயதில்  புல்கசன் என்ற மகனும், 6 வயதில் மைதீன்பாத்திமா என்ற மகளும் உள்ளனர். பக்கீர் மைதீன் சவுதிஅரேபியாவில் தமாம் என்ற இடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்காக 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்றாராம்.

அங்கு அவருக்கும், அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.



இதையடுத்து அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் இவரை பணியிலிருந்து விடுவித்து அனுப்பிவிட்டார்களாம். ஆனால் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை திரும்பித் தரவில்லையாம்.

இந்நிலையில் அவர் அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கணவரை மீட்க வலியுறுத்தி ஐசாபானு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மதிமுக பொதுச்செயலர் வைகோ மற்றும் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்துள்ளாராம்.

இந்நிலையில்,ஐசாபானு தனது மகள் மைதீன்பாத்திமாவுடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

பின்னர், கோவில்பட்டி கோட்டாட்சியர் கதிரேசனிடம் மனு அளித்தார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர், நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து, ஐசாபானு தனது குழந்தையுடன் வீட்டுக்குத் திரும்பினார்.

No comments:

Post a Comment