Tuesday, April 16, 2013

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -2

தமிழகத்தில் பூரண மது விலக்கை வலியுறுத்தி ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 3–வது கட்டமாக இன்று (16.04.13 )பொள்ளாச்சியில் இருந்து ஈரோட்டுக்கு விழிப்புணர்வு பிரசார நடை பயணத்தை தொடங்கினார்.

இதன் தொடக்கவிழா மற்றும் பொதுக்கூட்டம் பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் உள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபம் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. அவை தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார்.

அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் வரதராஜன், மாநில விவசாய அணி செயலாளர் பொன்னுசாமி, துணைசெயலாளர் அமிர்தலிங்கம்,தலைமை செயற் குழு உறுப்பினர் நாச்சிமுத்து, மாநில தொண்டர் அணி துணைசெயலாளர் அன்பழகன், மாநில பொதுக்குழு உறுப் பினர் பாங்காருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் வரவேற்று பேசினார். 

பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக ஹைதர்அலி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். 

நடைபயணத்தை பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் வைகோ பேசியதாவது:–

முல்லை பெரியாறு பிரச்சினை, விவசாயிகளை பாதுகாக்க வேண்டிய கடமை, கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படை யினர் அட்டூழியம், தமிழ் ஈழ பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவே மக்களை பாதுகாக்க வேண்டி, பூரண மது விலக்கு அளிக்க கோரி நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறோம்.

துன்பம் வரும் போதுதான் மனிதன் சிந்திக்கிறான். தமிழகத்தில் பல லட்சம் விவசாயிகள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது நிலங்களில் கடும் வெயிலில், உஷ்ணத்தில் உழைக்கிறார்கள். நெருப்பினால் தான் தங்கம் ஜொலிக்கிறது. அது போல் கடும் வெயிலில் நடக்கும் இந்த நடைபயணம் நிச்சயம் வெற்றி பெறும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 1, 863 மதுக்கடைகள் உள்ளன. இதில் தேசிய நெடுஞ் சாலை ஓரங்களில் உள்ள கடைகளை அகற்ற கோர்ட்டு உத்தர விட்டது. பெரும்பாலான இடங்களில் இன்னும் கடைகள் அகற்றப்படவில்லை. ஆனாலும் அகற்றப்பட்ட கடைகளை ஊருக்குள் கொண்டு சென்று வைத்து விடுவார்களோ என்று அச்சப்பட்டோம். அதே நேரத்தில் ஊருக்குள் கடை வைக்க பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நடைபயணத்தினால் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டது.

மதுவினால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட விபத்தில் மட்டும் 15 ஆயிரத்து 453 பேர் இறந்து உள்ளனர். இந்தியாவில் ஒரு ஆண்டில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 810 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 770 குற்றங்கள் மதுவினால் நிகழ்ந்தவை. மதுவின் காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் கடந்த ஒரு ஆண்டில் 676 பாலியல் குற்றங்கள் நடைபெற்றுள்ளன.

பல்வேறு குற்றங்களுக்கு காரணமாக திகழும் மதுவினால் அரசுக்கு வருமானம் தேவையா? மதுவை அறவே ஒழிக்க வேண்டும். வளர்த்து வரும் சமுதாயத்தில் மாணவர்கள் குடிக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் என்னவாகும்?. 

கள்ளச்சாராயத்தை ஒழிக்க மதுக்கடைகளை நடத்துவதாக கூறுகிறார்கள். அதற்காக சாராயத்தை விற்கலாமா?மதுவினால் மனித நேயம் பட்டு போகிறது.

தமிழகத்தில் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, நிதிநீரை இணைக்க வலியுறுத்தி யும், கோவைக்கு குடிநீர் கிடைக்கவும் உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடுகிறோம். நாங்கள் நாட்டுக்காக உழைக்கிறோம். நேர்மையாக உழைக் கிறோம். 


துபாயில் இருந்து இலங்கை தமிழர்களை திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு தற்போது மறுத்துள்ளது மகிழ்ச்சியான செய்தி. தாய் தமிழகத்தைகாக்க பூரண மது விலக்கை வலியுறுத்தி எங்களது நடைபயணம் தொடரும்.

இவ்வாறு வைகோ பேசினார்.

கூட்டத்தில் பொருளாளர் மாசிலமாணி, துணை பொது செயலாளர்கள் நாசரேத்துரை, மல்லைசத்யா, துரை பால கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் கணேசமூர்த்தி எம்.பி. (ஈரோடு), மாரியப்பன் (திருப்பூர்), மோகன்குமார் (கோவை மாநகர்), அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் அர்ஜூன்ராஜ், முன்னாள் எம்.பி. கிருஷ்ணன், கொள்கை விளக்க அணி செயலாளர் அழகுசுந்தரம், மாநில மாணவர் அணி செயலாளர் ராசேந்திரன், வட சென்னை மாவட்ட செயலாளர் ஜீவன், தொண்டர் அணி செயலாளர் பாஸ்கர சேதுபதி, இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி, தமிழக ஓட்டுனர்கள் மற்றும் கால்டாக்சி உரிமையாளர்கள் சங்க மாநில துணை தலைவர் சக்திவேல், ரெட்சன்சி அம்பிகாபதி, தங்கவேல், ராஜி, தர்மராஜ், இளங்கோவன், செல்வராஜ், நடராஜ், ஜெயபாலன், ரவி, வெங்கடேஷ், தீலிபன் முருகேசன், ஈஸ்வரமூர்த்தி, கவுன்சிலர் மறுமலர்ச்சி முரளி உள்பட ம.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். முடிவில் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் குகன் மில் செந்தில் நன்றி கூறினார்.

நடை பயணம் பொள்ளாச்சி நியூ ஸ்கீம்ரோடு, காந்திசிலை, ராஜாமில் ரோடு, திருவள்ளுவர் திடல், மார்க்கெட் ரோடு, கடைவீதி, தெப்பக்குளம் வீதி, பத்ரகாளியம்மன் கோவில் வீதி, கோட்டூர் ரோடு, சமத்தூர், சங்கம்பாளையம் வழியாக கோட்டூரை அடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடந்தது.

(புதன் கிழமை) கோட்டூரில் இருந்து புறப்பட்டு, அங்கலக்குறிச்சி, மஞ்சநாயக் கனூர், பாறமடை யூர், கரட்டூர் செல்கிறது. கரட்டூரில் இரவு பொதுக்கூட்டம் நடக்கிறது. 18–ந் தேதி உடுமலையில் தொடங்கி தாராபுரம், வெள்ளக்கோவில், முத்தூர், ஒத்தக்கடை, சென்னிமலை, சித்தோடு குமாரபாளையம், பள்ளி பாளையம் வழியாக வருகிற 28–ந்தேதி ஈரோட்டை அடைகிறது.

No comments:

Post a Comment