Wednesday, April 17, 2013

பதினெண்கீழ்க்கணக்கில் மதுவிலக்கு

அன்னைத்தமிழின் உயர்விற்கும் சிறப்பிற்கும் சாட்சியங்களாகத் திகழ்பவை சங்க இலக்கியங்கள் ஆகும்.திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும் பாணாற்றுப்படை, மலைபடுகடாம், முல்லைப் பாட்டு, குறிஞ்சிப்பாட்டு,பட்டிணப்பாலை, நெடுநல்வாடை,மதுரைக்காஞ்சி ஆகிய பத்துப்பாட்டும்,

அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை,ஐங்குறுநூறு, கலித்தொகை முதலிய

அகப்பொருள் (காதல்) பற்றிய ஐந்து நூல்களும், பரிபாடல் என்ற காதல்,தெய்வ வழிபாடு பற்றிய நூலும்,பதிற்றுப்பத்து என்ற சேரர் வரலாற்றைக்கூறும் நூலும், புறநானூறு என்ற தமிழக மன்னர் சிற்றரசர், வள்ளல், சிறந்த மக்கள் முதலா னோரின் பெருஞ்செயல்களைப்பாடும் நூலும் ஆக பதினெட்டு நூல்கள் பதினெண்மேல்கணக்கு நூல்கள் ஆகும்.



பதினெண்கீழ்க்கணக்கு

மக்களுக்கு நீதி போதித்திடும் வகையில் அமைந்தவை பதினெண்கீழ்க்கணக்கு
நூல்கள் ஆகும்.

எத்திக்கும் புகழ்மணக்கும் தித்திக்கும் தலையாய நீதி நூல் திருக்குறள்.

நாலடியார், நான்மணிக்கடிகை,திரிகடுகம், ஏலாதி, இன்னாநாற்பது,இனியவை நாற்பது, பழமொழி,ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி,கார்நாற்பது, திணை மொழி ஐம்பது,திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை எழுபது, கைந்நிலை, சிறுபஞ்சமூலம்,இன்னிலை, களவழி நாற்பது ஆகியவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்பர் மு.வ. (தமிழ் இலக்கிய வரலாறு பக் 80)
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் சொல்லப்படும் மது ஒழிப்புக் கருத்துகள் இதோ:

திருக்குறளில்...

உலகோர் போற்றிப்புகழும் உன்னதமான திருக்குறளில் திருவள்ளுவர் கள்ளுண்ணாமை என்ற அதிகாரமே தந்து பத்து திருக்குறட்பாக்களில் மதுவிலக் கை வலியுறுத்தியுள்ளார்.

மயக்கும் குடியைப் பருகாது இருத்தல் பற்றி‘கள் உண்ணாமை’எனும் அதிகாரத் தில் 921 ஆவது குறள் முதல் 930 ஆவது குறள் வரைப் பாடியுள்ளார்.அனைவர் இல்லங்களிலும் திருக்குறள் இருக்கும் என்பதால், (இருக்க வேண்டும்; இல்லை யென்றால் வாங்கி வைத்திடுங்கள்; படியுங்கள்;) பாடல்களைச் சொல்லாது வள்ளுவர் சொன்ன கருத்துகளின் சுருக்கம் இதோ:

எப்பொழுதும் மது அருந்துவதில் நாட்டம் கொண்டுவிடாது குடிப்பவரைக்கண்டு
அவர்களுடைய பகைவர் அஞ்சமாட்டார்; மேலும் குடிவெறியர் தாம் முன்பு
பெற்றிருந்த செல்வாக்கையும் நற்பெயரையும் இழந்துவிடுவார்கள்.

மயக்கம் தரும் கள்ளை ஒருபோதும் உண்ணாது இருக்க; (உண்ணற்ககள்ளை 922) தம்மக்கள் எக்குற்றஞ்செய்யினும் பொறுத்துக் கொள்ளும் மட்டற்ற அன்புள் ள தாய் முன்பும் கள் உண்டு வெறித்தல் துன்பந்தருவதாகும். (923 குறளுக்கு மொழிஞாயிறு பாவாணரின் திருக்குறள் தமிழ் மரபுரை சுருக்கம் பக் 186)

எல்லோரும் இகழும் அளவில் கள்குடித்து குடும்பப் பெருமையைச் சிதைப்ப வரைக் கண்டு நாணம் என்று சொல்லப்படும் பெண் தெய்வம் முகத்தில் விழிக்கவும் அருவருத்துப் புறங்காட்டி நிற்பாள்.
குடிப்பவர் நாள்தோறும் நஞ்சு உண்பவர்

ஒருவன் மதுவை விலை கொடுத்து வாங்கி குடிவெறியில் மயங்கிக் கிடப்பது,
அறிவற்ற சிறுவரும் அறிவு திரிந்த பித்தரும் போன்று செய்யும் முறையறியாத செயலாகும்.

உறங்குபவர் உயிர் உடையரேனும் அறிவும் மன உணர்வும் அந்நிலையில்
இல்லாததால் இறந்தவரே. அதுபோல மது அருந்துபவரும் இறவாது இருப்பி னும், அறிவையும் உடல் நலத்தையும் என்றும் இழத்தலால் நாள்தோறும் நஞ்சு உண்பவரே ஆவர்.

குடிப்பவரைக் கண்டால் ஊர்மக்கள் எள்ளி நகையாடுவர்.குடிப்பதை மறைவாகச் செய்பவன்,தான் குடிக்காத வேளையில், நான் குடிப்பதை அறியேன் என்று தன்னை ஒழுக்கம் உள்ளவனாகக்காட்டிக் கொள்வதை விட்டுவிடுக;ஏனெனில் அவன் குடிக்கும்போது உண்மை வெளிப்பட்டுவிடும்.

மது மயக்கத்தில் வீழ்ந்து கிடப்பவனிடம் சென்று அறிவுரைக் கூறித்தெளிவு றுத்த முயல்வது நீர் நிலையில் தண்ணீரில் மூழ்கியவனை விளக்கு ஒளியால்
தேடிப்பார்ப்பது போன்ற செயலாகும்.

கள்ளை விரும்புபவர் பகைவரால் அஞ்சப்படார்; பழைய புகழையும் இழப்பர். உள்ளூர் மக்களால் எப்பொழுதும் இகழப்படும் கள் உண்பவர்கள் மது அருந்து பவர்கள்.நஞ்சு உண்பவர்கள் என்று வள்ளுவர் வேகமாக மதுவின் கொடுமை யைக் குறிப்பிடுகிறார் (திருக்குறள் உரை வரும் பொருட்பால், 1951, ச.தண்ட பாணி தேசிகர், பக் 832)
நாலடியார்

சமணமுனிவர்கள் பாடிய நாலடியாரில் 157 ஆவது பாடல் இதோ:

இளவழகனார்

கள்ளார், கள்ளுண்ணார், கடிவ கடிந்தொரீஇ

எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார் -தள்ளியும்

வாயிற் பொய் கூறார், வடுவறு காட்சியார் சாயிற் பரிவ திலர்.

மாசு நீங்கிய தெளிவினையுடையார் பிறர் பொருளைக்கவரார்; கள் அருந்தார்.
விலக்கத் தகுந்த தீயவற்றை விலக்கி அவற்றின் நீங்கித் தூயராகியிருப்பார்.

(நாலடியார். தி.சு.பாலசுந்தரம்பிள்ளை இளவழகனார் உரை 1968, பக் 125)

எம்.ஆர்.கந்தசாமிபிள்ளை - முத்துரத்ன முதலியார் - கோபாலன்

குற்றமற்ற அறிவுடையார் தாம் களவு செய்வாரையும், கள் உண்பாரையும்
காண்பதற்கு உடன்படார். (நாலடியார் உரை வளம். தஞ்சை ஸரஸ்வதிமஹால்          
வெளியீடு, 59, முத்துரத்ன முதலியார், எம்.ஆர்.கந்தசாமிபிள்ளை, 5, கோபாலன்
பதிப்பு 1953, பக் 449)

Drink not toddy

They steal not, drink not toddy, they shun actions for bidden, they scorn not others nor speak ill of them ...”

நாலடியார் கோமளபுரம் இராசகோபால பிள்ளை, கோ.வடிவேலு செட்டியார்.
ஆங்கில மொழிபெயர்ப்பு, 1909, பக் 152

டி.தீனதயாளுநாயுடு

அறிவுடைய மேன் மக்கள் கள்ளைக்குடிக்கமாட்டார். (நாலடியார்,டி.தீனதயாளு நாயுடு உரை, சென்னை,1943 பக் 111)

மதுரை முதலியார்

குற்றமற்ற அறிவுடைய மேன்மக்கள் கள் குடிக்கமாட்டார்.(கு.மதுரை முதலி யார், நாலடியார், 1991, பக் 59)

வீ.ஆறுமுகஞ்சேர்வை

விலக்கத் தக்கவற்றை வெறுத்துத்தள்ளி, அதனால் குற்றமற்ற அறிவினை யுடைய மேன்மக்கள் பிறர், பொருளைத் திருடார்,மது அருந்தார்.(வீ.ஆறுமுகஞ் சேர்வை,ஞா.முனுசாமி முதலியார், நாலடியார் 1932, பக் 366)


முதுமொழிக்காஞ்சி

மதுரைக் கூடலூர் கிழார் பாடிய முதுமொழிக்காஞ்சியில் சிறந்த பத்து,அறிவுப் பத்து, பழியாப்பத்து, துவ்வாப் பத்து, அல்லபத்து, இல்லைப்பத்து,பொய்ப்பத்து, எளியபத்து, நல்கூர்ந்த பத்து, தண்டாப்பத்து என்று பத்துப் பத்தாக 100 வரிகள் பாடியுள்ளார். அதில் ஏழாவதாக வரும் பொய்ப்பத்தில் மூன்றாவது வரி ‘கள் உண்போர் சோர்வு இன்மை பொய்’ என்கிறார்.

மது அருந்துபவர் கள் உணர்ச்சிச்சோர்வும், கண் சோர்வும், உடல் சோர்வும்,
உடைச்சோர்வும் கண்டு, யாமும் அவ்வாறு கெடுவோம் ஆகாதே என்று உள்ளும் உபாயம் அறியாது, மற்று இதுவே சோர்வு என்று அறிக’ என்று
விளக்கம் தருவர்.

கி.வா.ஜகந்நாதன்

கள் உண்பான் சோர்வு பெறுவான் என்பர் கி.வா.ஜகந்நாதன் (திருக்குறள்
ஆராய்ச்சிப் பதிப்பு, 1963, பக் 562)

புலவர் அ.மாணிக்கனார்

கள்ளைக் குடிப்பவன் அறிவு ஒழுக்கத்தில் தவறுவான். கள்ளைக் குடிப்பவன் அறிவு ஒழுக்கத்தில் தவறாமல் இருப்பது இல்லை.(பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஐந்தாம் தொகுதி, 1999, பக் 37)

செவ்வரண்

திருவாவடுதுறை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்கத் தம்பிரான் சுவாமிகளால்
பதிப்பிக்கப்பட்ட முதுமொழிக்காஞ்சிக்கு, செவ்வரண் தந்துள்ள உரையில் (பக்16)

மதுபானம் பண்ணிய ஒருவன் நான் அறிவில் சோரம் இல்லாது இருக்கின்றேன் என்பது பொய் என்று விளக்கம் தந்துள்ளார்.
தமிழர் தலைவர் வைகோ

“முழு மதுவிலக்கு; அதுவே நமது இலக்கு” என்ற முழக்கத்துடன் மூன்றாவது கட்ட பிரச்சார நடைப் பயணத்தை வருகிற ஏப்ரல் 16 இல் பொள்ளாச்சியில் தொடங்கி, ஏப்ரல் 28 இல் ஈரோட்டில் நிறைவடையும் வகையில் தமிழர் தலைவர் வைகோ தனது இலட்சியப்பயணத்தை வகுத்துள்ளார். அவர்களது எண்ணம் முழு வெற்றி பெற தமிழகத்தில் மது அடியோடு ஒழிய அனைவரும்
போராடுவோம், தலைவர் வைகோ காட்டும் வழியில்!

மது ஒழிக! மது ஒழியட்டும்!!

நன்றிகள் 

கட்டுரையாளர் :- செ.திவான்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment