Friday, April 26, 2013

“சுய நிர்ணய உரிமையும், பொது வாக்கெடுப்பும்”-பகுதி 3

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே

“சுய நிர்ணய உரிமையும், பொது வாக்கெடுப்பும்” என்ற தலைப்பில்,11.02.2013 அன்று, தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்கத்தில், மதிமுக கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் உரை ஆற்றினார்.

சென்ற பகுதியில் வெளியான அவரது உரையின் தொடர்ச்சி வருமாறு:


இங்கிலாந்துதான் பொறுப்பு

இதைத்தான், 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள், நான் நெஞ்சார நேசிக் கின்ற பிரபாகரன் பிறந்த நாளில், லண்டன் மாநகரில் நாடாளுமன்றத்துக்கு
அருகில் இருக்கின்ற ஒரு அரங்கத்தில்,பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கள் அமர்ந்து இருந்த அந்தக்கூட்டத்தில் சொன்னேன்.



ஈழத்தமிழர்கள் ஒரு தனி தேசிய இனம்.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தனி
அரசு அமைத்து வாழ்ந்தவர்கள். அந்தத் தீவுக்கு ஒல்லாந்தர்கள் வருவதற்கு
முன்பு, போர்த்துகீசியர்கள் வருவதற்கு முன்பு, நீங்கள் அங்கே கால் பதிப்ப தற்கு முன்பு, அவர்கள் தனி அரசு அமைத்து ஆட்சி நடத்தி வந்தார்கள். ஆனால்,
நீங்கள், உங்கள் நிர்வாக வசதிக்காக, தமிழர்கள், சிங்களர்கள் என இரண்டு
தனித்தனித் தேசிய இனங்களையும், உங்கள் அதிகார நுகத்தடிக்கு உள்ளே,
ஒரே அமைப்பாகக் கொண்டு வந்து விட்டீர்கள்.

1948 ஆம் ஆண்டு, பிப்ரவரி 4 ஆம் நாள்,இலங்கைத் தீவுக்கு விடுதலை அளித்து
விட்டு வெளியேறினீர்கள். ஆனால்,எங்கள் மக்களைக் காவு கொடுத்து விட்டீர் கள். சிங்களவனின் அடிமைப் பிடிக்கு உள்ளே சிக்க வைத்து விட்டீர்கள்.அவன், எங்கள் தமிழர்களின் மொழி உரிமையை மறுத்தான். சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்றான். இந்திய வழித்தோன்றல்களான பத்து இலட்சம் தமிழர்களின் குடி உரிமையைப் பறித்தான்.

அவர்கள் 100, 150 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து சென்றவர் களின் வழித் தோன்றல்கள். ஆனால்,அந்த மண்ணிலேயே பிறந்தவர்கள்.தங்கள் இரத்தத் தை, வியர்வையைக் கொட்டி, இலங்கையை வளப்படுத் தியவர்கள். அவர் களுடைய குடிஉரிமையைப் பறித்தார்கள். அவர்கள் நியாயம் கேட்டார்கள். இராணுவத்தைக் கொண்டு அவர்களை நசுக்கினார்கள். 



எங்கள் கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை இடித்தார்கள். எங்கள் மொழியை ஒடுக்கினார்கள். சம உரிமை உள்ளவர்களாக எங்கள் மக்கள் அங்கே வாழ முடியவில்லை. நீதி கேட்டவர் களுக்கு, இராணுவம் துப்பாக்கித் தோட்டாக் களையே பரிசாகக் கொடுத்தது.

எங்கள் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.எங்கள் பெண்களைப் பாலியல் வன்
கொடுமை செய்தார்கள். அவர்களையும் கொன்று குவித்தார்கள். இதற்கெல் லாம் காரணம் நீங்கள்தான் என்று,அவர்களிடமே சொன்னேன்.

மன்னிக்க வேண்டும் இப்படிச் சொல்லுவதற்காக, உங்களால்தான் ஏற்பட்டது
இந்த நிலைமை. நீங்கள்தான் சிங்கள வனிடம் அடிமைகளாக ஆக்கிவிட்டுப்
போய்விட்டீர்கள்.

கிழக்குத்தைமூர் பிரச்சினையில் போர்ச்சுகல் நாட்டுக்குப் பொறுப்பு இருந்த தைப் போல, ஈழத்தமிழர்களைப் பொறுத்தமட்டில், உங்களுக்குப் பொறுப்பு இருக்கின்றது. எனவே, தமிழ் ஈழம் அமைவதற்கு, ஒரு சுதந்திர வாக்கெடுப்பு நடத்துவதற்கு நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள். தமிழர்களின் தாயகப் பகுதிகளில் இருந்து சிங்களவர்களை வெளியேறச் சொல்லுங்கள் என்றேன்.

ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பு

என்னுடைய அன்புக்கு உரியவர்களே, இதோ இந்த ஆண்டு, பிரித்தானிய நாடா ளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேறி விட்டது. கேட்டால், வியப்பு அடைவீர் கள். ஆம்; ஸ்காட்லாந்து, தனியாகப் பிரிந்து செல்லுவதற்கு, பொது வாக்கெ டுப்பு நடத்துவதற்கு, பிரித்தானிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து இருக் கின்றது. அடுத்த ஆண்டு, அந்தப் பொது வாக்கெடுப்பு நடக்க இருக்கின்றது.

இத்தனைக்கும், ஸ்காட்லாந்து மக்கள் என்ன பிரித்தானியர்களால் அடிமைப்
படுத்தப்பட்டு இருக்கின்றார்களா? அன்றைக்கு வில்லியம் வாலஸ் வாளை
உருவிய காலம் வேறு. ராபர்ட் புரூஸ் படையெடுத்துத் தோல்வி கண்டு, சிலந்தி வலையின்மூலமாகப் பாடம் பெற்று, மீண்டும் படை திரட்டி, ஏழாவது
முறை வென்று, ஸ்காட்லாந்து தனி அரசை நிறுவிய காலம் வேறு. ஆனால்,
இன்றைக்கு ஸ்காட்லாந்து மக்கள், தனி நாடாளுமன்றம் அமைத்துக் கொண்டு
இருக்கின்றார்கள். ஐக்கியப் பேரரசு (United Kingdom) என்ற அமைப்புக்கு உள்ளே, இங்கிலாந்து மக்களோடு சம உரிமை பெற்றவர்களாக வாழ்கின்றார்கள். அவர்களுக்கு எதற்குத் தனி நாடு?

தமிழர்களுக்கு ஏன் தனிநாடு வேண்டும்? என்று கேட்கின்ற நண்பர்களுக்குச்
சொல்லுகிறேன். ஸ்காட்லாந்து மக்களுக்கு எந்தத் துன்பமும் இல்லை.இந்த ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற ஆண்டி முர்ரே
ஒரு ஸ்காட்லாந்துக்காரர். அவரது வெற்றியை இங்கிலாந்தும் கொண்டாடு
கின்றதே?

நான் ஒரு முறை லண்டனில் இருந்து விமானத்தில் சென்று கொண்டு இருந்த போது, என் பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்தவரோடு பேசிக்கொண்டு இருந்தேன். நீங்கள் பிரிட்டிஷ்காரரா? என்று கேட்டேன். அதைக் கேட்டவுடன், அவருக்கு எவ்வளவு கோபம் என்று நினைக் கின்றீர்கள்? நான் கேட்டு முடிப் பதற்கு உள்ளாகவே, கன்னத்தில் அடித்தாற் போல அவர் சொன்னார்: I am not a
British. I am a Scottish.. நான் ஒன்றும் இங்கிலாந்துக்காரன் இல்லை, நான் ஒரு
ஸ்காட்லாந்துக்காரன் என்று. அதைக் கேட்டு நான் அதிர்ந்து விட்டேன்.

ஸ்காட்லாந்து பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகவில்லை; அவர் களுடைய குழந்தைகள் கொல்லப் படவில்லை. ஆனால், அவர்கள்,தனிநாடாக பிரிந்துசெல்லப் பொது வாக்கெடுப்பு.

ஈழத்தின் நியாயம்

நான் உலகத்தின் மனசாட்சியின் கதவுகளைத் தட்டுகிறேன். எங்கள் இனம் அழிக்கப்படுகிறபோது, எங்கள் இனம் கரு அறுக்கப்படுகிறபோது, எங்கள் குழந்தைகள் கொல்லப்பட்ட தற்குப்பிறகு, இலட்சக்கணக்கானவர்கள் பட்டினி போட்டுக் கொல்லப்பட்டதற்குப் பிறகு, மருத்துவமனைகள் மீது குண்டு களை வீசிக் கொல்லப்பட்டதற்குப் பிறகு, மருந்துகள் இன்றிச் செத்ததற்குப்பிறகு,
ஏழு வல்லரசுகளின் ஆயுத உதவிகளைக் கொண்டு, எவராலும் வெல்ல முடி யாத விடுதலைப்புலிகளின் படையைப் போரில் பின்னடையச் செய்வதற்கு ஒரு வல்லரசாகிய இந்தியா ஆயுதம் கொடுத்து உதவியதற்குப் பிறகு, தமிழர் தாயகத்தில் சிங்களவன் குடியேற்றம் நடக்கின்ற போது, எங்கள் கோவில் களில் அவன் சிங்கள பெளத்த விகாரைகளைக் கட்டுகின்றபோது, எங்கள் பெயர் களை அழிக்கின்றபோது, எங்கள் கல்லறை களை இடித்து விட்டு, சிங் களப் படை முகாம்களை அமைக்கின்றபோது, எங்கள் மொழியை அழித்து விட்டு, அவன் மொழியில் எழுதுகிறபோது, இனி எப்படிச் சேர்ந்து வாழ முடியும்?

என் அன்பர்களே, உங்கள் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டனுக்குப்பாட்டன்,
வேலும் வாளும் தாங்கி, மரக்கலங்களில் சென்று வாழ்ந்த அந்தக் காலத்துக் குப் பிறகு, தமிழனின் வீரத்தை நிலை நாட்டியவர்களின் வழித்தோன்றல்களே,
உங்களைக் கேட்கிறேன்.

இன்றைக்கு அகிலத்தின் குரல் கேட்கின்ற போது, 2 இலட்சத்து 52 ஆயிரம் மக் கள் தொகையைக் கொண்ட நியூ கேலடோனியா என்ற ஒரு பசிபிக் பெருங் கடல் தீவு ஒன்று, பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு உள்ளே இன்றைக்கும் இருக்கின் றது. அங்கே பொது வாக்கெடுப்பு நடக்கப் போகின்றது. ஐ. நா.அறிவித்து இருக் கின்றது. 2014 இல் இருந்து, 2019 க்குள், அவர்கள் சுதந்திர நாடாக இருப்பதற் காகப் பொது வாக்கெடுப்பு நடக்கப் போகிறது.

அடுத்து போகெய்ன்வில்லா என்று ஒரு சிறு நாடு. பூக்களைத் தூவுகின்ற மரத் தின் பெயர். அது, Pupva New Guinea ஆதிக்கத்துக்குள் இருக்கின்றது.மொத்த மக்கள் தொகை, 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர். அங்கே பொது வாக்கெடுப்பு
நடக்கப் போகின்றது.

1975 இல், தந்தை செல்வா அவர்கள்,‘எங்களுக்கு இங்கே உரிமைகள் மறுக்கப் படுகின்றன; எனவே, எங்கள் மக்கள் இனி உங்களோடு சேர்ந்து இருக்க முடி யாது; எங்களை நசுக்குகின்றீர்கள்; நாங்கள் ரோமானிய அடிமைகள் அல்ல;
நாங்கள் சுதந்திரமாக வாழ விரும்பு கிறோம்; அதற்காக, நான் எனது நாடாளு மன்ற உறுப்பினர் பொறுப்பை விட்டு விலகுகிறேன். சிங்களவர்களுக்கு நான் சவால் விடுகின்றேன்: அதே காங்கேசன்துறை தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் நான் மீண்டும் போட்டி இடுவேன். சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் என்பதையே என் மூல முழக்கமாக வைத்துப் போட்டி இடுகிறேன். மக்கள் அதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் எனக்கு வாக்கு அளிக்கட்டும். இல்லை, என் கருத்து தவறு என்றால், மக்கள் என்னைத் தோற்கடிக்கட்டும்’ என்றார்.

ஆனால், இரண்டு ஆண்டுகள் அங்கே தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டது
சிங்கள அரசு. கடைசியில், வேறு வழி இன்றித் தேர்தலை நடத்தியது. 78 விழுக் காடு மக்கள், தந்தை செல்வாவை ஆதரித்து வாக்கு அளித்தனர். ‘சுதந்திரத்
தமிழ் ஈழக் கோரிக்கையை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்’ என்று அவர் அறிவித்தார். நாடாளுமன்றம் சென்றார். 14 நாடாளுமன்ற உறுப்பினர் களோடு, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான அறிவிப்பை வெளியிட்டு விட்டு, நாடாளுமன்றத் தை விட்டு வெளியே வந்தார்.

வட்டுக்கோட்டை பிரகடனம்

அனைத்துத் தமிழ் அமைப்புகளின் கூட்டத்தை 1976 இல் வட்டுக்கோட்டையில் பண்ணாகம் என்ற இடத்தில் கூட்டினார். மே 14 ஆம் நாள்.அங்கே ஒரு தீர்மா னத் தை நிறைவேற்றினார். அதுதான், புகழ் பெற்ற வட்டுக்கோட்டை பிரகட னம் ஆகும். 

நீங்கள் வழக்குரைஞர்கள். ஒரு வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற் காக, நீங்கள் இரவுபகலாக, நள்ளிரவுக்கும் மேல் கண்விழித்துப் பணி ஆற்று
கின்றீர்கள். எப்படிப்பட்ட சொற்களை எழுதினால், உங்கள் முறையீடு சரியாக
இருக்கும் என்பதைத் தெரிவு செய்து எழுதி, உங்கள் வழக்கைத் தாக்கல் செய் கின்றீர்கள்.

நீங்கள் தயவுசெய்து, இணையதளத்தில்,இன்றோ நாளையோ அல்லது வேறு
எப்பொழுதோ, உங்களுக்கு வசதிப்படுகின்ற வேளையில் ஒரு பத்து மணித் துளி களைச் செலவிட்டு, வட்டுக்கோட்டை தீர்மானம் என்று தேடிப்பார்த்தீர் கள் என்றால், புகழ்பெற்ற அந்தத் தீர்மானத்தை நீங்கள் படித்துப் பார்க்கலாம்.

அந்தத் தீர்மானத்தைத் தொடங்கிய முதல் சொல்லில் இருந்து கடைசிச் சொல்
வரை, ஒரு நிறுத்தற்குறி கூடக் கிடையாது; ஒரு முற்றுப்புள்ளி கிடையாது. தமிழர்கள் எவ்வளவு கூர்த்த மதி படைத்தவர்கள், அறிவு ஆற்றல் நிறைந்தவர் கள் என்பதை அந்தத் தீர்மானம் எடுத்துக் காட்டும். அற்புதமாக வடித்து இருக் கின்றார்கள். சுதந்திரமான இறையாண்மை உள்ள, மதச்சார்பு அற்ற,தமிழ் ஈழ சமதர்மக் குடியரசு; அதுவே எங்கள் இலக்கு என்று பிரகடனம் செய்து இருக் கின்றார்கள்.

இனி, இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்லட்டும் என்று அறிவித்தார் 
தந்தை செல்வா. 

ஈழத்தில் பொது வாக்கெடுப்பு முடிந்து விட்டது 

இதற்குப்பிறகு, 77 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கின்றது.தந்தை செல்வா வழிகாட்டிய பாதை யில், சுதந்திரத் தமிழ் ஈழம் என்ற கொள்கையை முன்வைத்துத் தமிழர் கூட்டணி தேர்தலைச் சந்தித்தது. 19 இடங்களில் போட்டி யிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றனர். 90 விழுக்காடு தமிழ் மக்கள் இந்தக்
கூட்டணியை ஆதரித்து வாக்கு அளித்தார்கள். இதுதான், பொது வாக்கெடுப்பு.

காஷ்மீரில் மூன்று சட்டமன்றத் தேர்தல்கள் வழியாக நாங்கள் நடத்தி விட் டோம்; அதுதான் பொது வாக்கெடுப்பு, என்று இந்தியப் பிரதிநிதி முகமது கரீம் சாக்ளா, ஐ.நா. சபையில் சொன்னார் அல்லவா? தேர்தலே பொது வாக்கெடுப்பு தான் என்றார் அல்லவா?

அதுபோல, 1977 ஆம் ஆண்டு, இலங்கை நாடாளுமன்றத் தேர்தலே ஒரு பொது
வாக்கெடுப்புதான். 95 விழுக்காடு தமிழ் மக்கள், நாங்கள் ஒரு சுதந்திர நாட்டை
அமைத்து வாழ விரும்புகிறோம் என்பதைப் பதிவு செய்ததே, ஒரு பொது வாக் கெடுப்புதான்.

அடுத்து, 1983 ஆம் ஆண்டு, அங்கே உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன.
இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் பங்கு ஏற்க வேண்டாம் என்று, விடுதலைப்புலி கள் கோரிக்கை விடுத்தனர். 99 விழுக்காடு தமிழ் மக்கள் வாக்கு அளிக்க வில்லை. அதுவும் ஒரு பொது வாக்கெடுப்புதான்.

84 இல் (2004) இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைமையை ஏற்றுக்கொண்டோம் என்று அறிவித்த தமிழர் கட்சி கள், 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 22 இடங்களில் வெற்றி பெற்றன. 95 விழுக்காடு தமிழ் மக்கள் ஆதரித்தனர்.

2005 ஆம் ஆண்டு, குடியரசுத் தலைவர் தேர்தல். இந்தத் தேர்தலில் வாக்கு அளிக்க வேண்டாம் என்று விடுதலைப் புலிகள் கேட்டுக் கொண்டனர்.95 விழுக் காடு தமிழ் மக்கள் வாக்கு அளிக்க வில்லை. இராணுவ அடக்குமுறையால்,1.23 விழுக்காடு மக்கள் யாழ்ப்பாணத்தில் வாக்கு அளிக்கும்படி கட்டாயப்படுத்தப் பட்டனர். அதுவும் பொது வாக்கெடுப்புதான். 

இத்தனை பொது வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டு விட்டன. இன்றைக்கு, தமிழர் பகுதிகளில் சிங்களர் களைக் கொண்டு வந்து குடி அமர்த்து கிறார்கள். மானத் தோடு சுதந்திரமாக வாழ்வதற்காகத்தான் தமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்,
இரத்தம் சிந்தினார்கள். எனவே, தமிழ் ஈழம் அமைப்பதற்காகப் பொது வாக் கெடுப்பு நடத்துங்கள் என்று ஐ.நா.வின் கதவுகளைத் தட்டுகிறோம்.

யாராவது, ஈழத்தில் போர் முடிந்து விட்டது என்றோ, தமிழ் ஈழக்கோரிக்கை
ஒடுங்கி விட்டது என்றோ நினைத்தால், அவர்கள் வரலாறைச் சரியாகப்புரிந்து
கொள்ளாதவர்கள். ஈழத்தமிழர்கள் செய்த உயிர்த்தியாகம், சிந்திய செங்குருதி அவர்களது கோரிக்கையை வெற்றி பெறச் செய்யும்.

தமிழகம்தான் காரணம்

ஈழத்தில் இவ்வளவு துயரங்களுக்கும் யார் காரணம் தெரியுமா? என்னையும்
சேர்த்துத்தான் சொல்லுகிறேன், இந்தத் தமிழகம்தான் காரணம். மேற்கு நாடு களைச் சேர்ந்தவர்களோடு பேசுகிற போது, அவர்கள் என்னிடம் கேட்கின்ற
கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை; வெட்கித் தலை குனிய வைக்கின்றன. அவர்கள் கேட்கிறார்கள்.

உலகத்தில் மனித உரிமைகள் அழிக்கப் பட்டால்,எல்லா இன மக்களும் சேர்ந்து அவர்களை ஆதரிக்கின்றார்களே, நீங்கள் ஏழு கோடிப் பேர் தமிழ்நாட்டில் வாழு கின்றீர்களே? இன அடிப்படையில், இரத்த உறவுகள் கொண்டவர்கள்தானே?

நீங்கள் ஏழு கோடிப் பேர் இங்கே இருந்தும், அங்கே இவ்வளவு படுகொலைகள் எப்படி நடக்க முடிந்தது? அவர்களைப் பாதுகாக்க வேண்டியது நீங்கள்தானே? என்று கேட்கிறார்கள்.

ஒருவேளை, இந்த ஏழு கோடிப் பேர் இல்லை என்றால், அவர்களுக்கு உலகத் தின் பல நாடுகளின் ஆதரவு கிடைத்து, தமிழ் ஈழம் என்றோ மலர்ந்து இருக்கும். இந்த ஏழு கோடிப் பேர் வாழுகின்ற இந்தியாவைக் கடந்து, அனைத்து உலக நாடு கள் இந்தப் பிரச்சினையில் தலையிடாது; நீங்கள் ஏழு கோடிப் பேர் இந்தி யா வில் இருப்பதால், உங்களுக்கு இல்லாத அக்கறை நமக்கு எதற்கு என்ற எண்ணத்தை, இந்தியா ஏற்படுத்துகிறது.

இலங்கையில் இருக்கக்கூடிய தமிழர்கள் பிரச்சினைகளை, நாங்கள் பேசித்
தீர்த்துக் கொள்வோம். நாங்கள் சிங்கள அரசுக்கு ஆலோசனைகளைச் சொல்லு
வோம். நாங்கள் இதுவரை எப்படித் தமிழர்களைக் கொல்லுவது என்று ஆலோ சனைகள் கொடுத்து, திட்டங் களை வகுத்துக் கொடுத்து, தளபதிகளை அனுப்பி, படைகளை அனுப்பி, தளவாடங்கள் கொடுத்து நாங்கள் கொன்றோம். இனி என்ன செய்வது? என்று நாங்கள் பார்த்துக் கொள்வோம்.நீங்கள் ஏன் மூக்கை நீட்டுகிறீர்கள்? என்று சொல்லுவதற்காகத்தான்,கொடியவன் ராஜபக்சேயை, புத்த கயாவுக்கும், திருப்பதிக்கும் அழைத்துக்கொண்டு வந்தார்கள். 

என்னுடைய அன்புக்கு உரியவர்களே, என்னை மறந்து விடுங்கள்.என் பின்ன ணியை மறந்து விடுங்கள். என் பின்னால் இருக்கின்ற சிவப்பு, கருப்பு, சிவப்பு வண்ணத்தை மறந்து விடுங்கள். நான் நெஞ்சால் நேசிக்கின்ற பிரபாகரனை உயிராகக் கருதுபவன் என்பதை மறந்து விடுங்கள்.நான் இதுவரை எடுத்து வைத்த வாதங்களின் பின்னணியில் பாருங்கள்.

எதற்காக அழைத்து வருகிறார்கள்?

இராஜபக்சேயை அழைத்து வந்தது நியாயம்தானா? சாஞ்சி அறப்போர்க் களத் தின்போது, இலட்சக்கணக்கான எங்கள் தமிழ் மக்களைக் கொன்றவனை, இங்கே அழைத்து வருவது நியாயம் தானா? என்று, வட இந்தியச் செய்தியாளர் கள், தொலைக்காட்சி ஊடகங்களின் வாயிலாக நான் கேட்டேன்.

கொலைகாரனை புத்தகயாவுக்கு அழைத்து வருகின்றீர்களே, அவன் காலடி பட்டால், புத்தரின் எலும்புகள் கூட நடுங்குமே? தமிழர்களின் குருதி படிந்த
கரங்களோடு வருகின்றானே? அவனை அழைத்து வருவது நியாயம்தானா?
கேள்வி கேட்பார் இல்லையா? நாங்கள் அநாதைகளா? நாங்கள் இந்தியக் குடி மக்கள்தானா? 500 க்கும் மேற்பட்ட எங்கள் தமிழக மீனவர்களைக் கொன்று
விட்டானே, நாங்கள் இந்தியக் குடிமக்கள்தானா?

2000 இந்துக் கோவில்களை உடைத்து நொறுக்கியவன், திருகோணமலை சிவன் கோவில் தேரை, அழகாக வடித்த தச்சர்களின் மணிக்கரங்களை வெட்டிக் கொன்றவன், முருகன் கோவிலுக்குப் பக்கத்தில் பெளத்த விகாரை களை எழுப்புகிறவன், துர்க்கை, காளி கோவில் களை உடைத்தானே, திருப்பதி
வெங்கடாசலபதி கோவிலில் அவனுக்கு என்ன வேலை?அவனை இங்கே
அழைத்து வருவது நியாயம் தானா? எதற்காக அழைத்து வந்தார்கள்?

கொலைகாரனே எழுதும் தீர்ப்பு

இன்றைக்கு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் நாம் கேட்பது, நான் இந்த
மன்றத்தில் பதிவு செய்கிறேன். சிங்கள அரசு அறிவித்த, பித்தலாட்ட மாய்மால
எல்எல்ஆர்சி கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணையம்(Lessons Learned and Reconciliation Committee)அது ஒரு அயோக்கியத் தனமான, வஞ்சகமான, உலகத் தை ஏமாற்றுகின்ற ஒரு ஆணையம்.அவனைப் பற்றி, அவனே எழுதுவதா?

அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக் கையில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதனால்தான், கடந்த ஆண்டு நான் இந்திய அரசை எச்சரித்தேன். ஆயுதம் கொடுத்து எங்கள் மக்களைக் கொன்ற கூட்டுக் குற்றவாளி நீ. இந்தக் குற்றச்சாட்டை நான் மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன். எந்த மன்றத்தில் கேட்டாலும், இதை நான் மறுக்கப் போவது இல்லை.

நான் இந்திய மக்களைக் குற்றம் சொல்ல வில்லை. சோனியாகாந்தி தலைமை யில் இயங்குகின்ற காங்கிரஸ் தலைமை யிலான கூட்டணி அரசுக்குத் தலை மை தாங்குகின்ற மன்மோகன்சிங், அந்த அரசில் பங்கு வகிக்கின்ற தி.மு.க.,
ஈழத்தமிழர்கள் படுகொலையில் குற்றவாளிகள். அங்கே நடந்தது, போர்க் குற் றம் அல்ல. திட்டமிட்ட இனப்படுகொலை. தமிழ் இனத்தை அழிக்க வேண்டும் என்றுதான், நமது அகநானூறு, புறநானூறு, சங்கத் தமிழ் நூல்களைக் கொண்ட, 98,000 நூல்களைக் கொண்ட யாழ்ப்பாணம் நூலகத்தை, 1981 இல் தீ வைத்து எரித்தான். வெலிக்கடைச் சிறையில், 58 தமிழர்களைக் கண்டதுண்டமாக வெட் டிப் போட்டான். குட்டிமணியின் கண்களைத் தோண்டி எடுத்துக் காலில் போட் டு நசுக்கினான். நம் குழந்தை களை, கொதிக்கும் நெருப்பில் தாரில் தூக்கி வீசி னான். 1958 ஆம் ஆண்டு முதல், அங்கே நடந்தவை சாட்சியங்கள்.
.
இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்று, இந்திரா காந்தி அம்மையாரே
சொன்னாரே? எனவே, போர்க்குற்றம் என்று குழப்பாதீர்கள். இது முள்ளிவாய்க்
காலில் மட்டும் நடந்தது அல்ல. இந்த இனப்படுகொலையை நடத்தியவனைக்
கூண்டில் நிறுத்துவோம். எவனும் தப்ப முடியாது. சிரபெரெனிகாவில் ஆறு
முஸ்லிம்களைக் கொன்றவன், 40 ஆண்டுகளுக்குப் பிறகு, கைது செய்யப்
பட்டுக் கூண்டில் நிறுத்தப்பட்டான்; 55 ஆண்டுகள் அவனுக்குச் சிறைத் தண்ட னை விதிக்கப்பட்டது.ஹங்கேரியில் சாண்ட்ரா பிட்ரோ என்பவனுக்கு இன்றைக்கு 91 வயது.1942 ஜனவரி 23 இல், ஆறு பேர்களைச் சுட்டுக் கொன் றான். அவனால் நடக்க முடியவில்லை. என்றாலும், குற்றக்கூண்டில் நிறுத்தப் பட்டுத் தண்டிக்கப் பட்டான்.

அப்படியானால், எங்கள் தங்கை இசைப்பிரியாவை நாசம் செய்தார்களே,பாலி யல் வன்கொடுமை செய்து கொன்றார்களே? அதை, ஐ.நா. அறிக்கையிலேயே குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.எட்டுத் தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கி, கைகள், கண்களைக் கட்டி இழுத்து வந்து, உச்சந்தலையில் சுட்டுக் கொன்றார் களே, அது உண்மையான காட்சி, என்று தடயவியல் அறிஞர்களே உறுதிப் படுத்தி விட்டார்கள். இவை எல்லாம் அசைக்க முடியாத சாட்சியங்கள்.

அனைத்து உலகக் குற்றவாளிக் கூண்டிலே ராஜபக்சேயைக் கொண்டு வந்து நிறுத்துவோம். இந்தக் கோரிக்கையை, இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.குற்றவாளியைக் கூண்டில் நிறுத்தித்தண்டிப்பது ஒரு கோரிக்கை. இன்னொரு கோரிக்கை, சிங்களக் குடியேற்றங்களை அகற்ற வேண்டும்; சிங் களக் காவலர்கள்,இராணுவம் அகற்றப்பட வேண்டும்; அவர்களால் பிடித்துச் செல்லப்பட்ட எங்கள் பாலகுமார் எங்கே? எங்கள் பேபி,இளங்குமரன் எங்கே? எங்கள் யோகிஎங்கே? எங்கள் புதுவை இரத்தின துரை எங்கே? உயிரோடு இருக்கின் றார்களா? கொன்று விட்டீர்களா? இல்லை, அவர்களை எங்கேனும் அடைத்து வைத்து இருந்தால், விடுவிக்க வேண்டும்.

உலகத்தின் கதவுகளைத் தட்டுகிறோம்.அதற்காகத்தான், இத்தனை நாடுகளின்
வரலாறைச் சொன்னேன். சிங்கள இராணுவம், காவல்துறை, தமிழர் தாயகத் தில் இருந்து வெளியேற்றிய பிறகு, அங்கே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். 2011 ஜூன் 1 ஆம் தேதி, பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றக் கட்டடத்தில் நான் உரை ஆற்றுகின்ற பொழுது, எனக்கு பதினைந்து நிமிடங்கள் ஒதுக்கி இருந்தார்கள். நான், 18 நிமிடங்கள் பேசி இருக்கிறேன்.

விடுதலைப்புலிகள் ஏதேனும் ஒருசிங்களப்பெண்ணுக்குப் பாலியல் கொடுமை கள் செய்ததாக ஒரு குற்றச்சாட்டு உண்டா? அப்படி ஒரு குற்றச் சாட்டைச் சொன்னால், அப்படி ஒரு தவறு நடந்து இருந்தால், நான் ஈழத்தைப் பற்றிப் பேசு வதை விட்டுவிடுகிறேன் என்று சொன்னேன்.

சிங்கள இராணுவத்தையும், காவல் துறையையும் தமிழர் பகுதிகளில் இருந்து
வெளியேற்ற வேண்டும். அனைத்து உலக நாடுகளின் பார்வையாளர்கள் முன் னிலையில், ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அந்த வாக்கெடுப்பில்,
உலகின் பல நாடுகளில் பரவிக் கிடக்கின்ற ஈழத்தமிழர்கள், அந்தந்த நாடு களிலேயே அவர்கள் வாக்கு அளிக்க வேண்டும். இதற்கான, வழிமுறைகளை
வகுக்க வேண்டும் என்று கோரினேன்.

என் வாழ்க்கையில், ஒன்றிரண்டு காரியங்கள், என் மனதுக்கு நிறைவு தருகின் றது. உலக அரங்கில், இத்தகைய கோரிக்கையை முதன்முதலாக முன் வைத்த வன் அடியேன் என்ற தகுதி யோடு, தஞ்சை வழக்குரைஞர் மன்றத்தில் நிற்கி றேன். இந்தக் கோரிக்கை சரியானது என்று, ஈழத்தமிழர்கள் ஏற்றுகொண்டு உள்ளனர்.அந்த இலக்கை நோக்கித்தான் செல்லுகிறோம்.

முருகதாசன் உயில்

மார்ச் மாதம், மனித உரிமைகள் கவுன்சில் கூடுகிறது. நாளை, பிப்ரவரி 12 ஆம் தேதி.இந்தத் தேதியில்தான், முருகதாசன் என்ற 27 வயது இளைஞன், திரு மணம் செய்து கொள்ளாமல், வாழ்க்கை இன்பங்களை நுகராமல், முத்துக் குமாரைப் போல், ஈழத்தமிழர்களுக்காக மடிந்த தியாகிகளைப் போல், லண்ட னில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தவன், அங்கிருந்து புறப்பட்டு, ஜெனீவாவுக்குச் சென்று, ஐ.நா.மன்றத்தின் கட்டடத்துக்கு எதிரே, என் தமிழ்ச் சமூகம் கடமை ஆற்றவில்லை,கைவிட்டுவிட்டது ஈழத்தமிழர் களை.என் உறவுகள் செத்துக் கிடக்கின்றார்கள்.அங்கே இருந்து என் உறவுகள்
தொலைபேசியில் சொல்லுகிறார்கள்,பக்கத்தில் பிணங்கள் கிடக்கின்றன,
எங்கும் பிண நாற்றம் வீசுகின்றது,தினமும் செத்து மடிந்து கொண்டு இருக் கின்றார்கள், இதற்குப் பிறகாவது இந்த உலகம் கண் விழிக்குமா? எங்கள்
மக்களைக் காப்பாற்றுமா? இதற்காக, நான் தீக்குளித்து மடிகிறேன் என்று முருக தாசன் மரண சாசனத்தை எழுதி வைத்துவிட்டு, நான் கடமையைச் செய் கிறேன், தமிழ்ச்சமுதாயம் கடமையில் தவறி விட்டது என்று எழுதி வைத்து விட்டுப் போனான்.

அந்த நாள்தான் நாளைக்கு. நாளை மாலை சென்னை மெரினா கடற்கரையில்
ஈழத் தோழமைச் சுடர் ஏந்துகிறோம்.

அடுத்தது என்ன?

மனித உரிமைகள் கவுன்சிலில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள், அங்கே 2009 ஆம் ஆண்டு, சிங்களவனுக்குப் பாராட்டுத்தீர்மானம் நிறைவேற்றினார்கள். முள்ளி வாய்க்காலில் இலட்சக்கணக்கான தமிழர் களைக் கொன்றவனுக்குப் பாராட்டுத் தீர்மானம். அதை நிறை வேற்றுவதற்கு வரிந்து கட்டிக் கொண்டு போராடியது, இந்தியா, கியூபா, சீனா.இப்போது, சீனா, கியூபா, ரஷ்யா, அங்கே உறுப்பு நாடுகள் அல்ல. இப்பொழுதும்,இந்தியா குழப் பப் பார்க்கிறது.

முன்பு சிங்களவனுக்கு ஆதரவாக நடந்த தற்குப் பதிலாக, அவன் பரிந்துரை களை யாவது நிறைவேற்றட்டும் என்கிறார்கள்.இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்கள் கோரிக்கை, இனக்கொலை செய்தது குறித்த விசாரணை நடக்க வேண்டும். மனித உரிமைகள் கவுன்சில் அந்த முடிவுக்கு வர வேண் டும். அது, இந்த மார்ச் மாதம் நடக்காமல் போகலாம். ஆனால், நடக்கிற காலம்
வரும். அதற்கு, இளைஞர்களை அழைக்கிறேன். வழக்கறிஞர்களை அழைக் கிறேன். தமிழ் ஈழ மக்களுக்காக, அதிகத் துன்பங்களைத் தாங்கிப் போராடிய வர்கள் வழக்கறிஞர்கள் மட்டும்தான். கட்சிகளைக் கடந்து போராடினார்கள். பல்லாயிரக்கணக்கான வழக்கறிஞர்கள், ஊதியங்களைப் பற்றிக் கவலைப் படாமல், வருமானத்தைப் பற்றிக் கவலைப்படாமல், மாதக்கணக்கில் போராடி னார்கள். அதற்காக,சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உள்ளே காவல்துறையை ஏவி, 70 வழக்கறிஞர் களின் கை, கால்களை முறித்தார்கள்.காவலர்களால், அவர்களது கபாலங்கள் பிளக்கப்பட்டன. அதனால்தான், என்னை உயிராயு தமாகப் பயன்படுத்துங்கள் என்றான் முத்துக்குமார்.

இந்தப் பதிவும், உரையும், இளைஞர் கூட்டத்துக்காக, மாணவச் செல்வங்களுக் காக. உங்கள் ஆயுதச்சாலையில் ஒரு அம்புறாத்தூளியில் இதை நீங்கள் ஒரு ஆயுதமாக ஆக்கிக் கொள்ளுவதற்காக. நம் பக்கம் நியாயம் இருக்கிறது. நம் குரலில் சத்தியம் இருக்கிறது. நம் கோரிக்கையின் நீதியை,இனி உலகத்தில் எவரும் மறுக்க முடியாது. சுதந்திரத் தமிழ் ஈழம் என்று உணர்ச்சிவயப்பட்டுச் சொல்லவில்லை.சிங்களவனுக்கு அடிமையாக ஏன் வாழ வேண்டும்?

இன்றைக்கு நாம் கடமை தவறினாலும்,நாளைய வருங்கால இளைஞர்கள்,
இந்தத் தமிழகத்தின் சின்னஞ்சிறு பிள்ளைகள் வளருகின்றபோது, மான உணர்ச்சி உள்ளவர்களாக, கடந்த காலத்தை மறக்காதவர்களாக, அவர்கள்
நீதியை நிலைநாட்டுவார்கள்.

நீதியை நிலைநாட்டிய மண் 

ஒரு காராம்பசு கண்ணீர் சிந்தியதற்காக, எந்நாளும் கேட்காத மணியின் ஓசை கேட்டது அரண் மனை வாசலில் என்று பதறி ஓடி வந்து, தன் மகனைத் தேர்க் காலில் பலியிடத் துணிந்தான் என்ற சரித்திரத்தை நினைவூட்டுகின்ற வகை யில், இங்கே நினைவுப் பரிசு வழங்கினார்கள். காராம்பசுவின் கன்றுக் காக மகனையே பலி யிடத் துணிந்த மண்டிலம் அய்யா உங்கள் தஞ்சை. 

எத்தனைக் குழந்தைகள், எத்தனைத் தாய்மார்கள், எத்தனை உறவுகள்? அவர் கள் எழுப்பிய மரண ஓலம்.காற்றோடு கலந்து, கடல் அலைகளைக்கடந்து, நம் நெஞ்சத்தைத் தாக்க வில்லையா? இளைய சமுதாயம் எண்ணிப் பார்க்கட்டும்.
சுய நிர்ணய உரிமையும், பொதுவாக்கெடுப்பும், ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல. இத்தனை தேசங்கள் மலர்ந்து இருக்கின்றன என்று சொன் னேன். அந்தப் பட்டியலில்,சுதந்திரத் தமிழ் ஈழம் ஒரு புதிய நாடாகப்
பரிணமிக்கும் நாள் வரும். அந்த நாளையும் என் கண்களாலேயே பார்த்து விட் டுத்தான் நான் கண் மூடுவேன் என்ற நம்பிக்கையோடு, இந்த நல்ல வாய்ப்பை
வழங்கிய தஞ்சை வழக்குரைஞர் சங்கத்துக்கும், குளிர்காற்று பரவி இருக் கின்ற நேரத்திலும், ஊசி விழுந்தால் ஓசை கேட்கின்ற அமைதியோடு செவி
மடுத்த, அன்பு உள்ளம் கொண்ட சகோதரர்களுக்கும் நன்றியைத்தெரிவித்துக் கொள்கின்றேன்.

என் உள்ளத்தில் தன்னல நோக்கம் எதுவும் இல்லை. என் வழக்கை உங்களிடம் முறையிட்டு இருக்கின்றேன்.நீங்கள்தாம் நீதிபதிகள். பரிசீலியுங்கள்.நன்றி வணக்கம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment