Saturday, April 13, 2013

சுங்க வரி வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் ம.தி.மு.க. கோரிக்கை

தூத்துக்குடி–நெல்லை 4 வழிச்சாலையில் பணிகள் முடிவதற்கு முன்பே சுங்க வரி வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் எஸ்.ஜோயல் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தூத்துக்குடி–நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலைகள் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக இந்த பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் முடிவடையவில்லை.சாலையை பயன் படுத்துபவர்களுக்கு எந்தவித முன்அறிவிப்பும் செய்யப்படாமல், கடந்த 5–ந் தேதி முதல் புதுக்கோட்டை அருகே சுங்க வரி வசூல் மையம் அவசரமாக அமைக்கப்பட்டு சுங்க வரியை வசூல் செய்து வருகிறது. இது விதிமுறைகளை மீறிய செயல்.



இன்னும் பல இடங்களில் மாற்று வழியில் வாகனங்கள் செல்ல வேண்டியது உள்ளது. குறிப்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும், தற்போது சாலைப்பணிகள் நடந்து வருகின்றன. இதுபோல் பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தூத்துக்குடி–நெல்லை தேசிய நெடுஞ்சாலை வழியாக புதுக்கோட்டை, குலையன்கரிசல், கூட்டாம்புளி போன்ற பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரம், தொழில், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு பணிகளுக்காக தூத்துக்குடிக்கு செல்லும்போதும், திரும்பி செல்லும்போதும சுங்க வரி கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

மேலும் சுங்க வரி வசூல் மையத்தில், வரி கட்டுவதற்காக வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதிக நேரம் நிற்க வேண்டிய சூல்நிலை உள்ளதால் அவசர பணிக்கு செல்ல முடியாமல் பலர் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மையம் அருகில் 2 சக்கர வாகனங்கள் செல்ல சாலை வசதி செய்யப்படவில்லை. சாலை பணிகள் முடிவடையாததால், சுங்க வரி வசூல் செய்வதை நிறுத்த வேண்டும்.

No comments:

Post a Comment