Tuesday, April 23, 2013

மணிமேகலையும் மதுவிலக்கும்!

தண்டமிழ் ஆசான் சீத்தலைச் சாத்தனார் இயற்றியது மணிமேகலை; இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தமிழர் தம் அறக்கருத்து களைத் தரணிக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.

மணிமேகலை உயர்ந்த நன்னெறிகளையும் உலகு தழுவிய உயர் நோக்கமும், கவின்கலை விளக்கமும்,காவியச்சுவையும் அமைந்த தமிழ்ப் பெருங்காப்பிய மாகும். மனித சமுதாயம் பசிப்பிணியினின்றும் நீங்கி, அடிப்படைத்தேவைகள் நிறைவு எய்திய ஒளிமிக்க புதிய சமுதாயத்தைப் படைப்பதற்கு வேண்டிய இலட்சிய நோக்கை இக்காவியம் அளிக்கிறது.



பசிப்பிணி என்னும் பாவியை இப்பாரி னின்றும் ஒழிக்க முயன்றாள் ஆதிரை.
அவள் கணவனாகிய சாதுவன், மது என்னும் அரக்கனை இம்மாநிலத் தினின் றும் அகற்ற முயன்றான்.வியாபாரம் செய்ய வேறு நாடு செல்ல எண்ணிக் கப்பலில் செல்கிறான். புயலால் கப்பல் மூழ்கியது. தப்பிய அவன் நீந்தி நாகநாடு அடைகிறான்.அங்கு உடை அணியாத மனிதர்கள் மாமிசமும் மதுவும் முக்கிய உணவாகக் கொண்டவர்கள்.

வெண்மேகம் போன்ற அலைகளான பெரிய கடலில் சிக்கி வருந்தி துன்பப்பட்ட சோர்வால் கடற்கரையில் சாதுவன் தூங்கிவிட்டான். அப்போது அங்கு வந்த
நாகர்கள் இன்று நமக்கு நல்ல மாமிச உணவு கிடைத்தது என்று எண்ணி மகிழ்ந் தார்கள். சோர்வாகப் படுத்திருந்த சாதுவனை எழுப்பினார்கள். நாகர்களின்
மொழியை அறிந்தவன் சாதுவன்.அவர்கள் மொழியிலேயே பேசினான். அவர் கள் வியந்தனர்; வணங்கினர்;தங்களது தலைவனிடம் அழைத்துச்சென்றார்கள்.

உணவே இல்லாமல் அலைகளினால் கடலில் சிக்கிப் பெரும் துன்பம் அடைந்து
வந்த சாதுவனுக்கு, அழகிய ஒரு இளம் பெண்ணும், கள்ளும், மாமிசமும் கொடுத்து உபசரிப்பீர்களாக என்று நாகர்களின் தலைவன் உத்திரவிட்டான்.அது கேட்ட சாதுவன் அயர்ந்தான். கொடிய வார்த்தைகளை நான் விரும்பவில்லை என்றான்.

சாதுவனின் அறிவுரை

பெண்களும், கள்ளும், உணவும் இல்லாமல் உலகத்திலே மக்கள் அடையக் கூடிய பயன் ஏதேனும் உண்டோ? என்று நாகர் தலைவன் கேட்டான். அப்போது சாதுவன் சொல்வதாக மதுரைகூல வணிகன் சீத்தலைச்சாத்தனார் கூறும் மணி மேகலை ஆதிரை பிச்சையிட்ட காதை வரி 83, 84, 85 இதோ:

“மயக்கும் கள்ளும் மண் உயிர் கோறலும்
கயக்கு அறுமாக்கள் கடிந்தனர் கேளாய்”

என்றான்.

‘கள்ளையும், கொலையையும் அறிவுடையோர் நீக்கினர்’ என்று உ.வே.சா விளக்கம் தருகிறார்.

(மணிமேகலை மூலமும் அரும்பதவுரையும், 1898, பக் 175)

ஜி.யூ.போப்

1911 இல் மணிமேகலையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யூ.போப் கூறு கிறார்.

Lust and drunkenness and murder are sternly forbidden by righteous men! (Manimekhalai, 1911, P.38)
அ.மாதவையா

பெருங்குளம் அ.மாதவையா,மணிமேகலையை ஆங்கிலத்தில் 1922 இல் மொழி பெயர்த்துள்ளார். அவர் கூறுகிறார்.

‘Killing and intoxicating drinks are Condemned by all wise men’ (A-madhaviah, Manimekalai; p.45)
பிரேமா நந்தகுமார்

1989 இல் மணிமேகலையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிரேமா நந்தகுமார்:

‘The discerning have rejected mindboggling wine and the killing of life

என்று மதுவின் கொடுமைக்கு விளக்கம் தருகின்றார்.

கொ.ம.கோதண்டம்

மணிமேகலைக்கு 2007 இல் உரை தந்த கொ.ம.கோதண்டம் கூறுகிறார்:

“நல்ல அறிவைக் கெடுக்கும் கள்ளையும்,நிலை பெற்ற உயிர்களைக் கொல்லு
தலையும் தெளிந்த அறிவாளிகள் விலக்கி வைத்துள்ளார்கள்.

(மணிமேகலை, கொ.ம.கோதண்டம், பக் 174)

கண்ணன் - புலியூர்க்கேசிகன்

1965 இல் மணிமேகலைக்கு உரை தந்த கண்ணன் கூற்று இதோ:

‘அறிவை மயக்கும் கள்ளையும்,ஊனுக்காக நிலைபெற்ற உயிர்களைக் கொலை செய்வதையும் கலக்கமற்ற அறிஞர்கள் விலக்கினர்!’

(நல்லறிவை மயக்கும் கள் என்பர் புலியூர்க்கேசிகள், பக் 178)

ஏ.எஸ்.பி.ஐயர்

1951 இல் மணிமேகலையை வசன ரூபத்தில் தந்த ஏ.எஸ்.பி.ஐயர் கூறுகிறார்:

‘இயல்பாகவே காமமும், குரோதமும் கொண்டிருக்கும் நான் இந்தக்கள்ளைக்
குடித்துவிட்டு ஏன் பின்னும் மயங்க வேண்டும்? என்பார்.

டாக்டர் மா.இராசமாணிக்கம்

1940 இல் ‘அறச்செல்வி’ என்று மணிமேகலை பற்றிய நூலைத்தந்த மா.இராச மாணிக்கம், அதில் பக்கம் 74 இல், ‘கள்ளையும் ஊனையும் வேண்டும் அளவு கொடுங்கள் என்று நாகர் தலைவன் கேட்டதும், சாதுவன் அக்கொடு மொழி கேட்டு, வெவ்வுரை கேட்டேன், வேண்டேன் என்றான்.

ந.மு.வேங்கடசாமி நாட்டார்,ஒளவை சு.துரைசாமி பிள்ளை 

1946 இல் மணிமேகலைக்கு உரை தந்த பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டாரும்,
ஒளவை சு.துரைசாமி பிள்ளையும் “அறிவை மயக்கும் கள் உண்டலையும்,
நிலைபெற்ற உயிர்களைக் கொல்லு தலையும், கலக்கமற்ற அறிவுடையோர்
விலக்கினர் என்று உரை தந்துள்ளார்.(பக் 219)

பொ.வே.சோமசுந்தரனார்

1971 இல் மணிமேகலைக்கு உரை தந்த பொ.வே.சோமசுந்தரனார்,பக்கம் 348 இல் கலங்குதல் இல்லாத அறிவுடைய சான்றோர் அறிவினை மயக்கும் இயல்புடை ய கள்ளுண்ணுதலையும்,உடம்பிலே நிலைபெற்ற உயிர்களைக் கொல்லு தலை யும் தீவினை என்று கருதிவிலக்கிவிட்டனர் என்று விளக்கம் தருகிறார்.

மதுவினால் ஏற்படும் தீமையை அறிந்த நாகர் தலைவன் சாதுவனை வணங்கி,
வாழ்த்தி பொன்னும் பிறவும் கொடுத்து நாட்டுக்கு அனுப்பிவைத்தான்.

மதுவிலக்குப் பிரச்சாரம் புதியது அல்ல

தமிழகத்தில் மதுவிலக்குப் பிரச்சாரம் புதிதாகத் தோன்றிய ஒன்றல்ல. செல்லு மிடந்தோறும் தமிழ் மக்கள் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்யும்  கடமையை மேற்கொண்டிருந்தார்கள்.சாதுவன் நாகநாட்டில் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்ததை மணிமேகலை சுட்டிக் காட்டுகிறது.

இரா.பி.சேதுப்பிள்ளை

சென்னை மதுவிலக்குச் சங்க ஆண்டுவிழாவில் மணிமேகலையும், மது விலக்குப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே பேசியவர் பேராசிரியர் இரா.பி.சேது பிள்ளை.

‘இயற்கை வளம் நிறைந்த தமிழ்நாட்டில் பனையும், தென்னையும் பல்லாயிரம்
உண்டு. பாண்டிய நாடு தொன்றுதொட்டு பனைவளம் படைத்ததாகும்.

சோழநாட்டிலும், சேர நாட்டிலும் தென்னைச் செல்வம் சிறந்து விளங்குகின்றது. தென்னையிலும் பனையிலும் ஊறுகின்ற மது ஆறாகப் பாய்வதற்குப் போதிய தாகும். ஆயினும், தென்னாட்டில் பிறந்த சமயங்களும் புகுந்த சமயங்களும்
மதுவிலக்குப் பிரச்சாரம் செய்தன.

சைவம், வைணவம், பெளத்தம்,சமணம், கிறிஸ்துவம், இஸ்லாமியம் என எல்லா சமயங்களும் மதுபானத்தைக் கடிந்தன. மதுவிலக்கை வற்புறுத்து கின்றன.



தமிழர் தலைவர் வைகோ

மறுமலர்ச்சி தி.மு. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ‘முழு மது விலக்கு நமது இலக்கு’ என்று போர்ப்பரணி பாடியுள்ளார்; நடைப்பயணம் மேற் கொண்டு வருகிறார்.அவரது தூயநோக்கம் வெற்றி பெறட்டும்;தமிழகத்தில் மது ஒழியட்டும். மக்கள் நலம் பெறட்டும்.

நன்றிகள் 

கட்டுரையாளர் :- செ.திவான்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment