Saturday, April 13, 2013

மூன்று தமிழர் உயிர்களைக் காப்பாற்றுங்கள்! -மதிமுக தீர்மானம்

உயர்நிலைக்குழு - மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர் கள்,ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் இன்று (13.04.2013 சனிக்கிழமை)காலை கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில், சென்னை, தாயகத்தில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் எண். 1

மூன்று தமிழர் உயிர்களைக் காப்பாற்றுங்கள்!
முதலமைச்சருக்கு மறுமலர்ச்சி தி.மு.க. வேண்டுகோள்



உச்ச நீதிமன்றம் தேவேந்திரபால் சிங் புல்லர் மரண தண்டனையை உறுதி படுத்தி தந்த தீர்ப்பு மனித உரிமை ஆர்வலர்களைப் பேரிடியாகத் தாக்கி உள்ளது. உலகில் 137 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. அண்ணல் காந்தியார், பண்டித நேரு, டாக்டர் அம்பேத்கர், ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற மாபெரும் தலைவர்களும், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பகவதி, நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் உள்ளிட்ட நீதிமான்களும், மனித உரிமை ஆர்வலர்களும் மரண தண்டனை முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளனர். இத்தகைய மனித நேயக் கருத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ள போதிலும் தூக்கு தண்டனையை நிரந்தரமாக அகற்றுவதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் தமிழ்நாட்டில், இந்தியாவில் முன்னிலும் அதிக முனைப்போடு பல முனைகளிலும் போராட வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது.

திருப்பெரும்புதூர் கொலை சம்பவத்தில் துளி அளவும் தொடர்பு இல்லாத நிரபராதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரையும் காவல்துறை துன்புறுத்திப் பெற்ற நீதிக்குப் புறம்பான ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொண்டு தடா நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு தூக்குத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அதன் பின்னர், நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனை யாகக் குறைக்கப்பட்டது.

தற்போது பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு இந்தியக் குடியரசுத் தலைவரிடம் தரப்பட்ட கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட 2011-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அப்போது பொறுப்புக்கு வந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு சட்டமன்றம் இந்த மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனை யாகக் குறைப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து 2011 ஆகஸ்டு 30-ஆம் நாள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. அதேநாளில் தான், சென்னை உயர் நீதிமன்றம் மூவரின் தூக்குத்தண்டனைக்கு இடைக் காலத் தடை விதித்தது.



காங்கிரஸ் கட்சியின் தரப்பில் இந்த மூவரின் தூக்குதண்டனை வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மூவர் தூக்கு வழக்கைத் தானே விசாரிக்க எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தேவேந்தர்பால் சிங் புல்லர் மரண தண்டனையை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், தடா வழக்கில் இத்தண்டனை கொடுக்கப் பட்டதை ஒரு காரணமாகக் காட்டி தூக்குதண்டனையை உறுதி செய்து இருக்கிறது. ஆனால், பேரறிவாளன், சாந்தன், முருகன் இவர்கள் மூவரும் தடா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்கள். மரண தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் இந்திய அரசியல் சட்டம் 72-ஆவது பிரிவின்படி இந்தியக் குடியரசுத் தலைவருக்கும், இந்திய அரசியல் சட்டம் 161-ஆவது பிரிவின்படி மாநில ஆளுநருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டம் 72-ஆவது பிரிவின்படி குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரம், 161-ஆவது பிரிவின்படி மாநில ஆளுநரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தாது என்று அரசியல் சட்டத்தில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அரியானா மாநிலத்தில் ஒரு கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப் பட்ட தயாசிங் என்பவரது வழக்கில் அவரது கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தார். அரசியல் சட்டம் 161-ஆவது பிரிவின்படி அரியானா மாநில ஆளுநரே தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க முற்பட்டபோது, இதுகுறித்து மாநில ஆளுநர் மத்திய அரசுக்குத் தெரிவித்தபோது, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அரசியல் சட்டப் பிரிவு 257- உட்பிரிவு 1-ஐ சுட்டிக்காட்டி மரண தண்டனை விதிக்கப்பட்டவரின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்த பிறகு அதே வழக்கில் மாநில ஆளுநர், மாநில அரசுகள் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று ஒரு சுற்றறிக்கையை 1991 மார்ச் 5-இல் மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 257 உட்பிரிவு 1, மாநில ஆளுநருக்கு அரசியல் சட்டத்தின் 161-ஆவது பிரிவு வழங்கி இருக்கின்ற, மரண தண்டனையைக் குறைக்கின்ற அதிகாரத்தை ஒருபோதும் கட்டுப்படுத்தாது என்பதுதான் சட்டப்பூர்வமான நிலையாகும் என்று அரசியல் சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, உண்மையான கூட்டாட்சித் தத்துவம் இந்தியாவில் நடைமுறைப் படுத்திட மாநில அரசுகளுக்கு உரிய உரிமையும், அதிகாரமும் நிலைநாட்டப் பட, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் ஏற்கனவே சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டதையும் கருத்தில் கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழக அமைச்சரவையைக் கூட்டி அதில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கு முடிவெடுத்து மாநில ஆளுநர் மூலம் இந்த மனிதநேய முடிவைச் செயல் படுத்தி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண். 2

மூன்று தமிழர் உயிர்காக்கும் இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம்

பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவர் உயிரைக் காப்பாற்ற, மரணக் கொட்டடியிலிருந்து அவர்களை மீட்க, ஏப்ரல் 30-ஆம் தேதி தலைநகர் சென்னையில் மூன்று தமிழர் உயிர்காக்கும் இயக்கத்தின் சார்பில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது எனவும், அதற்கான ஆக்கப் பணிகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் செய்வதென்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment