Tuesday, April 30, 2013

புரட்சி தொடங்கிவிட்டது; மறுமலர்ச்சி நிகழ்ந்தே தீரும்!

தமிழ்நாட்டுத் தாய்மார்கள் போர்க்கோலம் பூண்டுவிட்டார்கள்;
டாஸ்மாக் கடைகளை எதிர்த்து வீதிக்கு வருகின்றார்கள்!
பொள்ளாச்சியில் வைகோ முழக்கம்

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி -இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப்பிரச்சார நடைப்பயணம், 16.04.2013 அன்று பொள்ளாச்சியில் பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழ்த்து
முழக்கங்களுடன் தொடங்கியது.நடைப்பயணத் தொடக்க விழாப் பொதுக் கூட்டத் தில் வைகோ ஆற்றிய உரையில் இருந்து....

வீரத்தாலும், விவேகத்தாலும்,விருந்தோம்பும் பண்பாலும், கொடை உள்ளத் தாலும், வரலாற்றில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்று இருக்கின்ற கொங்கு மண்டலத்தில், பொள்ளாச்சித் திருநகரில், பயணம் வெல்க; தமிழகத்தின் எதிர் காலத்தில் நலம் விழைக என உயர்ந்த உள்ளத்தோடு வாழ்த்தி இருக்கின்ற
பெருமக்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித் துக் கொள்கின்றேன்.



நேற்று மாலையில் கரிய மேகங்கள் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டு இருந் தன. நான் கரூரை விட்டுப் புறப்படுகையில் பரணி மணி சொன்னார்: பொள் ளாச்சி திசையில் மின்னல் வெட்டுகிறது; மேகம் குவிகிறது; மழைத்துளி களும்
விழுகிறது; நாளை உங்கள் பயணம் புறப்படுகையில், வெயில் இருக்காது
என்றார். அது அவருடைய கவலை. அதைக்கேட்டு நான் சிரித்துக் கொண்டே இங்கு வந்தேன். இங்கே நெருப்பு வெயில் சுட்டு எரிக்கின்றது. அதைப் பொருட் படுத்தாமல், திரண்டு இருக்கின்ற பெருமக்களே, வாழ்த்த வந்த உங்கள் அனை வருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

இங்கே, நீங்கள் வெயிலில் அமர்ந்து இருக்கின்றீர்கள். நான் நிழலில் நின்று
பேசிக்கொண்டு இருக்கின்றேன். இதைவிட நெருப்பாகத் தகித்த வெயிலில் சாஞ்சி அறப்போர்க் களத்தில், பட்சி சோலை என்ற கிராமத்துக்கு அருகில், தேசிய நெடுஞ்சாலையில் கிடந்தோம்.

விவசாயிகள் நெற்றி வியர்வை நிலத் தில் சிந்த, நாள் முழுமையும் வெயிலில் நின்று உழைக்கின்றார்கள்; ஈழத்தமிழ் மக்களுக்காக முத்துக்குமார் தன் மேனி யை நெருப்புக்குத் தந்தான், செங்கொடி உயிர் ஈந்தாள்.அதையெல்லாம் பார்க் கும்போது, இந்த வெயில் ஒன்றும் கடினமானது அல்ல. நெருப்பில்தான் ஈட்டி யும், வாளும் வார்ப்பிக்கப்படுகின்றன. நெருப்பில்தான், தங்கம் புடம் போடப் பட்டு, தகத்தகாயமாக ஒளிர்கிறது.

நம்முடைய சிற்பி அவர்கள், நீங்கள் பிற்பகலில் மட்டும் நடந்தால் நன்றாக
இருக்குமே? என்று சொன்னார்கள். வாழ்வு சிறிது; வளர்கலை பெரிது; இந்த வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. இயன்ற அளவிலும், உறக்கத்தைத் தவிர்க்க முடியாத நிலையைத் தவிர, கிடைக்கின்ற ஒவ்வொரு மணித் துளியிலும் உழைத்துக் கொண்டே இருப்பது, ஒரு செயலைச் செய்து கொண்டே இருப் போம்; அதுவே, இந்த யாக்கைக்கும், உயிருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்று கருதுகிறவன் நான்.

எனவேதான், ஸ்டெர்லைட் எதிர்ப்புக் களம், முல்லைப் பெரியாறு உரிமைப்
போராட்டம், மூவர் தூக்குக்கு எதிர்ப்பு, மீட்சி இல்லையே என வருந்திக் கொண் டு இருக்கின்ற வேளாண் பெருமக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை, சிங் களக் கடற்படையால் நாளும் தாக்கிக் கொல்லப்படும் தமிழக மீனவர்களின் அவலத்தைத் துடைப்பது, ஈழத்தமிழர்கள் பாதுகாப்பு என எத்தனையோ பணி களை, எங்கள் தோள்களில் எடுத்துப் போட்டுக் கொண்டு செய்து வருகின் றோம்.

மரண பூமியாக ஆக்கப்பட்டு விட்ட ஈழத்து மண்ணில், இலட்சக்கணக்கான
நமது உறவுகள், நமக்கு ஒரு விடியல் வரும்; தாய்த்தமிழகம் அதை உருவாக் கித் தரும்; மாணவர் படை அதைச் செய்து முடிக்கும் என்ற நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர் களுக்காகக் கடமை ஆற்ற வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம்.

பேராசிரியர் கவிஞர் சிற்பி அவர்களே, துன்பப்படுகின்ற வேளையில்தான்
மனிதன் சிந்திக்கின்றான். நாங்கள் நெருப்பு வெயிலில் நடந்து வருகின்ற போது, அதைப் பார்க்கின்ற தாய்மார்கள் கவலைப்படுகின்றார்கள்.என்னைப் பெற்ற தாயாகவே அவர்களை நான் கருதுகிறேன். அவர்கள், நம் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளுக்காகத்தானே, வைகோவும் அவனது தோழர்களும்,இப்படி நெருப்பாகத் தகிக்கின்ற வெயிலில், வேகாத வெயிலில் நடந்து வருகிறார்கள் என்று கவலைப்படு கிறார்கள்.

அங்கே நமது பயணத்தின் நோக்கத்தை நாம் அழுத்தமாக அவர்களது மனங் களில் பதிப்பிக் கின்றோம். அதனால்தான், நான் வெயிலையும் நேசித்துக் கொண்டே நடக்கின்றேன்.

தமிழ்நாட்டில் 6863 டாஸ்மாக் மதுக்கடைகள் இருக்கின்றன. நெடுஞ் சாலை களை ஒட்டி இருக்கின்ற மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு, பல இடங்களில் இன்னமும் நிறைவேற்றப் படவில்லை. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்னவென்றால், அண்மையில் ஈழப்பிரச்சினைக் காகத் தமிழகத்து மாணவர்கள் வீதிகளில் இறங்கிக் களம் கண்டார்கள்.

அதுபோல, நெடுஞ்சாலைகளை ஒட்டி இருக்கின்ற டாஸ்மாக் கடைகளை அங் கிருந்து அகற்றி ஊருக்கு உள்ளே கொண்டு போய் வைக்க முயன்றால், இப் போது, மூதின் முல்லைப் பெண்டிராகிய நமது தாய்மார்கள், பொங்கி எழுந்து போர்க்கோலம் பூணுகின்றார்கள்; போராடுகிறார்கள். இதுவே புரட்சிக்கு அடை யாளம். இனி மாற்றம் நிச்சயம்.

இங்கே பேசிய ஹைதர் அலி அவர்கள், வைகோவைப் பைத்தியக்காரன் என் றார்கள். இன்றைக்கு அனைவரும் அவரது கருத்தைத்தான் எதிரொலிக் கின் றார்கள் என்று குறிப்பிட்டார்.

ஆம்; அப்படித்தான் நாங்கள் விமர்சிக்கப்பட்டோம், ஈழத்துக்காக முரசு கொட் டிய போது, விடுதலைப் புலிகளை ஆதரித்தபோது. நான் நெஞ்சத்தால் பூஜிக் கின்ற என் தலைவன் பிரபாகரன் அவர்களைப் பற்றிப் பேசுகிறபொழுது, எங் களை அப்படித்தான் சொன்னார்கள்.

கடந்த ஓராண்டுக்காலத்தில், இந்தியாவில் 1,35, 453 விபத்துகள் ஏற்பட்டு இருக் கின்றன. தமிழ்நாட்டில் பலியானவர்கள் மட்டும் 15, 433 பேர். இந்த விபத்துகள் பெரும்பாலும் மதுபோதையால் ஏற்பட்டவைதான்.சாலைகள் உயிர் பறிக்கும் எமன்களாக ஆனதற்குக் காரணம் மது. 

அதேபோல, கடந்த ஓராண்டில் இந்தியாவில் நடைபெற்ற கொடுங்குற்றங்கள் 2,56,810; இதில் 2,28,870 குற்றங்கள், மதுவின் போதையால் நிகழ்ந்தவை. ஒவ் வொரு கொடுங் குற்றத்துக்குப் பின்னாலும் மது இருக்கிறது, சாராயம் இருக்கிறது.

ஓராண்டில் தமிழ்நாட்டில் மட்டும் நடைபெற்ற பாலியல் குற்றங்களில், சிறு குழந்தைகள், பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்ட வன் கொடுமைகள் 677. கேட்கவே நெஞ்சம் கொதிக் கிறதே?

பேருந்து நடத்துநர் பயணச்சீட்டு கேட்டதற்காக, மதுவின் பிடியில் இருந்த ஒரு வன் தன்னையே கொளுத்திக் கொண்டு மடிந்தான் என்றும், மதுவின் போதை யால், பெற்ற தாயைக் கல் எறிந்து கொன்றவனைப் பற்றியும், நமது சிற்பி அவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள்.

அதுமட்டும் அல்ல, தான் பெற்ற மகளையையே மதுவின் போதையால் ஒரு வன் பெண்டாள முனைந்த செய்தியை ஏடுகளில் படித்து இருப்பீர்கள். இது அறம் வளர்த்த நாடு, நீதி தழைத்த நாடு என்றெல்லாம் பேசுகிறோமே, இங்கே தான் இந்தக் கொடுமைகளும் நிகழ்ந்து இருக்கின்றன. படிக்கவே முடிய வில்லை, உணவு அருந்த முடிய வில்லை. 

மற்றொரு கொடூரமான சம்பவம்; எங்கே? நம்முடைய திருப்பூரில். சித்திரைத் திங்கள் முதல் நாள். தாய் வேலைக்குப் போய்விட்டாள். எளிய குடும்பம், வறிய குடும்பம். தந்தை எப்போதோ வீட்டை விட்டுப் போய்விட்டார். அந்தத் தாய், தையல் வேலை செய்கிறாள். அன்று பள்ளி விடுமுறை. இரண்டாம் வகுப்பு மாணவி, அந்தக் குடிசை வீட்டில் தனியாக இருக்கிறாள். ஆறு வயது
இருக்கும். அருகில், ஒரு வீட்டில் நான்கு இளைஞர்கள் மது அருந்துகிறார்கள். பகல் இரண்டு மணி. அந்த வீட்டுக்கு உள்ளே போகிறான். குடிவெறியால், காம வெறியும் தலைக்கு ஏறி விடுகிறது. அந்த ஆறு வயதுக் குழந்தையைச் சிதைக் கிறான். அந்தக் குழந்தை சுருண்டு விழுந்து மயங்கிக் கிடக்கிறாள். வேலைக் குப் போன தாய், வீட்டுக்குத் திரும்புகிறாள். சின்னாபின்னமாகிக் கிடந்த குழந் தையைக் கண்டு கதறுகிறாள். காவல்நிலையத்துக்குப் போகிறாள். ஆனால், அவர்கள் கடமை ஆற்றவில்லை. அதைக் கேட்டுக் கொதித்து எழுந்த ஊர் மக்கள் வீதிக்கு வருகின்றார்கள். அதற்குப் பின்னர் தான், பிரச்சினை வெளியே வருகிறது.

இது எங்கே நடக்கிறது? காட்டிலா? இல்லை. பாரி உலவிய நாட்டிலே, பேகன் உலவிய நாட்டிலே, காரி உலவிய நாட்டிலே. இதுபோல, வெளியில் வராத செய்திகள் எத்தனை. குடும்ப மானத்துக்கு அஞ்சி, காவல் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுக்காதவர்கள் எத்தனை பேர்? 

இந்த அழிவில் இருந்து, பண் பாட்டுச் சீரழிவில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டாமா? அது நமது கடமை இல்லையா?


புரட்சித்துறவி மருதாசலம் அடிகளார்

இங்கே வந்து இருக்கின்ற பேரூர் ஆதீனம் இளைய பட்டம் மருதாசல அடி க ளாரை, ஒரு புரட்சித் துறவியாகப் பார்க்கின்றேன். தமிழுக்கு மகுடம் சூட்டு வதற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பாடுபடு கின்ற அவரை நான் பாராட்டுகிறேன்.சமூக நீதிக்குப் போராடுகின்றார்.ஆலயத்துக்கு உள்ளே வேற் றுமை பார்க்காதே, சாதிகள் இல்லை, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது இல் லை, ஆம், கருவறைக்கு உள்ளே செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு, மறை ஓதுகின்ற உரிமை உண்டு, அவன் யாராக இருந்தால் என்ன? இங்கே ஒடுக்கப்பட்டவன், அடக்கப்பட்டவன்,வருணாசிரமத்தின் கீழ் தள்ளப்பட்டவன் என்பதை ஏற்பதில்லை என்று சொல்லுகின்ற வராக, அந்த மடாலயத்தின் சந்நி
தானமாக இங்கே வந்து நமக்கு வாழ்த்துச் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்.

எனது அன்புக்கு உரியவர்களே, அனைத்து சமயங்களும், மது அனைத்துப் பாவங்களுக்கும் மூலாதாரம்; எனவே மதுவை விலக்கும் படி மனிதனை வலி யுறுத்துகின்றன.நமது இலக்கியங்களும் அதைத்தான் சொல்லுகின்றன.

நபிகள் நாயகம் அவர்கள், சாராயப் பீப்பாய்களை உடைத்து எறியுங்கள்; மதீனா வின் தெருக்களில் அது வெள்ளமாக ஓடிப் போகட்டும் என்றார். தீரன் திப்பு சுல்தான், வருமானத்துக் காக மதுவை அனுமதிக்க மாட்டேன் என்றார். இங்கே கொங்கு மண்டலத்தில் மாணவனாக மதுவை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து, கை யில் விலங்கு பூட்டப்பட்டுச் சிறை புகுந்தார் பசுமைப் புரட்சி நாயகர் சி.சுப்பிர மணியம்.

நாங்கள் மதுரையில் நீதி கேட்டோம்; தொண்டை மண்டலத்தில் மதுவை எதிர்த்துப் படை நடத்தினோம். இன்றைக்குப் பொள்ளாச்சிக்கு வந்து நிற் கிறோம். 

இந்தப் பயணத்தை நாங்கள் நிறைவு செய்கின்ற இடம், எங்கள் அறி வாசான் தந்தை பெரியாரின் ஈரோடு.

இன்றைக்கு மழை இல்லை. லாரிகளில் தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றி
தென்னை மரங்கள் பட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டு
இருக்கின்றது என்று, நமது நல்லாம்பள்ளி நாச்சிமுத்து அவர்கள் சொன்னார் கள். அன்றைக்கு செழிப்பான நேரத்தில், 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தியவர் பெரியார்.

நாகம்மையாரும், கண்ணம்மையாரும் தான் இந்தப் போராட்டத்தைத் தீர்மா னிப்பார்கள் என்று காந்தியார் சொன்னாரே, அப்படி அவர்கள் போராடிய அந்தத் திருத்தலத்துக்குச் செல்லுகின்றோம். அந்தப் பெரியாரின் வார்ப்புகள் நாங்கள்.

அரசுக்கு வருமானம் வேண்டும் என்பதற்காக, மதுக்கடைகளைத் திறக்க மாட் டேன் என்று சொன்னவர் அண்ணா. நாங்கள் அண்ணாவின் வார்ப்புகள்.

நாட்டுக்காகத் தன்னலம் இன்றி உழைக்கின்றோம். தமிழகத்தில் முழு மது விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் இந்த அறப் போரை நடத்துகின்றோம்.மக்களின் நல்லாதரவு எங்களுக்கு இருக்கின்றது. உணர்வோடு போராடு கிறோம். தொடர்ந்து பாடுபடுவோம்.

இன்றைக்குத் தமிழகத்துத் தாய்மார்கள், தங்கள் குழந்தைகள், பேரப்பிள்ளை களின் எதிர்காலத்தைக் குறித்துப் பெரிதும் அக்கறை கொண்டு இருக்கின்றார் கள், கவலைப்படு கின்றார்கள்.

தமிழகத்தின் கோடிக் கணக்கான தாய்மார்கள் கொந்தளித்து எழுந்து விட்டார் கள். எனவே, அவர்கள் வீதிக்கு வர ஆயத்தமாகி விட்டார்கள்.அதைத்தான், இந்த நடைப்பயண வழிநெடுகிலும் நான் காண்கிறேன். புரட்சி தொடங்கி விட்டது. இனி, மறுமலர்ச்சி நிகழ்ந்தே தீரும்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment