Saturday, April 27, 2013

வைகோவின் போராட்டம், தமிழகத்துக்கு விடியலைத் தரும்!

காந்தி நடத்திய கள்ளுக்கடை மறியல்,
இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தந்தது!
வைகோவின் போராட்டம், தமிழகத்துக்கு விடியலைத் தரும்!

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், 16.04.2013 அன்று பொள்ளாச்சியில் தொடங்கிய மூன் றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப்பயணத் தொடக்க விழாப் பொதுக் கூட்டத்தில், பேராசிரியர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆற்றிய உரை:-
இதயத்தில் இலட்சியங்களையும்,இன்னுயிரில் தமிழ் உணர்வையும் ஏந்திய வாறு, ஒரு இராணுவக் கட்டுப் பாட்டோடு இயங்குகின்ற ஒரு இளைஞர் பட் டாளத்துக்குத் தலைவராக வைகோ அவர்கள் திகழ்கின்றார்கள்.



ஈழம் என்றால் இரவும் பகலும் துடிக்கின்ற இரத்த நாளம் வைகோ. இன்றைக் குத் தமிழ் மக்களுடைய நலம் நாடி,தமிழ்க்குடும்பங்களின் வளம் நாடி,வைகோ
நாடு முழுவதும் நடைப்பயணங்களை மேற்கொண்டு இருக்கின்றார்.
அவரது அறிவிப்பு வந்த உடனேயே,இந்தப் போராட்டம் வெற்றி பெற்று விட் டது என்றே எனக்குத் தோன்றுகிறது. நேற்று அதிகாலையில் நான் நடைப் பயிற்சி மேற்கொண்டு இருந்தேன். அப்போது நான் யாருடனும் பேசுகின்ற வழக்கம் கிடையாது. எனக்கு எதிரே ஒருவர் நடந்து வந்து கொண்டு இருந்தார். அவர் என்னிடம், நீங்கள் வைகோவை ஆதரிக்கின்றீர்களா? என்று கேட்டார். ஆம் என்று சொன்னேன்.

மதுவை எதிர்த்து நடைப்பயணம் போகிறாராமே? It is Impossible. இது முடியாதே. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? என்று கேட்டார். அவர் யார் என்று எனக்குத் தெரியாது.

எனக்குத் தெரிந்தது எல்லாம் மதுவால் அழிந்தவர்களைப் பற்றித்தானே தவிர,
மதுவால் வாழ்ந்தவர்கள் எவரும் இல்லை என்று நான் சொன்னேன். 

மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள். பகைவர்கள் சிந்திக்க ஆரம்பித்து இருக்கின் றார்கள்.நல்லவர்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதற்கு அடையாள மாகத்தான் நான் அவரது கேள்வியைப் பார்க்கின்றேன்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க வைகோவின் மூன்றாவது கட்ட நடைப்பயணம்,
இன்றைக்குப் பொள்ளாச்சியில் தொடங்குகின்றது. அதற்கு ஒரு குறிப்பிடத் தகுந்த வரலாறு உண்டு.

1932. விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டு இருந்த காலம். அதன் மைய மாக காந்தி முன்வைத்து இருந்த ஒரு கோட்பாடுதான், கள்ளுக்கடை மறியல். அதில், காங்கிரஸ் பேரியக்கமும்,தொண்டர்களும் ஈடுபட்டு இருந்த காலம். அப்போது கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வந்தார் பொள்ளாச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். அன்றைக்குக் கள்ளுக்கடை ஏலம் விடப்படுகிறது. அந்த இளைஞருடைய தந்தையார்தான், ஏலம் விடுகின்ற பொறுப்பில் இருக்கின்றார்.

அதற்காக அவர் போகின்றபோது, போகக் கூடாது என்று மகன் தடுக்கின்றார். இது என்னுடைய அலுவல் கடமை என்று சொல்லிவிட்டு அவர் போகிறார். அந்த ஏலம் நடைபெறுகின்ற இடத்துக்கு முன்பு இளைஞர்களைத் திரட்டிக்
கொண்டு வந்து, அதை எதிர்த்துப் போராட்டம் நடத்துகின்றார் அந்த இளைஞர்.
அதற்காக, அவருக்குப் பத்து மாதங்கள் சிறைத்தண்டனை; 500 ரூபாய் அபரா தம். கட்டத் தவறினால், மேலும் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை என ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. அவரது கைகளில் விலங்கு பூட்டி, பொள்ளாச்சி வீதிகளில் நடத்திச் சென்று, பேருந்தில் கோவைக்குக் கொண்டு சென்று, அங்கும் வீதிகளில் நடக்க வைத்து, சிறையில் அடைக்கின்றார்கள்.

அவர் வேறு யாரும் அல்ல; இந்தியாவின் பசுமைப் புரட்சிக்குக் காரணமாக இருந்த சி.சுப்பிரமணியம் அவர்கள்தாம். கள்ளுக்கடை மறியல்தான், இந்தியா வின் முதல் விடுதலைப் போராட்டம். அது நாட்டுக்கு விடுதலையை வாங்கித்
தந்தது.

அதுபோல, இன்று வைகோ அவர்கள் தொடங்கி இருக்கின்ற இந்தப் போராட் டம் உறுதியாக வெற்றி பெறும்; முழுமையான மதுவிலக்கை நாம் எய்தியே தீருவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கின்றது.

தமிழகத்தின் சிறந்த தலைவர்களுள் ஒருவராக விளங்கிய இராஜாஜி,அதற்கா கவே திருச்செங்கோட்டில் ஆசிரமம் அமைத்தார். மதுவில் இருந்து மக்கள் விடுதலை அடைய வேண்டும என்பதற்காகவே, விமோசனம் என்ற ஏட்டை நடத்தினார். அவர் ஒரு பழமைவாதியாக இருந்தாலும், புரட்சிக்கும், புதுமைக் கும் ஆதரவாக விளங்கினார்.

இன்றைக்கு ஏடுகளைப் புரட்டினால்,கொலை, கொள்ளை, வன்முறைகள். நாட் டின் மனசாட்சியை உலுக்கிய தில்லி விவகாரம். அந்தக் கொடுமையைச்செய்த அனைவருமே மது அருந்திப் போதையில் இருந்தார்கள்.

இரண்டு நாள்களுக்கு முன்பு தமிழகத்தில் ஒரு நிகழ்ச்சி.ஒரு திருவிழா. குடும் பத் தலைவன் குடித்து விட்டு வருகிறான். மனைவி கண்டிக்கிறாள்.இவன் ஒரு கல்லை எடுத்து எறிந்து அவளைத் தாக்க முயலுகிறான். அது தவறிப்போய், அவன் தாய் மண்டையில் அடிக்கிறது. அவர் உயிர் இழந்தார். அதாவது, மனை விக்கும், தாய்க்கும் அவனால் வேறுபாடு காண இயலாத நிலையில் இந்தக் கொடுமை நிகழ்ந்ததை நாம் பார்க்கிறோம்.

பேருந்தில் பயணிக்கின்றான் ஒருவன்.பயணச்சீட்டு வாங்கினாயா? என்று
நடத்துநர் கேட்கின்றார். என்னிடம் டிக்கட் கேட்கிறாயா? என்று, மதுவெறியில் இருந்த அந்த மனிதன்,கையில் வைத்து இருந்த மண் எண்ணெயை எடுத்துத் தன் தலையில் ஊற்றிக்கொண்டு பற்ற வைத்துக் கொண்டான். அவனும் எரிந்து செத்தான்,பேருந்தும் தீப்பிடித்துக் கொண்டது என்பதை நாம் பார்க்கின் றோம். இப்படிக் குடும்பங்களை அழிக்கின்ற மிகப்பெரிய கொடுமையாக மது இருக்கின்றது. இந்த நிலையில் வைகோ அவர்கள் மதுவை எதிர்த்து நடைப் பயணம் தொடங்கி யதற்குப் பிறகு நெடுஞ்சாலையில் இருந்த கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவு இட்டதும் கூட, வெற்றியின் அடையாள மாகவே இருக்கின்றது.

தமிழக அரசே 1500 டாஸ்மாக் கடைகளை மூடத் தீர்மானித்து இருப்பதாக மற் றொரு செய்தி சொல்லுகிறது. இந்தப் பயணம்,ஈரோட்டை நெருங்குகின்ற
வேளையில், இன்னும் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்குமோ என்று நினைக் கும்படியாக, இந்தச் செய்திகள் அமைந்து இருக்கின்றன.

மது அருந்துபவர்கள் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். சிலர், திருவிழா, திரு மணக் கொண்டாட்டங்களின்போது குடிப்பார்கள். அது எப்போதாவது ஒரு முறை. மற்றொன்று, முழுநேரமும் போதையிலேயே மூழ்கி, உலகம் என்ற
ஒன்று இருக்கின்றது என்பதையே மறந்து போய்க் கிடப்பவர்கள். இந்த இரண் டு ரக மனிதர்களையுமே, கவிச் சக்கரவர்த்தி கம்பன் பார்த்து இருக்கின்றான்.
ராம ராஜ்ஜியத்தில் இருந்தவர்கள்,ராமனுக்குத் திருமணம் நடைபெற்ற போது, குடித்து இருக்கின்றார்கள். இராவண இராஜ்ஜியத்தில் இருப்பவர்கள், எப்போ தும் குடித்துக் கொண்டே இருந்திருக்கின்றார்கள்.

இந்த இரண்டுமே பொருந்தாது என்று நினைத்த கம்பன், நடுமையமாக கிஷ்கிந் தையில் சுக்ரீவன் குடியினால் சீரழிந்ததைச் சொல்லுகிறான்.குடிப்பவர்கள், அதில் என்ன கிடக்கின்றது என்பதைக் கூடப்பார்க்காமல் குடிப்பார்கள்; இவர் கள், எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைக்கின்றேன் என்பவர்கள்
என்றான் கம்பன்.

இன்றைக்குச் சிலபேர் அப்படித்தான்,கவலையைத் தீர்க்க நான் மது குடிக்கி றேன் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.

வள்ளுவருக்கு வானுயர்ந்த சிலை வைக்கின்றோம். என்ன பொருள்? நீ சிலை யாகவே இரு; நாங்கள் எங்கள் விருப்பம் போல நடந்து கொள்கின்றோம் என் கிறார்கள். தமிழகத்தில் மது ஒரு வழக்கமாக இருந்த பண்டைக் காலத் திலே யே, அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர் வள்ளுவர். கள் உண்ணாமை என்ற அதிகாரத்தில், ‘கள் உண்பார் நஞ்சு உண்பார்’ என்கிறார்.

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி

பெற்ற தாய் கூட அருவெறுப்பாகப் பார்க்கின்ற நிலைமையை உருவாக்கு
கின்றான் என்கிறார்.

இரண்டு பேர் ஒரு கிணற்றில் குளிக்கப் போனார்கள். ஒருவன், தண்ணீரில்
விழுந்தான்; மற்றொருவன் தண்ணீரில் இருந்தான். தண்ணீருக்கு உள்ளே
விழுந்தவனைக் காணவில்லை. அடுத்தவன் மது அருந்தி இருக்கின்றான். உள்ளே போய்த் தேட முடியவில்லை. நண்பனைத் தேடு வதற்காக, ஒரு கொள்ளிக் கட்டையை எடுத்துக் கொண்டான் என்கின்ற அளவுக்கு அற்ப புத்தி மதுவினால் வருகிறது.

ஒருவன் பாட்டிலை உடைத்தவுடன்,பாட்டில் அவனை உள்ளே இழுத்துப்போட் டுக் கொள்கின்றது. மலை அளவு உயர்ந்தவன் கூட,மதுக்கோப்பைக்கு உள்ளே முடங்கிப் போகின்றான்.

மது என்பது, மனிதனின் உடல் நலத்தைச் சீரழிக்கின்றது, மன நலத்தைக் கெடுக்கின்றது; பொருளாதாரத்தை அழிக்கின்றது; பெண்களின் வாழ்க்கை யைக் கெடுக்கின்றது.இப்படிப்பட்ட மதுவை எதிர்த்து வைகோ நடத்துகின்ற இந்தப் போராட்டம், இரண்டாவது விடுதலைப் போராட்டம் ஆகும். தமிழகத் துக்கு விடியலைத் தேடித் தரும் போராட்டம் ஆகும்.

நெருப்புப் பொறி பறக்கின்ற கொதிக்கும் வெயில் இது. இந்த ஆண்டு, வழக்கத் தை விட வெயில் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. இந்த வெயிலில் நடப் பதற்கு, வைகோ அவர்கள் துணிந்து இருக்கின்றார்கள்.

மாலையில் மட்டும் நடந்தால் என்ன? என்று கூட நான் கேட்டேன்.

இல்லை; இந்த வெயிலின் கொடுமையை விட, மதுவால் மக்கள் படுகின்ற அவதி, கொடுமை அதிகமானது என்று வைகோ அவர்கள் சொன்னார்கள். (பலத்த கைதட்டல்)



வைகோ அவர்களே, தமிழ் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான தலைவர்
அவர்களே, இந்த நடைபயணத்தில் உங்களோடு சேர்ந்து நாடே நடக்கின்றது. வீடுகளில் இருக்கின்ற தாய்மார்களின் உள்ளங்கள் எல்லாம் உங்களோடு சேர்ந்து நடக்கின்றன.எனவே, இந்தப் பயணம் உறுதியாக வெற்றி பெறும்.

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் இவ்வாறு உரை ஆற்றினார்

No comments:

Post a Comment