Monday, April 22, 2013

சீவகசிந்தாமணி சொல்லும் மதுவிலக்கு!

தமிழ்த்தாய்க்குச் சமணச் சான்றோர் அணிவித்துள்ள தலையாய அணிகலன் களில் ஒன்றான திருத்தக்க தேவர் என்னும் சமணத் துறவி தண்ணார் தமிழில்
விருத்தப்பாவால் வடித்துத் தந்தது சீவகசிந்தாமணி.

Rev.H.Bower

1868 இல் சிந்தாமணியின் சில பகுதிகளை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் ரெவரஸ்ட் எச்.பவர் ஜைந சமய சித்தாந்தம் (Jainism) என்று அதில் விரிவாகச் சொல்லுவார்.

உ.வே.சா

1887 இல் திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி மூலமும், மதுரை யாசி ரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியனாருரையும் வெளிவந்தது.1907ல் சென்னை
பிரசிடென்ஸி அச்சுக்கூடத்திற் பதிப்பித்து பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதர் உ.வே.சா. அவர்கள் 1048 பக்கங்களில் இரண்டாம் பதிப்பை வெளியிட் டார்.தொடர்ந்து, பல பதிப்புகள் வந்துள்ளது.



கி.வா.ஜகந்நாதன்

இது இயற்றப்பட்ட காலம் 9 ஆம் நூற்றாண்டு ஆகும்.(கி.வா.ஜகந்நாதன், தமிழ் காப்பியங்கள், சென்னை 1940,பக் 238). கம்பர் தாம் பாடிய இராமாயணத்தில்
சீவகசிந்தாணியில் கண்ட முறைகளைப் பின்பற்றி எழுதுகிறார்.

டாக்டர் கோவி.மணிசேகரன்

ஓலைச் சுவடியிலிருந்து அச்சேறிய காவிய நூல் உரைநடை ஓவியமாக டாக்டர் கோவி.மணிசேகரன் ‘சீவசிந்தாமணி காட்டிய நாவலாக’ 1984 இல் தந்தார்.

இரா.இராஜசேகரன்

இன்ப காவியம் என்னும் சிறு நூலை சிந்தாமணி குறித்து இரா.இராஜசேகரன் தந்துள்ளார்.

முனைவர் கா.கோ.வேங்கடராமன்

சீவசிந்தாமணியின் அகவடிவமும் அமைப்பு வடிவமும் எனும் நூலை கா.கோ.வேங்கடராமன் 1997 இல் தந்துள்ளார்.

எஸ்.பொ.

பெருங்காப்பியம் பத்து எனும் நூலில் (1997, பக்.93) எஸ்.பொ. திருத்தக்க தேவருக்கு, திருத்தகு மாமுனிவர், திருத்த முனிவர், தேவர் என்று பல பெயருண்டு என்பர்.

எம்.நாராயண வேலுப்பிள்ளை

1988 இல் சிறுவர்க்கான சீவகசிந்தாமணி கதையை வித்துவான் எம்.நாராயண வேலுப்பிள்ளை தந்துள்ளார்.

மு.சண்முகம்பிள்ளை

பேராசிரியர் மு.சண்முகம்பிள்ளையை பதிப்பாசிரியராகக்கொண்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் 1985 இல் சீவேந்திரர் சரிதம் என்று சிந்தாமணி குறித்த நூலைத்தந்துள்ளார்.

அ.மு.பரமசிவானந்தம்

பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் சீவகன் கதை எனும் நூலை 1955 இல் தந்துள்ளார்.

சீவக சிந்தாமணி ‘மதுவிலக்கு’ பற்றி வற்புறுத்துகிறதா? என்று தேடினேன்; கிடைத்திட்ட தகவல்களைத் தருகிறேன். இதோ:

ஒளவை சு.துரைசாமி

1943 ஏப்ரலில் திருப்பதி கீழ்க்கலை ஆராய்ச்சிக் கழகத் தமிழ் விரிவுரையாளர் வித்துவான் ஒளவை சு.துரைசாமி பிள்ளை எழுதிய முப்பெருங்காவியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணி ஆராய்ச்சி எனும் 242 பக்கங்களைக்கொண்ட நூலில் பக்கம் 205 இல்:

‘வளைக்கையில் கடைசியர் மட்டுவாக்கலின்
திளைத்தவர் பருகிய தேறல் தெற்றுழிக்
களிப்பவுண் டிளவனம் கன்னி நாரையைத்
திளைத்தலின் பெடைமயில் தெருட்டுஞ்செம்மற்றே’

என்ற பாடலைக் குறிப்பிட்டுள்ளார்.

‘கடைசியர் வார்த்த கள்ளை கடை ஓர் உண்டபோது,ஒழுகிய அக்கள் அங்கிருந்த குழியிலே தேங்கி நிற்ப அதனை இள அன்னம் ஒன்று உண்டு மயங்கி நாரை யைத் தழுவ முயல்கின்றது. இனமல்லாத நாரையைத் தன் இனம் என அன்னம் கள் வெறியால் மயங்குவதைக் காணும் பெடைமயில்தான் சேவலுக்குக்காட்டி அதனைத் தெருட்கின்றதெனக் கள்ளுண்டால் வரும் கேட்டைத் தேவர் நமக்குக் காட்டுகின்றார் என்பார்.’

நாமகள் இலம்பகம்

சீவக சிந்தாமணி 13 இலம்பகங்களைக் கொண்டது.அதில் முதலாவது வருவது நாமகள் இலம்பகம். அதில் வரும் 50 ஆவது பாடல்தான் மேலே குறிப்பிட்ட பாடல் ஆகும்.

நச்சினார்க்கினியர் உரை

கடைசியர் கையாலே மதுவை வார்த்தலின் தொழிலிலே இடைவிடாது பயின்ற வர் உண்ட தேறல் மிக்குச் செறிந்த இடத்தே காம இன்பம் அறிந்த அன்னம் அதனை உண்டு காம இன்பம் நுகர்ந்தறியாத நாரையைப் புணர்தலின்,அதனைக் கண்டு மயிற்பெடை தன் மயிலைத் தெருட்டுந்தலைமைத் தென்க.

புலவர் அரசு-பொ.வே. சோமசுந்தரனார் உரை

1959 இல் சீவகசிந்தாமணிக்கு உரை எழுதிய புலவர் அரசு,பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் இருவர் தரும் உரை இதோ,

மது தேங்கிய இடத்தில், காம இன்பம் அறிந்த அன்னம் அதனை மயங்க உண்டு, காம இன்பம் அறியாத நாரையைக் கூடுதலின், அதனைக் கண்டு மயிற்பெடை
தன் மயிலைத் தெளிவாக்குந்தலைமைத்து நீர் கள்ளுண்டு இதுபோல் மயங்கன்மின் என்று தெருட்டிற்று.

மதுவால் அன்னப் பறவையின் தடுமாற்றம்

பால் வேறு தண்ணீர் வேறு எனப் பிரித்துண்ணும் அன்னம், மதுவை உண்டதால் புத்தி பேதலித்து, தன் இனமான அன்னத்தை மறந்து, வேறு ஒரு இனமான
நாரை யைப் போய்க் கூடுகிறது. குடிபோதையில் அன்னமும் நாரையும் கூடி மகிழும் கொடிய காட்சியைக் கண்ட பெண்மயில் ஆண் மயிலைப் பார்த்து; பார்த்தாயா இந்தக் கொடுமையை; அன்னம் குடிபோதை யால் புத்தி தடுமாறி நாரையைக் கூடுகிறது. அதுபோல நீயும் இருந்தால் என்னிடத்தே வராதே’ என்று பெண் மயில் ஆண் மயிலுக்குத் தெரிவித்து அறிவுறுத்தும் காட்சியைத்
தான் திருத்தக்கத் தேவர் இவ்வாறு காட்டுகிறார்.

மயிலே வெறுத்திடும் மது

பெண் மயில் வெறுத்து ஒதுக்கும் மது, அது அருந்தினால் நல்ல அன்னமும், புத்தி தடுமாறிப் போகும் போக்கு,தனது இனத்தை விட்டு, வேறு இனமான நாரை யைக் கூடும் கொடுமை. இக் கொடுமை பறவையினங்கள் வெறுக்கும் மதுவை மனிதர் மட்டும் விரும்புவது சரியா?

குடித்துவிட்டு வரும் தங்களது கணவர்களைப் (ஆண்களை) பார்த்து பெண்கள் சொல்ல வேண்டியது,இங்கே வராதீர்! இதுதான் பெண் மயில் ஆண் மயிலுக்குச்
சொல்லுவதாக திருத்தக்கத் தேவர் சொல்லும் செய்தியாகும்.

பதுமையார் இலம்பகம்

கவிஞர்கள் சொற்களின் துணையால் இலக்கியம் படைக்கின்றனர். அவர்களின் நெஞ்சத்தில் தேங்கியிருக்கும் உணர்ச்சி கற்பனை, கருத்து ஆகியவற்றைச் சொற்கள் சுமந்துகொண்டு வெளியே வருகின்றன. ஐந்தாவதாக வரும் பதுமை யார் இலம்பகத்தில் திருத்தக்கத்தேவர் பாடுகிறார். 1234 ஆவது பாடல்.

“ஊனொடு தேனுங் கள்ளுமுண்டுயிர் கொன்றபாவத் தீனராய்ப் பிறந்த திங்ஙனினியானவயொழிமி எனன்ன முற்பிறப்பில் ஊனையும், தேனையும் கள்ளையும் உண்டு உயிரையும் கொன்ற தீவினையால் என்று கள் அருந்து வதை தீவினை என்று சாடுகிறார். (1237 ஆவது பாடலில்)

என்றாலும் தேனுமுனும் பிழியலும் இறுகநீக்கிக் கள்ளை முற்றும் துறந்திட வேண்டும் என்று நன்னெறிப்படுத்த வற்புறுத்துகிறார் திருத்தக்க தேவர். (முதல் ஐந்து தமிழ்க் காப்பியங்கள், மா.செண்பகம். பக் 117)

மு.வை. அரவிந்தன்-மறைமலையடிகள்

இலக்கிய வானில் சிந்தாமணி எனும் நூலை பேராசிரியர் மு.வை.அரவிந்தன் 1975 இல் தந்துள்ளார். அதில் பக்கம் 11 இல் மறைமலையடிகள் தனது மகளுக்குச்
‘சிந்தாமணி’ என்று பெயர் சூட்டியதைச் சுட்டிக் காட்டுவார்.

சீரிய கருத்துகளைத் தரும் சிந்தாமணி மதுவை வெறுக்கிறது.

செகவீரபாண்டியனார்

“காமத்தின் சுவை கண்டார் காம நூல் என்கிறார், தரும நீதித்

தாமத்தின் நிலை கண்டார் தரும நூல் என்கிறார்;தவங்கள் சார்ந்த

ஞானத்தின் நலம்கண்டார் ஞானநூல் என்கின்றார்; நயந்தோர்க்கெல்லாம்

சேமத்தை அருளுகின்ற சீவகசிந்தாமணியைச் செய்து தந்தாய்”

என்று திருக்கத் தேவரை ஜெகவீர பாண்டியனார் போற்றி

மகிழ்வார். முழு மதுவிலக்கே நமது இலக்கு என்று, நாளும் நாளும் உழைத்து வரும் எழுதி வரும் உரையாற்றி வரும் தமிழர் தலைவர் வைகோ காட்டும் வழியில் மது எனும் விஷத்தை ஒழித்துக்கட்ட அனைவரும் தம்மால் ஆன
முயற்சியில் இறங்கிடுவோம்; முழு வெற்றி பெற்றிடுவோம்!




நன்றிகள் 

கட்டுரையாளர் :- செ.திவான்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment