Monday, April 22, 2013

தூத்துக்குடியில் இன்று கருப்பு தினம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்தமாதம் (மார்ச்) 23-ந்தேதி விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதன்காரணமாக பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஏராளமான மரம், செடி,கொடிகளும் கருகின. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் முற்றுகை போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அதேநேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் கோட்டாட்சியர், தாசில்தார் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிரடிசோதனை நடத்தினர். அதில் அங்கிருந்து விஷவாயுவை திறந்துவிட்து தெரியவந்தது. இதனால் தமிழ்நாடு மாசுகட்டுப் பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 30-ந்தேதி மூடப்பட்டது.



ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டுவழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கில் இம்மாதம் 2-ந்தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அதில் ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இருந்தபோதிலும் தற்போது விஷவாயு கசிந்ததன் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூடியதால் மீண்டும் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மீட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக் குழு சார்பில் தூத்துக்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் அனைத்து வியாபாரிகள், பொதுமக்கள், ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் கலந்துகொண்டனர்.

இதனால் அன்றையதினம் தூத்துக்குடி நகர் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள், வாடகை கார் மற்றும் வேன்கள், மினி பஸ்கள் எதுவும் ஓடவில்லை. இதனால் தூத்துக்குடி நகரமே வெறிச்சொடி காணப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக்கோரி அடுத்தகட்டமாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழு அறிவித்திருந்தது. அதன்படி தூத்துக்குடியில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி-பாளை ரோட்டில் வி.வி.டி.சிக்னல் மேல்புறத்தில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநகர மத்திய வியாபாரிகள் சங்க செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் ஆம்புரோஸ் தொடங்கிவைத்தார். இதில் ம.தி.மு.க. தூத்துக்குடி மாவட்ட செயலாளர்ஜோயல் மற்றும் பலர் சிறப்புரை ஆற்றினர். இதில் இந்தியகம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், தாமிரபரணி நீர் பாதுகாப்பு பேரவை நயினார் குணசேகரன், போராட்டக் குழுவை சேர்ந்த பாத்திமா பாபு, வியாபாரிகள் சங்க பொருளாளர் ஈஸ்வரன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக் குழுவினர் நடத்திய உண்ணாவிரதத்தை முன்னிட்டு தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் ஏராளமான வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது.

போராட்ட குழு இன்றைய தினத்தை கருப்பு தினம் என அறிவித்து இருந்தது .

No comments:

Post a Comment