Monday, April 15, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 13

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே


ஈழத்தமிழர்களின் அரசியல் இலட்சியத்தைத் தீர்மானிக்க நீங்கள் யார்?

இந்திய அமைதிப்படையின் அக்கிரமங்களை எதிர்த்து, தலைவர் வைகோ மாநிலங்களவையில் தொடர்ச்சியாக கண்டனக்குரல் எழுப்பிய வண்ணம் இருந் தார். பிரதமர் இராஜீவ்காந்தி, வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் வைகோ அவர்களுடன் மோதியபோது, அவர்களெல்லாம்
அக்கினிக் கணைகளை எதிர்கொள்ள நேரிட்டது. ஒட்டுமொத்தத் தமிழினத்தின்
ஒற்றைக் குரலாக அப்போது எழும்பிய தலைவர் வைகோவின் விசுவரூபம்
எப்படி இருந்தது என்பதைத் தொடர்ச்சியாகக் காண்போம்.

1987, நவம்பர் 13இல் மாநிலங்கள் அவையில் நடைபெற்ற விவாதம்; வைகோ வின் கேள்விக்கணைகள்:



அமைச்சர் நட்வர்சிங்: விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைப் பறிக்கத்தான்
நமது அமைதிப்படை இலங்கையில் செயல்படுகிறது.சீக்கிரத்தில் வேலை முடியும்.

வைகோ: ஆயுதங்களைப் பறிப்பதற்காகஅல்ல; பிரபாகரனையும் புலிகளையும்
ஒழித்துக்கட்டத்தான் இந்த உத்வேகத் தாக்குதல் நடக்கிறது.

நட்வர்சிங்: கோபால்சாமி இப்படி இடைமறித்தால் நான் பேச முடியாது.

வைகோ : முப்பது நிமிடம் இதுவரை பேசினீர்கள். விவாதத்தைத் தொடங்கிய
நான் எழுப்பிய அடிப்படைக்கேள்விகள் எதற்கும் பதில் சொல்லவில்லை.மழுப்பி விட்டு நழுவி ஓடப்பார்க்கிறீர்கள்.எனவே, எனது அடிப்படைக் கேள்வி, இந்த யுத்தம் ஏன் வெடித்தது? என்பது தான்.

அக்டோபர் 3 ஆம் தேதி பருத்தித் துறையில் 17 புலிகளை சிங்கள இராணுவம் கைது செய்த பின் 3 நாள்வரை இந்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது?

12 பேரும் தற்கொலை செய்து கொண்டதற்கு யார் காரணம்? ஒப்பந்தத்தில் சிங் கள இராணுவம் முகாம்களைவிட்டு வெளியே வரக்கூடாது என்று திட்டவட்ட மாக இருக்கிறது. பின்னர் எப்படி 17 புலிகளை சிங்கள இராணுவம் பிடித்தது.

17 பேர் வைக்கப்பட்டிருந்த இடத்தில்,முதலில் இந்திய இராணுவம் கூட்டுக்
காவல் போட்டது உண்மையா? இல்லையா?

டெல்லிக்குத்தகவல் எட்டியபின் அந்தக்காவலை அக்டோபர் 5ஆம் தேதி எடுத்து விடும்படி அமைதிப்படைக்கு இந்தியா உத்தரவிட்டது உண்மையா?இல்லையா? டெல்லியின் உத்தரவின் பேரில்தான் அந்த 17 புலிகளையும் கொழும்பிற்கு கொண்டு செல்ல ஏற்பாடு ஆயிற்று என்பது உண்மையா? இல்லையா?

முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலாளர் வெங்கடேஸ்வரனும் நேற்று
டெல்லியில் இருந்து அதிர்ச்சி தரத்தக்க செய்தியை ஒரு கூட்டத்தில் சொல்லி
இருக்கிறார். 17 புலிகளின் உயிரைக்காப்பாற்ற பிரபாகரன் துடித்ததால் இந்திய
அரசு புலிகளுக்கு பாடம் கற்பிக்க எண்ணி, புலிகளை மிரட்ட எண்ணி, தங்கள் பேச்சுக்கு கட்டுப்பட வைக்க நினைத்து, இந்த பயங்கரமான சதியில் இந்தியா ஈடுபட்டது என்று குற்றம் சாட்டுகிறேன். இதற்கு அமைச்சரின் பதில் என்ன?

நட்வர்சிங்: இதுபற்றி பிரதமர் விளக்கம் கூறி இருக்கிறார். மாநிலங்களவை யில் நான் இதுபற்றி சொல்லியிருக்கிறேன்.

வைகோ: பிரதமர் அவைக்குத் தவறான தகவல்களைத் தந்ததால்தான் எனது
கேள்விகளை எழுப்பி இருக்கிறேன்.திட்டவட்டமான பதில் தேவை. இந்தச் சம் பவம்தான் தற்போதைய இரத்தக்களரிக்கு அடிப்படைக் காரணம்.

உபேந்திரா (தெலுங்குதேசம்):கோபால்சாமி கேள்வி மிகவும் முக்கியமானது. அமைச்சர் பதில்சொல்ல வேண்டும்.

வைகோ: பன்னிரண்டு பேர் சாவிற்கு இந்திய அரசுதான் பொறுப்பு. இந்திய
இராணுவத்தின் காவலை பலாலி முகாமில் 12 பேர் இறந்த இடத்திலிருந்து
திரும்பப் பெற்றது ஏன்?

(இதற்கு நட்வர்சிங் பதிலளிக்கவில்லை. அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள்
வைகோவைப் பார்த்து இந்தியில் கூச்சல் போட்டனர். உடனே அவர்களைப்
பார்த்து வைகோ தமிழில் கடுமையான வார்த்தைகளால் சாடினார். இதற்கு
அவர்களால் பதில் கூற முடியவில்லை)

அமைச்சர் ஜெகதீஸ் டைட்லர்:கோபால்சாமி இந்தியப் படையினருக்காக
பேசுகிறாரா? இலங்கைத் தமிழருக்காக பேசுகிறாரா?

வைகோ: நான் இலங்கைத்தமிழருக்காகத்தான் பேசுகிறேன்.

அமைச்சர் டைட்லர்: இந்தியஇராணுவத்தை எதிர்த்தா பேசுகிறீர்கள்? என்ன துணிச்சல்? வெட்கக்கேடு.

வைகோ: ஆம்; இந்திய இராணுவத்தைஎதிர்த்துத்தான் பேசுகிறேன்.

அமைச்சர் டைட்லர்: உறுப்பினர் எந்த வகையான மனிதர் என்று தெரிய வில்லை.

வைகோ: எந்த வகையில் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.

அமைச்சர் டைட்லர்:: இந்தியா முக்கியமா? இலங்கைத் தமிழர் முககியமா?

வைகோ: இலங்கைத் தமிழர்அழிக்கப்படும்போது இந்தியாவைவிட எனது இனத்தவரின் உயிர்தான் எனக்குப் பெரிது.

(தனது பதிலுரையை அரைகுறையாக முடித்துவிட்டு அமைச்சர் நட்வர்சிங்
உட்கார்ந்துவிட, தலைவர் வைகோ,இந்திய அரசின் அராஜகப் போக்கைக்
கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி விட்டு அவையை விட்டு வெளியேறி னார்.)

மீண்டும் 1987, நவம்பர் 21 இல் நடைபெற்ற விவாதம் வருமாறு;

பிரதமரின் பிளாக்மெயில்

வைகோ: யுத்தக் கைதிகளாக இருந்த பதினெட்டு இந்திய இராணுவ வீரர்களை
விடுதலைப்புலிகள் நேற்று மனிதாபிமான நல்லெண்ண அடிப்படையில் விடு தலை செய்தனர்.
யுத்தக் கைதிகளை புலிகள் நாகரிகமாக நடத்திய செய்திகள் உலகுக்குத் தெரிந் தது. இந்திய சர்க்காரின் பொய்ப்பிரச்சாரம் தூள் தூளானது.இந்திய அரசு இதனை வரவேற்று,தமிழர்களை அரவணைக்கும் போக்கில் நிரந்தரமான போர் நிறுத்தத் தை அறிவிக்கும் என்று எதிர்பார்த்தேன்.ஆனால், இந்த அரசின் அறிக்கை நஞ் சைக் கக்குவதாக புலிகள் மீது வெறுப்பையும் துவேசத்தையும் கொட்டுவ தாக அமைந்துள்ளது.

இலங்கைத் தமிழர்களிடம் புலிகளுக்கு ஆதரவு இல்லை என்றும், புலிகள் ஓடு கிறார்கள் என்றும், அதனால்தான் புலிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளார்கள் என் றும், அமைச்சர் குறிப்பிட்டார்.அமைச்சருக்கு சொல்கிறேன், ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை இந்திய இராணுவம் ஈவு இரக்கமின்றி கொன்று குவித் ததால் இலங்கைத்தமிழர்கள் உள்ளத்தில் இந்திய அரசு மீதும் இந்திய ராணுவம் மீதும் கடுமையான கசப்பும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது.

உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு தரைமட்டமானது.தமிழகத்திலும் இந்தி யா விலும் உள்ள மக்கள் மனதில் இந்திய இராணுவ நடவடிக்கைக்கு எதிரான எதிர்ப்பு அலை புயலாக வீசுகிறது.தமிழ்நாடு எரிமலை ஆகிவிட்டது.திமுகழகத் தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தீக்குளித்துவிட்டனர்.

இந்தக் காரணங்களுக்காகத்தான் வேறு வழியின்றி இந்திய அரசு இந்தப் போர்
நிறுத்தத்தை அறிவித்துள்ளது. ஆனால்,அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக் கும் அணுகுமுறையை இந்தியா இப்போதும் கடைபிடிக்கிறது.தான் ஏற்படுத் திய புண்ணுக்கு மருந்து தடவுவதற்குப் பதிலாக அப்புண்ணில் வேல் பாய்ச்சு கிறது.

48 மணிநேர போர் நிறுத்தம் என்று சொல்கிறீர்களே? ஆயுதங்களைப் புலிகள் ஒப்படைக்க வேண்டும் என்றும்,ஒப்பந்தத்தை எந்த நிபந்தனையும் இன்றி ஏற்க வேண்டும் என்றும் இந்திய அரசு துப்பாக்கி முனையில் மிரட்டுவது எந்த வகை யில் நியாயம்? 

ஆயுதங்களை புலிகள் நம்மை எதிர்த்தா தூக்குகிறார்கள்? இல்லையே! புலிகள்
நம்மை எதிர்த்தா தூக்குகிறார்கள்? இல்லையே! புலிகள் இந்தியாவை நேசிக் கிறார்கள். இந்திய மக்களை நேசிக்கிறார்கள். தங்கள் உரிமைகளைக்காப்பாற்ற, மானத்தோடு வாழ, சிங்கள அரசை எதிர்த்து தூக்கிய ஆயுதங்களைக்  கீழே போடச் சொல்கிறீர்களே, இந்திய இராணுவம் வெளியேறியபின்பு, சிங்களத்
தாக்குதலிலிருந்து தமிழர்களைக் காப்பாற்ற என்ன உத்திரவாதம் இருக்கிறது?
ஒப்பந்தத்தை ஏற்றே தீரவேண்டும் என்பது ஜனநாயகமா? எங்கே இருக்கிறது
உங்கள் ஒப்பந்தம்? 

வடக்கும் கிழக்கும் இணையவேமுடியாது என்று பிரேமதாசா சொல்லிவிட்டார். இஸ்ரேல் படைகள் வெளியேறாது என்று காமினி திசநாயகா கூறிவிட்டார். சிங்கள குடியேற்றத்திற்கு தடையேதும் இல்லை.கொழும்பு ஒப்பந்தத்தை இலங்கை அரசு எதிர்த்து சாம்பலாக்கி அந்த சாம்பல் வங்காள விரிகுடாவின் நீலக்கடல் அலைகளில் கரைக்கப்பட்டுவிட்டது.புலிகள் வேண்டுவதெல்லாம் இதுதான்.நிரந்தரப் போர் நிறுத்தம் தேவை. அக்டோபர் 10  ஆம் தேதிக்கு முன் பிருந்த நிலைக்கு இந்தியப் படைகள் வாபஸ் ஆகவேண்டும்.

பேச்சுவார்த்தையின்போது ஆயுதங்கள் ஒப்படைப்பது பற்றி விவாதிக்கத் தயார்.
ஒப்பந்தம் தமிழர் நலனுக்கு ஏற்றவாறு நிறைவேற்றப் படுமானால், ஒத்துழைக் கத்தயார். இந்திய அரசு இதனை ஏற்றுக்கொண்டு நிரந்தரப் போர் நிறுத்தத்தை
அறிவிக்க வேண்டுகிறேன்.


எச்சரிக்கை செய்கிறேன்

48மணி நேர கெடு விதிப்பது மிரட்டல்ஆகும்.புலிகளை மிரட்ட பிரதமர் செய்யும்
பிளாக்மெயில் ஆகும். இது அக்கிரமம்.48 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் இந்திய இராணுவம் தாக்குமானால், என்றைக்கும் நீங்கள் விடுபடமுடியாத பயங்கரமான புதைமணலில் சிக்கிக்கொள்வீர்கள் என்று எச்சரிக்கிறேன். நிரந்தரப் போர்நிறுத்தத்தை அறிவியுங்கள்.

நட்வர்சிங்:புண்ணுக்கு மருந்திட வேண்டும் என்று கோபால்சாமி சொன்னார். இந்த அறிக்கை வெறுப்பைக் கொட்டுகிறது என்றார்.ஏராளமான இந்திய சிப்பாய் கள் இறந்ததால் அதை மனதில் கொண்டு இந்த அறிக்கை தரப்பட்டது.
வைகோ: அப்படியானால் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களைப்பற்றி கவலை இல்லையா?

நட்வர்சிங்: இந்த 48 மணி நேரப் போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

வைகோ:: இந்திய சிப்பாய்களை விடுதலை செய்தபோது நேற்று பத்திரிக்கை நிருபர்களிடம் பேச புலிகள் ஏன் அனுமதிக்கப்படவில்லை?

நட்வர்சிங்: அதுபற்றி நான் விசாரிக்கிறேன்.

வைகோ:அக்டோபர் 10 ஆம் தேதிக்கு முன் இருந்த நிலைக்கு இந்திய ராணுவம் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.புலி களை அழைத்துப்பேசுங்கள்.அப்போது ஆயுதங்களை ஒப்படைப்பது பற்றி பேசுங் கள். 48 மணி நேர கெடுவிதித்திருப்பது முறையற்றது -போர் நிறுத்தத்தை நிரந் தர மாக்க வேண்டும்.

நட்வர்சிங்:48 மணி கெடு என்று கருதவேண்டாம். நிரந்தரமான போர் நிறுத்தத் திற்கு நான் தற்போது உறுதி மொழி கொடுக்க முடியாவிட்டாலும்,தற்போது தரப்பட்டுள்ள கெடு தளர்த்தப்படலாம்.

விடுதலைப்புலிகளின் கோரிக்கையான நிரந்தரப் போர் நிறுத்தத்தை இந்தியா அறிவிக்காதது மாத்திரமல்ல,48மணி நேர கெடு முடிந்தபிறகு,இந்திய அமைதிப் படை தாக்குதலை தீவிரப்படுத்தியது. அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படும் செய்திகள் இலங்கையில் இருந்து வந்தவண்ணம் இருந்தன.இதனால் தமிழ் நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. எனவே காங்கிரஸ் அரசு வானொலி, தொலைக்காட்சி மூலம் பொய்ச்செய்திகளை பரப்பத்தொடங்கியது. தமிழினத் துரோகிகள் செயலை நியாயப்படுத்தவும், விடுதலைப்புலிகளை காயப்படுத்த வும் முயன்றனர். இந்திய அரசின் இத்தகைய கேவலமான பிரச்சாரத்திற்கு தலைவர் வைகோ நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

1987 டிசம்பர் 1 இல் வைகோ அவர்கள் மாநிலங்களவையில் பேசும்போது,தமிழ் நாட்டில் புரட்சி வெடிக்கும் என்று எச்சரித்தார்.

டெலிவிஷனா? டெலிவிஷமா?

“ஜனநாயகத்திற்கு நேர்ந்துள்ள பெரியஅபாயத்தை இம்மாமன்றத்தின் கவனத் திற்கு கொண்டு வருகிறேன்.இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து நச்சுத் தன்மை வாய்ந்த நாசகார பொய் பிரச்சாரத்தை அகில இந்திய வானொலியும், தொலைக்காட்சியும் தமிழ்நாட்டில் நடத்துகின்றன.

நாஜிகள் ஒரு காலத்தில் கடைப்பிடித்த கோயபல்ஸ் பிரச்சாரத்தைக் கடந்த
அக்டோபர் 10 ஆம் தேதியிலிருந்து மத்திய அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ‘அகில இந்திய வானொலி’ என்பது தற்போது ‘அனைத்து மோசடி வானொலி’
ஹடட குசயரன சுயனiடி என்று ஆகிவிட்டது. தொலைக்காட்சியை தற்போது
தமிழ்நாட்டில் ‘டெலிவிஷம்’ என்றே அழைக்கிறார்கள். ஒவ்வொரு நாளும்
ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து இந்திரா காங்கிரஸ் பேச்சாளர்கள் கலந்து
கொள்ளும் பொதுக் கூட்டங்களை தொலைக்காட்சியில் காட்டு   கிறார்கள். இந்திரா காங்கிரஸ் பேச்சாளர்களின் முகங்களை தொலைக்காட்சியில் காட்டி
விட்டு, சமயங்களில் கேமரா அங்கு கூடுகின்ற கூட்டங்களின் பக்கம் திரும்பும்
போதுதான் உண்மை வெட்ட வெளிச்சமாகிறது.

என்ன தெரியுமா? பொதுக்கூட்டத்தில் அதிகபட்சமாக பத்துப்பேர்தான் காணப் படுகிறார்கள். இந்திரா காங்கிரஸ் தனது பொய்ப்பிரச்சாரத்தை நடத்த மிக மோச மான பெயர் வாங்கிய பேச்சாளர்களை வாடகைக்குப் பிடித்து பயன்டுபடுத்து கிறது.

புதுவை நாராயணசாமி(இ.காங்):மோசமான பேர் வாங்கிய பேச்சாளர்கள்
என்றும், வாடகைக்கு பிடிக்கப் பட்டவர்கள் என்றும் உறுப்பினர் கூறியதை சபையில் அனுமதிக்கக்கூடாது.

அவைத்துணைத் தலைவர்: இது கோபால்சாமியின் அபிப்ராயம். அதனை
நீங்கள் ஏற்காமல் இருக்கலாம்.

வைகோ: தி.மு.கழகத்தைத் தாக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் இந்திரா
காங்கிரஸ் என்ன செய்கிறது தெரியுமா? ‘சோ’ என்ற ஒரு ஆசாமியை, அறிவை
நேர்மைக்குப் பயன்படுத்தாத இந்த கிறுக்குப் பிடித்தப் பேர்வழியை கூட்டங் களில் பேச வைக்கிறார்கள். இப்போது இந்த சோ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் ஆஸ்தான விதூஷகனாக டி.வி.யில் கூலிக்குப் பேசுகிற கோமாளி யாக செயல்படுகிறார். டெலிவிஷனில் செய்திகள் வெளியிடும்போது, இந்திரா காங் கிரசின் மூத்த பொதுச்செயலாளர் ஒருவர் (மூப்பனார்) பேசுவதையும் காட்டு
கிறார்கள். ரேடியோவும், டெலிவிஷனும் இந்திரா காங்கிரஸ் கட்சியின் குடும்பச் சொத்து அல்ல.

தமிழ்நாட்டில் இந்தப் பித்தலாட்டப் பிரச்சாரத்தை எதிர்த்து தமிழர்கள்பொங்கி எழுவார்கள். டெலிவிஷன்,ரேடியோவை எதிர்த்து தமிழ்நாட்டில் புரட்சி வெடிக் கும் நாள் தொலைவில் இல்லை என எச்சரிக்கிறேன். எனவே இந்த கோயபல்ஸ் பிரச்சாரத்தை உடனடியாக மத்திய அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்து கிறேன்.

மாநிலங்களவையில் 8.12.1987 அன்று தலைவர் வைகோ ஆற்றிய உரை:

நெஞ்சில் வளர்த்த நெருப்பு

“ நாடாளுமன்றம் தொடங்கி ஐந்து வாரங்கள் ஆகின்றன. வெளியுறவுத்துறை
இலாகா மீது, இராணுவத்துறை இலாகா மீது, இலங்கைப் பிரச்சினை குறித்து
கேள்வி நேரங்களில் கேட்பதற்காக நான் எழுப்பிய கேள்விகள் அனுமதிக்கப்பட
வில்லை. உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகளையே நசுக்கும் ஆபத்தான
நிலை எழுந்துள்ளது.அரசு உத்தரவின் பேரில் இந்த அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்தைச்சேர்ந்த 35,000 சிப்பாய்கள் கடந்த 57 நாட்களாக அன்னிய தேசத்தில் தமிழர்களை அழிக்கும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.நாள் ஒன்றுக்கு நான்குகோடி ரூபாய் இந்தியா இதற்காகச் செலவழிக்கிறது.விடுதலைப் புலி களின் நல்லெண்ணத்தால், அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்டு மீண்டும் இலங்கையில் புலிகள் மீதும், தமிழர்கள் மீதும் இந்திய இராணுவம் தாக்குதல் தொடுத்து பதினைந்து நாட்கள் ஆகின்றன.
ஆனால், இந்த நிமிடம் வரையில் அரசாங்கம் அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றி நாடாளுமன்றத்தில் ஏன் ஒரு அறிக்கையும் தரவில்லை? இது ஜனநாயகத் திற்கு செய்யும் துரோகம் ஆகும். அதிபர் ஜெயவர்த்தனா இந்தியப் படைகள் இன்னும் எத்தனை ஆயிரம் வேண்டுமானாலும் தான் அழைத்தால் வரும் என்று கொக்கரிக்கிறார்.

இரத்தவெறி பிடித்த லலித் அதுலத் முதலி இன்னும் திமிராக சொல்லுகையில், ஒப்பந்தத்திற்கு பின்னர் கூட இலங்கை இராணுவம் தன்னுடைய ஆற்றலை நிரூபித்துள்ளது என்றும் இந்தியப்படை இலங்கை இராணுவத்தின் அறிவுரை யைப் பெற்று வருகிறதென்றும் யாழ்ப்பாண தீபகற்பத்தில் இந்தியப் படைகள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தும், சொத்துகளை நாசமாக்கு வதால் இந்தியப்படை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்றும் இது பெரிய வேடிக்கை என்றும் எள்ளி நகையாடியுள்ளார்.
இலங்கைத் தீவில் தமிழர்களை அழிக்க இராணுவம் மிருகத்தனமான கோரத்
தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.கற்பனையும் செய்து பார்க்க முடியாத மன்னிக்க முடியாத கொடுமைகளுக்கு தமிழீழத்தில் தாய்மார்களும், இளம் பெண்களும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

‘நாஜி’ சிறையான யாழ்ப்பாணம்

எங்கள் ரத்தம் கொதிக்கிறது. மட்டக்களப்பில் முஸ்லிம்கள் இந்திய இராணுவத் தால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். நாஜி வெறியர்களின் கொடிய சிறைக் கூட மாக யாழ்ப்பாணம் ஆக்கப்பட்டு விட்டது.

ஒரு வாரத்திற்கு முன் பத்திரிக்கையாளர்களுடன் தேநீர் விருந்தில்உரையாடும்
பொழுதும் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி ஆணவமாக என்ன சொன்னார்
தெரியுமா? ‘புலிகளை அழித்தே தீருவேன்; இன்னும் கடுமையான நடவடிக்கை களில் இறங்குவேன்’ என்று வெறித்தனமாகப் பேசியுள்ளார்.

அவருக்கும் இந்த அரசுக்கும் சொல்லுவேன் ‘தங்கள் தாய் நாட்டின் சுதந்திரத் திற்காக மரணத்தை துச்சமெனக் கருதி களத்தில் போராடும் புலிகளை நீங்கள் எத்தனை இராணுவத்தைக் குவித்தாலும் அழிக்க முடியாது. சுதந்திர தாகத்தை இராணுவம் அழித்ததாக வரலாறு கிடையாது.

தமிழினமே குமுறி அழும் வேளையில்,கண்ணீரும் செந்நீரும் சிந்தி எங்கள்
இனம் கதறித் துடிக்கும் இந்தத் துன்ப வேளையில் இரத்தத் தாகம் கொண்ட
அரக்கன் ஜெயவர்த்தனாவை குடியரசு நாள் விழாவிற்கு தலைமை விருந்தி னராக இந்தியா அழைத்து இருப்பதை நாங்கள் சகிக்கவே முடியாது.

எங்கள் இதயங்கள் நெருப்பாக எரிகின்றன.அந்த ஜூவாலையில் உங்களின் இந்த நடவடிக்கை பெட்ரோலை ஊற்றுவது ஆகும்.

ஜெயவர்த்தனா இங்கு வருவாரே யானால், குடியரசு நாள் வெட்கத்திறகும்,
வேதனைக்கும் உரிய நாள் ஆகும்.அழைப்பினை வாபஸ் வாங்குங்கள்.சிங்கள இனவெறி அரசின் கைப்பாவை யாக இராஜீவ்காந்தி செயல்படுகிறார்.ஜெயவர்த் தனாவின் உத்தரவின்பேரில் கூலிவாங்காத கொலைகாரன்போல் இராஜீவ் காந்தி அரசு தமிழர்களை வேட்டையாடுகிறது.

உடனடியாக போர் நிறுத்தம் அறிவியுங்கள். புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துங்கள்.நாடாளுமன்றத்தில் நடப்பு நிலை குறித்து அறிக்கை சமர்ப்பியுங் கள்.”
10.12.1987 இல் தலைவர் வைகோ,நாடாளுமன்றத்தில் எழுப்பிய இன முழக்கம்.


பிரதமரின் ஆணவப் பேச்சு

“விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டிவிட்டு ஒப்பந்தத்தை அமுல் நடத்தி விட்டுத் தான் இராணுவம் இலங்கையிலிருந்து திரும்பும் என்று பிரதமர்
ஆணவமாகப் பேசியுள்ளார். நாடு வறட்சியில் வாடுகிறதென இங்கே சில காங்கிரஸ் உறுப்பினர்கள் வருந்தினர்.

ஆனால், இலங்கையில் தமிழ் இனத்தை கருவறுக்க ஒரு நாளைக்கு இந்த அரசு 4 கோடி ரூபாய் செலவு செய்கிறது.தீட்சித் வந்தார், பிரதமரைச் சந்தித்தார். திரும்ப இலங்கை சென்றார், ஜெயவர்த்தனாவுக்கு பிரதமரின் செய்தியைக்
கொண்டுபோனார் என்று பத்திரிக்கை மூலமாகத்தான் அறிகிறோம். எல்லாம் மூடுமந்திரமாக இருக்கிறது.

இராஜீவ் காந்தி இந்திய மக்களையும் நாடாளுமன்றத்தையும் ஏமாற்றுகிறார். இலங்கையில் இந்திய இராணுவம் தமிழ்ப் பெண்களின் கற்பை சூறையாடு கிறது.தமிழர்களைக் கொன்று குவிக்கிறது. இன்னும் மிகப்பெரிய வெட்கக்கேடு என்னவெனில், இந்திய இராணுவத்தினர் இலங்கையில் மிகக் குறைந்த விலை யில் தங்கம் கிடைப்பதாலும், டெலிவிஷன் வீடியோ கிடைப்பதாலும் அவற்றை யும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் அங்கு மிகக் குறைந்த விலைக்கு வாங்கி இந்தியாவுக்குக் கடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

விமானப் படையில் தங்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப வேண்டும் என இது வரை 2000 விண்ணப்பங்கள்குவிந்து இருக்கின்றனவாம்,இந்திய ராணுவத்தின்
மேலதிகாரிகளே இந்தக் கடத்தலைச் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.”

(இ.காங்கிரஸ் எம்.பி.க்கள் பலத்த கூச்சல், இந்திய இராணுவத்தைப் பற்றிப் பேசக்கூடாது என்று அமளி)

வைகோ: இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் சந்திக்க நேர்ந்த இராணுவ அதிகாரிகளிடமிருந்து எனக்குக் கிடைத்த தகவல், அதற்காக அவர்களின் பெயர்களை நான் சொல்ல முடியுமா? இலங்கையில் நடக்கும் யுத்தம் ஒரு தனிப்பட்ட மனிதனின் வக்கிர புத்தியில் நடத்தப் படும் யுத்தம். ஒரு தனிப்பட்ட மனிதனின் ஆசாபாசங் களுக்கு நடத்தப்படும் யுத்தம். யார் அந்த மனிதர்?
அவர்தான் இராஜீவ்காந்தி.

இராஜீவ்காந்தி யுத்தம்

இந்த யுத்தம் இந்தியாவின் யுத்தம் அல்ல;இராஜீவ்காந்தியின் யுத்தம். இது நிறுத்தப்பட வேண்டும்.இல்லையேல் தமிழ் இனம் இந்த அரசை மன்னிக்காது
என்பதை எத்தனையோ முறை நான் எச்சரித்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை எச்சரிக்கிறேன்.

இலங்கைத் தமிழர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் உரிமை அவர்களுக்குத் தான் உண்டு. ஈழத் தமிழர்களின் அரசியல் இலட்சியத்தைத் தீர்மானிக்க நீங்கள் யார்? தமிழ் ஈழம் கேட்காதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு ஏது உரிமை உலகின் எந்தப்பகுதியிலும் சுயநிர்ணய உரிமைக்கிளர்ச்சி நிகழ்ந்தால் அதை நசுக்க நீங்கள் இராணுவம் அனுப்ப முடியுமா? வங்கதேசத்தில் சாக்மாக்கள் கிளர்ச்சியை ஒடுக்க உங்களால் இராணுவத்தை அனுப்ப முடியுமா?

கூட்டு சேராக் கொள்கை பேசிய இந்தியா - சமாதான தத்துவம் போதித்த இந்தியா - இரத்தவெறி கொண்டு இராணுவத் தாக்குதல் நடத்துவது வெட்கக் கேடாகும்.

சோவியத் அதிபர் கோர்பச்சேவும் ரீகனும் அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நேரத்தில்,ஈழத்தில் இந்திய இராணுவம் வெறியாட்டம் போடு வதால்,உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு தரைமட்டமாகி விட்டது.”

                                                                                                - தொடரும்..................

நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment