Wednesday, April 17, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 15

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி  படித்துவிட்டு வரலாமே


“ஒரு பிரபாகரனை அழித்தால் 
ஆயிரம் பிரபாகரன்கள் தோன்றுவார்கள்”- வைகோ

விடுதலைப் புலிகளை பூண்டோடு அழிக்க வேண்டும் என்ற உத்திரவு போட்ட இந்தியப் பிரதமர் இராஜீவ்   காந்தியின் விருப்பத்தை நிறைவேற்ற,  இந்திய அமைதிப்படை வெறிகொண்டு அலைந்தது.1988 ஜனவரியில் தேடுதல் வேட்டை என்ற பெயரால், மூன்றாயிரம் தமிழ் இளைஞர்களை விடுதலைப் புலி கள் என்ற முத்திரை குத்தி, இந்திய இராணுவம் கைது செய்து சிறை வைத்தது.

தமிழ் மக்களின் வீடுதோறும் சென்று இளைஞர்களையும், இளம் பெண்களை யும் வேட்டையாடிய இந்திய இராணுவத்தை எதிர்த்து தமிழீழம் கொந்தளித்த போது, அன்னையர் முன்னணி சார்பில் இந்திய இராணுவத்தைக் கண்டித்து,
மட்டக்களப்பு மாமாங்கத் திடலில்,வீரத்தாய் அன்னை பூபதி அம்மாள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.



பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு, இந்திய அமைதிப்படைக்கு தங்கள் எதிர்ப்பைக்காட்டினர். இந்நிலை யில் சொட்டு நீரும் பருகாமல் உண்ணாநிலை இருந்த அன்னை பூபதி அம்மாள், திலீபன் வழியில் தன் உயிரைத் தியாகம் செய்தார்.அன்னை பூபதி அம்மாளின்
உயிர்த்தியாகம், தமிழீழ மக்களின் நெஞ்சில் எழுச்சித் தீயை மூட்டியது.இந்திய அமைதிப்படைக்கு எதிரானப் போராட்டங்கள் வலுத்தன.

தமிழ் ஈழத்தில் புலிகளை ஒடுக்க அமைதிப்படையை ஏவிய இந்திய அரசு,தமிழ் நாட்டிலும் விடுதலைப் புலிகள் மீது அடக்குமுறையை ஏவியது.அப்போது நடை பெற்ற ஆளுநர் அரசின் மூலம்,டெல்லி அரசு புலிகளை கைது செய்யவும்,
மருத்துவ சிகிச்சை பெற வந்த புலிகளையும் விட்டுவைக்காமல் சிறையில் அடைக்கவும் உத்திரவு போட்டது.

இந்நிலையில் 1988 ஆகஸ்டு 23இல்,நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு நிதி ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில்,தலைவர் வைகோ பங்கேற்றபோது, தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தினார்.

புலிகள் மீது பாதுகாப்புச் சட்டம் பாயுமா?

“அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, விடுதலைப்புலிகளை தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தமிழகத்தின் சிறைகளிலே அடைத்து வைத்திருக் கும் அக்கிரமம், மன்னிக்க முடியாத குற்றமாகும்.



சென்னை மத்தியச் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி களை கடந்த 12 ஆம் தேதி அன்று நான் நேர்காணல் மூலம் சந்தித்தேன்.சிங்கள இராணுவத் தாக்குதலில் கடந்த ஆண்டு படுகாயமுற்று தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்று வந்த விடுதலைப்புலிகளையும் இந்த அரசு சிறையிலே பூட்டி உள்ளது.

சமீபத்தில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட செல்வா என்ற இளைஞரையும் இந்த அரசு விட்டுவைக்கவில்லை. சிவா என்ற இளைஞர் சிங்கள இராணுவத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு வாய்திறக்க முடியாத நிலையில் திரவஉணவையே குழாய் மூலம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளார். இராஜீவ்காந்தி அரசுக்கு ஈவு இரக்கமில்லை. மனிதாபிமானம் அடியோடு செத்துப்போய்விட்டது. விடு தலைப்புலிகளை முதலில் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நீதி மன்றத்தில் இவர்களை விடுதலை செய்யக்கோரி ஜாமீன் மனு தாக்கலான வுடன் அதைத் தடுப்பதற்காகவே, தேசப் பாதுகாப்புச்சட்டம் விடுதலைப் புலி களின் மீது பாய்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரையில் எந்த விடுதலைப் புலிகளோடு இராஜீவ்காந்தி அரசு பேச்சுவார்த்தை நடத்தியதோ, தனது உளவுத் துறை ஸ்தாபனத்தின் மூலம் யாரை நாள்தோறும் சந்தித்துக் கருத்துகளைப்
பரிமாறிக் கொண்டிருந்ததோ - அந்த விடுதலைப்புலிகள் திடீரென்று எப்படி
தேசப்பாதுகாப்புக்கு ஆபத்தானவர்களாக மாறி விட முடியும்?

தமிழ்நாட்டில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் - கொள்ளை, கள்ளக் கடத்தல் போன்ற வன்முறைச் சம்பவங்களில் விடுதலைப் புலிகளுக்கு எள்ளளவும் தொடர்பு இல்லை என்று சம்பந்தப்பட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் தெளிவு படுத்தி உள்ளனர்.அரசாங்கத்தின் கைக்கூலிகளாகமாறிவிட்ட இயக்கங்களில் சிலரும்,இயக்கங்களையே சேராத சில சமூக விரோதிகளும் செய்த குற்றங் களை எல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்டு விடுதலைப்புலிகளின் மீது வீண் பழி சுமத்தி, ஒரு பயங்கரமான அவதூறுப் பிரச்சாரத்தை இந்த அரசாங்கம்
கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இராஜீவ் அரசின் நயவஞ்சகம்

உலகத்தின் பல்வேறு நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவும், அடைக்கல மும் கொடுத்துள்ளன. ஓரிரு நாடுகளிலும் இங்கிலாந்திலும் சுவிட்சர்லாந்தி லும் இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்ட போது,அந்நாடுகளின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் அதனை எதிர்த்துப் பலத்த கண்டனக் குரல் கொடுத்து, அவர்களை விடுவிக்கச் செய்தனர். விடுதலைப் புலிகள் தற்போது இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, மேற்கு ஜெர்மனி, நார்வே, டென்மார்க், சுவீடன்,ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் எந்தத் தொல்லையும் இன்றி அடைக்கலம் பெற்றுள்ளனர்.

ஆனால், ஐந்துகோடித் தமிழர்களைப் பிரஜைகளாகக் கொண்ட இந்தியாவில்,
அவர்களை நசுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேசப் பாதுகாப்புச் சட்டத் தின் கீழ் கொட்டடியில் பூட்டுவது கற்பனை செய்யமுடியாத கொடுமை ஆகும். இராஜீவ்காந்தி அரசாங்கத்தின் நயவஞ்சக நோக்கமும், சதிகாரத்திட்டமும்தான் இந்த நடவடிக்கைகளுக்கு அடிப்படைக்காரணமாகும்.இலங்கைல் விடுதலைப்
புலிகளை ஒழித்துக் கட்டவும், குறிப்பாக பிரபாகரனை தீர்த்துக்கட்டவும் ராஜீவ் காந்தியின் அரசு முடிவெடுத்து உள்ளதால்தான் இலங்கையின் வவுனியாக் காடுகளில் இந்திய இராணுவம் மூர்க்கத்தனமானத்தாக்குதலில் இறங்கி உள்ளது.

பல்லாயிரக்கணக்கான இந்தியத்துருப்புகள் இந்தப் போரில் ஈடுபட்டு உள்ளனர். இந்திய இராணுவ விமானங்கள் கடுமையான குண்டுவீச்சில் ஈடுபட்டுள்ளன. நடத்தப்படுவது பிரபாகரனைத் தேடும் படலம் அல்ல;அவரைத் தீர்த்துக்கட்டக் குறிவைத்து தாக்கும் படலமாகும்.இதற்கு முன்னேற்பாடாகத்தான் விடுதலைப்
புலிகளை தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பூட்டி இருக்கிறீர்கள். விடுதலைப்
புலிகளை இந்த அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும்.பிரபாகரன் உயிருக்கு ஆபத்து ஏற்படின் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்.

முட்டாள்தனமான முயற்சி

ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாகிய விடுதலைப்புலிகளை இந்த அரசு அழிக்க முற்படுவது மிக மிக முட்டாள்தனமான, அபாயகரமான முயற்சி யாகும். விடுதலைப்புலிகளின் பலம் பொருந்திய அமைப்பினை அழிக்க முடி யாத ஒரே காரணத்தினால்தான் ஜெயவர்த்தனே இந்தியாவின் உதவியைத் தேடினார். நட்புறவு நாடினார்.

நல்லெண்ணத்தால் விளைந்தது அல்ல இந்த நேசம். இலங்கை அரசாங்கம்,
இந்தியாவிடம் ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டுமானால், விடுதலைப்புலி களின் அமைப்பு பலமாக இயங்கும் காலம் வரையில்தான் அது நீடிக்கும்.விடு தலைப் புலிகள்தான் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க முடியும் என்பதோடு, இலங்கை அரசாங்கத்தை இந்தியாவிடம் முரண்படாமல் தடுப்பதற்கான சாதன மும் ஆவார்கள்.விடுதலைப்புலிகளை நீங்கள் நசுக்கினால், அடுத்தநாளே இந்திய இராணுவத்தை ஜெயவர்த்தனே வெளியேறச் சொல்லுவார் என்பதை
எண்ணிப்பாருங்கள்.

புதுவை நாராயணசாமி (இ.காங்) :விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் அரியலூர் இரயில் விபத்திலும், மதுரைக் கொள்ளையிலும் சம்பந்தப்பட்டு
இருக்கிறார்கள்.

வைகோ : மனசாட்சியின்றி இப்படி அபாண்டமாகப் பொய் சொல்லாதீர்கள்.
புலிகளுக்கு அச்சம்பவங்களில் தொடர்பு இல்லை என்று போலீஸ் அதிகாரிகளே
சொல்லி இருக்கிறார்கள். ஆனால், திடீரென்று இந்த அவதூறுப் பிரச்சாரத்தை இ.காங்கிரஸ் கட்சி ஆரம்பித்துள்ளது.

பவன்குமார் பன்சால்(இ.காங்): இலங்கைத்தமிழர்களுக்காகத்தான் இராஜீவ் காந்தி ஒப்பந்தம் போட்டிருக்கிறார். இந்திய இராணுவம் அதற்காகத்தான் அனுப் பப்பட்டது.

வைகோ: ஜெயவர்த்தனேயின் சிங்கள இராணுவம் செய்த அட்டூழியங்களைத்
தான் இப்போது இந்திய இராணுவம் இலங்கையில் செய்கிறது. இந்திய இராணுவம் நடத்துவது இனப்படு கொலையைத் தவிர வேறொன்றுமில்லை.

(இ.காங்கிரஸ் எம்.பிக்கள் பலத்த கூச்சல்)

பவன்குமார் பன்சால்: இந்திய இராணுவத்தின் மீது பழிசுமத்துவது, தேசத் துரோகம் ஆகும். நீங்கள் இந்தியாவுக்காக வாதாடுகிறீர்களா?அல்லது இந்த நாட்டை எதிர்த்துப் பேசுகிறீர்களா? உங்களுக்குத் தேசப்பற்று கிடையாது.

தொடர்ந்து எதிர்ப்போம்!

வைகோ: பாலஸ்தீனியர்களுக்காக உங்கள் அரசு முரசுகொட்டும்போது, நமீபியாவிற்காக நீங்கள் வாதாடும்போது, ஆப்பிரிக்க நீக்ரோக்களுக்காக ஆர்ப்பரிக்கும்போது,தமிழனுக்காக இங்கே நான் நியாயம் கேட்கக்கூடாதா? தேசப்பற்று என்ற விடுதலை இயக்கங்களை பூண்டோடு அழிப்பதற்கு நீங்கள் முற்பட்டுள்ளீர்கள்.அத்தகைய தேசப்பற்றுக்கு நான் எதிரிதான். அக்கிரமத்தில் ஈடுபடும் இந்த அரசாங்கத்தைத்தொடர்ந்து எதிர்த்துக்கொண்டுதான் இருப்பேன்.

இ.காங்கிரஸ் எம்.பி-க்கள்:இந்திய இராணுவம் தமிழர்களுக்காக கடமையைச்
செய்கிறது.

வைகோ: இல்லை; ஜெயவர்த்தனேயின் கைக்கூலிப் படையாகச் செயல்படு கிறது.

பி.கே.காட்வி (மத்திய நிதித்துறை இணை அமைச்சர்):இலங்கைப் பிரச்சினை யைப் பற்றி உறுப்பினர் கோபால்சாமி குறிப்பிட்டார். இலங்கைத் தமிழர் நலனுக்காகத்தான் இந்திய-இலங்கை ஒப்பந்தம் போடப்பட்டது. இலங்கை அரசும், இந்திய அரசும் விடுதலைப்புலிகளும் இந்த ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டுள்ளனர்.

வைகோ: இதைவிட அப்பட்டமான பொய் வேறு இருக்கவே முடியாது. இந்த
ஒப்பந்தத்தில் விடுதலைப்புலிகள் கையெழுத்திடவே இல்லை. இந்த ஒப்பந்தத் தைப் பற்றிய அரிச்சுவடிகூட அமைச்சருக்குத் தெரியவில்லை.

இ.காங்கிரஸ் எம்.பி-க்கள்:ஒப்பந்தத்தில் விடுதலைப்புலிகள் கையெழுத்திட்டு
உள்ளனர்.

வைகோ: ஒப்பந்தத்தின் ‘அ, ஆ’எழுத்துகள்கூடத் தெரியாமல் நீங்கள் கூச்சல் போடுகிறீர்கள். விடுதலைப்புலிகள் கையெழுத்துப்போடவில்லை.அவர்கள் ஒப்புதலைப் பெறாமலே ஒப்பந்தம் போடப்பட்டது.

பி.கே.காட்வி இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காகத்தான் இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வைகோ: தமிழர்களின் மயான அமைதியை ஏற்படுத்த...

யார் ஏஜெண்ட்?

ப.சிதம்ரபம்(மத்திய உள்துறை இணை அமைச்சர்): பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் விடுதலைப்புலிகள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து கோபால்சாமி இங்கே பேசினார். பாரதிய ஜனதாக் கட்சி உறுப்பினர் ஜஸ்வந்த் சிங் பேசும் போது, ‘விடுதலைப்புலிகள் சிறைச்சாலைகளில் சித்திரவதைச் செய்யப்படு கிறார்கள்’ என்று கூறினார்.ஆனால்,நல்லவேளையாக கோபால்சாமி அவ்விதம் பேசாமல் உண்மை நிலையைக் கூறினார். அவர்களைப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறுமத்திய அரசு உத்திரவிடவில்லை. ஏன் பாதுகாப்புச் சட்டத் தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பது எனக்குத் தெரியாது.சமீபத்தில் நடை பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து சில முக்கியமான தகவல்கள் கிடைத்து இருக்கின்றன.

விடுதலைப்புலிகள் சிறைச்சாலையில் துன்புறுத்தப்பட மாட்டார்கள். ஜஸ்வந்த்
சிங்கைப்போல கோபால்சாமி குற்றம் சாட்டாததற்குக் காரணம், அவர் தமிழகத் திலிருந்து வருவதால் நேரடியாக நிலைமையை அறிந்திருக்கிறார்.

வைகோ: விடுதலைப்புலிகள் விசாரணைக்குக் கொண்டு செல்லப்படுவார்கள் என்றும்,அந்த விசாரணைகளில் அவர்களது நடவடிக்கை பற்றிய தொடர்புகளை
அரசாங்கம் அறியும் என்றும் அரசாங்கள் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ‘இந்து’ பத்திரிக்கை தெரிவிக்கிறது. அதனால் தான் விடுதலைப்புலிகளை விசாரணை என்ற பெயரால் துன்புறுத்தக் கூடும் என்ற அச்சத்தைத் தெரிவித் தேன். அதற்கு அரசு அனுமதிக்கக்கூடாது என்றும் வேண்டினேன்.தமிழ்நாட்டில், நடைபெற்ற சமூக விரோதச்செயல்களுக்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதை அதிகாரிகளே ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் எனது கோரிகை.

அமைச்சர் ப.சிதம்பரம்: புலிகளைத் துன்புறுத்தும் நடவடிக்கை இருக்காது.
இதுபற்றி நான் கவனிக்கிறேன்.

சுப்பிரமணியசாமி(ஜனதா): இந்திய நாட்டு அரசியல்வாதிகளை, விடுதலைப் புலிகள் விமர்சிக்கக்கூடாது என்று புலிகளுக்கு நெருக்கமானவர்கள் புத்திமதி
சொல்லுவார்களா?

வைகோ: அவர்களை அழிக்க நினைக்கும் அரசாங்கத்தின் ஏஜெண்டுகளைத் தான் புலிகள் விமர்சிக்கிறார்கள்.

அமைச்சர் ப.சிதம்பரம்:அகதிகளாக வந்த விடுதலைப்புலிகள் இந்திய
அரசாங்கத்தை விமர்சிப்பதை அனுமதிக்கக்கூடாது.

சுப்பிரமணியசாமி: ஆம்; அப்படிச்சொல்லுங்கள்.

வைகோ: யார் ஏஜெண்ட் என்பது இப்போது வெளிப்பட்டுவிட்டது.அமைச்சர் அவர்களே, புலிகள் இந்திய அரசாங்கத்தின் கொத்தடிமைகள் அல்ல.கருத்துச் சுதந்திரம் அவர்களுக்கும் உண்டு.

1988 ஆகஸ்டு 29 ஆம் நாள்,மாநிலங்களவையில் “இலங்கையின் இன்றைய நிலைமை” என்னும் பொருள் குறித்து நான்கு மணிநேரம் நடைபெற்ற விவாதத் தைத் தொடங்கி வைத்து தலைவர் வைகோ உரையாற்றியபோது, விடுதலைப் புலிகள் மீது இந்திய -இலங்கை அரசுகள் செய்துவரும் மோசடிப்பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுத்தார்.

ஓராயிரம் பிரபாகரன்கள் தோன்றுவார்கள்

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அமைதி என்ற பெயரில் மரணம் உலாவந்துகொண்டிருக்கிறது.பிரபாகரனும் அவரது சகாக்களும் மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டு,அவர்களை விட நூறு மடங்கு சக்தி வாய்ந்த இந்திய இராணுவத்தை எதிர்த்து,வாழ்வா சாவா? என்ற போரில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்திய இராணுவ விமானங்கள் 500 கிலோ எடையுள்ள குண்டுகளை தமிழர்கள் வாழும் பகுதிகளில் வீசி வருகின்றன.

விடுதலைப்புலிகளுக்கு உணவில்லை.மருந்தில்லை.ஆயுதங்கள் வருவதற்கும்
மார்க்கம் இல்லை.சுற்றி வளைத்துக்கொண்டு நீங்கள் தாக்கிக்கொண்டிருக்கிறீர் கள்.

பிரபாகரனை குறிவைத்து அழிக்கும் முயற்சியில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர் கள்.ஒரு பிரபாகரனை அழித்தால் ஆயிரம் பிரபாகரன்கள் தோன்றுவார்கள்
என்பதை மறந்துவிட வேண்டாம்.சுதந்திர தமிழீழம் என்னும் தீபம் ஒவ்வொரு தமிழன் இல்லத்திலும் ஏற்றப்பட்டிருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.
விடுதலைப்புலிகள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டவுடன் அவர்களை விடு தலை செய்ய வேண்டும் என்று கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால்,அரசாங்க வழக்கறிஞர் தொடர்ந்து வாய்தா கேட்டுக் கொண்டே வந்தார்.16.8.1988 அன்று அதிர்ச்சி தரத்தக்க சம்பவம் ஒன்ற நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்திய இராணுவ தளபதிகள் கர்னல் கூடா என்பவரும் மற்றும் இரணடு அதிகாரிகளும் இராணுவ உடையில் நீதிமன்றத் திற்கு வந்திருந்தனர். அன்றும் வாய்தா வழங்கப்பட்டது. அதற்குப் பிறகுதான்
விடுதலைப் புலிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருப்பதாக இரண்டு நாள் கழித்து அறிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டிருக்கின்ற விடுதலைப்புலிகளில் எழுபத்தைந்து சதவீதத் திற்கு மேற்பட்டோர் கடுமையான காயங்களினால் பாதிக்கப்பட்டு இருப்பவர் கள். படுக்கையை விட்டு எழுந்து நடக்கக்கூட முடியாதவர்கள். அப்படிப்பட்டவர் களை கைது செய்து சிறையில் அடைத்து -அவர்கள் இரயில் தண்டவாளங் களைத் தகர்க்க முயற்சி செய்ததாக அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
செய்யப்பட்டிருக்கிறது.

இதைவிட அக்கிரமம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. இந்திய நாட்டின் மீது
புலிகள் தாக்குதல் நடத்தப் போவதாக ஒரு பயங்கரமான அவதூறுப் பிரச்சாரத் தை இலங்கை அரசும் இந்திய அரசும் சேர்ந்து செய்யத் தொடங்கிஇருக்கின்றன.

இந்திய அரசு ஈழத்தில் உடனே போர் நிறுத்தம் செய்து அறிவிக்க வேண்டும்.
விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும். ஆயுதங் களை ஒப்படைக்கத் தயார் என்றும் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைக்குத் தயார் என்றும் விடுதலைப்புலிகள் பலமுறை சொல்லி விட்டார்கள். இந்திய-
இலங்கை ஒப்பந்தத்தைப் பொறுத்த வரை இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்தின் எந்த சரத்துகளையும் தமிழர்களுக்கு சாதகமாக நிறைவேற்ற வில்லை. இலங்கை யின் அரசியல் சட்டத்தில் 13 ஆவது அரசியல் சட்டத்திருத்தம் என்பது தமிழர்களுக்கு எதிரான மிகப்பெரிய அரசியல் மோசடி.

இந்திய ஒருமைப்பாடு நிர்மூலமாகும்

விடுதலைப்புலிகள் நமது பகைவர்கள் அல்ல. பிரபாகரனையும் விடுதலைப்புலி களையும் நீங்கள் ஒழித்துக் கட்டுவீர்களேயானால், நான் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்.

இலங்கையின் ஒருமைப்பாட்டை மாத்திரமல்ல, இந்தியாவின் ஒருமைப் பாட்டை யும் நிர்மூலமாக்குவதற்கு நீங்கள் கால்கோள்விழா நடத்துகிறீர்கள்
என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

சர்வதேச பொதுமன்னிப்புச்சபை (Amnesty International) அறிக்கையின்படி,இலங்கை யில் தமிழர்களுக்கு எதிராக இந்திய இராணுவம் இனப்படுகொலை நடத்தி வரு கிறது என்பது நிருபிக்கப்பட்டு இருக்கிறது.எங்கள் சகோதரிகள் இந்தியராணுவத் தால் கற்பழிக்கப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் இந்திய ராணுவத்தால் கொல்லப் பட்டு உள்ளனர்.

சிங்கள இராணுவம் ‘பூசா’ சித்ரவதை முகாமில் என்ன கொடுமைகள் நிகழ்த்தி யதோ அதை இந்திய இராணுவம் இப்போது செய்துவருகிறது.‘அமைதி காக்கும் படை’ என்று நீங்கள் கொலைவெறியன் ஜெயவர்த்தனேவின் கைக்கூலிப்படை யாக மாறி தமிழர்களை அழிக்கும் காரியத்தில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். மகாத் மா காந்தியை கொடியவன் நாதுராம் வினாயக் கோட்சே கொன்றதை உலகம் காணநேர்ந்தது.மகாத்மா பிறந்த நாட்டில், மகாத்மாவின் கொள்கைகளை இன்றைக்கு கொன்று குழிதோண்டிப் புதைக்கும் காரியத்தில் இராஜீவ்காந்தி ஈடுபட்டு இருப்பதையும் உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

ஜெனீவா ஒப்பந்தத்திற்கு எதிராக இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் செஞ்சிலுவைச்சங்கத்தினரையும், பத்திரிக்கையாளர்களையும் சுயேச்சையான மனித உரிமை ஸ்தாபனங்களையும் நுழைய விடாமல் இந்திய இராணுவம் தடுத்து வருகிறது. இந்த பாவச் செயலுக்கு உலக அரங்கின் முன் இந்தியா பதில் சொல்ல வேண்டிய காலம் வரும்.

விடுதலைப்புலிகளை அழிக்க நினைக்கிறீர்களே - அவர்கள் என்ன பாவம் செய் தார்கள்? தங்கள் இனத்தின் உரிமையைப் பாதுகாக்க அவர்கள் ஆயுதம் ஏந்தியது எந்த வகையில் குற்றமாகும்? இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்களவர்களின் குடியேற்றம், ஒப்பந்தத்திற்கு பிறகு கடுமையாக கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கிறது. இதை என்னால் நிருபிக்க முடியும். அதைத் தடுக்க இந்திய அரசு ஏன் முயற்சி செய்யவில்லை?

வெளிவிவகார அமைச்சர்பி.வி.நரசிம்ம ராவுடன் - வைகோ மோதல்

தலைவர் வைகோ தொடங்கி வைத்த விவாதத்திற்கு மத்திய வெளிவிவகாரத்
துறை அமைச்சர் பி.வி.நரசிம்மராவ் பதிலளித்துப் பேசினார். அப்போது குறுக் கிட்டுப் பேசிய தலைவர் வைகோ, ‘இந்திய அரசு போர் நிறுத்தம் செய்துவிட்டு விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்தத் தயாரா?’ என்று கேட்டார்.அமைச்சர் அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் ‘ஒப்பந்தத்தைப் புலிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அப்படி சமிக்கை எதுவும் எனக்கு இல்லை’என்றார்.இதற்கு தலைவர் வைகோ பதிலடி கொடுத்தார்.

வைகோ: ஒப்பந்தத்தை நிறைவேற்ற முழுஒத்துழைப்புத் தருவதாக திரும்பத்
திரும்ப புலிகள் சொல்லி வருகிறார்கள்.பிறகு ஏன் இப்படி தவறான தகவலைத்
தருகிறீர்கள்?

அமைச்சர் பி.வி.நரசிம்மராவ்: எனக்குக்கிடைத்திருக்கிற தகவலைச் சொன் னேன். உறுப்பினருக்குக் கிடைத்து உள்ள தகவல் பற்றி எனக்குத் தெரியாது.
இந்த விவாதம் நடைபெற்றபோது, ஒரு கட்டத்தில் உறுப்பினர் சுப்பிரமணிய சாமி,‘கோபால்சாமி புலிகளுக்கு ஏஜெண்டு வேலை பார்க்கிறார்’என்று கூறினார்.தலைவர் வைகோ, அதற்கு “விடுதலைப்புலிகளுக்கு வாதாடுவதில்
தவறில்லை. ஆனால், உங்களைப்போல் ‘டபுள் ஏஜெண்டு’ (Double Agent) வேலை தான் பார்க்கக் கூடாது” என்று சு.சாமியின் முகத்தில் அறைந்து பதிலடி கொடுத்தார்.

தொடரும்..................
நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment