Tuesday, April 9, 2013

நகராட்சி இடங்கள் ஆக்கிரமிப்பு: மதிமுக கண்டனம்

காரைக்காலில் நகராட்சிக்குச் சொந்தமான இடங்கள் தனியாரால் ஆக்கிரமிக் கப்படுவதை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதாக மதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட மதிமுக செயலர் சோ. அம்பலவாணன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

காரைக்காலில் நகராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான இடங்கள் பல, தனி யாரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவது தொடர்கிறது. திருநள்ளாறு செல்லும் சாலையில் நகராட்சிக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இடம் ஒன்று, தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்கள் எழுப்பப் பட்டுள்ளன. இதுகுறித்து நகராட்சி ஆணையருக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.



இதேபோல், காரைக்கால் மகப்பேறு மருத்துவமனைக்கு எதிரில் வண்டி பாதையில் உள்ள இடம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டது. பின்னர், நகராட்சி நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடத்தைக் கைப்பற்றியது. ஆனால், மீண்டும் அந்தப் பகுதி தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.

நகரில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான வடிகால்கள் தனியாரால் ஆக்கிர மிக்கப்பட்டு வருவதால், கழிவுநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ள காலங்களில் தண்ணீர் எளிதில் வடியமுடியாத வகையில் வாய்க்கால் அளவு சுருங்கிவிட்டது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகத்துக்கு ஆதாரத்துடன் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. இவ்வாறான அலட்சியப்போக்கு தொடர்ந்தால், ஆக்கிரமிப்பு செய்வதே தொழிலாகக் கொண்டவர்களின் போக்கு பெரிதாகிவிடும். மக்களின் பாதிப்பு பெருகிவிடும். இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் உரிய கவனம் செலுத்தவில்லையெனில் மதிமுக போராட்டத்தில் ஈடுபடும் எனக் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment