Saturday, April 6, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 6


முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே

இந்திய அரசு, தமிழ் ஈழத்தை அங்கீகரிக்க வேண்டும்!

ஈழத்தமிழினத்தைக் கொன்று குவித்த சிங்கள கொலைவெறிக் கூட்டத்தை,
சர்வதேச நீதிமன்றக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் குரல்
எழுப்பி வரும் நிலையில், தாயகத்தமிழர்களும் அயலகத் தமிழர்களும் ஐ.நா. மன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையை எதிர்பார்த்திருக்கும் சூழலில், 2011 ஆகஸ்டு 1 ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில், ராஜபக்சே கொலைகாரக் கூட்டத்திற்கு சிவப்புக் கம்பள வரவேற்பை அளித்திருக்கிறது இந்திய அரசு.

தமிழர்களின் குடலை உருவி, சிவந்த மாலையாக போட்டுக் கொண்டதைப்
போல துண்டு போட்டுக்கொண்டு ராஜபக்சே சகோதரன் சமல் ராஜபக்சே
இந்திய மக்களவையின் மாடத்தில் சிறப்பு விருந்தினராக சிங்கள எம்.பி.கள்
புடைசூழ உட்கார்ந்திருக்க அவைத்தலைவர் திருமதி மீராகுமார் வரவேற்பு
பாசுரம் வாசித்தார்.



உடனே எழுந்தார் தலைவர் வைகோவின் தளபதி ஈரோடு கணேசமூர்த்தி.
தமிழர்களைக் கொன்றொழித்த கொலைகாரர்களுக்கு இந்திய நாடாளுமன்றத் தில் வரவேற்பா? சகிக்கமாட்டோம் என்று குரல் எழுப்பினார். அ.தி.மு.க., இடது சாரி எம்.பி.களும் பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர். முன்கூட்டியே செய்த
ஏற்பாட்டின்படி தி.மு.க. துரோகக்கூட்டம் சபையில் இல்லை.இதைப் போன்ற தருணங்களில்தான் நமது தானைத் தலைவர் வைகோ நாடாளுமன்றத்தில் இல்லாமல் போனாரே! என்ற கவலை நம்மை ஆட்கொள்கிறது.இன உணர் -வுள்ள ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் ஏற்படுகிறது.

பண்டாரிக்கு கண்டனம்

ராஜீவ்காந்தி பிரதமர் பொறுப்பேற்ற பிறகு, இலங்கைத் தமிழர் சிக்கலைத் தீர்க்க இந்திராகாந்தி அம்மையார் நியமித்த ஜி.பார்த்தசாரதி அவர்களை நீக்கிவிட்டு, ரொமேஷ் பண்டாரியை சிறப்புத் தூதராக நியமனம் செய்தார். பண்டாரி கொழும்பு க்கு விருந்தினராக சென்றுவந்ததை, நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ 1985 மே 3 ஆம் நாள் நடந்த விவாதத்தில், கடுமையாகக் கண்டித்தார்.

“இந்தியாவின் வெளிநாட்டுச் செயலாளர் ரமேஷ் பண்டாரியை இலங்கைக்கு
அனுப்பி வைத்தீர்கள். அழிவுப்பள்ளத்தாக்கில் உலவி வரும் தமிழ் மக்களுக்கு உதவி செய்யப் பயன்படும் அவரது பயணம்” என்று இலங்கையிலே தமிழர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரோ அவரது          குடும்பத்தை இலங்கைக்கு உல்லாசப் பயணத்துக்கு அழைத்துச் சென்றார். ஜெயவர்த்தனே ஏற்பாடு செய்த ஆடம்பரமான வெளிநாட்டுக் கார்களில், அவரது குடும்பத்தார் கண்டி, அனுராத புரம் போன்ற இடங்களுக்குச் சென்று கண்டுகளித்தனர்.

ரமேஷ் பண்டாரி தன்னுடைய மாமியார் வீட்டிற்கு விருந்திற்குப் போனாரா?
இலங்கை நாடாளுமன்றத்தில் பண்டாரி குடும்பத்தினரின் உல்லாசப் பயணம்
குறித்த எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியபோது, அமைச்சர் லலித  அதுலத் முதலி அளித்த பதிலில்,“பண்டாரி விஜயம் சிங்கள அரசிற்கு பெரிதும் சாதக மாக அமைந்தது. நமது நடவடிக்கைகளை அங்கீகரிக்கச் செய்தது.” என்று கூறியிருக்கிறார்.

தமிழர் நலன்களை பண்டாரி இலங்கையில் விற்றுவிட்டார் என்பது என்னுடைய குற்றச்சாட்டு ஆகும்.

ஜி.பார்த்தசாரதி அவர்களின் தூதும் பேச்சுகளும் பயன்தரவில்லை என்ற போதிலும், இந்திய அரசிற்கு இந்தப் பிரச்சினையில் கவனம் இருக்கிறது என்ற
எண்ணத்தையாவது தந்தது. தற்போது பார்த்தசாரதியை ஒதுக்கி வைத்துவிட்டு,
இந்திய அரசு இலங்கை அரசின் உறவை மாத்திரமே மனதில் கொண்டு காரியம்
ஆற்றி வருவது, தமிழர்களுக்கு இழைக்கப்படும் துரோகச் செயலாகும்.

விடுதலை வீரர்கள்

தமிழ் ஈழம் காண ஆயுதப்போர் நடத்திவரும் வீர வாலிபர்களை பயங்கரவாதி கள் என்று யார் கூறினாலும் அவர்கள் சரித்திரம் தெரியாதவர்கள். மனிதனாக வாழ்வதற்கே, தங்கள் சொந்த பூமியிலேயே உரிமை மறுக்கப்பட்டதால் அவர் கள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள். அவர்களை பயங்கரவாதிகள் என்று
கூறுவீர்களானால், பிரிட்டீஷ்காரன் பார்வையில் சுபாஷ்சந்திரபோஸ் ஒரு பயங் கரவாதி; தென்னாப்பிரிக்க நிறவெறியர்களின்பார்வையில் நெல்சன் மண் டேலா ஒரு பயங்கரவாதி; சர்வாதிகாரி பாடிஸ்டாவின் பார்வையில் ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு பயங்கரவாதி; சியாங்கே ஷேக் பார்வையில் மா-சே-துங் ஒரு பயங்கரவாதி. இலங்கையில் தமிழ் இளைஞர்கள் நடத்திவரும் ஆயுதப் போருக்கு உதவ எவரும் முன்வரவில்லை! கடமைப்பட்டுள்ள இந்தியா அதற்குத் தயாராக இல்லையே! ஆனால், ஜெயவர்த்தனேவுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்க இஸ்ரேலும் தென்னாப்பிரிக்காவும், மலேசியாவும், செஞ்சீனா வும், பாகிஸ்தான் மூலமாக அமெரிக்காவும் போட்டி போட்டுக்கொண்டு முன் வருகின்றன.

ஆனால், எங்கள் தமிழ் இளைஞர்களுக்கு அத்தகைய உதவிகள் கிடைக்க வில்லை என்றபோதிலும், பீரங்கிகளை எதிர்த்து, டாங்கிகளை எதிர்த்து, நவீன இராணுவச் சாதனங்களை சாதாரண துப்பாக்கிகளின் துணையுடன் சரித்திரம் சந்தித்திராத வீரச்சமர் புரிந்து வருகிறார்கள். மரணத்தை மலர்ச் செண்டாகக் கருதி மகத்தான யுத்தத்தை நடத்திவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை, இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்பது, எனது கோரிக்கை ஆகும்.

பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத்தை ராஜமரியாதை யோடு இங்கு வரவேற்பதைப்போல் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த
பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை நாம் இங்கு வரவேற்க வேண்டும். ஆனால், இந்திய அரசு அதற்குத் தயாராக இல்லை என்பது கண்டனத்திற் குரியது. 

இந்தியா, தமிழ் ஈழத்தை அங்கீகரிக்கட்டும்!

தமிழீழ விடுதலைப் போராளிகளை நாங்கள் வரவேற்போம். அந்த வீரத்தளபதி களுக்கு மாலை சூட்டுவோம்; விடுதலை இயக்கப் போராளிகளுக்கு எங்களால் இயன்ற அத்தனை உதவிகளையும் செய்வோம். தமிழ்நாட்டில் தளம் அமைப்ப தற்கு அவர்களுக்கு எல்லா உதவிகளும் உண்டு. எங்களின் வீடுகளையே அவர் களின் பாசறை ஆக்குவோம்; தேவைப்பட்டால் அவர்கள் பட்டாளத்திற்கு ஆள் திரட்டுவோம்.

8,000 கோடி ரூபாய்  இந்திய இராணுவத்திற்காக செலவழிக்கிறீர்களே  ஏன்? சுண்டைக்காய் நாடு, இலங்கை இந்தியாவின் எல்லைக்குள்ளேயே நுழைந்து, தமிழர்களைச் சுட்டுக் கொன்றாலும் நீங்கள் பேடிகளைப் போல் கண்ணை மூடிக்கொள்வீர்கள்.இந்திய அரசு ஆண்மையற்ற அரசு என்று நான் அழைப்பதில் உங்களுக்கு வெட்கமில்லையா?

நமீபியா நாட்டிற்காக கூரை ஏறி கூச்சல் போடும் நீங்கள், இலங்கைத் தமிழர்
பிரச்சினையில் கருத்துக் குருடர்களாய் காது இருந்தும் செவிடர்களாய் இருப்பது ஏன்? எங்கள் இனம் அழிக்கப்படும் நிலையிலும் அசையாமல் இருக் கும் இந்திய அரசுக்கு வரி செலுத்துவது அவசியம் தானா? இந்தக் கேள்வி எங்கள் உள்ளங்களில் எழத் தொடங்கி உள்ளது.

மலரப்போகின்ற தமிழ் ஈழ நாட்டின் கொடி ஐ.நா. மன்றத்திற்கு முன்னால் 158
தேசக்கொடிகளோடு சேர்ந்து பறக்கத்தான் போகிறது. என் வாழ்நாளிலேயே டில்லி மாநகரில் தமிழ் ஈழ தேசத்தின் கொடி பறப்பதைப்பார்க்கத்தான் போகி றேன். இந்திய அரசு தமிழ் ஈழத்தை விரைவில் அங்கீகரிக்கட்டும். இல்லையேல்
இந்தியாவின் அமைப்பிற்குள் நாங்கள் இருப்பது அவசியம்தானா? என வளரும்
தலைமுறையும் வருங்காலத் தலைமுறையும் சிந்திக்கும். தமிழ் ஈழத்தைப் போல் நாங்களும் கொடி தூக்கும் நாள் வரலாம். இப்படிப் பேசுவதால் என்னை தேசத்துரோகி என்றும், ராஜ துரோகி என்றும் குற்றம் சாட்டலாம். ஆனால் எச்சரிக்க வேண்டியது எனது கடமை.

மெளனமான ராஜீவ்காந்தி

தலைவர் வைகோ, நாடாளுமன்றத்தில் இவ்வளவு கடும் எச்சரிக்கை விடுத்து
பேசியபோது சபையில் இருந்த பிரதமர் இராஜீவ்காந்தி, எதுவும் பேசாமல்
மெளனமாக இருந்தார். அமைச்சர் குர்ஷித் ஆலம்கான்தான் குறுக்கிட்டுப்பேசி னார்.

‘இங்கிலாந்து நாட்டிலிருந்து இலங்கை ஆயுத உதவி பெறுவது பற்றி உறுப்பினர்
கோபால்சாமி சொன்னார். இது அந்த இரண்டு நாடுகள் செய்துகொள்கிற முடிவு. அதில் நாங்கள் தலையிட முடியாது’ என்று அமைச்சர் குர்ஷித் கூறியதும், வைகோ பதிலடி கொடுத்தார்.

“அப்படியானால் நமீபியா பிரச்சினையில் தென் ஆப்பிரிக்காவிற்கு எந்த நாடு களும் உதவி செய்யலாகாது ” என்று கொட்டி முழங்கினாரே ராஜீவ்காந்தி , அது எந்த அடிப்படையில் ? இந்தியா போடுகின்ற இரட்டை வேடமா இது?”.

அமைச்சர் குர்ஷித் ஆலம்கான் இலங்கைத் தூதர் பண்டாரிக்கு வக்காலத்து வாங்கினார்.

‘தமிழர்களுக்கு ரொமேஷ்’ பண்டாரி துரோகம் இழைத்துவிட்டார் என்று உறுப் பினர் கோபால்சாமி கூறி இருக்கக்கூடாது” என்று குர்ஷித் ஆலம்கான் கூறிய வுடன், தலைவர் வைகோ, “பண்டாரியின் நடவடிக்கைப் பச்சைத் துரோகம் என்று ஆயிரம் தடவை சொல்வேன்” எனப் பதில் கொடுத்தார்.

இந்த விவாதத்தின் முடிவில் பேசிய பிரதமர் ராஜீவ்காந்தி பதிலளிக்கையில்,
‘இலங்கைக்குச் சென்ற அதிகாரி பற்றி கோபால்சாமி குற்றம் சாட்டியதை நான்
கடுமையாக எதிர்க்கிறேன். நாங்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று
சொன்னோமோ அப்படித்தான் அதிகாரிகள் நடந்துகொண்டனர். எல்லாவற் றிற்கும் நாங்கள்தான் பொறுப்பு’ என்று இறுமாப்புடன் கூறினார்.

அன்றும் இன்றும்

நாடாளுமன்றத்தில் இந்த விவாதம் நடந்து 26 ஆண்டுகள் ஆகின்றன. இந்திய அரசின் நிலையில் எந்த மாற்றமும் துளிகூட ஏற்படவில்லை. 

அன்று ஜெயவர்த் தனே அதிபராக இருந்தபோது, ராஜீவ்காந்தி சிங்கள அரசிற்கு உதவி னார். இன்று அதே ராஜீவ்காந்தி மனைவி சோனியா வழிகாட்டுதலில் செயற் படும் பிரதமர் மன்மோகன்சிங், ராஜபக்சேவுக்கு உதவி வருகிறார்.
அன்று ரொமேஷ் பண்டாரி, இந்தியாவின் தூதராக, கொழும்பு சென்று, ஜெய வர்த் தனேயின் அரண்மனை விருந்தாளியாக இருந்தார் என்றால்,இன்று இந்திய வெளியுறவுச் செயலாளராக இருந்து இலங்கைக்கு தூது சென்று வந்த திருமதி நிருபமாராவ், ராஜபக்சே அளித்த விருந்தில் கலந்துகொண்டு, தமிழ் மக்களைக் கொச்சைப்படுத்தி இருக்கிறார்.

ஆக கொழும்பும், டில்லியும் தமிழினத்திற்கு எதிராகவே 26 ஆண்டுகளாக செயற்பட்டு வருகின்றன. ஆனால், தலைவர் வைகோ மட்டுமே இனத்திற்காக குரல் கொடுத்து வருகிறார். போராடி வருகிறார்.

திம்பு பேச்சுவார்த்தை

இராஜீவ்காந்தி பிரதமர் பொறுப்பேற்ற பிறகு, ஜெயவர்த்தனே தனது வஞ்சக
வலையில் இந்திய அரசை வீழ்த்துவதற்கான சதித்திட்டங்களை  தீட்டத் தொடங்கினான். இந்திய தூதர் ரொமேஷ் பண்டாரி இலங்கை சென்று வந்த வுடன், இந்தியா வருகை தந்த ஜெயவர்த்தனே, ராஜீவ்காந்தியை சந்தித்தான். இலங்கைக்கு நிதி உதவி பெறுவதற்கு உதவிசெய்யும் நாடுகளை நம்பவைக்க இலங்கையில் அமைதி நிலவுவதாக காட்ட வேண்டும் என்று ஜெயவர்த்தனே விடுதலைப் போராளி களுடன் போர் நிறுத்தம் காண விரும்பினான். அதற் காகவே ராஜீவ் காந்தியின் உதவியை இலங்கை நாடியது. ராஜீவ்காந்தியும் ஜெயவர்த்தனே போடும் திட்டங்களைப் பற்றி முழுமையான புரிதல் இன்றி, போராளிக் குழுக்கள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு இலங்கை அரசுடன்
பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினார்.

இந்தியாவின் தலையீட்டை ஏற்றுக்கொண்ட போராளிக் குழுக்கள்,இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர். இதன் பின்னணியில்தான், இந்தியஅரசின் ஏற்பாட்டில், 1985 ஜூலை 8 முதல் 13 ஆம் தேதிவரை, பூடான் தலைநகர் ‘திம்பு’ நகரில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடை யேயான (திம்புபேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திம்பு பேச்சுவார்த்தையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TVLP)), தமிழீழ
விடுதலைப் புலிகள் (LTTE), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழீழ விடுதலை அமைப்பு (TELIO)), ஈழப்புரட்சி அமைப்பு ((EROS), மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)) ஆகிய விடுதலை இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். பிரபாகரன் உள்ளிட்ட இந்தத் தலைவர்கள் கூட்டாக ஓர் அறிக்கையினை திம்பு பேச்சு வார்த்தைக்கு முன்நின்ற இந்திய அதிகாரி களிடம் அளித்தனர். (திம்புபிரகடனம், 1985, ஜூலை 13) அதில் கீழ்க்காணும் நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

1. இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவேண்டும்.

2. இலங்கையில் தமிழர்களுக்கென்று இனங்காணப்பட்ட ஒரு தாயகம் உள்ளது
என்பதை அங்கீகரித்தல்.

3.தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்

4. இலங்கைத் தீவை தமது நாடாகக் கருதுகின்ற எல்லா தமிழர்களின் குடி உரிமை யையும் அடிப்படை உரிமைகளையும் அங்கீகரித்தல்.

விடுதலை இயக்கங்களின் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அடிப்படையாக வைக்கப் பட்ட இக்கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க ஜெயவர்த்தனே தயாராக
இல்லை. மாறாக, ஒரு பக்கம் இந்தியாவை தனது வஞ்சக வலையில் வீழ்த்திய ஜெயவர்த்தனே, இன்னொரு பக்கம் போராளிகளுடன் பேச்சுவார்த்தைக் கூடாது என்று போராடுமாறு, இலங்கையில் உள்ள புத்தமத அமைப்புகளைத் தூண்டி விட்டான்.பேச்சுவார்த்தையை சீர்குலைக்க வவுனியா இராணுவ முகாம் மீது
குண்டுவீசச் செய்து, அதையே காரணம் காட்டி,போராளிகள் பேச்சுவார்த்தைக்கு
தயார் இல்லை என்று பிரச்சாரம் செய்தான்.

வவுனியா தமிழர்கள் மீது இராணுவத்தாக்குதல் நடத்தப்பட்டு 200 பேர் கொல்லப் பட்டனர். ஜெயவர்த்தனேயின் போக்கால், திம்பு பேச்சுவார்த்தை இரண்டாம் கட்டமாக 1985, ஆகஸ்டு 12 முதல் 17 வரை நடத்த திட்டமிட்டு இருந்தது பாதி யிலேயே நின்றுபோனது. இதனால் ஜெயவர்த்தனே- ராஜீவ்காந்தி இருவரின் பேச்சுவார்த்தை நாடகம் முடிவுக்கு வந்ததால் இருவருமே ஆத்திரம் அடைந் தனர்.


ஈழத்தலைவர்கள் நாடுகடத்தல்

திம்பு பேச்சுவார்த்தை தடைபடக் காரணமானவர்கள் என்ற குற்றம் சுமத்தி,
புலிகளின் ஆலோசகர் பாலசிங்கம்,டெலோ இயக்கத் தலைவர்கள் சந்திரகாசன், சந்தியேந்திரா ஆகியோரை ஜெயவர்த்தனே யோசனைப்படி இந்தியா நாடு கடத்தியது.

நாடு கடத்தப்    பட்ட ஈழத்தமிழர் தலைவர்களை மீண்டும் தமிழகத்திற்கு அழைத்து வரவேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள்
நடைபெற்றன.

இதற்கு பணிந்த இந்திய அரசு நாடுகடத்தப்பட்ட தலைவர்களை சென்னைக்கு திருப்பி அனுப்பியது.நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார்.

முதுகில் குத்திய இந்திய அரசு

1985, ஆகஸ்டு 26 இல் மாநிலங்களவையில் தலைவர் வைகோ,பொங்கும் எரி மலையென வெடித்தார். நாடாளுமன்றம் அதிர்ந்தது.

“சந்திரகாசன், பாலசிங்கம் இருவரையும் இந்திய அரசு நாடு கடத்தியது குறித்து
உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் கொதிப்பு அடைந்துள்ளனர். இவர்கள்
இந்தியாவிற்கு எதிராக சதிபுரிந்தார்களா? இல்லை கலகத்துக்கு வழி வகுத்தார் களா? இல்லை. இந்தியாவிற்கு விரோதமாக எள்ளளவும் செயல்படவில்லை. அவர்களை நாடு கடத்தியது எந்த வகையில் நியாயம்? இலங்கையில் 1983 ஆம் ஆண்டும் இனப்படுகொலை நடந்தபோது அகதிகளாக புகலிடம் தேடி அவர்கள்
தமிழகம் வந்தார்கள். சந்திரகாசன் யார்? அவர் ஈழத்துக்காந்தி என்றழைக்கப் படும் தமிழர் தலைவர் தந்தை செல்வாவின் புதல்வர். ஈழப்போராளிகளுக்காக,
ஈழத்தில் கொல்லப்பட இருந்த நிலையில் தப்பி தமிழகம் வந்தார். ஈழத்தமிழர் களை இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்கும் அமைப்பின் தலைவராக இருக்கிறார். ஜெனீவாவில் ஐ.நா. மன்றத்தில் மனித உரிமைகளுக்காக தொடர்ந்து வாதாடிவருகிறார். ”

அவரை ஆகஸ்டு 23 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் தமிழக போலீசார் மனிதா பிமானமற்ற முறையில் கைது செய்து ,‘தரதர’ வென்று இழுத்துச்சென்று, 24 மணி நேரம் யாரும் அவரைச் சந்திக்க இயலாத வகையில் அடைத்து வைத்து, விமானத்தில் பலாத்காரமாக தூக்கி எறிந்து நியூயார்க் அனுப்பி உள்ளனர்.
பாலசிங்கம்

புலிப்படை இயக்கத்தைச் சார்ந்த டாக்டர் பாலசிங்கத்தை உடல் நலமில்லாத
நிலையிலும் மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்து, அவர் மருந்து
சாப்பிடக்கூட அனுமதிக்காமல் கொட்டடியில் அடைத்து அவரையும் லண்டனுக்கு அனுப்பி விட்டனர்.

இந்திய அரசின் காலடியில் கிடந்து கருணையை எதிர்பார்த்து நிற்கும் இந்தத்
தமிழர்களை இந்திய அரசு காலால் எட்டி உதைத்துள்ளது. அவர்களை இலங்கை
அரசு தீர்த்துக்கட்ட துடித்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அவர்களை
இலங்கைக்கு அனுப்பினால் அங்கே மரணம்தான் பரிசு. போர் நிறுத்தம் அறிவிக் கப்ட்ட பின்பு, இதுவரை இலங்கையில், சிங்கள வெறியர்களால் ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழர்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய இந்திய அரசு இலங்கைக்கு
பாடம் புகட்ட வேண்டிய இந்திய அரசு, மாறாக தமிழர்களை நாடு கடத்தும்
விதத்தில் வேட்டையாடத் தொடங்கி உள்ளது.
ஜெயவர்த்தனே கைப்பாவையான இந்திய அரசு

திம்புவில் தமிழர்களின் பிரதிநிதிகளைப் பார்த்து ‘இந்திய வெளியுறவுச் செயலாளர் பண்டாரி தரக்குறைவாகப் பேசி விரட்டி உள்ளார். இழிவாகப் பேசி இருக்கிறார்.எங்கள் இரத்தம் கொதிக்கிறது.

எங்கள் வீர இளைஞர்களை இழிவுபடுத்த இந்த பண்டாரி யார்? நான் மேலும்
குற்றம் சாட்டுகிறேன். இந்திய அரசு இலங்கையின் கைப்பாவை ஆகிவிட்டது”
வைகோவின் ஆவேசப் பேச்சில், பண்டாரி பற்றி பேசியதை அவைக் குறிப்பி லிருந்து நீக்க உத்தரவிட்ட அவைத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன் இடையில் குறுக்கிட்டு, “நீங்கள் எது வேண்டுமானாலும பேசுங்கள். நான் ஆட்சேபம் தெரிவிக்கப்போவதில்லை” என்றார்.

தனது பேச்சைத் தொடர்ந்த வைகோ “ஜெயவர்த்தனேவின் கைப்பாவையாக
இந்திய அரசு மாறிவிட்டது. இலங்கை இனவெறி அரசின் ரத்த தாகத்தைத்
தணிக்க இந்திய அரசு தமிழர்களின் முதுகிலே குத்திவிட்டது.”

“தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டுவிட்டனர்.மோசடிக்கு ஆளாக்கப்பட்டுவிட்டனர்.
இந்தியா அன்று நட்பு நாடாக இருந்த சீனாவின் எண்ணத்துக்கு விரோதமாக
தலாய்லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்தது. அதன் விளைவாகத்தான் சீனப் போர் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான சதுர மைல் நிலத்தைப்பறிகொடுக்க நேரிட்டது. ஆனால், அதே இந்தியாவில் எங்கள் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூட இன்று மத்திய அரசுக்கு மனம் இல்லை.

பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் இன்றைய இந்திய சர்க்காரைவிட மனிதா பிமானத்துடன் நடந்து கொண்டனர். அதனால்தான் முதலாளித்துவத்தை அழிப்பதற்கு காலமெல்லாம் பாடுபட்ட காரல் மார்க்சுக்கு லண்டன் அடைக் கலம் தந்தது. கோமேனிக்கு பிரான்சில் அடைக்கலம் கிடைத்தது. பூட்டோ பிள்ளைகளுக்கு பிரான்சு அடைக்கலம் கொடுத்தது. ஆனால், தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுக்க இங்கு வழியில்லை.”

வரலாறு மன்னிக்காது

நான் குற்றம் சாட்டுகிறேன்! இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகளை இந்திய
சர்க்கார் பிளாக்மெயில் செய்கிறது; மிரட்டுகிறது; நிர்பந்திக்கிறது.இலங்கையில் தமிழினத்தை ஒழிப்பேன் என்று ஜெயவர்த்தனா கொக்கரிக்கிறார்.இந்திய அரசு லாலி பாடுகிறது.

அதிர்ஷ்டவசமாகவோ, துரதிர்ஷ்டவசமாகவோ நாங்கள் இந்தியாவின் பிரஜை களாக இருக்கிறோம். தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறது. அதனால்தான் தொலை தூரத்திலிருந்து இங்கே வந்து டெல்லியில் உங்களை கெஞ்சி,மன்றாடி,
பிச்சை கேட்கும் நிலையில் இருக்கிறோம்.

பஞ்சாபிலும், வடகிழக்கிலும் எழுந்த கிளர்ச்சி நெருப்பு தமிழகத்தில் எழாது என்று மட்டும் தப்புக்கணக்கு போடாதீர்கள். நாடு கடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் தலைவர்கள் மீண்டும் தமிழகம் வர அனுமதியுங்கள். இல்லையேல் வரலாறு உங்களை மன்னிக்காது. தமிழர்களின் வருங்காலத் தலைமுறை டெல்லியை ஒருபோதும் மன்னிக்காது”.

வைகோவின் கண்ணீர் கொப்பளிக்கும் இந்த ஆவேச உரையை வெளியிட்டு
இருந்த இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடுகள் “வைகோ பேசும்
போது உணர்ச்சிப் பிழம்பானார். சில கட்டத்தில் அவரது குரல் தழுதழுத்தது.
வேதனையில் பேச முடியாமல் அவரது கண்களிலிருந்து கண்ணீர் ‘பொல பொல’ எனக் கொட்டிக் கொண்டேயிருந்தது. பொங்கி வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே வைகோ பேசினார்” என்று குறிப்பிட்டிருந்ததை நினைத் தால் இன்றும் நமக்கு கண்ணீர் வருகிறது.

                                                                                                                     தொடரும்...

நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment