Wednesday, April 10, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 10

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே

புலிகளின் ஆயுதங்களைப் பறித்த ராஜீவ்காந்தி அரசு!

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை முற்றிலும் ஒடுக்கும் விதமாக ஒரு தலைப் பட்சமான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை உருவாக்கி அதனை புலி களும், தமிழீழ மக்களும் ஏற்க வேண்டும் என்று ராஜீவ்காந்தி அரசு மிரட்டல் விடுத்தபோது, 1987 ஆகஸ்டு 17 இல் மாநிலங்களவையில் தலைவர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்து ஆற்றிய உரையின் தொடர்ச்சி:

“ஆகஸ்ட் 2 ஆம் நாள் (1987) சென்னை கடற்கரையில் பேசுகையில் பிரதமர் ராஜீவ்காந்தி தெரிவித்த ஒரு கருத்து மிகவும் கண்டனத்திற்கு உரியது. “சிங்கள வர்கள் வட இந்தியாவிலிருந்து ஒரிசா, வங்காளம் போன்ற பகுதிகளிலிருந்து இலங்கை சென்றவர்கள் என்றும் -தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர் கள்” என்றும் ராஜீவ்காந்தி பேசியுள்ளார். கடந்த ஆண்டு சிங்களவெறியன் ஒரு வன் இதே கருத்தை விஷமத்தனமாக ஆரிய-திராவிட மோதல்எனும் எண்ணம் ஏற்படும் வகையில் ஒரு கட்டுரை எழுதி, இந்தியாவிலுள்ள அனைத்து நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி இருந்தான். அந்தக் கருத்தினையே தான்
ராஜீவ்காந்தியும் கூறுகிறார். பிரதமருக்கு ஒன்று சொல்வேன். இலங்கையில் உள்ள தமிழர்கள் இருவகையினர். ஒரு பிரிவினர் நான் முன்பு குறிப்பிட்ட
தோட்டத் தொழிலாளர்கள் - இங்கிருந்து சென்றவர்கள்.



தமிழர்கள் பூர்வ குடி மக்கள்

ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள் இலங்கையின் பூர்வகுடிமக்கள். வரலாற்றின் வைகறைக் காலத்திலிருந்து அம்மண்ணின் மைந்தர்கள்.1984 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இதே சபையில் இந்திரா காந்தி அம்மையார் நிகழ்த்திய கடைசி பேச்சில்,“இலங்கைத் தமிழர்கள் அம் மண் ணின் பூர்வகுடிகள்” என்று பேசினார். பாவம், பிரதமர் ராஜீவ்காந்திக்கு
சரித்திர ஞானம் என்பது சூன்யமாகி உள்ளது. அந்த ஒப்பந்தம் போட்டது முதல் பிரதமர் ராஜீவ்காந்தி செல்லும் இடமெல்லாம் இதனைப்பற்றியே பேசி தம் பட்டம் அடிக்கிறார். ஆகஸ்டு 1 ஆம் தேதி நைனிடாலில் பிரதமர் பேசும்போது, இந்த ஒப்பந்தம் போட்டதனால் இலங்கை மண்ணில் வேறு எந்த அன்னியநாட்டு இராணுவமும் கால் வைக்காது என்றும் -இலங்கைக் கடலோரத்தில் அன்னிய நாட்டு போர்க்கப்பல்கள் இனிமேல் நடமாடாதென்றும் பேசியுள்ளார்.ஆனால், அப்படிப்பட்ட ஷரத்து ஏதும் ஒப்பந்தத்தில் இல்லை. ஒப்பந்தம் போட்ட மறுநாளே ஜெயவர்த்தனே அமெரிக்காவிடமிருந்தும், இங்கிலாந்திடமிருந்தும், பாகிஸ் தானிடமிருந்தும், சீனாவிடமிருந்தும் இராணுவத்தை உதவிக்கு அழைத்துள் ளார். இதிலிருந்து என்ன தெரிகிறது? பிரதமர் ராஜீவ்காந்தி உண்மைக்கு மாறா கப் பேசி நாட்டை ஏமாற்றுகிறார்.

ஆயுதப் பறிப்பே நோக்கம்

திரிகோணமலையில் இனிமேல் அன்னிய நாட்டு சக்திகளுக்கு இடமில்லை என்றும், வெளிநாட்டு உளவு ஸ்தாபனங்கள் இனிமேல் இலங்கையில் நடமாடா தென்றும் பிரதமர் ராஜீவ்காந்தி கூறுகிறாரே!ஒப்பந்தத்தில் இதுபற்றி ஒரு வார்த் தையாவது கூறப்பட்டுள்ளதா? இல்லை. இலங்கை அதிபரும் இநதியப் பிரத மரும் எதிர்காலத்தில் இந்த விசயங்களைப் பற்றிப் பேசி முடிவெடுப்பார்களென அவர்கள் இருவரும் பரிமாறிக் கொண்ட கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதே
தவிர, ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை. நான் வெளிவிவகார அமைச்சரைக் கேட்கிறேன், அன்னிய உளவு ஸ்தாபனங்களைச் சேர்ந்த ஒரு நபராவது இலங் கை யிலிருந்து இதுவரை வெளியேறி இருக்கிறார்களா? இல்லையே! ஒப்பந்தம் இலங்கை நாடாளுமன்றத்தில் நாளைய தினம் (ஆகஸ்ட்டு 18, 1987) ஒப்புதலுக்கு வைக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது செப்டம்பர் இறுதியிலோ,அக்டோபரிலோதான் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படும் என ஒத்திப்போட்டுள்ளது. போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்தவுடன் இந் திய இராணுவம் இலங்கைப் பகுதிகளை விட்டு வெளியேறும் என ஜெயவர்த் தனே நிருபர்களிடம் கூறியுள்ளார்.

வடகிழக்கு மாகாணங்களில் உள்ள ஏறத்தாழ 200 ராணுவ முகாம்கள் இன்னும் அகற்றப்படவில்லை. தமிழர்களை வேட்டையாடுவதற்கென்றே ஊர்க்காவல் படையென்றும், அதிரடிப்படையென்றும் கொலைகாரர்களையும் குண்டர்களை யும் ஜெயவர்த்தனே உருவாக்கியுள்ளார். இப்போது அந்தப்பிரிவுகளையெல் லாம் நிரந்தரப்பாதுகாப்புப் படையாக மாற்றப்போவதாக ஒப்பந்தத்திலேயே
குறிப்பிட்டுள்ளது. இலங்கை பாதுகாப்புப் படையில் தமிழர்களுக்கு பிரதிநிதித் துவம் என்ன? இதுபற்றி ஒப்பந்தத்தில் எந்தக் குறிப்பும் இல்லையே? போராளி களின் ஆயுதங்களைப் பறிப்பதுதான் இலங்கை அரசின் ஒரே நோக்கம்.

தங்கள் அன்னையின் மானம் காக்க, சகோதரிகளின் மானம் காக்க, தங்கள் இனம் மானத்தோடு வாழ ஆயுதமேந்தினர். போராளிகள் மகத்தான தியாகம் புரிந்தனர். அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர். விடுதலை வீரர்கள்.அவர் களிட மிருந்து ஆயுதங் களைப் பறித்துவிட்டீர்கள். இந்திய இராணுவம் அங்கே எவ் வளவு நாள் இருக்கப்போகிறது. ஜெயவர்த்தனே வெளியேறச் சொன்னால் இந்திய இராணுவம்வெளியேறும் என்றுதானே ஒப்பந்தம் கூறுகிறது. அப்படி யானால், தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு என்ன? இது குறித்து என் கேள்விகளுக்கு இந்திய அரசின் பதில் என்ன?

கேலிச்சித்திரம் காட்டும் உண்மை

இந்த ஒப்பந்தம் குறித்து என் கருத்து என்ன என்பதனை நான் தொடர்ந்து
விவரித் துக்கொண்டே போவதைவிட “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிகையின்
மிகச்சிறந்த கேலிச்சித்திரக்காரரான ஆர்.கே. லட்சுமண் வரைந்த ஒரு கேலிச் சித்திரத்தை இந்த மன்றத்திற்கு காட்டினாலே போதுமானது.

என் கையில் உள்ள கேலிச்சித்திரத்தில் ஒப்பந்தத்திற்குப் பக்கத்தில் ஜெயவர்த் தனே புன்னகையோடு நிற்கிறார், பிரதமர் ராஜீவ்காந்தியை வரவேற்று “ராஜீவ் காந்தி அவர்களே வருக! நிபுணரான உங்களோடு இணைந்து இந்த ஒப்பந்தம்
செயல்பட்டுத்தான் ஆகவேண்டும்” என்கிறார். நிபுணரின் தோற்றத்தை ஆர்.கே. லட்சுமண் எப்படி சித்தரித்து உள்ளார் பாருங்கள், ராஜீவ் இடதுகையில் ஒரு பெரிய பேண்டேஜ்;வலது காலில் ஒரு பேண்டேஜ் மற்றும் பலத்த காயங்க ளோடு வருகிறார். இடது கை பேண்டேஜில் அஸ்ஸம் ஒப்பந்தம், வலது கால் பேண்டேஜில் பஞ்சாப் ஒப்பந்தம். ஒப்பந்த நிபுணர் ராஜீவ்காந்தியின் தோற்றம் இதுதான்.ஒப்பந்தங்கள் போடுவதில் ராஜீவ்காந்தி கெட்டிக்காரர் அல்லவா? பஞ்சாப் ஒப்பந்தத்திற்கு நேர்ந்த கதியைவிட,இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு
மோசமான முடிவுதான் ஏற்பட உள்ளது.இந்திய மக்களின் கவனத்தை திசை
திருப்புவதற்காக இலங்கை ஒப்பந்தம் என்ற பெயரால் தமிழர்களை இந்தியப்
பிரதமர் வஞ்சித்துள்ளார். கண்ணீரிலும் இரத்தத்திலும் எழுதப்ப்டும் இலங்கைத்
தமிழர்களின் தலைவிதி தொடர்ந்து அபாயத்தில் சிக்கி உள்ளது.”

அமைச்சருடன் மோதல்

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தமிழரின் நலன்கள் பாதுகாக்கப்பட வில்லை என்பதை ஆணித்தரமாகதலைவர் வைகோ, நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்த பிறகு இரு நாட்கள் கழித்து, 1987 ஆகஸ்டு 19 இல், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் நட்வர்சிங் வைகோ அவர்களுக்கு பதில் கூறினார். ஒப்பந்தத்தை வரவேற்றுப் பேசிய நட்வர்சிங், விடுதலைப் புலிகளுக்கு நீங்கள் தான் பேசும் பிரதிநிதியா? என்று கேள்வி எழுப்பினார்.விவாதம் முழுமையும் பார்த்தால்தான் ராஜீவ்காந்தி அரசு, ஒப்பந்தத்தை விமர்சித்த தலைவர் வைகோ மீது எந்த அளவு எரிச்சலடைந்தது என்பது தெரியும்.

அமைச்சர் நட்வர்சிங்: அனைத்துத்தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்கி றார்கள்.ஆனால்,இதனை எதிர்த்து மாறுபட்ட குரலை கோபால்சாமி மாத்திரம் இங்கே ஒலிக்கிறார்.

வைகோ: வாழ்த்துச்சொல்லிகோரஸ்போட நான் தயாராக இல்லை. நீங்கள் ஒப்பந்தம் போடுவதற்கு முன் தமிழ்ப் போராளிகள் அனைவரின் சம்மதத்தைப் பெற்றீர்களா? இல்லையா? என்பது என் கேள்வி.

அமைச்சர் நட்வர்சிங்: அனைத்துப்போராளி இயக்கங்களும் ஒத்துழைக்கின் றன. அதிலிருந்து அவர்கள் ஒப்புக்கொண்டதாகத்தானே அர்த்தம்?

வைகோ: ஒப்பந்தத்தில் இந்தியாகையெழுத்துப் போடுமுன் புலிகள் இயக்கமும் ஈரோஸ் இயக்கமும் ஒப்புக்கொள்ளவில்லை.தங்கள் மீது ஒப்பந்தம் திணிக்கப் பட்டதாகத்தானே ஆகஸ்ட் 4இல் பிரபாகரன் பேசியிருக்கிறார். இரண்டு லட்சம்
தமிழர்களை இந்தியா ஏற்பதாகச் சொன்னது எந்த வகையில் நியாயம்?
அமைச்சர் நட்வர்சிங்: போராளிகளுக்கு நீங்கள்தான் பேசும் பிரதிநிதியா?
எப்போதிருந்து அவர்களின் தூதர் ஆனீர்கள்?

வைகோ : இந்த இடக்குப்பேச்சு பயன் தராது.இலங்கைத்தமிழர்களின் உண்மை யான பிரதிநிதி தி.மு.க.தான்...(அன்று திமுகவின் நிலை ,இன்று அப்படியல்ல )

அமைச்சர் நட்வர்சிங்: விவாதத்திற்குபதில் சொல்லவே என்னை அனுமதிக் காமல் கோபால்சாமி குறுக்கிடுகிறார்.எனவே நான் உரையாற்ற விரும்ப வில்லை. (அமைச்சர் உட்கார்ந்து விட்டார்)

வைகோ: அமைச்சர் பதில் சொல்லும் போது குறுக்கிட்டு விளக்கம் கேட்பது
உறுப்பினரின் உரிமை. வீணில் கோபப்பட்டுப்பயனில்லை.அமைச்சர் தொடர்ந்து பேசட்டும். கடைசியாக நான் கேள்வி கேட்கிறேன். கடைசியாக நான் கேள்வி கேட்க அவைத்தலைவர் அனுமதிப்பாரா?

அவைத்தலைவர் ஜக்கேஸ் தேசாய்: கடைசியாக கேள்வி கேட்க நான் அனுமதிக் கிறேன்.

(அமைச்சர் நட்வர்சிங் தொடர்ந்து பேசினார். இறுதியில் வைகோ கேள்வி கேட்ட போது, அமைச்சர் எரிச்சல் அடைந்து “எங்களுக்கு பொறுப்பு இருக்கின்றது. கோபால்சாமிக்கு பொறுப்புணர்ச்சி இல்லை” என்று சொன்னார்.)

வைகோ: அமைச்சர் அவர்களே! பொறுப்புணர்ச்சியை நீங்கள்தான் குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்களா? உங்களின் கருத்தைக் கடுமையாக நான் கண்டனம் செய் கிறேன். இலங்கைத் தமிழர்களின் நலனில் எங்களுக்கு உள்ள அக்கறையும் , பொறுப்பும் உங்களுக்கு நிச்சயம் கிடையாது. அதிகாரத்தில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?

(எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமைச்சர் பேசியதை வாபஸ் பெறுமாறு வற் புறுத் தினார்கள்.)

அமைச்சர் நட்வர்சிங்: நான் உறுப்பினரைப் புண்படுத்தும் நோக்கத்தில்சொல்ல வில்லை.

வைகோ: நேற்று இலங்கைப்பாராளுமன்றத்தில் நடைபெற்ற பயங்கரச்சம்பவம் சிங்கள வெறியர்களின் கொலைவெறியைக்காட்டுகிறது.ஜெயவர்த்தனேயோ அல்லது அதிபர் பொறுப்பிற்கு வருகிற வேறு நபரோ இந்திய இராணுவத்தை வாபஸ் வாங்கச்சொன்னால், இராணுவத்தை நீங்கள் வாபஸ் வாங்கினால், போராளிகள் ஆயுதம் இழந்த நிலையில் தமிழர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடக்கும் போது அவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு என்ன?
அமைச்சர் நட்வர்சிங்: ஒப்பந்தத்தை அமுல் செய்யும் வரை இந்திய ராணுவம்
வாபஸ் ஆகாது.

இந்திய நாடாளுமன்றத்தில், ஈழத் தமிழர்களின் மீது திணிக்கப்பட்ட இந்திய-
இலங்கை ஒப்பந்தத்தை தலைவர் வைகோ கடுமையாக எதிர்த்தபோது,நீங்கள் தான் போராளிகளின்பிரதிநிதியா? என்று வைகோ அவர்களைப் பார்த்து வெளி யுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் கேட்டதற்குக்காரணம், இந்திய - இலங்கை ஒப்பந்தம் குறித்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் கருத்தை அப்படியே பிரதிபலித்ததுதான்.

பிரபாகரனின் சுதுமலைப்பேச்சு

1987 ஆகஸ்ட் 4 ஆம் நாள் யாழ்ப்பாணம்,சுதுமலை அம்மன் திடலில் விடுதலைப்
புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்திய -இலங்கை ஒப்பந்தம் குறித்தும்,ஆயுதங் களை ஒப்படைப்பது குறித்தும், இலட்சக்கணக்கான மக்கள் கூடிய பொதுக் கூட் டத்தில் தமது கருத்துகளை வெளியிட்டார். மாவீரர் திலகம் பிரபாகரன் தன் வாழ்நாளில் பேசிய முதலும் கடைசியுமான சுதுமலைப் பொதுக்கூட்ட உரை, வரலாற்றில் இடம் பெற்றது. தமிழீழத்தின் எதிர்காலத்தை தீர்க்கதரிசனமாக கணித்த உரைகல்; அவரது உரை வருமாறு.

“இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற் பட்டு இருக்கிறது. திடீரென்று எமக்கு அதிச்சியூட்டுவது போல, எமது சக்திக்கு
அப்பாற்பட்டதுபோல, இந்தத் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் விளைவுகள்
எமக்கு அதிர்ச்சியூட்டுவதுபோல எமது சக்திக்கு அப்பாற்பட்டதுபோல, இந்தத்
திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் விளைவுகள் எமக்குச் சாதகமாக அமையு மா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
திடீரென மிகவும் அவசரமாக, எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதி களாகிய எம்மையோ கலந்தாலோசிக்காமல், இந்தியாவும் -இலங்கையும் செய்துகொண்ட ஒப்பந்தம் இப்பொழுது அவசர அவசரமாக அமலாக்கப்பட்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் தில்லி செல்லும்வரை இந்த ஒப்பந்தம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது.

பாரதப் பிரதமர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி என்னை தில்லிக்கு அவசரமாக அழைத்துச்சென்றார்கள்.அங்கு சென்றதும்,இந்த ஒப்பந்தம் எமக்குக் காண்பிக்கப்பட்டது.இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன. பல கேள்விக் குறிகள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத்தீர்வு ஏற்படுமா என்பது பற்றி எமக்குச்சந்தேகம் எழுந்தது. ஆகவே, இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்திய அரசுக்கு
தெள்ளத் தெளிவாக விளக்கினோம்.

ஆனால், ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாது போனாலும் இந்த ஒப்பந்தத் தை அமலாக்கியே தீருவோம் என இந்திய அரசு கங்கணம் கட்டி நின்றது. இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சரியப்படவில்லை.இந்த ஒப்பந் தம் தமிழர் பிரச்சினையை மட்டும் தொட்டு நிற்கவில்லை.

இது பிரதானமாக இந்திய-இலங்கை உறவு பற்றியது. இந்திய வல்லாதிக்க
வியூகத்தின் கீழ் இலங்கையைக்கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் அடங்கி யிருக்கின்றன. இலங்கையில் அந்நிய நாசகார சக்திகள் காலூன்றாமல் தடுக்க வும் இது வழி வகுக்கிறது.ஆகவேதான் இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொள்வதில் அதிக அக்கறை காட்டியது.

ஆனால், அதே சமயம் ஈழத்தமிழரின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதாக வும் இந்த ஒப்பந்தம் அமைகிறது.ஆகவேதான், எமது மக்களைக் கலந்தாலோ சிக்காது, எமது கருத்துகளைக் கேளாது இந்த ஒப்பந்தம் சேய்யப்பட்டதை நாம் கடுமையாக ஆட்சேபித்தோம். ஆனால், நாம் ஆட்சேபித்ததில் அர்த்தமில்லை. எமது அரசியல் தலைவிதியை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒருமாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவு செய்திருக்கும்போது நாம் என்ன செய்வது?

இந்த ஒப்பந்தம் நேரடியாக எமது இயக்கத்தைப் பாதிக்கிறது. எமது அரசியல் இலட்சியத்தைப் பாதிக்கிறது. எமது போராட்ட வடிவத்தைப்பாதிக்கிறது. எமது ஆயுதப்போராட்டத்திற்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது.
பதினைந்து வருடங்களாக, இரத்தம் சிந்தி, தியாகம் புரிந்து, சாதனைகள் கட்டி
எழுப்பப்பட்ட ஒரு போராட்ட வடிவம் ஒரு சில தினங்களில் கலைக்கப்படுவது
என்றால் அதை நாம் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.திடீரென கால அவகாச மின்றி எமது போராளிகளின் ஒப்புதலின்றி, எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமின்றி இந்த ஒப்பந்தம் எமை நிராயுதபாணிகளாக்குகிறது. ஆகவே,
நாம் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தோம்.

இந்தச் சூழ்நிலையில் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி என்னை அழைத்துப்பேசி னார். அவரிடம் எமது பிரச்சினைகளை மனம் திறந்து பேசினேன். சிங்கள இன வாத அரசில் எமக்குத்துளிகூட நம்பிக்கை இல்லை என்பதையும் இந்த ஒப்பந் தத்தை அவர்கள் நிறைவேற்றப்போவதில்லை என்பதையும் இந்தியப் பிரதமரி டம் எடுத்துரைத்தேன். எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்சினை பற்றியும் அதற் கான உத்திரவாதங்கள் பற்றியும் அவரிடம் பேசினேன்.

எம்மைப் பாதுகாக்கும் ஆயுதங்கள்

பாரதப் பிரதமர் எமக்கு சில வாக்குறுதிகளை அளித்தார்.எமது மக்களின் பாது காப்பிற்கு உத்திரவாதம் அளித்தார். பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரது உறுதிமொழிகளில் நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாதஅரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கையில் இறங்க இந்தியா அனுமதிக்காது என நாம் நம்புகிறோம்.இந்த நம்பிக்கையில்தான் நாம் இந்திய சமாதானப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்தோம்.

நாம் எமது மக்களின் பாதுகாப்பிற்காக எத்தனை அளப்பரிய தியாகங்களைப்
புரிந்தோம் என்பதை நான் இங்கு விளக்கிக்கூறத் தேவையில்லை.எமது இலட் சியப் பற்றும், தியாக உணர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை எமது மக்களா கிய நீங்கள் நன்கு அறிவீர்கள்.

உங்களது பாதுகாப்பிற்காக, உங்களது விடுதலைக்காக, உங்களது விமோசனத் திற்காக, நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து எமது மக்களாகிய
உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்.
ஈழத்தமிழரின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடமிருந்து பெற்றுக்கொள்வதிலே எமது மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது.ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தைத்தான் குறிக்கிறது.

நாம் ஆயுதங்களைக் கையளிக்காது போனால்,இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை.”
இந்தியா வை நேசிக்கின்றோம்

“இந்தியாவை நாம் நேசிக்கின்றோம். இந்திய மக்களை நாம் நேசிக்கின்றோம்.
இந்திய வீரனுக்கு எதிராக நாம் ஆயுதங்களை நீட்டத் தயாராக இல்லை.எமது எதிரியிடமிருந்து எம்மைப்பாதுகாக்கும் பொறுப்பை இந்திய இராணுவ வீரர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

நாம் ஆயுதங்களை அவர்களிடம் கையளிப்பதிலிருந்து ஈழத் தமிழர் ஒவ்வொரு வரின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் இந்திய அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதைநான் இங்கு இடித்துக்கூற விரும்புகிறேன்.

இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பதைத் தவிர எமக்கு வேறு வழி யில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை அவர்களுக்கு நாம் வழங்குவோம்.ஆனால், இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு ஏற்படுமென நான் நினைக்கவில்லை.சிங்கள இனவாதப் பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி விடும் காலம் வெகுதூரத்தில் இல்லை.”

தமிழ் ஈழமே நமது இலட்சியம்

“தமிழீழத்தனியரசே தமிழீழமக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. தமிழீழ இலட்சியத் திற் காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் நான் இங்கு திட்டவட்ட மாக உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன்.போராட்ட வடிவங்கள் மாற லாம். ஆனால், எனது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. எமது இலட் சியம் வெற்றி பெறுவதனால் எமது மக்களாகிய உங்களின ஏகோபித்த ஆதரவு என்றும் எமக்கு இருக்க வேண்டும்.”

தம்பி பிரபாகரனின் சுதுமலைப்பொதுக்கூட்ட உரையில் அவர் கூறியவாறே பின்னாளில் சிங்கள இனவாத பூதம் ஒப்பந்தத்தை விழுங்கியது.எமது மக்களின்
பாதுகாப்பை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம் என்று கூறி இந்திய அமைதிப் படையிடம் ஆயுதங்களை புலிகள் இயக்கம் கையளித்தது. ஆனால், இந்திய அரசு தான் கூறியவாறுநடந்துகொண்டதா? தமிழீழ மக்களை பாதுகாக்க அனுப்பப் பட்டதாகக் கூறப்பட்ட இந்திய அமைதிப்படை ஈழத்தமிழர்களைக் காத்ததா? இல்லவே இல்லை.

எந்த இந்திய இராணுவத்தை எதிர்த்து துப்பாக்கியை நீட்டத் தயாராக இல்லை
என்று பிரபாகரன் தெரிவித்தாரோ,அதே இந்திய இராணுவத்தை எதிர்த்து ஆயுதங் களைத் தூக்க வேண்டிய நிலையை, ராஜீவ்காந்தி அரசு ஈழத்தில்
உருவாக்கியது. அதன் விளைவுகள்தான் பின்னாளில் விபரீதம் ஆகியது.
நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ இவற்றையெல்லாம் பதிவு செய்து
இருக்கிறார்.

                                                                                               தொடரும்...............
நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment