Wednesday, April 10, 2013

தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

ஈழத்தை ஆதரித்து பேசுபவர்கள் மீது வழக்கு தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

சுதந்திரத் தமிழ் ஈழத்தை ஆதரித்தும்,இந்திய அரசின் துரோகத்தைக் கண்டித் தும் பேசுபவர்கள் மீது தேச ஒற்றுமைக்கு எதிரான குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்துள்ள தமிழக காவல்துறைக்கு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மார்ச் 4 ஆம் தேதி அன்று ஜெனீவாவில் மாபெரும் மக்கள் கூடல் நிகழ்ச்சியைப் பிரதிபலிக்க தமிழகம் எங்கும் “ஈழத்தோழமை நாள்” கடைப்பிடிக்கப்பட்டது. தாய்த் தமிழகத்து மக்கள் திரண்டு, சுதந்திரத் தமிழ் ஈழத்தை ஆதரித்தும், ஈழத் தமிழ் இனப் படுகொலை செய்த சிங்களக் கொலைகார ராஜபக்சே அரசின் மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தக்கோரியும்,சிங்களருக்கு ஆதர வாக இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும் ஆர்த்தெழுந்து உரிமை முழக்கம் செய்ய மக்கள் நல்வாழ்வு இயக்கம் வேண்டுகோள் விடுத்தது.



அதன்படி, மார்ச் 4 ஆம் தேதி மதுரை மாநகரில் ம.தி.மு.க.மாவட்டச்செயலாளர்
பூமிநாதன் தலைமையில் நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்தில், ஈழத் தமிழ் உணர்வா ளர்கள் பலரும் உரையாற்றினர்.

அதில், மதுரை வழக்கறிஞர் சங்கச் செயலாளர் வழக்கறிஞர் ஏ.கே.இராமசாமி தனது உரையில், “ஈழத் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவுகின்ற துரோகத்தைக் கண்டித்தும், இலங்கையை நட்பு நாடு என்று இந்தியா கூறக்கூடாது என்றும், ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படக்கூடாது என்றும், தமிழ் இனத்துக்கு தொடர்ந்து இந்திய அரசு துரோகம் செய்யுமானால் இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும் என்றும், சுதந்திரத் தமிழ் ஈழத்திற்காகவும், தாய்த் தமிழக உரிமைக்காகவும் போராடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்டு லெனினிஸ்டு மக்கள் விடுதலை அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் மீ.தா.பாண்டியன் தனது உரையில், “இந்திய அரசின் துரோகம் ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் தொடருமானால், இந்திய வரைபடத்தில் எதிர்காலத்தில் தமிழ்நாடு நீடிக்குமா? என்பது கேள்விக்குறியாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் இருவர் மீதும் தமிழக காவல்துறை இந்திய தண்டனைச் சட்டம் 153பி பிரிவின் கீழ் தேச ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளை விக்கும் விதத்தில் செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்திருப்பது ஜனநாயகம் வழங்கி உள்ள பேச்சு உரிமையை நசுக்க முற்படுகின்ற அடக்குமுறை நடவடிக் கை ஆகும். இதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழ் இனத்திற்கும், தமிழ் ஈழ மக்களுக்கும், தாய்த் தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இந்திய அரசு வஞ்சகமும், துரோக மும் தொடர்ந்து செய்யுமானால், இந்தியாவின் ஒருமைப்பாடு உடைந்து நொறுங் கும். சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்டதுபோல் இந்தியா பல நாடுகள் ஆகும் என்று எண்ணற்ற மேடைகளில் பேசியது மட்டும் அன்றி, இந்தியப் பிரதமரிடம் நேரிலும் கூறி உள்ளேன். எழுத்து மூலமாகவும் தந்து உள்ளேன்.

இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடர்ந்து இத்தகைய துரோகத்தை செய்து வருவதால், தமிழகத்தின் இளம் தலைமுறையினர் நெஞ்சங்களில் இந்திய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகிவிட்டது என்பதுதான் இன்றைய காலகட்டத்தின் எச்சரிக்கையாகும்.

இந்தக் கருத்தைத்தான் வழக்கறிஞர் இராமசாமியும், தோழர் பாண்டியனும் பேசி உள்ளனர். எனவே, இருவர் மீதும் போடப்பட்டுள்ள வழக்கை தமிழக காவல்துறை தள்ளுபடி செய்வதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

No comments:

Post a Comment