Monday, May 27, 2013

தீரர் வ.உ.சியும், நாமக்கல் கவிஞரும் வலியுறுத்திய மதுவிலக்கு!

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்,வீரத்தலைவர் வ.உ.சி (5.9.1872 - 18.11.1936)

1908 நெல்லை எழுச்சியில் நாட்டு விடுதலைக்காக சிறைசென்ற வ.உ.சி. (1908 - 1912) கண்ணனூர் சிறையில் சில காலம் இருந்தார். அப்போது ‘உண்மையான அறம்’ என்ன என்பதை விளக்கி 125 அதிகாரங்களில் ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களால் ஆன ‘மெய்யறம்’ எனும் நூல் எழுதினார்.அது 1914 இல் முதல் பதிப்பு வெளியாயிற்று வ.உ.சி. உயிரோடு இருந்த காலத்திலே மேலும் இரு பதிப்புகளைக் கண்டது.


‘மெய்யறம்’ 16 ஆவது அதிகாரம் மயக்குவ (போதைப் பொருட்கள்) விலக்கல்.

பாடல் 1: மயக்குவறிவினை மயக்கும் பொருள்கள் (மயக்குவ என்பவை அறி வினை மயக்கும் பொருட்கள் ஆகும்)

பாடல் 2: அவை கஞ்சா வபின் முதலாயின (அவை கஞ்சா, அபின் போன்றவை)

பாடல் 3:அறிவுதம் முயிரே யாதியேயுலகே (நம்முடைய உயிர் கடவுள் உலகம் எல்லாமாக அறிவுதான் உள்ளது)

பாடல் 4: அறிவினை மயக்குதலவற்றை யழித்தலே (அறிவினை மயக்குவது என்பது இம்மூன்றையும் அழிப்பது ஆகும்)

பாடல் 5: அறிவினை மயக்குவாரருமறம் புரிவர் (அறிவினை மயக்கும் பொருட் களை உட்கொண்டவர் தீய செயல்களைச் செய்வார்)

பாடல் 6: மயக்குவ சில பிணி மாய்க்குமென்றுண்பர் (இவ்வகைப் பொருட்கள் சில நோய்களை குணமாக்கும் என்று அதனை உண்பார்கள்)

பாடல் 7: மயக்காத வுண்டவை மாய்த்தலே யுத்தமாம் (இவற்றை உண்ணாமல் அந்த நோய்களைக் குணமாக்குவதே மிகச் சிறந்தது ஆகும்)

பாடல் 8: மயக்குவ வலியினை வழங்குமென்றுண்பர் (இவை வலிமையைக் கொடுக்கும் என்று சிலர் உண்ணுவர்)

பாடல் 9: வலியினை வழங்கல்போல் வலியெலாந் தொலைக்கும் (இவை வலிமையைக் கொடுப்பதுபோல வலிமை எல்லாம் அழிக்கும்)

பாடல் 10: ஆதலான் மயக்குவ வற்பமுங் கொண்டிடேல் (ஆதலால் அறிவினை மயக்கும் பொருட்களை சிறிதளவு கூட உண்ணுதல் கூடாது)

(மெய்யறம், வ.உ.சிதம்பரம்பிள்ளை நூலாசிரியர் ஷண்முக விலாசம் பிரஸ், அம்பாசமுத்திரம் 1930, பக்கம்10)

மெய்யறிவு

1915 இல் சென்னையில் வாழ்ந்த வ.உ.சி. எஸ்.வி.என்.பிரஸில் அச்சிட்டு ‘மெய் யறிவு’ எனும் நூலை வெளியிட்டார்.இதில் ஆறாம் அதிகாரம் ‘மறங்களைதல்’ ஆகும். அந்த அதிகாரத்தின் முதல் பாடல் இதோ...

“கொலை, களவு, கள், காமம், பொய்யெள்ளளவு
மிலையுளத்து மென்றக் காலென்று - மலையளவு
நோயும் பனிபோல நொந்தழியு மெய்ப்பொருளை
யாயுமறிவு மிகும்”


கொலையும், களவும், கள்ளும், காமமும், பொய்யும் என்றும் எள் அளவும் உளத்தும் இல்லை என்றக் கால், மலையளவு நோயும் பனிபோல நொந்து அழியும்; மெய்ப்பொருளை ஆளும் அறிவும் மிகும்.

ஆறாம் அதிகாரம் 4 ஆம் பாடல்

“கள்ளுண்ணக் காசளித்தல், கள்விற்றல், கள் ஆக்கல்
கள்ளுண்ணுந் தீயாரைக் காதலித்த - உள்ளறிவை
மாய்க்குமதன் றன்மையுள மற்றவற்றை யுட்கொள்ளல்
தாய்க்கு மடுங் கள்ளருந்தல் தான்”


கள்ளை உண்ணுவதற்காக ஒருவனுக்குப் பொருளைக் கொடுத்தலும், கள்ளை வைத்து விற்றலும், கள்ளை இறக்குதலும், (மதுவை) கள்ளை உண்ணுகின்ற
பாவிகளை நேசித்தலும், உள்ளத்தின் அறிவைக் கெடுக்கும்.

கள்ளின் குணத்தைக் கொண்டுள்ள கஞ்சா, அபின் முதலியவற்றை உட்கொள் ளுதலும், பெற்ற தாய்க்கும் வருத்தத்தை விளைவிப்பது கள்குடியே.கள் முத லிய மயக்க வஸ்துக்களை உண்ணுதல் மாத்திரம் கள் குடிப்பாவவென்று கரு தற்க.

அவற்றை உண்ணுதற்காகஒருவனுக்குக் காசு கொடுத்தல் முதலிய அனைத் தும் கட்குடிப்பாவமே என்பார் வ.உ.சி. (மெய்யறிவு, 1915, பக்கம் 52- 56)

நாமக்கல் கவிஞர்

நாமக்கல் கவிஞர் (19.10.1888 -24.8.1972) தமிழகத்தின் ஆஸ்தானக் கவிஞர்; விடு
தலைக் கவிஞர் தமிழக மேல்சபை உறுப்பினர். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர் கள் நடித்து பெரும்புகழ் பெற்ற ‘மலைக்கள்ளன்’ திரைக் கதையின் அசிரியர்.

நமது இயக்க ஏடான சங்கொலி என்ற பெயரிலேயே 1953 இல் ‘சங்கொலி’ எனும் கவிதையைத் தந்துள்ளார் நாமக்கல் கவிஞர்.

“சங்கொலி எழுந்தது சங்கடம் அழிந்தது 
தைரியம் கொள்வாய் தமிழ் மகனே!
திருட்டுகள் நீங்கிடும் தீயன நடுங்கிடும்
தீனர்க்கு அபயக்குரல் சங்கோசை
சூதரும் குடியரும் சுருக்கெனப் பயப்படும்
சுதந்திரச் சங்கொலி கேட்குதடா
மங்களச் சங்கொலி மகிழ்தரக் கேட்குது
மயக்கம் விட்டெழுந்தினி மறைபாடு”


என்று சங்கொலித்த நாமக்கல் கவிஞரின் மதுவிலக்கு பற்றிப் பாடல்கள் இதோ:

குடிப்பதைத் தடுப்போம்

குடிப்பதைத் தடுப்பதே கோடி கோடி புண்ணியம்
அடிப்பினும் பொறுத்து நாம் அன்பு கொண்டு வெல்லுவோம்.
மக்களை வதைத்திடும், மனைவியை உதைத்திடும்
துக்கமான கள்ளினைத் தொலைப்பதே துரைத்தளம்
பித்தராகி ஏழைகள் பேய் பிடித்த கோலமாய்ப்
புத்தி கெட்டுச் சக்தியற்றுப் போனது இந்தக் கள்ளினால்
பாடுபட்ட கூலியைப் பறிக்கும் இந்தக் கள்ளினை
வீடுவிட்டு நாடு விட்டு வெளியிலே விரட்டுவோம்.


கஞ்சியின்றி மனைவி மக்கள் காத்திருக்க வீட்டிலே
வஞ்சமாகக் கூலி முற்றும் வழிபறிக்கும் கள்ளினை
மெய் தளர்ந்து மேனிகெட்டுப்போனது இந்தக் கள்ளினால்
கை ஒடுக்கங், கால் ஒடுக்கங் கண்டது இந்தக் கள்ளினால்
தேசமெங்கும் தீமைகள் மலிந்தது இந்தக் கள்ளினால்,
நாசமுற்று நாட்டினர் நலிந்தது இந்தக் கள்ளினால்
குற்றமற்ற பேர்களும் கொலைஞர் ஆவார் கள்ளினால்
கத்திகுத்துச் சண்டைவேறு கள்ளினால் விளைந்தவே
குற்றமென்று யாருமே கூறும் இந்தக் கள்ளினை
விற்க விட்டுத் தீமையை விதைப்பது என்ன விந்தையே!
மோட்டார் ஓட்டிகளுக்கு

போதை ஊட்டுகிற எதையும் - உண்டால்
போகும் வழி அறிவு சிதையும்
காதைக் கண்ணைமிக அடைக்கும் - காரைக்
கவிழ்த்து மண்டைகளை உடைக்கும்
என்று மதுவின் தீமையை மோட்டார் ஓட்டிகளுக்குப்பாடலாகத் தந்தவர் நாமக் கல் கவிஞர். (நாமக்கல் கவிஞர் பாடல்கள், தணிகை உலக நாதன் தொகுப்பு, சென்னை, 1960, பக்கம் 176-177 - 396)

குடி, போதை வஸ்துக்களின் வருமானம் மிகவும் ஈனமான ஒரு வரிமுறை என்றார் அண்ணல் காந்தியடிகள், (மகாத்மா காந்தி நூல்கள் ஏழாம் தொகுப்பு பக்கம் - 677)

‘மெய்யறம்’ ‘மெய்யறிவு’ நூல்கள் வாயிலாக மதுவிலக்கை வற்புறுத்திய
தீரர் வ.உ.சி.

காந்தியின் வழியில் ‘குடிப்பதைத் தடுப்போம்’ என முழங்கியவர் நாமக்கல்
கவிஞர்.

தமிழர் தலைவர் வைகோ

நாட்டுக்கு உழைத்த தீரர் வ.உ.சி., நாமக்கல் கவிஞர் போன்ற பெருமக்கள் வழி யில் நாட்டுமக்களின் நலனில் நிதமும் அக்கறை கொண்டு ஓய்வறியாது உழைத்து வரும் தமிழர் தலைவர் வைகோ அவர்களின் “முழு மதுவிலக்கு அதுவே நமது இலக்கு” கொள்கை வெற்றி பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை.



நன்றிகள் 

கட்டுரையாளர் :- செ.திவான்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment