Tuesday, May 14, 2013

திராவிட இயக்கத்தினைத் தூக்கி நிறுத்தும் ஆற்றல் மிக்கவராக வைகோவைப் பார்க்கிறேன்! -புலவர் புலமைப்பித்தன்

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில்,தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப்பிரச்சார நடைப்பயணம், ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற
பொதுக் கூட்டத்தில் புலவர் புலமைப்பித்தன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் 
நீதிக்கு இது ஒரு போராட்டம் 
நிச்சயம் உலகம் பாராட்டும் 

என்று என்னை ஆளாக்கிவிட்ட அன்புத் தலைவர், என் உயிர் அணுக்களில் எல்லாம் நிறைந்திருக்கின்ற அண்ணன் புரட்சித் தலைவர் அவர்களுக்காக 1973 ஆம் ஆண்டு நான் இந்தப் பாட்டை எழுதினேன். ஆனால்,நாற்பதாண்டு காலம் கழித்து என் அருமை அண்ணன் புரட்சிப் புயலுக்கும் இந்தப் பாட்டு பொருந்தும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

நடைப்பயணத்தை முடித்து வைப்பதற்கு, வருமாறு என்னை அழைத்தார். இல்லை... இல்லை... அன்புக்கட்டளையிட்டார். அன்பர் பணிக்கு என்னை ஆளாக்கி விட்டு விட்டால், இன்பநிலை தானே எய்தும் பராபரமே என்பதைப் போல, நான் இந்தப் பணியை என்னுடைய மகிழ்ச்சிக்குரிய பணியாக ஏற்று வந்திருக்கிறேன். நம் கழகத்தினுடைய அவைத்தலைவரைப் பாராட்டி, அவரு டைய பிறந்த நாள் விழாவை அறிவித்து,அவருக்கு என் அன்புச் சகோதரர் வைகோ அவர்கள் பொன் ஆடை அணிவித்தார்கள்.

எனக்கும், அருமை துரைசாமி அவர்களுக்கும் ஏறத்தாழ அறுபத்து ஓராண்டு கால நட்பு. 1952 ஆம் ஆண்டிலே இருந்து கோவையிலே இருக்கிற நகர கழக
அலுவலகத்தில் நாங்கள் சந்திப்பது வழக்கம். அப்போது அவர் சிறிய தாடி வைத் துக் கொண்டு இருந்தார்.உடுமலை ப.நாராயணன் அவர்கள் கேலியும்
கிண்டலுமாக துரை எப்ப வந்தே என்று கேட்பார். அந்த நாட்களை எல்லாம் நினைவு படுத்து வதற்காக, இங்கே அவர் வந்து அமர்ந்ததைப் பார்க்கிறபோது, எனக்குள் மலரும் நினைவுகள்.

என் அருமைச் சகோதரர் வைகோவோடு இந்த மேடையில் வந்து அமருவது, எப்படி இருக்கிறது என்று கேட்டால், கருத்தொருமித்த காதலர்கள் இரண்டு பேர் சந்திப்பதைப் போல் நான் இதைக் கருதுகிறேன். அதற்கு நான் உண்மை யான காரணத்தைச் சொல்ல வேண்டும்.பல நேரங்களில் ஒரு ஆடவனும், பெண்ணும் காதலிப்பார்கள். கடிமணம் புரிந்திட வழியில்லாமல் பிரிந்து போ வார்கள். ஆம். பிரிந்து போவது காதலை வாழ வைப்பதாக இருக்கும். வெற்றி பெற்ற காதல் வாழ்வதில்லை. தோல்வியுற்ற காதல் சாவதில்லை.எங்கள் இரண்டு பேருக்கும் இருக்கிற இருபதாண்டு கால காதல் தோல்வியுற்ற காதல். அதனாலே இதுவரை சாகவில்லை.

ஒருவேளை 1993 ஆம் ஆண்டு என்னுடைய காதல் வெற்றி பெற்றிருக்கு மா னால், காதல் செத்துப்போயிருக்கும் நாங்கள் சேர்ந்திருப்போம். நல்லவேளை
நாங்கள் சேர்ந்திருக்க வில்லை. நான் வைகோ அவர்களை எப்படிப் பார்க் கிறேன் என்றால், எனக்கு அண்ணன்மார் இரண்டுபேர். அண்ணன் தம்பிகள்
மூன்று பேராக இருந்தது, 1966 இல் நான்கு பேராக மாறினோம். புரட்சித் தலை வரை சந்தித்த பின் அவர் என்னைத் தம்பியாகத் தத்தெடுத்துக் கொண்டார்.
அதனால் நான்கு பேர் நாங்கள். 

அதற்குப் பின்னர் எங்கிருந்தோ ஒருவன் வல்வெட்டித்துறையில் இருந்து வரு கிறேன் என்று வந்தான் 1981 ஆம் ஆண்டு. அவர் என் வீட்டிற்கு வந்தபோது சந் தித்தேன். என்னுடைய வலது கரத்தால், அவருடைய வலது கரத்தைப் பிடித்து,
தம்பி, எனக்கு ஜன பலம் இல்லை. பண பலம் இல்லை. ஆனால் மன பலம் இதைக்காட்டிலும் அதிகமாக இருக்கிறது. பிடித்த கையை விட மாட்டேன் என் று சொன்னேன். நான் எந்தக் காலமும் அதை விடவில்லை. நாளையும் விட மாட்டேன்.

எனக்கு 78 வயது ஆகிறது. தந்தை பெரியார் நீதிமன்ற அவமதிப்புக்காகப் போய் நின்றபோது அவருக்கு வயது 78. இப்போது நான் எப்படிக் கருதுகிறேன் என் றால், நாங்கள் ஐந்து பேராக இருந்தவர்கள் இப்போது என்னுடைய அருமைச் சகோதரர் வைகோவைச் சேர்த்து அண்ணன் தம்பிகள் ஆறு பேராக இருக்கி றோம். அதனால் என்னுடைய குடும்பத்தில் ஆறு மகன்கள்.நாங்கள் ஈரோட் டில் வந்து சந்திக்க வேண்டும் என்பது, வைகோ செயல். உங்களுடைய செயல்,
நான் இங்கே வருவதைப் பெருமையாகக் கருதுகிறேன்.உலகத்தில் இருக்கிற தமிழர்களுக்கெல்லாம் தலைநகரம் இந்த ஈரோடு. தொண்டு செய்து பழுத்த பழம்; தூய தாடி மார்பில் விழும்; மண்டைச் சுரப்பை உலகு தொழும்; மனக் குகை யில் சிறுத்தை எழும் என்று எழுந்த என் தந்தை பெரியார் பிறந்த பூமி.

மலையளவு எவ்வளவு அவ்வளவு நிலைகுலையா மனமும் -ஆழி
அலையளவு எவ்வளவு அவ்வளவு கரையறியா அறிவும்
வானின் நிலையளவு எவ்வளவு அவ்வளவு நெடிதுயர்ந்த
சால்பும்-சொல்ல
இணையளவு வைத்தே இவன் பெருமை இவ்வளவு

என்று நான் பெரியாரை காவியமாகப் பாடியவன்.

அள்ளப் பழுத்த அழகுமுகத்தில்
வெள்ளைத் தாடி விரிந்து கிடக்க
கருப்புடை தரித்த
சிவப்பு ஞாயிறு
முத்தமிழ் நாட்டின் மக்களுக்கெல்லாம்
மொத்தமாய்க் கிடைத்த முகவரியே

நீ ஒருவன் மட்டும்
உதித்திருக்காவிடில்...

கருப்பைக்குள்ளே
தமிழரின் கழுத்தை சுருக்குப் போட்டு
தொங்கவிட்டிருப்பர்

என்று பெரியாரைப் பற்றி எழுதினேன்.

நான் என்னுடைய பதின்மூன்றாவது வயதில் கருப்புச் சட்டை போட்டவன். இப்போதும் கருப்புச் சட்டைக் காரன். எப்போதும் சுயமரியாதைக்காரன். நான் வாழ்ந்து முடிகிற வரை அல்ல. செத்து விடுகிறபோது கூட என் தலை சாயக் கூடாது என்கிற சுயமரியாதைக் காரன்.பெரியாரை வழிபடுவது, பெரியாரை வணங்குவது என்பது எனக்குக் கிடைத்த பெரிய மரியாதை.பெரியாரின் தொண் டன் என்பதைக் காட்டிலும், இன்றைக்கு என்னிடத்தில் பட்டம் இல்லை, பதவி
இல்லை, விருது இல்லை வேறு எதுவும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

தந்தை பெரியாரைவிட்டு, பேரறிஞர் அண்ணா பிரிந்துவந்த பின்பும் கூட, நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் பெரியார் என்று அண்ணா சொன்னார்.
சொர்க்கவாசல் படப்பிடிப்புக்கு கோவைக்கு வந்திருந்த போது அண்ணா, பெரி யாரைப் பற்றிச் சொன்னார், அப்போது திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தி ருந்தது.அவர் சொன்னார், பெரியார் எங்களைத் திட்டுகிறார்,பெரியார் எங்க ளைக் கடுமையாகத் தாக்குகிறார் என்று நண்பர்கள் பலர் சொல்கிறார்கள், அருமை நண்பர்களே,தாய் யானை தான் பெற்ற குட்டியைக் காலால் போட்டு
மிதிக்கும். உதைக்கும். காரணம், தான் பெற்ற குட்டியைத் தானே மிதித்துக் கொன்றுவிடவேண்டும் என்பதல்ல. 

வனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய மற்ற மிருகங்கள் தாக்கும்போது எதிர்கொள்கிற பலத்தை, தாங்கிக் கொள்கிற பக்குவத்தைப் பயிற்சியைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான், தனது குட்டியை தாய் யானை காலால் மிதிக் கிறது. அதுபோலத்தான் பெரியார் எங்களைத் தாக்குகிறார் என்றார். எப்படி தனது குட்டியைத் தாய் யானை போட்டு மிதிக்கிறதோ, அப்படி மாற்றுக் கட்சிக் காரர்கள் எங்களைத் தாக்குகிறபோது, அதைத் தாங்கிக்கொள்கிற பக்குவத்தை, பயிற்சியைப் பெற வேண்டும் என்பதற்காக பெரியார் எங்களைத் தாக்குகிறார். எங்களை அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அல்ல என்று அண்ணா சொன்னார்.

பெரியாரையும் அண்ணாவையும் இந்தத் தமிழ்ச்சமுதாயம் போற்றிப் பாது காத்து வருகிறது. நான் இன்று சொல்கிறேன். எவன் ஒருவன் இந்த நாட்டுக் காக நடக்கிறானோ, அவனுக்குப் பின்னால் நாளை நாடு நடக்கும். நான் சொல் வது ஏதோ சகோதரர் வைகோவை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்துப் பார்ப்பதற்காக அல்ல.

அது ஐந்துமுறை ஒரு மனிதன் உட்கார்ந்து அழுக்குப்பட்டுப்போன நாற்காலி. அந்த நாற்காலியா? உனக்கு. நான் நீ நடந்துவருவதைப் பார்க்கிற போது,கோ சி மின் எனது நினைவுக்கு வருகிறார். கோ சி மின் ஆக உன்னை நான் பார்க்கி றேன் . மாபெரும் விடுதலை வீரன் கோ சி மின் ஐ பார்க்கிறேன். அவன் ரஷ்யா வுக்கு கோபி பாலைவனத்தின் வழியாக கால் கொப்பளிக்கக் கொப்பளிக்க நடந்துபோனான். கண் புண்ணாகிப் போனது, குகையிலே படுத்துக்கொண்டு உற்றுப் பார்த்து உற்றுப்பார்த்து வெளிச்சத்தை வரவழைத்துக் கொண்டான். 

அவன் சீனாவில் இருந்து வியட்நாம் நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறான். வியட்நாம் எல்லைக் கல் வருகிறது. அதைப் பார்த்து ஆவேசப்பட்டு, உணர்ச்சி வசப்பட்டு கீழே படுத்து, வியட்நாம் மண்ணை முத்தமிட்டு விட்டு, ஒரு பிடி மண்ணை எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறான். அவன் அந்த நாட்டினுடை ய அதிபராக வருகிறான். மறுநாள் கொடியேற்றுவிழா. அதிபராகப் பதவி யேற் றுக்கொள்ளப் போகிறான்.

அந்த முதல் நாள் இரவு அவனுக்கு நல்ல சட்டை இல்லை. என்ன செய்வது என்று கேட்கிறபோது சொல்கிறான், ஒரு காக்கி சட்டையும், காக்கி பேண்டும்
தைத்துக் கொண்டு வாருங்கள் என்று சொல்கிறான்.அதைப் போட்டுக் கொண் டு தான், அதிபராக பதவியேற்றுக் கொண்டான் கோ சி மின். அவன் ஒரு நாள் தன் நண்பர்களை அழைத்து வயலில் இருக்கக் கூடிய ஒரு குடிசையைக் காட் டுகிறான். பார்த்தீர்களா நண்பர்களே வியட்நாம் அதிபருடைய அரண்மனை யை என்று. அப்பொழுது இன்னொன்றைச் சொல்கிறான், நான் இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டுமானால் ஐந்து நிமிடமே போதும் அதற்கு மேல்
தேவையில்லை என்கிறான்.

நான் இதைச் சொல்வதற்குக் காரணம் என்னுடைய சகோதரர் வைகோவை சேகுவேராவைப் போல் பார்க்கிறேன். கோ சி மின்னாகப் பார்க்கிறேன்.27 ஆண் டுகள் இருள் சிறையில் இருந்த நெல்சன் மண்டேலாவாகப் பார்க்கிறேன். அதற்கு மேல் ஆயிரம் மடங்கு எட்டாத உயரத்தில் நின்றுகொண்டு இருக்கிறா னே ஒரு மாவீரன். அந்த மாவீரன் தம்பி பிரபாகரனுடைய அடுத்தத் தளபதியாக நான் பார்க்கிறேன்.

நமக்குத் தேவை ஒரு மாநிலத்தினுடைய முதலமைச்சர் பதவி அல்ல. நான் உங்களுக்கு என் அருமைச் சகோதரர் வைகோவை சாட்சி வைத்துக் கொண்டு சொல்கிறேன்,தமிழ்ச் சமுதாயம் உலகமெங்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. தந்தை பெரியார் 1947இல் சொன்னார், இது சுதந்திரநாள் அல்ல, துக்கநாள் என் றார். நான் இப்பொழுது சொல்கிறேன், 1947 ஆகஸ்டு 15 என்பது தமிழனுக்கு வந்த துக்கநாள்.துயரநாள்.தந்தை செல்வா ஈழத்தமிழருக்காக உதவி நாடி வந்த போது பெரியார் சொன்னார், நானே ஒரு அடிமை. ஒரு அடிமை இன்னொரு அடி மைக்கு எப்படி உதவுவது? என்று கேட்டார்.

உலகத்தில் பத்து கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். எல்லா நாடுகளிலும் அவர் கள் அடிமைகள்தான். 1986 ஆம் ஆண்டு பிஜூ தீவுக்குச் சென்று இருந்தேன்.அங் கே கரும்புக் காடுகளில் பாடுபடுகிறவர்கள் தமிழர்கள். 

நாட்டை நினைப்பா ரோ? -எந்த 
நாளினிப் போயதைக் காண்பதென்றே யன்னை
வீட்டை நினைப்பாரோ? -அவர்
விம்மி விம்மி விம்மி விம்மி யழுங்குரல்
கேட்டிருப் பாய்காற்றே! -துன்பக்
கேணியிலே யெங்கள் பெண்க ளழுதசொல்
மீட்டு முரையாயோ? -அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டுப் போயினர்....

என்று பிஜூ தீவில் இருக்கிற நம்முடைய தமிழர்கள் குறித்து பாரதி பார்க்கா மல் பாடினான். நான் போய்ப்பார்த்துவிட்டு அழுதேன். ஒரு மாதம் பிஜூவில்
இருந்தேன். தமிழர்கள் அனைவரையும் பார்த்தேன்.எல்லோரும் கூலிகள், கொத் தடிமைகள். உலகம் எங்கும் தமிழன் சுதந்திரமாக இல்லை.

நான் உங்களைக் கேட்க விரும்புவது, இந்த மது இருக்கிறதே, மதுவுக்கும் மனி தன் அடிமையாகிறான்; மதத்துக்கும் மனிதன் அடிமையாகிறான்; இன்னொரு
இனத்துக்கும் அடிமையாகிறான். மதுவைக் கேவலமாகச் சொல்வதற்கு அக நானூறில் ஓர் அருமையான பாடல் காட்சி இருக்கிறது. ஒரு நாள் தலைவன் வீட்டை விட்டுப் போய், விடியற்காலை வருகிறான். போகக் கூடாத பரத்தை யர் வீட்டுக்குப் போய்விட்டு வருகிறான். காலையில் தலைவி கோலம் போட் டுக் கொண்டு இருக்கிறாள். வீட்டுக்குள் ஒருவர் வருவதைப் பார்க்கிறாள், பாதத்தைப் பார்த்தவுடனே தனது கணவன் வருகிறான் என்று தெரிந்து கொண் டு நிமிர்கிறாள், அவன் தலைகுனிகிறான்.தலைவி நிமிர்ந்து பார்க்கிறாள்.தலை வன் தலைகுனிகிறான். அவள் பார்த்துவிட்டுச் சொல்கிறாள்....

நீ எப்படிப்பட்ட ஊரைச் சேர்ந்தவன் தெரியுமா? செந்நெல் வளர்ந்திருக்கும். கன் னல் அளவுக்கு செந்நெல் வளர்ந்திருக்கும். அந்த செந்நெல்லை அறுத்து அடித் த அலுப்பு தீருவதற்காக, களைப்பு தீர்வதற்காக கள்ளை குடம் குடமாக எடுத் துக்கொண்டு போகிறான் ஒருவன். கள்ளை ஏற்றிக்கொண்டு போகிற வண்டி யினுடைய சக்கரம் சேற்றில் சிக்கிக்கொள்கிறது.சேற்றில் இருந்து சக்கரத்தை எப்படி மீட்பது என்று பார்க்கிறபோது, பக்கத்தில் முற்றி வளர்ந்திருக்கிற கரும் புக் காட்டைப் பார்க்கிறான். முற்றி விளைந்து இருக்கிற கரும்புகளை வெட்டி கத்தையாகக் கட்டி சக்கரத்திற்குக் கீழே வைத்து வண்டியை நெம்பு கிறான்.

கள் மயக்கத்தைத் தருவது, அறிவை அழிப்பது.ஒழுக்கத்தைக் கெடுப்பது. அப்ப டிப்பட்ட கள்ளை அருந்துவதற்காக,தொடக்கத்தில் இருந்து கடைசி கணு வரை இனிப்பைத் தருகிற கரும்பை அல்லவா வெட்டி கத்தையாகக் கட்டி வீணாக்கு கிறான்.பரத்தையர் போன்ற கள்ளைக் குடிப்பதற்காக சகதிக்குக் கீழே இட்டுச் செல்கிறார்கள் உங்கள் ஊர்க்காரர்கள். அந்த புத்தி தானே உனக்கும் இருக்கும் என்றாள்.

கணிகையும் கள்ளும் ஒன்றுதான். மதுவிலக்குக்காக ஆறு பாடல்களை நான் எழுதினேன். கஞ்சிக்கு இல்லாத ஏழைத் தாய்கள் கதையைக் கேளம்மா? எங்க கண்ணீர் விட்ட காசு பணம்தான் நாட்டுக்கு வேணுமா? என்ற பாடலை நான் தான் எழுதினேன். அதுமாதிரி ஆறு பாடல்கள் எழுதுகிறபோது, வைகோ என் பது பெயர்ச்சொல் அல்ல, தத்துவம் என்று எழுதினேன். நான் எதற்காகவும், யாருக்காகவும் முகத்துதி பாடுகிற ஆள் இல்லை.

1978ஆம் ஆண்டு எனக்கு வேண்டிய ஒரு தம்பி அன்றைக்கு அமைச்சராக இருந் தார். அவர் என்னை அண்ணே நீங்க கொஞ்சம் வாங்க என்று அழைத்தார். நான், அவரிடம் தம்பி அடுத்தவேளை சோற்றுக்கு ஆளாகிற அளவுக்கு தலைவர் என்னை விட்டு விட்டுப் போகவில்லை. அப்படியே விட்டு விட்டுப் போயிருந் தால் கூட நான் பட்டினி கிடந்து சாவேனே தவிர, அந்தப் பக்கம் வரமாட்டேன் என்று சொன்னேன்.நான் எதையும் இழப்பதற்குத் தயாராக இருக்கிறவன். பண மும் பதவியும் கொள்கை கோட்பாடுகளைக் கொன்றொழிக்கும் கொலைக் கரு விகள் என்று நான் எழுதியவன்.

அதனாலே இந்த மதுவிலக்கை வலியுறுத்துவதற்காக, தந்தை பெரியார் அவர் கள் தன்னுடைய ஐநூறு தென்னை மரங்களை வெட்டிவிட்டார்.அண்ணா அவர் கள் ஒருமுறை எழுதுகிறார், கொண்டை இருந்தால் அல்லவா செண்டு கேட் கும் என்று.

காந்தியடிகளிடத்திலே ஒரு முறை எதற்கு தேவையில்லாமல் இந்த மது விலக்கை தோளில் போட்டுக் கொள்கிறீர்கள் என்று கேட்டார்கள். அவர் பதில் சொன்னார்,மதுவிலக்கை வைத்துக்கொள்ள வேண்டுமா? இல்லை விட்டுவிட வேண்டுமா என்று முடிவு எடுக்கின்ற அதிகாரமும் உரிமையும் எனக்கு இல் லை. ஈரோட்டைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்குத்தான் உண்டு என்று. ஒரு வர் கண்ணம்மை, இன்னொருவர் நாகம்மை.

நான் சொல்கிறேன், வைகோவின் இந்த மதுவிலக்கு எதிர்ப்புப் பிரச்சார நடைப் பயணம் கைவிடப்பட வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய
வேண்டிய பொறுப்பு இங்கே இருக்கிற என் தங்கைமார்களுக்குத்தான் உரியது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



எதைப்பற்றியும் கவலைப்படாமல், எதையும் எதிர் பார்க்காமல், எந்த மனிதன் சமுதாயத்திற்குப்பாடுபடுகிறானோ அந்த மனிதன் தான் உண்மையான மனி தன். செல்வச் சீமானாக தந்தை பெரியார் பிறந்தார்.சாதாரண மனிதராக இருந் தார். திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்களும் தங்குகிற இடமாகஅவ ருடைய மாளிகை இருந்தது. ஆனால், அவர் பரதேசி கோலத்தோடு திரிந்தார்.

மேடையில் சக்கர நாற்காலியில் ஏறுகிற பெரியாரைப்பார்த்திருக்கிறேன். அவர் சக்கர நாற்காலியில் வந்து அமர்கிறபோது பக்கத்தில் இருந்து பார்த்தி ருக்கிறேன். அம்மா அம்மா என்று முனகிக் கொண்டு இருப்பதைப் பார்த்தேன். அப்படிப்பார்க்கிறபோதெல்லாம் இந்தக்கிழவன் எதற்காக இப்படி அலைகிறான் என்று கவலைப்பட்டிருக்கிறேன். கண்ணீர் விட்டிருக்கிறேன்.தந்தை பெரியார் பெரிய செல்வச் சீமானாகப் பிறந்து பரதேசியாக அலைந்தவர். எதற்காக என்று கேட்டால், இந்த நாட்டில் இருக்கிற பரதேசிகளைக் காப்பாற்றுவதற்காக. அவர் வெளிப்படையாகச் சொன்னார்.உண்மையைச் சொல்வதில் என்ன தவறு?

அண்ணாவின் பேச்சைப் பற்றி தந்தை பெரியாரிடம்,ஐயா, நீங்கள் பேசுவதைத் தானே அண்ணாவும் பேசுகிறார். ஆனால், அண்ணா பேசுகிறபோது அதை ஆமோதிக்கிறார்கள். நீங்கள் பேசுகிற போது, அதை ஒப்புக்கொள்வ தில்லை யே, என்ன காரணம்? என்று ஒரு நிருபர் கேட்கிறார். நான் தற்குறி, அண்ணா மெத்தப் படித்த மேதை என்று சொல்கிறார் பெரியார். எனக்கு அவ்வளவு சுலப மாகச் சொல்லத் தெரியாது.உதாரணத்துக்கு விதவையை நான் முண்டச்சி என்று சொல்வேன். ஆனால், அவர் எப்படிச் சொல்வார் என்றால், வாழ்விழந்த வனிதாமணி என்று சொல்லி இருப்பார். இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றுதான். நான் முண்டச்சி பொம்பளை என்று சொன்னதை, அண்ணா அவர்கள் வாழ்வு இழந்த வனிதாமணி என்பார். நான் கொஞ்சம் கடுமையாகச் சொல்வேன். அவர் இங்கிதமாக, இனிமையாகச் சொல்வார். அதனால் மக்கள் ஏற்றுக் கொள் கிறார் கள் என்றார்.

அண்ணா அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறபொழுது,பெரி யார் குழந்தையைப்போல விமான நிலையத்தில் உட்கார்ந்து அழுது கொண் டிருப்பதைப் பார்த்தேன். அந்த இரண்டு மாபெரும் தலைவர்கள் பிறந்த நாடு. ஆனால், 1969 ஆம் ஆண்டு என்னுடைய தம்பி கந்தசாமியிடத்தில், பிப்ரவரி 3 ஆம் தேதி என்றால், என்ன என்று கேட்டேன். என்ன ஏதாவது முக்கியமான நாளா என்று கேட்டான்.நான் சொன்னேன், அண்ணா இறுதி ஊர்வலம் போன
நாள் மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இறுதி ஊர்வலம் ஒரு மனிதனால் ஏற்பட்டது என்றேன்.

நான் இப்போது வெளிப்படையாகச் சொல்கிறேன்.எனக்கு நீண்ட நெடுங்கால மாக ஆற்றமாட்டாத மன அழுத்தம் என்னவென்று கேட்டால்? சுயமரியாதை
கெட்டுப்போய்விட்டது. சுயமரியாதைச் சுடர்களாக நெஞ்சில் பற்றி நடக்க வைத்த இந்த திராவிட இயக்கம் பட்டுப்போய்விட்டதே, கெட்டுப்போய் விட்ட தே என்று நான் கருதியிருந்தபோது, கொஞ்ச காலமாக என் வாழ்க்கையில்

முழுமை நிலா அழகு நிலா முளைத்தது விண்மேல்,
முழுமை நிலா அழகு நிலா முளைத்தது விண்மேலே
அது பழமையிலே புது நிழல் பாய்ந்தெழுந்தது போலே

-என்று பாரதி தாசன் சொன்னதைப் போல,

பட்டுப்போன, கெட்டுப்போன என்னுடைய உயிர் நரம்புகளில் ஓடிக்கொண்டி ருக் கிற இந்த திராவிட இயக்கத்தினுடைய அடையாளச் சின்னமாக பழையபடி
தூக்கி நிறுத்துகிற ஆற்றல் மிக்க மனிதராக, அறிவுள்ள மனிதராக நான் அருமைச் சகோதரர் வைகோவை மட்டும்தான் பார்க்கிறேன்.

நான் இந்தப்பயணத்தை முடித்து வைக்க வரவில்லை.தொடங்கி வைக்க வந்தி ருக்கிறேன். நான் 2010 ஆம் ஆண்டு என் தம்பி வருவான் என்று ஏழு பாடல்கள்
பதிவு செய்து வெளியிட்டேன். அதில் 

என் தம்பி வருவான்
தம்பி வருவான்
நம்பி இருங்கள் தோழர்களே!
தடைகள் யாவும் உடைந்து போகும்
தருணம் இதுதான் தோழர்களே!
ஒரு புலியின் உறுமல் கேட்கிறது!
அது போருக்கு ஆயத்தமாகிறது
என் தம்பி வருவான்
தம்பி வருவான்
நம்பி இருங்கள் தோழர்களே!

என்று எழுதினேன். அதில் ஒரு சரணத்தில் நான் எழுதியிருக்கிறேன். நான்கு முடிந்தால் முடிந்ததுதான்.ஐந்து தொடங்காதா? அந்த ஐந்து தொடங்கும் வேளை யில் இந்த அவனியே நடுங்காதா? என்று நான் எழுதினேன். நாளைக்கு ஐந்து தொடங்கும். அதற்கான நீண்ட நெடிய பயணத்தைத் தொடங்க தன்னை
ஆயத்தமாக்கிக் கொள்ள என் தம்பி வருகிறார். அந்தப்பயணம்தான் மிகப் பெரிய பயணம்.

நான் எங்கள் இருவருக்கும் உள்ள காதலைப் பற்றிச் சொன்னேனே. என்னடா
காதலைப் பற்றிச் சொன்னாரே வேறு எங்கோ போய்விட்டாரே என்று நினைக் க வேண்டாம்.1983 ஆம் ஆண்டு ஒரு நாள் மதியம் நான் வைகோ அவர்களுடன்
தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.நான் அவரைத் தொடர்புகொள்ள
வேண்டும் என்று நினைத்ததற்குக்காரணம், அழுத்தம் கொடுத்தவர் அண்ணன் க.இராசாராம் அவர்கள், எனக்கு அழைப்பு விடுத்தார். நான் எதற்காக இவரைப் பார்க்க விரும்பினேன் என்றால்,மிக இன்றியமை யாத ஒன்று. 

தம்பி பிரபாகரன் மீதும், இராகவன் மீதும் விடுதலைப் புலிகள் இரண்டுபேர் மீதும் வழக்கு இருந்தது. பிளாட் இயக்கத்தைச் சேர்ந்த முகுந்தன் என்ற உமா பதி , குமரேசன், ஜோதீஸ்வரன் என்ற மூவர் மீதும் அந்தத் தரப்பில் வழக்கு இருந்தது. தம்பி மதுரையில் இருந்தார். தம்பி இராகவன் புதுக்கோட்டையில் இருந்தார். இவர்கள் மூன்றுபேரும் சென்னையில் இருந்தார்கள்.சென்னையில் இருந்தவர் களுக்கு நான் தான் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இடம் எடுத் துக் கொடுத்து இருந்தேன். அப்பொழுது வழக்கு முடிகிற சூழல். வழக்கு முடிகிற வரை இவர்களுக்குப் பாதுகாப்பு. வழக்கு முடிந்துபோய்விட்டால் இவர்கள் ஐந்து பேரையும் கொழும்புக்கு அனுப்பி விடுவார்கள். அப்படி அனுப்பிவிடுவது தான் பேராபத்து.

1974 ஆம் ஆண்டு அப்பொழுது ஒருவர் முதலமைச்சராக இருக்கிறார். அவர் தான் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் மூன்று பேரையும் கொழும்பு வெலிக் க டை சிறைக்கு அனுப்பி வைக்கக் காரணமானவர். அப்படி அனுப்பி வைத் தால், அதுபோன்ற ஆபத்து வேறொன்றும் இல்லை என்ற காரணத்தினால்அண்ணன் இராஜாராம் அவர்கள் அப்பொழுது அரசு வழக்கறிஞராக இருந்தவர் சொன்ன வற்றை என்னிடத் திலே அடிக்கடி சொல்லி வந்தார், வழக்கு இருக்கிறவரை
பாதுகாப்பு. வழக்கு முடிந்துவிட்டால் அவர்களை கொழும்புக்கு அனுப்பி வைத் துவிடு வார்கள். அதனால் கொஞ்சம் எச்சரிக்கை யாக இருங்கள். எப்படியாவது
பாதுகாக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.

நான் எல்லா கட்சித் தலைவர்களையும் சந்தித்தேன்.மார்க்சிஸ்ட் கட்சியினு டைய தலைவர் நல்லகண்ணு, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கல்யாணம், மூப்பனார், வீரமணி என்று எல்லோரையும் சந்தித்தேன். வீரமணி என்னைத் தேடிவந்து சந்தித்தார். அப்போது தி.மு.க.தரப்பிலே யாரைப் பார்த்துச் சொல் வது என்று வருகிற போது, ஒருவன் தன் கடமையை அங்கே சரியாகச் செய்து கொண்டிருந்தான். நான் மதியம் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்களைச்சந்திக்க வேண்டுமே , மாலையில் சந்திக்கலாமா? என்று
கேட்டேன். அண்ணே எங்கு சந்திக்கலாம் சொல்லுங்கள், நானே வருகிறேன் என்றார். காந்தி சிலைக்குப் பின்னால், கடற்கரை மணலில் அமர்ந்து பேசலாம் என்றேன். நான் அங்கு போவதற்கு முன்பே எனக்காக அவர் அங்கு காத்திருந் தார். நல்ல நேரம் என்று நான் நினைத்தேன். நான் போகிறபோது அவர் அமர்ந் திருந்தார். நான் வாஞ்சையோடு கையைப் பிடித்தேன்.

அங்கு உட்கார்ந்து ஒரு மணி நேரம் வெலிக்கடை சிறைச்சாலையில் தம்பி குட்டி மணி, ஜெகன், தங்கதுரை மூன்று பேருக்கும் எப்படி சித்திரவதை நடக் கிறது என்பதை எல்லாம் எடுத்துச் சொன்னேன். மூன்று பேருடைய ஆண் உறுப்பிலேயேயும் தோல் ஊசியைச் செலுத்துவார்கள். மூலாதாரத்தில் பெரிய இரும்புக் குழாயைச் சொருகி அவற்றை வெளியே எடுத்து சுவைக்கச் சொல் வார்கள். தலைகீழாகத் தொங்க விட்டு, கீழே மிளகாய்ப் பொடியைப் போட்டு, நெருப்பு வைத்து அந்த நெடியை முகரச் செய்வார்கள். மயங்கி விழுந்த பின்பு முகத்தில் தண்ணீரை ஊற்றுவார்கள். இப்படிப் பட்ட கொடுமை நடந்து கொண்டி ருக்கிறது.

ஒருகால் இவர்கள் ஐந்துபேரையும் அனுப்பினால் என்ன நடக்கும்? ஆகவே நான் உங்கள் தலைவரை வந்து பார்க்க வேண்டும், நீங்கள் சொல்லுங்கள் என் று ஒரு மணி நேரம் நாங்கள் யாரிடத்தில் சொன்னால் தகுதியானதோ அவரி டத்தில் சொன்னேன். சொன்ன போது எழுந்து நின்று என் கையைப் பிடித் துக் கொண்டு அண்ணே இதற்கா என்னை அழைத்து என்னிடத்தில் சொல்ல வேண் டுமென்று நினைத் தீர்கள் அதற்காக நான் நன்றி செலுத்துகிறேன் என்று சொன் னார்.மறுநாள் காலை கோபாலபுரத்துக்குப் போய் நான் சொன்ன அத்தனையும் ஒரு மணி நேரம் தமிழினத்தலைவரிடத்தில் சொல்லி இருக்கிறார். எல்லாவற் றையும் கேட்டு விட்டு, சரி நான் வரட்டுமா, கோபால்சாமி என்று அவர் காரில் ஏறிப் போய்விட்டார். இதை அவரே சொன்னார்.இதனை இதனால் இவன் முடிக் கும் என்றாய்ந்து, அதனை அவன் கண்விடல் என்று நான் யாரைத் தேர்ந்தெடுத் தேனோ? அந்த மனிதன் என்னைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு உயர்ந்தவன்.

அறிவாளி ஆற்றலாலே, செயல் திறத்தாலே,போர்க்குணத்தாலே. நான் இப் படிச் சொல்வது எனக்குப் பெருமையாக இருக்கிறது. வைகோ என்னைக்காட் டிலும் பத்தாயிரம் மடங்கு உயர்ந்த மனிதன் என்று பார்க்கிறபொழுது, எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மனம் நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஆறுதலாக இருக் கிறது. நான் இல்லாவிட்டால் பரவாயில்லை.இரண்டாண்டு காலமோ, மூன் றாண்டு காலமோ நான் போன பின்னாலும் இந்தத் தமிழ் இனத்தை மீட்பதற் குரிய பயணம் தொடரும் என்ற நம்பிக்கை நட்சத்திரமாக நான் அவரைப் பார்க்கிறேன்.

இந்தியத் தமிழகத்தில் இருக்கிற ஏழரைகோடி பேரும் அடிமைகள்தான். நாம் அடிமைகளாக இருப்பதாலேதான் இரண்டு இலட்சம் பேர் ஈழத்தில் படு கொலை செய்யப்பட்டபோது நம்மால் எதுவும் செய்ய முடிய வில்லை.கேரளக் கடலின் அருகே இரண்டு பேரைச் சர்வதேசக் கடல் எல்லையில் சுட்டு விட் டார் கள். சுட்டு விட்டதால், இத்தாலி மீது யுத்தம் நடக்கும் என்கிற அளவுக்கு ஆர்ப்பரிக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் நம்முடைய மண்ணிலே கச்சத் தீவில் சுட்டுக்கொல்லப் பட்டார்கள்.

இந்தியா தன்னைப் பாதுகாப்பதற்கு தமிழர்களை அழிக்கிறது. இது இயற்கை எழுதிய சட்டம். இயற்கை எழுதிய பாவம். ஆகவே, இந்தியாவிடத்தில் இருந்து
எப்படி நம்மைப் பாதுகாப்பது என்பதுதான் நான் உங்களிடத்தில் கேட்கிற கேள்வி.

1965 ஆம் ஆண்டு பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி வந்தார். ஐந்து இலட்சம் தாய கத் தமிழர்கள் வெளியேறுவதற்குக் காரணமாக இருந்தார். அகதிகள் ஆக்கப் படுவதற்கு, அனாதைகள் ஆக்கப்படு வதற்குலால்பகதூர் சாஸ்திரி காரணமாக இருந்தார். 1974 ஆம் ஆண்டு இந்திரா காந்தி வந்தார், கச்சத் தீவை தாரை வார்த் துக்கொடுத்தார். 1822 ஆம் ஆண்டு கச்சத் தீவுப்பகுதியை கிழக்கிந்தியக் கம் பெ னி இராமநாதபுரம் சமஸ்தானத்தோடு ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறது.நம் முடைய கச்சத் தீவை இலங்கையுடனான நட்பு வேண்டும் என்கிற காரணத் தால் தாரை வார்த்துக் கொடுத்தார் தமிழினத் தலைவர்.

1987 இல் ஏழாயிரம் பேரை கொன்று குவித்தான் ஒருவன். அமைதிப்படை என்ற பெயரில் ஆக்கிரமிப்பாளர்களை அனுப்பி வைத்தான். அனுப்பி வைத்த பின் னால் சமாதானப் பேச்சுக்காக தம்பி யாழ்ப்பாணம் மருத்துவக் கல்லூரிக்கு வருகிறபோது, அவரை சுட்டுவிடு என்று உத்தரவிட்டார்கள். உத்தரவிட்டவர்
தீட்சித். தீட்சித் சொன்னபோது இந்திய இராணுவத்தளபதி சொல்கிறான், நாங் கள் சமாதானக் கொடி ஏந்தி வருகிற வரை சுடமாட்டேன் என்று சொல்கிறார். அதற்கு தீட்சித் சொல்கிறான், இது என்னுடைய உத்தரவு அல்ல,மேலிட உத்த ரவு. இராஜீவ்காந்தியின் உத்தரவு. யார் உத்தரவாக இருந்தாலும் நான் இதைக் கேட்க மாட்டேன் என்கிறார்.

நான் அந்தப் புத்தகத்தில் எழுதினேன்.அமைதிப் படையிலேயும் இப்படி ஒரு
தர்மசீலன் இருக்கிறான். அவர் இருக்கிற திசை நோக்கி நான் தொழுகிறேன்
என்றேன். அதற்குப் பின்னாலே நம்முடைய பெண்களை, நம்முடைய தாய் குலத்தை மக்கள் பலபேரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிக் கொன்றார் கள் இந்திய இராணுவத்தினர்.

உத்தரபிரதேசத்தில் ஒரு பெண் வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொல்லப்பட்டாளே, டெல்லி அதிர்கிறது. ஆனால் என்னுடைய தலைவன், என் மன்னன் என்னை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறவன். அவன் சோறுபோடாமல் இருந் திருந்தால் நான் இறந்த இடம் கள்ளி முளைத்திருந்திருக்கும். அந்தப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.,இராஜீவ்காந்தி அவர்களிடத்தில் சொல்கிறார்,பேச முடிய வில்லை. முகமெல்லாம் வீங்கிப் போய் இருக்கிறது.கால் வீங்கிப் போய் இருக் கிறது.வார்த்தை சரியாக வரவில்லை. அவர் போய் சொல்கிறார்,எங்கள் பெண் களை கற்பழிக்கிறார்கள்.அதை மட்டும் நிறுத்தச்சொல்லுங்கள் என்று,கண்ணீர் மல்க புரட்சித் தலைவர் கேட்கிறார். நீ என்ன முட்டாள்தனமாக கற்பு கற்பு என்று பேசுகிறாய், ஒரு இராணுவம் இன்னொரு நாட்டிற்குச் செல்லும்போது, இதெல்லாம் சர்வ சாதாரணம் என்றான். திரிகோணமலையில் கால் போடுவ தற்காகத்தான். இப்போது வந்ததும் இந்தியாவின் பாதுகாப்புக்காகத்தான் இத் தனை பேரை கொன்று குவித்தார்கள்.

2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் இப்போது ஓய்வுபெற்றிருக்கிற வி.கே. சிங்கை இந்தியாவின் முப்படைத் தளபதியை இராஜபக்சே ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக கொழும்புக்கு அழைக்கிறான்.வி.கே. சிங் போகிறார், எதற் காக அழைத்தார் என்று கேட்டால், யுத்தசேனா விருது வழங்குவதற்காக அழைத்தார். யுத்த சேனா யாருக்கு வழங்க வேண்டும்? ஈழத்தில் நான்காவது போர் நடந்தபோது, சரத் பொன்சேகாவுக்கு அல்லவா வழங்க வேண்டும்?

ஆனால், இந்தியாவின் முப்படைத் தளபதி வி.கே.சிங்கை அழைத்து யுத்த சேனா விருது வழங்கி தங்கப் பதக்கம் வழங்கினான். அதற்கு என்ன காரணம்
என்று கேட்கிறபோது அவன் சொன்னான், நான்காவது ஈழப்போரின் இறுதி வெற்றிக்குக் காரணமானவர் வி.கே.சிங் என்று சொன்னான். நமது இரண்டு இலட்சம் மக்களைக் கொல்வதற்குக் காரணமானவன் இந்தியாவின் தலை மைத் தளபதி வி.கே.சிங் தான் என்பதனால் நான் மன்மோகன் சிங் அவர் களுக் கு கடிதமாக கட்டுரை எழுதினேன். என்னை இந்தியன் என்று சொல்வதற்கு நான் ஒன்றும் மானம் கெட்டவன் இல்லை என்று எழுதினேன். நான் இந்தியன் அல்ல. நான் தமிழன் மட்டுமே.

தம்பி எனக்கும் நீ ஒரு துப்பாக்கி கொடு
எப்படிச் சுடுவது கற்றுக்கொடு
முதுமையால் தளர்ந்த என் நாடி நரம்புகள்
உன்னை நினைத்தால் முறுக்கேறும்
முதுமையால் தளர்ந்த என் நாடி நரம்புகள்
உன்னை நினைத்தால் முறுக்கேறும்
பகை முற்றும் ஒழிந்துவிடும் தானடா -எனது
நெஞ்சில் இருக்கும் தம்பி எனக்கும் நீ ஒரு துப்பாக்கி கொடு
எப்படி சுடுவது என்று கற்றுக்கொடு என்று எழுதினேன்.

விழுவதெல்லாம் எழுவதற்கே தோழனே
தோல்வியெல்லாம் வெற்றிக்குத்தான் தோழனே
கடலின் அலைகள் விழுந்து விழுந்து எழுவதில்லையா?
நிலத்தில் விழுந்த விதைகள் முளைத்து எழுவதில்லையா?
அன்றைக்கு நாம் விழுந்தோம்
இன்றைக்கு நாம் எழுந்தோம்
நாளைக்கு நாம் நமது மண்ணில் விடுதலை பெறுவோம்
அழுதவனும் தொழுதவனும் அடிமையாகச் சாகிறான்.
எழுந்தவன் துணிந்தவன் இறந்து இன்னும் வாழ்கிறான்

முத்துக்குமார் வாழ்கிறான். அவனைப்போன்று இனத்துக்காக உயிர் தந்தவர் கள் வாழ்கிறார்கள். வாழ்வார்கள்.

புலவர் புலமைப்பித்தன் இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment