Sunday, May 26, 2013

தியாக வரலாறு படைத்த காசி ஆனந்தன் பாடல்கள் தமிழர் இல்லந்தோறும் ஒலிக்கட்டும்! -பகுதி 1

1987 யில் புலிகளை பற்றி நாடாளுமன்றத்தில் பேச கூடாது என தடை போட்ட கருணாநிதி , தடையை மீறி பேசிய வைகோ ...

கவிஞர் காசிஆனந்தனின் ‘தமிழ் எங்கள் உயிரினும் மேலாகும்’தமிழிசைக்குறு வட்டு வெளியீட்டு விழா, 25.10.2010 அன்று சென்னை இராணி சீதை மன்றத்தில்
நடைபெற்றது. குறுவட்டை வெளியிட்டு கழகப் பொதுச் செயலாளர் வைகோ
ஆற்றிய உரை வருமாறு:-

நாங்கள் கவரிமான் ஜாதி
நாய்போல்எஜமான் அடிகளை நக்கோம்
தீங்கு படைத்தவன் எங்கே
தேடி உதைப்போம் செருக்களம் வாடா
ஓங்கி முழங்குக தானை
உடைந்து நொறுங்கி சிதறுக விலங்கு
தூங்கி வழிந்தது போதும்
துள்ளி எழுக தமிழ்த்திருநாடே


என்ற, உணர்ச்சி ஊட்டும் கவிதைகளைத் தந்த காசி ஆனந்தன் அவர்களுடைய கவிதை குறுவட்டு வெளியீட்டு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகின்ற, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர், தரணி எங்கும் வாழும் தன்மானத் தமிழர்களின் நெஞ்சிலே போற்றுதலுக்கு உரிய தனி இடம் பெற்று இருக்கின்ற ஆருயிர் அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களே, கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் குறிப் பிட்டதைப்போல அந்தக்கவிதைக்கே உயிர் ஊட்டுகின்ற வகையிலே,நெஞ்சை
ஈர்க்கின்ற கானக் குரலில் காலத்தால் அழியாத பாடல்களைப்பாடி இருக்கின்ற பெருமதிப்பிற்கு உரிய லோகநாதன் மகராசன் அவர்களே, அனைத்து இந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கிய அணித் தலைவர், அரிய உரை ஆற்றி அமர்ந்து இருக்கின்ற அன்புச்சகோதரர் பழ.கருப்பையாஅவர்களே குறுவட்டினைப் பெற்றுப் பெருமை சேர்த்து இருக்கின்ற மதிப்பிற்கு உரிய ப.சா மிநாதன் அவர்களே,எனது இனிய தோழர், ஏறத்தாழ முப்பத்து ஐந்து ஆண்டுக் காலமாக தமிழ் ஈழ விடுதலைக் களத்திற்குத் துணையாக இருக்கின்ற ஓவியர் வீர.சந்தனம் அவர்களே, வாழ்த்துரை வழங்கிய சுந்தரேசன் அவர்களே, வர வேற்புரை ஆற்றிய அன்பிற்குரிய இளவழகன் அவர்களே, நன்றி சொல்ல இருக்கின்ற விடுதலை வேந்தன் அவர்களே, விழா சிறக்க அரும்பணி ஆற்றிய
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆருயிர்ச் சகோதரர் வேளச்சேரி மணிமாறன் அவர்களே, அன்பு டைய தாய்மார்களே, அருமைப் பெரியோர்களே, உணர்ச்சிபூர்வமான இந்த நிகழ்ச்சியிலே பங்கு ஏற்று இருக்கின்ற இளைஞர் பட்டாளத்தைச் சேர்ந்த
புலிப்போத்துகளே, செய்தியாளர்களே, ஒளிப்பதிவாளர்களே, ஊடக நண்பர் களே, சிரம் தாழ்ந்த வணக்கம்.

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும் காலத்தால் அழியாத கவி தைகளைத் தந்தவர்களைத் தமிழர்கள் போற்றுகின்ற தகுதி பெற்ற தன்மானக் கவிஞர் வரிசையிலே, வாழும் கவிஞராக நம் மத்தியிலே உலவிக்கொண்டு இருக்கின்ற கவிஞர் காசி ஆனந்தன் அவர்களுடைய பாடல்களுக்கு, இசை வழங்கி,பாடல்களைப் பாடி இருக்கிறார் மகராசன் அவர்கள்.

‘தமிழ் எங்கள் உயிருக்கும் மேலாகும், வாளாகும், வேலாகும்.’

‘இமயத்திலே இருந்து வடநாட்டான் பழித்தான்;
இளங்கோவின் அண்ணன் அவனை அழித்தான்’

என்ற பாடல் வரிகளை அவர் பாடுகிறபோது, அது ஊனில் உருகி உள்ளத்திலே பாய்கிறது. இந்தக் குறுவட்டிலே எட்டு பாடல்கள் இடம்பெற்று இருக்கின்றன.

நான் இந்தக் கூட்டத்தின் வழியாக, தமிழ்ச்சமுதாயத்தைக் கேட்டுக்கொள் கிறேன். ‘வீழ்ந்து கிடக்கின்ற இந்த இனம் எழ வேண்டும் என்பதற்காக, இந்தப் பாடல்கள் வீடுதோறும் ஒலிக்கட்டும்’ என்றார் அண்ணன் பழ.நெடுமாறன் அவர் கள். நீங்கள் செல்லுகின்ற மகிழுந்துகளிலே, நீங்கள் பயணம் செய்கின்ற வாகனங்களிலே இந்தப் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். மனம் சோர்வு அடைகின்ற வேளைகளில் எல்லாம் இந்தப் பாடல்களைக் கேட்டுப் பயன் பெறுங்கள்.


அழியாத கானங்கள்

புலம்பெயர்ந்த ஏதிலிகள் எனப்படும் ஈழத்தமிழர்கள் வாழுகிற ஐரோப்பாக் கண் டத்தில், ஆஸ்திரேலியாவில், கனடாவில், அமெரிக்காவில், விமான நிலையத் திலே நாங்கள் போய் இறங்கி, அந்த ஈழத்துத் தமிழ்த்  தோழர்களோடு பயணம் செய்கிறபோது, உடனடியாக அவர்கள் பாடல்களை ஒலிக்க விடுவார்கள். வீட் டிலும் அந்தப் பாடல். பயணம் செய்கின்ற அந்த மகிழுந்திலும் அந்தப் பாடல், எங்கும் கேட்டுக்கொண்டே இருக்கும். தூய தமிழிலே நிகழ்ச்சிகள் அவர்களு டைய ஒலிப்பேழைகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

ஆகவே, மகராசன் அவர்களே, திருச்சி லோகநாதன் மறைந்து விடவில்லை. இன்றைக்கும் திருமண வீடுகளில் ‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண் ணே’ என்ற அந்தப் பாடல் ஒலிக்கிறபோது, ஒரு குடும்பம் எப்படித் திகழ வேண் டும், மனையறம் எப்படித் திகழ வேண்டும் என்பதைச் சொல்லும் அந்தப் பாடல் மூலம் உங்களுடைய தந்தை வாழ்கிறார். அதைப்போல, நீங்களும் வாழ்வீர் கள். எத்தனை நூறாண்டுகள் ஆனாலும், இந்தத் தமிழ் இன மக்களுக்கும், தாய்த்
தமிழகத்து மக்களுக்கும் உணர்ச்சியை ஊட்டக்கூடிய இந்தப் பாடலை நீங்கள் பாடி இருப்பதால், இது காலத்தால் அழியாத கானமாக இருக்கும்.

புயல்கால ராகங்கள்

நான் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களுக்குத் தெரிவிக்கின்றேன். உங்களோடு நான் நாளும் உடன் இருக்கிறேன். நீங்கள் என்னோடு இருக்கிறீர்கள். உங்க ளுக்குப் புதிராக இருக்கக்கூடும். புலிகள் களமாடிய காலத்தில், 12 புலிகள் தீர் வில் மைதானத்திலே நெருப்பிலே வைக்கப்பட்டபோது, இந்தியப் படை அமை திப்படையாகச் சென்று அழிவு செய்த காலத்தில், தமிழ் ஈழத்தை அழிப்பதற் கான துரோகத்தை இந்திய அரசு அன்று செய்தபோது, அப்பொழுது நீங்கள் எழு திய பாடல்கள் ‘புயல் கால ராகங்கள்.’

அந்தப் பாடல்களைக் கேட்கிறபோதெல்லாம் நாடி நரம்புகளிலே ஓடுகிற குரு தியிலே ஒரு சூடு உணர்ச்சி, நெஞ்சிலே கவலை, கண்களிலே கண்ணீர் தோன் றும். அந்தப் பாடல்களைக் கேட்டவாறு நான் காரிலே போகிறபோது, இரவு, பகல் என பயணிக்கிறபோது அந்தப் பாடல்களைத்தான் கேட்பேன். கண்களில் இருந்து கண்ணீர் பொழிந்துகொண்டே இருக்கும்.

எத்தனை முறை வேண்டுமானாலும் அந்தப் பாடல்களைக் கேட்கலாம். அந்தப் பாடல்களை நீங்கள் எழுதினீர்கள். ‘எங்கள் தோழர்களின் புதைகுழியில் நாங் கள் மண் போட்டுச் செல்கின்றோம்; இவர்கள் சிந்திய குருதி, தமிழ் ஈழம் அமை வது உறுதி’ என்ற அந்தப் பாடல் உள்ளிட்ட, புயல்கால ராகங்கள் ஒலி நாடா முழுக்க முழுக்க அத்தனை பாடல்களும் காலம் எல்லாம் ஒலிக்கும். இனி எத் தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் ஈழ இலட்சியத்தை எந்த சக்தியாலும் அழிக் க முடியாது.எந்தத் துரோகத்தாலும் அழிக்க முடியாது.

களத்தில் கேட்கும் கானங்கள்

பாப்லோ நெரூடா சித்திரவதைக்கு உள்ளானார். ஆனால், தன் நாட்டின் விடு தலைக் கவிஞராக போற்றப்படுகிறார். உலகம் போற்றுகின்ற கவிஞராகப் பாராட்டப்படுகின்றார். நான் பாப்லோ நெரூடாவின் அத்தனைக் கவிதை களை யும் படித்து இருக்கிறேன். நான் குறையாகச் சொல்லவில்லை. தன் நாட்டின் அடிமை விலங்குகளை உடைப்பதற்கு தன் தாய் செத்துக்கிடக்கின்ற அந்தக்
காட்சியைக்கூட கவிதையாக வடித்தவன்தான்.ஆனால்,நம்முடைய இனத்திற் காக மிகைப்படுத்திச் சொல்லவில்லை. பாப்லோ நெரூடாவின் கவிதைகளை
விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது காசி ஆனந்தனின் கவிதைகள்.

‘எந்தப் படை வந்து அழிக்கும்?
புலிப்படை அவர்களைக் கிழிக்கும்’

எனும் ஒவ்வொரு சொல்லிலும் உணர்ச்சி பிறக்கும். வீரம் கொப்பளிக்கும். அப் படிப்பட்ட பாடல்களை, நீங்கள் தந்தீர்கள்.

அதைப்போலத்தான், ‘களத்தில் கேட்கும் கானங்கள்’.உங்களுடைய ஒரு பாட லைக் கேட்கிறபோதெல்லாம் எங்களை அறியாமல் கடந்தகாலச் சம்பவங்கள்
நெஞ்சிலே வந்து மோதும்.

அண்ணன் நெடுமாறன் வீட்டிலே, அவருடைய அலுவலகத்திலே மாவீரன் பிர பாகரன் வந்துபோன நாட்கள்... அதைப்போல விடுதலைப் புலிகள் வந்துபோன நாட்கள்... அதைப்போல எங்கள் இல்லத்துக்குப் பிரபாகரன் வந்துபோன நாட் கள்... உணவு அருந்திய நாட்கள்... மணிக்கணக்கில் இரவு பகலாக உரையாடிய
நாட்கள்... வீட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பேபி சுப்ரமணியம் வந்து உணவு அருந்தி விட்டுச் சென்ற நாட்கள்...வந்து போகும்.

அந்தப் புலிப்படை வீரர்களை வீட்டிலே வைத்துஇருந்தோம். நம் வீட்டுப் பெண் கள் தாராளமாக நடமாடலாம். உடன்பிறந்த அண்ணன் தம்பிகள் இருப்பதைப் போலத்தான் அவர்களை நம்பி நடமாடலாம். அப்படிப்பட்ட ஒழுக்கம் நிறைந்த
பிள்ளைகள். (கைதட்டல்)

போய் வருகின்றோம்.. நன்றி

உலகத்தில் எந்தப் புரட்சி இயக்கத்தை எடுத்துக்கொண்டாலும் சரி - பிரபாகரன் கட்டிக்காத்த ஒழுக்கம் வேறு எந்த இயக்கத்திலும் கிடையாது. (கைதட்டல்)
அதனால்தான் நீங்கள் எழுதிய பாடல், போய் வருகின்றோம், நன்றி!

அடைக்கலம் தந்த வீடுகளே!
போய் வருகின்றோம், நன்றி - நெஞ்சை
அடைக்கும் துயர் சுமந்து
செல்லுகின்றோம்...
உங்கள் அன்புக்குப் புலிகள் நன்றி.

நான் வசன நடையில் சொல்லுகின்றேன். எனக்கு மகராசனைப் போன்ற குரல் வளம் இல்லை. ஆனால், சந்தப்பாடலை இசை ஒலியோடு கேட்க வேண்டும்.
அடைக்கலம் தந்த வீடுகளே, போய் வருகின்றோம் நன்றி. நெஞ்சை அடைக் கும் துயர் சுமந்து செல்லுகின்றோம். உங்கள் அன்புக்கு புலிகளின் நன்றி!

பாவத்தோடு அந்தப் பாடலைக் கேட்கின்றபோது, பற்பல சம்பவங்கள் நெஞ்சி லே மோதுகின்றன. நீங்கள் எங்கள் இல்லத்திலே தங்கி இருந்த நாட்கள்... காயம்பட்ட புலிகள் வீட்டிலே தங்கி இருந்த நாட்கள்... காயமுற்ற தம்பிகள்.. இரண்டு கால்களும் இல்லாமல்... இப்படி போர்க்களத்திலே காயம்பட்ட விடு தலைப்புலித் தம்பிகள் என் இல்லத்திலே ஒன்றரை ஆண்டுகள் இருந்தார்கள். ஓராண்டுக்காலம் அவர்களை என் தாய் பராமரித்தார். அதன் பின்னர் என்னு டைய தம்பியின் துணைவியார் பராமரித்தார்.

இரண்டு கால்கள் இல்லை... இரண்டு கைகள் இல்லை...இரண்டு கண்கள் இல் லை... பலபேருக்கு ஒரு கண் இல்லை. இப்படி முப்பத்து ஏழு பேர். அவர்கள் எங்கள் இல்லத்தில் தங்கி இருந்த நாட்களை நாங்கள் நினைக்கிறோம்.

காசி ஆனந்தன் அவர்களே, நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்.

எங்கள் உடலில் ஓடும் செங்குருதி

நீங்கள் தந்த சோறல்லவா? - நாங்கள்
தங்கியிருந்த நாள்
சிலநாள் என்றாலும்
நினைவு நூறல்லவா?

உணர்ச்சி ஊட்டுகின்றன இந்தப் பாடல்கள். நீங்கள் ஈழ  விடுதலைக்காக, சிறைக் கோட்டத்திலே வாடினீர்கள்.ஐந்து ஆண்டுகள் சிறையிலே காசி ஆனந் தன் வாடினார்.எந்த வெலிக்கடைச்சிறையிலே குட்டிமணி, கோரமாக வெட்டிக் கொல்லப்பட்டாரோ . கண்ட கோடரிகளாலே அவரைத் துண்டாடினார்களோ, அவர் உடல் துண்டுதுண்டாகச் சிதைக்கப்பட்டு, அவரது கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, எந்த விழிகளால் மலரப்போகின்ற தமிழ் ஈழத்தைக் காணப் போ கிறேன் என்று நீதிமன்றத்தில் முழங்கினானோ, நான் மரித்த பிறகு, தூக்கு மே டை யிலே எனது உயிர் பறிக்கப்பட்ட பிறகு, மலரப் போகின்ற தமிழ் ஈழத்தை, எனது கண்கள் இன்னொருவன் மூலமாகக் காணட்டும் என்று சொன்னானோ, நான் இறந்ததற்குப் பிறகு என் விழிகளை எடுத்து பார்வையற்ற ஒரு தமிழனுக் குத் தந்து விடுங்கள்; அந்த விழிகள் நாளை மலரப் போகும் தமிழ் ஈழத்தைக்
காணட்டும் என்று சொன்னானோ, அதற்காக குட்டிமணியின் கண்களைத் தோண்டி எடுத்த சிங்களக் கொடியவர்கள் தங்கள் பூட்ஸ் கால்களால் போட்டு
மிதித்தார்கள்.

அந்தத் துன்பச் செய்திக்கு யார் காரணம்? காட்டிக் கொடுத்த துரோகி யார்? என் று நடந்து முடிந்த சம்பவங்களை ஆவணங்களோடு, இங்கே பழ.நெடுமாறன் எடுத்து வைத்தாரோ, அந்தக் குட்டிமணி-ஜெகன்- தங்கதுரை, இவர்கள் எந்தச் சிறையில் இருந்தார்களோ, அந்த வெலிக்கடைச்சிறையிலே, இரண்டு ஆண்டு களுக்கு மேல் இருந்தார் காசி ஆனந்தன்.

மாத்தளைச் சிறையிலே, மட்டக்களப்புச்சிறையிலே, கண்டிச் சிறையிலே என ஏறத்தாழ ஐந்து ஆண்டுக் காலம் சிறைக்கொட்டடியிலே கவிஞர் காசி ஆனந் தன் வாடியபோது, மின்மினியின் வெளிச்சத்தைப்போன்று எப்போதாவது துவாரத்தின் வழியாக வரும் வெளிச்சத்தைப் பற்றி அவர் கவிதையிலே பாடி
இருக்கிறார்.

சிங்களக் கொடியவர்கள் வீடுபுகுந்து இவருடைய கவிதைகளைக் கவர்ந்து கொண்டு போய் விட்டார்கள். நெஞ்சிலே இருந்து வெடித்துச சிதறிய கவிதை களைக் களவாடிக்கொண்டு போய் விட்டார்கள். அதைப்பற்றி அவர் சொல்லு கிறார், அருமையாகச் சொல்லுகிறார்.

குருவி படைத்த குஞ்சுதனைக்
காகம் கொத்திப் பறந்தது போல்
எருவிட்டு உழவன் வளர்த்த பயிர்தனை
எருமை அழித்தது போல
கருவிலே கருத்திலே விளைந்த என்
கண்மணிப்பாடலை
எடுத்துப்போனானே
நான் அறம் பாடுகிறேன்
என் தமிழ் தீண்டிய கை அழுகும்
அவன் தலையிலே இடி இறங்கும்
ஆயிரம் ஆண்டுகளுக்கு நெருப்பு எழும்

என தன் கவிதையைப் பறிகொடுத்த வேதனையில் கவிஞர் துடித்துப்போய்
எழுதுகிறார்.

சிறைக்கொட்டடியில் வாடிய கவிஞர்

அப்படி, சிறைக்கொட்டடிகளில், ஐந்து ஆண்டுகள் வாடியபோது, இவருடைய
உடன்பிறந்த தம்பி சிவஜெயம், விடுதலைப்புலிகள் இயக்கத்திலே போராளி யாக களத்திலே போய்ச் சேர்ந்தார். நேரடியாக முக்கியப்பொறுப்பில், பொரு ளாதார பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டுப் போய்ச்சேர்ந்தார். சிங்கள இரா ணுவத்தால் வேட்டையாடப்படுகிறார். அப்படி வேட்டையாடப் படுகிறபோது, தம்பி ஜெயம் அண்ணனிடம் இருந்து கடிதம் வரவில்லையே என்று பல நாட் கள் ஏங்கித்தவித்து இருக்கிறார்.அண்ணனிடம் இருந்து கடிதம் வந்ததா? என்று, தன் ஒன்றுவிட்ட அக்காவிடம் கேட்கிறார். உயிர் பிரிவதற்கு மூன்று நாட் களுக்கு முன்னர்கூடக் கேட்கிறார்.

இந்திய உளவுத்துறையிடம் கடிதம் கிடைத்துவிடக்கூடாது என்று, காசி ஆனந் தன் அவர்கள் தம்பி ஜெயத்துக்குக் கடிதம் எழுதவில்லை. ஆனால், ஜெயம் கடி தம் எழுதினார் அண்ணனுக்கு. புலிகள் களமாடிக் கொண்டு இருந்தபோது, கடி தம் எழுதினார்.அந்தப் பாச மடலுக்கு பதில் கடிதம் இவர் எழுதவில்லை. அண் ணனிடம் இருந்து கடிதம் வந்ததா? என்று கேட்டார். கடிதம் வரவில்லை. ஆனால், அவர் தங்கி இருந்த அந்தப் பாசறை சுற்றி வளைக்கப் பட்டு விட்டது. சிங்களச் சிப்பாய்களின் துப்பாக்கிகளில் இருந்து குண்டுகள் பாய்ந்து வந்தன. தன்னந்தனியாக எதிர்த்து நின்று வீரப்புலி சிறீ போராடினார்.உடம்பிலே குண்டு கள் பாய்ந்து அவர் மடிந்தார்.

அதற்குப்பிறகு, சுற்றிலும் சூழ்ந்து கொண்டார்கள் பகைவர்கள். அப்போது, ஜெயம் எந்த நஞ்சுக் குப்பியைத் தனது கழுத்திலே கட்டிக் கொண்டாரோ, அந்த சயனைடு குப்பியைக் கடித்து மடிந்தார். அப்படி மரணித்துப்போன அந்த மாவீ ரனுடைய அண்ணனைத்தான், தலைநகர் சென்னையிலே இன்றைக்கு நாம் பெருமைப்படுத்திக்கொண்டு இருக்கிறோம். (பலத்த கைதட்டல்)

தம்பி ஜெயத்துக்கு...

அவர் மடிந்ததற்குப் பிறகு இனி உளவுத்துறையின் கையிலே கடிதம்  கிடைக் காது அல்லவா? கிடைத்தாலும் தம்பியைக் கொல்ல முடியாது அல்லவா?
ஏனென்றால் அவன் செத்துப் போனான் அல்லவா? அதனால், தம்பி ஜெயத்துக் கு... என்று கடிதமாகவே ஒரு நூல் எழுதினார்.

தம்பி உயிரோடு இருந்தபோது எழுதாத கடிதத்தை, தம்பி ஜெயத்துக்கு என்ற
தலைப்பில்,தம்பி இறந்ததற்குப்பிறகு எழுதினார்.அது நூலாக வந்து இருக்கிற து. அதிலே தியாக வரலாறு வர்ணிக்கப்படுகிறது. தன் நெஞ்சின் வேதனைக ளை யெல்லாம் உணர்ச்சிக்கவிஞர் அதிலே கொட்டி இருக்கிறார்.

ஒரு நாள் பகைவர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். நீர் நிறைந்த குளத்துக்கு உள் ளே பாய்கிறார் ஜெயம். மேலேயிருந்து சுடுகிறார்கள். நீண்ட நேரம் மூச்சை
அடக்கி உள்ளேயே கிடக்கிறார். அதன்பிறகு அவன் செத்துப்போனான் என்று
அவர்கள் போய்விட்டார்கள். ஜெயம் நீந்திக் கரை சேர்கிறார். அப்படி இருந்த
ஜெயம் ஒருநாள் அண்ணனைக் கேட்கிறார். காசி ஆனந்தனுடைய கழுத்திலும்
நச்சுக் குப்பி மாலையாகத் தொங்க விடப்பட்டதைப்பார்த்து, ‘அண்ணா, நீங் களும் மாலை போட்டாச்சா?’ என்று கேட்டபோது, அந்தக் கண்களிலே ஒரு
கலக்கத்தைக் கண்டதாகக் குறிப்பிடுகிறார்.

நச்சுக் குப்பியைக் கழுத்திலே கட்டிக்கொண்ட காசி ஆனந்தனைத்தான் இந்த
மேடையில் நாம் பாராட்டிக் கொண்டு இருக்கிறோம்.(கைதட்டல்) அவருடைய
தங்கை சிவமலர். அழகிய இளம்பெண். சிங்களப் படையினரால் விசாரணை
என்ற பெயரில் அழைத்துச்செல்லப்பட்டு,காவல் நிலையத்திலே சித்திரவதைச்
செய்யப்பட்டார். கொடுமை... கொடுமை.... கொடுமை... அந்தக் கொடுமைக்குப்
பிறகு ஓராண்டுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய இன் னொரு தம்பி சுதர்சனும் சிறையில் அடைக்கப்பட்டார். இத்தனை பேரும் சிறை யில் அடைக்கப்பட்ட வேதனையைத் தாங்காமல், காசி ஆனந்தனின் தந்தை மாரடைப்பால் மறைந்து விட்டார்.

நாக்குக்குப் பெருமை

அவருடைய தங்கை சிவமலர்,அந்த மலர் தமிழ் ஈழ நந்தவனத்தில் பூத்துமணம் வீச வேண்டிய மலர் - சிங்களக் காடையரால் கொடுமைப்படுத்தப்பட்டதன் விளைவாக, இன்றுவரை திருமணமே ஆகவில்லை. அப்படிப்பட்ட ஒரு தியாக வரலாறு இங்கே அமர்ந்து இருக்கிறது.ஒரு தியாக சரித்திரமே இங்கே அமர்ந்து இருக்கிறது. அத்தியாக மணியாம் கவிஞர் காசி ஆனந்தனைப் புகழ்ந்து பேசுவ தால் எங்கள் நாக்கு மதிப்பு பெறுகிறது. அவரது புகழை உச்சரிப்பதால் எங்கள் உதடுகள் மகிமை அடைகின்றன. எவ்வளவு துன்பம், எவ்வளவு துயரம்? அத்த னையும் தாங்கிக்கொண்டு தமிழ் ஈழ விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித் துக் கொண்டவர் காசி ஆனந்தன்.

திணிக்கப்பட்ட ஒப்பந்தம்

1987 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் திணிக்கப் பட்டது. அண்ணன் நெடுமாறன் ஆஸ்திரேலியாக் கண்டத்திலே இருந்தார். இப்படி ஒரு ஒப்பந்தமா என்று ஏடு களிலே கண்டு நான் திடுக்கிட்டுப்போய், அசோகா ஓட்டல் அறையிலே இருந் த தம்பி பிரபாகரனோடு தொலைபேசியில் பேசினேன் என்று சொன்னாரே,
அந்த 518 ஆம் எண் அறை வாயில்வரை நான் சென்றேன். முதலில் நான் ஒரு
உளவுத்துறை அதிகாரி என்று என்னை அனுமதித்து விட்டார்கள். அந்த அறை யை நோக்கிச் சென்றபோது, நான் யாரைப் பார்க்க வந்து இருக்கிறேன்? என்று கேட்டு, நான் அவரைப் பார்க்க வந்து இருக்கிறேன் - அவருடைய நண்பர், நான்
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறிய பிறகு, உடனடியாக அந்த இடத் தில் இருந்து அகல வேண்டும் என்று என்னை வெளியேற்றினார்கள்.

அப்போது நான் தில்லி செய்தியாளர்களிடம் தெரிவித்தேன்.“பிரபாகரன் யாரும் தொடர்பு கொள்ள முடியாதவாறு அசோகா ஓட்டலிலே சிறை வைக்கப்பட்டு இருக்கிறார் என்று. அந்தச் செய்தி ஏடுகளிலே வெளி வந்தது. இந்து ஏட்டிலே வந்தது. ஜி.கே.ரெட்டி அப்போது இருக்கிறார். இந்து பத்திரிக்கை முழுக்க முழுக்க அப்போது ஈழத்தை ஆதரித்துக் கொண்டு இருந்த காலம் அது.

அப்படி வெளிவந்த செய்தியைப் பார்த்து விட்டு பேபி சுப்பிரமணியம் என்னைத்
தொலைபேசியில் அழைத்து, காலையில் இந்தச் செய்தியைத் தலைவர் தம்பி
பிரபாகரன் அவர்களும், பாலசிங்கம் அவர்களும் அங்கே செய்தித்தாள்களில்
பார்த்து இருக்கிறார்கள். எங்களுக்குத் தகவல் சொன்னார்கள்.நீங்கள் வீட்டிலே யே தங்கி இருந்தால் உங்களோடு தொலைபேசியில் பிரபாகரன் தொடர்பு கொள்வார்கள் (இப்போது போல அப்போது கைபேசி எல்லாம் கிடையாது) என் றார்கள். நான் இல்லத்திலேயே இருந்தேன். பத்தரைமணிக்குப் பேசினார். முப் பத்து மூன்று நிமிடங்கள். நான் அதைக் குறிப்பு ஏட்டிலே அப்படியே எழுதி வைத்து இருக்கிறேன்.

அப்போதுதான் இந்திய அரசு எப்படிப்பட்ட துரோகத்தை,வஞ்சகத்தைச்செய்தது என்ற உண்மைகளைப்பதிவு செய்தேன்.அதை நான் நாடாளுமன்றத்திலே பேசி னேன். நான் பேசப்போகிறேன் என்று அறிந்து,கலைஞர் கருணாநிதி, நாளைக் கு விவாதம் வருகிறதாமே? புலிகளைப் பற்றிப் பாராட்டி பேசக்கூடாது’ என்று அவரும் சொன்னார்.இன்னொரு ஏஜெண்டு மூலமாகவும் சொன்னார். நான் நாடாளுமன்றத்தில் ஐம்பத்து ஐந்து நிமிடங்கள் பேசினேன்.விடுதலைப் புலி களுக்காகப் பேசினேன்.விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினேன்.

‘இந்திய அரசு செய்த ஒப்பந்தம் - மன்னிக்க முடியாத துரோகம்’ என்று பேசி னேன். இந்திய இராணுவம் ஈழத்துப் பெண்களைக்கற்பழித்து, நாசப்படுத்தி அங் குள்ள தமிழ் மக்களைக் கொன்று குவிக்கிறது’ என்று குற்றம் சாட்டினேன்.

போர் மூண்டதற்குப் பிறகு, திலீபன் மடிந்ததற்குப் பிறகு, குமரப்பா, புலேந் திரன் மடிந்ததற்குப் பிறகு, விடுதலைப் புலிகளின் அலுவலகம் வெடிவைத்து தகர்க்கப் பட்டதற்குப் பிறகு, இந்திய இராணுவம் பாராசூட்டு களிலே கொண்டு போய், கமாண்டோக்களை இறக்கி, அங்கே பல்கலைக் கழக மைதானத்துக்கு உள்ளே நிறுத்தி, பிரபாகரனைக் கொன்று தீர்க்க வேண்டும் என்று கமாண் டோக்கள் அத்தனை பேரையும் அங்கே நிலை நிறுத்திய போது, அந்தக் கமாண் டோக்கள் பிரபாகரனை உயிரோடு பிடிக்காவிட்டாலும் கொன்று பிடிப்பது என்று முடிவெடுத்தபோது..

தொடரும் .........

No comments:

Post a Comment