Friday, April 5, 2013

“நேர்காணல்” வெளியீட்டு விழாவில் வைகோ


தீபச்செல்வனின் கவிதைகள், எழுச்சியைத் தரும்;
ஈழ விடுதலைக்கு எழுத்து ஆயுதம் ஆகும்!


“நேர்காணல்” - தீபச்செல்வன் இதழ் வெளியீட்டு விழா, 29.03.2013 அன்று சென்னை அண்ணாசாலையில் நடைபெற்றது. இதழை வெளியிட்டு, மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து...

வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நெஞ்சில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி விடுவதால், என் நினைவு அலைகளிலே, உணர்வுகளிலே நன்றி நிறைந்து இருக்கின்ற ஒரு சூழலில் வந்து பங்கு எடுக்கின்ற நேர்காணல் 6 நேர்காணல்
ஆவது இதழ் வெளியீட்டு விழா,தீபச்செல்வன் என்ற ஈழத்தமிழ்க் கவிஞனை, தமிழ் எழுத்து உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கின்ற இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கு கின்ற, மூண்டு எழுந்த 65 மொழிப் புரட்சியின் தீரமிக்க தளகர்த்தர்களுள் ஒருவராகத் திகழ்ந்து, ஈடு இணை அற்ற தன்மான உணர்வு மிக்க எழுத்தாளராகப் பரிணமித்து, சுதந்திரத் தமிழ் ஈழ எண்ணங்களை, எழுத்தில் பேச்சில் வெளிப்படுத்தி வருகின்ற, நான் மிகவும் மதிக்கின்ற ஆருயிர்ச் சகோதரர் பா. செயப்பிரகாசம் அவர்களே,



‘திலீபன் அழைப்பது சாவையா? இந்தச்சின்ன வயதில் இது தேவையா?’ என்ற
சொற்கள் காற்றிலே கலந்து வருகின்ற போது, நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு
எதிரே திரண்டு இருந்த தாய்மார்கள், விம்மி அழுது கதறுகின்ற அந்தச் சோக
மயமான காட்சிகளை, காணொளியாகப் பதிவு செய்து, ஒரு நவம்பர் மாத பனிக்கால மாலை, இரவுக் குளிரில், இந்தத் துணைக்கண்டத்தின் தலை
நகரில் இருக்கின்ற பல்வேறு கட்சித் தலைவர்களின் இல்லந்தோறும் சென்று,
அவர்களுக்குப் போட்டுக்காட்டி, அவர்கள் மனதில் பதிய வைத்து, அதன்
காரணமாகவே என் இதயத்தில் மிக ஆழமான இடத்தைப் பெற்று இருக்கின்ற, அந்தத் தீவின் சிறைகளில் அடைபட்டு வேதனைகளைச் சுமந்த, என்னுடைய மதிப்புக்கு உரிய உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்களே,

வெள்ளித்திரையில், திரைப்படங்களில் ஒரு கதாபாத்திரமாகவே மாறிவிடக்
கூடிய, அர்ப்பணிப்பு ஈடுபாட்டுடன் என் மனதைப் பல காலமாகக் கவர்ந்தவர்
என்ற முறையில், இந்த நிகழ்வில், நான் நெஞ்சால் சில நாள்களாக நேசித்து
வருகின்ற தீபச்செல்வனைப் பற்றிய கவிதைகளைச் சொல்லும்போதே,
தழுதழுத்த குரலில், அவருடைய நெஞ்சத்தில் பீறிடுகின்ற வேதனைகளை உணர்ச்சிமயமாகக் கொட்டிய பெருமதிப்புக்கு உரிய, கலை உலகத்தில் நம்மால் மதிக்கப்படுகின்ற, சகோதரர் நாசர் அவர்களே,

இப்படி ஒரு வாய்ப்பை எனக்கு உருவாக்கிக் கொடுத்த, எனது நன்றிக்கு உரிய சகோதரர் பவுத்த அய்யனார் அவர்களே, வரவேற்பு உரை நிகழ்த்திய அன்புச் சகோதரி திருமதி முத்துமீனாள் அவர்களே, இதழியல் துறைப் பேராசிரியர் மதிப்புக்குரிய ரவீந்திரன் அவர்களே, சமகாலக் கவிஞரான அமிர்தராஜ் அவர்களே, செய்தியாளர் களே, தோழர்களே வணக்கம்.

இயேசு சிந்திய இரத்தமும், ஈழத்தமிழர்கள் சிந்திய இரத்தமும்

இந்த நாள், இருபது நூறு ஆண்டு களுக்கு முன்னால், கொல்கதாவில் கபாலஸ் தலத்தில், ‘இந்த இரத்தப் பழிக்கு நான் பொறுப்பாளி அல்ல’ என்று சொன்ன போன்டியஸ் பிலாத்து, தன் கைகளைத் தண்ணீரால் கழுவிக் கொண்டதற்குப் பின்னர், கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு, வாரினால் அடித்து, சுமக்க முடியாத சிலுவையைச் சுமக்கச் செய்து, ‘நீதான் யூதர்களுக்கு ராஜாவா?’ என்று கேலி செய்து, தலையில் முள்முடியைச் சூட்டி, முகத்தில் காறி உமிழ்ந்து, இரண்டு திருடர்கள் அறையப்பட்ட சிலுவைகளுக்கு நடுவிலே ஒரு சிலுவையில், கொடூரமான முறையில் ஆணிகளால் அறையப்பட்ட இயேசுநாதர், நசரேயன் என்று அழைக்கப்பட்ட இயேசு கிறிஸ்து, இரத்தத் துளிகளால் அந்த நிலத்தை நனைத்த புனித வெள்ளிக்கிழமை.

அதுவரை, அதிகார பீடத்தில் இருக்கின்றவர்கள், கலகம் செய்கின்றவர்களை,
எதிர்ப்பவர்களை, ஆயுதம் ஏந்துகின்றவர்களை, கேள்வி கேட்பவர்களை,
கொடூரமாகத் தண்டிப்பதற்காகப் பாவிக்கப்பட்ட ஒரு கருவிதான் சிலுவை. ஒரு பெரும் புரட்சியை நடத்தி, சிறையை உடைத்துக் கொண்டு வெளியே வந்த ஸ்பார்டகஸ், 6000 பேர்களைத் திரட்டிக் கொண்டு ரோமப்பேரரசையே நடுநடுங்க வைத்த அந்தப்பெருவீரன், ஆபியின் பெருவெளியில், அத்தனைப் பேரோடும் சிலுவையில் அறையப்பட்டு, சிறுகச் சிறுக உயிர் இழந்தான்.

இந்தப் புனித வெள்ளிக்கிழமையில்,உலகம் முழுமையும் பரவி இருக்கின்ற
கிறித்துவப் பெருமக்கள், அவர்கள் ஜெபக்கூடங்களில் பிரார்த்தனையில்
ஈடுபடுகின்றார்கள்; இதற்குக் காரணமான அந்தச் சிலுவை,வழிபாட்டுக்கு உரியதாக ஆக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதும், அவர் குருதியைக்கொட்டியதும் உண்மை நிகழ்வுகள், வரலாற்றுப் பதிவுகள்.

புதிய ஏற்பாட்டில், மத்தேயு, மார்க் உள்ளிட்டவர்கள் தெரிவிக்கின்ற கருத்து களின் அடிப்படையில், இயேசுகிறிஸ்து உயிர்த்து எழுந்தார் என்பது போலவும், அதுவே ஈஸ்டர் பண்டிகை யாகக் கொண்டாடப்படுகின்றது என்ற விதத்தில், நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை மலர்கின்றது.

நான் தீபச்செல்வனுடைய கவிதைகளையும், உரையாடலையும் வாழ்த்தி உரை ஆற்றுகின்ற நேரத்தில், எங்கள் தொப்புள் கொடி உறவுகளாகிய ஈழத்துத்
தமிழர்கள் சிந்திய இரத்தத்துளிகளால், தமிழ்ஈழம் உயிர்த்து எழுந்து விடுதலை
பெற்றது; தனி நாடாக ஆயிற்று என்பதை, எதிர்காலத்தில் உறுதிப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாக, இந்த நாள் அமைந்து இருப்பதாக நான் கருதுகிறேன்.

கண்களைப் பனிக்க வைத்த கவிதை

கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் இங்கே உச்சரித்த அதே கவிதை வரிகள்தாம்,
கடந்த சில நாள்களாக எனது உணர்வு களையும் ஆக்கிரமித்து இருக்கின்றன.

இந்த உரை, இந்த அரங்கத்தில் அமர்ந்து இருக்கின்ற இளந்தோழர்களுக்காக
மட்டும் நான் ஆற்றுகின்ற உரை அல்ல; என்னுடைய இருதயத்தின் ஆழத்தில்
கொந்தளித்துக் கொண்டு இருக்கின்ற எண்ணங்களை இங்கே பதிவு செய் கின்றேன். அது, இந்தக் காணொளியின் மூலமாக,புவியெங்கும் இருக்கக்கூடிய
வளரும் இளைஞர்கள், இளைய தலை முறையினரின் கரங்களில், அவர்கள்
ஈழத்தை மீட்டு எடுக்கக்கூடிய உறுதியைத் தர வேண்டும் என்கின்ற அர்ப் பணிப்பு உணர்வோடு, உங்கள் முன்னால் நின்று நான் உரை ஆற்றிக்கொண்டு இருக்கின்றேன்.

ஒரு பாலகனாகப் பிறந்ததைத்தவிர வேறு எதுவும் செய்து இருக்கவில்லை

என்ன அருமையான சொற்கள்!

ஒட்டிய வயிறுடன் நிராயுதமான களத்தில் அணிந்து இருந்த கால்சட்டையும், மூடி இருந்த போர்வையும் தவிர வேறு எதுவும் இல்லை இனி, வேறு எந்த பாலகனின் கண்களைப் பார்ப்பது?

ஏதுமறியாப் பாலகர்கள், இந்த மண்ணில் பிறந்ததைத் தவிர வேறு எதுவும் செய்தது இல்லை

குற்றங்கள் நிரம்பிய வானத்தில் எந்தப் பறவையும் இல்லை

பதுங்கு குழியில் பிறந்தவன் பதுங்கு குழியிலேயே கொல்லப்படுகையில்
எஞ்சியது ஏதும் இல்லை

இரும்புத் துப்பாக்கிகள் நெஞ்சிலே பதிகையில் இறுதிக் குரல் அப்பாலகன் எடுக்கையில் உடைந்த நிலாவைத் தவிர வேறு எந்த சாட்சியமும் இல்லை

இந்த நேர்காணல் இதழின் நிறைவுப் பகுதியில் உள்ள இந்தக் கவிதையை
நான் வாசித்தேன்.

தம்பி அருணகிரி, இந்த இதழை, ஒரு பிற்பகல் நேரத்தில் கொண்டு வந்து என்
கையில் கொடுத்தபோது, நான் அதைப் படிக்கத் தொடங்கினேன். என் கண்கள்
பனித்தன, துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று நாசர் அவர்கள்
கூறினாரே, அதைப் போலத்தான், அந்தப்பக்கங்களைப் புரட்டியபோது பொங்கி
வந்த கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

வைகோ எளிதில் உணர்ச்சிவயப் படுவான்; கண்ணீர் வடிப்பான்; இது என்னைப் பற்றிய சிலரது கணிப்பு.அச்சத்தால் நான் அழுதது இல்லை; ஆபத்துகளைக் கண்டு கலங்குவதும் இல்லை. (பலத்த கைதட்டல்). ஆனால், என் சக மனிதர் களுடைய துன்பத்தைக் காண்கையில், என் உள்ளம் உடைகிறது.

தீபச்செல்வனின் பிள்ளைப் பருவத்து வாழ்க்கையைப் படித்தேன். இரத்தின புரத்தில் பிறந்த இந்த வீரப்பிள்ளையின் வாழ்க்கையில், சோகம் சுமந்த குழந்தைப் பருவத்து நிகழ்வுகளைப் படித்தேன்.தந்தையைப் பற்றிப் படித்தேன். இனி என் அம்மா சுட்டுத் தருகின்ற ரொட்டித்துண்டுகளையோ, என் தங்கை யோடு போடுகின்ற சண்டைகளையோ மீளக்கொண்டாடுகின்ற நாள்கள் திரும்ப எனக்கு வரப்போவது இல்லை என்று தனது கவிதைகளில் பதிவு செய்து இருக்கின்றாரே, அந்தத் தம்பி வளர்ந்த நாள்களைப் பற்றி எண்ணிப் பார்த்தேன்.


அவன், அண்ணன் மீது மிகவும் பாசமாக இருக்கிறான். அவனுக்குப் பெற்றோர்
சூட்டிய பெயர் பிரசன்னா. தமிழ் ஈழவிடுதலைப்புலிகள் அவனுக்குச் சூட்டிய
பெயர், வெள்ளையன். 12 வயதிலேயே,நான் நாட்டுக்காகப் புலிகள் இயக்கத் துக்குப் போகிறேன் என ஓடுகிறான்.

இந்த நேர்காணலில், எண்ணற்ற பல கேள்விகளுக்கு விடை இருக்கின்றது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், தமிழ் ஈழத்துக்கு எதிராகவும் வைக்கப்
படுகின்ற கேள்விகளுக்குத் துல்லிய மான முறையில் பதில் தந்து இருக்கின் -றார் தீபச்செல்வன். பிரதீபன் என்கின்ற இந்தத் தீபச்செல்வனுடைய பதில் களில், உண்மையின் குரல் இருக்கின்றது.

சிறு பிள்ளைகளை, வலுக்கட்டாயமாகக் கொண்டு போய் விடுதலைப்புலிகள்
இயக்கத்தில் சேர்க்கவில்லை; இந்தப் பிள்ளை பிரசன்னா, தானாகவே செல்லு
கிறான்; மூன்று முறை செல்லுகிறான். அவர்கள், திரும்ப வீட்டிலே கொண்டு
வந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள், ஆர்வத்தோடு தகப்பனிடம் கேட்டு, தாயிடம் சொல்லி, சின்னச்சின்னச் சீருடைகளைத்தைத்துப் போட்டுக் கொண்டு மகிழுகின்ற வழக்கம் இருக்கின்றது. அப்படிச் சில பிள்ளைகள், ஆங்காங்கே சேர்ந்து இருக்கின்ற காட்சிகளை எல்லாம் படங்களாக எடுத்துப் போட்டு, இவர்கள் எல்லாம் புலிப்படையில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப் பட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்கான பதில்,இந்த நேர்காணலில் இருக் கின்றது.

இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் திரும்பத் திரும்பக் கொண்டு வந்து விட்டாலும்,
பின்னர் ஒருநாள்,புலிப்படையிலேயே சேர்ந்து விட்டான் அண்ணன். அவனைக் காணவில்லையே என்று, தம்பி துடிக்கிறான், பாசத்தால் தவிக் கிறான். புலிகளைப் பற்றிய நிலைமைகள் அவனுக்குத் தெரியும். ஒருநாள்
அண்ணன், புலிப்படை வீரனாகவே வீட்டுக்கு வருகிறான்.ஒரு களத்தில் காயப் பட்டு வருகிறான். அவன் நலம் பெற்றுத் திரும்பச் செல்லுகின்றபோதும்
தவிக்கின்றான். ‘அண்ணா நீ போகாதே; என் கம்பாசை உனக்குத் தந்து விடு கிறேன்; உன்னோடு இனி சண்டை போட மாட்டேன்;நீ போகாதே அண்ணா’ என்று மன்றாடுகிறான். ஆனால், அவன் சிரித்துக்கொண்டேபோய்விட்டான்.

புலிகள் யானை இறவைக்கைப்பற்றி,யாழ்ப்பாணத்தை நெருங்குகின்றகாலம். எவராலும் வெற்றி பெற முடியாது என்று கருதப்பட்ட, 20,000 க்கும் மேற்பட்ட சிங்களப் படையினரைச் சின்னாபின்னமாகச் சிதறடித்து, யுத்தகளங்களில், உலக வரலாற்றில் அது ஒரு வியக்கத்தக்க வெற்றி என்று சொல்லத்தக்க விதத்தில் விடுதலைப்புலிகள் வெற்றி பெற்று, யாழ் நகரத்தைநெருங்கிக் கொண்டு இருக்கின்ற கால கட்டத்தில், முகமாலையில் நடைபெற்ற சண்டை யில், அண்ணன் காயப்பட்டு விட்டான்.

அப்பொழுது, இவர்கள் வீட்டு வாயிலுக்கு வந்த புலிகள், ‘பிரதீபன் நீதானா?’ என்று கேட்கிறார்கள். ‘ஆம்’என்கின்றான் தீபச்செல்வன். ‘உன் அண்ணா காயப் பட்டு இருக்கின்றார்; உன்னைப் பார்க்க வேண்டும் என்கிறார்’என்று கூறி அழைத்துச் செல்லுகிறார்கள். மோட்டார் சைக்கிளில் போகும்போது, ஒரு சிறிய விபத்து. அதனால் ஏற்பட்ட சின்னச்சின்னச் சிராய்ப்புக் காயங்களோடு, ஆசையோடு அண்ணனைப் பார்க்கப் போகிறான்.

‘புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்குக் கொண்டு போய் விட்டார்கள். இன்று
பார்க்க முடியாது;சேதி சொல்லி அனுப்புகிறோம்’என்று கூறி அனுப்பு கிறார் கள். துக்கத்தோடு வீட்டுக்குத் திரும்பி, அம்மாவுக்குத் தெரியாமல், புலிகளின்
குரல் வானொலியைக் கேட்டுக் குரல் கொண்டே இருக்கின்றான்.


அந்தஇரவில்உயிர் நீத்தவர்களுடைய பெயர்கள் உச்சரிக்கப்படுகின்றபொழுது,
‘அண்ணனின் பெயரும் அதிலே ஒலிக்குமோ?’ என்ற கவலையோடு கேட் கிறான். நல்லவேளை அண்ணன் சாகவில்லை என்று, அதற்குப்பிறகுதான்
அவன் சற்று நிம்மதியோடு தூங்கி இருப்பான்.

மறுநாள் காலையில் விடுதலைப்புலிகள் வீட்டுக்கு வருகிறார்கள். ‘மாவீரன் ஆகி விட்டான்; களச்சாவு அடைந்து விட்டான்; அண்ணன் உயிர் இழந்து
விட்டான்’ என்ற செய்தியும் வருகிறது. சோக இருள் சூழ்கிறது. தந்தையின்
வாழ்வும் சோகமாக முடிந்துவிட்டது. ஒருபெருந்தாக்குதல் நடைபெற்ற
காலத்தில், 95 ஆம் ஆண்டு கிளிநொச்சி இரத்தினபுரத்தில் இருந்து அவர்கள்
வெளியேறுகிறார்கள். 2001 இல் திரும்ப வருகிறார்கள்.

இப்படிப்பட்ட துயரங்களுக்கு நடுவே,வீட்டில் ஒரு கிணறு வெட்டுகிறான்.
அதற்காக, ஒற்றைப் பிள்ளையாக இருந்து அவன் படுகிற பாடுகள், நிலக்
கடலையைக் கூவி விற்பதும், பாலைத் தயிராக ஆக்கி விற்பதும், காய்கறிச்
செடிகளைப் பதியன் போட்டு விற்பதும், இந்த வாழ்க்கைச் சூழலில் அவனுக்கு
ஏற்பட்ட அனுபவங்களை இந்தப்பதிவுகளிலே பாருங்கள்.

ஈழம்; போர்நிலம், பெருநிலம்; பதுங்கு குழியில் பிறந்த குழந்தை, ஆட்கள் அற்ற நகரத்தைத் தின்ற மிருகம், பாழ் நகரத்தின் பொழுது, கூடார நிழல், எதற்கு ஈழம்? என இத்தனை தலைப்புகளிலே நூல்களைத்தந்து இருக்கின்றார் தீபச்செல்வன்.நிலத்தின் மீது காதலாக இருக்கின்றார்.

ஒரு மண் குடிசை, ஒரு சிறிய குசனி.மண்ணால் கட்டப்பட்ட ஒரு சிறிய அறை. கூரை வேயப்பட்டது. அதுவும் அழிந்தது. எந்தச் சுவடும் இல்லை. வீடு
என்று சொல்லப்பட்ட அந்தக் குடிசையும் அழிந்தது. ஆனால், ‘எங்கள் நிலத்தை
நான் உயிராக நேசிக்கின்றேன். அந்த ஈர நிலம், என் உயிரோடு கலந்தது; அது
எங்கள் நிலம் என்ற பெருமிதத்தில் நாங்கள் துடிக்கின்றோம்’ என்று சொல்லு கிறார்.

அடுத்த கட்டம். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த நிலைமாறி, யாழ் நகரம் சிங்கள இராணுவத்தின் பிடியில் சிக்கி பாழ் நகரமாக அவதிப்
பட்டுக் கொண்டு இருந்த கால கட்டத்தில், அவன் கல்லூரி மாணவன்.2008 ஆம் ஆண்டு, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர். அதற்கு முன்பு, கலைபீட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்த புருசோத்தமன் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.அந்தப்பொறுப்பிலே இருந்தால், உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிகிறது.

ஒருநாள்; 2008 நவம்பர் 24 ஆம் நாள். கொலைப்பட்டியல், மரண எச்சரிக்கை
ஒன்று வருகிறது. தீபச்செல்வன் உள்ளிட்ட யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் தின் 14 பெயர்கள் பட்டியல் இடப்பட்டு, ‘நீங்கள் கொலை செய்யப்படுவீர்கள்’ என்ற எச்சரிக்கை வருகின்றது. எழுதிப்போடுகின்றார்கள்.மாணவர் அமைப்பிலே பொறுப்பில் இருக்கின்றவர்கள், அரசை எதிர்க்கின்றார்கள். தொடர்ந்து அச்சுறுத் தல்கள். பலர் சிதறிப் போகிறார்கள்.

2009. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெறுகின்றதே,அந்தக் கால கட்டத்தில், தாயை, தங்கையைக் காணாமல் இரண்டு ஆண்டுகள் பரிதவிக் கின்றார். முள்ளிவாய்க்கால் மரண ஓலத்துக்கு நடுவில் தாய். எப்போதாவது அங்கிருந்து தொலைபேசியில் அழைக்கின்றபோது, தம்பி அழுகிறார், கண்ணீர் விடுகிறார்.தாய் சொல்லுகிறார்: ‘குண்டு விழுகுது,சனம் சாகுது’ என்று. அந்தக் குண்டு மழைக்கு நடுவே, தாயும், தங்கையும் சிக்கிக் கிடக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் இராணுவம் இவரைச் சுற்றி வளைக்கின்றது. ‘உன்னுடைய தலைவனையே நாங்கள் ஒரு சிறிய வளையத்துக்கு உள்ளே முடக்கி விட்டோம்; உன்னைச்சுட்டுக் கொல்ல மாட்டோம்; வண்டி ஏற்றிக் கொல்லுவோம், நசுங்கிச் சாவாய்’ என்று மிரட்டுகிறார்கள்.

‘எனக்குக் கிடைத்த பெரும்பேறு’

இப்படியெல்லாம் மரணம் சுற்றி வளைத்தபோதும் அதற்கு அஞ்சாமல்
நெஞ்சுரம் காட்டிய தீபச்செல்வனுடைய நேர்காணல் நூலை வெளியிடுகின்ற
பெரும்பேறு என் வாழ்க்கையில் கிடைத்ததற்காக, நான் பவுத்தஅய்யனாருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

நெடிய இடைவெளிக்குப் பிறகு,தாயைப் பார்க்கப் போகின்றார்.முள்வேலி. சுருள் சுருளாக இரும்பு முட்கள். அதற்கு நடுவே தீபச்செல்வனின் தாய். மிகவும் உடல் மெலிந்து, உருவமே மாறிப் போய்விட்டது.அடையாளமே தெரியவில்லை. அதற்கு முன்பு தங்கை களத்துக்குச் சென்று, தற்செயலாகத் தாய் அவளைத் திரும்பக்காண நேர்ந்ததையும் குறிப்பிட்டு இருக்கின்றார். எவ்வளவு துன்பங்கள். தேநீர் வாங்கிக் கொண்டு போய்க்கொடுக்கின்றார். அந்தச் சூழலில் அந்தச்சந்திப்பைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். அங்கிருந்து வருகிறார். ஒரு கடையில் உணவுத் தட்டைக் கையில் வாங்குகிறார். அந்தத் தட்டில், அவனது தாயின் முகம் தெரிகின்றது. தன் தாய் எத்தனை நாள்கள் பட்டினியில் கிடந்து இருப்பாள்? என்று நினைக்கையில், அதில் அவனது கண்ணீர்த்துளிகள் விழுந்து கொண்டே இருக்கின்றன.

நான் கவலைப்படவில்லை,வருத்தப்பட வில்லை என்று இங்கே சொன்னாயே
தம்பி, உன் கண்ணீர்தான் ஏற்கனவே உலர்ந்து போய்விட்டதே? உறைந்து போய் விட்டதே? இனி சிந்துவதற்கு உன் கண்களில் கண்ணீர் மிச்சம் இல்லை.
போராடுகின்ற நாள்களில் நீ கவிதை எழுதுவதை ஊக்கப்படுத்தினார்களே,
அந்தத் தாயை நினைத்து நீ அழுகிறாய்.

இந்த மாணவனைப் பல்கலைக்கழகத்தில் சந்தித்தபோது, எனக்குச் சற்றுத் திகைப்பாகவும், வியப்பாகவும் இருந்தது, ஒட்டுதல் இல்லாமல், மற்ற
மாணவர் களோடு பழகாமல் இருந்தார் என்பதை, இங்கே உரை ஆற்றிய
பேராசிரியர் இரவீந்திரன் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

நான் முதன்முறை சந்தித்தபோது ஒன்றரை மணி நேரம், நான்கு நாள்களுக்கு முன்னர் இரண்டாவது முறையாகச் சந்தித்தபோது ஒரு மணி நேரம் பேசினேன். அப்போது பயணம் புறப்பட்டுக் கொண்டு இருந்ததால், அதற்கு மேல் பேச நேரம் இல்லை. மொத்தம் இரண்டரை மணி நேரம், இந்த இளைஞ னோடு நான்தான் பேசிக் கொண்டு இருந்தேன், அவர் பேச வில்லை. இங்கே நாசர் அவர்கள் சொன்னது, நூற்றுக்கு நூறு சரியான பதிவு. அவரைப் போலத் தான், நானும் பேசிக்கொண்டே இருந்தேன். தீபச்செல்வன் பேசவில்லை.

அப்போது, என் மனதில் ஏற்பட்ட எண்ணம், அதை அந்தத் தம்பி ஒப்புக் கொள்ளா விட்டாலும்கூட, ஒரு பெரும் கனமான சோகம், இந்தப் பிள்ளையை
ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றது.

இனி எத்தனை நாள்கள் வாழப்போகிறோம் என்பதைப் பற்றிக் கவலைப்
படாமல், உயிர் முடிந்தாலும் பரவாயில்லை என்று, ஆயுதங்களைத் தந்து
விட்டுப் போகிறோம், முத்துக்குமார் நெருப்புக்குத் தன் உடலை ஆகுதியாகத் தந்து, உயிராயுதத்தைத்தந்தான், நான் எழுத்து ஆயுதங்களைத்தருகிறேன் என்ற முறையிலேதான், இந்தக் கவிதைகளைப் படைத்து இருக்கின்றான். (கைதட்டல்).

விடுதலைப்புலிகளின் தமிழ் ஈழத்தொலைக்காட்சிக்கு, ஒரு நேர்காணலில்
இந்தப் பிள்ளை சொல்லி இருக்கின்றான்:

‘என் அண்ணன் களத்தில் போராடி மாவீரன் ஆகி விட்டான். களத்தில்
போராடிக் கொண்டு இருக்கின்ற வீரர்களின் பிள்ளைகளைப் பாதுகாக்கின்ற பணியை, என் தாயார் செய்து கொண்டு இருக்கின்றார்.அந்தப் பணியை அவர் பெருமிதத்தோடு செய்கின்றார். நான், இந்த விடுதலைக்கான எனது பங்களிப்பை, எழுத்தின் மூலமாகச் செய்யத் திட்ட மிட்டு விட்டேன் என்று கூறியதை,மேதகு பிரபாகரன் அவர்கள் தமிழ்ச்செல்வனிடம் குறிப்பிட்டு, இப்படிப் பட்ட பிள்ளைகள்தான் ஈழத்துக்குத்தேவை என்று சொன்னது, தனக்கு
மறக்க முடியாத, மெய்சிலிர்க்க வைக்கின்ற ஒரு அனுபவம்’

என்று, இந்த நேர்காணலில் பதிவு செய்து இருக்கின்றார்.

இந்தத் தம்பி புன்முறுவல் பூக்கின்ற போது, அதற்கு உள்ளே ஒரு சோகம்
இழையோடுவது எனக்குத் தெரிகின்றது. அதை அவர் ஒப்புக்கொள்ள மறுக் கலாம்.நான் மனித மனங்களைக் கணிக்கக்கூடியவன். அவருடைய சோகம்,
தன்னைப் பற்றியது அல்ல; தன் தாய்,தங்கையைப் பற்றியது மட்டும் அல்ல;
ஈழத்திருநாடு, கண்ணீரும் இரத்தமும் படிந்த நிலமாகி விட்டதே... விடுதலை
பெற வேண்டுமே என்ற கவலையைத் தான் அவரது எழுத்துகளில் நான்
பார்க்கின்றேன்.

கடல் கொன்ற நண்பன் என்று ஒரு கடல் கொன்ற நண்பன் தலைப்பில் எழுதி இருக்கின்றார். திரைப்படங்களில் அப்படிப்பட்ட காட்சியைப்பார்க்கும்போது, கண்களில் கண்ணீர் கொட்டும். எல்ரன் என்ற நண்பன். பள்ளிக் கூடத்தில் பழகியவன். கிளிநொச்சி மகா வித்தியாசாலையில் உடன் படித்த நண்பன். அந்த எல்ரனைப்பற்றி எழுதுகிறார். கடலில் தொழில் செய்து வாழக்கூடிய வறுமையான குடும்பம். ஆழிப்பேரலைத் தாக்குதலில் அவன் சகோதரி இறந்து போனாள். கல்வி கற்க ஆசைப்படுகிறான். முதலில் வாய்ப்பு கிடைக்க வில்லை. பிறகு பள்ளியில் சேருகிறான். பல்கலைக்கழகத்துக்கு வருகிறான். கல்வி பெறுகிறான். ஆங்கிலத்தைப் பழுதறக்கற்று, தன் பகுதியில் இருக்கின்ற
பிள்ளைகளுக்கும் கற்றுத் தருகிறான். முடியை நீளமாக வளர்த்துக் கொள்ளு
வான். ‘முடியை வெட்டுடா’ என்று சொல்லுவேன். அவன், நல்ல வலுவாக
இருந்தான். புலிகள் அமைப்பிலே போராளி ஆனான். கடலில் நன்கு நீந்தக்
கூடியவன். பெருந்தாக்குதல் காலங்களிலும் படகு ஏறி வந்தவன். அவனது
கல்வியால், யாழ் பல்கலைக்கழகத்தில்துணை விரிவுரையாளர் தேர்வுக்கு
அவனுக்கு அழைப்பு வந்து இருக்கிறது.

வடமராட்சி கடலில், அவன் சகோதரிகளின் குழந்தைகளைக் கடலில் குளிப்
பாட்டுகிறான். பிறகு, அவர்கள் கடற்கரையில் நிற்கிறார்கள், இவன் கடலுக் குள் செல்லுகிறான். மீளவில்லை. மாமனைக் காணவில்லையே என்று, குழந்தைகள் அழுகின்றன.மற்றவர்கள், ஓடி வந்து தேடுகிறார்கள். சற்று நேரத்தில், எல்ரனின் உயிர் அற்ற சடலம்தான் கிடைக்கின்றது.

இதை எழுதுகிறார் தீபச் செல்வன்.

‘என் நண்பனைக் கடல் கொன்று விட்டது. இந்தக் கடலோடு நீந்தி விளை -யாடிய இவனையா கடல் கொன்றது? கடலில் படகு செலுத்துவானே, அவனை யா கொன்றது? ஏற்கனவே, தன் சகோதரியைப் பறிகொடுத்தானே? இப்போது இவனையும் பறித்துக் கொண்டதே’ என்று,நண்பனுடைய இறப்பை, அந்த
சோகத்தைப் பதிவு செய்கிறார்.

பாலச்சந்திரனின் இரண்டு விழிகளைப்பற்றி மட்டும் எழுதவில்லை. எட்டுத்
தமிழ் இளைஞர்களின் கைகளைக் கட்டி,கண்களைக் கட்டி, அம்மணமாக இழுத்து வருகின்றார்கள் சிங்கள இராணுவ வெறிநாய்கள். அவர்களைத் தரையில் அமர வைத்து, பின்னால் இடுப்பில் எட்டி உதைக்கின்றார்கள், உச்சந் தலையில் சுடுகின்றார்கள். அவர்கள் கபாலம் பிளந்து, இரத்தம் தெறிக்கின்றது. இந்தக் கொடூரக் காட்சிகளை, சேனல் 4 தொலைக்காட்சி, 2010 ஆம் ஆண்டு
ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஒளிபரப்பிய போது, உலகம் திடுக்கிட்டதே?

நான் அடிவயிறு வலிக்க, ஆயிரக்கணக்கான மேடைகளில், அந்தக் கொடுமை
களை விவரித்துக் கதறி இருக்கின்றேன்.உலகத்துக்கு ஆடை அணிகின்ற
கலையைக் கற்றுக் கொடுத்தவன் எங்கள் மூதாதை தமிழன். காட்டுமிராண்டி களாக மற்றவர்கள் வாழ்ந்த போது, பட்டுத்துகில்களை ரோமுக்கும்,கிரேக்கத் துக்கும், மெசபடோமியாவுக்கும் அனுப்பி வைத்தானே? இவனுக்கா இந்த நிலைமை?உலகத்தின் மனசாட்சியின் கதவுகளைத் தட்டிக் கேட்கிறோம்.

அந்த எட்டு இளைஞர்களின் உடல்கள் தரையில் சிதறிக் கிடக்கின்றதே, அதைக் கவிதையாக எழுதுகிறான் தீபச்செல்வன்.

தேங்கிய நீரில் பிடரிகளும் கண்களும் துடித்து மிதந்து கொண்டு இருந்தன
நிர்வாணம் அனைவரது ஆடைகளையும் களைந்து விட்டிருந்தது கோணல் துவக்கு, தலையின் பின்புறம் துளையிடுகிறது நிலம் பரிதாபமான இரத்தத் தைச்சுமக்கிறது எங்கும் ரத்தம் எங்கும் குருதி

தம்பி தீபச்செல்வன், கவிஞர் விரும்பியது போல, நாசர் விரும்பியது போல, நீ பல ஆண்டுகள் வாழ வேண்டும் என நானும் ஏங்குகிறேன்.

உயிர்த்துடிப்புள்ள கவிதைகள்

உயிர்த்துடிப்பு உள்ள கவிதைகளைத்தருகின்ற இந்த இளைஞன், பல ஆண்டு கள் வாழ்ந்து, தமிழ் ஈழத்திருநாட்டின் கவிஞனாக அவன் உலவ வேண்டும் என்று இந்த அரங்கில் இருப்பவர்கள் மட்டும் அல்ல,உலகெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவருமே விரும்புகின்றோம். (பலத்த கைதட்டல்).

தம்பி உனக்கு மரணம் இல்லை;கவிஞனுக்கு மரணம் இல்லை; அவன்,
நூற்றாண்டுகளின் கரைகளைஉடைத்துக் கொண்டு வாழ்வான். அது,
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனாக இருக்கட்டும், உயிரோடு இருக் கின்றாரா? இல்லையா? என்று நம் உள்ளம் ஏங்கித் தவிக்கின்றதே, புதுவை
இரத்தினதுரையாகட்டும், அவர்கள் வாழ்கிறார்கள், மரணத்தை வென்று
வாழ்வார்கள்.

உன் கவிதைகளைப் படிக்கின்ற ஒவ்வொரு இளைஞனுக்கும்,ஒவ்வொரு வீர நங்கைக்கும், ஆயுதம் ஏந்திப் போராடக்கூடிய அளவுக்கு,உணர்ச்சியை ஊட்டக் கூடிய அளவுக்கு உன் கவிதைகளில் உயிர்த்துடிப்பு இருக்கின்றது.

இசைப்பிரியா

இசைப்பிரியாவைப் பற்றி எழுதுகிறார். பெற்றோர் அவளுக்குச் சூட்டிய பெயர்
சோபனா. எழில் வடிவமானவள். அந்த அழகு மயக்கும் சக்தி வாய்ந்தது அல்ல;
பூசிக்கத்தக்கது. அவள் நன்றாக யாழ் மீட்டக் கூடியவள். இருதயங்களை ஈர்க்கக் கூடியது அவளது குரலின் இனிமை. அவள் தமிழ் ஈழ விடுதலைப்புலி களின் ஊடகப் பிரிவான நிதர்சனம் தொலைக்காட்சியில் இருந்தாள். அதன் பின்பு, செய்திப் பொறுப்பாளராக இருந்தாள். ஒளி வீச்சுகளை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். அதன் பின்னணியில் அவளது குரல் ஒலித்துக்கொண்டு இருக்கும். அவள், குறும் படங்களைத் தயாரித்து இருக்கிறாள். ராஜகுமாரியின் மகள், வேலி என்ற ராஜகுமாரியின் மகள், வேலி குறும்படங்களைத் தயாரித்து
இருக்கிறாள். சில படங்களில் நடித்து இருக்கிறாள். ஈழத்தமிழர்களின் இதயங் களில், நிறைந்த இடத்தைப்பெற்று இருந்தாள்.

துயிலறைக் காவியம் என்ற நிகழ்வைத் துயிலறைக் காவியம் தயாரித்து, செவ்வாய்க்கிழமை தோறும் ஒளிபரப்பி வந்தார்கள். அவை,கல்லறைகளுக்கு உள்ளே துயில்கின்ற மாவீரர்களைப் பற்றிய வீரசரிதங்கள்.தாயக விடுதலைக் காக, ஆயுதம் ஏந்திஇரத்தம் சிந்தி உயிர் நீத்தார்களே மாவீரர்கள், அவர்களைப் பற்றி,அவர்களது பெற்றோர்கள் சொல்வது,உடன்பிறந்தாரின் நினைவுகள்,
நண்பர்கள், கேளிர் கூறுவது, சக போராளிகளின் கருத்து, தளபதிகள்,தலைவர் களின் பாராட்டு உரைகள், இவற்றை எல்லாம் பதிவு செய்து தருவதுதான், துயிலறைக்காவியம்.அதைத்தயாரிக்கின்ற பணியில் ஈடுபட்டாள் இசைப்பிரியா.

அவரைப் பற்றி எழுதுகிறார் தீபச்செல்வன். அவளது சிதைந்த உடலை,அந்தப் புகைப்படத்தைக் கண்டு துடித்துப் போனவனாக எழுதுகிறார். இசைப்பிரியா வை சிங்கள வெறிநாய்கள் நாசப்படுத்திக் கொன்றார்கள். நான் முதலில் தயாரித்த ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் இரத்தம் என்ற குறுந்தட்டிலே, ஒரு அரை நிமிடம் அந்தக் காட்சியைச் சேர்த்தேன். என் மனம் கேட்கவில்லை. இரண்டாவது பதிப்பிலே அதை நான் மறைத்துவிட்டேன். முதல் பதிப்பிலேயே அதைப் போடுவதா? இல்லையா? என்று பல நாள்களாக என் மனதுக்குள்ளே ஒரு போராட்டம்.

அப்பொழுது ஒரு ஈழத்துச் சகோதரர்,தன் குடும்பத்தோடு என்னைப் பார்க்க
வந்தார். அவர்களிடம் கேட்டேன்.அவர்கள் சொன்னார்கள்: இந்தக் கொடுமை உலகத்துக்குத் தெரிய வேண்டுமே அண்ணா.. அதை ஆபாசமாக நினைக்க மாட்டார்கள் என்றார்கள். அதற்குப் பிறகுதான்அதைச் சேர்த்தேன். பிறகு நீக்கி
விட்டேன்.

2010 டிசம்பர் 2ஆம் நாள், சேனல்4 காணொளியாக அந்தக் காட்சியை ஒளிபரப்பி இருந்தது. அது மட்டும் அல்ல, அந்தத் தங்கையை எப்படயெல்லாம் நாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினோம் என சிங்கள மொழியிலே அவர்கள் பேசிக்கொள்வதை, நாங்கள் வெளியிட முடியாது, அது இருதயத் தைப் பிளக்கக்கூடியது என்றும், சேனல் 4 தொலைக்காட்சி அறிவித்தது.

உன்னை எப்படித் தின்றார்கள்? உன்னை எப்படிக் கொன்று சிதைத்தார்கள் என்பதை நீயே வாசித்துக் கொண்டு இருக்கிறாய்அம்மா

என்று எழுதுகிறார் தீபச்செல்வன்.குழந்தைகளைப் பற்றியும் எழுதுகிறார்.
அன்புச் சகோதரர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் இந்தக் கவிதை நூல்களை வாங்கிப் படியுங்கள்.ஒவ்வொரு வீட்டிலும் இந்த நூல்கள் இடம் பெற வேண்டும்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று. Child is the father of the man. மனிதனுக்கே தகப்பன் குழந்தை என்று வோர்ட்ஸ் வொர்த் சொன்னார். குழந்தைகளிடம் கோபம் இருக்காது. சின்ன விசயத்துக்காகத்தான் கோபம். ஆனால், அதில் பகை இருக்காது. வெறுப்பும், பகையும் இல்லாதவர்கள் குழந்தைகள். அந்தக் குழந்தை களைப் பற்றி, அவர்கள் கொல்லப்பட்டதைப் பற்றி, அவர்கள் இரத்தம் அந்த நிலமெல்லாம் படிந்து கிடப்பதைப் பற்றி, தீபச்செல்வன் எழுதிஇருக்கக் கூடிய அத்தனைக் கவிதை களும், நம் நெஞ்சிலே நெருப்பை மூட்டும்.

இறுதிநாளில் வழிதவறிப் போனவர்கள்,காணாமல் போனவர்களைப் பற்றிச்
சொல்லுகிறபோது,

நழுவி விழுந்த குழந்தையின் அழுகை எப்படி அடங்கி இருக்கும்?

கைதவறி விழுந்த சிறுமியின் இரவு எப்படி முடிந்து இருக்கும்?

தனித்து விடப்பட்டுச் சிக்கிக்கொண்ட சிறுவனின் கதி என்ன ஆகி இருக்கும்?

செல், உயிரைத் தின்னும் என்பதும்,குழந்தைகளைக் கொன்றுபோடும் என்பதும்,

அந்தச் சிறுவர்கள் அறிந்து இருந்தார்கள்.

குழந்தைகளின் இரத்தம் படிந்து இருந்த அந்த நிலம் தோற்றுப் போனது.அதன் பிறகு தீபச்செல்வன் கேட்கின்ற கேள்விகள்,தமிழர்கள் நெஞ்சில் எழ வேண்டிய கேள்விகள். மனிதகுலத்தின் மனசாட்சிக்கு முன்னாலே வைக்கப் பட வேண்டிய கேள்விகள். அவர் கேட்கிறார்:

கொலைவெறி என்று பயந்து இருந்த அந்தக் கண்களை என்ன செய்தீர்கள்?

எல்லோர் முகங்களையும் பார்த்துத் திகைத்துத்திகைத்துத் தவித்துப்போன
அந்தக் குழந்தையை என்ன செய்தீர்கள்?

தனித்து மாட்டிக்கொண்ட அந்தச் சிறுவனை என்ன செய்தீர்கள்?

சப்பாத்துகள் ஏன் நெருங்கின? பயங்கரமான இராணுவச் சீருடைகள் ஏன் நெருங்கின?

கொலை செய்யும் துவக்குகள் ஏன் நெருங்கின?

அழித்துவிடு என்ற கட்டளைகள் ஏன் பிறந்தன? என்று கேட்கிறார்.

ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறார்.இரத்தினபுரத்தில், சோதிமணியம்மா என் -கின்ற ஒரு ஈழத்துத் தாய். அவரது இரண்டு பிள்ளைகளும், முள்ளி வாய்க் காலுக்கு முன்பே யுத்தகளங்களில் கொல்லப்பட்டு விட்டார்கள். ஆனால்,
அவர்களது புகைப்படம் கூட அவரிடம் இல்லை. ஆவணப்படுத்தி பத்திரப்
படுத்தி வைத்து இருந்தார்களே, அவை அனைத்தும்,இந்த அவலங்களோடு
அழிந்து போய் விட்டன. எரிந்து போன வீடுகளின் தகரச்சாம்பலில் புத்தர்
அமர்ந்து இருக்கிறார். அந்தக் கவிதை வரியில் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது.

செய்தி வருகிறது. உன் இரண்டு பிள்ளைகளின் கல்லறைகளும் அழிக்கப்
பட்டு விட்டன. புகைப்படம் கிடையாது. எதுவுமே இல்லை. மனிதர்கள் வாழ
முடியாத தகரக் கொட்டகைகளுக்கு அழைத்து வந்து அங்கே பூட்டுகிறார்கள்.
சோதிமணியம்மா தன் வீட்டில் சாமி படங்களுக்குப் பக்கத்தில் இரண்டு சிறு
கற்களை வைத்து இருக்கிறார். அதை வைத்துக் கும்பிட்டுக் கொண்டு இருக் கின்றார். அப்போது வந்து கேட்கிறார்கள். அதற்கு அவள், இந்த இரண்டு கற்களும்தான் என் பிள்ளைகள் என்று.

இதைவிடக் கொடுமையானது சிவக்கொழுந்தம்மாளின் கதை. அவர், அக்கராயன் பகுதியைச் சேர்ந்தவர். தீபச்செல்வன் அவரைப் பற்றியும் எழுது கிறார். சிவக்கொழுந்தம்மாளின் கணவர், யுத்தத்தில் களமாடி இறந்துபோனார். மூன்று பிள்ளைகள் புலிப்படையில் சேர்ந்து போராடி மடிந்து மாவீரர்கள் ஆனார்கள்.

நான்காவது மகன், முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் காணாமல் போய் விட்டான். இப்பொழுது தகரக்ட்டகையில் கொண்டு வந்து அடைக்கிறார்கள். அவரது மூன்று மகன்களின் புலிப்படைச் சீருடைகளும் அவரிடம் இருக் கின்றன. அவற்றைப் பத்திரப்படுத்தி வைத்து இருக்கின்றார். சுவரில் மாட்டி வைத்து இருக்கின்றார். சிங்கள அதிகாரி ஒருவன் வீட்டுக்கு உள்ளே நுழைந்து பார்த்துக் கேட்கிறான், புலிப்படைச் சீருடையை வைத்து இருக்கிறாயே?என்று.

வேண்டுமானால் என்னையும் சுட்டுக்கொன்று விட்டுப் போ; இந்தச்சீருடைகள் இங்குதான் இருக்கும் என்று பதில் சொல்லுகிறார்.அந்த அதிகாரிக்குமனசாட்சி ஒருவேளை உறுத்தி இருக்கலாம்; ஒன்றும் பேசாமல் திரும்பிப்போய்விடு கிறான். தீபச்செல்வன்,இதைப் பதிவு செய்கிறான்.

சிறந்த தாயும், சிறந்த குடிமகனும்

செல்வனே, நீ எழுதியதைப் படித்தபோது, என் மனதில் என்ன எண்ணம்
தோன்றியது தெரியுமா? விடுதலைப்புலிகளை ஆதரிப்பேன் என்று சொன்ன தற்காக, 19 மாத காலம் வேலூர் சிறையில் அடைபட்டுக் கிடந்தபோது,நான் எண்ணற்ற நூல்களைப் படித்தேன்.பகத்சிங் பற்றிய அனைத்து நூல்களையும் படித்தேன். பகத்சிங் எழுதிய நாள்குறிப்புகளைப் படித்தேன். அவர் எழுதிய மேலும் நான்கு நூல்கள், நமக்குக் கிடைக்காமலேயே போய் விட்டன. அவற் றைப் பாதுகாக்கச்சொல்லி வைத்து இருந்த இடத்தில்,அவர்கள் வெள்ளை அரசாங்கத்தின் மிரட்டலுக்குப் பயந்து, ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சி னார்கள். அந்தநூல்கள் காணாமல் போய்விட்டன. எரித்து இருக்கலாம், அழித்து இருக்கலாம். கிடைக்கவே இல்லை.பகத்சிங்கின் ஒரு நூலை, ஜீவா அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து, நான் ஏன் நாத்திகன்ஆனேன்? என்ற ஏன் நாத்திகன் ஆனேன்? தலைப்பில், தந்தை பெரியார் அவர்கள் வெளியிட்டார்கள். இதே மார்ச் திங்கள் 23 ஆம் நாளில்தான் பகத்சிங்கும் அவரது தோழர்கள், ராஜ் குரு, சுக்தேவ் ஆகியோர், லாகூர் சிறையில் தூக்கில் இடப்பட்டார்கள்.

கடைசி நாள்களில், தனது நாள்குறிப்பில் பகத்சிங் நிறைய எழுதி இருக்கின் றார்.அதில் அவர் சொல்லுகிறார். யார் சிறந்த குடிமகன்? தெர்மாபிளே யுத்தத் துக்காக,ஸ்பார்ட்டாவின் சபையில், 300 வீரர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள் லியோனிடாஸ் தலைமையில். பெடார்க்டஸ் என்கின்ற ஒருவனுக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை. அப்போது அவன் சொல்லு கிறான், என்னைவிடச் சிறந்த 300 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டு விட்டார்கள் என்று. பகத்சிங் சொல்லுகிறான், அவன் ஒரு சிறந்த குடிமகன் என்று. இந்த 300 ஸ்பார்ட்டா வீரர்களைப் பற்றிய
திரைப்படத்தைத் தன் சகாக் களுக்குப்போட்டுக் காட்டினார் பிரபாகரன்.
அத்தகைய வீரத்தோடு போராடினார்கள் விடுதலைப்புலிகள்.

அடுத்த கேள்வி: யார் சிறந்த தாய்? பகத்சிங் எழுதுகிறான்: ஸ்பார்ட்டாவில்
ஒரு தாயின் ஐந்து மகன்கள், யுத்த களத்தில் போரிடச் சென்றார்கள்.ஒருவன் பதற்றத்தோடு ஓடி வந்து,இந்தத் தாயைப் பார்க்கிறான். என்ன சேதி சொல்? என்கிறாள்.

உன்னுடைய ஐந்து மகன்களும்கொல்லப்பட்டு விட்டார்கள்.

உடனே அந்தத் தாய் சொல்லுகிறாள்:அட முட்டாளே,இதையா நான் கேட்டேன்? என் பிள்ளைகள் என்ன ஆனார்கள் என்றா கேட்டேன்? போரின்
முடிவு என்ன ஆயிற்று? அதைச் சொல் என்கிறாள். (பலத்த கைதட்டல்)
நாம் வென்று விட்டோம் என்கிறான்.

அப்படியா மகிழ்ச்சி. நான் தேவதைகளுக்கு நன்றி செலுத்த ஆலயத்துக்குப்
போகிறேன் என்கிறாள். ‘அவள்தான் சிறந்த தாய்’ என்று பகத்சிங் எழுதுகிறார்.

நான், சிவக்கொழுந்தம்மாவை அப்படித்தான் பார்க்கிறேன். (கைதட்டல்). இப்படி எத்தனைத் தாய்மார்கள் ஈழத்தில்?அவர்கள் சிந்திய செங்குருதி ஒரு
போதும் வீண்போகாது.

எத்தனைக் குழந்தைகளைக் கொன்றார்கள்? அவர்கள் பயங்கரவாதிகளா?
ஆயுதம் ஏந்தினார்களா? பல்லாயிரக்கணக்கான தாய்மார்களை வன்கொடுமை செய்தார்கள்? கருத்தரித்த தாய்மார்களின் வயிற்றைக் கிழித்துக்கருவை வெளியில் எடுத்து வீசி எறிந்தார்களே? இந்தப் படுகொலை களுக்கு இந்த உலகம் என்ன பதில்சொல்லப் போகிறது?

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை.தமிழ் இனத்தைக் கரு அறுக்க வேண்டும்
என்பதற்காகத்தான், குழந்தைகளைக் கொன்றான், சிறுவர்களைக் கொன்றான்,
பாலச்சந்திரனைக் கொன்றான்.

ஆனால், அழிக்க முடியாது; ஒருபோதும் அழிக்க முடியாது. அங்கே அவர்கள்
சிந்திய இரத்தத்துளிகள், இங்கே மாணவர்களின் நெஞ்சங்களில் எரிமலையின் சீற்றமாகத் தானாக எழுகிறது. இது, இயற்கையின் நியதி.யாரும் திட்டமிட்டு ஏற்படுத்தியது அல்ல. கந்தகக் கிடங்கில் பொறி விழுவதைப் போல,லயோலா கல்லூரி மாணவர்கள் ஒரு போர்க்களத்தை அமைத்துத் தொடங்கியவுடனே, இந்த நாட்டில் இருக்கின்ற இலட்சோபலட்சம் மாணவர்களின் குரல், ஈழம் ஈழம்,சுதந்திரத் தமிழ் ஈழம்; பிரபாகரன்,பிரபாகரன், பிரபாகரன் என ஒலிக்கத்
தொடங்கி விட்டது. (பலத்தகைதட்டல்). இந்தக் காட்சியைப்பார்க்கும்போது, எவ்வளவு மகிழ்ச்சியாகஇருக்கின்றது தெரியுமா?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

நன்றி:- சங்கொலி

No comments:

Post a Comment