எங்கள் நெஞ்சின்
நெருப்பு அணையாது!-வைகோ
இராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் தொடுத்ததாக கருணாநிதியின் பாசிச அரசாங்கத்தால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, மறுமலர்ச்சி தி.மு.க., பெரியார்
திராவிடர் கழகத் தோழர்கள் தேசப்பாதுகாப்புச் சட்டத்தில், கைது செய்யப் பட்டதைக் கண்டித்து,
கோவையில் 8.6.2009 அன்று நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத் தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று உரையாற்றினார்.
அவரது உரையில் இருந்து...
இனி என்று விடியல்? இருள் எப்பொழுது விலகும்? என்று கவலைப் பட்டுக் கொண்டு இருக்கிற உலகத் தமிழர்களின் பார்வை கவனம் எல்லாம் ஆறரைக் கோடி தமிழ் மக்கள் வாழுகிற தமிழகத்தின் பக்கம் திரும்பி இருக்கிற நேரத்தில், இனி அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதை வளரும் இளம் தலை முறையினரிடம் எடுத்துச் சொல்கின்ற வகையில், அருமைச் சகோதரர்
கொளத்தூர் மணி அவர்கள், அரியபல கருத்துகளை காலத்தின் அருமை கருதி இரத்தினச் சுருக்கமாகக் கூறி அமர்ந்து இருக்கின்றார்.
விடுதலை இராஜேந்திரன் சில வினாக்களை எழுப்பினார். பெரியார் திராவிடர் கழகத்தின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரான, அதனுடைய பொதுச் செயலாளர், சிறைப்பறவை என்று விளிக்கத்தக்க வகையில், அடக்கு முறைக்குப் பலமுறை ஆளாகிய கோவை இராமகிருஷ்ணன் அவர்கள்மீதும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோவை மாநகர் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அருமைத்தம்பி புதூர் சந்திரசேகர் மீதும், பெரம்பலூர் மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் செயலாளர் அருமைச் சகோதரர் லட்சுமணன் அவர்கள்மீதும் தேசப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டு
இருக்கிறது. இரண்டு இயக்கங்களையும் சேர்ந்த தோழர்கள் பலர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஈழத்தில் எங்கள் சொந்த சகோதர, சகோதரிகளைக் கொன்று ஒழிப்பதற்கு, இனக்கொலையைத் தீவிரப்படுத்துவதற்கு எங்கள் தமிழ் மண்ணின் வழியாக, ஆயுதங்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன என்ற செய்தி காட்டுத் தீயாகப் பரவியபோது, அதைத் தடுக்கவேண்டும் என்ற தன்மான உணர்வோடு, அறவழியில் தடுத்து நிறுத்தியதற்காக தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவி இருக்கிறார் தமிழக முதல் அமைச்சர்.
அந்தச் செய்தி வந்த நேரத்தில், நான் கோவை இராமகிருஷ்ணனிடம் தொலை பேசியில் பேசி னேன். ‘செல்லும் வாகனங்களை நாங்கள் அறவழியில் தடுக்கிறோம்; வன்முறைக்கு துளியளவும் இடம் கொடுக்காத வகையில் நாங்கள் தடுத்து நிறுத்துகிறோம்;அறப்போர் நடத்துகிறோம்’என்றுசொன்னார்.
தமிழகத்தில் மான உணர்ச்சி செத்துப் போய்விடவில்லை என்பதற்கு அடையாளமான போராட்டம்தான் உங்கள் போராட்டம். வாழ்த்துகிறேன். என்
இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என்றேன்.
இதில் என்ன தவறு? இனிமேலும் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு வாகனங்கள் ஈழத் தமிழ் மக்களைக்கொல்வதற்குப் புறப்படுமானால், அதைத் தடுப்போம்
- மறிப்போம் - பறிப்போம் என்று நானே சொன்னேன்.வழக்கு போடு. இன்னும் சொல்வேன் நான். இந்திய அரசுதான் இங்கிருந்து ஆயுதங்களைத் தந்தது,ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்வதற்கு.
நான் இராஜபக்சேவுக்கு இந்த மண்ணில் இருந்து தெரிவிக்கிறேன். விடுதலைப் புலிகளை ஆதரித்தவர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்று நீ கொக்கரிக் கிறாய் . விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்று உன் சகோதரன் கொத்தபயா ராஜபக்சே கொக்கரிக்கிறான். இப்பொழுது தான் நீங்கள் வினையை விதைத்து இருக்கிறீர்கள். இனிமேல்தான் விபரீதத்தை
அறுவடை செய்யப் போகிறீர்கள்.
தமிழகத்தில் உணர்ச்சி செத்துப்போய்விடவில்லை. 14 பேர் தீக்குளித்து மடிந்து இருக்கிறார்கள். வீரத்தியாகி முத்துக்குமார் பற்றவைத்த அந்த நெருப்பு, 14வீரத் தமிழ் இளைஞர்கள் தணலுக்கு தங்கள் உயிர்களைத் தந்து இருக்கிறார்கள். அந்த நெருப்பு சுடுகாட்டில் அணைந்து போய் இருக்கலாம். எங்கள் நெஞ்சில் எரிகிறது. தன்மான உணர்வுள்ள வாலிபர்கள் நெஞ்சில் எரிந்து கொண்டு
இருக்கிறது.
கொளத்தூர் மணி அவர்கள் குறிப்பிட்டதைப்போல,என்றோ நடந்தசம்பவங்கள் 1960, 1970 தொடக்கத்தில் நடைபெற்ற சம்பவங்கள்தான், ஆயுதப் போராட்டத் -துக்கு ஈழத்து இளம் பிள்ளைகளைக் கொண்டுவந்து நிறுத்தியது. புதிய புலிகள் தான், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளாக ஆனார்கள். அதைவிட ஆயிரம்மடங்கு
கொடுமை இப்பொழுது நடத்தப்பட்டு இருக்கிறது.இதைத் தமிழக மக்கள் மனதில் விதைக்கவேண்டிய கடமை நமக்கு உண்டு.
அதற்காக, இந்தத் தேசத்தின் பாதுகாப்புக்கு எதிராக வாகனங்களைக் குறுக்கே மறித்தது சரிதானா? என்று சில மேதாவிகள் கேட்கலாம். ஈழத்தமிழ் மக்களைப்
படுகொலை செய்வதற்கு இந்திய அரசு ஆயுதம் அனுப்பியது-ராடார் கொடுத்தது. தமிழர்களைக் கொலைசெய்வதற்கு மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு
மக்கள் வாக்கு அளித்து அவர்களுக்கு ஆதரவு தந்தார்களா? யார் அந்த அனுமதி -யைக் கொடுத்தது? நாடாளுமன்றத்தில் அதற்கு உரிய அனுமதி கிடைத்ததா?
1998 ஆம் ஆண்டு அடல்பிகாரி வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருக்கிற போது ஈழத்தில் தமிழர்கள் இரத்தம் ஓடுகிறது. படுகொலை செய்யப்படு கிறார்கள் என்ற குரல் வேதனைக் குரலாக எழுந்தபோது அவர் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஆயுதங்கள் தருவது இல்லை, ஆயுதங்கள் விற்பது இல்லை என்று ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு. அதை மீறி இவர்கள் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தார்களே?
இந்திய அரசின் துரோகத்தை நாங்கள் மக்கள் மன்றத்தில் சொன்னோம். இன்றைக்கு நாதியற்றுப் போய் விட்டார்கள் தமிழர்கள் என்ற நிலையை உருவாக்கு கிறார்கள். நாங்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தியாவின் பாதுகாப்புக்கு இராமகிருஷ்ணன் விரோதமானவர் அல்ல; இலட்சுமணனோ, சந்திரசேகரோ, இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரிகள் அல்ல. இந்த அடக்குமுறைக்கு அவர்கள் பயப்படுகிறவர்களும் அல்ல.
மூன்றரை ஆண்டுகள் தடா கைதியாக சிறையில் அடக்குமுறையை ஏற்றவர் தான் கோவை இராமகிருஷ்ணன். இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கு கின்ற சகோதரர் கொளத்தூர் மணி எண்ணற்ற முறை சிறைக்குச் சென்றவர் தான். பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இப்பொழுதுதான் விடுதலை ஆகி வந்து இருக்கிறார். எங்களாலா இந்த நாட்டுக்கு ஆபத்து? இந்த நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து? கிடையாது.
இந்தநாட்டின் பாதுகாப்புக்குக் கேடு விளைவித்தது மன்மோகன் சிங் அரசு தான். 1965 மொழிப் போராட்டத்தை இராஜேந்திரன் நினைவூட்டினார். 1967
இல் அண்ணா முதல்வர் ஆனார். மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுத்தது. இரயில் பெட்டிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.வன் முறை பரவிவிட்டது என்று காங்கிரஸ்காரர்கள் கூச்சல் எழுப்பினர். சட்ட மன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இரயில் பெட்டிகளை மாணவர்கள்
தீயிட்டுக் கொளுத்தி இருக்கிறார்களே, இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக் கிறது? ஏன் நீங்கள் காவல் துறையைப் பயன்படுத்தவில்லை? எதற்கு உங்களுக்கு அரசாங்கம்? எதற்கு உங்களுக்கு அதிகாரம்? என்று கேட்டார்கள்.
அதற்கு முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். ‘நான்கு இரயில் பெட்டிகளைக் கொளுத்தினால், திரும்ப நான்கு இரயில் பெட்டிகளைத் தயாரிக்க முடியும். ஒரு மாணவன் உயிர் போய்விட்டால், அவனது உயிரைத் திரும்பக்கொடுக்க முடியாது’ என்றார்.
அங்கே ஈழத்தில் பச்சிளம் குழந்தை களும் கொல்லப் படுகிறார்கள், நமது சகோதரிகள் கொல்லப்படுகிறார்கள், தமிழர்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிகிறார்கள். இந்திய அரசின் ஆயுதங்கள் போவதால், தமிழர்கள் கொல்லப் படுகிறார்கள் என்ற செய்தி பரவியதால், அதைத் தடுக்கின்ற உணர்வு வராதா? பச்சிளம் குழந்தைகளையும் தாய்மார்களையும் கொல்வதற்கு ஆயுதங் களோடு வருகின்ற ஒருவனைத் தடுப்பதுதான் மனிதநேயம். தடுக்கின்ற முயற்சி யில் ஈடு படும்போது, அது எல்லை மீறிக்கூடப் போகலாம்.
இந்த உணர்வில்தானே இராமகிருஷ்ணனும் தோழர்களும் இந்த கோவை மாநகரத்து வீதிகளில் திரண்டார்கள். அவர்களை சிறையில் நீங்கள் அடைக் -கலாம். உலகம் முழுவதும் இருக்கிற தமிழர்கள்,கோடிக்கணக்கான தமிழர்கள், தரணி எங்கும் பல கண்டங்களில் சிதறிக்கிடக்கின்ற தமிழர்கள் மனங்களில்,
கோயம்புத்தூரில் ஆயுதங்கள் ஏற்றிச் செல்கின்ற இராணுவ வண்டிகளைத் தமிழர்கள் தடுத்தார்கள் என்ற ஒருசெய்தி, தமிழனின் தன்மானத்தை, தாய்த்
தமிழகத்தில் தன்மானம் செத்துவிடவில்லை என்ற உணர்வை உண்டாக்கிக் காட்டியது.
நடந்து முடிந்திருக்கிற படுகொலைகளுக்கு இந்திய அரசுதான் முழுமுதல் காரணம் என்று நாங்கள் குற்றம் சாட்டுகின்றோம். ஐ.நா. மன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிய வேண்டிய இந்திய அரசு,இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்டது என்ற செடீநுதியை இங்கே குறிப்பிட்டார்கள். ஏனென்றால் இந்த யுத்தத்தை நடத்திய குற்றவாளி இந்திய அரசு. ஆதாரம் இல்லாமல் நான் எதுவும் பேசவில்லை. அவசரப்பட்டு நான் எதையும் பேசவில்லை.
நாங்கள் தேர்தலுக்காகவும் பதவிகளுக்காகவும் கட்சி நடத்துகிறவர்கள் அல்ல. பேரறிஞர் அண்ணா சொன்னதைப் போல அதை ஒரு கருவியாகப்பயன்படுத்து -வோம். அதைப் பயன் படுத்தியதால்தான் என் சகோதரர் கணேசமூர்த்தி நாடாளு மன்றத்துக்குச் சென்றார். இன்று பேசி இருக்கிறார். அவருக்குக் கிடைத்த குறைந்த நேரத்தில், இந்திய அரசுதான் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தது என்று குற்றம் சாட்டி, நாடாளுமன்றத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
தமிழ்நாட்டில் தமிழ் இனத்தின் தலைவர் என்று தனக்குத்தானே மகுடம்சூட்டிக் கொண்ட கருணாநிதி, சோனியா காந்தி அம்மையாருடைய சலுகைகளை எதிர் பார்த்தார். அமைச்சர் அவையில் அவர் கேட்ட இலாகாக்கள் கிடைத்தன. சோனியா காந்தியைப் பொறுத்தவரை மிக சாதுர்யமாகத் திட்டமிட்டார். நாம்
எது செய்தாலும், தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் கருணாநிதி எதிர்க்கப் போவது இல்லை என்று தெரிந்து கொண்டு திட்டமிட்டார். இதுதான் தமிழர் களின் வரலாற்றில் நேர்ந்த மிகப்பெரிய அழிவுக்கான காரணங்களில் ஒன்று ஆகும்.
கோவையில் இராமகிருஷ்ணன் ஆயுதம் தாங்கிவந்த வாகனத்தைத் தடுத்தார் என்று வழக்குப் போடுகிற கருணாநிதியைக் கேட்கிறேன். நாங்கள் செல்கிற
வாகனத்தில், எங்கள் மக்களைக் கொல்வதற்கான ஆயுதங்களை எடுத்துச் செல்கிறாயா என்று, இந்தியாவைப் பாதுகாக்க ஆயுதம் என்று நாங்கள் நினைக்க வில்லை, வேறு நாடுகளில் இருந்து வருகிற ஆபத்தைத் தடுக்கப் போகிற ஆயுதங்களை நாங்கள் தடுத்து நிறுத்துகிறோம் என்று நாங்கள் நினைக்க வில்லை, எங்கள் மக்களைக் கொன்று குவிக்கப்பதற்கு இந்தஆயுதம் அனுப்பப்படுகிறது என்ற எண்ணம் வலுத்ததால் நாங்கள் தடுத்தோம்.
காரணம் இல்லாமல் தடுக்கவில்லையே? கடந்த ஐந்து ஆண்டுக் காலத்தில்
இலங்கைக்கு உதவிய உங்களுடைய நடவடிக்கைகளால், அடுத்தடுத்து அனுப்பி வைத்த ஆயுதங்கள், அந்த அடிப்படையில் மீண்டும் இங்கிருந்து
ஆயுதங்கள் செல்கின்றன, பீரங்கிகள் செல்கின்றன, கனரக ஆயுதங்கள் செல் கின்றன என்ற செய்தி வந்தபோது நாங்கள் நம்பினோம். இதில் என்ன தவறு?
நீ யோக்கியனா? ஆயுதம் கொடுக்காத யோக்கியனா? நாங்கள் தடுத்தது தவறு
என்றால், ஐந்து ஆண்டுகளாக நீ ஆயுதமே கொடுக்கவில்லை என்றால்,
நாங்கள் நடுவீதியில் மறித்தது தவறு என்று சொல்.
நீ கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆயுதங்களைக் கொடுத்தாய் ; பலாலி விமான தளத்தை, இந்திய அரசின் செலவில் புதுப்பித்துக் கொடுத்தாய். ஆயுதங்கள் அனுப்பினாய் - பணம் கொடுத்தாய் - வட்டியில்லாக் கடன் கொடுத்தாய் - இந்திய இலங்கை கடற்படை தகவல் கூட்டு ஒப்பந்தம் போட்டாய்-விடுதலைப் புலிகளுக்கு வந்த கப்பல்களை கடலில் மூடிநகடித்தாய்
நான் கேட்கிறேன், இது என்ன சோனியா காந்தியின் பாட்டன் வீட்டுப்பணமா?
யாருடைய பணம்? எங்கள் வரிப்பணத்தில் நீ பழுதுபார்த்துக் கொடுத்தாய் . நீ பழுதுபார்த்துக் கொடுத்த இடத்தில் இருந்து புறப்பட்ட விமானம்தான், செஞ் சோலையில் குண்டு வீசியது. 61 சின்னஞ்சிறு அநாதைச் சிறுமிகள் தாயை தந்தையை யுத்தக்களத்தில் இழந்துவிட்ட அனாதைச் சிறுமிகளை செஞ் சோலை யில் துடிக்கத் துடிக்கக் கொன்றாய். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாய முற்றார்கள். அந்தப் படுகொலையை நீ கண்டித்தாயா?
இந்தக் குற்றச்சாட்டுக்கு உன்னுடைய பதில் என்ன? நீ மறுக்க முடியாது. இதை
எழுத்து மூலமாக பிரதமரிடம் தந்து இருக்கிறேன். மறுக்க முடியாதபடி
ஆவணங்களோடு நாங்கள் தந்து இருக்கிறோம்.
சென்ற ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில் இலங்கைக்கு நாங்கள் இராணுவ உதவி செய்து இருக்கிறோம் என்று பிரதமர்
மன்மோகன்சிங் ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
இதற்கு மேல் என்ன சாட்சியம் வேண்டும்? ‘இலங்கையின் ஒருமைப் பாட்டைக் காப்பாற்றுவதற்கு, நாங்கள் இராணுவ உதவி செய்து இருக்கிறோம்’
என்கிறார்
இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற நீ யார்? நீ என்ன உலகத்தில் இருக்கும் எல்லா நாட்டின் ஒருமைப் பாட்டையும் காப்பாற்றுகின்ற காவல் காரனா? அப்படியானால் நீ எப்படி டாக்காவுக்குள் நுழைந்தாய்? கிழக்குப் பாகிஸ்தானில் என்ன வேலை?
இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து இந்திய ஒருமைப்பாட்டை புதைகுழிக்கு அனுப்பிவிடாதே.
உனக்கும் எனக்கும் என்ன உறவு? பெரியார் கேட்டார். பெரியார் வழிவந்த
பேரப்பிள்ளைகள் கேட்கிறோம். உனக்கும் எனக்கும் என்ன உறவு? உனக்கும் எனக்கும் ஏற்பட்ட உறவு 200 ஆண்டுகளுக்கு உள்ளாகத்தான். யூனியன் ஜாக் கொடி உயர்த்தப்பட்டதற்கு பின்னர்தான். பிரிட்டிஷ்காரன் வந்ததற்குப்பின்னே, அவன் லத்திக் கம்பும் துப்பாக்கியும், பல்வேறு நாடுகளாகச் சிதறிக்கிடந்த பூபாகத்தை ஒன்றாக இணைத்ததற்குபின்னே வந்த உறவு. இன்றைக்கு ஏற்றுக் கொள்கிறோம் இந்திய ஒருமைப்பாட்டை.
அன்றைக்கு, மனிதாபிமான அடிப்படையில் மனிதஉரிமைகளைக் காப்பாற்றப்
போகிறோம் என்று சொல்லி கிழக்குப் பாகிஸ்தானுக்கு உள்ளே சென்றதாக இந்திரா காந்தி அவர்கள் அறிவித்தார். நாங்களும் வரவேற்றோம். இன்றும் வரவேற்கிறோம்.
இந்திய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை வைத்து இருக்கிறோம். இறையாண்மை யில் நம்பிக்கை வைத்து இருக்கிறோம். உறுதிமொழி எடுத்து இருக்கிறோம். நான் இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால், உனக்கும் எனக்கும் ஏற்பட்ட உறவு இருநூறு ஆண்டுகளுக்குள் வந்த உறவு. ஆனால், எங்கள் தமிடிந ஈழ உறவு தொப்புள்கொடி உறவு, ஆயிரக்கணக் கான ஆண்டுகளுக்கு முந்தைய உறவு. கரிகாலனுக்கு முந்தைய உறவு, தொல் காப்பியனுக்கு முந்தைய உறவு. அந்த உறவை நாங்கள் இழந்துவிட முடியாது.
1,45,000 மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். எங்கே நடக்கும் இந்த இனக் கொலை? இன்றைக்கு உலகில் பல நாடுகள், எங்கள் ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த துயரத்தைத் தடுப்பதற்கு குரல் கொடுக்கிறபோது, இந்தியா இலங்கை யோடு சேர்ந்து ஓட்டுப் போடுகிறது. இன்று மட்டுமல்ல, இரண்டு ஆண்டு களுக்கு முன்னால் சுவிட்சர்லாந்து நாடும், நியூசிலாந்தும் ஐ.நா. பொது மன்றத் தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தன. அந்தத் தீர்மானத்தையும் இந்தியா தோற்கடித்தது.
உலக அரங்கத்தில் நியாயமாக எழுகின்ற உணர்வை யோசியுங்கள். யார் அந்த பாரக் ஒபாமா? அவருக்கும் தமிழருக்கும் என்ன தொப்புள் கொடி உறவு? யார் அந்த கார்டன் பிரெளன்? இங்கிலாந்து நாட்டுப் பிரதமர். அவருக்கும் தமிழனுக் கும் என்ன உறவு? ‘யுத்தத்தை நிறுத்து’ என்று அவர்கள் சொன்னார்கள்.
நெல்சன் மண்டேலா அவருக்கும் தமிழருக்கும் என்ன உறவு? ‘யுத்தத்தை நிறுத்து’ என்றார். ஆப்பிரிக்க நேஷனல் காங்கிரஸ் சொன்னது. தென்னாப் பிரிக்கா சொன்னது.
ஆனால், ஏன் மன்மோகன் சிங் கடைசி வரை யுத்தத்தை நிறுத்தச் சொல்ல வில்லை?
கடைசிநிமிடம் வரை சோனியா காந்தி, இந்தியாவில் எந்தக் கூட்டத்திலாவது ஈழத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று ஒரு வார்த்தை உச்சரித்தாரா? தமிழர்களே இதை நீங்கள் யோசிக்க வேண்டும். இன்றைக்கு இந்திய அரசை தலைமை தாங்கி ஆட்டுவித்துக் கொண்டு இருக்கிற சோனியாகாந்தி ஈழத் தமிழர்களைப் பற்றி எங்காவது ஒரு இடத்தில் ஒரு கூட்டத்தில் பேசினாரா? பச்சிளம் குழந்தைகளும், தாய்மார்களும் கொல்லப்பட்டார்களே, உணவும் மருந்தும் இன்றி செத்தார்களே, அதுபற்றி எங்காவது சொன்னாரா?
அமெரிக்க ஜனாதிபதி, ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய சித்ரவதைக் கூடத் -தைப்பார்த்துவிட்டு மெழுகுவர்த்தி ஏற்றுகிறார். அதுமட்டுமல்ல, அதற்கு முதல்நாள் கெய்ரோவில் பேசுகிறார். நைல் நதிக்கரையில், பிரமிடுகள் உயர்ந்து இருக்கிற எகிப்து நாட்டுத் தலைநகரில், பல்கலைக் கழகத்தில் பேசு கிறார். என்ன சொல்கிறார்?
அமெரிக்க நாட்டில் வாழ்கிற யூதச்செல்வந்தர்களின் தயவு இருந்தால்தான்
அங்கே அரசியலை ஜாக்கிரதையாக நடத்த முடியும். ஆனால், அவர்களுக்கு
எதிராக, எகிப்துக்குச் சென்று பேசுகிறார். ‘யூதர்களுக்கும் ஒரு தனி நாடு,
பாலஸ்தீனியர்களுக்கும் ஒரு தனி நாடு. இந்த இரண்டும் ஏற்றுக்கொள்ளப் பட்டால்தான் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்’ என்கிறார். அதோடு நிறுத்த வில்லை.
பாலஸ்தீனியர்களின் பகுதி என்று கருதப்படுகிற இடத்தில், யூதக்குடியேற்றங் கள் நிறுத்தப்பட வேண்டும்’என்று பாரக் ஒபாமா சொல்கிறார். பாலஸ்தீனியர் களுக்கு தனிநாடு வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். இரண்டு தேசங்கள். இரண்டு நாடுகள்.
அதைவிட ஆயிரம் மடங்கு நியாயம் தமிழ் ஈழத்துக்கு உண்டே? படித்தவர்களே யோசியுங்கள். தொலைவில் இருந்து கேட்டுக் கொண்டு இருப்பவர்களே யோசியுங்கள்.
பாலஸ்தீனியர்களுக்கும் யூதர்களுக்கும் இருக்கிற பிரச்சனை 4000 ஆண்டு களாக சிக்கலில் இருக்கிற பிரச்சனை. நான் பாலஸ்தீனியர்களின் உரிமைப்
போராட்டத்தை ஆதரிப்பவன். அராபத் நடத்திய போராட்டங்களை அன்று முதல் ஆதரிப்பவர்கள் நாங்கள். யாருக்குச் சொந்த பூமி? யாருடைய பூர்வீக பூமி என்று, அந்தச் சர்ச்சைக்குள் நான் செல்ல விரும்பவில்லை.
ஆனால், இங்கே சர்ச்சைக்கே இடம் இல்லையே? வல்வெட்டித்துறையும் -
யாழ்ப்பாணமும் தமிழர்களின் தாயக மண். வடக்கும் கிழக்கும் தமிழர்களின்
தாயகம். 1983 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி, ஈழத்தமிழர்களுக்கு
வாழ்வுகொடுக்க வேண்டும் என்று துடித்த பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் சொன்னார்கள் ‘வடக்கிலும் கிழக்கிலும் வாழுகிற தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வீகக் குடிமக்கள். சிங்களவர்கள் அல்ல. தமிழர்கள்தாம் பூர்வீகக் குடிமக்கள்’ என்று, இந்திய நாடாளுமன்றத்தில் சொன்னார்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தனி அரசு அமைத்து வாழ்ந்தவர்கள் தமிழர் கள். பாலஸ்தீனிய யூத பிரச்சனையில் இந்த உண்மைகளை நீங்கள் பார்க்க
முடியாது. ஆனால், தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அரசு அமைத்து வாழ்ந்தவர்கள். ஒல்லந்தர் வருவதற்கு முன்பு - போர்ச்சுகீசியர்
வருவதற்கு முன்பு - பிரித்தானியர் வருவதற்கு முன்பு - அரசு அமைத்து கொற்றம் நடத்தி வாழ்ந்தவர்கள்.
பார்போற்ற வாழ்ந்தவர்கள் - படை நடத்தி வாழ்ந்தவர்கள் - நாகரிகத்தைக் காப்பாற்றி வாழ்ந்தவர்கள்.
இன்றைக்கு என்ன நிலைமை? கிழக்கு மாகாணத்தில் ஒரு சதவிகிதம் இருந்த சிங்களவன், இன்றைக்கு 34சதவிகிதமாக குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டான்.
ஆபத்து இன்னும் வடக்கே வருகிறது. இனி முழுக்க,முழுக்க கிழக்குமாகாணத் தில் தமிழர்கள் விரட்டப்பட்டு, சிங்கள தேச மாக்கப்பட்டு வடக்கு மாகாணத் திற்குள்ளும் சிங்களக் குடியேற்றம் வரப்போகிறது.
இந்த ஆபத்தில் இருந்து எப்படித் தடுப்பது? ஈழத்துத்தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். புலிப்படையைச் சேர்ந்த பெண்கள் என்றால் தலையைச்சீவுகிறான், தீயிட்டுக் கொளுத்துகிறான். இனத்தையே
கலப்பு இனமாக்கிவிட துடிக்கிறான்.
என் அன்புக்குரியவர்களே, தமிழ்ப் பிரதேசங்களுக்கு எல்லாம் சிங்களவன் பெயர்களை வைக்க வேண்டும் என்று புத்த பிட்சுகள் தீர்மானம் போடுகிறார் கள். ஆக, நம் கண்முன்னாலேயே நம் இனம் அழிக்கப்படுகிறது.
பாலஸ்தீனியர்களுக்காக பரிந்து பேசுகின்றதே உலகம், ஏன் தமிழன் மட்டும் நாதியற்றவனா? ஏன் அவனுக்குத் தனிநாடு கூடாது? தனி ஈழம் என்பது நியாய மான கோரிக்கைதானே? தனி ஈழத்தை ஆதரித்துத்தானே அந்தமக்கள் 1977ஆம் ஆண்டு தேர்தலில் வாக்கு அளித்தார்கள்.
ஆயுதப் போராட்டத்துக்கு விடுதலைப்புலிகள் எப்பொழுது வந்தார்கள்? சிங்கள இராணுவத்தினால் அவர்கள் தாக்கப்பட்டபிறகு, அவர்கள் கண்ணுக்கு முன்னால் கொடுமைகள் நடத்தப்பட்ட பிறகு வந்தார்கள்.
இந்தப்போரில் சிங்களவன் ஒருக்காலும் வெற்றி பெற்று இருக்க முடியாது. ஓயாத அலைகளில் வென்ற புலிகள், அக்னி அலைகளில் வெற்றிகளைச் சாதித்த பிரபாகரன் - யானைஇறவைக் கைப்பற்றிய வெற்றிக்குச் சொந்தக்
காரன் பிரபாகரன் - காட்டு நாயகா விமானநிலையத்தில் 27 விமானங்களைச் சுக்கு நூறாக்கிய வீராதிவீரர்களை அனுப்பிவைத்த பிரபாகரன் - காட்டுக்கு உள்ளே வைத்து விமானத்தைத் தயாரித்தவன் யாரடா சொல்?புலிகளைத் தவிர.
எந்தப் பொருள்களும் கிடையாது விமானங்களைத் தயாரித்தார்கள். விமானங் களை முதன்முதலாகக் கண்டு பிடித்து ஆகாயத்தில் பறந்த ரைட் சகோதரர்கள்
கல்லறையில் இருந்து எங்கள் ஈழப் போராளிகளுக்கு வணக்கம் செலுத்துவார் கள்.
இவ்வளவு படைபலத்தை உருவாக்கி, அரசு கட்டமைப்பை உருவாக்கி,கல்வித் துறை, வேளாண்துறை, மருத்துவத்துறை என எல்லாம் ஏற்படுத்தி காவல்
துறையை ஏற்படுத்தி, தனி ஈழ தேசத்தை இனி நாடுகள் அங்கீகரிக்க வேண்டி -யதுதான் பாக்கி என்ற நிலைமை யில், இந்திய அரசு திட்டமிட்டு விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்று சொல்லி, அந்தப் போரில் எத்தனை இலட்சம் தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை என்று இந்த யுத்தத்தை நடத்தினார்கள்.
வாழ்க்கையில் எந்த சுகங்களையும் தேடாமல்,வாழ்க்கையின் வசந்தத்தைத் தேடாமல் சின்னஞ்சிறு வயதில் தங்கள் உயிர்களை விடுதலை தீக்குத் தந்தார்
களே! அவர்கள் சிந்திய இரத்தம் வீண்தானா? அவர்கள் கொடுத்த உயிர்கள் வீண்தானா? இல்லை. உலகெங்கும் பரவிக்கிடக்கின்ற தமிழர்களுக்குச் சொல்வேன். ஈழத்தமிழர்களுக்குச் சொல்வேன்.
25 ஆண்டாக துரோகிகளாக எங்கோ மூலை முடுக்கில் பதுங்கிக்கிடந்த சிலர் வெளியே புறப்பட்டு இருக்கிறார் கள். அவர்கள் ஈழத் தமிழர்களுக்குச் சில ஏற்பாடுகளைச் செய்யப்போகிறோம் என்று இப்பொழுது தமிழ்நாடு வரைக்கும் வந்து விட்டார்கள். அவர்களை எல்லாம் யார் என்று எங்களுக்குத் தெரியும். அவர்களது முகத்திரையைக் கிழித்து எறிவோம் நாங்கள்.
இவ்வளவு துரோகத்துக்கும் உடந்தையாக இருந்தார் கருணாநிதி. அவர் ஐந்து முறை முதல்வராக இருந்து இருக்கிறார். அவருடைய குடும்பத்தினர்இன்னும் பல பதவிகளுக்கு வரலாம். ஆனால், தமிழ் இனத்துக்கு அவர் துரோகம் செய்தார் என்று சரித்திரம் காறித் துப்புவதில் இருந்து அவர் தப்ப முடியாது. இந்த உண்மையை அவர் மறைக்கவும் முடியாது.
‘தி டைம்ஸ்’ என்ற இலண்டன் பத்திரிகையில் போட்டு இருக்கிறார்கள். 20,000 தமிழர்களின் பிணங்கள், குழந்தைகள், பெண்கள் உள்பட மண்ணில் பாதி
மூடியும் மூடாமலும் கிடக்கின்றன.
பதுங்கு குழிகளில் தலைவேறு முண்டம் வேறாக சிதறிப்போன பிள்ளைகள், இரத்த வெள்ளத்தில் மிதந்தன. மீதம் உயிரோடு இருந்தவர்கள் நடுங்கிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள்மீதும் குண்டு வீசி அவர்களையும் மூடி
விட்டான். ஆங்காங்கே குற்றுயிரும் குலை உயிருமாக இருந்தவர்கள் மீது டாங்கிகளை ஏற்றி அப்படியே மண்ணோடு மண்ணாக நசுக்கி விட்டான்’ என்று எழுதி இருக்கிறான்.
நாம் வாழும் காலத்திலா இப்படி? தாங்க முடியாத வேதனையோடு இருக் கிறேன். என்னால் பேச முடியவில்லை. அண்ணா நூற்றாண்டு காலத்திலா? அண்ணா அவர்களே! உங்களை பிப்ரவரி 4 ஆம் தேதி கடற்கரையில் புதைத்தோம்.
ஆனால், உங்கள் கனவுகளை, உங்கள் உணர்வுகளை, உங்கள் எண்ணங்களை, உங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் அல்லவா புதைக் கிறார் கள், கோட்டையில் உட்கார்ந்து கொண்டு?
இந்தக் காலத்திலா இந்த இழிவும் அழிவும் வர வேண்டும் தமிழ் ஈழத்துக்கு? நாம் வாழும் காலத்திலா வர வேண்டும்? தமிழ் இனம் இதில் இருந்து மீட்கப்பட
வேண்டும்.
நாதியற்றுப் போய்விடவில்லை தமிழ் இனம். இன்றைக்கு உலகத்தில் எல்லா இடத்திலும் இந்த வேதனை கொந்தளித்துக்கொண்டு இருக்கிறது. மூன்று
இலட்சம் பேர் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்துக்களை, கிறிஸ்தவர்களைக் கொன்றது மட்டுமல்ல, இஸ்லாமியர் களைக் கடைசியாக அழிப்பான்.இலங்கையை பெளத்த நாடாக ஆக்கத் துடிக்கிறான்.
சீனாவையும் பாகிஸ்தானையும் அங்கே உட்கார வைத்து விட்டான். அங்கே இருந்து நாளை தாக்குதல் நடக்குமானால், இந்தியாவை நீ எப்படி பாதுகாக்கப் போகிறாய்? இந்தப் பாதுகாப்புச் சட்டத்தை பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப்
பயன்படுத்த வேண்டும், மன்மோகன் சிங்கை எதிர்த்துப்பயன்படுத்த வேண்டும் - சோனியா காந்தியை எதிர்த்துப் பயன்படுத்த வேண்டும்.
குண்டுவீசுகிறபோது கராச்சியில் இருந்து வரவேண்டாம். இங்கிருந்து வரும். அந்த குண்டுகள் பீகாரிக்காரன் தலையில் விழாது -உத்திரப்பிரதேசத்துக்காரன்
தலையில் விழாது. எங்கள் கூடங்குளத்துக்காரன் தலையில் விழும்.எங்கள் விஜயநாராயணபுரத்தில் விழும். எங்கள் கல்பாக்கத்தில் விழும். எங்கள் மக்களும் நாளை சாகநேரிடும். தெற்கே ஒரு பேரபாயத்தை நீ உருவாக்கி
விட்டாய் .
ஈழத்துத் தமிழர்கள் வலுவாக இருந்து, தமிழ் ஈழம் இருக்குமானால், என்றைக் கும் இந்தியாவின் காவல் அரணாக இருக்கும். இந்திரா காந்தி அம்மையாருக்கு அந்தத் தொலை நோக்குப் பார்வை இருந்தது.
அன்றைக்கு, பஞ்சபாண்டவர்கள் தலைகுனிந்து நின்றிருக்கலாம். கெக்கலி கொட்டி சிரித்து இருக்கலாம் துரியோதனன். 13 ஆண்டுகள் கழிந்து குருசேத்திர
யுத்தம் வந்தது. எல்லாவற்றுக்கும் கணக்குத் தீர்க்கப்பட்டது. அதுபோல தமிழகத்து இளைஞர்கள் உள்ளத்தில் வேதனை நெருப்பாக இருக்கிறது.
இராஜேந்திரன் சொன்னார். தேர்தல் முடிந்துவிட்டது. ஆனால், மக்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. ஏதோ ஒரு இழப்பு ஏற்பட்டதைப்போன்று தமிழர்கள் வேதனையோடு இருப்பதாகச் சொன்னார்.
இந்தக் கோவையில் இத்தனையையும் மீறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் அருமைச் சகோதரர் நடராஜன் வெற்றி பெற்றார். நம்மைப் பொறுத்தமட்டில் தேர்தல் என்பது ஒரு இடைவெளி. நமது
வேலையை நாம் தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம்.
ஆகவே, இங்கே வந்து இருக்கிற இளைஞர்களை நான் கேட்பதெல்லாம், நீங்கள் என் கட்சிக்கு வரவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ம.தி.மு.க.
உறுப்பினராகுங்கள் என்று நான் அழைக்கவில்லை.
நீங்கள் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளில் இருந்து அந்த மக்களை விடுவிக்க வேண்டும். தனி ஈழம் மலர வேண்டும். தனி ஈழம் மலர்வதற்கு நாம் எல்லாவிதத்திலும் உதவியாக இருக்க வேண்டும்.
தேசப் பாதுகாப்புச் சட்டத்தைப்பயன் படுத்தி அடக்கு முறையை ஏவுகிற அரசாங்கமே, மணி அவர்கள் சொன்ன தைப்போல, உன்னிடம் மடிப்பிச்சை கேட்பதற்கு இந்தக் கூட்டம் போட வில்லை. கண்டனம் தெரிவிக்கிறோம்.
தேசப் பாதுகாப்பு சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிற அடக்குமுறை அரசு - கருணாநிதி அரசு, பாசிச வெறி பிடித்த அரசு, மக்கள் ஆட்சியைக்குழிதோண்டிப்
புதைக்கிற அரசு, உள்ளாட்சித் தேர்தலில் கொடுவாள்களை ஏந்தியவர் களுக்கு கை கொடுக்க காவல்துறையைப் பயன்படுத்திய அரசு, ஈழத்தமிழர் களுக்காகப்
போராடுகிறார்கள் என்பதற்காக நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களை கபாலம் பிளக்க அடக்குமுறையை ஏவிய அரசு.
அதே அடக்குமுறையைப்பயன்படுத்தி இராமகிருஷ்ணனையும் - சந்திர
சேகரையும் - இலட்சுமணனையும் கைது செய்து வைத்து இருக்கிறீர்கள். இதற்குக் கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த அடக்குமுறைச் சட்டங்களுக்குக்
கண்டனம் தெரிவிக்கிறோம்.
அடக்குமுறையை எதிர்த்துப் போராடுகின்ற மக்கள் ஆட்சி உணர்வு தழைக் கட்டும். தமிழ்ஈழ மக்கள் நாதியற்றவர்கள் என்று கருதிக் கொண்டு இருக்கிற
ராஜபக்சே கூட்டத்தை ஒடுக்க, நீங்கள் இளைஞர்களிடம் செல்லுங்கள்.
தமிழக இளைஞர்களே, நீங்கள் இளைஞர்களிடம் சொல்லுங்கள். குறுந் தகடுகள் வந்தால், நீங்களே அதைப் பிரதிகள் எடுத்து வீடுவீடாக அனைவருக் கும் கொடுங்கள். அனைவரின் வீடுகளிலும் புலிகளின் குறுந்தகடு இருக்க வேண்டும்.
எல்லாம் முடிந்தது என்கிறார்கள். அதெல்லாம் முடியாது. 28 பேர் வன்னிக் காட்டுக்கு உள்ளே சென்று, அதற்குப்பிறகு இலட்சம் பேர் கொண்ட படையை எதிர்த்து நின்றார்கள்.
பிரபாகரனுக்கு நிகரான ஒரு வீரன் கிடையாது. மனிதகுல வரலாற்றில்
மாவீரர் களுக்கு எல்லாம் மாவீரர் திலகமாக மதிக்கின்ற எங்கள் பிரபாகரன் எல்லோர் நெஞ்சிலும் இருக்கிறார்.
எந்த நேரத்தில் குரல் கொடுக்க வேண்டுமோ அந்தக் குரல் கேட்கும். அவர் எங்கள் இதயத்தில் இருக்கிறார். உலகம் எங்கும் வாழும் தமிழர்களது உள்ளங்களில் இருக்கிறார்.
ஈழத்தமிழர் பிரச்சனை முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம்.இப்பொழுது தான் தமிழ் நாட்டில் பிரச்சனையே தொடங்கி இருக்கிறது.
ஒரு அழிவு ஏற்படுகிறபோது அதில் இருந்து விடியல் பிறக்கும் - இருள்
சூழ்கிறபோது ஒரு வெளிச்சம் கிடைக்கும்.
பீனிக்ஸ் பறவைகளைப் போல் சிறகடித்துப் பறக்கின்றவர்களாக தமிழக இளைஞர்களே நீங்கள் திரண்டு எழுங்கள். ஒரு நாளைக்கு பத்து இளைஞர் களிடமாவது நிலைமையைச் சொல்லுங்கள்.
நாம் வாழும் காலத்திலேயே ஈழத் தமிழ் இனத்தைக் காக்க, தமிழ் ஈழம்மலர உறுதியோடு நம் கடமையைச் செய்வோம்.
புலிகளின் தாகம், தமிழ் ஈழத் தாயகம்;
நம்முடைய தாகம், தமிழ் ஈழம்.
பெரியார் திராவிடர் கழகத் தோழர்களே, நீங்கள் தேர்தலில் நிற்கும் கட்சி அல்ல, சட்டமன்றத்துக்குப் போட்டியிடுகிற கட்சி இல்லை. உங்களுக்கு
நாங்கள் என்றைக்கும் துணைநிற்போம். தமிழ் ஈழ மக்களின் துயரம் நிறைந்த
போராட்டக் காலத்தில், அவர்களைப் பாதுகாக்க அனைவரும் சூளுரைப்போம்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.
No comments:
Post a Comment