Wednesday, April 3, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 10

2012 ஆம் ஆண்டு 

16.10.2012 அன்று உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் பட்நாயக், நீதியரசர் கோகலே அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் முன் வைத்த வாதங்களை இன்றும் தொடர்ந்து, காலை 10.45 முதல் பகல் 12.10 வரையிலும் சுமார் ஒரு மணி நேரம் 25 நிமிடம் பின்வருமாறு வாதிட்டார்.

வைகோ: மாண்புமிகு நீதியரசர்களே, சுற்றுச்சூழல் குறித்து நிபுணர்களின் கருத்தின் அடிப்படையில்தான் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க முடியும் என்று கூறினீர்கள். ஆனால், சில நிபுணர் குழுக்களின் நம்பகத்தன்மை எப்படிப் பட்டது, எப்படியெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக, சாமர்த்தியமாக கருத்துக்களைச் சொல்லக்கூடியது என்பதை, இந்த நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.



தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், 2010 டிசம்பர் 7 ஆம் தேதி, இந்த நீதி மன்றத்தில் ஸ்டெர்லைட் குறித்து வழங்கிய ஆய்வு அறிக்கையில், சுற்றுச் சூழல் மாசுபட்டு இருப்பதாகவும், குறிப்பாக காற்று மண்டலமும், நிலமும், நிலத்தடி நீரும் ஸ்டெர்லைட் ஆலையால் மாசுபட்டு உள்ளன என்றும் அறிக்கை தந்தது.

ஆனால், கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி, மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து தந்த அறிக்கையில், ‘சுற்றுச் சூழலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை’ என்றும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்த அத்தனை நிபந்தனைகளையும், ஸ்டெர்லைட் நிறுவனம் நிறைவு செய்து விட்டதாகவும் அறிக்கை தந்து உள்ளது.

எவ்வளவு பெரிய முரண்பாடு? இதன் பின்னணி என்ன?

மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், 2011 ஜனவரி 22 இல், ஸ்டெர் -லைட் ஆலை குறித்து, இந்த உச்ச நீதிமன்றத்திற்குத் தந்த அறிக்கையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஊறு விளைவதால் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு அனுமதி கொடுப்பது கூடாது என்று குறிப்பிட்டு இருந்தது. ஆனால், அக்டோபர் 10 இல் இந்த நீதிமன்றத்துக்கு தந்த கூட்டு அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுச்சூழலுக்குப் எந்தப் பாதிப்பும் இல்லை என்று கூறி உள்ளது.

மாண்புமிகு நீதிபதிகளே, இந்த ஸ்டெர்லைட் ஆலை, 44 மாதங்கள் லைசென்ஸ் இல்லாமலேயே இயங்கி உள்ளது என்ற அதிர்ச்சி தரும் உண்மையை, நீரி நிறுவனம் தனது 2011 ஆம் ஆண்டு மே மாதம் இந்த உச்ச நீதிமன்றத்திற்குத் தந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளது. பொதுமக்களின் நலனைக் கடுகளவும் கருதாமல், கொள்ளை இலாபத்தையே நோக்கமாகக் கொண்டு ஸ்டெர்லைட் இயங்கி வந்து உள்ளது.

ஆஸ்திரேலிய கனிமச் சுரங்கங்களில் இருந்து, ஸ்டெர்லைட் ஆலை, தாமிர அடர்த்தியை இறக்குமதி செய்து உள்ளது. இதுகுறித்த உண்மைகளை, தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள சுங்க இலாக அதிகாரிகளிடம் இருந்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்று, இந்த நீதிமன்றத்தில் ஆவணமாகத் தந்து உள்ளேன். சுற்றுச் சூழலை அடியோடு நாசமாக்கும், நச்சு உலோகங் -களும் இந்தத் தாமிர அடர்த்தியில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை, ஸ்டெர்லைட், ஆஸ்திரேலியாவில் இருந்து 2.21 டன் யுரேனியத்தை இறக்குமதி செய்து உள்ளது. கடந்த ஆண்டு வரை இந்திய அரசு எவ்வளவோ கேட்டும், ஆஸ்திரேலியா யுரேனியத்தை ஏற்றுமதி செய்ய மறுத்து விட்டது. யுரேனியம் என்பது பேராபத்தை விளைவிக்கக்கூடிய உலோகம் ஆகும்.

மேலும், 441 1/2 டன் ஆர்சனிக், 41 டன் பிஸ்மத், 27 டன் புளோரைன் ஆகிய நச்சு உலோகங்களையும் தாமிர அடர்த்தியோடு ஸ்டெர்லைட் இறக்குமதி செய்தது. இதற்கு ஆஸ்திரேலிய சுரங்க ஆலைகள், ஏறத்தாழ 19 இலட்சம் அமெரிக்க டாலர் சலுகை தந்து உள்ளது.

இந்த நச்சு உலோகங்கள், தூத்துக்குடியில் மக்கள் வசிக்கும் பகுதிகள் வழியாகவே எடுத்துச் செல்லப்பட்டன என்பதில் இருந்து, பொதுமக்கள் உயிர்களைப் பற்றி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எந்த அக்கறையும் கிடையாது என்பது தெளிவு ஆகிறது.

சுற்றுச்சூழல் நிபுணர்களின் கருத்தைத்தான் நீதிமன்றம் கணக்கில் எடுக்க முடியும் என்று நீங்கள் சொன்னீர்கள். இதோ என் கையில் இருப்பது, உலகப் புகழ்பெற்ற சுற்றுச் சூழல் விஞ்ஞானி, அமெரிக்காவில் ஒரேகானில் சுற்றுச் சூழல் விஞ்ஞானியாகப் பணிபுரியும் முனைவர் மார்க் சர்னைக் என்பவர், ஸ்டெர்லைட் ஆலை குறித்துத் தந்த ஆய்வு அறிக்கை ஆகும்.

ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து, நாங்கள் மாதிரிகளாக சேகரித்து அனுப்பி வைத்த மண்ணையும், நீரையும் பரிசோதனை செய்து, முனைவர் மார்க் சர்னைக் தந்த விவரங்கள் அனைத்தையும், நான் இந்த நீதிமன்றத்தில் ஆவணமாகப் பதிவு செய்து உள்ளேன். சுற்றுச்சூழல் குறித்த அவரது ஆய்வுக் கருத்துகளை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் உச்ச நீதிமன்றங்கள் அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பு அளித்து உள்ளன.

ஸ்டெர்லைட் ஆலை அருகாமையில் இருந்து எடுத்து அனுப்பிய மண்ணையும், நீரையும் சோதித்துப் பார்த்து,

“இவை மிகக் கடுமையான நச்சுத் தன்மை வாய்ந்தவை; புற்று நோய்கள் ஏற்படும்;  மனிதர்களின் சிறுநீரகங்கள், நுரையீரல்கள் கடுமையாகப் பாதிக்கப் படும்; தோல்  நோய்கள் உட்பட பல கடுமையான நோய்கள் குழந்தை களை யும், பெரியவர்களையும்  தாக்கும்; ஆடு,மாடுகள் தண்ணீரைக் குடித்தால் இறந்து போகும்; மொத்தத்தில்,  ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சூழலை அடி -யோடு நாசமாக்கும்

என்று, முனைவர் மார்க் சர்னைக் தெரிவித்து உள்ளார்.

பல நேரங்களில் ஆடு, மாடுகள் இத்தண்ணீரைக் குடித்து நோய்வாய்பட்டு இறந்துபோன உண்மையை வெளியே சொல்லவிடாமல், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தடுத்து மறைத்து விட்டனர்.

அமெரிக்காவில், 1889 இல் அசார்கோ எனும் தாமிர உருட்டு ஆலை, சுற்று வட்டாரத்தை நாசமாக்குகிறது என்று, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, பல ஆண்டுகள் நடைபெற்று, 1986 இல் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை இயக்குகின்ற வேதாந்தா குழுமம், இன்று உலகத் -தின் பிரதான கோடீஸ்வர கம்பெனிகளில் ஒன்று ஆகும். ஸ்டெர்லைட் நிறுவனம் உள்ளிட்ட ஆலைகளால் இந்த வேதாந்தா குழுமம் சுற்றுச் சூழலைப் பாழ்படுத்துவதுடன், மனித உரிமைகளை நசுக்குவதால், இந்த நிறுவனத்தில் எவரும் முதலீடு செய்யக்கூடாது என்று, நார்வே நாட்டின் நெறி வகுக்கும் குழு அறிவித்துவிட்டது. அதனையும் இந்நீதிமன்றத்தில் ஆவணமாக்கி உள்ளேன்.

ஸ்டெர்லைட் வழக்கறிஞர் சுந்தரம், மத்திய மாசு கட்டுப்பாட்டு மற்றும் தமிழ்நாடு மாசு  கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர்கள், வைகோ வாதத்தைத் தொடரவிடாமல், அடிக்கடி  குறுக்கிட்டுப் பேசினர்.

வைகோ: என் வாதங்களை முழுமையாக வைக்க விடாமல் ஏன் இப்படிக்
குறுக்கிடுகிறார்கள்?

நீதியரசர் பட்நாயக்: நீங்கள் பக்குவப்பட்ட தலைவர், இந்தக் குறுக்கீடுகளை ஏன் பொருட்படுத்துகிறீர்கள்?

வைகோ நான் குறுக்கீடுகளை வரவேற்கிறேன். ஆனால், எனக்குக் கிடைத்து
இருக்கின்ற வாதாடுவதற்காக இந்த நேரம் மிகவும் முக்கியமானது. அது பாதிக்கப்படக் கூடாது.

நீதிபதி: நீங்கள் முழுமையாக வாதிடலாம்.

வைகோ: ஸ்டெர்லைட் ஆலையால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாழாகிவிட்டது. ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து விட்டன. சரும நோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் இப்பகுதி மக்களைத் தாக்கு கின்றன. இப் பகுதியில் வாழும் மக்கள் நலனைக் காக்க வேண்டும். இந்த ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் உடல் நலனும் பாதிக்கப் படுகிறது. அவர்களின் நலனிலும் எனக்கு அக்கறை உண்டு. ஸ்டெர்லைட் ஆலை, இதுவரை கொள்ளை அடித்த கோடான கோடி இலாப பணத்தில் இருந்து, தொழிலாளர்களுக்கு நட்ட ஈடாக பணம் கொடுக்கச் செய்துவிட்டு, இந்த ஆலையை நிரந்தரமாக மூட, இந்த நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க வேண்டுகிறேன்.

உலகில் மனித குலம் இன்று எதிர்நோக்கி உள்ள அறைகூவல், சுற்றுச் சூழல் மாசுபடும் அபாயம் தான். இதனால்தான் எண்ணற்ற நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. இனி அடுத்த உலக யுத்தம் என்பது சுற்றுச் சூழல் அபாயம்தான். எனவே, மாண்புமிகு நீதியரசர்கள், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தீர்ப்பு அளிக்க வேண்டுகிறேன் என்று கூறி வைகோ வாதத்தை முடித்தார்.

6.11.2012 அன்று வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நீதியரசர் பட்நாயக், நீதியரசர் கோகலே அமர்வில் நடைபெற்றது.

ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

ஆலைக்கு எதிராக வாதாடும் வைகோ அவர்கள், ‘உச்சநீதிமன்றத்தில் 2010 செப்டம்பர் 29 இல் ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு தாக்கல் செய்தபோது, அதுவரையிலும் 29 மாதம் 15 நாட்கள் அனுமதி இல்லாமலே ஆலையை இயக்கிய உண்மையை முழுமையாக மறைத்து, அனைத்து அனுமதிகளோடும் ஆலை இயங்கி வந்ததாக உண்மைக்கு மாறான தகவலைத் தந்து உள்ளது’ என்று கூறினார்.

இதற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் சரியான விளக்கம் தர முடியவில்லை.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தான் தொடர்ந்து இடைவிடாமல் ஆலையை ஆய்வு செய்து கண்காணித்து வருவதாக இந்த நீதிமன்றத்தில் கூறியது உண்மைக்கு முற்றிலும் மாறானது ஆகும் என்று வைகோ கூறினார்.

அதற்கான ஆதாரங்களுள் ஒன்றாக, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் கழிவு நச்சு நீரை சேமிக்கும் பதினெட்டு குழிகள் அமைக்கப்பட்டு இருந்ததை, கடந்த ஆண்டு நீரி ஆய்வின்போது தான் சுட்டிக்காட்டியதற்குப் பின்னரே உண்மை வெளியே வந்தது என்றும், பல மாதங்கள் வரை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதனைக் கண்டுகொள்ளவே இல்லை என்பதில் இருந்து, இந்த வாரியம் எப்படி செயல்பட்டது என்பதை இந்த நீதிமன்றம் தெரிந்துகொள்ளலாம் என்றும் சுட்டிக் காட்டினார்.

நீதியரசர் பட்நாயக் அவர்கள், ஸ்டெர்லைட் ஆலை குறித்துச் சொல்லும் போது, ‘உங்களிடம் பணம் இருக்கிறது. பலம் இருக்கிறது. ஆனால், உங்கள் மீது மக்களுக்கு நல்ல எண்ணம் இல்லை. தமிழ்நாட்டிலும் இல்லை, ஒரிசாவிலும் இல்லை, பிரிட்டனிலும் இல்லை’ என்றார்.

வாதங்கள் இன்றோடு முடிவுற்றாலும், இந்த வழக்குக் குறித்து இருதரப்பி னரும் எழுத்து மூலமான வாக்குமூலங்களை மூன்று வார காலத்திற்குள் உச்ச நீதிமன்றத்தில் கொடுக்கலாம் என்று நீதிபதி அறிவித்தார்.

வழக்கு விசாரணை முடிந்தது.

முந்தைய பதிவுகளை படிக்க : பார்வை -9

No comments:

Post a Comment