Monday, December 16, 2013

“நீந்திக் கடந்த நெறுப்பாறு” நூல் வெளியீடு -வைகோ உரை -பாகம் 1

வீர காவியங்களைப் படியுங்கள்: திட்டங்களை வகுத்து செய்து காட்டுங்கள்!
என்று 30.11.2013 அன்று சென்னையில் நடைபெற்ற “நீந்திக் கடந்த நெறுப்பாறு”
நூல் வெளியீட்டு விழாவில் #மதிமுக  பொதுச் செயலாளர் #வைகோ உரை ஆற்றினார்.அவரது உரை வருமாறு:

தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளுக்கு வீர வணக் கம். எத்தகைய வீறு கொண்ட புரட்சிக் கதிர்கள் இந்த மண்ணின் இளம் தோழர் களிடம் இள நங்கைகளிடம், மாணவச் செல்வங்களிடம் ஊடுருவ வேண்டும் என்று நான் நெடு நாட்களாக ஏங்கிக் கிடந்தேனோ,அந்த ஏக்கம் நிராசையாகப் போய் விடாது; அது என் வாழ்நாளிலேயே,என் கண்முன்னாலேயே நான் காண் பேன் என்ற நம்பிக்கையை ஊட்டுகின்ற விதத்தில்,இங்கே எனக்குமுன்பு உரை ஆற்றிய தம்பி பிரபாகரனின் பேச்சும், கனல் தெறிக்கும் சவுக்கடிகளும், அதற்கு
நீங்கள் எழுப்பிய கையொலிகளும்,நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய மாண வர் உலகத்துக்கு என்னைக் கொண்டு போய்ச் சேர்க்கின்றது.


தடைகளை உடைத்து, தாய்த்தமிழகத்தில் இந்த நூல் வெளியிடப்படுகின்றது. தமிழ் நாட்டின் தலைநகரில், ஈழ விடுதலை குறித்து உரை ஆற்றுவதற்கு, அரங் கங்கள் தரப்படுவது இல்லை; மண்டபங்கள் கிடைக்காது. ஆனால், எப்படி மன் னார் மறை மாவட்டத்திலே ஆயர் யோசேப்பு, ஈழத்தமிழர்களுக்காக, குற்றுயி ரும் குலையுயிருமாக வதைபட்ட தமிழர்களுக்காக,நிழலும் இடமும் கொடுத் து, குரலும் எழுப்புகிறாரோ அதைப் போல, இந்த அரங்கத்தைத் தந்து உதவிய தேவாலயத் திருச்சபை யினருக்கு, மாணவர்கள் சார்பில் நான் நன்றி தெரிவித் துக் கொள்கிறேன்.

நான் படித்த நூல்கள்

அரவிந்தகுமாரன் படைத்த இந்த நூலை, நேற்று மாலை மூன்று மணிக்குப் படிக்கத் தொடங்கினேன். மாலை ஆறு மணிக்கு மேல், ஒரு திருமண வரவேற் புக்குச் சென்று கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு வந்து,முழுமையாக நூலைப் படித்து முடிக்கையில், விடிகாலை நான்கு மணி ஆகிவிட்டது. நான் ஒரு குக்கி ராமத்தில் கூரைப் பள்ளியில் படித்தவன். பள்ளி இறுதி வகுப்பு முடிக்கின்ற வரை யில்,எங்கள் கிராமத்தில் மின் விளக்குகள் கிடையாது. அரிக்கேன் லாந் தர் விளக்கு வெளிச்சத்தில்தான் நான் படித்தேன். சிறு பருவத்திலேயே, நாவல் கள் படிக்கின்ற ஆர்வம் பெற்றேன்.

ஐந்து ஆறாம் வகுப்பு படிக்கும் போதே, அதிகமான பக்கங்களைக் கொண்ட, பெரிய எழுத்து மகாபாரதப் புத்தகத்தை நான் படித்தேன். 13 ஆம் போர்ச்சருக் கம்-அபிமன்யு வதைப்படலம்,என் மனதைக் கவர்ந்தது. வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய, மர்ம நாவல்கள் சிலவற்றைப் படித்தேன். அடுத்து, கல்கி யின் தொடர் நாவல்கள், சரித்திரக் கதைகளைப் படித்தேன். சந்தாகட்டி இருந்த தால், வாரா வாரம் தொடர்ச்சியாக வந்து கொண்டு இருந்தது. அதில் இருந்து
கல்கியின் கதைகள் மட்டும்,மொத்தமாகத் தொகுக்கப் பட்டு இருந்தது. அப்படி நான் பார்த்திபன் கனவைப் படித்தேன்; சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வனைப் படித்தேன். இந்த இரண்டு நூல்களும்தாம், இந்த மண்ணின் மீதும், தமிழ் இனத்தின் மீதும்,இந்த வீர வரலாறு குறித்தும், என் நெஞ்சில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

அடுத்து எட்டாம் வகுப்பு படிக்கின்றபோது, அகிலன் எழுதிய நூல்களைப் படித் தேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கையில், கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழிபெயர்த்த, காண்டே
கருடைய அனைத்து நாவல் களையும் படித்தேன். அதில் கிரெஞ்ச வதம் என்ற காவியம்;அதில் வருகின்ற திலீபன் என்ற கதாபாத்திரம் என்னைக் கவர்ந்தது.
அற்புதமான மராட்டிய எழுத்தாளர் காண்டேகர். அவருடைய எழுத்து ஓட்டத் தைப் பிரதிபலிக்கின்ற வகையில், தனித்தன்மையோடு எழுதினார் டாக்டர் மு.வ.


தம்பிகளே, தங்கைகளே, அந்த நாள்களில் உங்களைப் போன்ற கல்லூரி மாண வர்களின் கைகளில் மு.வ.வின் நாவல்கள்தாம் இருக்கும். கள்ளோ? காவிய மோ?, கரித்துண்டு இருக்கும். அப்போது மாணவர்களிடம் ஒரு தேடல் இருந்த து. தொலைக்காட்சி கிடையாது. வேறு பொழுது போக்குகள் எதுவும் இல்லை.
சிந்தனையைக் கவர்ந்து இழுக்கின்ற வேறு எதுவும் கிடையாது. மது கிடையா து; மயக்கம் தரும் கேடுகள் எதுவும் இல்லை. ஒழுக்கக் கட்டுப்பாடுகள் இருந்த ன. பள்ளி இறுதி நாட்களில், அண்ணாவின் நூல்களைப் படித்தேன்.இப்படி நான் படித்த நூல்கள்தாம், என்னை வார்ப்பித்தன.

சாளுக்கியப் புலிகேசியின் படையெடுப்பு

சோழர்கள், பல்லவர்களின் வரலாறுகளைப் படித்தபோது என் மனதில் எழுந்த தாக்கம், நான் பழையாறையில், தஞ்சையில்,நாகையில், கடல் அலைகளில்,
மன்னாரில், மாந்தோட்டத்தில்,இலங்கையில் உலவுவது போன்ற எண்ணத் தை, பொன்னியின் செல்வன் ஏற்படுத்தியது. மாமல்லபுரத்தில் சிற்பிகள் எழுப் பிய உளி ஓசை, செதுக்கப்பட்ட சிற்பங்கள்,குதிரைகளில் வருகின்ற மாமல்லர்
இளவரசரும், மகேந்திரச் சக்கர வர்த்தியும் என் நெஞ்சில் பதிந்தகாட்சிகள். அவர்கள் ஆண்ட தலைநகரம் காஞ்சி, அப்போது வடக்கே ஹர்ஷன் மிகப்பெரி ய பேரரசன்.அவனைத் தெற்கே வர விடாமல் நர்மதை ஆற்றின் கரையிலேயே தோற்கடித்தான் சாளுக்கியப் பேரரசன் இரண்டாம் புலிகேசி. அவன் படையெ டுத்து வந்தான்; காஞ்சியை முற்றுகை இட்டான். பல்லவ நாட்டு ஏரிகள், குளங் களை எல்லாம் உடைத்தான். ஊர்களுக்குத் தீயிட்டான்; சிற்பிகளின் கைகளை வெட்டினான். கொடுமைகளை நிகழ்த்தி னான். மணிமங்கலம் போர்க்களத்தில் மகேந்திர பல்லவர் தடுக்க முயன்றபோது, விஷக்கத்தி பாய்ந்து காயம் அடைந் தார்.

பரஞ்சோதி, திருச்செங் கட்டாங்குடி என்ற, சோழ நாட்டுச் சிற்றூரில் இருந்து வந்தவன்.மிகச்சிறந்த வீரன். அவன் தளபதி ஆகிறான். புலிகேசியை உள்ளே
வர விடாமல், எட்டு மாத காலம் வடபெண்ணை ஆற்றின் கரையிலேயே தடுத் து வைத்து இருந்தார் ராஜதந்திரத்தால்.ஆயினும் கடைசியில், பல்லவ நாட் டையே சூறையாடிக் கொளுத்தி விட்டுப் போனான் புலிகேசி.

இதைப்பற்றிக் கல்கி எழுதுகிறார்.இப்போது நீங்கள் யுத்த களத்திற்குப் போக வேண்டாம்; ராஜதந்திரத்திலேயே வென்று விடுவேன் என்றெல்லாம் சொல் லிக்கொண்டு இருந்த மகேந்திர பல்லவர் கடிதம் எழுதுகிறார். திருச்செங்கட் டாங் குடிக்கு வந்து, பரஞ்சோதியின் வீட்டுக்குப் போய்விட்டு, இளவரசர் மாமல்லரும், பரஞ்சோதியும் வருகிறார்கள்.எதிரில் பல்லவ நாட்டு வீரர்கள்
வேகமாக வருகிறார்கள். புழுதிப் படலம் தெரிகிறது. சக்கரவர்த்தியின் கடிதத் தை பரஞ்சோதியிடம் கொடுக்கிறார்கள்.

அந்தக் கடிதத்தில்,

‘பரஞ்சோதி அடிக்கடி நீ என்னிடம், நீங்கள் தவறே செய்தது கிடையாதா? என்று
கேட்டாய். நான் கர்வபங்கமுற்ற நிலையில், உள்ளம் உடைந்த நிலையில் எழுதுகிறேன். பல்லவ நாட்டின் எதிர்காலத்தை உன் கைகளில் ஒப்படைத்து விட்டு யுத்தத்திற்குப் போகிறேன். நான் திரும்பி வருவேன் என்று சொல்ல முடியாது. பெரும் அழிவைச் செய்துவிட்டுப் போகிறான் புலிகேசி. நீ என் மக னோடு இருந்து அவனைக் காப்பாற்று’

என்று எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தைப் பரஞ்சோதி படித்தார்; மாமல்லர் படித்தார்.குதிரைகள் நின்றன;ஓசை நின்றது,காற்று நின்றது;இலைகள் அசைய வில்லை; எல்லாம் அசைவற்று நின்றது என்று கல்கி எழுதி இருப்பார்.

மகேந்திரவர்மரின் அறிவுரை

படையெடுத்துச் செல்ல வேண்டும் என்று துடிக்கிறார் மாமல்லர். மரணப் படுக் கையில் கிடக்கிறார் மகேந்திரவர்மன். தம்பி பிரபாகரன், ஜனவரி 15 லேயே
நாங்கள் வாக்கெடுப்புக்குப் போகிறோம் என்றபோது, அனுபவப் பட்டறையில் பல அனுபவங்களைப் பெற்ற ஒரு அண்ணனாக உங்களிடம் இதைச்சொல்லு கிறேன். அன்றைக்குப் பரஞ்சோதி துடித்ததைப் போல,மாமல்லர் துடித்ததைப் போல நீங்கள் துடிக்கின்றீர்கள்.

அன்றைக்கு மகேந்திரவர்மன் சொன்னார்: இப்போது வேண்டாம்; எதிரியின் பலம் அதிகம். நம்மை விடப் பல மடங்கு பெரும் படையை வைத்து இருக்கி றான்.இப்போது அவனைத் தோற்கடிக்க முடியாது.அதற்கான ஆயத்தங்களைச் செய்து கொள்ளுங்கள்.ஆண்டுகள் எத்தனை ஆனாலும் சரி, பெரும்படையைத் திரட்டுங்கள். தெற்கே எதிரிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.பாண்டிய நாடு பகை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒன்றாகத் திரண்டு, அதற்குப் பிறகு படையெடுத்துச் செல்லுங்கள். இப்படி நான் கூறுவது உங்க ளுக்குக் கசப்பாக இருக்கலாம் என்றார்.

மகேந்திர பல்லவர் இறந்து போனார். அதற்குப் பிறகு, ஒன்பது ஆண்டுகள் ஆயத்தங்களைச் செய்து கொண்டுதான், படையெடுத்துச் சென்றார்கள். சாளுக்
கியப் படைகளைத் தோற்கடித்தார்கள். வாதாபியைத் தீயிட்டுக் கொளுத்தினார் கள். அங்கே வெற்றித்தூணை நிறுவினார்கள்.

அதைப்போலத்தான் தம்பிகளே, நான் ஏதாவது ஆலோசனை சொல்லுவதாக இருந்தால், நான் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவன் என்ற எண்ணத்தை
விட்டுவிடுங்கள். தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்புக்குச் சொல்லுவேன். இந்த நிகழ்விலே பங்கு ஏற்று இருக்கின்ற மாணவர் களுக்கும் சொல்லுவேன். உங்க ளை எல்லாம் என் இயக்கத் திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம், துளி அளவும் எனக்குக் கிடையாது.(கைதட்டல்). தேர்தல் களத்திற்கு
வாருங்கள்; எங்களை ஆதரியுங்கள் என்று,ஒருபோதும் உங்களை நான் கேட்க மாட்டேன்.உங்களுக்குப்பிடித்த அரசியல் கட்சிகளில்,தாராளமாக நீங்கள் பணி ஆற்றலாம். ஒருபோதும்,உங்களை என் இயக்கத்திற்குப் பயன்படுத்த நான் விரும்ப மாட்டேன். இது மாணவர்களின் கூட்டு அமைப்பாகவே இருக்கட்டும். இதில் ஒருசில தம்பிகளுக்கு எங்கள் இயக்கத்தில் பற்று இருந்தால், அது இருக் கட்டும்.

தாயகம் இடம் தரும்

உங்களது முத்திரையில், கார்த்திகைப் பூக்களை, செங்காந்தள் மலர்களைப் பொறித்து இருக்கின்றீர்கள். Students Federation of Tamilnadu-SFTஎன்ற இந்தத் தமிழ் நாடு மாணவர் கூட்டு அமைப்பு, ஈழ விடுதலைக்காக,தாய்த்தமிழகத்தில் மான
உணர்வின் வெளிப்பாடாக,இந்த இளம் மாணவர் பட்டாளத்தை ஒருங்கிணைத் துக் கொண்டு செல்லக்கூடிய களமுனையாக இது திகழட்டும். உங்களுக்கு நிழ லாக,பின்னால் இருட்டில் இருந்து கொண்டு நாங்கள் உதவுகிறோம்.எங்கள் முகத்தைக் காட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை.எங்கள் முகவரியை, எங் கள் இயக்கத்தைக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. நீங்கள் கூடிப்பேசுவ தற் கு உங்களுக்கு வேறு இடம் கிடைக்கவில்லை என்பதால், நான் இடம் தந்தேன். இனியும் உங்களுக்கு வேறு எங்கும் கிடைக்கவில்லை என்றால், இந்தத் தாய கம் உங்களுக்கு இடம் தரும்.(கைதட்டல்). ஆனால், அதில் அரசியல் இல்லை.

எனவே, எங்காவது ஒரு தோழனுக்கு, இந்த அரங்கத்தில் இருந்தாலும் சரி, அல் லது தமிழ் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, உங்களில் எவரையா வது மறுமலர்ச்சி திமுகழகத்தின் அரசியல் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள் ள வேண்டும் என்ற மலிவான எண்ணம்,எனக்குத் துளியும் இல்லை. தமிழ்
இனத்தின் விடியலைப் பற்றிய கவலையோடு உங்கள் முன்னால் நான் நிற் கின்றேன்.

ரெத்தினராஜ் மறைவு

தம்பிகளே, இந்தக் கூட்டம், பத்து ஆயிரம் பேர் திரண்டு இருக்கின்ற கூட்டம் அல்ல. ஆனால் 93 ஆம் ஆண்டு, என்னோடு கரம் கோர்த்து வந்த, கழகத்தின் உயர்நிலைக்குழு உறுப்பினராக இருக்கின்ற,முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர்,நாஞ்சில் நாடு தந்த என் ஆருயிர்ச் சகோதரர் ரெத்தினராஜ் அவர்கள்,இன்று மாலை நான்கரை மணிக்கு இறந்து விட்டார். நாளைக்காலையில் கோவை யில் நான் கலந்து கொள்ள இருந்த இரண்டு திருமணங்களுக்கு என்னால் செல் ல இயலாது; அவர்கள் பெரிய அளவில் ஏற்பாடுகளைச் செய்து இருக்கின்றார் கள். நான் வர இயலாது என்று சொன்னபோது, என் கடமையை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். இன்று மாலை விமானத்திலேயே நான் மதுரை சென்று, இரவிலேயே நாகர்கோவிலுக்குச் செல்ல வேண்டியவன். ஆனால், இங்கே நீங்கள் ஏற்பாடு செய்து இருக்கின்ற இந்த நிகழ்ச்சிக்கு,மல்லை சத்யா வை அழைத்து, நீங்கள் கலந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, நான்
போயிருக்கலாம்.

ஆனால், நீங்கள் மாணவர்கள் என்பதால், இலட்சிய தாகத்தோடு இந்த நூல் வெளியீட்டு விழாவை நீங்கள் நடத்துவதால், இந்த நூல்,தமிழ் ஈழ விடுதலைக் கு ஓர் படைக்கருவி என்று கருதுவதால்,இந்த நிகழ்வில் கண்டிப்பாகப் பங்கு ஏற்க வேண்டும்; அதன் பிறகு, கன்னியாகுமரிக்குச்சென்று கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு இங்கே வந்து இருக்கின்றேன். இந்த நிகழ்வில் நான் ஆற்று கின்ற உரை, உன் குழாய் (Youtube)  வழியாக இணைய தளங்களில் பரவலாம்; உலகம் முழுவதும் பார்க்கலாம். அதன் மூலம், உணர்வுள்ள படைக் கருவி
களை உங்களுக்குத் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காகப் பேசுகி றேன்.

உமர் முக்தார் ஊட்டிய உணர்ச்சி

நான் உமர் முக்தார் படத்தை விரும்பி விரும்பிப் பலமுறை பார்ப்பவன். அவர் மதரசா பள்ளியில் பாடம் கற்பித்துக் கொண்டு இருந்த ஓர் ஆசிரியர்.லிபிய நாடு அடிமைச் சங்கிலி களால் பூட்டப்பட்டுக் கிடந்தது.இத்தாலிய சர்வாதிகாரி
பெனிட்டோ முசோலினியின் காலடிகளில் நசுக்கப்பட்டுக் கிடந்தது. அந்த விலங்குகளை உடைத்து எறிவதற்காக, உமர் முக்தார் தனது வயது முதிர்ந்த
காலத்தில், ஆயுதங்களை ஏந்தி,அந்தப் பாலை மணல் பெரு வெளியில் புரவி களைச் செலுத்திக் கொண்டு இருந்தார். அவரது வரலாறு என் இதயத்தைக் கவர்ந்து இருக்கின்றது. அந்த உமர் முக்தாரைப் போல நான் ஆயுதம் ஏந்தப் போவதாகச் சொல்ல வில்லை. ஆனால், அவர் எப்படி இளைஞர்களை ஆயத் தப்படுத்து வற்காகத் தன் வாழ்க்கையைப் பயன்படுத்தினாரோ,அதைப்போலப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவன் நான். (கைதட்டல்).

அதனால்தான், தேர்தலில் போட்டி இடாமல், நாங்கள் களத்தை விட்டு வெளி யே வந்தபோது, ஈழத்தில் இனக்கொலை:இதயத்தில் இரத்தம் என்ற குறுந்தட் டைத் தயாரிப்பதற்காக, ஒரு மாத காலம், இரவு பகலாகப் பாடுபட்டேன். அதை யே, Genocide of Eelam Tamils Hears Bleed என்ற தலைப்பில் தயாரிப்பதற்கு, இருபது நாள்கள் பாடுபட்டேன்.அவற்றை, இலட்சக்கணக்கான படிகளை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு கல்லூரி வாயிலின் முன்பும் நின்றுகொண்டு, மாணவ,
மாணவியரின் கைகளில் நானே நேரடியாகக் கொடுத்தேன்.தமிழகம் முழுவ தும் பல கல்லூரி களுக்குச் சென்றேன். அதற்காக,எங்கள் சக்திக்கு மீறிய பொருட் செலவும் செய்தேன்.

உங்களுக்கு நான் தரும் ஆயுதம்

தஞ்சை வழக்குரைஞர் மன்றம் என்னை அழைத்த போது நான் விரும்பிக் கொ டுத்த தலைப்பு, சுய நிர்ணய உரிமையும்: பொது வாக்கெடுப்பும் என்ற தலைப்பு. ஒன்றேமுக்காமல் மணி நேரம் பேசினேன். அதையும் குறுந்தட்டுகளாக ஆக்கி இருக்கிறேன்; நூலாகவும் வெளியிட்டு இருக்கிறேன். இமயம் தொலைக்காட் சி, இரண்டு முறை அந்த உரையை ஒளிபரப்பியது.உங்களுக்கு அது பயன்பட
வேண்டும் என்பதற்காக, அந்த உரையின் சில பகுதிகளை மட்டும் இணைத்து, பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் ஆங்கிலத்தில் நான் ஆற்றிய உரையையும் சேர்த்து,
ஒரு மணி நேரக் குறுந்தட்டாக ஆக்கி இருக்கிறேன். மாவீர மகன் பாலச்சந் தி ரன் முக உருவம் கொண்ட முகமூடி அணிந்த 500 குழந்தைளை, காஞ்சி மாவட் டத்தில் மதுவிலக்குப் பிரச்சார நடைபயணத்தின் நிறைவின்போது, மறை மலை நகரில் ஒருங்கிணைத்த காட்சியையும் அதில் பதிவு செய்து இருக்கி றேன். இந்தக் குறுந் தட்டை, உங்களுக்கு ஒரு ஆயுதமாகத் தந்து இருக்கிறேன்.
என்னுடைய அரசியலைப் பற்றிக் கவலைப்பட்டது இல்லை. இலட்சக்கணக் கான மக்களுக்கு இந்தக் குறுந்தட்டையும், புத்தகத் தையும் அன்பளிப்பாகக் கொடுத்து இருக்கின்றேன். ஆனால், குறுந்தட்டுகள் மக்களைச்சென்று அடைந் த அளவுக்கு, புத்தகம் போய்ச் சேரவில்லை. அதைக் கொண்டு போய்ச் சேருங் கள்.அதில், ம.தி.மு.க. என்ற பெயரே இருக்காது.எங்கள் தேர்தல் சின்னம் கிடை யாது. எந்த அடையாளமும் இல்லை. இதைவிட நான் என்ன செய்ய முடியும்?

ஆனால், நான் உங்களிடம் இருந்து ஒன்றை எதிர்பார்க்கின்றேன்.காரணம், உங் களிடம் தன்னலம் இருக்காது. தன்முனைப்போ,பொறாமையோ இருக் காது. ஆனால், இலட்சிய தாகம் இருக்கும். வீரம் இருக்கும், உறுதி இருக்கும், அச்சம் இருக்காது. தக்கவிதத்தில் உங்களை வார்ப்பித்தால், இலட்சியங்களை வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில்தான், உங்கள் இடையே வந்து நிற்கின் றேன். (பலத்த கைதட்டல்).

நீந்திக் கடந்த நெருப்பாறு

இங்கே தங்கை அறிவு பேசுகிற பொழுது, அந்தத் தொடக்க நிகழ்ச்சியைச் சொன் னார்.அதுதான், இந்தப் புதினத்தின், நீந்திக் கடந்த நெருப்பாற்றின் முதலாவது உட்தலைப்பில் வருகிறது. பரமசிவ அண்ணா வியார்-பார்வதி அம்மாள்-கண வன் மனைவி. அவர்களுக்கு நல்ல காணி இருக்கின்றது. நல்ல தண்ணீர் வசதி இருக்கின்றது.அவர்களது தோட்டத்தில் மிளகாய் செடிகள் விளைகின்றன. செங்காரி பசு மாடு இருக்கின்றது. வளமையான குடும்பம்தான். அவர்களுக்கு
இரண்டு பிள்ளைகள். மூத்த மகன் சங்கரசிவம், களமுனையில் இருக்கிறான். விடுதலைப்புலிகளின் படை அணியில், ஒரு தளபதியின் கீழ் துணையாக நின்று போராடுகின்ற ஒரு பொறுப்பான தளகர்த்தனாக இருக்கிறான்.அவனது தம்பி சுந்தரசிவம். இந்த நாவல் நெடுகிலும் சிவன் என்று குறிப்பிடுவது மூத்த வனை; சுந்தரம் என்று குறிப்பிடுவது இளையவனை.

இவர்களுக்கு உதவுவதற்காக வருகிறது ஒரு மலையகத் தமிழர் குடும்பம். அவர்கள், இங்கே தமிழ்நாட்டில் இருந்து, பிரிட்டிஷ் தோட்ட முதலாளிகள் இலங்கை யின் மத்திய மலை மாவட்டத் தோட்டங்களில் பணி ஆற்றுவதற்
காகக் கொண்டு செல்லப்பட்ட வர்கள். அங்கே காடுகளைத் திருத்தி மேடுகள் ஆக்கினார்கள்.தேளும், நட்டுவாக்கலியும்,பாம்பும் ஊர்ந்து திரிந்த காடுகளைத் திருத்தி, இரத்தத்தை வியர்வையாகக் கொட்டி, உயிர் களைப் பலி கொடுத்து,
தேயிலைத் தோட்ட ங்கள், இரப்பர்த் தோட்டங்கள், காபித்தோட்டங்களாக ஆக்கித் தந்தார்கள். அதைப் பொன் விளைகின்ற பூமியாக ஆக்கியவர்கள், தமிழ் நாட்டுத் தமிழர்கள். அவர்கள்தாம், இங்கே இருந்து சென்றவர்கள்.

பரமசிவ அண்ணாவியார் வீட்டில் செங்காரிப் பசு பால் கறக்கின்றது.அதற்கு ஒரு விளக்கத்தை அரவிந்தகுமாரன் எழுதி இருக் கிறார். இரவெல்லாம் வெடி
யோசை. அந்தச் சத்தத்தில் கலங்கிப் போன காராம்பசுவின் பாலும் குறைந்து விட்டது போலும் என்று எழுதி இருக்கிறார்.அதிகாலை வேளையில் புள்ளினங்
களின் கலகலப்புச் சத்தத்தைக்காணோம்; இலைகள் கூட அசைவதாகக் காணோம் என்கிறார். அதனால்தான், நான் சிவகாமியின் சபதக் காட்சியை, இங்கே உங்களுக்குக் கொண்டு வந்து காட்டினேன்.

திணிக்கப்பட்ட ஒப்பந்தம்; விடுதலைப்புலிகள் ஏற்கவில்லை

தம்பிகளே,இந்திய இலங்கை ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் ஏற்கவில்லை. அவர்கள் மீது திணித்தார்கள். அவர்கள் இதில் கையெழுத்து இடவில்லை. நான்
நெஞ்சால் போற்றுகின்ற தலைவர் பிரபாகரன் இதை ஏற்கவில்லை.ஆனால், இந்திய அரசுடனோ,மக்களோடு மோதிக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. என்னை அங்கே கொண்டு போகாமல்,எங்கள் மீது ஒப்பந்தத்தைத் திணித்தால், படைகளைக் கொண்டு போய் இறக்கினால்,எங்கள் வீரர்களின் பிணங்களின்
மீதுதான் நீங்கள் நடந்து செல்ல வேண்டியது இருக்கும் என்றார்.நானும், நச்சுக் குப்பியைக் கழுத்தில் கட்டி இருக்கின்றேன் என்றார். அதற்குப்பிறகுதான், அவ ரை அங்கே கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.

தில்லி ஓட்டலில் இவர்கள் அவரைச் சிறை வைத்த போது, நான் அவரோடு தொலைபேசியில் பேசினேன். 33 நிமிடங்கள் அந்த உரையாடலைப் பதிவு செய் து வைத்து இருக்கின்றேன். அந்தக் காலகட்டத்தில் என்னைத் தவிர, வேறு எவ ரும் அவரோடு பேச முடியவில்லை. என் வாழ்க்கை இடம் அளிக்கு மானால்,
நிகழ்வுகளை எழுதிப் பதிவு செய்வேன். வாழ்க்கை வரலாறு எழுதுகின்ற அள வுக்கு நான் பெரிய மனிதன் அல்ல; ஒரு பெரிய இடத்திலும் நான் இல்லை.
ஆனால், அவர் என்னோடு என்ன பேசினார் என்பதை எழுதுவேன்.

அவரை ஈழத் துக்குக் கொண்டு சென்றபிறகு, இந்தச் சென்னைக் கடற்கரைக்கு வந்து ராஜீவ் காந்தி பேசினார். தமிழர்கள், சிங்களவர் கள் எல்லோருமே இந்தி யாவில் இருந்து போனவர்கள்தாம் என்று முட்டாள்தனமாகப் பேசினார்.அவர் இந்த நாட்டுக்குப் பிரதமர்.ஆனால்,அவர் பாட்டனார் எழுதிய உலக வரலாற்றுப் புத்தகத்தை அவர் படித்தது இல்லை.இன்றைக்கும் தமிழகத்தில் பலருக்குத் தெரியவில்லை; படித்த வர்களுக்கே தெரியவில்லை. பிழைக்கப் போனவர்கள் எதற்கு நாடு கேட்கிறார்கள்?என்று பேசுகிறார்கள்.நீங்கள் அவர்களுக்குத் தெளி வுபடுத்துங்கள்.அங்கே தமிழர்கள் இரண்டு வகையாக இருக்கின்றார்கள். வடக் கிலும், கிழக்கிலும் வாழ்பவர்கள், அந்த மண்ணுக்கு உரிமையாளர்களான பழங் குடித்தமிழர்கள்.அங்கே தனி அரசு,தமிழர்களின் அரசு அமைத்து வாழ்ந்தவர்கள். மற்றொரு பிரிவினரான மலையகத் தமிழர்கள், இங்கே தமிழ்நாட்டில் இருந்து சென்றவர்கள். 1983 கலவரத்தின்போது,அவர்களும் தாக்கப்பட்டார்கள். அப் போது அங்கிருந்து இடம் பெயர்ந்து வந்த ஒரு குடும்பம்தான், பெருமாள்-வே லாயி குடும்பம். அவர்களது பிள்ளைகள் பலர் இறந்து போனார்கள் தாக்குதலி லே. ஒரு மகள் தப்பித்தாள்.அவள்தான் முத்தம்மாள். நல்ல அழகி.

அற்புதமாக எழுதுகிறார் அரவிந்தகுமாரன்

இந்தக் காவியத்தில் காதல் மிக அற்புதமாக, ஒரு இழை யோட்டமாகக் கொண் டு செல்லப்படுகிறது.எந்த ஒரு இடத்திலும், பால் உணர்ச்சியைத் தூண்டக் கூடி ய எண்ணமே வராது. அப்படி அற்புதமாக எழுதுகிறார் அரவிந்தகுமாரன். சுந்த ரம்- முத்தம்மாள் காதல். மலையகத்தில் இருந்து முத்தம்மாள் வீட்டு வேலை
செய்கிறாள். சுந்தரம் பரம சிவத்தின் இரண்டாவது மகன்.இவர்களுக்கு இடை யே காதல் அரும்புகிறது. முள்ளிக்குளத்தில் இராணுவம் வந்து இறங்குகிறது.
தேநீர்க்கடையில் அதுகுறித்துப் பேசுகிறார்கள். ‘ஆர்மிக்காரன் வந்தால், நம்ம பொடியன்கள் அடித்து விரட்டி விடுவார்கள்’என்று பேசுகிறார்கள்.

அங்கே முருகர் வருகிறார்.அவர் ஒரு வேட்டைக்காரர்.காட்டுக்குஉள்ளே புகுந் தால், இரண்டு மான்,இரண்டு உடும்பை அடிக்காமல் வர மாட்டார். ரொம்பத் துணிச்சல் காரர்.இந்தக் காவியத்தின் முக்கால் பகுதி வரை முருகர் வருகிறார்.

சிவத்தின் நண்பன் கணேஷ்,களத்தில் காயப்பட்டுப் படுக்கையில் கிடக்கிறான். உயிர் பிரியும் நேரம். வன்னிக்காட்டில்,அலம்பில் போர்க்களத்தில் எதிரிகளோ டு மோதுகிறபோது, பெண் புலியான ரூபா என்ற வீரநங்கை,தீரத்தோடு போரா டிக் காயப்பட்டுப் போனாள். உயிருக்கு ஆபத்தான நிலைமையில், கணேஷ்
அவளைத் தூக்கிக்கொண்டு போய், மருத்துவமனையில் சேர்க்கிறான். இவர்க ளுக்குள் காதல் மலர்கிறது. இப்போது, கணேஷ் படுக்கையில் கிடக்கிறான். அங்கே ரூபா வருகிறாள்.

கணேஷ் சிவத்திடம் சொல்லுகிறான்: நண்பனே, நான் செத்துப்போய் விடு வேன். நான் ரூபாவைக் காதலிக்கிறேன். அவளும் என்னை நேசிக்கிறாள். அவ ளது வாழ்க்கை பாழாகி விடக்கூடாது. நான் இறந்த பிறகு, அவளை நீ திரும ணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறான். அதைக் கேட்டுத் துடிதுடித்துப் போகிறான் சிவம்.

என்ன கணேஷ் இப்படிச் சொல்லுகிறாய்? என்கிறான். ஆமாம்; வேறு யாரும் இல்லை. நீதான் எனக்காக இதைச் செய்ய வேண்டும் என்கிறான் கணேஷ்.

‘இல்லை. நீ சாவதற்கு முன்னால் நான் சண்டையில் இறந்து விடுவேன்’ என் கிறான் சிவம்.

ரூபா வந்தபோது, அவளிடமும் இதையே சொல்லுகிறான் கணேஷ். அதைக் கேட்டு அவள் அழுதுகொண்டே, ‘இல்லை நீங்கள் சாவதற்கு முன்னால், களத் தில் நானும் இறந்து விடுவேன்’ என்கிறாள்.

இந்தப் படைப்பைத் தந்த அரவிந்தகுமாரன் நாடகங்கள்,கதைகளை எழுதிய வர்., ஈழ விடுதலையோடு இணைந்தவர்.அங்கேயே வாழ்ந்தவர். அதனால்,
அந்த மொழி நடையிலேயே இந்தக் காவியத்தைத் தருகிறார்.

தொடரும் ...

No comments:

Post a Comment