Friday, December 13, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 35

இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு நடைபெற்ற பெரும் ஊழல் போபர்ஸ்பீரங்கி பேர ஊழல்; இப்பொழுது 2 ஜி அலைக்கற்றை ஊழலுக்கு நிகராக எதுவுமே நிற்க முடியாது. அது வேறு விவகாரம்; ஆனால், ராஜீவ்காந்தி பிரதமர் பதவி ஏற்ற காலகட்டத்தில்,போபர்ஸ் பீரங்கிகளை சுவீடன் நாட்டிலிருந்து வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகள், கைமாறிய கோடிகள்,அதற்கு முன்பு இந்தியா வில் இதுபோன்ற ‘ஊழல் வரலாறு’ எதுவும் இல்லை.

போபர்ஸ் நிறுவனம் இந்தியாவின் அரசுத்தலைவர் குடும்பத்திற்கு 64 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரை,சுவீடனில் விசாரித்தவர், அந்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநர் ஸ்டென் லின்ட்ஸ்ட்ராம்; இவர்தான் போ பர்ஸ் நிறுவனம் லஞ்சம் கொடுத்து பீரங்கிகளை இந்தியாவுக்கு வழங்க ஒப்பந் தம் பெற்றது என்று கண்டுபிடித்தார்.அவர் சேகரித்த தகவல்கள் ஆவணங்கள் ஊழல் பணம் கைமாறி வெளிநாட்டு வங்கியில் (சுவீஸ்) பதுக்கப் பட்டு இருந் தது, இடைத்தரகர்கள் யார்? பிரதமர் ராஜீவ் குடும்பம் இதில் எப்படி பயன் பெற் றது?போன்ற அனைத்து ரகசிய தகவல்களையும் அப்போது 1987 ஆம் ஆண்டில் ‘இந்து’ நாளேட்டின் செய்தியாளர் சித்ரா சுப்ரமணியனிடம் வழங்கினார். இவற் றைக் கொண்டு ‘இந்து’ ஏடு போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை இந்தியாவில் அம்ப லப்படுத்தியது. அதற்கு முன்பே சுவீடன் வானொலி அம்பலப்படுத்திவிட்டது.



போபர்ஸ் ஊழலைக் கண்டுபிடித்து அம்பலமாக்கிய சுவீடன் நாட்டின் முன் னாள் காவல்துறை அதிகாரி ஸ்டென் லின்ட்ஸ்ட்ராம், 25 ஆண்டுகளுக்குப்
பிறகு ‘தி ஹீட்’ இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் ராஜீவ்காந்தி
நேரடியாக லஞ்சம் பெற்றார் என்று கூற முடியாது’ எனக் கூறியிருக்கிறார். இதை வைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் தங்கள் தலைவர் குற்றமற்ற வர் என்று கடந்த ஒரு மாதமாக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தம்பட்டம் அடிக்கின்றனர்.

ஆனால், லின்ட்ஸ்ட்ராம் பேட்டியை முழுமையாகப் பார்த்தால் ராஜீவ் காந்தி யின் குடும்பத்திற்கு நெருக்கமான நபர்கள் லஞ்சம் வாங்கினார்கள் என்று
போபர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்டின் ஆர்ட்போ, தனது நாட்குறிப்பில்
எழுதி இருந்தார் எனவும், லஞ்சமாகத் தரப்பட்ட பணம் ‘Q’ என்பவர் மூலம் ‘R’
என்பவர் குடும்பத்திற்கு வேண்டியவர்களுக்கு சேர்க்கப்பட்டு சுவீஸ் வங்கி யில் போடப்பட்டது. இதில் உள்ள ‘Q’ என்ற எழுத்து சோனியாவிற்கு நெருக்க மான இத்தாலி நாட்டு வர்த்தகர் ‘குவாட்ரோச்சி’யைக்குறிக்கும் என்றும் ‘R’ என் பது இராஜீவ்காந்தியைக் குறிக்கும் என்றும் தெளிவாகக் கூறி இருக்கின்றார்.


போபர்ஸ் ஊழலை மூடி மறைக்க இராஜீவ்காந்தி பதவியில் இருந்தபோது,எவ் வளவோ முயன்றார். ஆனால், அந்த ஊழல் அலை, இராஜீவின்ஆட்சிக் கப்ப லையே கவிழ்த்துவிட்டது.போபர்ஸ் பீரங்கி ஊழல் நாட்டை உலுக்கியபோது,
நாடாளுமன்றத்தில் இதுபற்றி மேலதிக விபரங்களை விரல் நுனியில் வைத் துக் கொண்டு பிரதமர் இராஜீவ்காந்தியை நடுங்கச் செய்தவர் தலைவர் வைகோ. அவரது நாடாளுமன்றப்பணிகளில் மிகவும் குறிப்பிடத்தக்க இந்தப்
புகழ்பெற்ற விவாதம் இத்தொடரில் தற்போது இடம் பெறுகிறது.

ஒரு நாடாளுமன்றஉறுப்பினர் எவ்வாறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தின்
கவனத்திற்கு வைக்க வேண்டும்? என்பதற்கு தலைவர் வைகோவின் இந்த
உரைகள் ஒரு ‘உரைகல்’ ஆகும்.

1987ஆகஸ்டு 11 இல் தலைவர் வைகோ மாநிலங்களவையில் போபர்ஸ் பீரங் கி ஊழல் பற்றி விவாதத்தில் ஆற்றிய உரை வருமாறு:

இந்தியாவின் மதிப்பு தரைமட்டம் ஆனது

“போபர்ஸ் பீரங்கிகள் குறித்து பிரதம மந்திரி வழங்கிய வாக்கு மூலங்கள் அனைத்தும் உண்மையின் பிரளயத்துக்குள் மூழ்கி அழிந்துபோனது துரதிருஷ் டவசமான சோக முடிவு ஆகும்.ஒரு நாட்டின் பிரதமரின் அறிக்கைகள்அனைத் தும் பொய் என நிரூபிக்கப்பட்டால், அந்த அரசின் மதிப்பு என்ன ஆகும்? இராஜீ வ்காந்தி தலைமை தாங்கும் இந்திய அரசின் மதிப்பு நொறுங்கி தரைமட்ட மாகி விட்டது.அவரது வாக்குமூலங்களை ஒவ்வொன்றாகப் பரிசீலிப்போம்.

சுவீடன் நாட்டுப் பீரங்கிகள் வாங்கியதில் பலகோடி ரூபாய் ஆளும் காங்கிரஸ்
கட்சியின் பெரும் புள்ளிகளுக்கு கமிஷனாக கொடுக்கப்பட்டதென்றுசுவீடன் நாட்டு வானொலி ஏப்ரல் 16 ஆம் தேதி 1987 இல் அறிவித்தவுடன்,பிரதமர் இரா ஜீவ்காந்தி அந்தக் குற்றச்சாட்டு பொய் என்றும், பீரங்கிகள் வாங்கியதில் இடைத்தரகர்களே கிடையாது என்றும், கமிஷன் பற்றிய பேச்சுக்கே இடமில் லை என்றும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும்,வெளியேயும் அடித்துப் பேசி னார்.

அதுமாத்திரமல்ல, ஏப்ரல் 20 ஆம் தேதி பிரதமர் இராஜீவ்காந்தி நாடாளுமன்றத் தில் குறிப்பிடும் போது, ‘சுவீடன் பிரதமர் ஓலோஃப் பால்மே இந்த பேரத்தில் ஏஜெண்டுகளோ, இடைத்தரகர்களோ கிடையாது என்று உத்தரவாதம் அளித்த தாகக்கூறி இத்தகைய வாக்குறுதியை விட வேறு என்ன வேண்டும்’ என்றார்.

ஆனால், சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர் திருமதி அனிதா கிரடின் ஏப்ரல் 29 ஆம் தேதி செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் அன்றைய பிர தமர் ஓலோஃப் பால்மே போபர்ஸ் கம்பெனியின் வாக்குறுதியைத் தெரிவித் தாரே தவிர, சுவீடன் நாட்டு அரசின் சார்பில் எந்த வாக்குறுதியும் வழங்க வில் லை’ என்று தெளிவு படுத்தி உள்ளார். பிரதமர் இராஜீவ்காந்தியின் வாக்கு மூலம் அதோகதி ஆகிவிட்டது.

பிரதமர் இராஜீவ்காந்தி சாமர்த்தியசாலி தான். அதனால்தான் செத்துப்போன
முன்னாள் பிரதமர் ஓலோஃப் பால்மேயை சாட்சிக்கு அழைக்கிறார்.

ஓலோஃப் பால்மேயை கல்லறையில் இருந்து தோண்டி எடுத்து சாட்சிக்கூண் டில் நிறுத்தப்போகிறதா இந்த அரசு? அதனால்தான் உண்மையை குழி தோண் டிப் புதைத்துவிட்டு இராஜீவ்காந்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து ஓலோஃப் பால்மேயின் பெயரைச்சொல்லி உரக்கப் பேசினார். அடுத்த வாக்குமூலத்தைப் பார்ப்போம்:

சுவீடன் நாட்டு ரேடியோ ஒலிபரப்பியசெய்தி டெல்லியில் இருந்துதான் நிருபர்
ஒருவர் கிளப்பிவிட்டிருக்கிறார் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் சொன் னார்.ஆனால், சுவீடன் நாட்டு ரேடியோ கம்பெனியினுடைய நிர்வாகத் தலை வர் ஜான்சன், செய்தி சுவீடன் நாட்டின் தலைநகரமாகிய ஸ்டாக்ஹோமில் தான் சேகரிக்கப்பட்டது என்றார். ரேடியோ நிறுவனத்தின் தலைமை நிருபர்
இதுபற்றி குறிப்பிடுகையில், ‘டெல்லியில் இராஜீவ்காந்தி சொன்னது முழுவ தும் பொய் என்றும், முட்டாள்தனமானது’ என்றும் தெரிவித்தார். பிரதமர்
இராஜீவ்காந்தி அதுபற்றி பிறகு பேசவே இல்லை.

பிரதமரின் அடுத்த வாக்குமூலத்திற்கு ஏற்பட்ட கதியைப் பார்ப்போம்.“ஏப்ரல் 27
ஆம் தேதி இராணுவத் தளபதிகள் மத்தியில் பிரதமர் பேசுகையில் இந்த பேரத் தில் இடைத்தரகர்கள் இல்லை என்று சுவிடன் நாட்டு அரசு தனக்கு தெரிவித் துவிட்டது என்றும்,சுவிட்சர்லாந்து வங்கிகளில் யார் பேரிலும் பணம் போடப் படவில்லை என்றும் கூறினார்.

”இராஜீவ்காந்தியின் அப்பட்டமான பொய் 

ஆனால், ஒரு பயங்கரமான உண்மையை மூடி மறைத்து விட்டு இதனைச் சொல்லி இருக்கிறார். அதிர்ச்சி தரும் அந்த உண்மை என்ன தெரியுமா? போபர் ஸ் கம்பெனியிடமிருந்து ஏஜெண்டு களுக்கு மாத்திரமல்ல; மற்றவர்களுக்கும் பணம் கொடுக்கப்பட்டதென்று அக்கம்பெனியே சுவீடனிலுள்ள இந்தியத் தூத ரிடம் ஏப்ரல் 24 ஆம் தேதியே ஒரு அறிக்கை மூலம் தெரிவித்திருந்ததென்று சுவீடன் நாட்டுத் தணிக்கைக் குழு தெரிவித்து விட்டது.

கமிஷன் பணம் கைமாறியுள்ளதென்று ஏப்ரல் 24 ஆம் தேதி இந்தியத் தூதருக்கு
தகவல் கொடுக்கப்பட்டுவிட்டது.இதனை மூடி மறைத்துவிட்டு ஏப்ரல் 27 ஆம் தேதி பிரதமர் இராஜீவ்காந்தி ஒன்றுமே கிடையாதென்று அப்பட்டமான பொய் யைச் சொல்லுகிறார். கொள்ளைக்காரர்களை தனது முகாமில் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம் கூற முடியும்?

ஊழலின் பிரதான பாத்திரம்

நீங்கள் குற்றவாளி, ஆகையால் உண்மையை மறைத்தீர்கள். நீங்கள் குற்ற வாளி, ஆகையால் நாடாளுமன்றத்தில் பொய் சொன்னீர்கள். (இ.காங்கிரஸ் உறுப்பினர்கள் பலத்த கூச்சல், குறுக்கீடுகள்) இந்தஊழல் கொள்ளையின் பிர தான பாத்திரமாகிய போபர்ஸ் கம்பெனியின் இந்திய ஏஜெண்ட் வின்சத்தா பற் றிய திடுக்கிடும் செய்திகளை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

பீரங்கி ஊழல் குறித்து குமரி முனையிலிருந்து இமயம் வரை ஏப்ரல் மாதம் நாடெங்கும் பேசப்பட்ட பின்பு,வின்சத்தா மே மாதம் 8 ஆம் தேதி சர்வ சாதா ரணமாக டில்லி விமான நிலையத்தில் நுழைந்து,அமெரிக்காவிற்குப் பறந்து சென்றார்.நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருக்கும் நேரத்திலே தனது சொகுசுக் கார்களையும் ஆடம்பர பங்களாக்களையும் டெல்லியில் விற் றார்.சில நாட்கள் கழித்து வின்சத்தாவின் குடும்பத்தார் டெல்லியிலிருந்து
வெளிநாடு சென்றனர்.

வின்சத்தாவிற்கு எல்லாம் தெரியும்

ஜூன் 4 ஆம் தேதி சுவீடன் நாட்டுத் தணிக்கைக்குழு அறிக்கை சமர்ப்பித்தது.
ஜூன் 5 ஆம் தேதி வின்சத்தாவின் மகன் ஹெர்ஷ் சத்தா டெல்லியிலிருந்து
வெளிநாடு சென்றார். இத்தனைக்குப்பின்னர் இந்திய அரசு சொல்கிறது, வின் சத்தா தேடப்படுகிறாரென்று. நான் குற்றம் சாட்டுகிறேன், இந்த ஊழலின் முழு விவரம் வின்சத்தாவிற்குத் தெரியும்.அதனால்தான் வின்சத்தாவை இந்தியா வை விட்டு வெளியேற்றச்சொல்லி அனுப்பி வைத்ததே இராஜீவ்காந்தியின் அரசாங்கம்தான்.குதிரையை வெளியே விரட்டி விட்டு லாயத்தைப்பூட்டுவதாக பாசாங்கு காட்டுகிறது, இந்த அரசு. இதைவிட திடுக்கிடும் செய்தி என்னவெ னில் வின்சத்தாவின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித்தலை வர்களிடம் ஜூன் 17 ஆம் தேதி இராஜீவ்காந்தி தெரிவிக்கிறார்.

ஆனால், 12 நாட்கள் கழித்து ஜூன் 29 ஆம் நாள் நியூயார்க்கில் உள்ள இந்தியத்
தூதரகத்தில் (கான்சலேட்) வின்சத்தா அலட்சியமாக உள்ளே சென்று பவர் ஆப்
அட்டர்னி வாங்கிக்கொண்டு வெளியே செல்கிறார். இந்தியத் தூதராலயத்தை
இயக்குவது இந்திய அரசா? அல்லது வேறு நாட்டு அரசாங்கமா?அனைவரை யும்  முட்டாள் என்று கருதிக்கொண்டே பிரதமர் இராஜீவ்காந்தியின் அரசாங் கம் இந்த நாடகத்தை நடத்துகிறது.

பலகோடி ரூபாய் ஊழல் கொள்ளையின் உண்மை அறிந்த வின்சத்தா உயிரோ டுதான் இருக்கிறாரா? அல்லது செத்துப்போனாரா? என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. ஏனென்றால் இங்குதான் நகர்வாலாவிவகாரம் நடந்ததென்பது நினை வுக்கு வருவதால் வின்சத்தாவின் உயிரைப்பற்றி அஞ்சுகிறேன்.

சிவராஜ் பாட்டீல் (இராணுவ ராஜாங்க அமைச்சர்): கோபால்சாமி எல்லை மீறிப் பேசுகிறார். அவரது குற்றச்சாட்டு மோசமானது.

உபேந்திரா (தெலுங்குதேசம்):கோபால்சாமி உண்மையைப் பேசுகிறார். வின் சத்தா உயிரோடு இருக்கிறாரா என்பது உங்களுக்குத் தெரியுமா?

சிவராஜ் பாட்டீல்: நாங்கள்தான் வின்சத்தாவை நாட்டைவிட்டு அனுப்பி வைத் தோம் என்று கோபால்சாமி சொல்வது சரி அல்ல.

வைகோ: நான் சொன்னது சொன்னதுதான். அதில் உறுதியாக நிற்கிறேன். நகர்வாலாவுக்கு ஏற்பட்ட கதி வின்சத்தாவுக்கு ஏற்பட்டுவிடக்கூடாதே என்று அஞ்சுகிறேன்.

கே.சி.பந்த் (மத்திய இராணுவ அமைச்சர்):நகர்வாலா காலையில் பணத்தைப்
பெற்றார். ஆனால், மாலையில் பணத்தோடு கைது செய்யப்பட்டார்.

நிர்மல் சட்டர்ஜி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்): ஆனால், மறுநாள் நகர்வாலா மறைந்துபோனார்.

அடல்பிகாரி வாஜ்பாய் (பாரதிய ஜனதா):சந்தேகத்துக்கிடமான சூழ்நிலையில்

வைகோ: மர்மமான முறையில் பலத்த சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகை யில் நகர்வாலா செத்துப்போனார். ஒருவரை தீர்த்துக்கட்டுவதற்கு லாரி டிரக் கை விட்டு மோதுவது சுலபமான வழி.

இராஜீவின் கோட்பாடு 

பீரங்கிகள் வாங்கியதில் தரகர்கள் இல்லை என்றும் கமிஷன் பணம் இல்லை
என்றும் பிரதமர் இராஜீவ்காந்தி சொன்னது எல்லாம் முற்றிலும் பொய்யாகி விட்டது. ஆனால்,இராஜீவ்காந்தி ஒரு கோட்பாட்டில் முழு நம்பிக்கை வைத் துள்ளார். ஆம். நாஜி ஜெர்மனியின் செய்தி விளம்பர அமைச்சர் கோயபல்சின் கோட்பாட்டில் நம்பிக்கை வைத்துள்ளார்.

“பொய்யைச் சொல். பத்து தடவை அதே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்.
அது உண்மையாகிவிடும்” என்பது கோயபல்சின் கோட்பாடு. இதைத்தான்
இராஜீவ்காந்தி பின்பற்றுகிறார். நமது பிரதமர் இராஜீவ்காந்தியின் வாக்குமூ லங்களுக்கு முன்னால் உலகப்புளுகன் டாக்டர் கோயபல்ஸ் கூட சுண்டைக் காய் ஆகிவிட்டான்.

போபர்ஸ் கம்பெனியின் துணைத் தலைவர் பிரிட்டல் பிரைடன் இந்தியா வந் தார். இந்திய இராணுவ அமைச்சரது இலாகா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். போதிய விளக்கங்கள் தருவதற்கு போபர்ஸ் கம்பெனியின் தலை வர் உள்ளடங்கிய அதிகாரப்பூர்வமான குழுவை இந்தியாவுக்கு அனுப்பத்தயார் என்றார்.ஜூலை 3 ஆம் தேதி இந்திய அரசு அதனை ஒப்புக்கொண்டது.

முன்னுக்குப்பின் முரணான முடிவுகள் ஏன்?

போபர்ஸ் கம்பெனிக்கும் சுவீடன் அரசுக்கும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், மறுநாள் ஜூலை 4 ஆம் தேதி பிரதமர் இராஜீவ்காந்தி மாஸ்கோவிலி ருந்து டெல்லியில் காலடி வைத்தவுடன் இந்த முடிவு மாற்றப்பட்டது. போபர் ஸ் குழு வரவேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டது. என்ன கார ணத்துக்காக முன்னுக்குப்பின் முரணான முடிவுகள்? இதற்கு ஆளும்கட்சி பதில் சொல்ல முடியாது.

போபர்ஸ் கம்பெனியின் பேரங்கள் பல நாடுகளில் சந்தேகத்திற்கு உரியதாகி
உள்ளன. சுவீடன் நாட்டுத் தணிக்கைக்குழு அறிக்கை “35 கோடியிலிருந்து 50 கோடி வரை பீரங்கி பேரத்தை ஒட்டி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளன என்று
தெரிவிக்கிறது. ஆனால், இந்த அறிக்கையில் ஓரிடத்தில் அரைப்பக்க அளவில் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.இன்னொரு இடத்தில் முக்கால் பக்கத்திற்கு நீக் கப்பட்டுள்ளன. போபர்ஸ் கம்பெனி கமிஷன் பணம் தந்ததன் மூலம், ஒப்பந்தத் தை மீறின குற்றம் புரிந்துள்ளது-மோசடி குற்றம் புரிந்துள்ளது. இந்த ஊழலை
நடத்தியவர்கள் அன்னிய செலாவணிச் சட்டங்கள், வருமான வரிச் சட்டங்கள்
அனைத்திற்கும் விரோதமான குற்றம் புரிந்தவர்கள்.”

கண்துடைப்பு நடவடிக்கை

சுவிட்சர்லாந்து வங்கிகளையும் சுவிட்சர்லாந்து நாட்டையும் இதற்குப்பயன் படுத்தி உள்ளனர். எனவே இவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடங்கப்பட வேண்டும்.கோடிக்கணக்கான பணம்சுவிட்சர்லாந்து வங்கியில் பதுக்கப்பட்
டுள்ளது. அதனை இந்தியாவுக்கு கொண்டுவர வழி என்ன? கடந்த கூட்டத்தொ டரில் நிதி மசோதா விவாதத்தில் இதுகுறித்து பிரதமர் இராஜீவ்காந்தியும்பிலிப் பைன்ஸ் நாட்டு அக்வினோ அம்மையார் முடக்கியதுபோல, சுவீஸ் வங்கி களில் இந்தியப் பணத்தை முடக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்று கேட்டதற்கு, பிரதமர் பரிசீலிப்போம் என்று பதில் சொன்னார். சுவீஸ்
வங்கிகளின் ரகசிய கணக்குகளில் போடப்பட்டுள்ள இந்தியப் பணத்தைக் கண் டறிய சுவீஸ் நாட்டு அரசோடு இந்திய அரசு ஒப்பந்தம் செய்யப்போவதாக அறி வித்துள்ளது.

அமெரிக்கா சுவிஸ் நாட்டோடு இதுபோல ஒரு ஒப்பந்தம் போட்டு அமலுக்கு வர நான்கு ஆண்டுகள் ஆயிற்று. எனவே ஒப்பந்தம் போடுவது என்பது காலம்
கடத்தும் கண்துடைப்பு நடவடிக்கை.சுவீஸ் நாட்டு அரசாங்கமே 1983 இல் ஒரு
சட்டம் நிறைவேற்றியுள்ளது. அந்தச் சட்டமே நாம் நடவடிக்கை எடுக்கப்போது மானது. இந்தியாவில் கிரிமினல் வழக்குப் பதிவுசெய்துவிட்டு இந்திய சட்ட அமைச்சரோ இந்திய நீதிமன்றமோ அல்லது அரசு வழக்கறிஞரோ சுவீஸ் வங் கிகளின் ரகசிய கணக்கைக் கேட்டால் சுவீஸ் அரசாங்கமே அதற்கு ஏற் பாடு செய்யும்.கமிட்டி அமைத்து காலம் கடத்துவது எதற்காக வெனில் சுவீஸ் வங்கி களில் உள்ள பணத்தை அங்கிருந்து எடுத்து ஊழல பேர்வழிகள் பணத்தோடு தப்ப வழி செய்யத்தான் ஊழலை விசாரிக்க நாடாளுமன்றக் குழு அமைப்பதில்
பயன்கிட்டாது. கமிஷன் பணம் கைமாறியது தெரிந்தும்கூட குற்றச்சாட்டை பொய் என்று இந்திரா காங்கிரஸ் சாதிக்கும்.

குற்றவாளிகள் நிரம்பிய குழு

அந்த முடிவோடு இந்திரா காங்கிரஸ் உறுப்பினர்கள் பெரும்பான்மைகொண்ட
கமிட்டியின் முடிவு நியாயமான முடிவாக இருக்காது. ஆளும் கட்சி முகாமில் -
குற்றவாளிகள் நிரம்பிய கமிட்டியில் நாங்கள் இடம்பெற விரும்பவில்லை.

பவன்குமார் பன்சால் (இ.காங்கிரஸ்):தானோ தனது குடும்பத்தாரோ பீரங்கி
பேரத்தில் லஞ்சம் ஏதும் வாங்கவில்லை என்று பிரதமர் இராஜீவ்காந்தி அவர் கள் நாடாளுமன்றத்திலேயே சொல்லி விட்டாரே, இனியுமா எதிர்க்கட்சி களுக்கு சந்தேகம்?

வைகோ: தனது மைத்துனர்களோ, நண்பர்களோ கூட வாங்கவில்லை என்று
பிரதமர் சொல்லவில்லையே? 

போபர்ஸ் ஊழல அம்பலமானதால் இராஜீவின் பரிசுத்தமானவர் என்ற தோற் றம் நொறுங்கியது.

1989 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி
பெற்று, வி.பி.சிங் பிரதமர் பொறுப்புக்கு வந்தார். அப்போது தலைவர் வைகோ
இராஜீவ்காந்தி அரசு மூடி மறைத்த போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்து
குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்த வேணடும் என்று வலியுறுத் தி னார்.

அப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகாசி நாடாளுமன்றத் தொ குதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வைகோ வெற்றி வாய்ப்பை இழந்தார். இதைச் சுட்டிக்காட்டிய இ.காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் என்.கே.பி.சால்வே, நீங்கள் வெற்றிபெற்று மக்களவைக்குப் போயிருந்தால் நாங்கள் மாநிலங்கள்
அவையில் நிம்மதியாக இருந்திருப்போம் என்று கூறுகின்ற அளவுக்கு காங் கிரஸ் கட்சியினர் வைகோவைக் கண்டு அஞ்சினர்.

போபர்ஸ் ஊழலில் இராஜீவ்காந்தியின் பங்கு குறித்து ஆதாரங்களை அடுக்கி,
1989 டிசம்பர் 29 இல் தலைவர் வைகோ ஆற்றிய உரை மிகவும் பரபரப்பை ஏற் படுத்தியது. போபர்ஸ் பீரங்கி பேரம் குறித்து, பிரதமர் வி.பி.சிங் மாநிலங்கள்
அவையில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்து ஆங்கிலத்தில் பேசத் தொடங் கியதும், இ.காங்கிரஸ் உறுப்பினர் ரத்னாகர் பாண்டே மற்றும் வடபுலத்து
எம்.பி.,க்கள் பிரதமரை இந்தியில் பேசுமாறு கூச்சலிட்டனர்.

இந்தி வெறியர்களின் இரட்டை வேடம்

வைகோ: இந்தி வெறியில் கூச்சலிடும் உறுப்பினர்களே, உங்கள் கோரிக்கை யை இம்மன்றத்தில் உள்ள தமிழ்நாட்டுக் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏற்றுக்
கொள்கிறார்களா? ஏன் அவர்கள் வாய்மூடி மெளனிகளாய் இருக்கிறார்கள்? இதுதான் காங்கிரஸ் போடும் இரட்டை வேடம்.

கே.வி.தங்கபாலு (இ.காங்): துணைப் பிரதமர் தேவிலால் இந்தியில்தானே
பேசுகிறார்.

வைகோ: முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி தமிழ்நாட்டில் காயல்பட்டினத்திற் குச் சென்றபோது,அங்குள்ள இஸ்லாமியர்களை இந்திக்காரர்கள் என்று கரு திக்கொண்டு இந்தியில் பேசினார். அவர்களோ,தமிழ்பேசும் முஸ்லிம்கள். இரா ஜீவ்காந்தி பேசியது அவர்களுக்குப் புரியவில்லை. இதுதான் இராஜீவ்காந்தி
போட்ட இரட்டை வேடம்.

கே.வி.தங்கபாலு: அங்கிருந்தவர்கள் இராஜீவ்காந்தி இந்தியில் பேசவேண் டும் என்று விரும்பினார்கள். அதனால் இந்தியில் பேசினார்.


வைகோ: உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி.


மக்கன்லால் ஃபொடேதார் (இ.காங்):போபர்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து அரசு

ஆவணங்களையும் பிரதமர் சபையில் வைக்க வேண்டும். இதுகுறித்து நேற்று
மக்களவையில் பிரதமர் என்ன சொன்னார் என்றால்...

வைகோ: ஒரு ஒழுங்குப் பிரச்சினை மக்களவையில் நடந்த எந்த விவாதத் தைக் குறித்தும் இந்தச் சபையில் யாரும் எதுவும் குறிப்பிட முடியாது என்பது விதி. எனவே, பொடேதார் அதைப்பற்றி பேசக்கூடாது.

ஃபொடேதார்: போபர்ஸ் சம்பந்தமான ஆவணங்கள்அனைத்தையும் இம்மன் றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

வைகோ: மந்திரியாக இல்லாமலேயே பிரதமர்அலுவலகத்தின் மூலை முடுக் கெல்லாம் மூக்கை நுழைக்கக்கூடியவராக,மந்திரி சபையையே ஆட்டிப்படைக் கும் அத்துமீறிய அதிகாரம் படைத்தவராக விளங்கிய ஃபொடேதார் அவர்களே,
நீங்கள் வலம்வந்த காலத்தில் இந்த ஆவணங்களையெல்லாம் நீங்கள் படித்தி ருக்கலாமே. இரண்டரை ஆண்டுக் காலம் இந்த ஆவணங்களையெல்லாம்
வைத்துக்கொண்டு என்ன செய்தீர்கள்? அப்போது ஏன் நாடாளுமன்றத்தில்
வைக்கவில்லை?

என்.கே.பி.சால்வே (இ.காங்): கமிஷன் வாங்கியவர்கள் யார் என்பதைக்கண்டு பிடிப்பதில் நாங்கள்குறுக்கே நிற்கவில்லை.

வைகோ: குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவிடாமல் உண்மைகளை மூடி மறைத்தீர்கள். இப்போதைய உங்கள் நிலை மிகவும் பரிதாபகரமானது. 

என்.கே.பி.சால்வே (இ.காங்): நான் நேற்றும் குறிப்பிட்டதைப்போல சிவகாசித் தொகுதியில் நீங்கள் தோற்றதால் நான் உண்மையில் வருத்தப்படுகிறேன். நீங் கள் மட்டும் வெற்றி பெற்று மக்களவைக்குச் சென்றிருந்தால் நான் கடவு ளுக் கு நன்றி தெரிவித்திருப்பேன். நாங்களும் இந்த அவையில் நிம்மதியாக இருப் போம்.

நேர்மையாளர் அருண்சிங்

வைகோ: பிரதமர் வி.பி.சிங் அவர்கள் போபர்ஸ் பேரம் குறித்த சில முக்கிய மான அரசுக் கோப்புகளை இன்று அவையில் தாக்கல் செய்திருக்கின்றார். அவற்றில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது முன்னாள் இராஜாங்க இரா ணுவ அமைச்சர் அருண்சிங், அன்றைய பிரதமர் இராஜீவ்காந்திக்கு, தானே கைப்பட எழுதி அனுப்பிய முக்கியக் குறிப்பாகும்.1987 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் போஃபர்ஸ் பேரம் குறித்த பிரச்சினை வெடித்த சந்தர்ப்பத்தில் அருண் சிங் இந்த மன்றத்தில் ஆற்றிய அற்புதமான பேச்சு இன்னமும் என் செவிகளில் ரீங்காரம் செய்கின்றது. ஊசி விழுந்தால் ஓசை கேட்கும் அளவுக்கு அவர் பேசு கையில் நிசப்தம் நிலவியது. என்னுடைய நாடாளுமன்ற வாழ்க்கையில் என்
நினைவில் நிலைத்து நிற்கும் பேச்சுகளில் அதுவும் ஒன்று. போஃபர்ஸ் பேரத் தில் ஊழல் நடைபெறவில்லை என்று நம்பிக்கையோடு, அருண்சிங் ஆணித்த ரமாக உள்ளத்தூய்மையோடு வாதிட்டார். அவரது அந்தப் பேச்சை மேற்கோள் காட்டுகிறேன்.

“இடைத்தரகர்கள் இல்லை. கமிஷன் இல்லை என்று நாங்கள் நம்புகின்றோம்.
எங்காவது இந்த பேரத்தில் லஞ்சப்பணம் கைமாறியதாக நாங்கள் அறிய நேர்ந் தால், எங்கே? எப்பொழுது? எப்படி? யாருக்கு? எந்த முறையில்? ஏன்? இந்தக்
கேள்விகளுக்கான விடைகளைத் துருவித் துருவி ஆராய்ந்து உண்மையை
வெளிக்கொண்டு வருவோம். நாங்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட் டால் எங்களைத் தூக்கிலிடுங்கள்.”

அருண்சிங் ஒரு உயர்ந்த நேர்மையாளர்.உண்மையாளர். மனசாட்சிக்கு கட்டுப் பட்ட மனிதர். அதனால்தான் போபர்ஸ் பீரங்கி பேரத்தில் பல கோடி ரூபாய் கமிஷன் என்ற பெயரில் ஊழல் நடந்துள்ளது என்று அறிய நேர்ந்ததும்,இந்திய மக்களையும் இந்திய அரசையும் போபர்ஸ் கம்பெனி திட்டமிட்டு மோசடி செய் துள்ளதாக முடிவுக்கு வந்து, பிரதமர் இராஜீவ்காந்திக்கு அதுகுறித்து தன் கருத் துகளை திட்டவட்டமான குறிப்பாக எழுதி அனுப்பினார்.

அக்குறிப்பில்“அரசாங்கத்தின் நாணயமும், மக்கள் அரசின்பால் வைக்க வேண் டிய நம்பிக்கையுமே அடியோடு சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங் கம் இதுவரை சொல்லிவந்த கொள்கைக்கு நேர் எதிராக கமிஷன் கொடுக்கப் பட்டுள்ளதால் இராணுவத் தளவாடங்கள் குறித்த அனைத்துப் பேரங்களுமே சந்தேகத்திற்குள்ளாகும் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும்,அருண் சிங் குறிப்பிட்டுள்ளார்.எந்த அருண்சிங் நாடாளுமன்றத்தில் நின்றுகொண்டு இராஜீவ்காந்தி அரசை ஆதரித்து போபர்ஸ் பேரம் குறித்து வெகு சிறப்பாக வாதிட்டாரோ, அதே அருண்சிங் ஊழல் நடந்துவிட்டது என்று அறிவித்தவுடன் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு கடமையைச் செய்தார்.”

உண்மைகளை மறைத்த இராஜீவ்காந்தி

அந்த அருண்சிங்கிற்கு இராஜீவ்காந்தி எழுதிய பதில் குறிப்பு மிகவும் மோச மான ஒன்றாகும். ‘இராஜாங்க இராணுவ மந்திரி அருண்சிங் தனது சுயகெளர வத்தையே பெரிதாகக் கருதுகின்றார்’ என்று இராஜீவ்காந்தி தனது குறிப்பில் குற்றம் சாட்டுகிறார். அதுமட்டுமல்ல, மிகவும் குத்தலாக ‘வயிற்றைப் பிசை வதும், முழங்கால்களைத் திடீர் திடீரென்று நீட்டி மடக்குவது போன்ற அங்க அசைவுகளும் கவைக்கு உதவாது’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வாசகங் களுக்கான அர்த்தம் எனக்கும் புரியவில்லை. இந்த மன்றத்தில் ஒருவருக்கும் புரியவும் புரியாது. டூன் பள்ளிக் கூடத்து வாசனையில் இராஜீவ்காந்தி கற்றுக் கொண்ட வார்த்தை அலங்காரங்கள் இவை.

தன் கடமையை ஓரளவுக்கு செய்தாலும் அருண்சிங் தன் நண்பனுக்கு மேலும்
சிக்கல்கள் வந்துவிடக்கூடாது என்று கருதித்தான் எம்.பி., பதவியையும் இரா ஜினாமா செய்துவிட்டு அரசியல் துறவறம் மேற்கொண்டார்.

அன்றைய பிரத மர் இராஜீவ்காந்தி அருண்சிங்கிற்கு எழுதிய பதில் குறிப்பு 5 வார காலம் வரை யில் அருண்சிங்கிற்கு அனுப்பப்படவில்லை. ஏன்? என்ன காரணம்? 1987 ஜூலை 18 முதல் அருண்சிங் அமைச்சர் பொறுப்பை இராஜினா மா செய்து 3 தினங்களுக்குப் பின்புதான் இராஜீவ்காந்தியின் குறிப்பு 21 ஆம் தேதி அனுப்பப் படுகின்றது.நாடாளுமன்றத்தின் நுழைவுவாயிலில் ‘சத்திய மேவ ஜயதே’ என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் சத்தியத்தையும், உண்மை யையும் குழிதோண்டிப் புதைத்து மூடி மறைப்பதையே இராஜீவ்காந்தி அரசு
தனது கோட்பாடாகக் கொண்டு செயல்பட்டு வந்திருக்கின்றது.

1987 ஏப்ரல் 16 ஆம் தேதி போபர்ஸ் ஊழல் குறித்து சுவீடன் தேசிய வானொலி அறிவித்தவுடன் அன்றைய பிரதமர் இராஜீவ்காந்தி நாடாளுமன்றத்திற்கு ஓடோடி வந்து “அத்தனையும் பொய், இட்டுக்கதை.இடைத்தரகர்கள் இல்லை, கமிஷனே கிடையாது” என்று முழக்கமிட்டாரே? 

கோடி கோடியாக கமிஷன் பணம் சுவீஸ்வங்கிகளில் உள்ளது என்று இப்போது நிரூபிக்கப்பட்டு விட்டதே! அப்படியானால் பொய் என்ற வார்த்தைக்கும், கட் டுக்கதை என்ற வார்த்தைக்கும் இராஜீவ்காந்தியின் அகராதியில் அர்த்தம் என்ன? ஒரு மனிதன் ஊழல் பற்றிய உண்மையை மூடி மறைத்தால் அவனும் குற்றவாளிதான்.

நாடாளுமன்றத்திற்கும், அதன்மூலம் நாட்டு மக்களுக்கும் உண்மையை மூடி
மறைப்பவர் நேர்மையான மனிதராக எப்படி இருக்க முடியும்? அதனால்தான்
இந்த நாட்டின் மிக உயர்ந்த பதவியான பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருந்த
பெரிய மனிதரை நோக்கி எனது குற்றம் சாட்டும் விரலைத் திருப்புகின்றேன்.
வி.பி.சிங் தலைமையிலான அரசு சில விளக்கங்களைத் தரவேண்டுமென்று
கேட்கின்றேன்.

கேள்விக்கணைகள்

1. போபர்ஸ் கம்பெனியின் முன்னாள் அதிபர் மார்ட்டின் ஆர்ட்போ தனது நாட் குறிப்பில் ‘G ’ என்ற எழுத்துக்கு உரியவரை எந்த வகையிலும் பாதுகாக்க வேண்டும் என்று எழுதியிருந்தாரே! சுவீடன் அரசோடும், அரசு வழக்கறிஞரோ டும் முறையான தொடர்புகொண்டு இந்த நபர் யார் என்று கண்டுபிடிக்க வேண் டும்.

2. சுவீடன் நாட்டின் பிரதமர் மறைந்த ஓலோப் பால்மே அவர்களை முன்னாள்
பிரதமர் இராஜீவ்காந்தி ஐந்து நட்சத்திர ஓட்டலில் தனிமையில் சந்தித்தாரா?

ஆனந்த் சர்மா (இ.காங்): உங்களுக்கு ஒரு தகவல் சொல்ல விரும்புகிறேன். நான் பேச இடம் கொடுங்கள்.

வைகோ: உங்கள் யோசனை ஒன்றும் எனக்குத் தேவையில்லை.உங்கள் கட்சி
சார்பாக பேசும்போது தெரிவியுங்கள். என் பேச்சின் போக்கைத் திசை திருப்ப
வேண்டாம்.

பனாமா நாட்டிற்குள் அமெரிக்கா இராணுவத்தை அனுப்பியதை நாம் அனைவ ரும் கண்டனம் செய்தோம்.இதில் இ.காங்கிரஸ்காரர்கள் ரொம்ப வேகம் காட்டி னார்கள். பனாமா நாட்டில் தூக்கி எறியப்பட்ட அதிபர் நொரீகா போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார் என்றும், கோடி கோடியாக சுவீஸ் நாட்டு வங்கிகளில் பணம் குவித்து வைத்துள்ளார் என்றும் செய்திகள்
வெளிவந்தன. போபர்ஸ் பேர ஊழலில் சுமார் 40 கோடி ரூபாய் பனாமா நாட்டு
பினாமி கம்பெனி ஒன்றோடு தொடர்புபடுத்தப்பட்டு, முன்பு வெளியானதை மன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். இதே நொரீகா இலண்டனில் இந்துஜாவைச் சந்தித்ததாக வந்த செய்தியையும் இந்த அரசு விசாரிக்க வேண் டும். ஏனெனில் மார்ட்டின் ஆர்ட்டோ இந்துஜாவோடு காலைச் சிற்றுண்டி சாப் பிட்டதாகத் தம் டைரியில் எழுதி வைத்துள்ளார்.

மதுதாண்டவதே (நிதியமைச்சர்): அந்தச் சிற்றுண்டியில் என்னென்ன பரிமா றப்பட்டன?

வைகோ: பட்டியல் எனக்குத் தெரியாது. நீங்கள்தான் விசாரிக்க வேண்டும்.
போபர்ஸ் பீரங்கி பேரத்தில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது என்பதையும்
அதனை அன்றைய இராஜீவ்காந்தி அரசு மூடி மறைத்து நாட்டை ஏமாற்றிய
குற்றத்தையும் இந்த நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வெட்ட வெளிச்சமாக்க
வேண்டும். குறிப்பாகத் தென்னகத்தின் பட்டினக் கரையெல்லாம் பட்டிதொட்டி யெல்லாம் இராஜீவ் அரசின் ஊழலை அம்பலப்படுத்த வேண்டும்.(இ.காங்கி ரஸ் உறுப்பினர்கள் கூச்சல், குறுக்கீடுகள்)

வைகோ: ‘எங்கள் உதடுகளில் வெண்ணெயை வைத்தாலும் அது உருகாது’ என்று நீங்கள் சொல்லுவதை இனியும் மக்கள் நம்ப மாட்டார்கள். 

நாடாளுமன் றத்தில் காங்கிரஸ் கட்சியின் ஊழல்களை, ஜனநாயக விரோதப் போக்குகளை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டி வாதங்களை தலைவர் வைகோ எடுத்துரைக் கும்போது, ஈழப்பிரச்சினையைப் பற்றி அப்போது குறிப்பிடுவதும், புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றி வீணாக எதையாவது இணைத்துப் பேசுவ தும் காங்கிரஸ் எம்.பி.,க்களின் வழக்கமாக இருந்தது.அதே போலவே, 1992 ஏப் ரல் 5 ஆம் நாள் போபர்ஸ் வழக்கு விசாரணை குறித்து நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ கருத்துகளைக் கூறும்போதும், காங்கிரஸ் உறுப்பினர் கள் நடந்துகொண்டனர்.

1991 இல் பி.வி.நரசிம்மராவ் பிரதமர் ஆனவுடன் அவரது அமைச்சரவையும்
போபர்ஸ் ஊழல் வழக்கை செயலிழக்கச் செய்வதில்தான் மும்முரமாக இருந் தது.அதை அம்பலப்படுத்தி தலைவர் வைகோ ஆற்றிய உரை வருமாறு:

போர்பர்ஸ் பீரங்கி வீசிய குண்டுகள் “போபர்ஸ் பீரங்கிகள் உலகின் பல இடங் களில் ஒரே நேரத்தில் வெடித்து பிரச்சினைகளை உருவாக்கி அரசியல் நெருக் கடிகளை ஏற்படுத்தி உள்ளன.சுவீடனின் தலைநகரத்திலும்,டெல்லியிலும், சுவிட்சர்லாந்திலும்,இலண்டனிலும், பனாமாவிலும் போபர்ஸ் பீரங்கிகள் அதி ரடி குண்டுகளை வீசி உள்ளன.

இந்தியாவில் போபர்ஸ் பீரங்கி பேரம் ஏற்படுத்திய அதிர்ச்சியால் ஒரு காலகட் டத்தில் வானொலியும்,தொலைக்காட்சியும் ‘போபர்ஸ்’ என்ற பெயரையே உச் சரிக்கக்கூடாது என்று டெல்லி சர்க்கார் உத்தரவிட்டது. 1/155 மி.மீ. பீரங்கிகள் என்றே வர்ணிக்கப்பட்டன. கடந்த 15 மாத காலத்தில் சில சக்திவாய்ந்த அரசி யல் வட்டாரங்கள் நல்லவேளையாக போபர்ஸ் பிரச்சினை ஓய்ந்தது என்று
நிம்மதிப் பெருமூச்சு விட்டன. ஆனால்,போபர்ஸ் பீரங்கிப் பிரச்சினை ஓயவில் லை. கிரேக்க புராணத்தில் வரும் பீனிக்ஸ் பறவையைப்போல் புதிய பலத்து டன் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து பல தலைவர்களுக்கு கிலியைத் தந்துள் ளது.”

சோலங்கி கடிதம்

சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சரிடம் இந்திய அமைச்சர் சோலங்கி ஒரு கடிதத்தைக் கொடுக்கிறார். அக்கடிதத்தில் உள்ள விஷயம், போபர்ஸ் பீரங்கிப் பிரச்சினையில் சுவீஸ் வங்கி கணக்குகளைப் பற்றி துருவி ஆராய
வேண்டியதில்லை. சுவீஸ் அரசு அக்கரை எடுக்க வேண்டியதில்லை. கிடப்பில்
போட வேண்டும் என்பதே அக்கடிதத்தின் சாராம்சம்.

டெல்லி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடப்பதால் சுவிட்சர்லாந்தில் இதனைத்
துரிதப்படுத்த வேண்டாம் என்று தெரிவிக்கும் ஒரு கடிதத்தை இந்திய வெளியு றவு அமைச்சர் தருகிறார். இது மூடுமந்திரமாக இருக்கும் என்று நினைத்திருப் பார். ஆனால், கடிதம் தரப்பட்ட விவரம் அம்பலத்துக்கு வந்தவுடன் ஒரு வழக் கறிஞர் இக்கடிதத்தைத் தன்னிடம் தந்ததாகவும், அதனை சரியாகப் படித்துப்
பார்க்கவில்லை என்றும் சோலங்கி சொன்னார். பிரச்சினை விசுவரூபம் எடுத் தவுடன் சோலங்கி இராஜினாமா செய்துவிட்டார். இராஜினாமா செய்வதால் பிரச்சினையை மூடி மறைத்துவிட முடியுமா?

மாதவசிங் சோலங்கி குஜராத் முதலமைச்சராகப் பணியாற்றியவர். தேர்ந்த அரசியல்வாதி. அவர் எப்படி இந்த போஸ்ட்மேன் வேலை பார்த்தார்?அவ்வளவு விவரம் தெரியாத பைத்தியக்காரரா சோலங்கி? இல்லை. ஏவுகணையைப் போல் சோலங்கி செயல்பட்டுள்ளாரே-ரிமோட் கண்ட்ரோல் பட்டனை இயக் கிய பெரிய மனிதன் யார்?

ஜெயந்தி நடராஜன் (இ.காங்கிரஸ்): வி.பி.சிங்

வைகோ: வி.பி.சிங் உத்தரவுப்படி சோலங்கி செயல்பட்டதாக அம்மையார்
சொல்வதை ஏற்றுக்கொள்ளலாமே -இதுதான் காங்கிரஸ் கட்சியின் கருத்து போலும்.

நஜ்மா ஹப்துல்லா (அவை துணைத்தலைவர்): பேச்சை நிறுத்தச்சொல்லும் மணியின் பொத்தானை நான் அழுத்த இருக்கிறேன்.

ஊழல் திமிங்கலம்

வைகோ: வழக்கறிஞருக்காக கடிதத்தைக் கொண்டுசென்றதாக சோலங்கி
சொல்வதை யார் ஒப்புக்கொள்வார்கள்? எந்தப் பெரிய மனிதனின் உத்தரவால்
சோலங்கி இக்கடிதத்தைக் கொடுத்தார்? யாரிடமிருந்து கடிதம் பெற்றார்?யாருக்காக? யாரைக் காப்பாற்ற இக்கடிதத்தைக் கொடுத்தார்?

மிகப்பெரிய ஊழல் பிரச்சினையைத் திரையிட்டு மறைக்க சோலங்கி முயன் றுள்ளார்.குற்றவாளிகளைப் பாதுகாக்க அவர் முயன்றதால் அவரை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.உண்மை என்ன என்பதை அவர் நாட்டுக்குத்தெரிவித்தாக வேண்டும்.இந்த ஊழலில் ஈடுபட்ட ஒரு திமிங்கலத்தை சோலங்கி சந்தித்து தான் இக்கடிதத்தை வாங்கியிருக்க வேண்டும்.யார் அந்த நபர்?

ஜெயந்தி நடராசன் (இ.காங்): பிரபாகரன்

வைகோ: இடக்கு பேச்சு வேண்டாம்;பிரபாகரனை சோலங்கி சந்தித்துக் கடிதம்
வாங்கினாரா? அப்படியானால் கடுமையாக விசாரிக்கலாமே?

ஜெயந்தி நடராசன்: நீங்கள் பிரபாகரனை சந்தித்திருக்கிறீர்கள் அல்லவா?

வைகோ: ஆமாம் சந்தித்தேன். அதற்கும் இந்தப் பிரச்சினைக்கும் என்ன சம்பந் தம்?

முரசொலி மாறன்: பிரபாகரனை இராஜீவ்காந்தியும் சந்தித்தார். விவாதம்
நடத்தினார்.

வைகோ: சோலங்கி இப்படிக் கடிதம் கொடுத்ததனால் போபர்ஸ் பிரச்சினை யைக் கிடப்பில் போட்டு முடக்கச் சொன்னதாக சுவீஸ் அரசு கூறியதாக பத் திரிகையாளர் சித்ரா சுப்பிரமணியம் சுவிட்சர்லாந்திலிருந்து தெரிவித்துள்ளார்.

சோலங்கி கடிதம் மாத்திரம் வெளியே வந்திராவிடில், போபர்ஸ் பேர உண்மை களைக் கண்டறியும் நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டு இருக்கும்.

முக்கியமான கேள்விகள்

மத்தியஅரசாங்கத்தை நோக்கி சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறேன்.

1. டெல்லி உயர்நீதிமன்றத்தில் வின்சத்தாவின் மனு மீதான விசாரணையை - அந்த மனுவை நிராகரிக்கச் செய்ய நீதிமன்றத்தில் ஏன் முறையாக நடவடிக் கைகளில் ஈடுபடவில்லை.

2. அரசியல் சட்டம் 139(9) பிரிவின்படி இவ்வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற் றுவதற்கு ஏன் முயலவில்லை.

3. சுவிட்சர்லாந்துக்கும், சுவீடனுக்கும் பிப்ரவரியில் செல்ல இருந்த சி.பி.ஐ.
விசாரணைக்குழுவின் பயணம் கடைசி நேரத்தில் ஏன் இரத்துசெய்யப்பட்டது.

காங்கிரஸ் வட்டாரத்தை கதிகலங்கச் செய்திட்ட செய்தி என்னவெனில், சுவீட னில் மிகப்பிரபலமான நாளேடான பீஜன்ஸ் நைட்டர் என்ற பத்திரிகையில்
ஆண்டர்சன் என்பவர் வெளியிட்டுள்ள திடுக்கிட வைக்கும் செய்திகள்தான்.

ஆண்டர்சன் தந்துள்ள தகவலின்படி போபர்ஸ் கம்பெனியின் தலையாய அதி காரி சொன்ன உண்மை என்னவெனில்,போபர்ஸ் பீரங்கிகள் பற்றியும் பிரெஞ்சு பீரங்கிகள் பற்றியும்,இந்திய இராணுவத்தின் ஆய்வு மதிப்பீடு குறித்தும் வின் சத்தா மூலம் போபர்ஸ் கம்பெனிக்கு தெரிந்தது.

எவ்வளவு ஆபத்தானது?

அதுமட்டுமல்ல, இப்பிரச்சினையில் இந்திய நிதி அமைச்சர் இலாகாவின் கருத் துகள் அனைத்தும் இந்துஜா மூலம் போபர்ஸ் கம்பெனிக்குத் தெரியவந்தது.
இப்பிரச்சினை வெறும் இலஞ்சம்,ஊழல்பற்றிய பிரச்சினை மட்டுமல்ல, இந்தி ய அரசின் இராணுவ இலாகா ரகசியங்கள் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டன. இது எவ்வளவு ஆபத்தானது. (ஆளும் கட்சியினரின் கூச்சல், குறுக்கீடுகள்)

வைகோ: இவையெல்லாம் உண்மை இல்லை என்றால், இச்செய்தி களை வெளி யிட்ட இந்திய பத்திரிகைகள் மீது நீங்கள் வழக்குத் தொடுக்கலாமே? ஏன்
வீணாகக் கூச்சலிடுகிறீர்கள்?

இலண்டனில் முகாமிட்டுள்ள இந்துஜாக்கள் தான் போபர்ஸ் கம்பெனியின் ஏஜெண்டுகள் ஆவர். 1985 இல் இந்தியப் பிரதமரும், சுவீடன் பிரதமரும் நியூ யார்க்கில் சந்தித்த இருபதுநாட்களுக்குள் இந்துஜாவை ஏஜெண்டாக போபர்ஸ் கம்பெனி ஏற்றுக்கொண்டது.

ரூ.200 கோடி ஊழல்

சுவீடன் பத்திரிகைகள் ஆண்டர்சன் தரும் முக்கியமான தகவல் யாதெனில் “கோடி கோடியாக இலஞ்சப் பணத்தை போபர்ஸ் கம்பெனி ஒரு நபருக்குத் தந்தது.இந்துஜா கம்பெனி மூலம் இந்தப் பெரும் இலஞ்சப் பணம் இந்தியாவில் அந்தப் பெரிய நபருக்குப் போய்ச் சேர்ந்தது.”அந்த நபரின் பெயரை ஆண்டர்சன்
சொல்லியுள்ளார். எவர் உள்ளத்தையும் நான் புண்படுத்த விரும்பாததால் அந்த
நபரின் பெயரை இப்போது இங்கே நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால், 200 கோடி ரூபாய் ஊழலில் அந்த நபர் சம்பந்தப்பட்டிருக்கிறார்.

இ.காங்கிரஸ் உறுப்பினர்கள்: இல்லை;இது உண்மை அல்ல... (கூச்சல் குறுக் கீடு கள்)

வைகோ: போபர்ஸ் கம்பெனியின் அன்றைய நிர்வாக இயக்குநர் மார்டின்
ஆர்ட்போ தனது டைரியில், ‘ஜி’ என்ற எழுத்துக்குரிய நபரை எவ்விதத்திலும்
பாதுகாத்தாக வேண்டும் என்று தனக்குச் சொல்லப்பட்டதாக எழுதியிருந்தார்.
அதுபற்றி குறிப்பிட்டு யார் அந்த ஜி என்று நான் கேட்டபோது ‘ஜி’ என்றால்
கோபால்சாமி என்று சிதம்பரம் கேலி பேசினாரே! இப்பொழுது கேட்கிறேன்,
போபர்ஸ் பேரத்தில் இலஞ்சம் வாங்கிய உண்மைக் குற்றவாளி யார்? குற்றச் சாட்டு எனும் புகை மண்டலத்திற்குக்கீழே இயங்க தனது அரசு விரும்பும்போது உண்மையைக் கண்டறியும் என்று பிரதமர் நரசிம்மராவ் சொன்னதை நான் வரவேற்கிறேன்.

ஆனால், இதுவரையில் இந்த ஊழல் குற்றச்சாட்டு எனும் மேகத் திரையிலி ருந்து காங்கிரஸ் வெளியேற முடியவில்லை. காங்கிரஸ்தான் குற்றவாளி என்ற சந்தேகத்திலிருந்தும் புகாரிலிருந்தும் காங்கிரஸ் விடுபட முடியவில் லை.

இந்துஜாக்களும் வின்சத்தாக்களும் வெறும் புரோக்கர்கள்தான்.இந்திய  அரசை அவர்களா நிர்வகித்தார்கள்? அவர்களுக்கு கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்க போபர்ஸ் கம்பெனி ஒற்றும் முட்டாள் அல்ல. இந்திய அரசை இயக் கிக்கொண்டிருக்கிற பெரும் புள்ளிகளுக்குத்தான் இந்த இலஞ்சம் கொடுக்கப் பட்டது என்பதுதானே உண்மை. உண்மையை நிரந்தரமாக புதைத்து மறைத்து விட முடியாது. உண்மை வெடித்துக்கொண்டு வெளியே வந்துதான் தீரும்...

- தொடரும்...

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன் ,மதிமுக அரசியல் ஆய்வு மையச் செய லாளர்

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 34

No comments:

Post a Comment