Tuesday, December 3, 2013

வழக்கறிஞர்கள் மாநாட்டில் வைகோ உரை -பாகம் 2

இரண்டு கட்சிகளும், இந்த மாநிலத்தை பாழ்படுத்திவிட்டன, வழக்கறிஞர்களே,
உங்களுக்கு நிறையக் கடமை இருக்கின்றது!என்று சென்னையில் நடந்த வழக் கறிஞர்கள் மாநாட்டில் #வைகோ உரை ஆற்றினார்.சென்ற பாகத்தின் உரை யின் தொடர்ச்சி வருமாறு:

கடந்த கால நிகழ்வுகளை எல்லாம் நினைவூட்டிப் பேசினார்கள்.நீண்ட நெடுங் காலத்திற்குப் பிறகு, நீண்ட நாள்களுக்குப் பிறகு, ஸ்டெர்லைட் வழக்குக்காக,
நான் கருப்பு அங்கியை அணிந்து கொண்டு நீதிமன்றத்திற்கு வந்ததாக நன் மாறன் சொன்னார்.அந்த ஆலையில் இருந்து நச்சுப் புகை வெளியேறும்போது, அதைச் சுவாசிக்கின்ற மக்கள் புற்று நோயால் மடிவார்கள்; 40 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள நிலங்கள் பாழாகிப் போய்விடும்;கடல் வாழ் உயிரினங்கள் அழியும் என்பதற்காக, அந்த ஆலையை எதிர்த்து 17 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டு இருக்கின்றோம்.

அந்த ஆலையின் உரிமையாளர்,வேதாந்தா குழுமம்; அனில் அகர்வால்.மூன்று மாநிலங்களில் பழங்குடி இன மக்களின் வாழ்வு ஆதாரங்களை அழித்தவன்.
அவன் சில ஆண்டுகளுக்கு முன்பு, ஈயம், பித்தளை, பழைய இரும்பு விற்றுக் கொண்டு இருந்த ஒரு காயலான் கடை வணிகன்.இன்றைக்கு, உலகக் கோடீசு
வரர்களுள் ஒருவன். ஆனால்,அவன் யாருக்கு பினாமி என்பதை, அண்மை யில் தான் நான் கேள்விப் பட்டேன்; அதிர்ச்சி அடைந்தேன்.அவரது பெயரை இங்கே சொல்ல விரும்பவில்லை. அவர்களுடைய கருப்புப் பணம்தான் அவ னிடம் விளையாடுகிறது. அதனால்தான்,அந்த நிறுவனத்தின் ஆலோ சனைக் குழுவில் இயக்குநர்களாக அவர்கள் இடம் பெற்று இருந்தார்கள். இன்றைக்குப் பெரிய பதவியில் இருக்கிறார்கள். ஒரு நாள் வரும். அவர்களை நான் அம்ப லப்படுத்துவேன். அந்த உலகக் கோடீசுவரன் சார்பில் என்னைச் சந்திப்பதற்கு,
இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் ஜி.ஆர். எங்கள் தாயகத்துக்கேவந்தார். எனக் குத் திகைப்பாக இருந்தது. ‘வந்தவகையில் மகிழ்ச்சி; வாருங்கள், வரவேற்
கிறேன்’ என்றேன். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேராக இங்கே வருகிறேன்.உங்களைச் சந்திப்பதற்காகவே வந்தேன். இப்படியே மீண்டும்
அடுத்த விமானத்தில் தில்லிக்குத் திரும்புகிறேன் என்றார்.

நான் தில்லிக்கு வரும்போது சந்தித்து இருக்கலாமே? என்றேன்.இல்லை. ‘இங் கே வந்து உங்களைச் சந்திக்க விரும்பித் தான் வந்தேன்’ என்றார்.


என்ன விஷ யம்? என்று கேட்டேன். ஸ்டெர்லைட் நிறுவனம் குறித்து நீங்கள் ஒரு தவறான கருத்தைக் கொண்டு இருக்கின்றீர்கள். அதனால்தான் அதை எதிர்க்கின்றீர்கள். அது குறித்து உங்களிடம் விளக்கம் கொடுப்பதற்கு, ஸ்டெர் லைட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனில் அகர்வால் உங்களைச்சந்திக்க விரும்புகிறார். நீங்கள் எங்கே சந்திக்க வேண்டுமானாலும் அவர் வருவார்’ என்றார்.

‘சொல்லுவதற்காக வருந்து கிறேன். ஒருபோதும் அவரை நான் சந்திக்க மாட் டேன்’ என்றேன்.

ஏன்? என்று கேட்டார். நான் கிராமத்துக்காரன். ஒரு பழமொழி உண்டு. பனை மரத்துக்கு அடியில் நின்றுகொண்டு பாலைக் குடித்தாலும், அது தவறாகக்
கருதப்படும். நான் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவனாகஇருக்க விரும்பு கிறேன் என்றேன். (கைதட்டல்). இன்று வரை போராடிக்கொண்டு இருக்கின்
றோம். 20,000 பேர் திரண்டு மறியல் நடதினோம். கைதாகி அன்று மாலையில் விடுவிக்கப்பட்டோம். அந்த இரவில் ஒரு தகவல் வருகிறது. ஸ்டெர்லைட்
ஆலையில் நடந்த ஒரு விபத்தில், இரண்டு தொழிலாளர்கள் இறந்து போனார் கள். இரவு 11 மணிக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் சொல்லுகிறது; இது விடுத லைப் புலிகளின் சதி என்று.

மறுநாள் தஞ்சை பொதுக்கூட்டத்திற்காகச் சென்று கொண்டு இருந்தவன், தஞ் சையில் காலை ஏடுகளை வாங்கிப் பார்க்கிறேன்.அப்பொழுது மாவட்டக் கண்
காணிப்பாளராக இருந்த ஜாங்கிட்,அதை மறுத்து இருந்தார். ‘இது அப்பட்டமான பொய். எந்தச்சதியும் நடக்கவில்லை; இது விபத்துதான்’ என்று சொல்லி இருந் தார். அப்போது நான் ஒரு முடிவு எடுத்தேன். இனி போராட்டங்களை நடத்தி னால்,நம்மையும் சதி வலையில் மாட்டப் பார்ப்பார்கள். ஆகவே, இனி நீதிமன் றத்தில் போராட்டத்தைத் தொடர்வோம் என்று தீர்மானித்தேன். நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு ரிட் மனு இருந்தது. நான் ஒரு ரிட் தாக்கல் செய்தேன். வழக்க
றிஞர்கள், தேவதாஸ், கிருஷ்ணசாமி உதவி செய்தனர்.விசாரணைக்கு வந்தது. நான் தேர்வு எழுதுவதற்குக் கூட அப்படிப் படித்தது இல்லை.பயந்துகொண்டே படித்தேன்.காரணம் நீண்ட இடைவெளி ஆகிவிட்டது. இப்போது நீதிமன்ற விசாரணைகளில் நீதிபதியை எப்படி அழைக்க வேண்டும்;என்னென்ன புதிய நடைமுறைகள் உள்ளன என்று எனக்கு எதுவும் தெரியாதே? ஏதேனும் தவ றான வாதங்களை முன்வைத்து விடக் கூடாதே? தூத்துக்குடி வழக் கறிஞர் கிருஷ்ணனும் உதவினார்.வழக்கை ஒரு வாரம் உட்கார்ந்து படித்தேன். அப் பொழுது இணையம் இவ்வளவு வசதியாக இல்லை. உலகம் முழுவதும் உள்ள தாமிர ஆலைகள் குறித்த விவரங்களை அதில் தேடித்தேடிச் சேகரித்தேன்.

எதிர்த்தரப்பில் வாதாட கே.கே.வேணுகோபால் வந்தார். இந்தியா வின் புகழ் பெற்ற வழக்குரைஞர்களுள் ஒருவர், கே.கே.நம்பியாரின் மகன். உயர்நீதி மன் றத்தில் நான் வாதாடியதே இல்லை. அதுவும் தலைமை நீதிபதியின் அமர்வு.

ஜஸ்டிஸ் லிபரான், ஜஸ்டிஸ் பத்மநாபன் இருக்கை அது.எனவே, பதற்றத் தோடும், தயக்கத்தோடும் சென்றேன். என் வாதத்தைப் பற்றி ஏடுகளில் கேலி யாக எதுவும் எழுதிவிட்டால்,தொண்டர்கள் வேதனைப்படுவார் களே என்ற கவலை. வேணுகோபால் மூன்றரை மணி நேரம் வாதாடினார்; நான் ஏழு மணி
நேரம் வாதங்களை எடுத்து வைத்தேன். மூன்று நாள்கள் விசாரணை நடை பெற்றது.

அப்போது நீதிபதி கேட்டார்,மூன்று இலட்சம் மக்கள் பாதிக்கப் படுவார்கள் என்று சொல்கிறீர்கள்;போரட்டத்துக்கு 20,000 பேர் தானே வந்தார்கள்? என்று.

உடனே சொன்னேன்: இந்திய விடுதலைப் போராட்டத்தில் 30 கோடி மக்களை விடுவிப்பதற்கு,மகாத்மா காந்தி தலைமையில் சில ஆயிரம் பேர்கள் தானே களத்துக்கு வந்தார்கள்? என்றேன். நீதிபதி சிரித்து விட்டார். ‘இந்தப் பிரச்சினை யில் எனது தன்னலம் எதுவும் இல்லை. பொதுமக்கள் நலன் கருதியே நான் இந்த வழக்கைத் தொடுத்து உள்ளேன்’என்றேன்.

அப்போது, ஜஸ்டிஸ் லிபரான் இடைமறித்துச் சொன்னார்: There is no need for any body to vouch for your integrity and honesty; eveybody knows’’ என்றார். எந்த ஏட்டிலும் இது பற்றி ஒரு வரி வந்தது கிடையாது. ஒருவேளை அவர், நீங்கள் ஏதோ சுயநலத் துக்காக இந்த வழக்கில் வாதாடுகிறீர்கள் என்று அவர் சொல்லி இருந்தால்,அது எட்டுக்காலச் செய்தி ஆகி இருக்கும். நான் மகிழ்ச்சி அடைந்தேன். அதன் பிறகு, ஸ்டெர்லைட் நிர்வாகம்,நீதிபதி பத்மநாபன் வைகோவுக்குவேண்டியவர் என்று சொல்லி ஒரு பொய்யைத் தந்தியாக உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பியது. என வே நீதிபதி பத்மநாபன், இனி நான் இந்த வழக்கை விசாரிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார். அது வேறு அமர்வுக்குப் போனது.வழக்கு விசாரணை தொடர் ந் து நடைபெற்றது. 2010 செப்டெம்பர் 28 ஆம் நாள்,ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தர மாக மூட வேண்டும் என்று,சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி எலிபி தர்மாராவ் அமர்வில் தீர்ப்பு வந்தது. அன்றைக்கு திருவை குண்டம் டீக்கடை யில் இருந்து,செய்தி ஏடுகளைப் படித்துக் கொண்டு இருந்தவர்கள் சொன்னார் கள்: எல்லோரும் பணம் வாங்கிக்கொண்டு ஓடிப்போய் விட்டார்கள்; பல கட்சி கள் ஓடிப்போய் விட்டன; உறுதியாகப் போராடியவன் இந்த வைகோ ஒருவன் தான் என்று சொன்னார்கள். (கைதட்டல்).

அடுத்த மூன்றாவது நாளே, உச்சநீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய் தார்கள். நாங்கள்......(Caveat)கேவியட் தாக்கல் செய்தோம். நீதிபதி ரவீந்திரன், நீதி பதி கோகலே அமர்வில், தடை ஆணை கொடுத்து விட்டார்கள்.நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றோம். அதன்பிறகு, இந்த வழக்குக்காக, நானும் தேவ தாசும், 33 முறை டெல்லிக்குச் சென்று வந்து இருக்கின்றோம். பயணச்செல வைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அந்த நாள்களில் அவரும் உயர்நீதிமன்றத் திற்குப் போகவில்லை. பொதுநன்மைக் காக எவ்வளவோ போராடி இருக் கின் றோம்.

உச்சநீதிமன்றத்தில் எனக்கு அடையாள அட்டை கிடையாது.மதிய உணவுக் காகப் போகும் போது, வழக்கறிஞர் உடையைக்கழற்றி விட்டேன். திரும்ப நீதி
மன்றத்துக்கு உள்ளே நுழைகையில், நேராக எனது இருக்கையில் போய் அமர்ந்து விட்டேன். இரண்டு காவலர்கள் வந்து,இங்கிருந்து வெளியே செல்லு
ங்கள் என்றார்கள். நான்தான் வழக்கைத் தாக்கல் செய்து இருக்கின்றேன்; நானே வாதாடுகிறேன் என்றேன்.

இந்த இடத்தில் அமர்வதற்கான அடையாள அட்டை உங்களிடம் இல்லை என் றார்கள். நான் அங்கே அவர்களோடு வாதிட விரும்பவில்லை. அதுவே,முள்ளி
வாய்க்கால் முற்றமாக இருந்தால் என்னுடைய எதிர்ப்பைக் காட்டி இருப்பேன். அந்தக் காவலர்களிடம் பல வழக்கறிஞர்கள், அவர் வாதாட வந்து இருக்கின் றார் என்று சொன்னார்கள். இதனால்,வேதனையோடு அமர்ந்து இருந்தேன். நீதிபதி ரவீந்திரன்,கோகலே வந்து அமர்ந்தனர்.சினிமாக் கொட்டகையில் இடம்
பிடித்து வைப்பது போல, அங்கே எனக்கு இடம் பிடித்து வைக்கின்ற ஆசைத் தம்பி அன்றைக்கு வர வில்லை. எனவே, நான் மூன்றாவது வரிசையில் அமர்ந் து இருந்தேன். என்னுடைய வாதங் களை எல்லாம் எடுத்து வைத்தேன்.

இந்த ஆலை முதலில் மராட்டிய மாநிலத்தில் ரத்தினகிரி மாவட்டத்தில் அமை க்கப்பட்டது.அங்கே அல்போன்சா மாம்பழங்களை விளைவிக்கின்ற வர்கள் எதிர்த்தனர். 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஆலையை உடைத்து
நொறுக்கினர். அப்போதைய முதல்வர் சரத் பவார் அடுத்த நாளே அனுமதியை ரத்து செய்தார். அதை எதிர்த்து அவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல வில்லை. கோவாவுக்குப் போனார் கள்; நுழைய விடவில்லை; குஜராத்துக்குப் போனார் கள்; அங்கேயும் விரட்டி அடித்தார்கள்.கடைசியில் எங்கள் தெற்குச் சீமைக்கு வந்து விட்டார்கள்.விண்ணப்பித்த 15 நாள் களிலேயே அனுமதி பெற்றார்கள்.
இன்றைக்கு இருக்கின்ற அரசு தான் அன்றைக்கும் இருந்தது.சுற்றுச் சூழல் விதி களை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள்.ஆலையை எதிர்த்துப் பல் வேறு அறப்போராட்டங்களை நடத்தினோம்.

உச்சநீதிமன்றத்தில் ஒருமுறை நீதி அரசர் பட்நாயக் சிரித்துக் கொண்டே, Mr. Vaiko what happened to your agitation in Sanchi? ‘உங்களுடைய சாஞ்சிப் போராட்டம் என்ன ஆயிற்று? என்று கேட்டார்.

That crusade is continuing என்றேன். ‘அந்தச் சிலுவைப் போர் தொடர்ந்து கொண்டே
இருக்கிறது’ என்று சொன்னேன்.

அதே நீதி அரசர், ஸ்டெர்லைட்டைத் தொடர்ந்து இயக்கலாம் என்று தீர்ப்பு வழங்கலாம் என்றார்.அதிர்ச்சி அடைந்தேன்.

My lord. I craved for justice. I knocked the doors of justice. we did not indulge in any violence. for the welfare of the people of Tuticorin we came here என்று சொன்னேன்.

உடனே நீதிபதி,Yes mr Vaiko. you are fighting for the people,I have appreciated in my judgment; you keep it up  அதை நான் என்னுடைய தீர்ப்பிலேயே பாராட்டி இருக்கிறேன்; நீங்கள்
மக்களுக்காகப் போராடுகின்றீர்கள். தொடர்ந்து செல்லுங்கள் என்றார்.

ஆலையை மூடியது தமிழ்நாடு அரசு. அதற்கு உள்ளே நான் நுழைய விரும்ப வில்லை.ஏனென்றால், இந்த அரசும் சரி, இதற்கு முந்தைய தி.மு.க. அரசும் சரி, உச்சநீதிமன்றத்தில் ஆலைக்கு ஆதரவாக நடந்து கொண்டன. தமிழ்நாடு மாசு
கட்டுப்பாட்டு வாரியம் வெளிப்படையாகவே ஸ்டெர்லைட்டை ஆதரித்தது. அப்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி, நீங்கள் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக
நடந்து கொள்கின்றீர்களா? என்று கன்னத்தில் அடித்தாற்போலக் கேட்டார்.

இந்த ஆண்டு மார்ச் 23 ஆம் நாள் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சுப்புகை வந்தது. தூத்துக்குடி கொந்தளித்தது. உடனே,மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூடச்
சொல்லி விட்டது.தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் சென்னை கிளையில் விசா ரணை.அங்கேயும் சென்று ஒன்றரை மணி நேரம் வாதாடினேன். திடீரென
தில்லியில் இருந்து ஒரு உத்தரவு வந்தது. இந்த வழக்கை தில்லியில் உள்ள முதன்மை அமர்வுக்கு மாற்றி இருக்கிறோம் என்று.இன்றைக்குக் கேட்கிறேன்.
எதற்காக தில்லிக்கு மாற்றினார்கள்? என்ன காரணம்? சென்னையில் வாதங் கள் முடிவுற்ற நிலையில், ஏன் தில்லிக்கு மாற்றினார்கள்? அங்கேயும் சென் றேன். உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி சுதந்திர குமார் தலைமை. ஐந்து வல் லுநர்களும் இருக்கின்றார்கள். நான் நீதிபதிகளை விமர்சனம் செய்வது இல் லை. ஆனால், அங்கே எனக்கு மிகக் கசப்பான அனுபவங்கள்தான் கிடைத்தன.

ஒருகட்டத்தில், ஸ்டெர்லைட் வழக்குரைஞர், மின்சாரம் தர வில்லை; ஆலை யை இயக்க முடியவில்லை என்றார். அப்போது நீதிபதி வெளிப்படையாகவே,
Why do you bother? I will give an order in the next hearing. you could run the factory; அடுத்த வாய் தாவில் நான் ஆணை பிறப்பிக்கிறேன்; நீங்கள் தொடர்ந்து நடத்தலாம் என்றார்.

நான் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்துச் சொன்னேன். நீதிபதியின் எண்ணம் என்ன என்பது தெரிந்து விட்டது.என் நேரத்தை நான் ஏன் விரயம்
செய்ய வேண்டும்? இனி இங்கே வர மாட்டேன் என்றேன்.ஆலையை இயக்க லாம் என்று ஆணை பிறப்பித்து விட்டார்.இப்போது, உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை கோரி மனு கொடுத்து உள்ளேன். அது பதிவு ஆகி விட்டது. தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தீர்ப்பையும் எதிர்த்து வழக்குத் தொடுத்து உள் ளேன். அது,இம்மாதம் 11 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. எங்கள் வழக்கு எண் 319. இரண்டு மணிக்கு விசாரணை தொடங்கு கிறது. ஜஸ்டிஸ் பட்நாயக்,
ஜஸ்டிஸ் நிஜார், ஜஸ்டிஸ் இப்ராஹிம் கலிபுல்லா. மாலை நான்கு மணி வரை தான் விசாரணை. மத்திய சுற்றுச் சூழல் வாரிய வழக்குரைஞர், இன்றைக்கு
வழக்கு விசாரணைக்கு வராது என்று கூறிவிட்டுப் போய் விட்டார். ஸ்டெர் லைட் வழக்குரைஞரும் இன்றைக்கு நடக்காது என்று சொல்லி விட்டார். எனக் கு 5.40 க்கு விமானம். சென்னை வந்து, இரவோடிரவாக மதுரை க்குப் போய், இந்திய இலங்கை அரசுகளின் துரோகத்தைக் கண்டித்து, காலையில் தொடர் வண்டி மறியலில் பங்கு ஏற்க வேண்டும்.5.15 மணிக்குள் விமான நிலையத்தில் இருக்க வேண்டும். ஒவ்வொரு வழக்காக எடுக்கின்றார் கள். 319 ஐ எடுக்கும் போது மணி 4.25. நாங்கள் எழுந்து நிற்கிறோம்.இந்த வழக்கை விசாரணைக்கு
ஏற்றுக் கொள்கிறோம் என்று அறிவித்து விட்டார்கள். எனக்கு மகிழ்ச்சி. அங்கி ருந்து வேகம் வேகமாக வந்து, விமானத்தைப் பிடித்து, சென்னையில் இறங்கி
உடைமாற்றிக் கொண்டு, உணவு அருந்தி இரவோடு இரவாகப் புறப்பட்டு மது ரைக்குப் போய்ச் சேர்ந்து விட்டேன். முதல் நாள் மாலையில் மதுரை ஐ.ஜி., வைகோ தில்லியில் இருக்கின்றாரே? எப்படி காலையில் போராட்டத்துக்கு வருவார்? என்று கேட்டு இருக்கின்றார்.

நான் அதிகாலை 5.30 க்குக் குளித்து, 6.05 க்கு மதுரை தொடர் வண்டி நிலையத் துக்கு அருகில் போய்விட்டேன். கட்டபொம்மன் சிலைக்கு அருகில் ஏகப்பட்ட
காவலர்களைக் குவித்து வைத்து இருந்தார்கள். என்னை எதிர் பார்த்துக்கொண் டு இருக்கின்றார்கள். அவர்கள் பாய்க்குள் நுழைந்தால், நான் கோலத்துக்குள்
நுழைவேன். நான் வேறு ஒரு வழியைத்தேர்ந்து எடுத்து,அந்த வழியாக, தொடர் வண்டி நிலையத்துக்கு உள்ளே புகுந்து விட்டேன். அங்கே நின்று இருந்த காவ லர்களால் எங்களைத் தடுக்க முடியவில்லை. வேகம் வேகமாகப் போய்விட் டோம்.

மறுமலர்ச்சி நடைபயணத்தின் போது, நள்ளிரவில் சென்னைக்குள் நுழைந்த போது நடந்த வேகத்தில் போய், நடை மேடையில் ஏறி, வைகை எக்ஸ் பிரஸ் ரயிலை மறித்து விட்டோம்.போராட்டத்தை நடத்தி விட்டோம். (கைதட்டல்).

இந்த நாட்டில் நீதி எளிதாகக் கிடைக்காது. அதற்கு, போபால் விஷவாயு விபத் து ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அர்ஜெண்னா நாட்டுப் பொறியாளர்,போபாலில் மக்கள் வசிக்கின்ற பகுதிக்கு அருகில் அந்தஆலையை வைக்கக்கூடாது என்று
கூறி இருந்தார். ஆனால், இவர்கள்,இது ஒரு சாக்லேட் கம்பெனியைப்போலத் தான் என்று சொன்னார் கள். ஆனால், 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவில்,கொதிகலன் வெடித்தது,விஷவாயு ஊருக்கு உள்ளே பரவியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தார்கள்.இப்போது சொல்லுகிறார் கள், 20,000 பேர் இறந்தார்கள்;லட்சத்துக்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகள் செயல் இழந்து போயின என்று. அவர்களுக்கு என்ன நீதி கிடைத்தது?

அப்போது ராஜீவ் காந்தி பிரதமர்.வாரன் ஆண்டர்சன் என்ற அமெரிக்கர்தான் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர்.இந்தியாவில்தான் இருந்தார்.அவ ருக்கு அந்நிறுவனத்தில் 51 விழுக்காடு பங்கு. எல்.ஐ.சி.க்கும்,யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியாவுக்கும் 23 விழுக்காடு; பொதுப் பங்குகள் 27 விழுக்காடு. பாதிக்கப்
பட்டவர்கள் அனைவரும் இந்திய மக்கள்.ஆனால் இந்திய அரசு என்ன செய்தது தெரியுமா?

நியூ யார்க் நகரில் போய் வழக்குத் தொடுத்தார்கள்.அப்போது என்ன சொன்னார் கள் தெரியுமா? கேவலம். இந்தியாவில் இருக்கின்ற வழக்கறிஞர் களுக்கு, இப் படிப்பட்ட வழக்கை நடத்து வதற்குத் திறமை கிடையாது என்று சொன்னார் கள்.இந்தியாவில் ஏற்கனவே நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆக வே, அமெரிக்காவிலேயே வழக்கு நடக்கட்டும் என்று சொன்னார்கள். ஜான் கீனன் என்ற நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா? இந்தியாவில்தான் சம்பவம் நடந்தது; அங்குதான் மக்கள் இறந்தார்கள்; இந்த வழக்கை நடத்துவதற்கான
திறமை, இந்திய வழக்குரைஞர் களுக்கு இருக்கிறது அங்கேதான் சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டும்; எனவே, இந்தியா விலேயே வழக்கு நடக்கட்டும்
என்று சொல்லி விட்டார்.

மூக்கறுபட்ட இந்திய அரசு என்ன செய்தது தெரியுமா? மத்தியப் பிரதேச மாவட் ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். 350 கோடி ரூபாயை, முதலில்
பிணைத்தொகையாகக் கட்டுங்கள் என்று உத்தரவு இட்டது. எத்தனை கோடி
கொள்ளை அடித்து இருப்பான் யூனியன் கார்பைடு? இந்தத் தொகை அதிகம்; கட்ட முடியாது என்று சொன்னான். 250 கோடியாகக் குறைக்கும்படிக் கேட் டான். அந்தத் தொகையையும் கொண்டு வந்து கட்டாமலேயே, மேல் முறை யீடு செய்தான். மேல்கோர்ட் விசாரணை செய்து,கடைசியாக 750 கோடி ரூபாய் நட்ட ஈடு என்று தீர்ப்பு அளித்தது.எப்போது?2010 ஜூன்7ஆம் நாள் தீர்ப்பு. விபத்து நடந்தது எப்போது? 1984 டிசம்பர் 2. பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு இப்போது 50,000 ரூபாய் கூடக் கிடைக்காது.ஒரு விபத்தில்சிக்கி இறந்தாலும், ஐந்து இலட் சம், எட்டு இலட்சம் கொடுக்கின்றார்கள். இதுதான் நீதியா? இப்படித்தானே நாளை ஸ்டெர்லைட்டிலும் நடக்கும்?

கேசவானந்த பாரதி வழக்கு

எனவே, வழக்கறிஞர்கள் நீதிக்காகப் போராட வேண்டும். அந்த உணர்வோடு தான் நாம் பாடு பட்டுக் கொண்டு இருக்கின்றோம். எத்தனையோ தீர்ப்புகள் வரலாற்றின் போக்கை மாற்றி இருக்கின்றன. 1973 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் நாள் அப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு வெளியானது.கேசவானந்த பாரதி வழக் கில், 13 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதி மன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பு. 800
பக்கங்கள்; 4,20,000 சொற்கள்.இதுதான், இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே மிக நீண்ட தீர்ப்பு. அரசியல் சட்டத்தின் அடிப்படைத் தன்மை; அரசியல் சட்டத்தின் மேன்மை ; மதச்சார்பு அற்ற தன்மை; சட்டம் இயற்றுபவர்கள், அதை நிறை வேற்றுபவர்களின் கடமைகளை வரையறுத்த தீர்ப்பு அது. தலைமை நீதிபதி சிக்ரி தலைமையில் தீர்ப்பு.

ஏன் இந்தத் தீர்ப்பு வழங்கப் பட்டது?அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

1950 ஆம் ஆண்டு, பீகாரில் நிலச்சீர்த்திருத்தம் கொண்டு வந்தார்கள். அதனால், நிலங்களை இழந்தவர்கள் அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார்கள்.
அந்தச் சட்டம் செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது. உடனே, 1951 இல் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தார்கள். அரசாங்கம் கொண்டு வருகின்ற சீர்திருத்தச் சட்டங்கள், நீதிமன்ற ஆய்வுக்கு உள்ளே வராது என்று
திருத்தம். புதிதாக, ஒன்பதாவது பட்டியல் ஒன்றை உருவாக்கினார்கள். அதை எதிர்த்தவர்கள் நீதிமன்றத்துக்குப் போனார்கள்.அங்கும் தோற்றார்கள்.

அதன்பிறகு, பஞ்சாப் அரசை எதிர்த்து கோலக்நாத் வழக்கு வருகின்றது. ‘அரசு கொண்டு வருகின்ற திருத்தங்களும், நீதி மன்ற ஆய்வுக்கு உட்பட்டவை தான். அடிப்படை உரிமைகளை மீறுமானால், அது எந்தச் சட்டமாக இருந்தாலும், நீதி மன்றம் அதை ஆய்வு செய்யலாம்’ என்று தீர்ப்பு.

உடனே அதற்கு எதிராக இந்திய அரசு, 24 ஆவது சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தது.அதன்படி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே தூக்கி எறிந்து விட்டு,நாடா ளுமன்றம் கொண்டு வருகின்ற அரசியல் சட்டத்திருத்தத்தை, நீதிமன்றங்கள்
விசாரிக்க முடியாது என்று சொன்னார்கள்.

இதை எதிர்த்துத்தான்,கேசவானந்த பாரதி என்பவர், கேரளத்தில் ஒரு மடத்தின்
தலைவராக இருந்தவர் ஒரு வழக்கைத் தொடுத்தார்.13 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை.

9 நீதிபதிகள் இணைந்து ஒரு தீர்ப்பு கொடுத்தார்கள்; நான்கு நீதிபதிகள் அதில் கையெழுத்துப் போடவில்லை. 7 க்கு 6 என்று ஒரு தீர்ப்பு வந்தது. 7 பேர் சிக்ரிக்கு ஆதரவாகத் தீர்ப்பு. ஆறு பேர் எதிர்ப்பு. என்ன தீர்ப்பு?

ஒரு சட்டத்தைக் கொண்டு வர அரசாங்கத்துக்கு அதிகாரம் இருக்கின்றது; ஆனால், அது,அரசியல் சட்டத்தின் அடிப்படைத் தன்மைகளை மீறக் கூடாது என்று தீர்ப்பு.

மறுநாள், தலைமை நீதிபதி சிங்கி ஓய்வு பெறுகிறார். 1973 ஏப்ரல் 25. இந்திரா காந்திக்குப் பொறுக்க வில்லை இந்தத் தீர்ப்பு. சிக்ரிக்கு அடுத்து யார் வர வேண் டும்? கெலாட் வர வேண்டும். அடுத்து குரோவர், அடுத்து ஹெக்டே.ஆனால், இந்த மூன்றுபேரையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, நான்காவ தாக இருந்த ஏ.என். ரேயை தலைமை நீதிபதி ஆக்கினார்.அந்த மூன்று நீதிபதிகளும்,அன்றைக்கே பதவியை ராஜினாமா செய்துவிட்டார்கள்.ரேபரேலி தொகுதியில் இந்திரா காந் தியை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ்நாராயண்,இந்திரா காந்தி வெற்றி பெற்றது
செல்லாது என்று வழக்குத் தொடுத்து இருந்தார். அந்த வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம், இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று தீர்ப்பு அளித்து விட்டது. உடனே,உச்சநீதிமன்றத்துக்குப் போய் தடை ஆணை வாங்கினார்
இந்திரா காந்தி. ஜூன் 25 ஆம் தேதி, இந்தியா முழுவதும் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தி விட்டார். அதே நாளில்,இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நம் முடைய வீரபாண்டியன் அவர்களுடைய தலைமையில், திருச்சியில் நமது வழக்கறிஞர்கள் மாநாட்டை நாம் நடத்தினோம்.

இந்த நாட்டில், நீதித்துறை ஜனநாயகத்தைக் காக்கப் போராடிக் கொண்டு இருக் கின்றது. ஊழல் வழக்குகள் நடக்கின்றன. ஊழல் செய்கின்ற அயிரை மீன்கள் பிடிபடுகின்றன.திமிங்கலங்கள், முதலைகள் தப்பி விடுகின்றன. நாம் விழிப்பு
உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

என்னுடைய அன்புக்கு உரியவர்களே,

ஒரு துயரமான சூழலில் நாம் இங்கே இருக்கின்றோம். இருள் விலகாதா? ஒளி மலராதா? என்ற கவலையோடு இருக்கின்றோம்.ஏன் முடியாது? நான் தேர் த லைப் பற்றிப் பேச வரவில்லை. வீர பாண்டியன் அழகாகப் பேசினார்.அருமை யான கருத்துகளைச் சொன்னார். அவர் பேசியதை,நான் நூற்றுக்கு நூறு வழி
மொழிகிறேன். ஆனால் தோழர்களே, நம்மால் முடியுமா?என்று மட்டும் திகைக் காதீர்கள்.மற்றவர்கள் சாதிக்க முடியாததைச்சாதிப்பவன்தான் சாதனையா ளன்.நாம் பெரியாரின் சுயமரியாதையோடு, அறிஞர் அண்ணா இந்தத்தாயகத் தை எப்படி வார்ப்பிக்க நினைத்தாரோ, அந்த எண்ணங்களோடு இந்த இயக்கத் தை நடத்திக்கொண்டு இருக்கின்றோம். இருபது ஆண்டு களாக இரத்தம் சிந்திப் போராடி இருக்கின்றோம். கண்ணீர் பொங்கிய இருபது ஆண்டுகள்;வியர்வை கொட்டிய இருபது ஆண்டுகள்.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இன் றைக்குத்தலைநிமிர்ந்து, செம்மாந்து நடைபோடுகிறது. மக்கள் கவனம் நம்பக் கம் திரும்பி இருக்கிறது.முடியாது என்று கருதாதீர்கள்.

வாக்கு வங்கிகள் உள்ள கட்சிகள் ஆயிற்றே, கோடிகோடியாகப் பணம் வைத்து இருக்கின்றார்களே, ஊடக பலம் இருக்கின்றதே, தொலைக்காட்சிகள்,ஏடுகள் இருக்கின்றனவே? ஆயினும் நெஞ்சில் உரமும்,கொள்கைத் திறமும் நம்மைப்
போல இல்லையே? பிறகு ஏன் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?

எனக்கு பைபிளில் ஒரு அருமையான வாசகம் நினைவுக்கு வருகின்றது. எரே மியா தீர்க்கதரிசி சொல்லுகிறார்: 12 ஆம் அதிகாரம், 5 ஆம் வசனம். “நீ காலாட்
களோடு ஓடும்போதே உன்னைக் களைக்கச் செய்வார்களானால், குதிரைக ளோடு நீ எப்படிஓடுவாய்?” தோழர்களே, நாம் குதிரைகளோடு ஓடுபவர்கள்.

அமைதியான தேசத்தில் நீ அடைக்கலம் தேடுவாயானால்,யோர்தான் பிரளய மாகப் பிரவகித்து வருகின்றபோது, நீஎன்ன செய்யப் போகிறாய்?

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், அப்படிப் பொங்கி வருகின்ற பிரள யத்தையும் எதிர்த்து நீச்சல் அடிக்கக் கூடிய ஆற்றலைக்கொண்டது.நமக்குஒரு விடியல் இருக்கின்றது. சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கும் ஒரு விடியல் இருக்கின் றது. 1995 ஆம் ஆண்டு, நாம் திருச்சியில் நடத்திய மாநில மாநாட்டில்,தமிழ் ஈழத் தீர்மானத்தை நானே முன்மொழிந்தேன். அது ஒன்றே தீர்வு என்று சொன் னோம்.அன்று முதல் இன்று வரை உறுதியாக இருக்கிறோம். முரண்பட்டு நின் றவர்கள், முரண்பாடாகப் பேசியவர்கள், ராஜபக்சே கோபித்துக்கொள்வான் என்று சொன்னவர்கள், பிரபாகரனை பாசிஸ்ட் என்றவர்கள், ஈழத்துக்கு எதிரா கப் பேசியவர்கள் எல்லாம்,இன்றைக்கு சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கு வக்காலத்து வாங்கிப்பேசுகிறார்கள். அந்த வாய்களும் பேசுகிறதே என்று நினைத்துக்கொள் கிறேன்.

ஆனால், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; உலகின் பல நாடுகளில் வாழ்கின்ற ஈழத் தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வகை செய்ய வேண்டும் என்ற கருத்தை, 2011 இல் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் முதன்முதலாகச் சொன்னவன் அடியேன் வைகோ என்ற வரலாறை, நீங்கள் மறைத்துவிட முடியாது. நாம்
அப்படிச் சொன்னதற்கு ஆறு மாதங்கள் கழித்து, மெல்ல வாக்கெடுப்பு என்றார். இன்னும் சிலரும் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள் என்று அதிலே ஒரு வரியைச் சேர்த்துக் கொண்டார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து உலகத்தில் இதுவரை எத்த னையோ வாக்கெடுப்புகள் நடந்து இருக் கின்றன. 1905 ஆம் ஆண்டு, சுவீடனில் இருந்து நோர்வே தனிநாடாகப் பிரிவதற்கு வாக்குப்பதிவு நடந்தது. 98 விழுக் காடு மக்கள் பங்கு ஏற்றார்கள். 95 விழுக்காட்டினர் அதை ஆதரித்தார்கள். 1944 இல் ஐஸ்லாந்து, டென்மார்க்கில் இருந்து பிரிந்தது. 1944 இல் ஃபரா தீவுகள், டென்மார்க்கில் இருந்து பிரிவதற்கு வாக்கெடுப்பு நடந்தது. திகைத்துப் போவீர் கள்.வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள், 11,146 பேர்.5656 ஆதரவு; எதிர்ப்பு 5490. 166 வாக்குகள் கூடுதலாகப் பெற்று, ஃபரா தீவுகள் தனிநாடு ஆயிற்று.1991 இல் சோவியத் மண்டலம் உடைந்து பல தனி நாடுகள் உருவாயின. ஸ்லோ வேனியா,குரேஷியா, மாசிடோனியா,மால்டோவா, எரித்ரியா, கிழக்குத்தை மூர், தெற்கு சூடான் என பல நாடுகள் மலர்ந்துவிட்டன.

இப்போது கேமரூன் பேசுகிறாரோ,அதே இங்கிலாந்தில் இருந்து ஸ்காட்லாந்து பிரிவதற்கான பொது வாக்கெடுப்பு இன்னும் சில மாதங்களில் நடக்கப் போகி றது.பசிபிக் கடலில் உள்ள நியூ கேலடோனியா என்ற குட்டித் தீவில் நடக்கப் போகிறது. போகன்வில்லே என்ற சின்னஞ்சிறு பகுதியில் நடக்கப்போகிறது.
இந்த நாடுகளில் எல்லாம் இசைப்பிரியாவைப் போல, பெண்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டார் களா? இளைஞர்களை அம்மண மாக்கிச் சுட்டார்களா? வழி
பாட்டுத் தலங்களை அழித்தார் களா? இல்லையே.ஸ்காட்லாந்து இன்றைக்கும் மகிழ்ச்சியாகத் தானே இருக்கிறது?

ராஜபக்சே சொல்லுகிறான்,நாட்டைப் பிரிப்பது என்ற பேச்சுக்கே இடம் இல் லை. நீ யாரடா அதைச் சொல்ல? அது தமிழர்களின் தாயகம். தனியாகக் கொற் றமும், கொடியும் அமைத்து ஆண்ட நாடு. அது அவர்கள் மண். அவர்கள் இழந்த
சுதந்திரத்தை மீட்கத்தான் போராடுகிறார்கள். நாங்கள் தொப்புள் கொடி உறவு கள் கடலுக்கு அப்பால் இருக்கிறோம்.எங்கள் மூதாதை கரிகாலன் படையெ டுத்து அங்கே வந்தான்,ராஜராஜன் வந்தான்,இராஜேந்திரன் வந்தான், குலோத்
துங்கன் வந்தான், வருண குலத்தான் வந்தான்,ரகுநாத நாயக்கன் வந்தான்.இரு பது கிலோமீட்டர்கள்தான். எதிர்காலம் இப்படி இருக்காது. இளைஞர்கள் என் னைப்போலப் பேசிக் கொண்டு இருக்க மாட்டார்கள்;தேவைப்பட்டால், இங்கி ருந்து படையெடுத்து வருவார்கள்.(கைதட்டல்).

விடுதலைப்புலிகள் தடையை நீக்க வேண்டும் என்று நீதி மன்றத்தில் போரா டு கிறேன்.அவர்கள் தமிழ்நாட்டையும் சேர்த்துத்தான் தமிழ் ஈழம் கேட்கிறார் கள் என்று சொல்லித் தான் இங்கே தடை விதித்து இருக்கிறார்கள். அது தகர்ந்து
போகும். கடந்த முறை விக்ரம்ஜித் சென் தீர்ப்பு ஆயத்தில் வாதிடும் போது, யா ரேனும் ஒரு விடுதலைப் புலி மீது தமிழகத்தில் வழக்குப் பதிவு செய்து இருக் கின் றீர்களா? என்று கேட்டேன். அதற்காக, இந்த முறை தடையை நீட்டிப்ப தற்கு என்ன செய்தார்கள் தெரியுமா?அண்ணா தி.மு.க. அரசின் உளவுத்துறை, ஒரு நான்கு பேரைப் பிடித்து, அவர்கள் விடுதலைப்புலிகள் என்று சொல்லி ஒரு பொய் வழக்கைப் போட்டு வைத்து இருக்கின்றது.இப்போதும் இந்திய அரசு, உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழர் களைச் சேர்த்துத் தனி நாடு கேட் கிறார்கள் என்று. அட முட்டாள்களே, வட்டுக் கோட்டைத் தீர்மானத்தைப்படித் துப் பாருங்கள். நான் அதை நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்து இருக்கிறேன். பிரபாகரனின் மாவீரர் நாள் உரையைத்தாக்கல் செய்து இருக்கிறேன்.அவர் பேசும் போது பின்னால் இருக்கின்ற ஈழ வரை படத்தைப் பார். அதுதான் தமிழ் ஈழம்.அவர்கள் தமிழகத்தின் ஒருஅங்குல மண்ணைக்கூடச் சேர்க்க வில்லை. இந்தத் தடையை ஒருநாள் உடைப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
(பலத்த கைதட்டல்).

இந்தியாவின் ஒருமைப் பாட்டுக்கு ஆபத்து என்கிறார்கள்.நிச்சயமாக ஆபத்து தான்.இதே போக்கில் நீங்கள் போய்க் கொண்டு இருந்தால், நிச்சயமாக ஆபத்து தான். தேசப்பாதுகாப்புச் சட்டம் என்ற பூச்சாண்டிக்கு இங்கே யாரும் பயப்பட
மாட்டோம்.

கடந்த ஆண்டு நமது கட்சியில் இருந்து போன ஒருவர் மீது தேசப்பாதுகாப்புச் சட்டம் போட்ட போது, சிறையில் குலை நடுங்கிக் கிடந்தார். நான் செத்துப்
போவேன் என்று மனைவிக்குக் கடிதம் எழுதினார். ஏன் இப்படி எழுது கிறீர்கள்? என்று கேட்டேன். அதனாலேயே நான் உயர்நீதிமன்றத்தில் போய் அவருக்காக வாதாடினேன்.விருதுநகர் தொகுதிக்கு வாக்குக் கேட்கின்ற பத்து நாள்களை,
அதற்காகச்செலவழித்தேன்.தேசப்பாதுகாப்புச் சட்டத்தை உடைத்து விடுதலை பெற்றுக் கொடுத்தேன்.

இப்போது,கொளத்தூர் மணி மீது தேசப்பாதுகாப்புச் சட்டத்தை ஏவிஇருக்கின்ற ஜெயலலிதா அரசைக் கேட்கிறேன். அஞ்சல் அலுவலகத்தின் மீது கோணிப் பையில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி எரிந்ததற்கும், கொளத்தூர் மணிக்கும் என்ன தொடர்பு? அவர் வன்முறையை நாடாதவர்; வன்முறை வழிகளை ஏற் றுக் கொள்ளாதவர்.அவர் தோட்டத்தில் புலிகள் பயிற்சி பெற்றது உண்டு. அவர் கர்நாடகச் சிறையில் பல ஆண்டுகள் வாடினார். தமிழகச் சிறைகளில் இருந் தார். ஐந்து ஆண்டு களுக்கும் மேல் சிறையில் வாடிஇருக்கிறார். பெரியாரின்
உண்மைத் தொண்டன். அவர் மீது போட்டு இருக்கின்ற தேசப்பாதுகாப்புச் சட்ட மும் உடைந்து போகும்.

எதற்கு இந்தியா?

என்ன பெரிய தேசம்? ஈழத் தமிழர்களைக்கொன்று குவிக்க ஆயுதங்கள் கொடுக் கின்ற உன் இந்தியா எங்களுக்கு எதற்கு என்று நாங்கள் கேட்க மாட்டோமா? இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காக்கிறோம் என்ற பெயரில், இந்திய ஒரு மைப் பாட்டைப் பலியிட்டு விடாதீர்கள் என்று நேருக்கு நேராகவே பிரதமர் மன்மோகன்சிங்கிடம் சொன்னவன் நான். அடக்குமுறைச் சட்டங்கள் எல்லாம்
எங்களுக்குத் தூசு. அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை.

நாம் மனிதாபிமானத்தோடு,மனித உரிமைகளுக்காகப் போராடு கிறோம். நாட் டின் விடுதலைக்காக வாள் ஏந்தியவர்கள் பூலித்தேவன், வீரபாண்டிய கட்ட பொம்மன்,வேலு நாச்சியார். இவர்கள் எல்லாம் வாள் ஏந்திய காலத்தில் இந்தி யாவில் வேறு எவனும் வெள்ளையனை எதிர்த்து வாள் ஏந்தியது இல்லை. நேதாஜியின் படையில் 40,000 தமிழர்கள் உயிரைக் கொடுத்தனர். மான உணர்ச் சி செத்துப் போய்விடாது.முத்துக்குமார் வைத்த தீ அணைந்து விடாது.

மக்களிடம் எடுத்துச் செல்வோம்.உணர்ச்சி ஊட்டுவோம். முள்ளி வாய்க்கால் முற்றத்தின் முகப்பை உடைத்தபோது, இராஜபக்சேவுக்கும், ஜெயலலிதா வுக் கும் என்ன வித்தியாசம்? என்று கேட்டேன். ஊரை ஏமாற்ற ஒரு தீர்மானம். பொ ழுது விடிவதற்குள் முற்றத்தை இடிக்கிறார். நான் வன்முறையாளன் அல்ல. நான் கைது செய்யப்பட்ட வேளைகளில் ஒரு கல்வீச்சு நடந்தது உண்டா? யாருக்காவது ஒரு துன்பம் விளைவித்தது உண்டா? காவல் துறையோடு மோதியது உண்டா? 

ஆனால் முள்ளிவாய்க் கால் முற்றத்தை இடித்துவிட்டு, சுற்றிலும் 500 காவ லர் களை நிறுத்தி இருந்தபோது, நான் மின்னல் வேகத்தில் காரை விடச் சொன் னேன். வருவது வரட்டும் என்றேன். அன்றைக்கு இரத்தக்களறி நடந்து இருக் கும், துப்பாக்கிச்சூடு நடந்து இருக்கும்,நாங்கள் செத்து இருப்போம். ஆனால், காவல்துறையின் ஒரு உயர் அதிகாரி பொறுப்போடு அதைத் தவிர்க்க நினைத் து, எங்கள் தரப்பு நியாயத்தை உணர்ந்து திறந்து விட்டார்.

முதலமைச்சரே, முற்றத்தை முற்றுகை போட்டீர்கள்; வைகோ அதை உடைத் துக் கொண்டு உள்ளே போனான். (கைதட்டல்).

அன்று நீதி கேட்டாள் கண்ணகி.தவறை உணர்ந்த மன்னன் ஆவியைத்தந்தான். கோப்பெருந்தேவியும் உடன் மடிந்தாள். பற்றி எரிந்தது மாட மதுரை. குற்றம்
அற்ற கோவலன் சந்தேகத்துக்கு உரியவனாகக் கருதப்பட்டுக் கொல்லப்பட் டான். கொடியவனே, நீ எங்கள் குழந்தைகளைக் கொன்றாய். எங்கள் பெண் களை நாசமாக்கினாய், எங்கள் மக்களை அழித்தாய். உன்னை எப்படி மன்னிப் போம்? எப்படி விடுவோம்? 

இந்த மாநிலத்தை இரண்டு கட்சிகள் பாழ்பட்ட மாநிலமாக ஆக்கி விட்டன. அவர் களுடைய பித்தலாட்டத்தால், இந்த நிலைமைக்கு ஆளாகி விட்டோம்.
ஆனால், தியாகிகள் சிந்திய இரத்தத்துளிகள், நெல்லிக்குப்பம் மஜீத், வண்ணை
பாண்டியன், கே.வி.கே. சாமி சிந்திய இரத்தத்துளிகள், எங்கள்குருதியோடு கலந்து இருக்கின்றன. சிங்கத் தமிழன் சின்னச்சாமியின் ஆவி, எங்கள் மூச்சுக் காற்றோடு கலந்து இருக்கின்றது.

இன்றைக்கு மூன்று பேர் தூக்குக்கயிற்றின் முன் நிற்கின்றார்களே,அவர் களைக் காப்பாற்ற நாம் எவ்வளவோ போராடி இருக்கின் றோம். ஒரு எம்.பி. தொகுதிக்குச் செலவிடுவதை விடக் கூடு தலாகச் செலவழித்து இருக்கின்
றோம். நமது சக்திக்கு மீறிச்செய்து இருக்கின்றோம். ஜெத் மலானி இங்கே வந்து வாதாடினார். அவருக்கு நன்றி சொன்னார்கள்; எனக்குச் சொல்லாதீர்கள்;
வைகோவுக்குச் சொல்லுங்கள் என்றார். அந்த வழக்கையும் எதிர்ள்ள இருக் கின்றோம்.

போராட்டக் களங்களில் நிற்கின்ற இவ்வேளையில், தமிழ்நாட்டு மக்களுக் கா கப் போராடுகிறோம்.முல்லைப் பெரியாறைக் காக்கப்போராடுகிறோம். அணைப் பாதுகாப்பு மசோதாவாம். எந்த மாகாணமும் தண்ணீரை அவர்களே வைத்துக் கொள்ளலாம் என்று சட்டம் இயற்றினால், இந்தியா துண்டுதுண்டாக
உடைந்து போகும். உலகத்தில் வேறு எங்கும் இப்படிக் கேள்விப் பட்டதே இல் லையே? இதுகேரளத்துக்காரன் எழுதிக் கொடுத்த சட்டம். அதை நிறைவேற்றத் துடிக்கிறது மன்மோகன் அரசு.

தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காக்க, உரிமைகளைக் காக்க, நாடாளுமன் றத்தில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் குரல் ஒலிக்கும். (கைதட்டல்).நான் மக் களை நம்புகிறேன்.நல்லோர் உள்ளம் நம் பக்கம் திரும்பி இருக்கிறது. நேர்மை
யைப் பற்றிப் பேசுகின்ற தகுதி யோடு இருக்கின்றோம். இதுவரை யிலும் கா ணாத அளவுக்குத் தமிழகத்தில் ஊழல் புரையோடிவிட்டது. நம்பவே முடி யாத
அளவுக்கு, கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஊழல் தலைவிரித்து ஆடு கிறது. அதை நாங்கள் அம்பலப்படுத்துவோம்.

வழக்கறிஞர்களே, உங்களுக்கு நிறையக் கடமை இருக்கின்றது.தேர்தல் களத் தில் வன்முறையை ஏவி விடுவார்கள்; பொய் வழக்குப் போடுவார்கள்.அனைத் தையும் எதிர்கொள்கின்ற கவசமாக வழக்கறிஞர்கள் இருக்க வேண்டும்.

அழகாகப் பேசினார் குமரி மாவட்ட வழக்கறிஞர் செல்வராஜ்.திறமை எங்கெல் லாம் புதைந்து இருக்கிறது என்பதைப் பார்த்தேன். முன்கூட்டிச் சொல்லாமல்
அழைத்தேன். ஆங்கிலத்தில் அற்புதமாக வாதங்களை வைத்தார். உங்கள் கோரிக்கை உறுதியாக ஏற்றுக் கொள்ளப் படும். உரிய வாய்ப்புகள் தரப் படும். நீதிக்காகப் போராடுங்கள். நாதி அற்றவர்களுக்காகப் போராடுங்கள். கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்காகப் போராடுங்கள். பணம் கொடுக்க முடியாதவர் களுக்காகப் போராடுங்கள். தமிழகத்தின் உரிமை களுக்காகப் போராடுங்கள்.
வாழ்த்துகிறேன் உங்களை.வருகை தந்ததற்காக நன்றி தெரிவிக்கின்றேன்.

வழக்கறிஞர்கள் மாநாட்டில் வைகோ உரை -பாகம் 1

No comments:

Post a Comment