Thursday, July 18, 2013

திராவிட இயக்கச் செம்மல் என்.வி.நடராசன்

“திராவிடர் கழகத்தில் இருந்தபோது, அதன் வளர்ச்சிக்காக தன்னலமற்று தம் மையே ஒப்படைத்துக்கொண்டு உழைத்தவர் என்.வி.என்.! தந்தை பெரியார் அவர்கள், அவர் மீது பேரன்பைப் பொழிந்ததோடு, நிற்க வில்லை. பெருநம்பிக் கையும் வைத்து இருந்தார். எந்த அளவுக்கு என்றால், தாம் எங்கே சென்றாலும், காரிலோ, வண்டியிலோ, என்.வி.என்.னைத் தம்முடன் அழைத்துச் செல்லும்
அளவுக்கு. போராட்டங்களிலே ஈடுபட்டு சிறைக்கோட்டம் செல்வதிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர் நடராசன்.‘கொள்’ என்றால், வாயைத் திறப்பதும், கடிவாளம் என்றால், வாயை மூடிக்கொள்வதும் குதிரைகளுக்கு மட்டுமே சொந்தமான இயல்பு இல்லை. சில சந்தர்ப்பவாத அரசியல்வாதி களிடமும் அந்தப் போக்கு உண்டு.அவர்கள் ஆர்ப்பாட்டமாக மேடையில் முழங்குவார்கள். ஆனால், போர்ப் பரணி கேட்டதுமே எங்கேனும் புதரில் போய் பதுங்குவார்கள். என்.வி. என். அத்தகைய கோழை அல்லர், கொள்கைக் குன்று!” என்று நம் நெஞ்சம் நிறை அண்ணா அவர்களால் புகழாரம் சூட்டிப் பெருமைப்படுத்தப்பட்டவர் திராவிடர் இயக்க தியாகச் செம்மல் என்.வி. நடராசன் அவர்கள்.

சென்னை செங்குன்றம் அருகில் உள்ள ஞாயிறு என்ற ஊரில் விஜயரங்கம்-
தனலட்சுமி இணையரின் 2ஆவது மகனாகப் பிறந்தவர் என்.வி.நடராசன். ‘ஆனந்த போதினி’ என்ற இதழை உருவாக்கும் அச்சுத் தொழிலாளராக பத்து ரூபாய் ஊதியத்தில் உழைத்த நடராசன் அவர்கள், தன் இளமைக் காலத்தில் தேச விடுதலைக்குப் போராடிய காங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றினார். சென்னை மாவட்ட காங்கிரசு கட்சியின் உறுப்பின ராகவும், தனது ஆசான் சத்தியமூர்த்தி அய்யரைப் போன்ற அதிரடிப் பேச்சா ளராகவும் திகழ்ந்த என்.வி.என். அவர்களுக்கு,சட்ட மன்ற உறுப்பினர் போன்ற
பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு இருந்தது.

அறிஞர் அண்ணா அவர்களே, அன்றைய என்.வி.என். அவர்களை அறிமுகம்
செய்வதைக் கேளுங்கள், “உனக்கு, நமது நண்பர் ஓயாது உழைக்கும் என்.வி. நடராசனை தெரியுமல்லவா? அவரை என்னவென்று எண்ணிக்கொண்டாய்? ஏ... அப்பா! அதி தீவிர காங்கிரஸ்காரராச்சே! சண்டமாருதச் சிங்கம் சத்திய மூர்த்தியின் பிரத்யேக பயிற்சிக் கூடத்தில் பல ஆண்டு காலம் இருந்தவர். சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியிலே உறுப்பினர். எதிர்கால கார்ப்பரே ஷன் மெம்பர் என்றும், ஒரு சான்ஸ் அடித்தால், எம்.எல்.ஏ. ஆகலாம் என்றும் கூறி வந்தனர்.

சென்னையில் எங்கு பார்த்தாலும் இந்த எலும்பு மனிதர் காங்கிரசு அல்லாத
கட்சிகளின் மீது கண்டனம் பொழிவார்.வசைமொழியால் என்னை அர்ச்சிப் பதில் அவருக்கு அப்போது அலாதி ஆசை” இவ்வாறு அன்றைய என்.வி.என்.
அவர்களைப் படம்பிடித்துக் காட்டிய அண்ணா, காங்கிரசு கட்சியின் தன்மை யை யும் சுட்டிக்காட்டுவதை கவனியுங்கள். நடை இது - உடை கதர்! படையும் உண்டு! மாலை கலகத்துக்கு ஆறணா! இரவு கலகத்துக்கு எட்டணா! நோட் டீசை கிழிக்க ஒரு ரூபாய்! சாணி வீச இரண்டணா! கனைத்துக்காட்ட ஒரு
அணா! முண்டா தட்ட மூன்றணா! மூலை முடுக்கிலே நின்று வம்புச்சண்டை போட மூன்று ரூபாய்! இப்படி ரேட் பேசிக் கொண்டு பாரதமாதாவுக்கு சேவை செய்யும் படை வீரர்கள் உண்டு! இத்தனைக்கும் அவர் அப்போதும் எனக்கு நண் பர்தான்! தொழிலாளர் இயக்கக் காரியத்தில் ஒன்றாகவே வேலை செய்வோம்!

இவ்வாறு காங்கிரசு கட்சியில் தொழிற்சங்கப் பணிகளைச் செய்து  கொண்டி ருந்த என்.வி.என்.அவர்கள் கண்ணில் பெரியாரின் ‘குடிஅரசு’ ஏடு தோன்றியது. அதன் விளைவாக தமிழ் உணர்வும், தன்மான உணர்வும் என்.வி.என். அவர் களைத் தொற்றிக் கொண்டது. இந்த நிலையில்தான் ராஜாஜியின் அரசு தமிழக பள்ளிகளில் இந்தியைத் திணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

தந்தை பெரியார் தலைமையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் காட்டுத் தீயாய்
பரவியது. இதன் நியாயத்தை காங்கிரசில் உள்ள சில நல்லவர்களும்  உணர்ந் தார்கள். அவர்களில் ஒருவரான என்.வி.நடராசன், நாங்களும் தமிழர்களே, இந்திக்கு அடிமையாக மாட்டோம் என்று பகிரங்கமாகப் பேசினார். சென்னை மாவட்ட காங்கிரசு கமிட்டி கூட்டத்தில் இதனை எதிர்த்து குரல் எழுப்பவும் என்.வி.என்.தயாரானார்.

இனிமேல் அவரால் அங்கே இருக்க முடியாது என்பதை தொலை நோக்குப்
பார்வையுடன் உணர்ந்த அறிஞர் அண்ணா, அன்று மாலை பெத்து நாயக்கன் பேட்டை பகுதியில் நடக்க உள்ள இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில், காங்கிரசை விட்டு விலகிய என்.வி.நடராசன் பேசுவார் என்று துண்டறிக்கை அச்சிட்டு, கணேசன் என்ற தோழர் மூலம் காங்கிரஸ் கூட்டம் நடக்கும் இடத்திற்கே அதனைக் கொடுக்கச் செய்தார்.

எதிர்பார்த்தது போலவே, ஆத்திரம் கொப்பளிக்க காங்கிரசை விட்டு வெளி யேறி வந்த அவரிடம் இந்த துண்டறிக்கை தரப்பட்டது! வியப்பின் எல்லைக்கே சென்றார் என்.வி.என்.! இந்தி எதிர்ப்புக் கூட்ட மேடைக்கு வந்து அண்ணா வந்த வுடன் பேசினார்.பெரியாரின் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்தி எதிர்ப்பு அறப்போரில் கலந்து கொண்டு தான் மட்டுமல்ல, தனது  துணை வியார் புவனேஸ்வரி அம்மையாரையும், கைக் குழந்தை என்.வி.என். சோமு அவர்களையும் ஈடுபடச் செய்து சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்த இலட்சிய வீரர்தான் நமது என்.வி.என். ஆவார்கள். பிரபல டாக்டர் சிற்சபை அவர்களின் துணைவியார் திருமதி சரசுவதி, பாவலர் பாலசுந்தரம் அவர்களின் துணைவி யார் திருமதி பட்டம்மாள், டாக்டர் தருமாம்பாள், மூவலூர் ராமாமிர்தம் அம் மையார், சரோஜினி தேவசுந்தரம், சீதா சமரசம், குமுதவள்ளி அம்மாள், சிவ சங்கரி முதலான வீரத்தாய்மார்களுடன் மொழி காக்கும் போரில் ஈடுபட்டு சிறை சென்ற வீரத் தமிழச்சியாக புவனேசுவரி அம்மையாரும், பைந்தமிழ் பால கனாக என்.வி.என்.சோமு அவர்களும் வீரகாவியம் படைத்தார்கள்.

சென்னை மாவட்ட தி.க. செயற்குழு உறுப்பினர், பெரியாரின் அலுவலகச் செய லாளர் முதலான பொறுப்புகளில் சிறப்பாக ஈடுபட்டதுடன், 9 ஆண்டுகாலம் அய்யா பெரியாரின் தனிச் செயலாளராக கடமையாற்றினார். 1969 ஆம் ஆண் டில், கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு, பிற்படுத்தப் பட்டோர் நலனுக்காக தனித்துறையையே உருவாக்கி அதன் முதலாவது அமைச்சராக என்.வி.நடராசன் அவர்களை நியமித்தது. 

இந்தச் சூழலில் தந்தை பெரியார் அவர்களிடம் வாழ்த்துகளைப் பெற  என்.வி. என். அவர்கள் சென்றார். அய்யா அவர்கள் வேலூர் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார்.அங்குதான் அமைச்சர் என்.வி.என். சென் றார். தந்தை பெரியார் அவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தார். அருகில் இருந்த மருத்துவர்களிடம் 9 ஆண்டுகாலம் என்னுடை ய தனிச்செயலாளராக அக்கறையுடன் நேர்மையுடன் பணியாற்றிய பெருமை
மிக்கவர் இவர் என்று மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்து வைத்தார். அருகில்
இருந்த திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி அவர்கள், The Honourable Minister was my secretary for 9 years, very sincere secretary என ஆங்கிலத்தில்  மொழி பெயர்த்துக் கூறினார். தந்தை பெரியார் அவர்கள் அப்போது மேலும், honest secretary  என்ற வார்த்தை களையும் இணைத்துச் சொல்லி, என்.வி.என். அவர் களின் நேர்மைத் திறத்தை புகழ்ந்துரைத்தார்கள்.

என்.வி.என். அவர்களுக்கு நாராயணி,சோமு,செல்வம்,மணிமேகலை, ஆசைத் தம்பி, பாண்டியன், சாக்ரடீஸ் என ஏழு பிள்ளைகள். இவர்களோடு எட்டாவதாக அவர் நடத்திய ‘திராவிடன்’ என்ற வார இதழையும் குழந்தையாகவே  நினைத் து பொறுப்புடன் நடத்தினார்.1947 ஆம் ஆண்டு முதல் 1966 ஆம் ஆண்டு வரை இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் இடையில் திராவிடன் இதழை எதிர் நீச்சலடித்து நடத்தி வந்தார். “எதையும் தாங்கும் இதயம் கொள்வோம்; எழில் சார் திராவிடம் பெற்றிட உழைப்போம்” என்ற வைர வரிகளுக்குக் கீழே, திராவி டன் இதழின் தலையங்கம் தனித் தன்மையுடன் திகழ்ந்தது.

தி.மு.கழகத்தில் சட்டதிட்டக் குழுவின் செயலாளர், அமைப்புக்குழுச் செயலா ளர், செயற்குழு உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், அமைப்புச் செயலா ளர் என பல்வேறு பொறுப்பு களை ஏற்று அல்லும்பகலும் அயராது உழைத்து, தி.மு.கழகத்தை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்ததில் என்.வி.என். அவர் களுக்குப் பெரும் பங்கு உண்டு! ஆனாலும், இயக்கத்தின் எளிய தொண்டனாக வே அடக்கத்துடன் கழகப் பணியாற்றினார்.

“என்.வி.நடராசன் யார்? என்.வி.நடராசன் அமைப்புச் செயலாளர் என்பதால்,
உயர்ந்தவன் அல்ல; படோடோபத்தால், பதவியால், வெளிச்சம் போடுபவன்
அல்ல. பலவிதத் தொல்லைகளை ஏற்று, கீழ் மட்டத்தில் இருந்து உழைத்து
உழைத்து கழகத்தை வளர்த்து வரும் தொண்டர்களுக்குத் தொண்டன்.கழகத் தைத் துவக்கியவர் களில் ஒருவன். இன்னும் எழுதுவது தற்பெருமையாகும் என அஞ்சி விடுக்கிறேன்”. (திராவிடன்-18.2.61 தலையங்கம்) என்ற அவரின் நெஞ்சத்து உணர்வலைகள் என்.வி.என். அவர்கள் எளிமையில் இமயமாய் உயர்ந்து நிற்பதை வெளிப்படுத்தும்!

திராவிடர் இயக்கத்தின் எழுச்சியாய் தி.மு.கழகம் பேருரு கொண்ட போது
காங்கிரசு கட்சி அதனை அழிக்க தன் ஆட்சி அதிகாரத்தை கடுமையாகப் பயன் படுத்தியது. அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை, பெரியாரின் பொன்மொழி கள் ஆகிய நூலுக்கு தடை விதிக்கப்பட்டது. கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டது. நம் கொள்கை விளக்க நாடகங்கள் தணிக்கை சட்டத்தினால்,
கொடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டது. மொத்தத்தில் கருத்து உரிமைக்கு காங்கிரசு ஆட்சியில் கடிவாளம் போடப்பட்டது.

இதனை எதிர்த்து தடையை மீறி பேச்சுரிமையை நிலை நாட்ட 23.10.1950 அன்று கூடிய தி.மு.க.செயற்குழு முடிவெடுத்தது. நாடு முழுக்க 144 தடை ஆணையை மீறி தி.மு.கழகம் பொதுக்கூட்டங்களை நடத்தியது.

அதன்படி, 26.10.1950 அன்று குன்றத்தூரில் அமைப்புக்குழுச் செயலாளர் என்.வி. என். சிறப்புரை ஆற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அன்று காலை முதலே ஆயுதம் ஏந்திய போலிசார் நகரை முற்றுகையிட்டனர். ஊரின் நான்கு புறங்களிலும் காவல்துறை லாரிகள் நிறுத்தப்பட்டு, அடக்கு முறை ஏவிவிடப்பட்டது. திட்டமிட்டவாறு கூட்டம் நடைபெற்றபோது, தடியடி
நடத்தி ஏழுமுறை துப்பாக்கிச் சூடு நடத்தி பலரை காயப்படுத்தி மூன்று தோழர் களை சுட்டுக்கொன்றும்,என்.வி.என். உள்ளிட்ட கழகத்தினரை கைது செய்தும் காட்டுதர்பாரை காங்கிரசு அரசு கட்டவிழ்த்துவிட்டது.

இதனைப்போலவே, 1953 ஆம் ஆண்டில் தி.மு.கழகம் அறிவித்த மும்முனைப் போராட்டத்தின்போது, அறிஞர் அண்ணா, ஈ.வெ.கி.சம்பத்,நாவலர் இரா.நெடுஞ் செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.என். ஆகியோர் முன்கூட்டியே கைதுசெய் யப் பட்டு, மூன்றுமாத சிறைத்தண்டனை அளிக்கப் பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, காவல் துறையினர் இவர் களை ஐம்பெரும் தலைவர்கள் என்று குறிப்பிட்டார்கள். நம்நாடு (23.11.1953) இதழும் ஐம்பெரும் தலைவர்கள் என்றே எழுதியது. சிவகாசி உள்ளிட்ட இடங் களில் இருந்த ஆப்செட் அச்சகங்கள் ஐம்பெரும் தலைவர்கள் என்று குறிப் பிட்டு படங்களை வெளியிட்டன. தி.மு.கழகம் நடத்திய போராட்டங்கள் அனைத் திலும் பங்கேற்று சிறைசென்ற பெருமை நம் என்.விஎன். அவர் களுக்கு உண்டு.தன்னலம் அற்ற போராட்ட வீரர் என்.வி.என். என்பதை அண் ணாவின் சிறைக்குறிப்பு பிரகடனம் செய்கிறது.அவர் அஞ்சாமல் கழகப்
போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர்.

1948 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றபோது, அவர் பெரியார் அவர்களிடம் அணுக்கச் செயலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இத்தருணத்தில் என்.வி.என். வீட்டிற்கு பெரி யார் சென்று அவரது துணைவி யாரிடம் பணம் தர முயன்றபோது, அம்மை யார் வாங்க மறுத்துவிட்டார். பெரியார் இந்நிகழ்ச்சியை என்.வி.என்.அவர் களிடம் கூறி பெருமிதம் கொண்டார்” என்ற அண்ணாவின் புகழ்வரிகள்,என்.வி. என். அவர்களைப் போலவே அவரது துணைவியாரும் தியாகச் செம்மலாய் வாழ்ந்த பெருமையை பறைசாற்றுகிறது.

சென்னை மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய கே.கோவிந்தசாமி அவர் கள் உடல்நலம் குன்றிய காலகட்டத்தில் (1951), தி.மு.கழகத்தின் முதல் மாநில மாநாட்டை சென்னையில் நடத்திட முடிவெடுக்கப்பட்டது.அண்ணா விருப்பப் படி என்.வி.என்.அவர்கள் மாவட்டச் செயலாளராகவும், மாநாட்டின் வரவேற் புக்குழுத் தலைவராகவும் பணியாற்றி, இப்போது சென்டரல் இரயில் நிலையம்
அமைந்துள்ள பகுதியில் எஸ்.ஐ.ஏ.ஏ.திடலில் மாநாட்டை மகத்தான வகையில் நடத்தினார். மாநாட்டுத் தலைவர் அறிஞர் அண்ணா அவர்களை  முன் மொழிந் து உரையாற்றும் அரிய வாய்ப்பினையும் அப்போது என்.வி.என். பெற்றார்.

நாடகக் கலையில் நாட்டம் கொண்டவராக தாம் விளங்கியதை ‘அண்ணாவு டன் நான்’என்ற அரிய கட்டுரையில் என்.வி.என்.அவர்களே எழுதினார். இலவச நாடகங்களைப் பார்த்து அதன் காரணமாக தந்தையாரிடம் உதை வாங்கியதை யும் மறைக்காமல் எழுதியுள்ள அக்கட்டுரையில், கொடுமுடி கோகிலம் கே.பி. சுந்தராம்பாள் நாடகம் என்றால், எனக்கு உயிர். ஆறு திங்களுக்கு ஒருமுறை சென்னையில் முகாம் செய்து, ஒரு திங்களுக்கு நாடகம் நடத்துவார்கள்.மாதம் 16 நாட்கள் நடக்கும் நாடகங்களுக்கு தவறாது செல்வேன். எதிர்பாராத விதமாக எப்போதாவது டிக்கட் கிடைக்கவில்லை என்றால், நாடகக் கொட்டகையின் (ராயல் தியேட்டர்) பின்புறமுள்ள திடலில் அமர்ந்து பாடல்களைக் கேட்டு ரசிப் பேன். அருமைத் தோழர்களே, நான் மட்டும் ஏதோ பைத்தியக்காரத்தனமாக
இவ்வாறு தியேட்டர் அருகில் உள்ள திடலில் உட்கார்ந்து ரசித்ததாக எண்ண
வேண்டாம். நூற்றுக்கணக்கான இரசிகர்கள் (பெரியவர்கள் உட்பட) கூடி யிருந் து கிட்டப்பா-சுந்தராம்பாள் பாடல்களைக் கேட்டு மகிழ்வதுண்டு. இவ்வாறாக நாடகக் கலையை இரசிக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாடகத்தில் ஏதாவது ஒரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டது” என்று என்.வி.என். அவர்கள் சுவைபடக் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணா அவர்கள் ‘தனது வழக்கு வாபஸ்’ என்ற நாடகத்தில் வழக்கறிஞர்
வேடத்தில் நடிக்க வைத்து என்.வி.என். விருப்பத்தையும் நிறைவேற்றினார்.

தி.மு.கழகத்தில் உட்கட்சிப் பிரச்சினையால், கலக்கமும், குழப்பமும்,வேதனை யும் உலவிக்கொண்டருந்த காலம் அது! அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சம் உலுக்கிடும் நிலையில், தொண்டர்கள் வேதனையின் விளிம்பில் தவிக்கிறார்கள். இந்தச் சூழலில் 27.2.1961 அன்று ‘மயிலாப்பூர் கழகக் காவலர் கூட்டம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.அப்போது என்.வி. என். அவர்கள் உரையாற்றும்போது, இந்தச் சிக்கல் தீராவிட்டால், அமெரிக்கா
சென்றுவிடப் போவதாக அண்ணா தெரிவித்ததைக் கண்ணீர் மல்கக் குறிப் பிட்டு, எங்களைவிட்டு பிரிந்து சென்று விடாதீர்கள் என்று தழுதழுத்த குரலில் கூறி பேச இயலாமல் அழுதார்.கூடியிருந்தோரும் அழுதார்கள்.

அதன் பிறகு அறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றும்போது, “நான் போய்
விடுகிறேன் என்று சொன்னது உங்களையெல்லாம் விட்டுப் போய்விடு கிறேன் என்பதற்காக அல்ல. நான் போய் வருகிறேன் என்று சொன்னால்,
உண்மையாக எத்தனை பேர் வருந்துகிறார்கள், எத்தனை பேர் மனதில் ஆழ மான உணர்ச்சிகளை இது ஏற்படுத்துகிறது என்று படம்பிடித்துப் பார்க்கத்தான். நான் பிடித்த படம் என்னைப் பெருமைப்பட வைக்கிறது.வெட்கப்பட வைக் கிறது. நாம் ஒருவரைவிட்டு ஒருவர் பிரியத் தயாராக இல்லை என்பதையே நான் பிடித்த படம் எடுத்துக்காட்டுகிறது.” என்று பாச உணர்ச்சியோடு குறிப் பிட்டார்கள்.

தி.மு.கழகம் ஒரு இரட்டைக் குழந்தை.ஒரு குழந்தைக்கு இருக்கின்ற உணர்ச்சி
இன்னொரு குழந்தைக்கும் இருக்கும்.ஒரு குழந்தைக்கு சளி பிடித்தால், இன் னொரு குழநதைக்கும் சளி பிடிக்கும். ஒரு குழந்தைக்கு மாந்தம் என்றால், இன் னொரு குழந்தைக்கும் மாந்தம் வரும். இதிலே யாருக்கு எந்தத் தொல்லை வந் தாலும் மற்றவர்களுக்கும் அந்தத் தொல்லை வரும். அப்படிப்பட்ட இயக்கம் தி.மு.கழகம்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

குடும்பப் பாசமுள்ள அண்ணாவின்இயக்கத்தில் என்.வி.என். அவர்களின்
குடும்பத்தினரும் தொடர்ந்து வருவதுபாராட்டுக்குரியது. அவருடைய புதல் வர்களில் ஒருவரான என்.வி.என்.செல்வம் தி.மு.கழகத்தில் தொண்டராக சில காலம் செயல்பட்டார். மற்றொரு மகன் கைக் குழந்தையாக இருந்தபோதே
தாயாருடன் இந்தி எதிர்ப்புக்காக சிறைச்சாலை கண்ட பெருமை மிகு என்.வி. என்.சோமு அவர்கள் தன் தந்தையார் பெற்றிருந்த அமைப்புச் செயலாளர் பதவியையேப் பெற்று தொண்டாற்றினார். நடுவண் அரசின் பாதுகாப்பு அமைச் சராய் பணியாற்றும் போது, ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி எதிர்பாராமல் மரணமடைந்தார்.

அவரது அன்பு மகள் டாக்டர் என்.எஸ்.கனிமொழி அவர்கள், என்.வி.என். அவர் களின் நினைவாக முரசொலியில் என்.வி.என். சோமு எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து “இலட்சியத் தந்தை” என்ற எழில்மிகு நூலினை என்.வி.என். அவர் கள் நூற்றாண்டு விழா நினைவாக வெளியிட்டுள்ளார்.

எழுத்தாளர், பேச்சாளர், இதழாளர், சிறைக்கஞ்சா போராட்ட வீரர், ஓய்வறியா
உழைப்பாளர், அடக்கத்தின் உருவம், பண்பாட்டுப் பெட்டகம் என பன்முகப்
பேராற்றலும்-குணநலனும் ஒருசேரப் பெற்ற திராவிட இயக்கச் செம்மல்
என்.வி.என்.நடராசன் அவர்களின் பெயர் திராவிடர் இயக்க வரலாற்றில் கல் வெட்டாய் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

வாழ்க என்.வி.என். புகழ்

நன்றிகள் 

கட்டுரையாளர் :- 
ஆ.வந்தியத்தேவன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment