Thursday, July 4, 2013

தலைமை நீதிபதி 2 ஆண்டுகள் நீடிக்க வேண்டும்!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இரண்டு ஆண்டுகள் நீடிக்க வேண்டும்!
#வைகோ அறிக்கை

தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மண்டகுளத்தூரில் பிறந்த பதஞ்சலி சாஸ்திரி, 1952 ஆம் ஆண்டில், இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு ஏற்றார்.

61 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகம் தந்த நீதிபதி சதாசிவம் அவர்கள் அப்பதவி யை ஏற்பது மகிழ்ச்சி அளிக்கின்றது.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத் தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில் உள்ள கடம்பநல்லூர் கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்த நீதிபதி சதாசிவம் அவர்கள், சிங்கம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில், தமிழ் வழியில் கற்றவர். பட்டப்படிப்பை,சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் முடித்தார். சென்னை சட்டக் கல் லூரியில் பட்டம் பெற்று, 1973 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கி, தமிழக அரசு வழக்கறிஞராக, 96 இல் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதியாக, 2007 பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதி மன்ற நீதிபதியாக, அதே ஆண்டில் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பு ஏற்றார்.

இயற்கை நீதியையும், சமூக நீதியையும் மனதில் கொண்டு, அச்சமும், அவல மும் ஆர்வமும் நீக்கி, ஞமன்கோல் நிலையில் தீர்ப்புகளை வழங்கி, நீதித்துறை யில் அவர் புகழ் ஈட்டியதால், தமிழகமும், தமிழ்நாட்டு மக்களும் பெருமை கொள்கின்றனர்.

இந்திய உச்சநீதிமன்றங்களில் பணியாற்ற, தற்போது 65 வயதும், உயர்நீதி மன்றங்களில் பணியாற்ற 62 வயதும் வரம்பாக உள்ளது. இதுவரையிலும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகித்த 39 பேர்களுள், 14 பேர்கள், அந்தப் பதவியில் ஓராண்டுகூடப் பணி ஆற்றமுடியவில்லை. நான்கு பேர், ஒரு மாதம் மட்டுமே தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகித்து உள்ளனர்.

1966 - அமல்குமார் சர்கார் - 105 நாள்கள்
1967 - கோகா சுப்பாராவ் - 285 நாள்கள்
1967 - கைலாஷ்நாத் வாஞ்சு - 318 நாள்கள்
1970 - ஜெயந்திலால் கோட்டலால் ஷா - 35 நாள்கள்
1989 - ஈ.எÞ. வெங்கட்ராமையா - 181 நாள்கள்
1989 - சவ்யசச்சி முகர்ஜி - 281 நாள்கள்
1991 - கமல்நாராயண் சிங் - 17 நாள்கள்
1992 - லலித்மோகன் சர்மா - 85 நாள்கள்
1997 - ஜெ.எÞ. வர்மா - 298 நாள்கள்
1998 - மதன்மோகன் புஞ்சி - 264 நாள்கள்
2002 - புபிந்தர்நாத் கிர்பால் - 186 நாள்கள்
2002 - ஜி.பி. பட்நாயக் - 41 நாள்கள்
2004 - ராஜேந்திர பாபு - 30 நாள்கள்
2011 - அல்டாமஸ் கபீர் - 275 நாள்கள்

நீதிபதி சதாசிவம் அவர்கள், வருகின்ற 26.04.2014 இல், ஓய்வு பெறும் வயதை எட்டி விடுவார். எனவே, 9 மாதங்கள் மட்டுமே, இவர் தலைமை நீதிபதியாகப் பணியாற்ற முடியும். அவருக்குப் பின்னர் இந்தப் பொறுப்புக்கு வரவிருக்கின்ற நீதிபதி லோதா அவர்களும், ஐந்து மாதங்கள்தாம் அப்பதவியில் இருக்க முடியும்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பொறுப்பில் இருப்பவர்கள், குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது அந்தப் பொறுப்பில் இருந்தால்தான், நீதித்துறையில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களைச் செய்திட இயலும். 

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது குறித்து, அரசியல் நிர்ணய சபையில் 24.05.1949 ல் கருத்துத் தெரிவித்த பண்டித நேரு அவர்கள், ‘அமெரிக்க உச்சநீதிமன்றத்தில், 30-40 ஆண்டுகளுக்கும் மேலாக, 92 வயது வரை யிலும் கூட நீதிபதிகள் பணி ஆற்றுகிறார்கள். இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதைவிட, நீதித்துறையைப் பொறுத்தமட்டிலும் அனுபவம் வாய்ந்த திறமையாளர்களே தேவை என்பதால், வயதை ஒரு வரம்பாகக் கொள்ளக் கூடாது’ என்றார்.

அமெரிக்காவில் ஃபெடரல் நீதிபதிகளுக்கு ஓய்வு வயது இல்லை. ஆனால், அவர்களது பதவிக்காலம் வரையறுக்கப்படுகிறது. அமெரிக்காவில், மாநிலத் துக்கு மாநிலம் நீதிபதிகளின் ஓய்வு வயது வேறுபட்டாலும், அது 70 முதல் 75 ஆகவே உள்ளது. இங்கிலாந்தில், 75 ஆக உள்ளது.

இந்திய உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பணி குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி வெங்கடாசலய்யா குழு, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 68 ஆகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 ஆகவும் உயர்த்திட வேண்டும் என, கடந்த 2002 ஆம் ஆண்டு பரிந்துரை செய்தது.

உயர்நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்து எடுப்பதற்கு, மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் இருவர் கொண்ட குழு பெயர் களைப் பரிந்து உரைக்கின்றது. அவற்றை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகள் கொண்ட குழு பரிசீலித்து, தகுந்தோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய, குடியரசுத் தலைவருக்குப் பரிந்து உரைக் கின்றனர்.

இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும்; நீதிபதிகள் நியமனங்களைப் பரிந் துரை செய்ய, தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று, சட்ட அமைச்சர் கபில் சிபல் ஒரு கருத்துத் தெரிவித்து உள்ளார். 

இந்தக் கருத்து குறித்து, சட்ட வல்லுநர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்களிடம் உரிய ஆலோசனை பெற வேண்டும்; வெளிப்படையான விவாதம் நடைபெற வேண்டும். எந்த நிலையிலும், நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் புகுந்து விட இடம் அளித்து விடக் கூடாது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு ஏற்கின்றவர்கள், குறைந்தது இரண்டு ஆண்டுகள் அப்பொறுப்பில் நீடிக்கின்ற வகையில், சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் வலியுறுத் துகின்றேன்!

‘தாயகம்’                                                                                                  வைகோ
சென்னை - 8                                                                              பொதுச்செயலாளர்
04.07.2013                                                                                      மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment