Wednesday, July 3, 2013

ஈழத்தமிழ் இனத்தின் விம்மல் ஒலி-பகுதி 2

தமிழ் ஈழத்தின் நியாயத்தைத் தரணிக்கு எடுத்துச் சொல்லும்! #வைகோ 

நீங்கள்தான் உடனுக்குடன் குறுஞ்செய்திகள் வழியாக எத்தனையோ பேருக் குச் செய்திகளை அனுப்பிக் கொண்டு இருக்கின்றீர்களே? அப்படி உங்கள் நண் பர்களுக்குச் செய்திகளை அனுப்புங்கள். இந்தப் படத்தைப் பாருங்கள் என்று சொல்லுங்கள்; இன்று இரவில் இருந்தே இந்தப்பணியைச் செய்யுங்கள்.பார்க்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துங்கள்.

நஞ்சை அருந்தி மடிந்தார் சாக்ரடீஸ்.அப்போது,கிரேக்கம் அவரைப் பற்றி அதிக மாகக் கவலைப்படவில்லை.தீர்ப்பில் அவருக்குப் பெரும்பான்மை கிடைக்கா விட்டாலும், அவர் நிரபராதி, குற்றம் அற்றவர் என்று அப்போது சொன்னவர் களும் உண்டு. அவர் இறந்தது, கி.மு. 399.
அதன்பிறகு, பிரெஞ்சு சர்வாதிகாரிகளால், கொடிய அடக்குமுறை நடத்தப்பட்ட காலங்களில்,திரைப்படமோ அல்லது கலையோ மக்கள் மனங்களை எரிமலை யாக ஆக்கக்கூடியது என்பதற்குச் சான்றாக,எழுத்தால் மட்டும் அல்ல; புத்தகங் களால் மட்டும் அல்ல;நாடகங்கள் மூலமாகப் புரட்சியைத் தூண்டினார் வால்டேர்.

1732 ஆம் ஆண்டு, ஜெயிரே என்ற ஒரு நாடகத்தை எழுதினார். சிலுவைப் போர் களை மையமாக வைத்து, ஒரு கிறித்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயிரே என்கிற இளம்பெண், சிறைக் கொட்டடியில் அடைக்கப்படுகிறாள். இஸ்லாமி யப் பின்னணியில் வளர்கிறாள்.

இவளுடைய எழிலும், அழகும் ரேஸ்மான் என்கின்ற சுல்தானின் மகனது நெஞ் சத்தைக் கவர்கிறது. காதல் மலர்கிறது. அது காதல் காவியம். பின்னணியில் சிலுவைப் போர்கள்.வால்டேர் இதை நாடகமாக ஆக்கினார்.அந்தக் காதல் கைகூடாமல், அரச குடும்பத்திலே பிறந்த இளவரசன் உடைவாளை எடுத்துத் தன் மார்பில் குத்திக்கொண்டு மடிந்து போகிறான்.அவளும், அதேபோலக் கத்தி யால் கீறிக்கொண்டு செத்துப் போகிறாள்.

இதுதான், வால்டேர் எழுதிய நாடகம்.பிரெஞ்சு நாடு முழுவதும் நடத்தப்பட்டது. எங்கு பார்த்தாலும் அதைப் பற்றியே பேச்சு. ஐரோப்பியக் கண்டத்தின் பல நாடு களிலும், இந்த நாடகம் கொண்டு செல்லப்பட்டது. எப்படி மக்களைத் தயார் படுத்துகிறான் பாருங்கள். துன்பியல் நாடகங்களாகத் தந்துகொண்டே வரு கிறான். ஒடிபஸ் என்கிற ஒரு நாடகத்தைத் தருகிறான்.

அவனது ஒரு நாடகத்தைப் பார்த்த பிரெஸ்ய நாட்டுச் சக்கரவர்த்தி பிரடெரிக்,
கைதட்டி ஆரவாரம் செய்து,வால்டேரைக் கட்டித் தழுவிக் கொள்கிறான். அந்த வால்டேர்,பாஸ்டைல் சிறையில் இருமுறை அடைக்கப்பட்டான். அவன் 1745 இல்,2144 ஆண்டுகளுக்கு முன்பு விஷம் கொடுத்துக் கொல்லப்பட்ட சாக்ரடீஸ்
நாடகத்தைப் போட்டான். அந்த நாடகத்தின் மூலமாக அடக்குமுறையை
எதிர்க்க வேண்டும் என்பற்காக, நீதிக்காக உயிரைக் கொடுத்தார் என்ற சாக்ர டீஸ் பற்றிய செய்தியைக் கொண்டு வந்து சேர்த்தார்.

அதைப்போல, இந்த உச்சிதனை முகர்ந்தால் என்பது, ஈழத்தமிழர்களின் துன்ப வரலாற்றுக் காவியம்.

அந்தப் படத்தின் பாடல் வரிகளை இங்கே சொன்னார்கள்.

இரவிலே நிலவு வருகிறது. இந்த உலகுக்கு வெளிச்சத்தைத் தோய்த்துத் தரு கிறது 

நாகணவாய்ப் பறவைகளும், கிளிகளும் கொஞ்சி விளையாடுகின்ற சுற்றுச் சூழலின் பின்னணியில் இந்தப் படத்தைக் கொண்டு வருகிறார்கள். 

புனிதவதி யின் தாயும், தந்தையும் என என்ன அழகான குடும்பம்;இனிமையான குடும்பம். புனிதவதியின் தந்தை சிறந்த ஓவியர். தமிழ்ச் செல்வனுடைய ஓவியத்தை, மாவீரர் திலகத்தின் நம்பிக்கைக்கு உரிய தளபதிகளுள் ஒருவராக இருந்து, அக் கிரமமான முறையிலே குண்டு வீசிக் கொல்லப்பட்ட தமிழ்ச்செல் வனின் சித்திரத்தை அவர் வரைந்து இருக்கிறார். இதை யார் வரைந்தார் என் பதைக் கண்டு அறிந்து, இராணுவச் சிப்பாய்கள் வந்து, புனிதவதியின் தந்தை யை இழுத்துக் கொண்டு போகிறார்கள். அதற்குப் பின்னர், அந்தக் குடும்பம்
சூறையாடப்படுகிறது. கொடுமை, கொடுமை, கொடுமை. 

புனிதவதி ஒரு சின்னஞ்சிறு மொட்டு.அவள் தோழி துர்கா, விடுதலைப்புலி களின் கரும்புலிகள் பிரிவைச் சேர்ந்தவள் என்பது இவளுக்கு முதலிலே தெரி யாது. எல்லோரையும் போலத்தானே மகிழ்ச்சியாக வழி அனுப்பி வைக்கிறார் கள். அவள் மனித வெடிகுண்டாக அனுப்பி வைக்கப்படுகின்ற துர்கா,எவ்வளவு
புன்முறுவலோடு போகிறாள்!

உயிரைத் தத்தம் செய்வதற்காக,மரணத்துக்கு அழைப்புக் கொடுத்து விட்டுப் போகிறாள். இராணுவச் சிப்பாய்கள் புனிதவதியையும் அவளது தாயாரையும் சூழ்ந்துகொண்டு, வெறிநாய்களைவிடக் கொடுமையாகக் குதறி, நாசப்படுத்து கிறார்கள்.புனிதவதியின் தாய் நாசப்படுத்தப்படுகிறாள். 13 வயது. அப்போது தான் பூப்பு எய்திய அந்தச் சின்னஞ்சிறு பிஞ்சும் நாசப்படுத்தப்படுகிறாள்.

இப்படி ஈழத்தில் எத்தனைக் குடும்பங்களில்,சிங்களவர்களின் சுக்கிலங்களைத் தங்களுடைய கருப்பையில் சுமக்க நேர்ந்த கொடுமைக்காக எத்தனைப் பெண் கள் தற்கொலை செய்து கொண்டனர்?.தாயும், மகளும் கற்பழிக்கப்பட்டனர்.
எவ்வளவு துன்பம், எவ்வளவு கொடுமை.

இந்தச் சின்னஞ்சிறு பிஞ்சும், அந்தச் சிங்களவனின் சுக்கிலத்தைச் சுமக்க வேண்டிய அவலத்துக்கு ஆளாகிறாள்.

அதில் இருந்து விடுபடுவதற்கு,கருவைக் கலைக்க முயல்கிறார்கள். நடக்க வில்லை. என்ன செய்வது எனத் தெரியாமல் துடித்துப் போன நிலையில், கண் ணீரைச் சுமந்துகொண்டு, அந்தக் கண்ணீரைப் போன்ற உப்புக் கடல் அலை களைக் கடந்து, தமிழகத்துக்கு வருகின்றார்கள்.

என்னுடைய அன்புக்கு உரியவர்களே, தமிழகத்தில் மனிதநேயம் செத்துப் போய்விடவில்லை. அதனால்தான்,பேராசிரியர் நடேசனும், அவரது துணைவி யாரும், அந்தக் குடும்பத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.

அடைக்கலம் தந்த வீடுகளே,
போய் வருகின்றோம் நன்றி
எங்கள் உடலில் ஓடுகின்ற செங்குருதி,
நீங்கள் தந்த சோறு அல்லவா?

என்று கவிஞர் காசி ஆனந்தன் ஒரு பாடலை எழுதினார்.

பேராசிரியர் நடேசனும், அவரது துணைவியாரும், ஒரு நல்ல தமிழ்க்குடும்பம். அமைதியான இல்லறம் நடத்துகிறார்கள்.அவர்கள், இவர்களுக்கு இடம் தருகி றார்கள். 

மருத்துவர் தெய்வநாயகமும் அவருடைய துணைவியாரும் மருத்து வர்கள். அவர்களிடம் கொண்டு போய்ப் பரிசோதிக்கின்றார்கள்.

கரு நான்கு மாதங்கள் வளர்ந்து விட்ட நிலையில், அந்தச் சிறுமியின் கர்ப்பத் தைக் கலைக்க முடியாது; தாயின் உயிருக்கு ஆபத்து என்கிறபோது,எவ்வளவு அதிர்ச்சி. இது எதுவுமே அந்தப் பிள்ளைக்குத் தெரியவில்லை.என்னுடைய வயிறு ஏனம்மா இப்படிப் பெரிதாகிறது? என்று கேட்கிறாள்.அவளுக்கு என்ன தெரியும்?

திரைப்படங்களைப் பற்றியோ, நடிப்பைப் பற்றியோ எதுவுமே தெரியாத இந்த
நீனிகா, எப்படி இந்தப் பாத்திரமாக மாற முடிந்தது?

ஈழ விடுதலைப் போராளிகள் விட்ட மூச்சுக்காற்றுதான், அப்படிப்பட்ட உயிர்ப் புத்தன்மையை ஏற்படுத்தி இருக்கின்றது. (பலத்த கைதட்டல்).

அவள் ஒன்றும் அறியாத பிஞ்சு. வயிறு ஏன் பெரிதாக இருக்கிறது என்பது தெரியவில்லை என்று வெகுளித்தனமாக பேசுகிறாளே, இதைக்கேட்கும்போது நம் நெஞ்சே பிளக்கிறது.தன் மகளுக்கு நேர்ந்துவிட்டக் கொடுமையை எண்ணி
இதயம் வெடித்துப்போன அவளது தாய், மகளுக்கு உணவில் விஷம் வைத்து
சாகடிக்க முடிவு செய்கிறாள்.

சோற்றைப் பிசைந்து விஷத்தை ஊற்றுகிறாள். உணவுத் தட்டை மகளிடம் கொடுத்துவிட்டு, தண்ணீர் கொண்டுவர சமையலறைக்குள் போகிறாள். தான் நேசமாகப் பாசமாக பழகும் அமுதன் என்று அவளால் பெயர் சூட்டப்பட்ட நாயி டம், நீ இதை முதலில் சாப்பிடு என்று சொல்லுவதை காதில் கேட்ட தாய் அலறியடித்துக்கொண்டு ஒடிவந்து சோற்றுத் தட்டை தட்டி விடுகிறாள். இந்தக் காட்சி படம் பார்க்கும்போது உலுக்கி எடுத்துவிடும்.இந்தக் கட்டத்தில் தமிழ ருவி மணியன் எழுதிய வசனம் நெஞ்சை ஆக்கிரமிக்கும்.

புனிதா தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் தெளிக்கிறாள்.பறவைகள் தாகத் தால் தவிக்குமே என்று பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைக்கிறாள். ஒரு நாள் இரவில் மட்டக்களப்பிலே இருந்து தகவல் வருகிறது. தமிழர்கள் கண்களைக் கட்டி சிங்கள இராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக்கொன்றதில் பலியானவர் களில் புனிதாவின் தந்தையும் ஒருவர் என்ற துன்பச்செய்தி. இறந்தது அவர் தானா? என்று நேரில் அறிய புனிதாவின் தாய் மகளுக்குத் தெரியாமல் படகில்
இலங்கைக்குச் செல்கிறாள்.ஊருக்குப்போன அம்மா வர இரண்டுமாதம் ஆகும் என்று நடேசன் கூறும்போது, அந்த பிஞ்சு மனம் துடிக்கிறது.

அவளே ஒரு குழந்தை; அவள் வயிற்றுக்குள் ஒரு குழந்தை.கடற்கரையில் வந்து வேடிக்கை பார்க்கிறாள். மிருகங்களை விடக் கொடியவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் அல்லவா?இந்தப் பிள்ளையைப் பார்த்து, காமுக
உணர்வோடு வந்து தொல்லை தர முயற்சிக்கிறார்கள்.

இன்றைக்குத் தமிழகம் மதுவின் பிடியிலே நாசமாகிக் கிடக்கிறது. பண்பாடு சீரழிந்து வருகிறது. யாருக்கும் பாதுகாப்பு இல்லை.ஆனால், இந்த இடத்தில்,
அக்கிரமக்காரர்களை அடித்து விரட்டுவதற்கு, ஒரு திருநங்கை வருகிறாள். நீங்களெல்லாம் ஆம்பிளைகளாடா? என்று கேட்கிறாள்.

இந்தக் காட்சியில் எவ்வளவு பொருள் பொதிந்து இருக்கிறது.அந்தத் திருநங் கையர் நல அமைப்பு இருக்கின்ற இடத்தைக் காட்டுகிறார்கள். அங்கே மனித நேயம் இருக்கிறது.

இந்தக் கட்டத்தில், பிள்ளைப்பேறு இல்லாத பேராசிரியர் நடேசனின் துணைவி யாரும் தாய்மை அடைகிறாள்.நியாய உணர்ச்சி உள்ள அதிகாரிகளும் தமிழகக் காவல்துறையில் இருக்கின்றார்கள் என்பதைக் காட்டுவதற்காக, சார்லஸ் ஆண்டனி என்ற காவல்துறை அதிகாரி வருகிறார்.

பேராசிரியர் நடேசனாக,சகோதரர் சத்யராஜ் அவர்கள் மாறி இருக்கிறார்கள். அதுபோல, சார்லஸ் ஆண்டனியாக சகோதரர் சீமான் மாறி இருக்கிறார்.

பாசமலர் படத்தில் மீனாட்சி அம்மாளை மறக்க முடியாது.படம் பார்த்தவர் களுக்குத் தெரியும். அத்தனை பேரின் ஆத்திரமும் அந்த அம்மாள் மீதுதான் திரும்பும். தங்கவேலுவின் அம்மாவாக நடித்து இருக்கிறார்.அதுபோல, இந்தப் படத்தில், பேராசிரியர் நடேசனின் மாமியார் வருகிறார்.

ஏற்கனவே கருவுற்று இருக்கின்ற புனிதவதியின் உடல் எடை குறைந்து கொண்டே வருகிறது. மருத்துவரைப் பார்த்துச் சோதிக்கிறார்கள். இரத்தப் பரி சோதனையின் முடிவு வருகிறது, இடி விழுகிறது தலையிலே! 

வரிப்புலி இனத்தை, நரி நகம் கீறுமோ?
மரங்கொத்திப் பறவைகள்
விருட்சத்தைச் சாய்க்குமோ?
விடியலின் கனவிலே இடி வந்து
தாக்குமோ?
தீப்பட்ட காயத்தில் வேல் வந்து
பாயுமோ?

என்ற பாடல் வரிகள், நெஞ்சைப் பிழிகின்றதே.

இடி விழுகிறது. இரத்தப் பரிசோதனையின் முடிவில், கொடூரமான உயிர்க் கொல்லி நோயாகிய எய்ட்ஸ் நோயும் தாக்கி விட்டது.

கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். இப்படி எத்தனைத் தங்கைகள் அங்கே அழிக்கப்
பட்டார்கள்? நாசமாக்கப்பட்டார்கள்.

அங்கு உள்ள மக்களைக்கொன்று குவித்ததோடு மட்டும் அல்ல;ஒரு இனத்தின் கலாச்சாரத்தை, பண்பாட்டை அழிக்கின்ற வகையில் கோரத் தாக்குதல்களை நடத்தி விட்டார்களே?

பதுங்கு குழிகளும் மண் போட்டு மூடுமோ? என்று கேட்கிறார் கவிஞர்.

இத்தனைக் கொடுமைகளையும் நடத்துவதற்குக் காரணமாக, ஆயுதம் தந்து உதவிய இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு, சோனியா ஏவுகிற அரசுக்கு ஒருபோதும் மன்னிப்புக் கிடையாது.

புனிதவதிக்கு எய்ட்ஸ் பரவிய செய்தியைகருவுற்று இருக்கின்ற தன் மனை விக்குத் தெரியாதபடி,பேராசிரியர் நடேசன் மறைக்கிறார். அவளுக்குத் தேவை யான மருந்து, உணவைத் தானே கொடுக்கிறார். இதைப் பார்க்கின்ற அவரது துணைவியாருக்கு ஒன்றும் புரியவில்லை. இந்தத் திரைக்காவியத்தை நீங்கள் பார்க்கிறபோது, உங்கள் நெஞ்சத்தில் வேதனை சூழும்;கண்கள் கண்ணீரைக் கொட்டுவது மட்டும் அல்ல, நம்மை நாமே சுத்தப்படுத்திக் கொள்வதற்கு, நம்
மனங்களைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்கு, இந்தப் படம் உறுதியாக உதவும்.

முள்ளிவாய்க்கால் கொடுமைகளுக்குப் பிறகு, நான் திரை அரங்குகளுக்குச்
சென்று படங்கள் பார்ப்பது இல்லை; முன் அறிவிப்புக்காட்சிகளுக்கும் போவது
இல்லை என்று தீர்மானித்து இருந்தேன்.ஆனால், நான் நல்ல திரைப்படங் களைப் பார்த்து ரசிப்பவன். இனி, பார்க்க வேண்டாம் என்று முடிவு எடுத்து இருந்தேன்.அது சரியோ,தவறோ, நான் அப்படி ஒரு முடிவு எடுத்து இருந்தேன்.
ஆனால், இது ஒரு திரைப்படம் அல்ல; இது ஒரு காவியம். அதனால்தான், இதைப் பார்க்கிறேன்.

அந்தக் குழந்தைக்கு என்ன நோய் என்பதைத் தாதிப் பெண்கள், மாமியாரிடம் சொல்லி விடுகிறார்கள்.அதனால், பேராசிரியரின் துணைவி யாருக்கும் இது தெரிய வருகிறது.

அந்தக் குழந்தையை இந்த வீட்டில் வைத்து இருக்கக்கூடாது என்று மாமியார்
சொல்லுகிறார். இரவு நேரத்தில், அந்தக் குழந்தை தூங்கிக் கொண்டு இருக்கின் றது என நினைத்து இவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால்,அந்தப் பச்சை மண்ணின் காதுகளில் இந்தப்பேச்சு விழுந்து விடுகிறது. தன்னால் இவர்களுக்கு ஏன் சிரமம்? என்று கருதிய அந்தச் சின்னஞ்சிறு மலர், அந்த இரவிலேயே அந்த வீட்டை விட்டுப் போகிறாள்.

ஈழத்திலே அவள் கிளிகளோடு கொஞ்சி வளர்ந்தவள்.இங்கே,பேராசிரியர் வீட் டிலே ஒரு நாய் இருக்கிறது.அவ்வளவு பாசத்தோடு அவளிடம் பழகுகிறது. அர்த்தராத்திரியில் மெதுவாகக் கதவைத் திறந்து கொண்டு புனிதவதி,வயிற்றி லே கருவையும்,உயிர்க்கொல்லி நோயை உடலிலும் சுமந்துகொண்டு போகிற போது, அந்த நாயும் அவளுடனேயே செல்லுகிறது.பின்னாலேயே போகிறது. அந்தக் காட்சியைப் பார்க்கின்றபோது, நெஞ்சம் உடைந்துவிடும்.

ஒரு ஏழை ஆட்டோ ஓட்டுநர்.மனிதாபிமான உணர்வோடு, அந்தக் குழந்தைக்கு டீயும், பன்னும் வாங்கிக் கொடுத்து, நீ எங்கம்மா போகணும்? என்று பாசத் தோடு அழைத்துக் கொண்டு போகிறார். ஊரெல்லாம் தேடித்தேடி அலைந்து, திருநங்கைகள் நிலையத்திலே கொண்டு போய்ச் சேர்க்கிறார். கடைசியாக மருத்துவமனைக்குக் கொண்டு வருகிறார்கள்.அதுவரையிலும் அந்த நாயும் கூடவே வருகிறது.

அப்பொழுதுதான் ஒரு வசனம்: இந்த நாய்க்கு இருக்கின்ற நன்றி உணர்வு கூட
இந்த நாட்டில் இல்லையே? தமிழனுக்கு இல்லையே என்று சொல்லுவதைத் தான், தணிக்கையில் கத்தரித்து விட்டார்கள்.

இறுதிக் கட்டம். நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தில், அந்தக் கடைசிக்காட்சி தான், நெஞ்சைப் பதைபதைக் கச்செய்யும். டாக்டர் சேகர் நெஞ்சு வெடித்துக் கீழே விழுந்து செத்துப்போவார். ஸ்ரீதர் அருமையாக அந்தக் காட்சியைச் சித்த ரித்து இருக்கிறார்.அதுகூடக் கதைதான். ஆனால், இந்த உச்சிதனை முகர்ந் தால் ஒரு உண்மைச் சம்பவம்.

இப்பொழுது, மருத்துவமனையில்,பேராசிரியர் நடேசனின் துணைவி யாருக் கும் குழந்தை பிறக்கிறது; புனிதவதிக்கும் குழந்தை பிறக்கிறது. இரண்டுமே எங்கள் குழந்தைகள்; எங்கே பிறந்தாலும் ரோஜா, ரோஜாதான் என்கிறார்கள்.
இதுதான் தமிழனின் மனிதநேயம்.இந்தத் திரைப்படத்திலே, மனித வெடி குண்டாகிய துர்காவையும் காட்டுகிறார்கள். சிங்களவனின் சுக்கிலத்தைச் சேர்ந்த சின்னஞ்சிறு பிஞ்சையும் காட்டுகிறார்கள்.மனிதநேயத்தோடு அதை ஏற்றுக் கொள்ளுகின்ற பேராசிரியரையும் காட்டுகிறார்கள்.

இறுதியாக,இந்தியஅரசு செய்த கொடுமைகளுக்கு அடையாளமாக ஒரு காட்சி.

அந்தக் குழந்தையை நீங்கள் இதுவரை இங்கே வைத்து இருந்த தகவலை எங்க ளுக்குச் சொல்லவில்லை; அடைக்கலம் கொடுத்தது இராஜ துரோகம் என்று, பேராசிரியர் நடேசனைக் கைது செய்கிறார்கள்.

இந்தக் காட்சி, உங்கள் நெஞ்சில் ஆயிரம் கேள்விகளை எழுப்பும்.இந்தத் திரைக் காவியம், எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும், வரலாற்றில் இருக்கும். இது
தமிழகத்தின் வீதிகளில், ஊர் ஊராகக் காட்டப்படும்.

இதை இயக்கிய இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களே, உரையாடல்களை
எழுதிய தமிழருவி மணியன் அவர்களே,இசை அமைத்தவர்களே, பாடல் களைப் பாடியவர்களே, நீங்கள் இந்தத் தமிழ் இனத்துக்குப் பெரும் சேவையைச் செய்து இருக்கிறீர்கள்.

இது இலட்சக்கணக்கான இளைஞர் களின் உள்ளத்தில், வேதனையை அல்ல,
கண்ணீரை அல்ல,

அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

என்ற உணர்வோடு, ஆயுதம் ஏந்துவதற்கான உணர்வை உருவாக்கிக் கொடுக் கும். முத்துக்குமார் என்னைத் தருகிறேன் ‘நெருப்புக்கு’ என்று உயிராயுத மானான். நீங்களும் அப்படி ஒரு உயிராயுதத்தைத் தந்து இருக்கிறீர்கள்.

இந்தத் திரைப்படம் உலக அரங்கில் செல்லுகிறபோது, ஈழத்தமிழர்களின் துன்ப வரலாறையும், நம் பக்கம் இருக்கின்ற நியாயத்தையும், சிங்களவன் செய்த இனக்கொலையையும் எடுத்துக் காட்டும்; அவன் கூண்டிலே நிறுத்தப்படுவதற் கான சூழ்நிலையையும், மலரப் போகின்ற தமிழ் ஈழத்தின் நியாயத்தையும் அனைத்தையும் தரணிக்கு எடுத்துச் சொல்லுகின்ற ஆவணமாக இருக்கும்.

நீனிகா, என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில், நான் பார்த்த திரைப்படங்கள்
அளவில், உனக்கு நிகராக இப்படி ஒரு பாத்திரத்தில் வேறு எவரும் நடித்ததே
இல்லை. (பலத்த கைதட்டல்.)

இந்த உணர்வுகளோடு,கலைத்துறைக்குச் சேவை செய்து, உன்னுடைய வாழ்வு சிறக்க வேண்டும் என்று அனைவர் சார்பிலும் வாழ்த்துகிறேன்.இந்தப் படத்தைத் தந்த நமது புகழேந்தி தங்கராஜ் அவர்களையும், உறு துணையாக நின்ற கலைஞர்களையும்,உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்துகிறது எனச் சொல்லி விடைபெறுகிறேன்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment