Saturday, July 6, 2013

உணவு பாதுகாப்புச் சட்டம்

உணவு பாதுகாப்புச் சட்டம் 
பொதுவிநியோக முறையை சீர்குலைத்துவிடும்!
#வைகோ கண்டனம்

மக்களாட்சி நடைமுறைகளையும் நாடாளுமன்ற ஆட்சிமுறையையும் கேலிக் கூத்து ஆக்குவதை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தொடர்ந்து செய்து வரு கின்றது. நாடாளுமன்றத்தின் மாண்பை குறைத்து, அரசியல் சட்ட நெறிமுறை களை குழிதோண்டி புதைத்து வருகின்றது. இதற்கு தற்போதைய எடுத்துக் காட்டு, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வந்துள்ளதைக் கூறலாம்.
உணவு பாதுகாப்பு சட்ட முன்வடிவு 2011 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 2011 டிசம்பரில் இந்த மசோதா, உணவு, பொதுவிநி யோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு வுக்கு அனுப்பப்பட்டது. மேலும், மாநிலங்களின் பார்வைக்கு அனுப்பப்பட்டு கருத்தறியப்பட்டவுடன், இந்த ஆண்டு பிப்ரவரியில் மாநில உணவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டு, அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி மக்களவையில் ‘தேசிய உணவு பாதுகாப்பு மசோதா’ தாக்கல் செய்யப்பட்டது.

நாடாளுமன்றத்தில் இந்த மசோதா பற்றிய விவாதங்கள் நடத்தப்பெற்று, திருத்தங்கள் முன்மொழியப்பட்டால் அவற்றையும் உள்ளடக்கி சட்டமாக்கப் படுவது என்பதுதான் நடைமுறை. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில் இதை அவசர சட்டமாக கொண்டு வந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று உள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரான மத்திய அரசின் இந்நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, பீகார் முதல்வர் நிதீஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி ஆகியோர் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் அம்சங்களை கடுமையாக எதிர்த்து உள்ளனர். மத்திய அரசுக்கு ஆதரவு நல்கி வரும் சமாஜ்வாதி கட்சியும் எதிர்த்து வருகிறது. 

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், அதில் திருத்தங்கள் பலவற்றை கொண்டுவர வேண்டும் என்று இடதுசாரி கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. மத்திய உணவுத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ், உணவு பாதுகாப்பு மசோதாவில் சுமார் 81 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு மசோதா திருத்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறி இருக்கின்றார்.

மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சரத்பவாரும் அவசர சட்டம் கொண்டு வருவதை ஏற்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் மிக வும் முக்கியத்துவம் வாய்ந்த உணவு பாதுகாப்பு மசோதாவை, நாடாளுமன்றத் தின் விவாதத்திற்கு முன்வைத்து, கருத்தொற்றுமை மூலம் சட்டமாக்கப் படா மல் அவசர கோலத்தில் அள்ளித்தெளித்து அரசியல் ஆதாயம் தேட காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது.

உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியத்தின் கட்டளைகளை ஏற்று செயற்படும் மத்திய அரசு, தற்போது நடைமுறையில் உள்ள பொதுவிநியோக முறையை அடியோடு சீர்குலைக்கவே உணவு பாதுகாப்புச் சட்டம் கொண்டுவந்துள்ளது. ‘எல்லோருக்கும் உணவு’ என்ற குறிக்கோளுடன் கொண்டுவரப்பட்ட பொது விநியோக முறையை வறுமைக்கோட்டுக்கு மேலே/கீழே என்று இச்சட்டம் பிளவுபடுத்துகிறது. இதன் மூலம் பொது விநியோகமுறை மூலம் குறைந்த விலையில் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டிய உணவு பொருட்கள், இனி மத்திய அரசு வழிகாட்டுதலின் பேரில் அடையாளம் காணப்படும் வறு மைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 

மத்திய அரசின் மதிப்பீட்டின்படி வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள், 2005 ஆம் ஆண்டில் சுமார் 32 கோடி மக்கள் என்று திட்டக்குழு கூறியது.ஆனால், பொருளாதார நிபுணர் அர்ஜூன் சென்குப்தா தலைமையிலான ‘அமைப்பு சாரா தொழிற்துறை பற்றிய தேசிய ஆணையம்’ நாட்டில் நாள்தோறும் ரூ 20க்கும் குறைவாக செலவழிக்கக்கூடிய மக்கள் எண்ணிக்கை 83.6 கோடி என்று கணக்கிட்டுள்ளது.

மேலும், ஒரு குடும்பத்தில் நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி அல்லது கோது மை, ரூ 3 விலையில் வழங்கப்படும் என்பதும் சரியான மதிப்பீடு அல்ல. சரா சரியாக 10-14 கிலோ உணவு தானியம் ஒரு நபருக்கு வழங்குவதுதான், ஓரளவு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும். ஆனால், உணவு பாதுகாப்புச் சட்டம் வருவதற்கு முன்பே தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பொது விநியோக திட்டத்தில் குறைந்த விலைக்கு அரிசி வழங்கி வருகின்றன.

இவ்வாறு பல முரண்பாடுகளையும் தெளிவான வழிகாட்டுதலும் இன்றி,பொது விநியோக முறையை முற்றிலும் சீர்குலைக்கவே தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப் பட்டுள்ளதே தவிர, மக்கள் நலனை முன்வைத்து அல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மாநில அரசுகளை ஓரங்கட்டிவிட்டு மத்திய அரசு தனது ஆக்டோபஸ் கரங் களால் ஆதிக்கம் செலுத்தி, கட்சி அரசியல் இலாபம் தேடும் விதத்தில் கூட் டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கவே இம்மாதிரி செயல்களில் ஈடு பட்டுவருகிறது.

‘தாயகம்’                                                                                     வைகோ
சென்னை - 8                                                                பொதுச்செயலாளர்
06.07.2013                                                                        மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment