Wednesday, July 3, 2013

தொடரும் கூட்டுச் சதி!

இனப்படுகொலைக் கூட்டுக் குற்றவாளிகள் தில்லியில் சந்திப்பு; 
தொடரும் கூட்டுச் சதி! 
13 ஆவது அரசியல் சட்டத் திருத்த ஆலோசனை எனும் மாய்மால வலை! வைகோ அறிக்கை!

வரலாற்றில் நடைபெற்ற கொடூரமான மனிதப் பேரழிவுகளுள் ஒன்றான ஈழத் தமிழர் இனப்படுகொலையை நடத்திய சிங்கள அரசின் போர்முகங்களில் ஒரு வனான பசில் இராஜபக்சேவை புது தில்லிக்கு வரவழைத்து, ஜூலை 4 ஆம் தேதி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்கள்.
இல்லாத ஊருக்கு, போகாத வழியைக் காட்டுவது போல, ஈழத்தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு, 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் ஒரு தீர்வைத் தரு வது போன்ற மாய்மால வேலையை, இந்திய அரசு செய்து வருகிறது.
 
ஈழத்தமிழர்களின் கொடுந்துயருக்கும், இன்றைய அனைத்துத் துன்பங்களுக் கும், சிங்கள இனவாத அரசும், இந்தியாவின் காங்கிரஸ் மத்திய அரசும்தான் முழுப்பொறுப்பாளிகள் ஆவர். 1976 மே 14 இல், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான தந்தை செல்வாவின் பிரகடனத்தைச் செயல்படுத்த, சிங்கள இராணுவத் தாக்கு தலை எதிர்கொள்ள, போற்றுதலுக்குரிய தேசியத் தலைவர் பிரபாகரன் அவர் களின் தலைமையில், தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் வீரம் செறிந்த ஆயுதப் போராட்டத்தின் மூலம், சிங்களப் படைகளை முறியடித்து, சுதந்திரத் தமிழ் ஈழத்தை நிர்மாணிக்க இருந்த வேளையில், சிங்கள அதிபர் ஜெயவர்த்தனே வின் நரித்தந்திரத்தால், போஃபர்ஸ் ஊழலில் சிக்கி இருந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, மக்கள் கவனத்தைத் திசை திருப்ப ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம்தான், 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஆகும். 

நயவஞ்சகமாக பிரபாகரன் அவர்களை, பொய்யுரைத்துத் தில்லிக்கு அழைத்து வந்து, அசோகா ஓட்டலில் சிறை வைத்து, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை, காங்கிரஸ்  அரசு திணித்தபோது, ‘இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம்; இந்தி யாவை எதிர்க்க விரும்பவில்லை’ என்று பிரபாகரன் தெரிவித்த நிலை யில், 1987 ஜூலை 29 இல், கொழும்பில் ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. 

அந்த ஒப்பந்தத்தில், வடக்கு மாகாணத்தோடு கிழக்கு மாகாணத்தை இணைப் பது குறித்து, கிழக்கு மாகாணத்தில் மூன்று மாத காலத்துக்குள் பொது வாக்கெ டுப்பு நடத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தில் கையெழுத்து மை உலர்வதற்கு உள்ளாக, ‘இணைப்பை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வேன்’ என்று ஜெயவர்த்தனே அறிவித்ததும், தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற் றங்களை வெளியேற்றக் கோரி திலீபன் துளிநீரும் பருகாமல் அறப்போர் நடத்தி, செப்டெம்பர் 26 இல் உயிர் நீத்ததும், ஒப்பந்தத்துக்கு எதிராக விடு தலைப்புலிகள் 17 பேர்களை, சிங்களக் கடற்படையினர் கைது செய்து, பலாலி விமான தளத்தில் காவலில் வைத்ததும், அவர்களைப் பாதுகாக்க முனைந்த இந்திய இராணுவத்தின் கட்டுக்காவலை இந்திய அரசு விலக்கச் செய்ததால், குமரப்பா,புலேந்திரன் உள்ளிட்ட 12 தளபதிகள் நச்சுக்குப்பி கடித்து மாண்டதும், விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி,செய்தித்தாள் நிறுவனங்களை இந்திய இராணுவம் வெடிகுண்டு வைத்து அழித்ததும், புலிகள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் தொடுத்ததும், அதனைப் புலிகள் எதிர்கொள்ள நேர்ந்ததும், இந்திய அரசின் துரோகச் செயல்கள் ஆகும். 

எனவே, அந்தக் காலகட்டத்திலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை, இரு நாட்டு அரசுகளும் தீயிட்டு, அதன் சாம்பல் வங்கக் கடலில் கரைக்கப்பட்டு விட்டது. 

வீரத்தாலும், தியாகத்தாலும் விடுதலைப்புலிகள் போராடி, சுதந்திரத் தமிழ் ஈழத்தை மீண்டும் கட்டி எழுப்பி, பிரகடனம் செய்யாத ஒரு சுதந்திர அரசாக இயங்கி வந்த நிலையில், 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர், காங்கிரஸ் தலைமை யிலான இந்திய அரசு, சிங்கள அரசோடு கூட்டுச்சதி செய்து, வெல்ல முடியாத புலிகளைத் தோற்கடிக்க, முப்படைகளுக்குத் தேவையான நவீன ஆயுதங் களைத் தந்து, அணு ஆயுத நாடுகளிடம் தளவாடங்கள் வாங்க, ஆயிரக்கணக் கான கோடி பணத்தையும் வழங்கியது. 

இந்தியாவுக் காகவே நாங்கள் யுத்தத்தை நடத்தினோம்; அவர்கள் உதவி யால் தான் புலிகளைத் தோற்கடிக்க முடிந்தது என்று, சிங்கள அதிபர் இராஜபக்சே அறிவித்தார். 

2008-2009 மே 18 வரையிலான காலகட்டத்தில், சிங்கள அரசு நடத்தும் இனக் கொலை யுத்தத்தைத் தடுக்கவும், நிறுத்தவும், தாய்த் தமிழகம் பொங்கி எழுந்தது. கோடிக்கணக்கான தமிழர்கள் வேதனையை வெளிப்படுத்தினர். முத்துக்குமார் உள்ளிட்ட 18 வீரத்தமிழர்கள் தீக்குளித்துத் தங்களை மாய்த்துக் கொண்டனர். 

இனப்படுகொலைக் குற்றத்துக்கு உள்ளான சிங்கள அதிபர் இராஜபக்சேவை யும், அந்த அரசையும், அனைத்து உலக நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை, தாய்த் தமிழகத்தில் ஒங்கி எழுந்தது.
ஐ.நா.வின் மூவர் குழு அறிக்கை, ஈழத்தமிழர் படுகொலையை உலகத்துக்கு வெளிப்படுத்தியது. சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய காட்சிகள், இதயத்தில் இரத்தத்தை உறையச் செய்தது. 

சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றுதான் தீர்வு என்பதை, அண்மைக்காலம் வரை தமிழ் ஈழத்தை எதிர்த்தவர்கள் கூட வாயடங்கி, எதிர்க்க முடியாத உணர்வு அலைகள் பெருகிவிட்ட நிலையில், தமிழகத்தின் இளம் தலைமுறையிடம், குறிப்பாக மாணவர் உலகில், தமிழ் ஈழம் ஒன்றே விடியல் என்பது, தீர்க்கமான முடிவாக ஏற்கப்பட்டு விட்டது. 

இலங்கைத் தீவில், ஈழத்தமிழர் தாயகத்தில் இருந்து, சிங்கள இராணுவமும், போலீசும் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும்; சிங்களக் குடியேற்றங்கள் அடியோடு அகற்றப்பட வேண்டும்; சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக் கெடுப்பை, ஐ.நா. மன்றமும், அனைத்து உலக நாடுகளும் முன்னின்று நடத்த வேண்டும்; அந்தப் பொது வாக்கெடுப்பில், உலகின் பல்வேறு நாடுகளில் வாழு கிற புலம்பெயர் ஈழத்தமிழர்கள் வாக்கு அளிக்க வகை செய்யப்பட வேண்டும் என்ற திட்டவட்டமான கோரிக்கைக்கு, தாய்த் தமிழகத்திலும், அகிலத்தின் பல்வேறு நாடுகளிலும் ஆதரவு வேகமாக இன்று வளர்ந்து வருகிறது. 

ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சிலில், ஜெனீவாவில், ஈழத்தமிழர் களுக்கு நீதிக்கான முடிவு எடுக்கப்படவில்லை என்பதனால், தமிழகத்தில் இலட்சோபலட்சம் மாணவர்கள் அறவழிக் கிளர்ச்சி செய்தனர். வெகுண்டு எழுந்த தமிழகத்தின் உணர்ச்சியை மழுங்கடிக்கவும், ஏமாற்றவும், இந்திய அரசு சிங்கள அரசோடு சேர்ந்து காய்களை நகர்த்துகிறது. 

13 ஆவது சட்டத்திருத்தம் என்பது, திலீபனும், தளபதிகள் பலரும் மடிந்த பின் னர், இந்திய இராணுவம், சிங்களருக்குத் துணையாக ஈழத்தமிழர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்திக் கொண்டு இருந்த காலகட்டத்தில், 1987 நவம்பர் 14 இல்,இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தம் ஆகும். 

தமிழ் ஈழ மக்களுக்கு எந்த அதிகாரமும் இதில் தரப்படவில்லை. மாகாணக் கவுன்சில்களை நிர்வகிக்க, ஆளுநர்களை நியமிக்கவும்; எந்த நேரத்திலும் அவர்களைப் பதவியில் இருந்து நீக்கவும், இத்திருத்தம் இலங்கை அதி பருக்குஅதிகாரம் வழங்கியது. 
 
வடக்கு-கிழக்கு மாகாணங்களில், சட்டம், பொது ஒழுங்கு, தமிழர்கள் வாழும் நிலம் குறித்த அனைத்து அதிகாரங்களும், சிங்கள அதிபருக்குத்தான் உண்டு. அம்மாகாணங்களுக்கு எவ்வித அதிகாரங்களும் தராத, ஒற்றை ஆட்சி முறை தான், சிங்கள அரசின் சட்டம் ஆகும். 13 ஆவது சட்டத் திருத்தத்தை, விடு தலைப்புலிகள் மட்டும் அல்ல, அனைத்துத் தமிழர் அமைப்புகளும் அப்போதே நிராகரித்து விட்டன. இதற்கு இடையில், 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி சொல்லப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்பை எதிர்த்து, இராஜ பக்சே அரசின் பின்னணியில், சிங்கள இனவெறிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன தொடுத்த வழக்கில், இலங்கையின் உச்சநீதிமன்றம், இணைப்பு என்பதே செல்லாது; சட்டவிரோதமானது என, 2006 அக்டோபர் 16 இல், தீர்ப்பு அளித்தது. 

இதனை எதிர்த்து, இந்திய அரசு எதுவும் கூறாமல் வாய்மூடிக் கிடந்தது.கடந்த ஆண்டு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், 13 ஆவது சட்டத்திருத்தம் குறித்து, இலங்கை அதிபரோடு பேசியதாகச் சொன்னதை,சிங்கள அரசு உடனே மறுத்தது.

தலைக்குமேல் தொங்கும் கத்தியாக, சிங்கள அரசின் அடக்குமுறை அச்சுறுத் தும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களை நிர்பந்தப் படுத்தி வருகின்றனர்.

ஈழத்தமிழர்களுக்குத் துளியும் நீதி வழங்காத 13 ஆவது சட்டத்திருத்தத்தை முற்றிலும் நீர்த்துப் போக வைக்கும் நோக்கில், ஒப்புக்குச் சொல்லப்பட்ட ஒன்றிரண்டு சொற்ப அதிகாரங்களைக்கூடப் பறிக்கும் விதத்தில், இச்சட்டத் திருத்தத்தைத் தேர்வுக்குழுவுக்கு சிங்கள அரசு அனுப்புகிறது. 

‘13 ஆவது சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற இலங்கை அரசுக்குத் தெரிவிப் போம்’ என்று, இந்தியப் பிரதமர் தங்களிடம் கூறியதாக, தில்லி சென்று திரும் பிய சம்பந்தன் குழுவினர் கூறியதை மறுத்து, அப்படி எதுவும் இந்திய அரசு எங்களுக்குச் சொல்லவில்லை என்று, அதிபர் இராஜபக்சே அறிவித்தான். 

ஈழத்தமிழர்களின் குருதி படிந்த மயானபீடத்தில், காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை, நவம்பர் 17, 18 தேதிகளில், இலங்கையில் நடத்த இருக்கும் செயல், மாபாதகக் கொடுமை ஆகும். அப்படி நடந்தால், அதன்பின் இரண்டு ஆண்டு களுக்கு, கொலைகாரச் சிங்கள அதிபரே காமன்வெல்த் அமைப்புக்குத் தலைமை வகிப்பார். 

உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவவும், காமன்வெல்த் நாடுகளில் சிங்கள அரசு மீதான குற்றங்களை மறைக்கவும், முன்னோட்ட ஏமாற்று வேலையாக, 13 ஆம் சட்டத் திருத்தத்தைப் பற்றி, ஒரு கருத்தாடலை, விவாதத்தை முன்வைக்கும் மோசடி வேலையில், இந்திய-இலங்கை அரசுகள் ஈடுபட்டு உள்ளன.

இனப்படுகொலையின் கூட்டுக் குற்றவாளிகள், ஜூலை 4 ஆம் தேதி தில்லி யில் சந்திக்கிறார்கள் என்பதைத்தான், தாய்த்தமிழகத்து மக்களும், தரணிவாழ் தமிழர்களும் நினைவில் கொள்ள வேண்டும். 

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் வேறொன்றை ஏற்பாரோ? என்றான் கவிஞன் பாரதி. 

சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றுதான், ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வும், மருந்தும் ஆகும். இலட்சக்கணக்கான தமிழர்கள், இரத்தம் சிந்தியதும், உயிர்களைத் தந்ததும், சுதந்திர விடியலுக்காகவே என உறுதி கொள்வோம்!

‘தாயகம்’                                                                                                  வைகோ
சென்னை - 8                                                                               பொதுச்செயலாளர்
03.07.2013                                                                                       மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment