Wednesday, July 10, 2013

சீனம் சிவந்தது ஏன்? - 3

1947 ஆகஸ்டு 15 இந்தியா விடுதலை பெற்றபோது, ஆங்கிலேயர்கள் தங்கள்
கட்டுப்பாட்டிலிருந்த இந்தியப் பகுதிகளின் வரைபடத்தைச் சுதந்திர அரசிடம் அளித்துச் சென்றனர்.இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் சார்பில் கடைசி கையொப்பமிட்ட மவுன்ட்பேட்டன் பிரிட்டனுக்கு அனுப்பிய அறிக்கையில் இணைக்கப் பட்டிருந்த இந்திய வரைபடத்தில் மக்மகான் எல்லைக் கோடு இந்தியாவின் எல்லையாகக் குறிக்கப் பட்டிருந்தது.மேற்கே அக்சாய்சின், கிழக்கே மக்மகான் கோடு - இவைதான் பிரிட்டிஷ் இந்தியா 1947-இல் உரு வாக்கி வைத்திருந்த இந்திய எல்லைகளாகும்.

இன்றைய மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் என்பதை வடகிழக்கு எல்லை
நிலப்பரப்பு (North East Frontier Area -NEFA) என்று ஆங்கிலேயர்கள் அதிகார பூர்வ மாக அழைத்து வந்தனர். இது போன்று வடமேற்கு எல்லை மாகாணம் (North West Frontier Province)  என்று மேற்கில் வடகோடி பிரதேசத்தை அழைத்தனர். ஒன்று ‘மாகாணம்’, மற்றொன்று ‘நிலப்பரப்பு’ என்று வேறுபடுத்திப் பார்க்கப் பட்டு இருந்தன.
ஏனெனில், வடமேற்கில் அமைக்கப் பட்டிருந்ததைப் போல வடகிழக்கில் பிரிட் டீஷ் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வில்லை. பிரிட்டீஷ் இராணுவமும் நுழைந் தது இல்லை. ஆகவே, வடகிழக்கு எல்லை நிலப்பரப்பை நிர்வாகம் இல்லாத பகுதி யாகவே ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதைக் கண்காணித்து வர (North Eastern Frontier Agency) ஒரு ஆணையத்தையும் அமைத்து
இருந்தனர். 1947 விடுதலைக்குப் பின்னர் சுதந்திர இந்தியா, இங்கு தனது நிர்வாக அமைப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியது.

பிரதமர் நேரு உத்தரவு

பிரதமர் நேரு வடகிழக்கு எல்லை ஏஜென்சி மூலம் இந்திய நிர்வாக அமைப்பு களை மக்மகான் கோட்டிற்குத் தெற்கே வாழும் பழங்குடி மக்களிடையே
உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என ஆணை பிறப்பித்தார். உள்துறை அமைச்சர் வல்லபபாய் படேல் 1949-இல் இதை விரைந்து செயற்படுத்திக் காட்டினார். ஒரே ஆண்டில் ‘நெபா’ (NEFA) பகுதியில் இருபது நிர்வாக நிலை யங்கள் அமைக்கப்பட்டன. 1951 பிப்ரவரி 12-ஆம் தேதி மேஜர் ஆர். கடாங் தலைமையிலான இந்திய இராணுவம், டவாங் நகரைக் கைப்பற்றி அங்கிருந்த திபெத் நிர்வாகத்தை முழுமையாக அகற்றியது. இந்திய நிலப்பகுதி என்பதால் சீனாவின் திபெத் நிர்வாகம் வெளியேற்றப்பட்டது. இந்த நடவடிக்கை பற்றி சீனா எதையும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

சீன அரசின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மிகவும் வெளிப்படைத் தன்மை இன்றியே காணப்பட்டது. 1950 நவம்பர் 20-இல் பிரதமர் நேரு, நாடாளுமன்றத் தில் பிரிட்டீஷ் இந்தியாவின் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு மக்ம கான் கோடுதான் இந்தியாவின் எல்லை, இதை எவரும் மீறுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று பிரகடனம் செய்தார்.அப்போதும் சீனா அமைதி யாகவே இருந்தது.

1951 செப்டம்பரில் சீனப் பிரதமர் சூ என் லாய் இந்தியத் தூதரிடம் மக்மகான்
எல்லைக் கோட்டிற்கு எவ்வித ஆட்சேபனையையும் எழுப்பவில்லை. 1952 ஜூலையில் திபெத்துடன் வர்த்தகம் மற்றும் இதர தொடர்புகள் குறித்து இந்தி யாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய சீனா மக்மகான் கோடு குறித்து பேசவே இல்லை.

1954-இல் இந்தியப் பிரதமர் நேரு, சீனா சென்றிருந்த போதுகூட சீன அரசாங்கம்
இந்தோ-சீனா எல்லைப் பிரச்சினைகளை எழுப்பவில்லை. அதைப் போன்றே சீனப் பிரதமர் சூ என் லாய், 1954 ஜூனில் இந்தியாவுக்கு வந்தபோதும் எல்லைப் பிரச்சினை பற்றிய பேச்சே எழவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

1956-இல் சீனப் பிரதமர் சூ என் லாய் இந்தியாவுக்கு மீண்டும் வருகை தந்த போது, இந்திய மக்கள் பலமான வரவேற்பு அளித்தனர். “ஹிந்து-சீனி பாய்-பாய்”, இந்தியர்களும் - சீனர்களும் சகோதரர்கள் என்று முழக்கமிட்டு இந்திய மக்கள் கொடுத்த வரவேற்பைக் கண்டு சூ என் லாய் அகமகிழ்ந்தார்.அப்போது பண்டித நேருவுடன் நடத்திய பேச்சு வார்த்தையின்போது மக்மகான் எல்லைக் கோடு அடிப்படையில் எல்லைப் பிரச்சினையில் சீனா தீர்வு காணத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

மெளனமும் ஆக்கிரமிப்பும்

இந்தியா விடுதலை கண்ட ஆண்டில் இருந்து எல்லைப் பிரச்சினையில் மெள னம் சாதித்த சீனா இந்தியப் பகுதி அக்சாய்சின்னில் நெடுஞ்சாலை ஒன்றை அமைத்து ஆக்கிரமிப்பில் இறங்கியது. 1958 டிசம்பரில் பிரதமர் நேரு, சீனப் பிரதமர் சூ என் லாய்க்கு இந்த ஆக்கிரமிப்பு பற்றி எழுதிய கடிதத்தில் 1956-இல் சூ என் லாய் டெல்லி வந்திருந்தபோது ‘இரு நாடுகளுக்குமிடையில் எல்லைத்
தகராறு கிடையாது’ என்றே புரிந்து கொள்ளப்பட்டது என்பதைச் சுட்டிக் காட்டி னார்.

ஆனால், கள்ள மெளனம் சாதித்த சீனா,அக்சாய்சின் பகுதியில் இராணுவத் தைக் குவித்தது. எல்லைப் பிரச்சினை சூடு பிடித்த காலகட்டத்தில் சீனப் பிரதமர் சூ என் லாய்க்கு 1959 மார்ச் 22, ஆகஸ்டு 28 மற்றும் 31. செப்டம்பர் 4, 10, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக எழுதிய கடிதங்களில் அக்சாய் சின் நிலப்பரப்பு தாவாவில் உள்ளது என்பதைத் தெளிவு படுத்தினார்.

மேலும் 1959 செப்டம்பர் 26-ஆம் தேதி எழுதிய கடிதத்தில், மிக உறுதியான நிலைப் பாட்டைச் சீனப் பிரதமருக்குச் சுட்டிக் காட்டினார். “தனது நாட்டின்
பிரிக்க முடியாத பகுதியாக உள்ள - இவ்வளவு பெரும் நிலப்பரப்புகளின் எதிர் காலத்தைப் பற்றி எந்த அரசும் விவாதத்தில் ஈடுபட முடியாது.இந்தியாவின் பாரம்பரியமான எல்லைக்குள் உள்ள சீன இராணுவ நிலையங்கள் முதலில் காலி செய்யப்பட்டு, பயமுறுத்தல்கள் நிறுத்தப் பட்டால் ஒழிய விவாதிப்பது பயன் தராது” என்பதைத் திட்டவட்டமாகப் பிரதமர் நேரு தெரிவித்தார்.

சீன வரைபடம்

பிரதமர் நேருவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீனா அக்சாய்சின் சாலை அமைத் தது மட்டுமின்றி தனது மிகப் பெரும் சாதனை என்றும் தம்பட்டம் அடித்தது. 1958 ஜூலையில் ‘சைனா பிக்டோரியல்’ என்னும் ஏட்டில்அக்சாய்சின்னை உள்ளடக்கிய வரை படத்தையும் வெளியிட்டது.உடனடியாக இந்தியா 1958 ஆகஸ்டில் பெய்ஜிங்குக்குப் புகார் குறிப்பு ஒன்றை அனுப்பியது.சீன வரைபடத் தில் சர்வதேச எல்லைக்கோடு பற்றி ஆட்சேபனை எழுப்பபப்பட்டது.

ஆனால், இதற்கு சீனப் பிரதமர் சூ என் லாய் நேருவுக்கு எழுதிய கடிதத்தில்
“சீன வரைபடங்கள் முன்பு ஆட்சியில் இருந்த சியாங்கே ஷேக் காலத்தில்
வெளியிடப்பட்டவை. இப்படி காட்டப் பட்ட எல்லைகளைத் தன்னிச்சையாக
நாங்கள் மாற்றுவது சரியாக இருக்காது. ஆய்வு செய்து நில அளவையையும்
முடித்து சம்பந்தப்பட்ட நாடுகளுடன் கலந்தாலோசனை செய்யும் வரை காத் திருக்க வேண்டியதுதான்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதில் எழுதிய பிரதமர் நேரு,“சீனாவின் வரைபடங்களில் காட்டப் பட் டுள்ள இந்தியாவின் பரவலான நிலப்பரப்பு இந்தியாவின் பகுதிகள்.இதுபற்றி எந்தச் சர்ச்சைக்கும் இடமில்லை” என்று தெரிவித்தார்.

இதற்கு சூ என் லாய், 1959 ஜனவரியில் மீண்டும் இந்தியப் பிரதமர் நேருவுக்குப்
பதில் எழுதினார். அதில், “இந்திய-சீன எல்லை அதிகாரப்பூர்வமாகப் பிரிக்கப் பட வில்லை. இதற்கான எந்த உடன்படிக்கையும் கிடையாது. எல்லைத் தாவா
இருக்கின்றதால் வரைபடங்கள் வேறுபாடுகள் தவிர்க்க இயலாது.அக்சாய்சின் எப்பொழுதுமே சீனாவின் எல்லைக்குள்தான் இருந்து வந்துள்ளது” என்று குறிப் பிட்டுவிட்டு மேலும், “இரு நாடுகளும் எல்லைப் பிரதேசங்களின் அவரவர்கள் நிர்வாக நிலையங்களில் தற்காலிகமாக இருந்து கொண்டு அதைவிட்டு தாண் டிச் செல்லாமல் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவெடுக்கலாம்” என்று யோசனை கூறினார்.

ஆனால், பிரதமர் நேரு இதற்கு இணங்கவில்லை. ஏனெனில்‘சூ’வின்க ருத்தை ஏற்றால் சீனா ‘ஆக்கிரமித்து’ கைப்பற்றியுள்ள நிலப்பகுதிகளுக்கு ஒப்புதல் அளிப்பதாக ஆகிவிடும்.மேலும், இதுவே சட்டபூர்வமான தாக்கப்படும் என்று நேரு கருதினார்.

எனவே, 1959 செப்டம்பர் 29-இல் நேரு சீனப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,
“பாரம்பரிய எல்லையின் இந்தியப் பகுதியில் இப்பொழுது சீனா அமைத்து
இருக்கின்ற நிலையங்களை முதலில் காலி செய்யாதவரை இரு அரசாங்கங்
களிடையே பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருக்காது” என்பதைத் திட்ட வட்டமாகச் சுட்டிக் காட்டினார்.

திபெத் பிரச்சினை

எல்லைப் பிரச்சினையில் இந்திய-சீனப் பிரதமர்களுக்கிடையே கடிதப் பரி மாற்றத்திலேயே மோதல் வளர்ந்து கொண்டு இருந்தபோது,திபெத் மதத் தலை வர் தலாய் லாமாவுக்கு இந்தியா புகலிடம் கொடுத்தது சிக்கல் இன்னும் தீவிர மடைவதற்கு ஒரு காரணமாயிற்று.

சீன தேசம் தனது கட்டுப்பாட்டில்‘திபெத்’ நாட்டை வைத்து இருந்தாலும், தங் கள் மதம், பண்பாட்டு அடையாளங்கள், மொழி அடிப்படையில் திபெத்தியர்கள் இறையாண்மை உள்ள நாடாகவே தங்கள் நாட்டைக் கருதி வந்தனர். திபெத் சில காலகட்டங்களில் சீனப் பேரரசுக்குக் கப்பம் கட்டும் முறையுடனும், சில கால கட்டங்களில் தன்னாட்சி உரிமை கொண்ட நாடாகவும், மற்றும் சில காலம் சீன மத்திய ஆட்சியின் நேரடி நிர்வாகத்திலும் இருந்து வந்திருக்கிறது.
ஆயினும் திபெத்திற்கு வரலாறு, கலாச்சாரம், மதபீட ஆட்சி, நிர்வாகம் ஆகிய அம்சங்களில் ஒரு தனித்த அடையாளம் இருந்து வந்துள்ளது.

தலாய் லாமா என்பது அரசியல்-மத ஆளுமை பெற்ற ஒரு பட்டமாகும். 16-ஆம் நூற்றாண்டில்தான் திபெத்தியர்கள் இதை ஏற்படுத்தினர். ‘தலாய்’ என்றால் குரு. இந்தப் பட்டத்தை அங்கீகரித்து முதன்முதலில் 1578-இல் மங்கோலிய சீன மாமன்னன் ‘ஸோனம் கியோட்சோ’ என்பவருக்கு அளித்ததாகவும் அவரே
முதல் தலாய் லாமா என்றும் வரலாறு கூறுகிறது. வழிவழியாக ‘தலாய்லாமா’ தான் திபெத்தின் மதத் தலைவராகவும் ஆட்சித் தலைவராகவும் இருந்து, மக்களை வழிநடத்தி வந்துள்ளனர். திபெத் தலைநகரம் ‘லாசா’வில் உள்ள போட்லா மாளிகைதான் தலாய் லாமாவின் தலைமையகமாகச் செயற்பட்டது.

மங்கோலிய மன்னர் 1239-இல் கோகனூக் பிராந்தியத்தைத் தனது கட்டுப் பாட் டில் கொண்டு வந்த பிறகு 1244-இல் திபெத் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி தனது பேரரசில் ஒரு பகுதியாக திபெத்தை இணைத்துக் கொண்டார். அதன் பிறகுதான் 16-ஆம் நூற்றாண்டிலிருந்து தலாய் லாமாக்கள் சீனாவின் மேலாண் மையை ஏற்றுக் கொண்டு திபெத்தை ஆட்சி புரியும் அதிகாரம் பெற் றிருந்தனர்.

சீன சக்கரவர்த்திக்குக் கட்டுப்பட்டு தலாய் லாமா திபெத் ஆட்சிப் பீடத்தில்
இருந்தது 17-ஆம் நூற்றாண்டிலும் நீடித்தது. 18-ஆம் நூற்றாண்டில் (1700-10) சீனாவின் மஞ்சு பேரரசு மாமன்னன் ஓர் ஆணையரை நியமனம் செய்து திபெத் ஆட்சி நிர்வாகத்தை - மேற்பார்வை பொறுப்புகளை ஒப்படைத்தார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது திபெத் மீது எப்போதும் ஒரு
கண் வைத்திருந்தனர். திபெத்தைத் தமது பிரிட்டீஷ் பேரரசின்கீழ் கொண்டு வர அவ்வப்போது முயற்சித்தனர். 1904- ஆம் ஆண்டில் கர்னல் யங்ஹஸ்பண்ட்
என்பவர் தலைமையில் பிரிட்டன் படைப்பிரிவு திபெத்திற்குள் நுழைந்து லாசா வில் நிர்வாகப் படைப்பிரிவு அலுவலகம் ஒன்றை அமைத்தனர்.

இதனை எதிர்த்து திபெத் மக்கள் போராடியபோது ஐயாயிரம் திபெத் தியர்கள் பிரிட்டீஷ் இராணுவத்தால் கொல்லப்பட்டனர். 1906-இல் ஆங்கிலோ-சீனா ஒப்பந்தம் ஏற்பட்டது.1910-லிருந்து திபெத் மீண்டும் சீன நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவரப் பட்டது. அப்போது திபெத் 13-ஆவது தலாய் லாமா பிரிட்டீஷ் பாதுகாப்பில் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறுகின்றவரை இதேநிலைதான்
அவ்வப்போது தொடர்ந்தது. 1949 அக்டோபர் முதல்நாள் மாவோ தலைமையில் மக்கள் சீன ஜனநாயகக் குடியரசு ஆட்சி அமைந்தவுடன் சீன மக்கள் விடுதலை இராணுவம் திபெத்திற்கு அனுப்பப்பட்டது.அதிலிருந்து சீனாவின் மேலாதிக்கத் தில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்கான போராட்டங்கள் திபெத்தில் தலை தூக்கின.

தலாய் லாமாவுக்கு அடைக்கலம்

சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐ.நா.மன்றத்தில் 1950 நவம்பர் 23-இல்திபெத் சார்பில் முறையீடு செய்த பொழுது, இந்தியா இதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று எதிர்த்தது. ஏனெனில் திபெத் சுதந்திர நாடல்ல. ஐ.நா. உறுப்பு நாடும் அல்ல.இது சீனாவின் உள் விவகாரம் என்று இந்தியாவின் சார் பில் திட்டவட்டமாக தெளிவுபடுத்தப்பட்டது. பிரதமர் நேருவைப் பொறுத்த வரை அவர் இதில் உறுதியாக இருந்தார்.

அந்த நேரம் 1959 மார்ச்சில் சீனப் படைகளுடன் திபெத்தில் மோதல் ஏற்பட்ட போது, தலாய் லாமா இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வந்தபோது, பண்டித நேரு அவருக்குத் தஞ்சமளித்தார். இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் திபெத் எல்லையை ஒட்டிய இமயமலைப் பகுதியில், தர்மசலாவில் தலாய் லாமா வுக்கு அனைத்து வசதி களையும் இந்தியா செய்து கொடுத்தது.

ஆனால், திபெத்தியர்கள் சீனாவுக்கு எதிரான எந்த அரசியல் செயல்பாடு களி லும் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரதமர் நேரு பிரகடனம் செய்தார். ‘பெளத்தம்’ பிறந்த இந்திய தேசம் மனிதாபிமான அடிப்படையில் தான் புத்தரைப் பின்பற்றிய தலாய் லாமாவுக்கு அடைக்கலம் தந்து ஆதரித்தது. ஆனால், சீனா இதற்கு அரசியல் காரணங்களை முன்வைத்து, இந்தியா மீது எரிச்சல் கொண்டது.

முதல் மோதல்

இந்நிலையில்தான் 1959 ஆகஸ்டு 25-இல் எல்லைப் பகுதியில் ரோந்துப் பணி யில் ஈடுபட்டிருந்த இந்தியப் படையினர் மீது ‘லாங்ஜீ’ என்ற இடத்தில் சீன இராணுவம் தாக்குதல் தொடுத்தது. இதுதான் இந்திய - சீனப் படைகளுக்கிடை யே ஏற்பட்ட முதல் மோதல் ஆகும்.

பின்னர் அக்டோபர் 21-இல் தெற்கு லடாக்கில் கோங்கா கணவாயில் ரோந்து
சுற்றிய இந்தியப் படையினர் மீது சீனப் படைகள் தாக்குதல் நடத்தியதில் 9
இந்திய இராணுவத்தினர் பலியானார்கள்.10 பேர் கைது செய்யப்பட்டனர். மக் மகான் எல்லைக் கோட்டுக்கு சற்று வடக்கே இருந்த ‘லாங்ஜீ’ சீனாவின் ஆக் கிரமிப்புக்கு உள்ளானது.

சீன நடவடிக்கைகளால் மிகவும் கவலையுற்றிருந்த பிரதமர் நேருவிடம், சூ என் லாய் தொடர்பு கொண்டு பேசினார். “கிழக்கே மக்மகான் கோட்டையும், மேற்கே அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையும் இணைத்து அதை இரு நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடாக ஏற்று, (Line of Actual Control - LOAC) அந்தக் கோட்டிலிருந்து 20 கி.மீ. இருபுறமும் தள்ளி படைகளை நிறுத்திக் கொள்ளலாம்” என்று சூ கூறினார்.

அதாவது சீனா மக்மகான் கோட்டை சர்வதேச எல்லைக்கோடாக அல்லாமல்
வெறும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடாக மட்டுமே கருதுகிறது என்பது இதன் பொருள்.

இதற்குப் பின்னர் 1960 ஏப்ரலில் சீனப் பிரதமர் சூ என் லாய் இந்தியாவுக்கு வந் தார். அப்போதும் பண்டித நேரு, சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து முதலில் படைகள் வெளியேற வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார். சூ என் லாய் தோல்வியுடன் திரும்பினார். சீன அரசு மீண்டும் ஜூலையில் தூதுவர் பான் துஸ்லி என்பாரை டெல்லிக்கு அனுப்பி நேருவுடன் பேச்சுவார்த்தை... இந்தியா தயாரா? என்று கேட்டது.

1960 ஜூலை 12-இல் நடைபெற்ற அமைச்சரவைப் பாதுகாப்புத் துணைக் குழுக் கூட்டத்தில் பான் தன்னைச் சந்தித்து, சீன - இந்தியப் பேச்சு வார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை விளக்கிய பண்டித நேரு, சீனாவின் கோரிக்கையை நிராகரித்தது பற்றியும் தெரிவித்தார்.

ஏனெனில் சீனர்கள் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் எல்லையில் மேலும்
முன்னேறுவதில் மும்முரமாக இருக்கிறார்கள். முதலில் படைகளை நமது பகுதியிலிருந்து சீனா விலக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகே பேச்சு வார்த்தை என்பதில் உறுதியாக இருந்தார் நேரு.

சீனப் படைகள் முன்னேற்றம்

பிரதமர் நேரு எதிர்பார்த்தபடியே சீனா ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்து வதற் குத் தயார் என்று கூறிக் கொண்டே, படைகளை நகர்த்திக் கொண்டே முன் னேறி வந்தது. 1961 செப்டம்பர் 8- ஆம் தேதி சீனப் படை மக்மகான் எல்லைக் கோட்டுக்கு மூன்று கிலோ மீட்டர் வடக்கே ‘தோலா’ எனும் இடத்தில் இருந்த இந்தியப் புறக்காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியது.

தோலா புறக்காவல் நிலையத்தை இந்தியா அமைத்த போதிலிருந்து சீன இராணுவம் சிறு சிறு பூசல்களை உருவாக்கிக் கொண்டே இருந்தது.அதுவரை தற்காப்புக்காக மட்டுமே எதிர்த் தாக்குதல் தொடுக்கலாம் என்ற நிலையில் இருந்த இந்தியப் படைகள் இனி சீனப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்க முதலாவது தாக்குதலைத் தொடுக்கலாம் என்று அறிவித்தது.

எல்லையில் சூடான நிலை உருவாகிக் கொண்டிருந்தபோது 1962 அக்டோபர்
3-ஆம் தேதி சூ என் லாய் மீண்டும் புதுடெல்லி வருகை தந்தார். நேருவிடம்
அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு, எல்லையில் போர் மூளாது என்று
கூறிவிட்டுச் சென்றார்.

1962 அக்டோபர் 6-இல் சீனாவின் தலைவர் மாவோ, இராணுவ உயர் அதிகாரி களுடன் எல்லையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித் தார். அப்போது அந்தக் கூட்டத்தில் பேசிய மாவோ, “ஆயுதம் ஏந்திய சகவாழ்வு நடைமுறை சாத்திய மல்ல என்று எனக்குத் தோன்றுகிறது.போர் நடத்த வேண்டியதுதான்” என்று கூறினார். இதனை சீனாவின் வெளிநாட்டுக் கொள் கைகளில் ஆய்வு மேற்கொண்ட பேராசியர் ஜான் டபுள்யூ.கார்வெர் பதிவு செய்துள்ளார். மேலும், பண்டித ஜவகர்லால் நேரு குறித்து மிகக் கடுமையாக மாவோ பேசியதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

“நேருவை அடித்து இழுத்து பேச்சு வார்த்தை மேஜைக்கு வரவழைக்க வேண் டும்” (Knock Nehru to the negotiating table)

மிகப் பெரிய புரட்சியாளர் மா சே துங் (மாவோ) இந்தியா மீது இவ்வளவு வன் மம் கொண்டிருந்தார் எனில் சீனா எந்த அளவுக்குப் போருக்குச் செல்வதில்
ஆயத்தமாக இருந்திருக்கிறது என்பதை உணரலாம்.

இதற்கிடையில் தோலா புறக்காவல் நிலையத்தை மீட்க இந்தியப் படைகள்
முயற்சி செய்து கொண்டே இருந்தன. அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.
1962 அக்டோபர் 10-இல் யும்த்சோ லாவில் ஏற்பட்ட மோதலில் இந்தியப் படை யினருக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது.

எல்லையில் என்ன நடக்கிறது என்று நேருவின் அரசாங்கம் நிதானிப்பதற்குள்
சீன இராணுவம் எல்லையில் பெருமளவில் குவிக்கப்பட்டு விட்டது.1962 அக்டோபர் 18-ஆம் தேதிதான் இமயத்தின் எல்லை முகட்டில் போர் மேகங்கள் சூழ்ந்து கொண்டதை இந்தியா உணர்ந்தது.

இதற்குள் கிழக்கே அருணாச்சலப் பிரதேசத்திலும், மேற்கே அக்சாய் சின்னி லும் சீனப் படைகள் முன்னேறின.இந்திய இராணுவம் பதிலடித் தாக்குதலைத் தொடுத்தது. 1962 அப்டோபர் 20-ஆம் தேதி மக்மகான் எல்லைக் கோட்டில் முழு அளவிலான போர் வெடித்தது. சீனாவின் அசல் முகம் என்ன என்று உலகம் தெரிந்து கொண்டது.

இந்திய - சீனப் போரின் விளைவுகள், இந்தியாவுக்கு ஏற்பட்ட பின்னடைவு,
நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு சீனாவின் துரோகம் பற்றி எடுத்து உரைத் தவை, சீனப் போரின்போது பேரறிஞர் அண்ணா, நேருவின் கரத்தை வலுப்ப டுத்துவோம் என்று முழக்க மிட்டது போன்ற வரலாற்றுத் தகவல் களுடன் மேலும் தொடருவோம்.

(தொடரும்)

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

நன்றிகள்

கட்டுரையாளர் :- ஈழ வாளேந்தி

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment