Sunday, July 14, 2013

என்று அணையும் இந்த சா ‘தீ’?

சங்கொலி தலையங்கம்

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” - பிறப்பினால் ஏற்றத்தாழ்வு இல்லை என்று குறள் பேசும் மண்ணில்,

“சாதியிலே மதங்களிலே; சாத்திரம் சந்தடிகளிலே
கோத்திரச் சண்டையிலே; ஆதியிலே அபிமானிந்து அலைகின்ற உலகீர்!
அலைந்து அலைந்து வீணே நீர்
அழிதல் அழகலவே”

என்று வள்ளல் பெருமான் அருளிய அருட்பா பாடும் மண்ணில்,


“சாதி இரண்டொழிய வேறு இல்லை” என்று ஒளவையின் மூதுரை ஒலித்த
மண்ணில்,

“சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்த்தி சொல்லல் பாவம்”
என்று பாரதி பாடி பரவிய மண்ணில்,

“சாதி மத பேதங்கள் மூட வழக்கங்கள்
தாங்கி நடைபெற்றுவரும் சண்டை உலகு இதனை
ஊதையினில் துரும்புபோல அலைக்கழிப்போம்”

என்று பாவேந்தர் சூளுரைத்த மண்ணில்,

சாதியற்ற தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்கிட காலமெல்லாம் போராடிய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா உலவிய மண்ணில்,

சாதியின் பேரால் சண்டைகள்; வன்முறை; கலவரம்; உயிர்ப்பலிகள் என தமிழ் நாடு போய்க் கொண்டிருக்கும் போக்கு வேதனை தருகிறது; வருங்காலத்
தமிழகத்தை எண்ணி துயரம் அலைமோதுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் நடந்த சாதி மறுப்பு திருமணம் மூலம் இளவரசன்- திவ்யா நாடறிந்த தம்பதி ஆயினர். காதல் மணம் கொண்டு ஓராண்டு கூட
முடியாத நிலையில், ஜூலை 4 ஆம் தேதி இளவரசன் மரணம் அடைந்தது
தமிழகத்தில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

2012, அக்டோபர் 14 ஆம் நாள் இளவரசன் - திவ்யா காதல் திருமணம் செய்து
கொண்டனர். இருவரும் இருவேறு சமூகம் என்பதால் இந்த கலப்புத்திருமணத் திற்கு திவ்யா உறவினர்களும் அவர் சார்ந்த சமூகத்தினரும் கடும் எதிர்ப்புதெரி வித்தனர். அவர்களை ஏற்க மறுத்தனர். உயிருக்கு அஞ்சிய காதல் இணை யர், சேலம் சரக காவல்துறை தலைவர் சஞ்சய்குமாரிடம் தஞ்சம் அடைந்தார்கள். அவர் விசாரணைக்காக இளவரசன் - திவ்யா தம்பதியை தருமபுரி மாவட்டக் கண்காணிப்பாளர் அஸ்ராகார்க்கிடம் அனுப்பிவைத்தார்.அவர் இரு குடும்பத் தாரையும் அழைத்துப் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார்.

தருமபுரி மாவட்டம், திருப்புத்தூர் தருமபுரி நெடுஞ்சாலையில் நாயக்கன் கொட்டாய் அருகே உள்ள நத்தம் என்ற ஊரைச் சேர்ந்தவர் இளவரசன்; நத்தத் திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செல்லங்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யா. திருமணம் செய்து கொண்ட இருவரும் இள வரசன் வீட்டில் தங்கி இருந்தனர். திவ்யாவின் உறவினர்கள் அங்கு சென்று அவரை தங்களுடன் வந்துவிடுமாறு அழைத்தபோது அவர் போக மறுத்து விட் டார். செல்லங்கொட்டாய் கிராமத்தில் திவ்யாவின் தந்தை நாகராஜனுக்கு ஏற்படுத்தப்பட்ட சமூக அவமானங்களாலும், அவர் தாழ்த்தப்பட்டோர் சம்பந்தி என்று கேலி, கிண்டல் ஏற்படுத்திய மன உளைச்சலாலும், 2012, நவம்பர் 7 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு பின்னர் திவ்யாவின் சமூகத்தினர் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து,
நத்தம் கிராமத்தை சூறையாடினர். இளவரசன் வீட்டின் முன்பு திவ்யாவின்
தந்தை நாகராஜனின் சடலத்தை வைத்துவிட்டு, பூட்டியிருந்த இளவரசன்
வீட்டின் கதவை உடைத்துப் பொருட்களை அடித்து நொறுக்கித் தீ வைத்து
நாசம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நத்தம், அண்ணாநகர்,கொண்டம்பட்டி ஆகிய ஊர்களில் இருந்த இளவரசன் சமூகத்தை சேர்ந்த தலித் குடியிருப்புகள் வன்முறை கும்பலால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.சுமார் 268 வீடுகள் முற் றாக நாசம் அடைந்தன. அவ்வீடுகளில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக் கப்பட்டன. பிறந்த மண்ணில் தலித் மக்கள் அகதிகள் ஆக்கப்பட்டனர்.

இளவரசன் - திவ்யா, ‘சாதி மறுப்பு - சாதி கலப்பு’ திருமணம் செய்து கொண்ட தால், இத்தகைய வன்முறை வெறி ஆட்டத்திற்கு தலித் சமூகம் உள்ளானது.

அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டதே தவிர நாட்டு மக்களின் உள் ளத்தில் இன்னும் வேற்றுமையும், சாதி வெறியும் நீங்கியபாடில்லை. தமிழ் நாட்டில் தலித் மக்கள் மீதான வன்முறை வரலாறு கீழ்வெண்மணி, கொடியங் குளம், மீனாட்சிபுரம், வாச்சாத்தி, தாமிரபரணி, மேலவளவு, திண்ணியம், நாட் டார் மங்கலம், விழுப்புரம், பரமக்குடி, தருமபுரி, கடலூர், மரக்காணம் என்று முற்றுபெறாமல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது.

தீண்டாமை கொடுமையை அறவே ஒழிப்பதற்கு கொண்டுவரப்பட்ட  வன் கொடுமை சட்டத்தையே ‘சிலர்’ நீக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இளவரசன் - திவ்யா திருமணத்தை ஒரு அடையாளமாக காட்டி, தலித் மக்க ளுக்கு எதிரான பிற சமூகத்தினரை ஒன்றுதிரட்டவும் ‘சிலர்’ முயற்சித்து வருகின்றனர்.

திவ்யா கடத்தப்பட்டதாக 2012, நவம்பர் 24 இல் தருமபுரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தபோது, இளவரசனுடன் விரும்பியே வந்தேன்; கடத்தப் பட வில்லை” என்று திவ்யா வாக்குமூலம் தந்தார்.

பின்னர், காதல் மணம் புரிந்து வாழ்ந்துவந்த திவ்யாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று ஆட்கொணர்வு மனுவை,திவ்யாவின் தாயார் தாக்கல் செய்தார். மார்ச் 27 இல் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான திவ்யா; “நான் இளவரச னுடன் வாழவே விரும்புகிறேன்” என்று கூறினார்.

இதற்கு பிறகு ஜூன் 4 இல் திவ்யாவின் தாய்க்கு உடல்நலமில்லை என்று அவரை வரவழைக்கிறார்கள். ஜூன் 6 இல் உயர்நீதிமன்றத்தில், தனது தாயா ரின் உடல்நலனை கருத்தில் கொண்டும், தந்தை மறைவால் ஏற்பட்ட துயரம் சூழ்ந்துள்ளதாலும் தனது தாய் வீட்டுக்கு செல்வதாக திவ்யா கூறிச்சென்றார்.

மீண்டும் ஜூலை 1 இல் வழக்கு விசாரணைக்காக உயர்நீதிமன்றம் வந்த திவ்யா, அம்மா விரும்பினால் இளவரசனுடன் சேர்ந்து வாழ்வேன் என்று கூறி னார். ஆனால், ஜூலை 3 ஆம் தேதி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டபோது, நீதிபதி களிடம் திவ்யா கூறியது என்ன என்பது பற்றி வழக்கறிஞர்கள் கூறும்போது, “எனக்கு அப்பாவின் மரணம், அதன்பின் ஏற்பட்ட கலவரங்கள் மறக்க முடியாத சம்பவங்களாக உள்ளது. அம்மாவையும் தம்பியையும் இழந்து விடுவேனோ என்று பயமாக உள்ளது. என் காதல் திருமணத்தை அம்மா ஒரு வேளை ஏற்றுக் கொண்டால் சேரலாம். அப்படி ஒருபோதும் நடக்கப் போவதில்லை. இனி இளவரசனுடன் சேர்ந்து வாழ முடியாது” என்று திவ்யா சொன்னார் என்று தெரிவித்தனர்.

திவ்யா ஜூலை 3 இல் இப்படிக் கூறியதாக தகவல் வந்தபிறகு இளவரசன்,
“இப்படி சொன்ன பிறகு என்ன செய்வது? அம்மா கூட ஒரு வருடம் இருக்கட் டும். நான் விட்டுப்போன படிப்பை முடிக்கிறேன். வேலைக்கு போகிறேன். அப் புறம் எத்தனை நாள்தான் அடஞ்சு கிடக்க முடியும்? நிச்சயமா மீண்டும் நாங்க சேருவோம். அவங்க அம்மாவுக்கும் மனசாட்சி இருக்கும் இல்லையா? மீண் டும் நாங்கள் ஒன்று சேருவோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்வளவு எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த இளவரசன் மறுநாள்
ஜூலை 4 இல், உயிரற்ற சடலமாக இரயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில்
கிடந்து இருக்கிறார். இளவரசன் மரணம் குறித்து விசாரணை நடத்திட தமிழக
அரசு நீதிபதி சிங்காரவேல் தலைமையில் ஆணையத்தை அமைத்துள்ளது.
விசாரணையின் முடிவில்தான் இளவரசன் மர்ம மரணம் குறித்த உண்மைகள்
வெளியாகும்.

நடந்திருப்பது தற்கொலையோ, கொலையோ இதன் பின்னணியில் இருப்பது
பொல்லாத சா தீ... தான், இன்னும் எத்தனை உயிர்களை ‘சாதீ’ சுட்டுப் பொசுக் கப் போகிறதோ! திராவிட இயக்கத்தின் முழுமையான சமுதாய  சீர்திருத்தப் பணி இன்னும் கூர்மைப்படுத்த வேண்டும் என்பதைத்தான் தருமபுரி வன் முறைகளும், இளவரசன் மரணமும் உணர்த்துகின்றன

No comments:

Post a Comment