Friday, July 5, 2013

இளவரசனின் துயர மரணம்

இளவரசனின் துயர மரணம், கடும் அதிர்ச்சி தருகிறது!
வைகோ அறிக்கை! 


தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளைஞனான இளவரசன் இரயில்வே பாதைக்கு அருகில் உயிரற்ற சடலமாக கிடந்தார் என்ற செய்தி தாங்க முடியாத அதிர்ச்சியைத் தருகிறது.

வாலிப மனங்களில் காதல் உணர்வுகள் மலர்வதும், ஒரு இளைஞனும் இள நங்கையும், ஒருவரையொருவர் நேசிப்பதும், திருமண வாழ்வை அமைத்துக் கொள்வதும், மனிதகுல வாழ்க்கைக்கு எழில் கூட்டும் நிலைப்பாடு ஆகும்.
சாதி, மதம், மொழி, நாடுகளின் எல்லைகளைக் கடந்து, இளம் உள்ளங்கள் காதலிப்பதும் இணைவதும், உலகம் முழுவதும் தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகின்றன. உலகின் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட, காலத்தை வென்ற காவியங்கள் பலவும், காதலை மையமாகக் கொண்டு எழுந்தவையே.

பெற்றோர் உற்றார் தடுத்ததால், அவர்கள் வாழ்ந்த சமூகங்களில் ஏற்பட்ட அடக்குமுறைகளால், தாங்கள் விரும்பிய காதல் வாழ்வைத் தொடர முடியா மல், காதலர்கள் உயிரை மாய்த்துக் கொண்ட துன்பியல் நிகழ்வுகளைப் பிரதி பலித்த இலக்கியங்களே, அமர காவியங்கள் ஆகின.

இதோ, தருமபுரி மாவட்டத்தில், இரண்டு இளம் உள்ளங்கள், இளவரசனும் திவ்யாவும் காதலித்து, முறையாக வாழ்வதற்காகத் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால், நடக்கக்கூடாத மோதல்களும், தாக்குதல்களும் நடை பெற்று, ஒற்றுமையாக வாழ வேண்டிய தலித் மக்களும், மிகப் பிற்படுத்தப் பட்ட மக்களும், பகைமையும், வெறுப்பும் கொள்ளும் விபரீதம் நேர்ந்தது.

இந்தப் புறச் சூழ்நிலை காரணமாகவே, ‘நான் என் தாயாரோடு சேர்ந்து வாழப் போகிறேன்’ என்று திவ்யா கூறும் நிலை ஏற்பட்டது; இந்நிலையில் இளவரசன் இரயில்வே பாதைக்கு அருகே இறந்து கிடக்கிறார். அவர் இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ஒரு செய்தி கூறப்பட்டாலும், இளவரசனின் பெற்றோர் உறவினர்கள், அவர் தைரியமாகவும், நம்பிக்கையுடன்தான் சம்ப வந்தன்று காலை இயங்கினார் என்றும், எனவே அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் கூறியுள்ளனர். 

எனவே, இளவரசன் மரணம் குறித்து நடந்த உண்மையை கண்டறிய தமிழக அரசு நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும். உள்ளம் உடைந்த நிலையில் உள்ள திவ்யாவை என்னுகையில் துக்கம் மேடுகிறது. அந்த இளம் தளிரையை யும் பாதுகாக்க தக்க சூழ்நிலையை அரசு உருவாக்க வேண்டும்.

இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய, அழகும், இளமையும் மிக்க இந்த வாலி பன், ரயில் பாதையில், உயிர் அற்ற சடலமாகக் கிடந்ததை அறிந்து, தாங் க முடியாத அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் ஆளானேன். இளம் வயதிலேயே கருகி அழிந்து போன இளவரசனைப் பறிகொடுத்து, கண்ணீரில் துடிதுடிக்கும் பெற்றோருக்கும், உற்ற உறவுகளுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன்.

‘தாயகம்’                                                                                            வைகோ
சென்னை - 8                                                                          பொதுச்செயலாளர்
05.07.2013                                                                                  மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment