Thursday, March 22, 2012

பாளையங்கோட்டை - ஜவஹர் திடலுக்கு அணிதிரண்டு வாரீர் வைகோ அழைப்பு

பகை நாட்டு இராணுவம் எல்லை தாண்டி ஆக்கிரமிக்க குவிதல் போல, பல்லாயிரக்கணக்கில் காவல்துறையினர் இடிந்தகரை வட்டாரத்தில் முற்றுகை யிட்டுள்ளனர். கூடங்குளம், கூட்டப்புளி, ஊத்தங்குளி, உவரி உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களில் காவல்துறை எல்லாச் சாலை களிலும் எவரும் நடமாட முடியாத அளவுக்கு மிரட்டல் வேலையில் ஈடுபட்டுள்ளது. எனினும் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்களும், அணுமின் நிலையத்தை எதிர்க்கும் மக்களும் எந்த அடக்கு முறைக்கும் அஞ்சாது தங்களை வருத்திக் கொண்டு அறப்போர் நடத்தி வருகின்றனர். சூறைக்காற்றிற்கும், சுறா மீனுக்கும், திமிங்கலத்திற்கும் அஞ்சாது கடல் மேல் படகுகள் செலுத்தும் உடலில் உரமும், நெஞ்சில் திறனும் கொண்ட மீனவ மக்கள், அணுமின் நிலையத்தை எதிர்த்துப் போராடு கிறார்கள் என்றால் அவர்களுக்காக அல்ல. தென் தமிழ்நாட்டை கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிர்கால அழிவிலிருந்து பாதுகாக்கவே போராடுகிறார்கள்.



இடிந்தகரை வட்டார மக்களுக்கு அரிசி, காய்கறி, பால், குடிதண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக அரசின் காவல்துறை பொருளாதார முற்றுகை போட்டுள்ளது.
கடற்கரையோர மக்களின் அச்சம் தீர்ந்தால் அன்றி அணுமின் நிலையம் இயங்க அனுமதிக்கமாட்டேன் என்று பசப்பு வார்த்தை பேசிய முதலமைச்சர், மக்களின் நியாயமான அச்சத்தைப் போக்காமல் அணுமின் நிலையத்தை இயக்குவோம் என்று ஆணவத்தோடு அறிவித்தார். இங்கு வாழும் மக்களை காவல்துறையைக் கொண்டு அச்சுறுத்தும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். தென் தமிழகத்தை பாதுகாக்கப் போராடும் இந்த மீனவ மக்களையும், அணு உலையை எதிர்க்கும் அனைத்துத் தரப்பு மக்களையும் தனிமைப்படுத்தி விட அண்ணா.திமு.க. அரசு திட்டமிட்டு அடக்குமுறையை ஏவ முயன்றால் அதனை எதிர்த்து அற வழியில் போராட மனித உரிமை ஆர்வலர்களும் அணு உலை எதிர்ப்பாளர்களும் அணி திரள்வோம்.

மத்திய மாநில அரசுகளின் அராஜகப்போக்கைக் கண்டிக்கவும், இடிந்தகரை வட்டார மக்களுக்கு தோள் கொடுக்கவும், அணு உலை எதிர்ப்புணர்வை நிலைநாட்டவும் மார்ச் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி யளவில் பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில் அறப்போர் நடத்திட அனைவரும் திரண்டு வாரீர். இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்ட அறப்போரில் நானும் கலந்து கொள்கிறேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கண்மணி களும், மனித உரிமை ஆர்வலர்களும் அணு உலை எதிர்ப்பாளர் களும் இதில் பங்கேற்க வேண்டுகிறேன்.

‘தாயகம்’                                                                                     வைகோ
சென்னை-8                                                                               பொதுச் செயலாளர்
22.03.2012                                                                                     மறுமலர்ச்சி தி.மு.க.



No comments:

Post a Comment