Tuesday, March 20, 2012

கூடங்குளம் -தமிழக அரசின் அராஜகம் - வைகோ கண்டனம்

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தினரை, அடக்குமுறையின் மூலம் ஒடுக்க முயலும் தமிழக அரசின் அராஜகம்! - வைகோ கண்டனம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பேரழிவு ஏற்படும் என்ற நியாயமான அச்சத்தாலும், கவலையாலும், கூடங்குளம், இடிந்தகரை, கூட்டப்புளி வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களிலும், கடற்கரை யோரங்களிலும் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள், அறவழியில், காந்திய வழியில், அணுமின் நிலையத்தைத் தொடங்கக் கூடாது எனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த செப்டெம்பர் 11 இல் தொடங்கி, ஆறு மாத காலமாக, எந்த வன்முறைக்கும் இடம் அளிக்காமல், அமைதி வழியில், தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். 155 நாள்கள் தொடர் உண்ணாவிரதம் நடத்தி உள்ளனர்.
செப்டெம்பர் மாதம் 12 நாள்கள் இடைவிடாமல் உண்ணாவிரதம் இருந்த போது, தாய்மார்கள் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டனர்.



செப்டெம்பர் 16 ஆம் தேதியன்று தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள், “கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது; எந்த ஆபத்தும் ஏற்படாது; சுனாமியே தாக்கினாலும் பாதிக்காது” என்று ஒரு அறிக்கை விடுத்தார்.

ஆனால், கடற்கரையோர மக்களின் கொந்தளிப்பையும், போராட்டத்தையும், இதுவரை தமிழ்நாட்டில் நடைபெற்று இராத வகையில் நடக்கும் போராட்டத்தையும் கண்டு, “கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை நிறுத்தி வைப்பதாகவும், அந்தப் பகுதி வாழ் மக்களின் அச்சம் நீங்கும் வரையிலும், அணுமின் நிலையம் தொடங்கப்படாது” என்றும் பின்னர் உறுதி அளித்தார்.

போராட்டக் குழுவினரை அழைத்து, அவர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வ -தாகவும், மத்திய அரசுக்கு அவர்கள் விடுக்கும் கோரிக்கையைத் தாமும் முழுமையாக ஆதரிப்பதாகவும் உறுதி அளித்தார்.

உலகில் பல நாடுகள், அணுமின் நிலையங்களை மூடி வருகின்றன. “புதிதாக அணுமின் நிலையங்களை அமைக்க மாட்டோம்” என்று பல ஐரோப்பிய நாடுகள் அறிவித்து விட்டன.

ரஷ்யாவில் செர்னோபில் அணுமின் நிலைய விபத்து, அமெரிக்காவில் மூன்று கல் தீவு அணுமின் நிலைய விபத்து, ஜப்பானில் புகுஷிமாவில் கடந்த ஆண்டு மார்ச் 11 ஆம் நாள் நடந்த கோரமான அணுமின் நிலைய விபத்து, இவையெல்லாம், பேரழிவுக்கான எச்சரிக்கைகள் ஆகும் என்பதால், அணுமின் நிலையம் கூடாது என்று பல நாடுகள் முடிவு எடுத்து விட்டன.

ஆனால் இங்கே, மின்வெட்டையும், மின்சாரத் தேவையையும் காரணம் காட்டி, அணுமின் நிலையத்துக்கு ஆதரவாக ஒரு கருத்து கூறப்படுகிறது. உண்மையில், இந்தியாவில் உள்ள இருபது அணுமின் நிலையங்களின் மின் உற்பத்தி, நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 2.7 விழுக்காடுதான்.மரபு சாரா எரிசக்தி, புனல் மின்சாரம் மற்றும் சூரிய வெப்பத்தின் மூலம், தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளலாம்.

கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினையில் மத்திய அரசு அமைத்த குழுவினரோ, மாநில அரசு அமைத்த குழுவினரோ, அந்தப் பகுதி வாழ் மக்களைச் சந்திக்கவே இல்லை. அவர்களின் நியாயமான அச்சத்துக்கான காரணங்களைக் கேட்கவே இல்லை.

அண்மையில் கிடைத்த தகவலின்படி, இந்திய அரசின் தேசிய ஆலோசனைக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள அருணா ராய், ஹர்ஷ்மந்தர், ஏ.கே. சிவகுமார், பராக் நக்வி ஆகிய நால்வரும், கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் செயல்படுத்த வேண்டியது இல்லை என்று கூறி உள்ளனர்.

14,000 கோடி ரூபாயைச் செலவழித்து விட்டோமே என்று அரசாங்கம் சொல்லுகிறது. மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த ஊழலில், இலட்சக் -கணக்கான கோடிப் பணத்தை ஆட்சியாளர்கள் விழுங்கி ஏப்பம் இட்டு விட்டார்களே?

தென்தமிழகத்தின் கடற்கரையோரத்தில் இலட்சக்கணக்கான மக்கள் உயிருக்கும், அந்த வட்டாரத்துக்கும் பேரழிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் தொடங்கக் கூடாது என்பது நியாயமான போராட்டம் ஆகும்.

இதுகுறித்து, 1988 நவம்பர் 21 ஆம் தேதி, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி, அணுமின் நிலையம் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போட்டு உள்ளதாக, இடத்தைக் குறிப்பிடாமல் சொன்னபோது, “கூடங்குளத்தில் அமைக்கத் திட்டமிடு கிறீர்கள்; அங்குள்ள மீனவர்களும், பொதுமக்களும் எதிர்க்கிறார்கள்; அங்குள்ள மக்களும், அவர்களின் சந்ததிகளும், அழிவுக்கு ஆளாகும் இந்த ஆபத்தான அணுமின்நிலையத்தை அமைக்கக் கூடாது” என்று பலத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் நாடாளுமன்றத்தில் நான் பதிவு செய்து உள்ளேன்.

மக்களின் அச்சத்தைப் போக்காமல், முதல் அமைச்சர் ஜெயலலிதா, கூடங்குளம் அணுமின் நிலையம், தொடங்கப்படும் என்று அறிவித்து இருப்பது, அந்தப் பகுதி வாழ் மக்களை நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் பித்தலாட்ட நடவடிக்கை ஆகும்.

கூடங்குளம் பகுதி வாழ் மக்களின் அச்சம் நீங்கும் வரையிலும் அணுமின் நிலையம் தொடங்கப்பட மாட்டாது என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டது ஏன்?

எந்தவிதமான வன்முறைக்கும் இடம் இன்றி அவர்கள் போராடும்போது, அங்கே பத்தாயிரம் காவலர்களைக் கொண்டு போய்க் குவிக்க வேண்டிய அவசியம் என்ன?

அந்த வட்டாரத்தையே, ஒரு இராணுவ முகாமைப் போல ஆக்கி, பொதுமக்களை பீதி அடையச் செய்து, எந்தச் சாலையிலும் மக்கள் போக முடியாத அளவுக்கு, அடக்குமுறையைத் தமிழக அரசு ஏவி உள்ளது.

மக்களின் நியாயமான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில், கிறித்தவ மிஷனரிகள் மீது குற்றம் சாட்டியும், அயல்நாட்டுப் பணம் போராட்டக்காரர்களுக்கு வருவதாக அபாண்டமான பழி சுமத்தியும், மத்திய அரசு நச்சுப் பிரச்சாரம் செய்து வந்தது. போராட்டக்காரர்களை மிரட்டு வதற்காக, 200 க்கும் மேற்பட்ட பொய் வழக்குகளைத் தமிழகக் காவல்துறை பதிவு செய்து உள்ளது. தற்போது, போராட்டக் குழுவின் உதயகுமார் உள்ளிட்டோர், தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படலாம் என மிரட்டல் செய்திகளை, காவல்துறை கசிய விட்டு உள்ளது.

உதயகுமாரை கைது செய்யப் போவதாகவும், அவரை ஒப்படைக்கும்படி பொதுமக்களிடம் கேட்டுள்ளதாகவும், காவல்துறை அதிகாரி, செய்தியாளர் களிடம் கூறி உள்ளார். இது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்; அறவழிப் போராட்டத்தை ஒடுக்க முயலும் மிரட்டல் வேலை ஆகும்.

சர்வாதிகாரம் தலைவிரித்து ஆடும்போதுதான், இப்படிக் காவல்துறையைக் கொண்டு, பொதுமக்களை மிரட்டுகின்ற அக்கிரமம் நடக்கும். தங்கள் உயிர் களையும், தங்கள் சந்ததியினரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று, தரும யுத்தம் நடத்தி வருகின்ற அப்பகுதி வாழ் மக்கள் மீது, காவல்துறை அடக்குமுறையை ஏவுமானால், விபரீதமான விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கிறேன்.


இடிந்தகரை உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ள காவல்துறை, அங்கிருந்து வெளியேற வேண்டும்.

போராட்டக்குழுவின் உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோர், சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி உள்ளனர். அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தினரின் அறப்போராட்டத்தை ஆதரித்தும், காவல்துறையின் அடக்குமுறையை எதிர்த்தும் இந்த சோதனையான நேரத்தில் மனித உரிமை ஆர்வலர்களும் அணுஉலை எதிர்ப்பாளர்களும் குரல் கொடுக்க வேண்டு கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை-8
20.03.2012

No comments:

Post a Comment