Saturday, March 3, 2012

ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியாவின் துரோகம் -வைகோ குற்றச்சாட்டு

ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சிலில் இந்திய அரசு, தமிழினப் படுகொலை செய்த சிங்கள அரசைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு மார்ச் 1-ஆம் தேதி கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியதாகும். தமிழினக் கொலை நடத்திய இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமைக் கவுன்சில் உறுப்பினர் நாடுகளால் தீர்மானம் வரக் கூடும் என்று கருதி அதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்திய அரசு தன் கருத்தைப் பதிவு செய்துள்ளது.

எந்தவொரு தேசத்தையும் குறிப்பிட்டு தீர்மானம் கொண்டு வருவது மனித உரிமை ஆணையத்தின் செயல்பாட்டுக்கு - அணுகுமுறைக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை இணக்கமான அணுகுமுறையைப் பலவீனப்படுத்தும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இலங்கையின் இராஜ பக்சே அரசுக்கு முழுக்க உதவி செய்யும் நோக்கத்தில் இந்திய அரசு இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கின்றது.
இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கும் இந்திய அரசு கூட்டுக் குற்றவாளியாகும். இலங்கைக்கு ஆயுதங்களும், ஆயிரக்கணக்கான கோடி பணமும் அள்ளிக் கொடுத்ததுடன் இந்தியாவின் முப்படைத் தளபதிகளை அனுப்பி இலங்கை அரசு நடத்திய யுத்தத்தை இயக்கியதும், நடத்தியதும் இந்தியாவின் காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான்.



ஈழத் தமிழர்களுக்கும், தமிழ் இனத்துக்கும் தற்போது மனித உரிமைக் கவுன்சிலில் பச்சைத் துரோகம் செய்கின்ற மத்திய காங்கிரஸ் அரசு, தமிழ்நாட்டு மக்களையும், மனித உரிமை காக்கப் போராடும் மக்களையும் இனியும் ஏமாற்ற முடியாது. இந்திய அரசின் துரோகம் அம்பலத்திற்கு வந்து விட்டது.

இதற்கு மேலும், ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் விளைவித்தால் எந்தக் காலத்திலும் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என இந்திய அரசை எச்சரிக்கிறேன்.

‘தாயகம்’                                                                                             வைகோ
சென்னை-8                                                                                         பொதுச் செயலாளர்
03.03.2012                                                                                           மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment