Sunday, March 18, 2012

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 1


திரு.மு.செந்திலதிபன்  
கழக ஏடான சங்கொலி யில் வார வாரம் , நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின்குரல்! என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் .வைகோ அவர்களின் நாடாளுமன்ற பணிகள் குறித்து கட்டுரையாக , மதிமுக அரசியல் ஆய்வு மய்யாச் செயலாளர் திரு.மு.செந்திலதிபன் எளிதி வருவதை இணையதள நண்பர்களுக்க இங்கே பதிவு செய்கிறோம் , படித்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நன்றி :- சங்கொலி குழு , மற்றும் திரு.மு.செந்திலதிபன் அவர்களுக்கு .




“மாநிலங்களவையின் சுவர்களுக்கு பேசுகின்ற சக்தி இருக்குமானால் இலங்கைத் தமிழர்களின் துயர் குறித்து இந்த மன்றத்தில் நாங்கள் எடுத்துரைத்த கனல் தெறிக்கும் நியாயமான எங்கள் நெஞ்சத்தின் புலம்பலைச் சொல்லும்; அத்தியாயம் அத்தியாயமாகச் சொல்லும்”

1986 மார்ச் 4 ஆம் நாள் மாநிலங்களவையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் உரையாற்றிய தலைவர் வைகோ, மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழனுக்கு ஒரு நாடு மலர வேண்டும் என்று உலக அரங்கில் நமது தலைவர் வைகோ முப்பதாண்டு காலமாக எழுப்பிவரும் தமிழின முழக்கத்தை இரு கட்டுரைகளில் விரிவாக எடுத்துக்காட்டியிருந்தேன்.

இந்திய நாடாளுமன்றத்தில் 1978 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த காலத்திலிருந்து மாநிலங்களவையிலும், அதன் பின்னர் 1998 ஆம்
ஆண்டிலிருந்து 2002 வரை மக்களவையிலும் தலைவர் வைகோ ஈழத்தமிழர் களுக்காக எடுத்துரைத்த கனல் தெறிக்கும் விவாதக் கருத்துகளை இளம் தலைமுறையினர் நெஞ்சில் பதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்
இத்தொடரை தொடங்குகிறேன்.

யமுனைக் கரையில் இருபத்து நான்கு ஆண்டுக்காலம் தமிழின உரிமைக் கொடியைப் பட்டொளி வீசி பறக்கவிட்ட திராவிட இயக்கத் தலைவர் வைகோ ஒருவரே.

இந்திய நாடாளுமன்ற ‘ஜாம்பவான்கள்’ என்று வரலாற்றில் குறிப்பிடப்படு கின்ற மாபெரும் தலைவர்கள், எச்.வி.காமத்,என்.ஜி.ரங்கா, எஸ்.ஏ.டாங்கே, பூபேஷ்குப்தா, இராம் மனோகர் லோகியா, ஹிரேன் முகர்ஜி, ஏ.ஜி. குல்கர்னி, பிலுமோடி, மதுலிமாயி, ஜோதிர்மாய் பாசு, வாஜ்பாய் எல்.கே.அத்வானி, பி.இராம மூர்த்தி,  மது தாண்டவதே, இந்திரஜித் குப்தா, சோம்நாத் சட்டர்ஜி, ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோர் பட்டியலில் பேரறிஞர் அண்ணா அவர்களுக்குப் பிறகு இடம்பெற்றுள்ள தென்னகத்தின் தலைவர் வைகோ ஆவார்.


திராவிட இயக்க இலட்சியக்கனல் நெஞ்சத்தில் கனன்று கொண்டே இருந்ததால் தான், நாடாளுமன்றத்தில் பிரதமர் பதவியில் இருந்த சக்தி மிக்க தலைவர்களையே பிடரியைப் பிடித்து உலுக்குகின்ற துணிவு தலைவர் வைகோவுக்கு இருந்தது. திராவிட இயக்கக் கருத்துகளை முழங்குகின்ற
நாடாளுமன்ற உறுப்பினர்களாக இரா.செழியன், நாஞ்சில் மனோகரன், ஈ.வெ.கி.சம்பத், க.அன்பழகன், முரசொலி மாறன் போன்ற தலைவர்கள் பணியாற்றி இருந்தாலும், டெல்லி வல்லாதிக்க நாடாளுமன்றத்தை நடு நடுங்கச்செய்திட்டவர் இலட்சியத் தலைவர் வைகோ ஒருவரேஎன்று சரித்திரம் சொல்லிக்கொண்டேயிருக்கிறது.


உயர்ந்தோங்கி இருக்கின்ற நாடாளுமன்றத்தின் பிரமிக்கத்தக்க கட்டிடத்தில் இந்தியத் துணைக் கண்டத்தின் வடக்கிலும் தெற்கிலும், கிழக்கிலும் மேற்கிலுமிருந்து இடம் பெற்றிருந்த அனைத்துக் கட்சித் தலைவர்களும் மதித்துப் போற்றுகின்ற இடத்தை 24 ஆண்டுக்காலம் நாடாளுமன்றத்தில் பணியாற்றியபோதும், தற்போதும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் நமது தலைவர் வைகோ இந்தக் காலகட்டத்தில் நாடாளுமன்றத்தில் இடம்பெறமுடியாமல் ஆகிவிட்டதே என்று கழகத் தோழர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அரசியல் எல்லைக்கோடுகளைத் தாண்டி இனத்திற்காகவும், தமிழ் நாட்டிற்காகவும் பாடுபடும் அனைவரும், உலக நாடுகளில்
பரவிக்கிடக்கும் தமிழ்ச்சமுதாயமும் மெளனமாக இன்றும் இரத்தக்
கண்ணீர் வடிக்கின்றனர்.


எல்லோருடைய ‘வெற்றிதான்’ பேசப்படும் என்ற நிலையை மாற்றி, ஒரு மகத்தான தலைவரின் “தோல்வியும்” பேசப்படுகின்ற நிலைமையை தலைவர் வைகோ அவர்களின் கடந்த கால நாடாளுமன்றப் பணி உருவாக்கி இருக்கிறது என்பது தான் உண்மை.


தமிழீத்தில் தமிழ் மக்கள் மீதான சிங்களஅரசாங்கத்தின்அரச பயங்கரவாதம் வெறித்தனமாக கட்டவிழ்த்து விடப்பட்ட 1981,82,83ஆம் ஆண்டுகளில், மாநிலங்களவையில் தலைவர் வைகோ கவன ஈர்ப்புத்தீர்மானங்களைக் கொண்டு வந்து உரையாற்றி இருக்கின்றார். இந்தியநாட்டின் பிரதமர் பதவியில் வீற்றிருந்த அம்மையார் இந்திராகாந்தி அவர்கள், தலைவர் வைகோவின் கருத்துகளுக்கு செவிமடுத்திருக்கிறார்; செயற்பட்டும் இருக்கிறார்.


ஈழத்தமிழர்களின் உரிமை வாழ்விற்காக இந்திய நாடாளுமன்றத்தில் 23 முறை கவன ஈர்ப்புத்தீர்மானங்களைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தமிழின முழக்கம் எழுப்பிய தலைவர் வைகோவின் முக்கிய உரைகளை சுருக்கமாகக்காண்போம்...


1981 ஆகஸ்டு 21ஆம் நாள் மாநிலங்களவையில் தலைவர் வைகோ ஆற்றிய உரை பின்வருமாறு:

இலங்கைத்தீவில் யாழ்ப்பாணத்திலும் பிறபகுதிகளிலும் தமிழர்கள் தாக்கப்படும், நெஞ்சை நடுங்க வைக்கும் கொடுமைகளை ஆற்றொணாத் துயரத் தோடும் வெந்து கொண்டிருக்கும் உள்ளத் தோடும் இந்த மாமன்றத்தின் கவனத்திற்கு வைக்கிறேன்.

மிருகத்தனமான அடக்குமுறை இலங்கைத்தீவிலே தமிழர்கள் மீது கட்ட
விழ்த்து விடப்படுகிறது.

அரசு நிர்வாகத்தின் துணையோடு, காவல்துறையின் உதவியோடு, இராணுவத்தின் ஆதரவோடு இந்தக் கொடுமைகள் தலைவிரித்து ஆடுகின்றன. தீவைப்பு, கொள்ளை, கொலை,கற்பழிப்பு இவை தமிழர்களைச் சூறையாடும் அன்றாட நிகழ்ச்சி களாகிவிட்டன.ஏன்?எதனால் தெரியுமா?

எந்த மண்ணைத்தங்களுடைய உழைப்பு,வியர்வையால் வளம் கொழிக்க வைத்தார்களோ, அந்த மண்ணைவிட்டு வெளியே ஓடினால் தான் தமிழன் உயிர்பிழைக்க முடியும் என்றஅச்சத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்துவதற்காகத்தான். இலங்கையில் வாழும் தமிழர் இருவகையினர், ஆயிரம் ஆயிரம் ஆண்டுக்காலம் இலங்கைக்குச் சொந்தமான பூர்வகுடிகள் ஒருவகையினர். அவர்கள் ஐரோப்பிய மன்னர்களால் தோற்கடிக்கப் படுகிறகாலம் வரையில் தங்களுக்கென மண்டலம் அமைத்து மணிமுடிதரித்து அரசாண்டவர்கள்.


இன்னொரு வகையினர் பிரிட்டிஷ் தோட்ட முதலாளிகளால் தென்னகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட தமிழ்த்தொழிலாளிகள். பல தலைமுறைகளுக்கு முன்னால் இலங்கை மண்ணில் அடியெடுத்து வைத்த இந்த இரண்டாம்பிரிவினர் ஓடாக உழைத்து இலங்கையை செல்வச் செழிப்பாக்கியவர்கள். இந்தமக்களுக்கு இலங்கைத்தீவைத் தவிர சொந்தம் கொண்டாடுவதற்கென வீடுவாசல் எங்கும் இல்லை.

ஆனால்,வெள்ளையர்கள் வெளியேறிய பிறகு பெரும்பான்மை பலம் பெற்ற சிங்களவர்களால் இந்த மக்கள் குடிஉரிமை பறிக்கப்பட்டு அனாதை களாக்கப் பட்டனர்.கடந்த 30 ஆண்டுக்காலத்தில் பூர்வீக இலங்கைத்தமிழர்களும், இந்திய வம்சவழி தொழிலாளர் தமிழர்களும் சந்தித்து வந்துள்ள சோகங்கள் கண்ணீரால் எழுதப்பட்டவை.

1974,1977 ஆம் ஆண்டுகளில் சிங்கள வெறியர்களால் நடத்தப்பட்ட வெறியாட்டத்திற்கு உயிர்ப்பலி தந்த தமிழர்கள் பலர். தொடர்ந்து 1981 ஆம் ஆண்டும் தமிழர்களுக்கு துரதிருஷ்டவசமான ஆண்டாகி விட்டது.தமிழர்
பகுதிகள் இலங்கையில் சிங்கள வெறியர்களின் வேட்டைக் காடுகளாகி விட்டன. நான் விவரிக்கப் போகும் சம்பவங்களைக் கேட்டால், நீங்கள் திடுக்கிட்டுப் போவீர்கள்.

மே மாதம் 31ஆம் தேதி (1981) இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இல்லம் தாக்கப்பட்ட போது அவரும் அவரது துணைவியாரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தங்களது வீட்டின் மதிற்சுவரைத் தாண்டி வெளியே குதித்து திரும்பிப் பார்த்தபோது அவர்களது இல்லம் நெருப்பின் ஜூவாலையில் சிக்கிவிட்டதையே காணமுடிந்தது.

அந்த வீட்டிற்குள் இருந்த ஒரு இளைஞர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். தமிழர் விடுதலை முன்னணி அலுவலகம் அந்த இரவே தாக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர் பாலஜோதியின் பிரேதத்தை இதோ புகைப்படத்தில் பாருங்கள் .(வைகோ புகைப்படத்தை உயர்த்தி மன்றத்தில் காண்பித்தார்).

அராஜகத்தின் எல்லைக்கு இதோ இன்றும் ஓர் எடுத்துக்காட்டு, யாழ்ப்பாணத்தில் பொது நூலகம் -ஆசியாவில் தலைசிறந்த நூலகங்களில் ஒன்று என்று போற்றப்பட்ட தமிழ் நூலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. 96 ஆறாயிரம் தமிழ் நூல்கள் நெருப்பில் சாம்பலாக்கப்பட்டன.இச்சம்பவம் நெடுங்காலத்திற்கு முன்பு அலெக்சாண்டிரியா நகரத்தில் அற்புதமான நூலகத்தை வெறியர்கள் தீக்கிரையாக்கிய கொடுமையை நினைவூட்டுவதாக அமைந்தது. லண்டனிலிருந்து வெளிவரும் ‘நியூ ஸ்டேட்ஸ்மென்’ என்ற பத்திரிக்கை யாழ்ப்பாணம் நூலகம் தீ வைக்கப்பட்ட செய்தியை “சொர்க்கம் எரிந்தது” என்ற தலைப்பிட்டுத் தலையங்கம் தீட்டியது.

பல இடங்களில் தமிழர்கள் வீடுகளுக்கு உள்ளே வைத்துப் பூட்டப்பட்டு உயிரோடு கொளுத்தப்பட்ட பயங்கரங்கள் நடைபெற்று இருக்கின்றன.
தமிழ் இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டு அவர்களது தலைகள்
நொறுக்கப்பட்டு சிதைந்த கபாலங்களில் இருந்து மூளையை எடுத்து
நெடுஞ்சாலையிலே வீசியெறிந்த கோர நர்த்தனம் நடைபெற்றது. இதோ அப்படி சிதைக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள். இந்தப் புகைப்படங்களைப்
பார்க்கவே எனது கண்கள் நடுங்குகின்றன.

தீக்கிரையாக்கப்பட்ட தமிழர்களின் சந்தைகள், அவர்களது கடைகள்,
நொறுக்கப்பட்ட தமிழர்களின் பத்திரிக்கை அலுவலகங்கள் முதலானவை உலகிற்குத் தெரிவிக்கும் புகைப்படங்கள் இதோ என் கையில் இருக்கின்றன. மன்றம் காணட்டும் இந்தப் படங்களை.


(புகைப்படங்களை எடுத்து மன்றத்தில், வைகோ காண்பிக்கிறார். சபையில்
அசாதாரண நிசப்தம் நிலவியது) தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட
கொடுமைகளை எடுத்துச் சொல்ல என் நாவிற்கு வலுவில்லை. விவரிக்க
என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் ஆயுதம் தாங்கி வன்முறைக் கூட்டத்திலிருந்து தப்ப,
நச்சுப் பாம்புகள் நடமாடுகின்ற அடர்ந்த காடுகளுக்குள்ளே பதுங்க வேண்டிய
அவலம் நேர்ந்துள்ளதை நேற்றைய “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிக்கையின்
கட்டுரை தெரிவிக்கின்றது.


இது இலங்கை நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனை என்று ஒதுக்கிவிட முடியாது.
இது மனித உரிமைப் பிரச்சனை சர்வதேசப் பிரச்சனை. மனித குலத்தின்
மனசாட்சிக்கு விடப்பட்டுள்ள அறைகூவல்.

கிழக்குப் பாகிஸ்தானில் வங்கமொழி பேசும் மக்கள் ரத்த வெறி பிடித்த
வெறியர்களால் வேட்டையாடப்பட்ட போது, வங்க மக்களின் சுதந்திரப்
பதாகையை உயர்த்திப்பிடித்தவர் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி
அம்மையார் என்பதை இந்த நாடு மறந்துவிடவில்லை.

அதேபோல், இந்தியக் கடற்கரையில் 18 மைல் தொலைவில் 40 இலட்சம்
தமிழர்கள் மரணபூமியில் தள்ளப்படும் நிலைமை ஏற்படுமானால் நாம்
கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது.

இலங்கை இராணுவக் கூடாரமாகிறபோது, ஜீவமரணப் போர் நடத்திவரும் 40
இலட்சம் தமிழர்கள் ரோமானிய காலத்து அடிமைகளாக்கப்படுவார்கள். நிலைமை விபரீதமாகி வருவதற்கு அத்தாட்சிதான் பத்தாயிரம் தமிழர்கள் அடைக்கலம் கேட்டு மேற்கு ஜெர்மனியில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்கள் தாக்கப்படும் இந்நிலை நீடிக்குமானால் “இந்தியா
கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது, கைகளைக் கட்டிக் கொண்டு சும்மா
இருக்காது” என்று இலங்கை சர்க்காருக்கு இந்தியா திட்டவட்டமாகத் தெரிவிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

இலங்கை அரசாங்கத்தின் சார்புடைய பத்திரிக்கைகள் இலங்கையில் இந்திய
அரசுக்கு எதிராக குறிப்பாக இந்தியப் பிரதமருக்கு எதிராக விஷத்தைக் கக்கும்
விஷமப் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன என்பதனை இந்த
அரசின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

வெளிவிவகாரத்துறை அமைச்சர் நரசிம்மராவ் அவர்களே, நீங்கள் இலங்கையுடன் இந்தியா நட்புறவைத் தொடரத்தான் விரும்புகிறது என்று சொல்வீர்கள். ஆனால், இலங்கையில் அரசு ஆதரவு ஏடுகள் எந்த அளவிற்கு இந்திய அரசைச் சாடுகின்றன என்பதற்கு இதோ ஒரு உதாரணத்தைத் தருகின்றேன். என் கையிலிருக்கிற ‘சன்’ பத்திரிக்கையில் ஆகஸ்டு முதல் தேதி வெளிவந்துள்ள தலையங்கத்தை இதோ வாசிக்கின்றேன்:


“இலங்கை என்பது ரேபரெய்லியைப் போன்ற இந்தியாவிலுள்ள ஒரு பகுதி
அல்ல என்று இந்திராகாந்தி தெரிந்துகொள்ள வேண்டும். அம்மையார்
புருவத்தை நெறித்தால், கடுகடுப்பைக் காட்டினால் இலங்கை அதனைத்
துச்சமாக மதிக்கும். இலங்கையில் இலங்கை சர்க்கார் எது வேண்டுமானாலும் செய் யும். இந்தியாவுக்குப் பிடிக்காவிட்டால் அதைச் சகித்துக்கொள்ளத்தான்
வேண்டும்”

இந்தப் பிரச்சாரத்திற்கு இலங்கை சர்க்காரே தூபமிடுகிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன். ஊரடங்குச் சட்டமும் நெருக்கடி நிலையும் பிரகடனம்
செய்யப்பட்டிருக்கின்றன. இலங்கையின் பல பகுதிகளில் இராணுவம்
குவிக்கப்படுகின்றது. தமிழர்களைப் பாதுகாக்கவா? இல்லை. தமிழர்களை நசுக்க.

தமிழர்களை அச்சுறுத்தி விரட்டிவிட வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆனால், மண்டியிட மறுத்து மடிந்து கொண்டிருக்கும் தமிழர்களைப்
பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசாங்கம்
உடனே எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.


இலங்கைத் தமிழர்களின் சோகக் கதைகளை வரலாறு இரத்தத்தாலும்,
கண்ணீராலும் எழுதிக்கொண்டிருக்கிறது. எங்கள் சகோதரர்களைக் காப்பாற்றுங்கள் என்று தமிழகம் விம்முகிறது.

முப்பதாண்டுக் காலத்திற்கு முன்பு தலைவர் வைகோ, நாடாளுமன்றத்தில்
இலங்கை கொலை வெறி அரசாங்கத்தின் இந்திய எதிர்ப்பு குறித்து எடுத்துக்
காட்டியது போலவே இன்றும் இலங்கை அரசு இந்தியாவிற்கு எதிரியாகவே
இருக்கிறது.

ஆனால், இந்திய அரசோ தமிழர்களை எதிரியாக பாவித்து, பல்லாயிரக் கணக்கில் தமிழர்களைக் கொன்று குவித்திட்ட ரத்தவெறி பிடித்த ராஜபக்சேவுக்கு துணையாக இன்றைக்கும் செயல்படுகிறது. தமிழர்கள் சிந்திய இரத்தத்திற்கும் இலட்சக்கணக்கில் உயிர்ப்பலி தந்ததற்கும், காலம் சரியான தீர்ப்பை வழங்காமல் போகாது. தலைவர் வைகோவின் நாடாளுமன்ற உரைகளில், ஈழத்தமிழர்களின் இரத்தம் தோய்ந்த
வரலாற்றை, தொடர்ந்து காண்போம்

                                                                                                              தொடரும்..........................

No comments:

Post a Comment