Tuesday, March 6, 2012

சங்கரன்கோவில்: வைகோ முயற்சியால் வந்த குடிநீர்!

சங்கரன்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் திரு. அ .பழனிசாமி பி.காம் அவர்களின் ௦௦கட்டுரை 02.03.2012 அன்று சங்கொலியில் வெளியானது , இதோ இணையதள நண்பர்களுக்க இங்கே பதிவு செய்கிறோம் .நன்றி :-சங்கொலி குழு 


வளர்ச்சித் திட்டங்களைப் பறித்த அ.தி.மு.க.!
வாக்காளர்கள் பாடம் புகட்டுவர்!இக்கட்டுரையை எழுதுகின்ற அ.பழநிசாமி ஆகிய நான்,1946  முதல் 1949  வரை மூன்று ஆண்டுகள், திராவிடர் கழக உறுப்பினராக ‘மலையமான்’ என்ற பெயரில் செயல் பட்டேன்.1949இல் சங்கரன்கோவில் நகரில் தி.மு.க தொடங்கப்பட்டபோது,அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்தேன். மலையமான் என்ற பெயரிலேயே ஆவணங்களில் கையெழுத்துப் போட்டுள்ளேன். மேற்படி ஆவணங்களைத் தலைவர் வைகோ அவர்கள் பார்வையிட்டுள்ளார்கள்.

சங்கரன்கோவில்திராவிடமுன்னேற்றக்கழகத்தின் நகர கழகச்செயலாளரக, 1963  முதல் 1988  வரை 25  ஆண்டுக்காலம் தொடர்ந்து பணிஆற்றி உள்ளேன். செயலாளராவதற்கு முன்னர் இரண்டு ஆண்டுகள், நகர கழக அவைத் தலைவராகவும் இருந்துள்ளேன்.

எனது தாய்மாமா திரு டி.ஆர்.சுப்பிரமணியன், நெல்லை மாவட்டத் தி.மு.க
செயலாளராக இருந்து செயல்பட்டு உள்ளார். நகரகழகஆவணங்களை
எல்லாம் அவர் என்னிடம்கொடுத்து,செயலாளராகச் செயல்பட என்னைப்
பணித்தார். அப்போது நகரகழகத்தில், பொது உறுப்பினர்கள் 75  பேர் மட்டும்
இருந்தார்கள். இதில் பெருவாரியானவர்கள், நெசவுத்தொழில் செய்யும்
செங்குந்தர் இனமக்கள். சங்கரன்கோவில்நகரத்தில் அவர்கள் தாம் பெரும்
பான்மையினர். 30  நகர்மன்ற உறுப்பினர் களுள்,13  பேர்கள் உள்ளனர்.

நகர்மன்றத்தலைவர்

அறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப்பின், 1969  மே மாதம் நடந்த நகரமன்றத்தலைவர் தேர்தலில் கடும்போட்டி நிலவியது. அப்போதுநகர
மன்ற உறுப்பினர்கள் மூலம் தலைவர் தேர்ந்து எடுக்கப்படவேண்டும்.கழக
நகர்மன்ற உறுப்பினர்கள் இருவரை, தேர்தல் செலவுக்குக் கொடுத்த கடன்
பாக்கிக்காக, பரமுசெட்டியார் என்பவர்,கேரளாவுக்குக் கடத்திக்கொண்டு போய் விட்டார்.

தன்னலமற்ற தொண்டால் தலைவர் வைகோஅவர்களின் நெஞ்சில்நிலைத்து
நிற்கும் எனது உயிர்த்தோழன் உச்சிமாகாளியும் நானும், ஒரு டாக்சியை
எடுத்துக்கொண்டு அவர்களைத் தேடிகேரளாவுக்குப் பயணமானோம்.வழியில்,
புளியரை என்ற ஊரில், பரமுசெட்டியார் ஒரு லாட்ஜ் முன்புநின்றுகொண்டு
இருந்ததை உச்சிமாகாளி தற்செயலாகக் கவனித்துவிட்டார். உடனே, பயணத்தை நிறுத்தி விட்டு பரமுசெட்டியாருக்குத் தெரியாமல் லாட்ஜ் உள்ளே நுழைந்து நோட்டமிட்டோம்.அங்கே ஒரு அறையில் சிறை வைக்கப்பட்டு இருந்த இரு உறுப்பினர்களையும் கண்டு அளவளாவினோம்.ரூ11ஆயிரம்
கொடுத்து விட்டு இருவரையும் கூட்டிப்போகலாம் என்று முடிவு ஆனது.
அதனால் இருவாக்குகள் எனக்குக்கூடுதலாகக்கிடைத்தன. எனக்கு11
வாக்குகளும், என்னை எதிர்த்த எனது பள்ளித்தோழர் திரு.எஸ்.இ.எஸ்.
கல்யாணகிருஷ்ணனுக்கு 9  வாக்குகளும் கிடைத்தன .நகர்மன்றத்
தலைவர் ஆனேன்.

நகர்மன்றத் தலைவர்களை மக்களேதேர்ந்தெடுக்க...

எனக்கு மட்டும் அல்ல; தமிழகத்தின் பல நகர்மன்றத் தலைவர்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டன. எனவே,நகரமன்றத் தலைவர்களை மக்களே வாக்கு அளித்து நேரடியாகத்தேர்ந்து எடுக்க வேண்டும் என, சங்கரன்கோவில் நகரமன்றத்தில் தீர்மானம் போட்டு அரசுக்கு அனுப்பினேன். அந்தத்தீர்மானத்தை, தமிழக அரசு, அனைத்து நகர சபைகளுக்கும் அனுப்பிகருத்துக்கேட்டது. இந்தச்செய்தி, அப்போதைய முரசொலியில் வெளியானது. பெரும் பாலான நகர்மன்றங்கள் அதை ஆதரித்தன.அதன்படி, தமிழகஅரசு அதைச்சட்டமாக்கியது.

நகர்வலம்

ஒவ்வொரு நாள் நடுநிசி இரவிலும் 2  மணி முதல் 5  மணி வரை கையில்
பேட்டரி விளக்குடன், நகரில் ஏதாவது ஒரு பகுதியில் வலம் வருவேன்.
அப்போது மின் கம்பங்களில் எரியாத விளக்குகளின் எண்களைக் குறிப் பெடுத்து, மறுநாள் காலையில் மின்வாரியத் துறையினரிடம் தொடர்பு
கொண்டு எரியச்செய்வேன்.

இன்றைக்கு சங்கரன்கோவில் நகரின் முதன்மைச்சாலையாகிய அண்ணா
சாலை, அந்தக்காலத்தில் ஒற்றையடிப் பாதையாகத்தான் இருந்தது.பெரும் பகுதி சாக்கடை ஓடிக்கொண்டு இருந்தது. நகராட்சி லாரிகளில் மண்அள்ளிக் கொண்டு வந்து அதை நிரப்பி,இன்றைய சாலையை உருவாக்கினேன்.
திருவள்ளுவர் சாலை என்பதும் அப்படித்தான் இருந்தது. ஒரு ஓரமாகத்தான் நடந்து செல்ல முடியும். அதையும் மணல் போட்டு நிரப்பி,அகன்ற சாலையாக ஆக்கினேன். தற்போது பேருந்து நிலையம் இருக்கின்ற இடம் உட்பட நகர்மன்றக் கட்டடத்தைச் சுற்றிலும் உள்ள இடங்கள் அனைத்தும்,
குளமாகத்தான் இருந்தது. அவற்றையும் நிரப்பி,அந்த இடத்தில் பேருந்து
நிலையத்தை அமைத்தேன்.

சாதிப்பெயர்கள்ஒழிப்பு

அதிகாலையில் ஏதாவதொரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, அந்த வீட்டில்
நீராகாரம் வாங்கிக்குடிப்பேன். அங்கு பெரும்பாலும் ஆதிதிராவிடர்,
தேவேந்திரகுலவேளாளர், அருந்ததியர் குடும்பத்துத் தாய்மார்களிடம் வேறுபாடு காட்டாமல் நீராகாரம் வாங்கிக் குடிப்பேன். அப்படி ஒரு நெருக்கத்தை மக்களோடு நான் ஏற்படுத்திக் கொண்டேன்.தமிழகத்திலேயே முதன்முறையாக, சங்கரன்கோவில் நகரின் தெருக்களின் பெயர்களில் இருந்த அனைத்துச் சாதிப் பெயர்களையும் நீக்கி, காந்திநகர், காமராஜ்நகர், அம்பேத்கர்நகர், நேருதெரு, அம்பேத்கர்தெரு, காயிதேமில்லத்தெரு, அண்ணாசாலை எனப்பெயர்களைச் சூட்டினேன்.

நகர்மன்றத்தலைவர் தேர்தலில் என்னை எதிர்த்துப் போட்டியிட்ட கல்யாண
கிருஷ்ணன் அவர்களுடைய தந்தையார் சங்கர பட்டர் அவர்களின் பெயரைத்தான், சங்கர்நகர் 1,2,3  ஆகிய தெருக்களுக்குச் சூட்டினேன்.
இன்றைக்கு நகரில் உள்ள தெருக்களின் பெயர்கள்,பெரும்பாலும் நான்
சூட்டியவையே. இவ்வாறு சாதி ஒழிப்புக்காக நான் ஆற்றியபணிக்காக,
1979  ஆம் ஆண்டு, அன்றைய அ.தி.மு.க.அரசு,அரிசனநலத்துறை விஜயசாரதி
கையெழுத்து இட்டு, எனக்கு பாராட்டுப்பட்டயம் வழங்கி இருக்கிறது.

சாதி வேறுபாடு கருதாது, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அடிப்படையில் பரவலாக நகராட்சியில் வேலைவாய்ப்புக் கொடுத்தேன். அனைத்துவட்டங்
களுக்கும் சம அளவில் நிதி ஒதுக்கீடு செய்தேன். நகராட்சியில் அனைத்து
வார்டுகளிலும் வேலை நடக்கும் போது,ஒப்பந்தக்குழு உறுப்பினர் வேலை
நடக்கும் இடங்களில் சிமெண்ட் கலவை சரியாகப் போடுகிறார்களா? எனக்
கண்காணிப்பார். ஒப்பந்தக்காரர்களிடம் நாங்கள் பணம் பெற்ற தில்லை. எனவே, வேலைகள் சிறப்பாக நடந்தேறின. இதன் மூலம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றோம்.

விசைத்தறித்தொழில்

அப்போது நகரில் இருந்த இரண்டு திரை அரங்கு களைத் தவிர, நகராட்சிக்குப்
பெரிய வருவாய் ஏதும் இல்லை.பெரும்பாலான நகராட்சிகளிலும் இதுதான் நிலைமை. எனவே, நகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மாத ஊதியம் வழங்க முடியவில்லை. தமிழக அரசு நகராட்சிப்பள்ளி ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தேன். அந்தக் கோரிக்கையை அரசு ஏற்றது. இன்றைக்கு, ஆசிரியர்கள் அரசுச் சம்பளம் பெறுகிறார்கள்.

நகரில் கைத்தறி நெசவு மட்டுமே தொழிலாக இருந்தது. எழுபதுகளின் தொடக்கத்தில் விசைத்தறிகள் அறிமுகம் ஆயின. அதற்காகத் தனிக்கட்டடங்
களைக்கட்டி, விசைத்தறிக் கூடங்களை அமைக்கக்கூடிய அளவுக்கு மக்களிடம் பொருளாதாரம் இல்லை. எனவே,வீடுகளிலேயே விசைத்தறிகளை அமைப்பதற்கு, தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து, தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு அனுமதி பெற்றேன். அப்படித்தான், இன்றைக்கு நகரில் விசைத்தறித் தொழில் வளர்ச்சி பெற்றுஇருக்கிறது.

கழகப்பணி

நகரில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கிளைக் கழகங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டேன். சில வட்டங்களில் 25  உறுப்பினர்கள் கிடைக்கவில்லை என்றால், பக்கத்தில் உள்ள வட்டத்தையும் இணைத்து ஒரு
கிளையாக அமைத்து விடுவேன். நகரில் உள்ள 31  சாதிகளிலும், பரவலாக
உறுப்பினர்கள் சேர்த்தேன். வட்டங்கள் தோறும் அடிக்கடி பொதுக்கூட்டங்கள்
போட்டோம். கடையநல்லூர் ஆ.திராவிடமணியும், புளியங்குடி க.பழநிசாமியும் தொடர்ந்து கூட்டங்களில் பேசி வந்தார்கள். தெருக்களில் கூட்டம் போடும் போது, பெண்கள் வீட்டின் முன் வாசலுக்கு வந்து உட்கார்ந்து
கொண்டே பேச்சைக் கேட்டார்கள்.

அதனால் கழகம் வளர்ந்தது. வாரந்தோறும் சனி ஞாயிற்றுக் கிழமைகளில்
கிளைக் கழகக் கூட்டங்களை, அந்தந்த வட்டங்களின் கிளைச் செயலாளர்
வீடுகளில் நடத்துவோம். அறிஞர் அண்ணா உள்ளிட்ட கழகத்தின் முன்னணித் தலைவர்கள் அனைவரையும் அழைத்து வந்து பொதுக் கூட்டங்களை நடத்தி உள்ளேன்.  தந்தை பெரியார் அவர்களுக்கு, நகர்மன்றத்திலேயே வரவேற்பு அளித்தோம்.

தெருவிளக்குகள், கூழங்கள் அள்ளுதல், வாறுகால் துப்புரவுப்பணிகள், குடி
தண்ணீர்ப் பிரச்சினைகள், வீட்டுவரி இவைகளில் எங்கள் முழுக்கவனம்
செல்லும். தீர்மானம் போடுவோம்.அதையே அந்த வட்டத்தின் நகரமன்ற
உறுப்பினர் மூலம் நகரசபையில் தாக்கல் செய்வோம். நகரமன்ற கூட்ட நிகழ்ச்சி நிரல்களில் வார்டு பிரச்சினைகள் வரும்.

கழக உறுப்பினர் கூட்டங்களை ஏதாவது ஒரு பொது இடத்தில் கூட்டி,
தீர்மானங்களை விவாதிப்போம். அதையே நகரமன்றக் கூட்டத்திலும்
வைத்து நிறை வேற்றுவோம். கிளைக் கழகத் தேர்தலை அந்தந்த வார்டுகளில்,
பொது இடத்தில் விளக்குப்போட்டு, வாக்கு அளிக்கும் சீட்டு மூலம்
நடத்துவோம்.

தலைவர் வைகோ அவர்கள், திமுகவில் இருந்த போது கோவில்பட்டி,
திருநெல்வேலி போன்ற பெருநகரங்களுக்கு அனைத்துக் கிளைக் கழகச்
செயலாளர்களையும் மினிட் புத்தகங்களோடு வரச்சொல்லி மினிட்
புத்தகங்களைச் சரி பார்ப்பார்கள், சீர்படுத்துவார்கள்.

கிளைக் கழகக் கூட்டங்களுக்கான விளம்பரத்தாளில் அச்சிடும் போது,
முக்கியமான பெயர்களை மட்டும் அச்சிட்டு, மீதமுள்ள காலியிடங்களில்
பெரியார், அண்ணா கருத்துகள், பாரதிதாசன் மடல்கள் இடம் பெறும்.
பொது மக்களின் கவனத்தைக் கவரும் வகையில் அமைந்து இருக்கும்.
அனைவரின் பாராட்டையும் பெற்றோம்.

மக்கள்ஆதரவு

சங்கரன்கோவில் நகர்மன்றத் தீர்மானத்தை ஏற்று அரசு அறிவித்தபடி,1986ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், நகர்மன்றத் தலைவர்களை மக்களே நேரடியாகத் தேர்ந்து எடுப்பது, நடைமுறைக்கு வந்தது. அந்தத் தேர்தலில் நான் போட்டியிட்டேன். என்னை எதிர்த்துப் போட்டி யிட்டவர், நெல்லை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர். அப்போது,அவர் செலவழித்த பணம் ரூ ஒன்றரை இலட்சம். நான் வீடு தோறும் சென்று வாக்குகள் கேட்டேன். கழகத் தொண்டர்கள் பின்னால் உண்டியலைக்
குலுக்கிக் கொண்டே வருவார்கள்.  அப்படிமக்கள் கொடுத்தபணம், சுவரொட்டிகள் அச்சிட, பூத் செலவுக்கும், தோரணத்துக்கும்செலவானது. ஒவ்வொரு வட்டத்திலும் நிறுத்தப்பட்ட கழக உறுப்பினர்கள்,தங்கள் தட்டி போர்டில் ஒரு பகுதியை ஒதுக்கி எனது பெயரையும்விளம்பரப்படுத்தினார்கள்.

சுவாமி சந்நிதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தலைவர் வைகோ
அவர்கள், எனது தன்னலம் அற்ற பொது வாழ்க்கை, சிறைவாழ்வு, கடந்த முறை நகர்மன்றத் தலைவராக நேர்மையுடன் பணி ஆற்றியது குறித்து, ஒரு மணி நேரம் என்னைப் பற்றி உருக்கமாக உரை ஆற்றினார்.அந்த உரையின்
ஒலி நாடாவை, சங்கரன்கோவில் நகரின் அனைத்து வீதிகளிலும் முழங்கச்
செய்தோம்.

3000௦௦௦ ௦௦௦ வாக்குகள் கூடுதலாகப் பெற்று, இரண்டாவது முறையாகவும் நகரமன்றத் தலைவராகத் தேர்வு பெற்றேன். கடந்த முறை நான் நகர்மன்றத் தலைவராக நான் ஆற்றிய பணிகளைப் பாராட்டி மகிழ்ந்து வாக்கு அளித்தார்கள். எனக்கு ஓட்டும் கொடுத்தார்கள்; நோட்டும் கொடுத்தார்கள்.

தாமிரபரணிகுடிநீர்

சங்கரன்கோவில் நகரில், குடிநீர்ப் பிரச்சினை தீர்க்கப்படாத ஒன்றாக
இருந்தது. சீவலப்பேரியில் தாமிரபரணிஆற்றில் இருந்து கோவில்பட்டிக்குக்
குடிநீர் கொண்டு வருவதைப்போல்,சங்கரன்கோவிலுக்கும் தாமிரபரணி
கூட்டுக் குடிநீர் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நகரக்
கழகம் மூலம் தீர்மானம் போட்டு, பொதுக்கூட்டத்திலும் அறிவித்து, தலைவர்
வைகோ அவர்களிடமும் தெரிவித்தோம். தனது செல்வாக்கைப் பயன்படுத்தி
தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், தமிழக பட்ஜெட்டில் வரக் காரணமாக
இருந்தவர் வைகோ அவர்கள்.

முதலில் திருப்புடைமருதூர் பக்கம் நந்தன் -தட்டையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, குழாய் மூலம் 63  கிராமங்களை உள்ளடக்கி,  சங்கரன்கோவிலுக்கு கூட்டுக் குடிநீர்த்திட்டம் உருவானது. இறுதிக்கட்டத்தில் சண்முகநல்லூரில் இருந்து பஞ்சப் பிரதேசமான மேலநீலிதநல்லூர் பகுதியில் 25  ஊர்களுக்கும் சேர்த்து, மொத்தம் 88  கிராமங்கள் சேர்க்கப்பட்டு கூட்டுக்குடிநீர் திட்டம் உருவானது.

தாமிரபரணியில் இருந்து மானூர் வழியாக சிவகாசி, விருதுநகருக்கு மானூர் கூட்டுக்குடிநீர் திட்டமும் உருவானது. தொடர்ந்து வைகோ எடுத்த பெரு முயற்சிகளால், அந்தத்திட்டத்தில், சங்கரன்கோவில் தொகுதியின் தென்
பகுதியில் உள்ள கிராமங்களும், குருவிகுளம் ஒன்றியப்பகுதி கிராமங்களும்
இணைக்கப் பட்டுப் பயன் பெறுவதோடு,சங்கரன்கோவிலுக்கும் ஒரு பகுதி குடிநீர் கிடைத்து வருகிறது.

இப்போது சங்கரன்கோவில் மேலநீலிதநல்லுர் மேல் பகுதியில் உள்ள சேர்ந்தமரம் பகுதிகளுக்கும் தாமிரபரணி தண்ணீர் கிடைத்து வருகிறது. இவ்வாறு, சங்கரன்கோவில் தொகுதியின் குடிநீர்ப்பிரச்சினை, தலைவர் வைகோ அவர்களின் முயற்சியால் தீர்க்கப்பட்டு உள்ளது.

வளர்ச்சித் திட்டங்களைப் பறித்த அ.தி.மு.க.

1989  ஆம் ஆண்டு, வைகோவின் பெரு முயற்சியால், எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. கைத்தறித்துறை,
நகர்ப்புற வளர்ச்சித்துறை, குடிசைமாற்று வாரியம் போன்ற முக்கியமான இலாகாக் களும் அவருக்கு ஒதுக்கப்பட்டன

கைத்தறித்துறை மூலம் மேலநீலிதநல்லூர் பகுதியில் கூட்டுறவு நூற்புஆலை ஒன்றை அமைத்திட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கைத்தறித்துறை அமைச்சரும், மேலநீலிதநல்லூர் ஒன்றியப் பெருந்தலைவர் சிங்கப்புலி
பாண்டியனும், அடியேனும் நேரில் கூட்டுறவு நூற்பு ஆலை அமையும்
இடத்தைப் பார்வையிட்டோம்.அடுத்து, தேர்தல் வந்தது. அ.தி.மு.கஆட்சியைக்
கைப்பற்றியது. நூற்பு ஆலையை வேறு இடத்துக்குக்கொண்டு போய் விட்டார்கள்.

சங்கரன்கோவில் நகரில் பலரிடம் வீட்டுப்பத்திரங்கள் உள்ளன. ஆனால்,
பட்டா கிடையாது. அதற்கான பணிகளை விரைவு படுத்த, சங்கரன்கோவில் நகரில் நில அளவை செட்டில்மெண்ட் அலுவலகம் திறப்பதற்கான பணிகள்
வேக வேகமாக நடைபெற்று வந்த நிலையில், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி
வந்தது; அம்மையாரின் தொகுதிக்கு, நில அளவை அலுவலகத்தைக் கொண்டு
போய்விட்டார்கள்.

1969  முதல் 1976  வரையிலும், 1986  முதல் 1991  வரையிலும் ஆக மொத்தம்
12  ஆண்டு காலம் நகர்மன்றத் தலைவராக, எனது கடமையைச் செய்து உள்ளேன்.  ஆனால், ஐந்துமுறை அ.தி.மு.க.வுக்கு வாக்கு அளித்த சங்கரன்கோவில் தொகுதிமக்களுக்கு,அ.தி.மு.க.ஆட்சியில் எந்த விதமான
நன்மைகளும் கிட்டவில்லை. இதனால், தொகுதி முழுவதும் அ.தி.மு.க.வுக்கு
அவப்பெயரே ஏற்பட்டு உள்ளது.

பாடம் புகட்டுவர்

பால் விலை உயர்வு, பேருந்து, பயணக்கட்டண உயர்வு குறித்த வழக்கில்,
அ.தி.மு.க. அரசு, விலை ஏற்றியது ஏற்றியதுதான்; குறைக்க மாட்டோம்
என்று தெரிவித்து இருப்பது, மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போதாக்குறைக்கு, முதல்வர் ஜெயலலிதா அவர்கள், பால்விலையை உயர்த்தினேன், பேருந்துக் கட்டணத்தை உயர்த்தினேன் என்றாலும், கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன் எனச் சட்டமன்றத்திலேயே பேசியுள்ள பேச்சு, ஒரு முதல்அமைச்சர் பேசுகின்ற பேச்சாகத் தெரிய வில்லை.

அடக்கம்அமரருள்உய்க்கும் அடங்காமை
ஆரிருள்உய்த்துவிடும்

அதெல்லாம் எனக்குத் தெரியாது; நாங்கள் வைத்தது தான் சட்டம் என்பீர் களே யானால், தகுந்த பாடத்தைக் கற்றுத்தர சங்கரன்கோவில் தொகுதி வாக்காளர்கள் தயார் நிலையில் உள்ளார்கள் என்பதை ஆட்சியாளர்களுக்கு அடக்கத்தோடு தெரியப்படுத்திக்கொள்கிறோம்.

1977  ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில், திருச்சிக்குத் தெற்கே, திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்ற ஒரே தொகுதி, சங்கரன்கோவில்.
பம்பரம் போல் சுற்றிச்சுழன்ற வைகோவின் பிரச்சாரமும், கடினஉழைப்பும் அந்த வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. அதுபோல, நடைபெறப் போகும் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதித் தேர்தல், அ.தி.மு.க.வுக்குப் பாடம்புகட்டும்; மறுமலர்ச்சி தி.மு.க.-வுக்கு வெற்றி மகுடம்சூட்டும்!

அதை, நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்!

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் மதிமுக வேட்பாளர் டாக்டர் .சதன் திருமலை குமார் அவர்களுடன் திரு. அ.பழனிசாமி .பி.காம் அவர்கள் (வேட்பு மனு தாக்கலின் பொது எடுத்த படம் )

No comments:

Post a Comment