Monday, March 19, 2012

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 2

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி  படித்துவிட்டு வரலாமே .

1983 கருப்பு ஜுலை : இந்திராவின் கவனத்தை ஈர்த்த வைகோ 

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் இரத்தம் தோய்ந்த “கறுப்பு ஜூலை” ஆகும். 1983 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே,
சிங்கள இனவெறியன் ஜெயவர்த்தனே, தமிழர்கள் மீது கட்ட விழ்த்து விட்டிருந்த வன்முறைகள் ஜூலை மாதம் கோர நர்த்தனம் ஆடின. ஜூலை 25 ஆம் நாள், சிங்கள இராணுவம்நடத்திய இனப்படுகொலையில் ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர் பகுதிகளில் தீவைப்புகள்,கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. இந்த கொடூரங்களின்
உச்சகட்டமாக, ஜூலை 27 ஆம் நாள், வெலிக்கடைச் சிறையில் அடைக்கப் பட்டிருந்த விடுதலை இயக்கத் தலைவர்கள் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்ட போராளிகள் 50 பேர் கண்ட கோடாலிகளால் வெட்டிக் கொல்லப்பட்டனர். வெலிக்கடைச் சிறையில் ரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. தமிழீழத்தில் 1983, ஜூலையில் நடத்தப்பட்ட இனப் படுகொலைகளை அறிந்து தமிழ்நாடு கொந்தளித்தது. உலகம் முழுவதிலிருந்தும் வரும் பத்திரிகைகள் இலங்கை இனப்படுகொலை பற்றிய நடுங்க வைக்கும் செய்திகளை வெளியிட்டன.



தமிழ்ச் சமுதாயம் குமுறிக் கொண்டிருந்த வேளையில் - 1983, ஜூலை 28 ஆம் நாள் மாநிலங்களவையில் தலைவர் வைகோ எரிமலையாக பொங்கி வெடித்தார். நெஞ்சம் துடிதுடிக்க அன்று, வைகோ ஆற்றிய உரை இதோ:

“இலங்கையில் சிங்கள வெறியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, இராணுவத்தின் கோர நர்த்தனத்துக்குப் பலியாகிக்கொண்டிருக்கும் தமிழர்களின் உயிர்களைக் காக்க இந்திய அரசு முன்வரவேண்டும் என்று அளவற்ற துக்கத்தோடும், வேதனையோடும் மன்றாடுகிறேன். இலங்கையில்
வாழும் 40 இலட்சம் தமிழர்களும், தமிழகத்திலே வாழும் 5 கோடித் தமிழர்களும் மட்டுமல்ல, தரணி எங்கும் வாழும் கோடான கோடித் தமிழர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இலங்கையின் பூர்வீகத் தமிழர்கள் வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து தங்களுக்கென தனி நாடும், அரசும் அமைத்து வாடிநந்து வருவோர் ஆவர். கி.பி.1619இல் போர்த்துக்கீசியர்களின் படையெடுப்பால் தங்கள் கொற்றத்தைப் பறி
கொடுத்தார்கள்.

இன்னொரு பிரிவினரான இந்திய வம்சா வழித்தமிழர்கள், கி.பி.1837க்குப் பின்னர் பிரிட்டீஷ் தோட்ட முதலாளிகளால் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டங்களை அமைக்க அழைத்துச் செல்லப் பட்டபோது, சிங்கள பிரஜைகளுடன் சம உரிமைகளுக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டது.

இலங்கை விடுதலை பெற்ற பிறகு இவர்கள் தலையிலேஇடி விழுந்தது. உலகில் எந்தச் சட்டப் புத்தகத்திலும் காண முடியாத கொடுமையான குடி உரிமைச்சட்டத்தை 1948 இல் இலங்கை அரசு நிறைவேற்றி, 10 இலட்சம்
தமிழர்களை நாடற்ற அநாதைகளாக்கியது.

அரசு காலனி திட்டங்கள் மூலம் தமிழர் பகுதிகளில் சிங்களவர்க் குடியேற்றப் பட்டு, தமிழர்களின் பெரும்பான்மையைச் குலைக்கின்ற சதி வெற்றி பெற்று
வருகிறது. 1958, 1961, 1964,1972, 1974, 1977, 1981 ஆகிய இந்த ஆண்டுகளெல்லாம் தமிழர்களை அழிவுப் பள்ளத்தாக்கில் தூக்கி வீசிய ஆண்டுகளாகும். தீ வைத்தல், கொலை, கொள்ளை, கற்பழித்தல் மூலம் தமிழர்களை வேட்டை யாடத் தொடங்கி இந்த ஆண்டு இக்கொடுமைகள் கொடுமுடியில் நிற்கின்றன...”

“இப்போது அட்டூழியங்களும், உயிர்க்கொலையும் பயங்கரமான களத்தை எட்டிவிட்டன. எமது மக்கள் எப்படி அடித்துக் கொல்லப்பட்டார்கள்; எப்படி உயிரோடு கொளுத்தப்பட்டார்கள்; எப்படி சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்பதையெல்லாம் பத்திரிக்கைகளில் படிக்கின்றபோது, நான் நடுக்கமுற்றேன். அங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் அக்கிரமமான விதிகள் அவர்களது சடலங்களை விசாரணை ஏதுமின்றி உறவினர்களுக்குக் கூட தகவல் கொடுக்காமல் புதைப்பதற்கு இராணுவத்தினருக்கு அதிகாரம் அளித்திருக்கின்றனர். யாழ்ப்பாணத்திலும் ஏனைய தமிழர் பகுதிகளிலும் தமிழர்களின் வீடுகளைச் சூறையிட்டும் பெண்களைக் கற்பழித்தும் இளைஞர்களைக் கொன்றொழித்தும் இராணுவத்தினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலண்டனிலிருந்து வெளியாகும் செய்தி ஏடு`டெய்லி டெலிகிராப் இலங்கை வாழ் தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் சுடுகாடுகளைப் போலத் தோற்றமளிக் கின்றன என்று எழுதுகிறது. தமிழர்களின் சடலங்களும், வெட்டி
எறியப்பட்ட பிணக் குவியல்களும் சாலைகளிலும், பாதைகளிலும் கேட்பாரற்றுச் சிதறிக்கிடக்கின்றன என்று எழுதுகிறது.

அங்குள்ள நிலைமை உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையல்ல, இது ஒரு மனிதாபிமானப் பிரச்சனை. எனவேதான் கேட்கிறேன். இந்தப் பிரச்சினையை ஐ.நா. சபையில் எழுப்புவதை இந்திய அரசுதன் தார்மீகக் கடமையாக எண்ணவில்லையா?

நேருவின் குரல் தென்ஆப்பிரிக்க இந்தியர்களுக்காக...

நமது வெளிநாட்டுக் கொள்கையை வகுத்தவர் பண்டித ஜவகர்லால் நேரு 1950 டிசம்பர் 6 ஆம் தேதி நாடாளுமன்ற மக்கள் சபையில் சர்வதேச நிலை குறித்து
பண்டித நேரு ஆற்றிய உரையை இப்போது மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

`தென்னாப்பிரிக்காவில் வாழுகின்ற இந்தியர்களின் நிலை ஐ.நா. மன்றத்தின் முன் நீண்ட நாட்களாக எழுப்பப்படும் கேள்வியாகும். தென் ஆப்பிரிக்காவில்
பிரஜைகளாகிவிட்ட இந்திய வம்சாவழியினரோடு அரசியல் ரீதியாக எங்களுக்குத் தொடர்பு இல்லை என்றாலும், அவர்கள் இந்தியாவிலிருந்து சென்றவர்களாதலால் கலாச்சாரத் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் இன வெறியால் பாதிக்கப்படுவதால் இந்தியாவின் சுயகெளரவம்
தலை தூக்குகிறது. இந்தியர்களும் ஆசியக் கண்டத்து மக்களும், உலகத்திலுள்ள ஒவ்வொரு பிரஜையும் கவலைப்படுகிற பிரச்சனையாக இது உருவெடுத்திருக்கிறது.

சிறையில் இரத்த ஆறு

இலங்கையில் நடைபெற்ற கோரத்தாண்டவத்தில் உள்ளத்தை உலுக்கும், உதிரத்தை உறைய வைக்கும் சம்பவம், சிறைச்சாலையிலே தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாகும். அவர்கள் எப்படிக் கொல்லப்பட்டார்கள்?
சக கைதிகள் உள்ளே நுழைந்தார்கள் என்றும், மோதல் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது. அது முழுக்க முழுக்க புனைந்துரைக்கப்பட்டதாகும். நம்பிக்கையான தகவலின்படி, தமிழர்கள் கூடம் ஏனைய கைதிகளின் சிறைக்
கூடங்களிலிருந்து தனியாக இருக்கிறது. மூன்று இரும்புக் கதவுகள் இருக்கின்றன. அரசியல் கைதிகளின் கூடத்திற்கு இதர கிரிமினல் கைதிகள் செல்லமுடியாது. ஆனால், நடந்தது என்ன? சிறை அதிகாரிகள் இரும்புக் கதவுகளைத் திறந்து விட்டார்கள். இராணுவத்தினர் உள்ளே நுழைந்தார்கள்.
சிறைக்குள்ளே நுழைந்த இராணுவத்தினரும் சிங்கள வெறியர்களும் எமது விடுதலை வீரர்களை வெட்டிச் சாய்த்தார்கள். தமிழர் விடுதலை இயக்கத்தின் முன்னோடித் தலைவர்கள் அனைவருமே கொல்லப்பட்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட தளபதி குட்டிமணி, போராளிகளின் தலைவர் தங்கதுரை, வீர இளைஞன் ஜெகன் ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். பத்திரிக்கைகளின் தகவல்படி சிறைச்சாலைப் படுகொலையில் மொத்தம் 54 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காந்திய
இயக்கத்திற்குத் தம்மை அர்ப்பணித்த அகிம்சைவாதிகளான தலைவர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழர்கள் வாழும் கிராமங்களை இலங்கை இராணுவம் வளைத்து முற்றுகையிட்டுள்ளது. தமிழர்கள் பட்டினியால்
சாகடிக்கப்படுகிறார்கள். தமிழ்ப் பெண்கள் ஓலமிடும் கூக்குரல் என் காதுகளில் விழுகிறது. 

மத்திய அரசே, மெளம் ஏன்?

இந்திய அரசைக் கேட்கிறேன். இதை உள்நாட்டு விவகாரம் என்று கூறப் போகிறீர்களா? பிரிதொரு நாட்டில் எழுந்த பிரிவினை இயக்கம் என்று உதாசீனப்படுத்தப் போகிறீர்களா? இது பிரிவினை இயக்கம் அல்ல. விடுதலை
இயக்கம்
. பாலஸ்தீனியர்கள் தங்கள் தாயகத்தின் விடுதலைக்குப் போராடுவதைப் போலவே ஈழத்தமிழர்களும் போராடுகிறார்கள். பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்த இந்திய அரசு இதிலே தயக்கம் காட்டுவது ஏன்?

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே கடல் இல்லை என்றால் இலட்சக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து இங்கு வந்து தஞ்சம் புகுந்திருப்பார்கள். இன்னொரு பங்களாதேஷ் உருவெடுத்திருக்கும். வங்க தேசத்திலே நீங்கள் காட்டிய கருணை இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் வற்றிப் போவானேன்? அன்று பங்களாதேஷ் நோக்கி நடைபோட்ட இந்திய இராணுவம் இன்று முடங்கிக் கிடப்பது ஏன்? மொத்தத்தமிழ் நாடும் இன்று அழுதுகொண்டிருக்கிறது.

உறவா? உயிரா?

நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திற்குள்ளாக மேலும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். நமது வெளி விவகார அமைச்சர் மிகவும் நிதானமானவர். இலங்கையின் நல்லுறவு கெட்டுவிடக் கூடாது என்பதிலே எச்சரிக்கையோடு இருக்கிறார். உங்களுக்கு உறவைப் பற்றி கவலை. எங்களுக்கோ தமிழர்களின் உயிரைப் பற்றிய கவலை. தர்ம நியாயமான சமுதாயம் அமைக்கப் போவதாக ஜெயவர்த்தனே சொன்னாரே! கொலை, கொள்ளை, கற்பழிப்புதான் தர்ம நியாயமா?

இலங்கைத் தூதர் வெளியேறட்டும்

இந்தியாவிலே தமிழ்நாடு ஒரு பகுதியாக இருக்கிறது. நாங்கள் இந்தியாவின் பிரஜைகளாக இருக்கிறோம். அதனால் தான் டில்லியிலே வந்து உங்களிடம் புலம்புகிறோம். கெஞ்சுகிறோம். தாக்குதலை நிறுத்துகிறாயா? இல்லையா? என்று இலங்கைக்கு இந்திய அரசு கெடு விதிக்கட்டும். அதையும் மீறி
தாக்குதல் தொடர்ந்தால் இலங்கையோடு ராஜ்ய உறவுகளை துண்டித்துக் கொள்ள வேண்டும். இந்தியத்தூதர் இலங்கையிலில் இருந்து நாடு திரும்பட்டும் . ரத்த வெறி பிடித்த இலங்கை அரசின் தூதர் இந்தியாவில் இருந்து வெளியேறட்டும்.

மன்றாடுகிறேன்...

உலகில் உள்ள 7 கோடித் தமிழர்களும் இந்திய அரசின் நடவடிக்கையை கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். கட்சி அரசியல் நோக்கத்தோடு நான் பேசவில்லை இங்கே. தமிழ் நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க. காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ஜனதா என்ற கட்சி வேறுபாடுகளையெல்லாம் மறந்துவிட்டு
தமிழகத்தின் உணர்வையே இங்கு நான் பிரதிபலிக்கிறேன். மடிந்து கொண்டிருக்கும் எங்கள் சகோதர சகோதரிகளைக் காப்பாற்றுங்கள் என்று மத்திய அரசின் காலடியில் விழுந்து பிச்சை கேட்கிறேன்; நேரடி நடவடிக்கையில் இறங்குவீர் என்று!”

தலைவர் வைகோ அவர்களின் உணர்ச்சிக் கொந்தளிக்கும் இந்த உரை குறித்து, ஜூலை 28, 1983 `இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டு “இரத்தம் கொட்டும் இதயத்தோடு” வைகோ பேசினார் என்று
குறிப்பிட்டிருந்தது.

ஈழத்தில் 1983 ஜூலை தமிழ் இனப்படுகொலை தமிழ்நாட்டை உலுக்கியபோது, 1983 ஜூலை 31 இல் இராமநாதபுரத்தில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு தி.மு.க. சார்பில் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் தி.மு.க. எம்.பி., வைகோ ஆற்றிய
உரையின் உணர்ச்சி முழக்கம், என் போன்ற பல்லாயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்களின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வடிக்கச் செய்தது.
அப்போது மாநாட்டில் பேசிய வைகோ அவர்கள், ஈழத்தமிழர்களைக் காக்க இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாடாளுமன்றத்தின் முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று பிரகடனம் செய்தார்.

காலவரையற்ற உண்ணாவிரதம் 

முகவை மாநாட்டில் அறிவித்தவாறு, 1983,ஆகஸ்டு 5 ஆம் நாள், நாடாளுமன்றத்திற்கு அருகில் தலைவர் வைகோ அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கினார். அவருடன், மாநிலங்களவை உறுப்பினர்
எல்.கணேசனும் பங்கேற்றார். வைகோவின் உண்ணாவிரதம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. உலக நாடுகளின் கவனம் இந்திய
நாடாளுமன்றம் நோக்கி ஈர்க்கப்பட்டது. மூன்று நாட்களைக் கடந்த வைகோவின் உண்ணாவிரதம் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து
அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் டில்லியில் உற்று நோக்கப்பட்டது. தலைவர் வைகோவின் உடல்நிலையைக் கருதி உண்ணாவிரத
அறப்போராட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டுமென்று பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தத் தொடங்கினர். நிறைவாக, காஷ்மீர் மாநில முதல்வரும் தலைவர் வைகோவின் நண்பருமான டாக்டர் பாரூக் அப்துல்லா ஸ்ரீ நகரிலிருந்து விரைந்து வந்து, வைகோவின் அறப்போராட்டத்தை முடித்து வைத்தார்.

இதன்பின்னர் 1983, ஆகஸ்டு திங்கள் 16 ஆம் நாள், மாநிலங்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்த தலைவர் வைகோ, இந்தியப் பேரரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். 

“இலங்கையில் தமிழர்களை சிங்கள அரசு வேட்டையாடி வதைத்துக் கொன்ற கொடுமை இட்லரும், தைமூரும் நடத்திய மனித வேட்டையை மிஞ்சி விட்டது. இலங்கையில் நடந்த இனப்படுகொலை சிங்கள அரசால் திட்டமிட்டு
நடத்தப்பட்டதாகும் என்று நான் குற்றஞ்சாட்டுகிறேன்.

என் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் தருகிறேன். இலண்டனிலிருந்து வெளிவரும் “டெய்லி டெலிகிராப்” என்ற பத்திரிக்கையின் நிருபரான அயன்வார்டு என்பவருக்கு இவ்வாண்டு ஜூலை 11 ஆம் தேதி இலண்டனில்
ஜெயவர்த்தனே தந்த பேட்டியின்போது பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

“யாழ்ப்பாணத் தமிழர்களைப் பற்றி நான் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. அவர்களின் உடமைகள் பற்றியோ, உயிரைப் பற்றியோ நான் கவைலப்படத் தயாராக இல்லை. சிங்களவர்களின் எதிர்காலத்தைப் பற்றிதான் என்னால்
சிந்திக்க முடியும்” 

நாட்டின் பிரஜைகள் அனைவரையும் காப்பாற்ற வேண்டிய ஒரு ஜனாதிபதியின் பேச்சைப் பார்த்தீர்களா? தமிழர்களை ஒழிக்க முன்னதாகவே சதித்திட்டம் தீட்டப்பட்டுவிட்டது என்பதை நிரூபிக்க ஜனாதிபதியின் வாக்குமூலமே போதுமானதாகும்.

மரண ஓலங்கள்

கொழும்பிலும் கண்டியிலும் அவை சார்ந்த பகுதிகளிலும் தமிழர்களின் சொத்துகள் அனைத்தும் சூறையாடப்பட்டு விட்டன. 5000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை தமிழர்கள் இழந்துவிட்டனர். இனி கொள்ளையடிப்பதற்கோ தீ வைப்பதற்கோ தமிழர் சொத்துகள் ஏதும் மிச்சம் மீதி இல்லை.

கோடீஸ்வரர்களும் இலட்சாதிபதிகளும் இன்று அகதிகள் முகாமில் பிச்சைக்காரர்கள். எண்ணற்ற தமிழர்கள் இலங்கையின் இனவெறி கொலைகளுக்கு இரையாகிவிட்டனர்.

எரிகின்ற நெருப்பின் ஜூவாலைகளிலே எங்கள் தமிழ்த்தாய்மார்களும், பிஞ்சுக் குழந்தைகளும் உயிருடன் தூக்கி வீசப்பட்ட பயங்கரம் இதுவரை உலகில் நடைபெற்றது உண்டா? தமிழ்ப் பெண்கள் கற்பையும் மானத்தையும்
உயிரினும் மேலாகப் போற்றுகின்ற மரபில் பிறந்தவர்கள்.

அந்தக் கற்புக்கரசிகளை சிங்கள வெறிநாய்களான குண்டர்கள், போலீசார் , இராணுவச் சிப்பாய்கள் தொட்டு இழுத்து, மானபங்கப்படுத்தி, சித்திரவதை செய்து, கதறக் கதற கற்பழித்து கொலை செய்த சம்பவங்கள் மறக்கக்
கூடியவையா? இல்லை. இந்த இரணம் தமிழர்களின் நெஞ்சில் என்றுமே ஆறாது. 

ஆயிரக்கணக்கான தமிழர்கள் பிரேதமாவதற்கு முன்னால்எழுப்பிய மரண ஓலம் உலகின் தலைநகரங்களையெல்லாம் நடுங்கச் செய்யுமே; ஒரு நாட்டின் அரசாங்கமே முன்னின்று போலீசையும் இராணுவத்தையும் ஏவிவிட்டு, படுகொலைகளை நடத்துகிற போது மனித உரிமைகள்
வேட்டையாடப்படுகிறபோது, அதை உள்நாட்டு விவகாரம் என்று சொல்லி தலையிடுவதற்கில்லையென மனித சமுதாயம் தனது கடமைகளிலிருந்து ஒதுங்கிவிட முடியாது. 

இந்தியா கண்டிக்காதது ஏன்?

லெபனான் படுகொலைகளைப்பற்றி, பெய்ரூட் படுகொலைகளைப் பற்றி கூரை மீது ஏறி நின்று கூச்சல் போட்ட இந்திராகாந்தியின் சர்க்கார் இன்று மெளனம் சாதிப்பது ஏன்? வியட்நாமில் மைலாய் சோகம் குறித்து ஆவேசம் காட்டிய இந்திய சர்க்கார், ஐ.நா. மன்றத்தில் இன்று அடங்கிக்கிடப்பானேன்?

மொசாம்பிக்கிலும், அங்கோலாவிலும் மனித உரிமைகள் நசுக்கப்பட்டன என்று ஐ.நா. மன்றத்தில் வெகுண்டெழுந்த இந்திய சர்க்கார் இன்று வாய்மூடிக்
கிடப்பதன் காரணம் என்ன? தென்னாப்பிரிக்காவிலும், ரொடீசியாவிலும் விடுதலை இயக்கங்களை ஆதரிக்கும் இந்திய சர்க்கார், பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு தோள் கொடுக்கும் இந்திய சர்க்கார், ஈழத் தமிழர் விடுதலை இயக்கத்திற்கு மாத்திரம் ஆதரவு தர மறுப்பதன் மர்மம் என்ன?

மதத்தால், மொழியால், வரலாற்றால், கலாச்சாரத்தால் இந்தியப் பிரஜை களோடு இணைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் கொல்லப்படுகையில் நாம்
பார்த்துக்கொண்டு வாளாவிருக்க முடியுமா? 

இலங்கையில் நடப்பது தமிழினப் படுகொலை என்று இப்போதாவது இந்திராகாந்தி ஒப்புக்கொண்டதை வரவேற்கிறேன். இனப்படுகொலை நடக்கிறது என்று பேசுவதோடு இந்திய சர்க்காரின் கடமை முடிந்துவிட்டதா? இனப்படுகொலையைக் கண்டித்து இந்த நாடாளுமன்றம் ஏன் தீர்மானம்
நிறைவேற்றவில்லை? ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று உணர்ந்ததற்குப் பின்னரும் ஐ.நா. சபையின் மனித உரிமை ஸ்தாபனத்திற்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டுசெல்ல இந்திய சர்க்கார் ஏன் முன் வரவில்லை? உலக நாடுகளின் மன்றத்திலே குரல் எழுப்ப வேண்டியது இந்தியாவின் கடமை அல்லவா? 

கிழக்கு வாங்காளப் பிரச்சனையில் பிரதமர் இந்திராகாந்தி

மன்றத்தின் உறுப்பினர்களே, இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று நாம் ஒப்புக் கொண்டதற்குப் பிறகு இனி இப்பிரச்சனை இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. இத்தகைய நிலைமைகளில் இந்தியாவின் அணுகுமுறை எப்படி அமைய வேண்டும் என்பதற்கு பிரதமர் இந்திராகாந்தி அவர்களே 1971 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் மக்களவையில் கருத்துத்
தெரிவித்து இருக்கிறார். இதோ தருகிறேன்:

“கிழக்கு வங்காளப் பிரச்சனையை நாட்டுப் பிரிவினை என்று கூறுவது, அது பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரம் என்று சொல்லுவது தவறான வாதம்
மட்டுமல்ல, திசை திருப்பும் வாதமுமாகும். பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சனையல்ல கிழக்கு வங்காளத்திலே இராணுவம் வேட்டையாடியதால் இது திட்டமிட்டதோர் இனப்படுகொலை ஆகும். சுதந்திர தாகத்தை எந்த சக்தியாலும் உலகில் அழிக்க முடியாது.

இலங்கைத் தமிழர்கள் கேட்பது பிரிவினை அல்ல/ விடுதலை

இலங்கைத் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்த, தமிழ் இனத்தை வேரறுக்கின்ற சிங்கள அரசின் தாக்குதலை முறியடிக்க, மனித உரிமைகளை
நேசிக்கின்ற மக்களின் ஆதரவை உலகெங்கும் திரட்ட இந்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று ஏன் இதுவரை திட்டமிட வில்லை? இந்திய சர்க்காரின் தலையாய கடமையல்லவா இது. வங்கதேசப் பிரச்சனையின் போது உலக நாடுகளின் ஆதரவைத் திரட்ட நமது தூதர்கள் அகிலம் பூராவும் சுற்றி வந்தார்களே; நமது பிரதமர் உலக நாடுகளின்
தலைநகரங்களுக்கெல்லாம் பறந்து சென்றாரே; சிங்கள வெறியர்களை உலகிற்கு அடையாளங்காட்டுவது நமது கடமையல்லவா?

தனித் தமிழ் ஈழநாடு விடுதலைக் கோரிக்கையையும், காலிஸ்தான் கோரிக்கையையும் ஒன்றுபடுத்தி உறுப்பினர் பட்டாச்சாரியா பேசிபோது நான் அதிர்ச்சி அடைந்தேன். இலங்கையில் தமிழர்கள் கேட்பது பிரிவினை அல்ல;
தங்கள் தாயகத்தின் விடுதலையை கேட்கிறார்கள். ஏனெனில், இப்பொழுது இலங்கையில் தமிழர்கள் அடிமைகளாக்கப்பட்டு விட்டார்கள். கொத்தடிமைக்கும் குற்றேவலுக்கும் தமிழர்கள் அங்கே இனி தயாராக இல்லை.

இந்தியாவிலும் இத்தகைய குரல் எழாதா என கேட்டார். இந்தியாவிலும் ஏதேனும் ஒரு பகுதி காலனிப் பிரதேசமாக்கப்பட்டால்; எந்தப் பகுதி மக்களாவது கொத்தடிமைகளாக நடத்தப்பட்டால், அடிமைத்தளைகளை உடைக்கின்ற விடுதலைக்குரல் இங்கும் கேட்கத்தான் செய்யும்.

ஏமாற்றப்பட்ட தமிழர்கள்

பிரதமரின் அறிக்கையில் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வுகாண சில நடவடிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. கூட்டாட்சி முறை மூலம்
பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்றும் சிங்களவர்களும் தமிழர்களும் சேர்ந்து வாழக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்க முயற்சிகள்மேற்கொள்ளப்படும்
என்றும் தெரிவித்திருக்கிறார்கள். 

ஆனால், இந்த முயற்சிகள் பயன் தருமா? கூட்டாட்சித்திட்டம் இலங்கையில் சாத்தியமானதுதானா? தமிழர் தந்தை செல்வா காலத்திலிருந்து கூட்டாட்சி கண்டிட, பண்டாரநாயகாவோடும், சேனநாயகாவோடும் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் எல்லாம் குப்பைத் தொட்டியிலே வீசிப்பட்டுவிட்டன. இத்தகைய வாக்கு உறுதிகளை நம்பி நம்பித் தமிழர்கள் நாசமானதுதான்
மிச்சம். 

தனித் தமிழ் ஈழமே தீர்வு

ஜெயவர்த்தனே கொடுத்துள்ள வாக்குறுதிகள் எல்லாமே மிகப்பெரிய மோசடிகள் அல்லவா? இலங்கைத் தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் மீது எனக்கு மட்டற்ற மரியாதை உண்டு. ஆனால், நான் கேட்கிறேன். இதோ
ஜெயவர்த்தனே உத்திரவாதம் தருகிறார். எனவே தனித்தமிழ் ஈழநாடு கோரிக்கையை விட்டுவிடுவோம் என்று ஈழத்தமிழர்களிடம் அமிர்தலிங்கம் எடுத்துச்சொல்லமுடியும் என்று எவராவது கருதுகிறீர்களா? அவரால் முடியாது. தனித்தமிழ் ஈழநாடு ஒன்றே எங்கள் இலட்சியம் என்ற அடிப்படையில்தான் அமிர்தலிங்கம் கட்சியினரை தமிழர்கள் வாக்களித்து வெற்றிபெற வைத்தனர். வட்டமேஜை மாநாடு கூட்ட ஜெயவர்த்தனே
சர்க்காரை இந்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. பிரிவினைத் தடைச் சட்டத்தை, ஆறாவது திருத்த சட்டத்தை இலங்கை அரசு ரத்து செய்யாமல்
பேச்சுவார்த்தைக்கு தமிழர் தலைவர்களை அழைப்பது நியாயமா?

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்யாமல், பாதுகாப்பு என்ற பெயராலே சிங்கள அரசு போட்டிருக்கிற சர்வாதிகாரச் சட்டங்களை ரத்து செய்யாமல்,
தமிழர்களோடு பேச்சு வார்த்தை நடத்த முடியாது. பேச்சு வார்த்தைக்கான சூழ்நிலையை இலங்கை அரசு உருவாக்கப்பார்க்கிறதா? இல்லையே! பிறகு எந்த அடிப்படையில் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்ற கருதுகிறீர்கள்?

ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தும் கிழக்கு பாகிஸ்தானிலே வாழ்ந்த மக்கள் பாகிஸ்தான் என்ற ஒரு குடையின் கீழ் வாழமுடியாமல் விடுதலை பெற்றதை, தனி நாடு அமைத்ததை நாம் மறந்துவிடக்கூடாது; அப்படியானால் தமிழர்கள் இனி சிங்களவர்களோடு எப்படி சேர்ந்து வாழ முடியும்? தமிழர்களின் விடுதலை வேட்கையை சுதந்திரதாகத்தை இனி எந்த சக்தியால்
தடுக்க முடியும்?

தலைவர் வைகோவின் உணர்ச்சிக் கொந்தளிக்கும் இந்த உரையைக் கேட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள், ஈழத்தமிழர்களின் நியாயத்தை உணர்ந்தவர்களாக ஆதரவு தந்தபோது, ஒரு காங்கிரஸ் அமைச்சர் வைகோவின் உரையை அலட்சியப்படுத்தினார். அந்த காங்கிரஸ் அமைச்சருக்கு தலைவர் வைகோ தகுந்த பதிலடி கொடுத்ததை அடுத்த தொடரில் பார்ப்போம். 

                                                                                                                                தொடரும்...

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

2 comments:

  1. நன்றி மணிகண்டன் அய்யா, நான் தற்போதுதான் சங்கொலி படிக்கிறேன் ஆறு வாரங்களாக, பழைய பகுதிகளை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. பகிர்ந்து கொள்ளும் தங்களுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணன் முத்து அவர்களே ,

      தொடர்ந்து படியுங்கள் , நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்

      Delete