Wednesday, March 14, 2012

இந்தியா இனக்கொலையின் பங்காளி

சங்கரன்கோயில் இடைதேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில் பல்வேறு கிராமங்களில் ம.தி.மு.க வின் பொது செயலளார் வைகோ பிரச்சாரம் செய்து வருகிறார்.
பிரசாரத்தின் இடையே ஹலோ எப் எம் வானொலிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவிடில் தமிழகத்திலிருந்து காங்கிரஸ் துடைத்து எறியப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.


இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஜெனிவா மாநாட்டில் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்று பாராளுமன்றத்தில் இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சூசகமாக தெரிவித்திருக்கும் நிலையில் இது தொடர்பாக ஹலோ எப் எம்முக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
பஞ்சசீலம் பேசிய இந்தியா, உலக அமைதிக்கு குரல் கொடுத்த இந்தியா, மனித உரிமை மீறல்களை கண்டித்த இந்தியா, லட்சகணக்கான தமிழர்கள் இலங்கை தீவில் சிங்கள பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து உலக நாடுகளின் மனசாட்சி விழித்திருக்கும் இந்நேரத்தில் இந்தியா கண்டுகொள்ளாமல் உள்ளது.
ஐ.நா சபையில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் தீர்மானமும் இலங்கையை கண்டிக்கும் தீர்மானம் அல்ல. மாறாக இலங்கை அரசே நியமித்து கொண்ட கண்துடைப்பு அறிக்கையின் அடிப்படையிலாவது சிங்கள அரசு யுத்த காலத்தில் தமிழர்களுக்கு இழைத்த அநீதியை மனித உரிமை மீறல்களை குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்ற அளவில்தான் உள்ளது.
இதைக் கூட சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகள் எதிர்க்கின்றன. ஆயுதமும் பணமும் கொடுத்து இலங்கை அரசு நடத்திய போரை இயக்கிய இந்தியா, திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் சிக்கி கொண்டுள்ளது.      
அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை விட இந்தியாவே ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் இந்தியா கொண்டு வராது. ஏனெனில் இந்தியா இனக்கொலையின் பங்காளி.
இந்தியா இந்த தீர்மானத்தில் எடுக்கவிருக்கும் முடிவு இந்திய ஒருமைப்பாடு தீர்மானிக்கப்படவிருக்கும் விஷயம் இது. இதிலும் இந்திய அரசு துரோகம் இழைக்குமானால் வருங்கால தமிழ் சந்ததி இந்திய ஒருமைப்பாட்டை உடைக்கும் நிலை உருவாகும்.
தமிழினத்திற்கு துரோகம் இழைத்த குற்றத்தில் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளான தி.மு.க வும் பிரதான இடத்தை பெறுகிறது. காங்கிரசின் இந்த முடிவு தமிழகத்திலிருந்து காங்கிரசை துடைத்து எறிந்து விடும் என்று எச்சரிக்கிறேன்.
பிரணாப்முகர்ஜி வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும்போது ராஜபக்சே எழுதி கொடுத்த அறிக்கையை வாசித்தவர். இது குறித்து ஏற்கெனெவே நான் குற்றம் சாட்டியுள்ளேன்.
பாராளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடந்து வரும் நிலையில் தமிழக எம்.பி.க்கள் தங்களது தலைவர்களின் ஆதரவோடு பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க செய்ய வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தென் தமிழகத்தை அழிக்க வரும் எமன். இதை நான் ஆரம்பித்திலிருந்தே கூறிவருகிறேன். பல்வேறு வகைகளில் வெளிநாட்டு நிதிகளை பெற்று வரும் காங்கிரஸ் இந்த பிரச்சனையில் கிறிஸ்தவ மிசினரிகளையும் உதயகுமாரையும் கொச்சை படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.             நன்றி :-ஹலோ எப் எம் வானொலி                       

2 comments:

  1. உண்மையான கருத்துகூர்மைகள்..

    ReplyDelete
  2. நன்றி ஆனந்த் அவர்களே , தொடர்ந்து மதிமுக இணையதள நண்பர்கள் வெளியீடுகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்

    ReplyDelete