Saturday, March 10, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 9 & 10

தீர்மானம் எண் 9

ஆசிரியர் பணியிடங்களைப் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புக!

தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 25,000 பி.எட்., பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து ஆசிரியர் பணிக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் கிராமப்புறத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தங்களின் பட்டப் படிப்புக்காக மூதாதையர்களின் நிலங்களையும், உடமைகளையும் விற்றும், கடன் வாங்கியும் பல சிரமங்களுக்கு மத்தியில், ஆசிரியர் பயிற்சியை முடித்து உள்ளனர்.



இவர்களுக்குத் தங்கள் பெற்றோரையும், குடும்பத்தினரையும் காக்க வேண்டிய பொறுப்பும், நாட்டின் எதிர்காலங்களான மாணவர்களை உருவாக்க வேண்டிய சமூகக் கடமையும் உள்ளது.

கடந்த ஆட்சியில் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்தனர் என்பதற்காக அதை ரத்து செய்வது முறையல்ல.

தமிழக அரசு நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ள தகுதித் தேர்வு மற்றும் போட்டித் தேர்வை ரத்து செய்தோ அல்லது பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் அனைவருக்கும் பணியாணை வழங்கிய பிறகு, பின்தேதியிட்டு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக்குப் பின்னரோ நடைமுறைப்படுத்தலாம்.

எனவே, 15,000 ஆசிரியர் பணியிடங்களையும், 3,600 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் நியமனம் செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளதில், இவர்களுக்குப் பணி நியமனம் வழங்கிட வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 10

மணல் கொள்ளை

தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் மணல் கொள்ளைக் காட்சி மாறவில்லை. கடந்த சில ஆண்டுகளாக தமிழக நதிநீர்ப் படுகைகளில், இயற்கையின் கொடையான மணலை, தாறுமாறாக அள்ளிச் சுரண்டியதால், நிலத்தடி நீர்வளம் நீர் ஆயிரம் அடிகளுக்கும் கீழே போய்விட்டது. மணல் இல்லாததால், மழை நீர் ஆற்றுப் படுகைகளில் சேமிக்க முடியாமல் கடலில் கலந்து வீணாகிறது.

தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, மணல் எடுப்பதற்கான சில வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றுமாறு அரசுக்கு உத்திரவிட்டது.

ஆனால், தாமிரபரணி மட்டும் அன்றி, தமிழ்நாட்டின் அனைத்து ஆறுகளிலும், மணல்கொள்ளை தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.

தமிழக அரசு சார்பில் மணல் அள்ளுவதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஆற்றில் மணல் எடுக்கும்போது இரண்டு யூனிட் மணல் ரூபாய் 636 என்று அரசு அறிவித்தது. ஆனால், அரசு அறிவித்துள்ள குவாரிகளுக்கு அருகிலேயே, சட்டவிரோதமாக, தனிநபர்கள் மூலமாக, இரண்டு யூனிட் 2400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பின்னர், அதே இரண்டு யூனிட் மணல், பொதுமக்களுக்கு 6000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

தமிழக ஆறுகளில் சுரண்டப்படும் மணல் கேரள மாநிலத்திற்குத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கடத்தப்படுகிறது. இது அடியோடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இதன்மூலம் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் குறையவும், தனியார் கோடி கோடியாகக் கொள்ளை அடிக்கவும் வழி செய்யப்பட்டு உள்ளது. அந்தத் தொகை, ஆளுங்கட்சியினருக்குப் போய்ச் சேருகிறது.  ஆட்சியாளர்களின் இத்தகைய அடாவடித்தனமான, அக்கிரம மணல் கொள்ளைக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், தமிழக ஆற்றுப் படுகைகளில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மணல் எடுப்பதற்கான வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும், ஆற்று நீர்ப் படுகைகளைப் பாதுகாத்து நீராதாரம் குன்றாமல் இருப்பதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

No comments:

Post a Comment