மத்திய பட்ஜெட் ஏட்டுச் சுரைக்காய்
மக்களுக்குப் பயன் தராது!
வைகோ கருத்து

உலக வங்கி, பன்னாட்டு நிதியம் ஆகியவற்றின் நெருக்கடிகளுக்குப் பணிந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் மானியம் வெட்டப்பட்டு இருக்கிறது. விவசாயிகளுக்கு நேரடியாக உர மானியம், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் மானியம் நேரடியாக மக்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பு நடைமுறை சாத்தியம் இல்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பெரும் தொழில் நிறுவனங்களுக்கும் சலுகைகளை வாரி வழங்கி விட்டு, சிறு, நடுத்தர தொழில்துறை வளர்ச்சிக்கு எந்தத் திட்டமும் இல்லை. இதனால் வேலைவாய்ப்புகளும் பறிபோகும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியும் இல்லை.
தங்கம் இறக்குமதி வரி உயர்த்தப்படுவதால் தங்கம் என்பது சாமானிய மக்களின் எட்டாத உயரத்துக்குப் போய் விடும். தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ. 2 இலட்சம் என்பது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்திய அரசு பாடம் கற்றதாகத் தெரியவில்லை. சேமிப்பை அடிப்படையான பொருளாதார மையமாகக் கொண்ட நமது நாட்டில் அதற்கேற்ப ஊக்குவிப்புத் திட்டங்களைத் தெரிவிக்காமல் பங்குச் சந்தை முதலீட்டு வளர்ச்சிக்கு மட்டும் திட்டங்களைக் கொண்டு வருவது நல்லதல்ல.
பட்ஜெட்டுக்கு முன்பே தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டி 1.25 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. இது இலட்சக்கணக்கான தொழிலாளர்களைப் பாதிக்கும்.
கடந்த பட்ஜெட்டில் கறுப்புப் பணத்தை மீட்க அறிவிக்கப்பட்ட 5 அம்சத் திட்டம் நடைமுறைக்கே வரவில்லை. தற்போதும், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பல இலட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டு வர திட்டவட்டமான அறிவிப்பு இல்லை.
2 ஜி அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் என்று பல்வேறு ஊழல்களில் ஊறித் திளைத்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, பொது வாழ்வில் ஊழலை ஒழிப்போம் என்பதும், நிர்வாகத்தில் வெளிப்படையான தன்மை என்று கூறுவதும் நகைப்பாக இருக்கின்றது.
மொத்தத்தில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட் ஏட்டுச் சுரைக்காய். எள்முனை அளவும் மக்களுக்குப் பயன் தராது.
‘தாயகம்’ வைகோ
சென்னை-8 பொதுச் செயலாளர்
16.03.2012 மறுமலர்ச்சி தி.மு.க.
No comments:
Post a Comment