Wednesday, March 7, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 7 & 8

தீர்மானம் எண் 7

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!
கச்சத்தீவு மீட்பே தீர்வு

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி வந்து நடத்துகின்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில், தமிழக மீனவர்கள் பலியாவதும், காயம் அடைந்து உயிருக்குப் போராடுவதும், கொடிய சித்திரவதைக்கு ஆளாவதும், உயிர் உடைமைகளை இழப்பதும் வாடிக்கையாகி விட்டன.

இந்தத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த, இந்திய அரசும், கடலோரக் காவல்படையும் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இலங்கை அரசிடம் இருந்து இழப்பு ஈட்டுத் தொகையும்
பெற்றுத் தரவும் இல்லை; உரிய முறையில் எச்சரிக்கவும் இல்லை.



வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வகையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் .எம். கிருஷ்ணா அவர்கள், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிப் போவதால், இலங்கைக் கடற்படை நடவடிக்கை எடுக்கிறது என்றும்; கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு உரிமை இல்லை என்றும் கூறினார்.

தமிழ்நாட்டு மீனவர்களின் உயிரையும், உடைமைகளையும் காப்பாற்ற, இலங்கைக்குத் தாரை வார்த்த கச்சத்தீவைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 8
நெசவுத் தொழில் நசிவு!

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பெரும்புகழ் பெற்று, இந்திய நாட்டுக்கு அயல்நாட்டுச் செலாவணியாக, ஆண்டு ஒன்றுக்குப் பன்னூறு கோடிகளை ஈட் டித் தருகின்ற பின்னலாடைத் தொழில், பெரும் நெருக்கடியில் சிக்கி உள்ளது.

தமிழகத்தில் இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகின்ற நெசவுத் தொழில் வெகுவாக நசிந்து வருகிறது.

திருப்பூரில் சாயக்கழிவுப் பிரச்சினைக்கு இன்னமும் சரியான தீர்வு எட்டப்படவில்லை. முன் அறிவிப்பு எதுவும் இன்றி, நாள்தோறும் நான்கு ஐந்து முறை ஏற்படுகின்ற மின்தடையால், விசைத்தறிக் கூடங்களில் பணிகள் முடங்கி விட்டன. இதனால், வேலை வாய்ப்புகளை இழந்த தொழிலாளர் குடும்பங்களில் வறுமை ஏற்பட்டு உள்ளது.

நெசவாளர்களின் துயர் களைந்திடத் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.



No comments:

Post a Comment