Sunday, March 11, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 11 & 12

தீர்மானம் எண் 11

பரமக்குடி துப்பாக்கிச் சூடு
நடவடிக்கை தேவை

2011 செப்டம்பர் 11 ஆம் நாளன்று, தமிழகக் காவல்துறையினர், பரமக்குடியிலும்,  மதுரை சிந்தாமணியிலும் அக்கிரமமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.




கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்ததுடன், இச்சம்பவம் குறித்து, தமிழக அரசு அறிவித்து உள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணைக் கமிசனின் விசாரணையை, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை ஊட்டுகின்ற விதத்தில் நடத்துவதற்காக, துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகளைப் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அறிக்கை விடுத்து இருந்தார்கள்.

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து படுகாயமுற்றோர் மீதும், காவல்துறையினரின் தாக்குதலில் காயமுற்றோர் மீதும் வழக்குகள் போடப்பட்டு உள்ளதால், அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றும், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்து உள்ள நிவாரணத் தொகையை ரூபாய் ஐந்து இலட்சத்துக்குக் குறையாமல் உயர்த்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.

ஆயினும், துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான அதிகாரிகள், இன்றுவரையிலும் பணி இடை நீக்கம் செய்யப்படவில்லை.

அதுபோலவே, விழுப்புரம் மாவட்டத்தில் இருளர் இனப் பெண்கள் நால்வரைக் கற்பழித்த காவல்துறையினர் கைது செய்யப்படவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேட்டு, தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

எனவே, இந்த இரண்டு சம்பவங்களிலும் குற்றம் சாட்டப்பட்டு உள்ள காவல்துறையினரைக் கைது செய்து, நியாயமான விசாரணை நடத்திட வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 12

தமிழக அரசு ஒப்பந்தப் பணிகளில் 
‘மின் ஆளுமை’ முறையைப் பின்பற்றுக!


தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் இதர துறைகளின் அரசுப் பணிகளுக்கு ஒப்பந்தப் பணிகள் வழங்கும்போது, ஆளும் கட்சியினர் ஆதரவு பெற்றுள்ள ஒப்பந்ததாரர்களுக்கே வழங்கப்பட்டு வருகின்றன.

விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கிய ஒப்பந்ததாரர்களின் விண்ணப்பங்கள் பதிவுத் தபாலில் அனுப்பப்பட்டபோது அத்தபால்களை எடுத்துச் சென்ற தபால்துறை ஊழியர்களை ஆளும் கட்சியினர் அரசு அதிகாரிகள் முன்னிலையிலேயே தாக்கியதால், ஆளும் கட்சியினர் ஆதரவு இல்லாத ஒப்பந்ததாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன. ஆளும் கட்சியினரின் அடாவடித்தனத்தை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

அரசுப் பணிகளில் வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகத்தை நடத்துவதற்கு, ஒப்பந்தப் பணிகளில் ‘மின் ஆளுமை’ முறையைப் பின்பற்றவும், இணைய தளத்தில் அரசின் ஒப்பந்த விண்ணப்பங்களைப் பதிவு இறக்கம் செய்து போட்டியில் பங்கு ஏற்கவும், ‘இ-டெண்டர்’ முறையைத் தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

No comments:

Post a Comment