Tuesday, March 20, 2012

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 3

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

இந்திய ஒருமைப்பாட்டின் மீது நம்பிக்கை இழப்போம்!

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மாபெரும் திருப்புமுனை ஆண்டாகும்.ஈழத்தமிழ் இளைஞர்களின் போர்க் குணத்தையும் புறநானூற்றுப் போர் மரபில் வந்த இளைஞர் கூட்டம் களச்சாவிற்கு அஞ்சாதவர்கள் என்பதையும் இன எதிரி களுக்கு உணர்த்திய ஆண்டு. 1983 ஜூலை 15 போர்க்களத்தில் சிங்களப்படை யால் சுற்றிவளைக்கப் பட்ட சார்லஸ் ஆண்டனி என்ற தளபதி,தான் எதிரி களால் கொல்லப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தன்னைச் சுட்டுக் கொல்லுமாறு உடன் நின்ற போராளிக்கு கட்டளையிட்டுத் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இவர் நினைவாகவே மாவீரர் பிரபாகரன் தனது முதல் மகனுக்குச் சார்லஸ் ஆண்டனி எனப் பெயரிட்டார்.



1983 ஜூலை 23 இல் பிரபாகரன் தலைமையில், தளபதி கிட்டு மற்றும் செல்லக்கிளி உள்ளிட்ட 14 போராளிகள், இராணுவ வாகனத்தை குண்டு வைத்துத் தகர்த்தனர். தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சிங்கள இராணுவ வெறியர்கள் 13 பேர் இந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். தளபதி செல்லக்கிளி களப்பலி ஆனார். இதே ஆண்டில் தான் புலிகளின் “தற்கொலைப்படை” உருவாக்கப்பட்டது.

தமிழ் ஈழ இளைஞர்களின் விடுதலைத்தாகம், சிங்கள இனவெறி இராணுவத்தைச் சந்திக்க துப்பாக்கி ஏந்திப் போரிடத் துணிந்ததற்கு 1983,
“கறுப்பு ஜூலை” காரணமாயிற்று. விடுதலைப் போராளி களை பயங்கரவாதி கள் என்று இங்கு சில கைக்கூலிகள் கொச்சைப்படுத்திய போது, நாடாளு மன்றத்தில் தலைவர் வைகோ தக்க பதிலளித்தார்.

1983 ஆகஸ்டு 16 இல் மாநிலங்கள் அவையில் முழங்கிய வைகோ பின் வருமாறு குறிப்பிட்டார்.

பகத்சிங் பயங்கரவாதியா?

“தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட இளைஞர்களை பயங்கரவாதிகள் என்று
சில பேர் சித்தரிக்கப் பார்க்கிறார்கள். இல்லை. இந்த இளைஞர்கள் விடுதலைப்
போராட்ட வீரர்கள்.

தங்கள் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும்
அர்ப்பணிக்கும் தியாகிகள். இந்த மகத்தான தியாகிகளை பயங்கரவாதிகள்

என்பீர்களானால், பாராளுமன்றத்தில் குண்டு வீசிய பகத்சிங்கும் பயங்கரவாதி
தான். முதல் சுதந்திரப் போருக்கு வித்திட்ட மங்களதேஷ் பாண்டேயும் பயங்கரவாதிதான். ஏன்? வங்கத்துச் சிங்கம் நேதாஜி சுபாஸ் சந்திர போசும்
பயங்கரவாதிதான். இவர்களை எல்லாம் பயங்கர வாதிகள் என்றுதானே பிரிட்டீஷ் அரசாங்கம் குற்றம் சாட்டியது. இந்த வாதத்தை ஒப்புக் கொள்வீர் களேயானால் அந்தத் தலைவர்களின் உருவப்படங்களை இனிமேல் இந்தியா வில் திறக்காதீர்கள்.

பயங்கர வாதிகள் என்று சித்தரிக்கப்பட்ட இந்தத் தமிழ் இளைஞர்கள் நிராயுத
பாணிகளான சிங்களவர்களை, அப்பாவி பிரஜைகளைத் தாக்கியதாக ஒரு
சம்பவத்தையாவது ஜெயவர்த்தனே சுட்டிக் காட்ட முடியுமா? சிங்களப்
பெண்களுக்கு சிறிதளவு தொல்லை யாவது தந்தார்கள் என்று இந்த வீர
வாலிபர்களைக் குற்றஞ்சாட்ட முடியுமா?

பெண்களைத் தாயாக வணங்குகின்ற தமிழர் பண்பாட்டிலே பிறந்தவர்கள் இந்த வாலிபப் புலிகள். தமிழர்களை அழிக்கின்ற போலீசையும் இராணுவத்
தையும் தானே இந்த விடுதலைப் போராளிகள் எதிர்த்துப் போராடுகின்றனர்.

ஆனால், ஒவ்வொரு முறையும் அப்பாவித்தமிழர்களை நிராதரவான தமிழர் களை தாக்கிக் கொல்வதுதானே சிங்களவர் களுக்கு வழக்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் அபலைகளானதமிழ்ப் பெண்களின் கற்பைத் தானே சூறையாடுகிறார்கள்...”

இவ்வாறு தலைவர் வைகோ பேசிக்கொண்டிருந்தபோதே, திமிர் பிடித்த காங்கிரஸ் அமைச்சர் கல்பநாத்ராய் மிகவும் அலட்சியமாக “சரிதான் போதும் போதும்” என்று சிரித்துக்கொண்டே கூறினார். உடனே வைகோ எரிமலை யானார்.

இரத்தம் கொதிக்கிறது

“இரக்கமற்றவரே என்ன சொன்னீர் ? போதும் என்று என் பேச்சை அலட்சியம்
செய்கிறீரா? என்னுடைய இரத்தம் கொதிக்கிறது. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். எங்கள் உணர்வோடு, ஊனோடு, உதிரத்தோடு,
உயிரோடு ஒட்டிக்கிடக்கும் எங்கள் சகோதரர்கள் கொல்லப்படுவதை, எங்கள்
தாய்மார்கள் கற்பழிக்கப்படுவதை எண்ணி எண்ணி இரத்தம்கொதிக்குதய்யா; எங்கள் நெஞ்சம் சுக்கல் சுக்கலாக உடைகிறது.

ஆனால், டெல்லியிலே இருக்கிற நீங்கள் சர்வ சாதாரணமாக சிரித்துக் கொண்டு இருக்கிறீர்கள். கொந்தளிக்கும் எங்கள் எண்ணங்களை உங்களால் என்றைக்கும் புரிய முடியாது.

தியாகம் வீண் போகாது

குட்டிமணியும், ஜெகனும், தங்கதுரையும் சிந்திய இரத்தம் வீண்போகாது. விலை மதிக்க வொண்ணாத தியாகம் வீண் போகாது. அவர்களின் பெயர்கள்
தமிழர்களின் சரித்திரத்தில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுவிட்டன.

இதோ என் கரங்களில் இருக்கின்ற தங்கதுரை, குட்டிமணி, ஜெகனின் புகைப் படங்களைப் பாருங்கள். விலங்குகள் இடப்பட்டு இராணுவத்தால் இழுத்து வரப்படும் நிலையிலும் வீரப்புன்னகை மலரும் அவர்களின் முகங்களைப் பாருங்கள்! நெஞ்சுயர்த்தி நடக்கும் அந்த மாவீரர்களின் ஜொலிக்கின்ற கண் களைப் பாருங்கள்! தாய் நாட்டின் விடுதலைக்காக தங்கள் ஆயுளை அர்ப்பணித்த தமிழ்த்தாயின் வீரப்புதல்வர்களின் சுதந்திர வேட்கைவெற்றி பெற்றே தீரும். அவர்கள் மடிந்தது தமிழ் ஈழம் அடிமைச்சங்கிலிகளை மீண்டும் அரவணைப்பதற்காக அல்ல! ஆயிரம் ஆயிரம் குட்டிமணிகள் தோன்று வார்கள். ஆயிரம் ஆயிரம் ஜெகன்கள் தோன்றுவார்கள். ஆயிரம் ஆயிரம் தங்கதுரைகள் மீண்டும் தோன்றுவார்கள்.

டில்லியில் தமிழ் ஈழ தூதராலயம்

தனித் தமிழ் ஈழநாடு மலர்ந்தே தீரும். இந்தியா படை அனுப்பி உதவினாலும் சரி, உதவாவிட்டாலும் சரி, தமிழ் ஈழம் மலர்வதை எவராலும் இனி தடுக்க
முடியாது. இந்தியாவின் தலைநகரமான டில்லியில் தனித் தமிழ் ஈழ நாட்டின்
தூதராலயம் திறக்கப்படுகின்ற நாள் தொலைவில் இல்லை. என் வாடிநநாளில்
அதனை நான் காணத்தான் போகிறேன்.

ஒருமைப்பாடு நொறுங்கும்

இலங்கையில் உள்ள தமிழர்களைக் காப்பதற்கு இந்தியா தவறுமானால் இந்திய ஒருமைப்பாடு என்கின்ற தத்துவத்திலே நாங்கள் நம்பிக்கை இழப்போம். இதுவே எனது எச்சரிக்கை.” 1983, ஜூலை, ஆகஸ்டு மாதங்களில்
தலைவர் வைகோ நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில்,
ஈழத் தமிழினப் படுகொலைகளை எடுத்துரைத்ததன் விளைவாக, பிரதமர்
இந்திராகாந்தி அவர்கள் 1983 ஆகஸ்டு 16ஆம் நாள் நாடாளுமன்றத்தில் பேசும்
போது, இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது என்று கடுமையாகவே
குறிப்பிட்டார்.

இலங்கையில் இனப்படுகொலையை திட்டமிட்டே நடத்திய கொடியவன்
ஜெயவர்த்தனே, காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக சிவப்புக்கம்பள மரியாதையோடு டில்லிக்கு வருகை தந்தான். இதனைக் கண்டித்தும்,இந்திய அரசின் சார்பில் ஜி.பார்த்தசாரதி கொழும்புக்கு அனுப்பப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தியது குறித்தும் மாநிலங்களவையில் 1983 டிசம்பர் 7 ஆம் நாள் தலைவர் வைகோ அவர்கள் வினாக்கள் தொடுத்தார்.

“இலங்கைப் பிரச்சினை குறித்து அண்மையில் இந்திய அரசு நடத்திய பேச்சு வார்த்தை குறித்து வெளிவிவகார அமைச்சர் தனியாக ஒரு அறிக்கை தாக்கல் செய்வார் என எதிர்பார்த்தேன்.

இந்தக் கூட்டத்தில் காமன்வெல்த் மாநாட்டைக் குறித்த எனது கசப்பையும்
வருத்தத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இலங்கையின் இன வெறியனும், கொடியவனுமான ஜீனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே, கோலாகல வரவேற்பைப் பெற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வந்தான். தமிழர்களின் ரத்தக்கறை அவன் கரங்களில் படிந்துள்ளது. நீங்களோ அவனுக்கு இரத்தினக் கம்பள வரவேற்புத் தந்தீர்கள்.

ஈழப்படுகொலையில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்காக
ஒரு அனுதாப வார்த்தை கூட உச்சரிக்காதவனை இந்திய அரசு வரவேற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அவர்களே! (பி.வி.நரசிம்மராவ்) உங்கள் அரசு வரவேற்ற ஜெயவர்த்தனேயின் கடந்தகாலத்தை நினைவூட்டு கிறேன். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஏற்பட்ட கடந்தகால சமாதான ஒப்பந்தங்கள் அனைத்தையும் குப்பைத் தொட்டியிலே தூக்கி எறிய மூல
முழுமுதல் காரணகர்த்தா தான் இந்த ஜெயவர்த்தனே.

பேச்சுவார்த்தை பலன் தராது

இங்கு பேசிய பல உறுப்பினர்கள் இலங்கைப் பிரச்சனை குறித்து ஓரிரு நிமிடங்கள் செலவழித்து ஜி.பார்த்தசாரதிக்கு பாராட்டுப் பத்திரங்களை
வாசித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். பார்த்தசாரதியின் பேரில் நான் வசை பாடிக் கொண்டிருக்கப்போவதில்லை இப்போது! ஆனால், அவரது முயற்சி யால் விளைந்த பேச்சுவார்த்தைகளில் தீர்வு ஏற்பட்டு விடுமென்று மாத்திரம் கனவு காணாதீர்கள்.

இப்பொழுது சொல்லப்படுகின்ற தமிழர்களுக்கு தனி வட்டாரக் கவுன்சில்கள் என்ற திட்டம் 1957 இல் தமிழர் தலைவர் செல்வநாயகம் அன்றைய பண்டார நாயகாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திலேயே இடம் பெற்றது. சொல்லப் போனால் தமிழர்கள் வாழும் நிலம், அங்கு வசிக்கும் உரிமை, அதிகாரம்
தமிழர்கள் வசமே ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, சிங்கள வெறியர்களை அணி திரட்டி யவன் தான் இந்த ஜெயவர்த்தனே. அதனை எதிர்த்துக் கண்டித்து அணிவகுப்பு நடத்தியவன்தான் இந்த ஜெயவர்த்தனே. அதனால்தான் அந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. மீண்டும் 1965 இல் ஜெயவர்த்தனே கட்சியின் யு.என்.பி. ஆட்சியில் இருந்தபோது அதிபர் சேனநாயகா தமிழர் தலைவர் செல்வநாயகத் தோடு ஒரு சமரச ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். அந்த ஒப்பந்தத்தையும் எதிர்த்து கச்சை கட்டியவன்தான் இந்த ஜெயவர்த்தனே. ஒப்பந்தம் கைவிடப் பட்டது.

மீண்டும் தமிழர்கள் மீது பயங்கரத் தாக்குதலுக்கான ஒரு சதித்திட்டம்
உருவாகிக் கொண்டிருக்கிறது.

தமிழர்களைக் கொன்று குவிப்பதற்காக சிங்கள அதிரடிப்படையினருக்கு
இஸ்ரேலில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இலங்கையின் காட்டு நாயகா விமான தளத்திலிருந்து லண்டனுக்குச்
செல்கின்ற ஒவ்வொரு விமானத்திலும் இந்த அதிரடிப்படையினருக்கு 25
இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன. ஒரு பக்கத்திலே தமிழர்களை அழிக்க இந்தப் பயிற்சிச்கு ஏற்பாடு ஆகியுள்ளது. இன்னொரு பக்கத்தில் திரிகோண
மலைக்கும், யாழ்பாணத்திற்கும் இடையில் கொக்கலாஞ்சோலை என்ற
பகுதியில் ஆயிரக்கணக்கான சிங்கள மீனவர் களைக் கொண்டுவந்து
குடியேற்றி, அவர்களுக்குத் துப்பாக்கிகளும் ஆயுதங்களும் வழங்கப் பட்டுள்ளன. தமிழர்களைப் பூண்டோடு அழிக்க சிங்கள வெறிக்கூட்டம் தயாராகி வருகிறது.

உரிமைக்காகப் போராடுகின்ற தமிழ் இளைஞர்களைக் கொன்று குவிக்க
ஜெயவர்த்தனே துடிக்கிறான். தமிழ் ஈழ விடுதலை இயக்க இளைஞர்களிடம் தான் தமிழ் ஈழத்தின் எதிர்காலம் இருக்கிறது. பயங்கரவாதிகள் என்ற பட்டம் சூட்டி இந்த இளைஞர்களை வேட்டையாட போலீசையும், இராணுவத்தையும் ஏவி விடுகிறான் ஜெயவர்த்தனே.

வெலிக்கடைச் சிறை படுகொலைகள்

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ் வாலிபர்கள் வதைக்கப்பட்டது போல்
உலகில் எங்கும் நடந்தது இல்லை. இதோ என் கையில் இருப்பது டேவிட் என்ற காந்தியவாதியின் அறிக்கை. இவரும் வெலிக்கடைச் சிறையில்தான்
அடைக்கப்பட்டிருந்தார். இந்தியாவில் ஜெயப்பிரகாஷ் நாராயணனைப்போல்
இலங்கையில் தமிழ் அகதிகளுக்குப் புனர் வாழ்வு கொடுத்தார். வெலிக்கடைச்
சம்பவம் பற்றி அவர் கூறுகிறார்.

படுகொலை செய்யப்பட்ட 35 தமிழர்களின் பிரேதங்களும் சிறை முற்றத்தில் கெளதம புத்தரின் சிலைக்கு முன்னால் குவிக்கப்பட்டிருந்தன. சிங்கள வெறியர் களின் ரத்த தாகத்தை தணிப்பதற்காக இந்த வேள்வி நடை பெற்றிருந்ததாக அத்துலத்முதலி இதனை விவரித்திருந்தார். மயிரிழையில்
உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த சில தமிழர்கள் பிரேதக் குவியலிலிருந்து
தங்கள் தலைகளை உயர்த்தினார்கள். அபயம் கேட்ட அவர்களை அந்தக்
கணத்திலேயே அடித்துக் கொன்று பிணமாக்கினார்கள்.

மட்டக்களப்பு சிறை உடைப்பு

இந்தக் கொடுமைகளைக் கண்டுதான் தமிழ் வாலிபர்கள் இலங்கையில்
கொதித்துக் கிளம்பியிருக்கிறார்கள். பாரீஸ் நகரத்தின் பாஸ்டலி சிறைச் சாலை உடைக்கப்பட்டதுபோல் மட்டக்களப்பு சிறைச்சாலையை உடைத்தெறிந்து தமிழர்களை விடுவித்துள்ளார்கள். தமிழ் வாலிபர்களைச் சிறைபிடிக்க ஏவி விடப்பட்ட இலங்கை இராணுவமும் போலீசும் ஏன் இந்தத் தமிழ் வாலிபர் களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏன் கைது செய்ய முடியவில்லை. என்ன காரணம்?

யாழ்ப்பாணத்திலே இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதியிலே உள்ள ஒவ்வொரு தமிழனுடைய வீடும், இந்த வாலிபர்களுக்கு அடைக்கலப்பாசறை யாகும். இத்தகைய இளைஞர்களுக்கு உதவி செய்தால், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் இருபது ஆண்டுகள் சிறை என்று இலங்கை அரசு சட்டம் போட்டிருக்கிறது. ஆபத்தான இச்சட்டங்களைப் பற்றி இந்தத் தமிழர்கள் அஞ்சவில்லை. தமிழ் மக்களின் ஆதரவு தீவிரவாத இளைஞர் களுக்கு முழுமையாக இருக்கிறது.

போராளிகள் பங்கேற்காத வட்டமேஜை மாநாடு?

இந்த வாலிபர்கள் கலந்து கொள்ளாத எந்த வட்டமேஜை மாநாடும் அர்த்த மற்றதாகும். இந்த இளைஞர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டாலும், தங்களது ஜீவ லட்சியமான தமிழ் ஈழத்தை விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்.

இளைஞர்களின் தீவிரவாத இயக்கம் பல பிரிவுகளாகப் பிளவு பட்டுக்கிடக் கிறது. இதில் மூன்று முக்கியமான அமைப்புகள் இருக்கின்றன. பிரபாகரன்
தலைமையிலான தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் (Liberation Tigers),

2. முகுந்தன் என்ற உமா மகேசுவரன் தலைமையில் உள்ள தமிழ் ஈழ மக்கள்
விடுதலை இயக்கம் (PLOTE),

3. மடிந்துபோன தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் ஆகியோரது சகாக்களின்
தலைமையில் இயங்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO) இந்த மூன்று
அணியினரும் வேற்றுமைகளை மறந்துவிட்டு, ஒன்றுபட்டு, ஓரணியில்
போராடும் காலம் கனிந்து வருகிறது.

போர்க்குணம் படைத்த தமிழ் வாலிபர்கள் போராடுவார்கள். ஒன்று மாத்திரம் நிச்சயம். அத்தனை பேரும் போராடி மடிந்தவர்களே தவிர சரணடைய மாட்டார்கள். இலட்சியத்தை சமரசம் செய்யமாட்டார்கள். இலங்கைத்
தமிழர் இயக்கம் பிரிவினை இயக்கமல்ல, விடுதலை இயக்கம் என்பதைப்
புரிந்துகொள்ளாமல், அடுத்த நாட்டை துண்டாடக்கூடாது என்று பேசு கிறார்கள்.

பாலஸ்தீனியர்களுக்கு என்று இனியும் சொந்த நிலமில்லை. இருந்தாலும்
ரத்தக்களரியில் நிற்கிறார்கள், அவர்கள் தாயகத்திற்காக. தனி நாடும் தனி
வரலாறும் கொண்ட தமிழர்கள் தாம் வாழும் பூமியில் நின்றுவிடுதலைக்காகப்
போராடுகிறார்கள்.

ஜெயவர்த்தனேயின் கபட நாடகத்தில் ஏமாந்துவிடக்கூடாது. ஆயுதமேந்திப்
போராடும் தமிழ் வாலிபர்கள் இயக்கங்களை அழைத்து இந்திய அரசு கருத்து கேட்டிருக்க வேண்டும்.

மீண்டும் ஒரு படுகொலை நடந்து, தமிழ் இளைஞர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடரும் சூழ்நிலையில், இந்தத் தமிழ் இளைஞர்களின் பக்கமே இந்திய அரசின் அனுதாபமும் ஆதரவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”

தலைவர் வைகோ உரைக்குப் பின்னர், வெளிவிவகாரத்துறை அமைச்சர்
பி.வி.நரசிம்ம ராவ், சர்வதேச நிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்து ஒரு
மணிநேரம் பேசினார். அதில் இருபது நிமிடங்கள் இலங்கைப் பிரச்சனை
குறித்த வைகோவின் உரைக்கு பதிலளித்தார்.

“இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து, கோபால்சாமி கேள்விகளை எழுப்பினார். ஒரு வகையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விவாதம்
தொடங்கியபோது, கோபால்சாமியை நான் மன்றத்தில் பார்க்கவில்லை.

அவர் எங்கே என்று தேடிக்கொண்டிருந்தேன். இந்தப் பிரச்சினையை இவர் தான் எழுப்புவார் என்று எனக்குத் தெரியும். எனவே, இந்தக் கேள்விகளை அவர் எழுப்பிய போது நான் ஆச்சரியப்படவில்லை. இலங்கைத் தமிழர் தலைவர் களுடனும் ஜெயவர்த்தனேயுடனும் தனித்தனியாக இந்திய அரசு பேசியபோதும் அவர்களின் யோசனையைத்தான் இருதரப்பிலும், பரிமாறினோமே தவிர இந்திய அரசு எந்தத் திட்டத்தையும் சொல்லவில்லை.
கடந்தகால கசப்பான அனுபவத்தைப் பற்றி கோபால்சாமி எச்சரித்தார். அதையும் கவனத்தில் கொண்டுதான் எந்த முடிவுகளும் எடுக்கப்படும்.”

என்று நரசிம்ம ராவ் தனது பதிலுரையில் சுட்டிக்காட்டினார்.

ஆனால், இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு சிங்கள அதிபர் ஜெயவர்த்தனே
ஒத்துழைக்கவில்லை. மாறாக, இலங்கைத் தமிழர்களை வேரறுக்கவே
திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தான். அதன் விளைவாக அவன் போட்ட
சதிவலையில் இந்தியா வீழ்ந்தது. விளைவுகள் விபரீதத்தில் போய் முடிந்தன. அந்த சூழலில் தலைவர் வைகோ நாடாளுமன்றத்தில் எழுப்பிய முழக்கங்கள் மறக்கக் கூடியனவா?

                                                                                                                              தொடரும்...
நன்றி


கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment