Sunday, March 31, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 6

2011 ஆம் ஆண்டு 

10.8.2011 உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள், ரவீந்திரன், பட்நாயக் அமர்வில், இன்று முதலாவது வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆலை நிர்வாகத்தின் வழக்கறிஞர், மாசு கட்டுப்பாட்டுக்காக தாங்கள் 500 கோடி ரூபாய் செலவழித்து இருப்பதாகச் சொன்னார்.

உடனே நீதிபதி பட்நாயக், ‘அப்படியானல், அந்த அளவுக்கு மோசமாக மாசுபடும் சூழல் இருக்கிறதா?’ என்று கேட்டார். ‘இவ்வளவு செலவழிக்க வேண்டும் என்றால் எவ்வளவு இலாபம் கிடைத்து இருக்கும்?’ என்றும் கேட்டார்.



‘பல்லாயிரக்கணக்கான கோடிகள் லாபம் சம்பாதித்து விட்டார்கள்’ என்றார் வைகோ.

நீதிபதி ரவீந்திரன், ‘ஆலைக்கு அருகில் உள்ள தூத்துக்குடி நகரத்தில் தெருவில் போகின்ற சராசரி மனிதரிடம், இந்த ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு உண்டா? இல்லையா? என்று கருத்து அறிய வேண்டும்’ என்றார்.

உடனே ஆலை வழக்கறிஞர், ‘அரசியலுக்காகத்தான் இதைப் பிரச்சினை ஆக்குகிறார்கள்’ என்றார்.

அதை வைகோ மறுத்து, ‘துளி அளவும் இதில் அரசியல் நோக்கம் இல்லை. மக்கள் நலனைக் காப்பதற்குத்தான் ஆலையை மூட வேண்டும் என்கிறோம். ஆலையை இயக்குவதற்கு சட்டப்படி அனுமதி இல்லாமலேயே, கடந்த இருபது மாதங்களாக, சட்ட விரோதமாக இந்த ஆலையை இயக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். சட்டப்படி அனுமதி இல்லை என்பதை, நீரி குழுவே ஒப்புக் கொண்டு இருக்கின்றது’ என்று கூறினார்.(திமுக அரசும் , அதிமுக அரசும் ஆலைக்கு அனுமதி இல்லாமலே இயங்க உதவியுள்ளது )

தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், நீரி குழு அறிக்கையின் மீதான தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று, ஏற்கனவே நீதிபதிகள் சொல்லி இருந்தும், தமிழக அரசு எந்தக் கருத்தையும் பதிவு செய்யவில்லை. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இரண்டு வாரங்கள் வாய்தா கேட்டு இருந்தது. எனவே, நீதிபதிகள், தமிழக அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும், கண்டிப்பாகத் தங்கள் கருத்துகளை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கூறி, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

25.8.2011  மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையின் வழக்கறிஞர், தன் வாதத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர், இந்த நீதிமன்றத்துக்கு அனுப்பி உள்ள அறிக்கையில், சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், கட்டுப்பாட்டை மீறி எந்த மாசும் இல்லை என்றும், மக்களுக்கும், கால்நடைகளுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், அந்தப் பகுதியில் உள்ள மற்ற தொழிற்சாலைகளால்தான், ஓரளவு சுற்றுச்சூழல் மாசுபட்டு உள்ளது என்றும் குறிப்பிட்டு உள்ளதைச் சுட்டிக்காட்டி வாதாடினார்.

இந்த வழக்கில் வைகோ தன் வாதத்தை முன்வைத்தபோது, தமிழ்நாடு அரசு, குறிப்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர், அரசின் அனைத்துத் துறைகள் உள்ளிட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், முழுக்க முழுக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக, உண்மைக்கு மாறான தகவல்களைத் தந்து, ஆலைக்கு ஆதரவாக அறிக்கை அளித்து உள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இதே உச்சநீதிமன்றத்தில், கடந்த டிசம்பர் 7 ஆம் நாள் தந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீரும், தேங்கும் நீரும் மாசுபட்டு உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளது. தற்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கையில், தண்ணீரில் எந்த மாசும் இல்லை என்று, பொய்யான தகவலைத் தந்து உள்ளார்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம், டிசம்பரில் கொடுத்த அறிக்கையில், காற்று மண்டலத்தில் இந்த ஆலையால் மாசு ஏற்பட்டு விட்டது என்று தெரிவித்ததற்கு முற்றிலும் நேர்மாறாக, மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை தந்து உள்ளார்.

இப்படி எத்தனையோ சான்றுகளைத் தர முடியும். மாவட்ட ஆட்சித் தலைவர், அதிகாரிகளை அழைத்துக் கொண்டு, ஆலை நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்த மக்களை மட்டும் சந்தித்துக் கருத்தைப் பதிவு செய்து உள்ளார்.

சில்வர்புரம், தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியபுரம் இந்த ஊர்களின் வழியாக அதிகாரிகள் குழு செல்லும்போது, அந்த ஊர்களில் நிற்கவே இல்லை. மீளவிட்டானிலும், தங்கள் வருகையை அங்குள்ள மக்களுக்குத் தெரிவிக்கவே இல்லை. இதுகுறித்து, அந்தக் கிராமங்களைச் சார்ந்த மக்கள், தங்களிடம் ஏன் கருத்துக் கேட்கவில்லை என்று, ஆகஸ்ட் 19 ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவருக்குப் புகார்க் கடிதம் அனுப்பி உள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தபோது, 1994 ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், திட்டவட்டமாக விதித்த நிபந்தனை என்னவென்றால், தேசிய கடல் பூங்கா உள்ளிட்ட சுற்றுச்சூழல் எளிதில் பாதிக்கக்கூடிய இடங்களில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால்தான், ஆலையை நிறுவ வேண்டும் என்று கூறி, தடை இல்லாச் சான்றிதழ் தந்தது. மீண்டும், 1995 மே 22 ஆம் தேதி, ஆலைக்கு அனுமதி வழங்கும்போதும், இதனையே 19 ஆவது நிபந்தனையாக அறிவித்து இருந்தது. இந்தப் பகுதியை தேசிய கடல் பூங்கா என்று, தமிழ்நாடு அரசு 87 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி, அரசு இதழில் வெளியிட்டு உள்ளது. ஆனால், இந்த ஆலை கடல் பூங்காவுக்கு 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளாகவே அமைந்து உள்ளது என்பதை, நீரி நிறுவனமும் உறுதி செய்து உள்ளது. ஆலை நிர்வாகமும் இதை மறுக்க முடியவில்லை. தற்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கையில் கூட, 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளாகவே ஆலை அமைந்து இருக்கின்றது என்பதை ஒப்புக் கொண்டு உள்ளது.

இந்த ஒரு காரணத்துக்காகவே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. நாங்கள் கோடிக்கணக்கில் செலவழித்து விட்டோம்; கட்டடங்களைக் கட்டி இயந்திரங்களைப் பொருத்தி விட்டோம்; ஆலையை மூடினால் எங்களுக்கு நட்டம் என்று நிர்வாகம் வாதிடுமானால், இந்தியாவில், விதிகளை மீறிக் கட்டப்படுகின்ற எந்தக் கட்டடத்தையும் இடிக்க முடியாது. அரசு நிர்வாகமோ, நீதித்துறையோ இந்த வாதத்தை ஏற்காது.

97 க்குப் பிறகு, அங்கு போராட்டங்களே நடைபெறவில்லை என்று வாதிட்டார்கள். 97 ஆகஸ்ட் 31 ஆம் நாள், பல்லாயிரக்கணக்கில் மக்களைத் திரட்டி ஆலை முற்றுகைப் போராட்டம் நடத்திக் கைது செய்யப்பட்டபோது, போராட்டக்காரர்கள் மீது, ஆலை நிர்வாகம் வன்முறைக் குற்றச்சாட்டு வைத்தது. அது உண்மை அல்ல என்பதால், மக்கள் கோபத்தால் வன்முறை வந்து விடக் கூடாது என்று எண்ணி, ‘இனி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுவோம்; அங்கு நீதி கிடைக்கும்’ என்று அறிவித்து விட்டு, அதற்குப்பிறகுதான், நீதிமன்றத்தில் போராடிக் கொண்டு இருக்கின்றோம்.

ஒரு கட்டத்தில் நீதிபதி அவர்கள், தி.மு.க., அ.தி.மு.க., இரு கட்சிகளும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கவில்லை என்று கூறினார். ம.தி.மு.க. மட்டும்தான் போராடியதாக இங்கே சொன்னார்கள். இல்லை. விவசாய அமைப்புகள், மீனவர் அமைப்புகள், பொது நல அமைப்புகளோடு சேர்ந்து நாங்களும் போராடினோம். இப்பொழுதும், அங்கு வாழும் மக்கள் ஆலைக்கு முழு எதிர்ப்பாகவே இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை ஆகும் என்றார்.

நீதிபதி ரவீந்திரன் குறுக்கிட்டு, ‘மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கையை, நாங்கள் கணக்கில் எடுக்கப் போவது இல்லை. அதை விட்டு விடுங்கள். நீரி அறிக்கையின்பேரில், என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்துத் திட்ட வட்டமாகத் தமிழ்நாடு அரசு, ஒரு சுருக்கமான அறிக்கை தர வேண்டும். அதுகுறித்து மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று, பின்னர் முடிவு எடுப்போம்’ என்று கூறி, வழக்கு விசாரணையை, ஒத்தி வைத்தார்.

‘வைகோ ஒரு அரசியல்வாதி என்ற அடிப்படையில் பேசுகிறார்’ என்று ஆலை வழக்கறிஞர் கூறினார். வைகோ அதை மறுத்து, ‘இங்கே நான் மக்கள் நலனுக்காகத்தான் வந்து இருக்கிறேன்’ என்றார்.

உடனே நீதிபதி ரவீந்திரன் குறுக்கிட்டு, ‘வைகோ வெளியில்தான் அரசியல்வாதி; இங்கு அரசியல்வாதி அல்ல’ என்று சொன்னார்.

No comments:

Post a Comment