Sunday, March 31, 2013

ஸ்டெர்லைட் ஒரு பார்வை - 5

2011 ஆம் ஆண்டு 

29.4.2011அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. நீரி நிறுவனம், ஆய்வு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் வழங்க வில்லை.

இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் வைகோ தெரிவித்ததாவது:

உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 40 நாள்களுக்குப் பின்னர்தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு, நீரி நிறுவனம் ஆய்வுக்கு வந்தது. முதல் சுற்று ஆய்வு, ஏப்ரல் 6, 7, 8, தேதிகளில் நடைபெற்றது. இரண்டாவது சுற்று ஆய்வு, ஏப்ரல் 19, 20, 21 தேதிகளில் நடைபெற்றது.

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதற்கு இணங்க, எனக்கும் தகவல் தரப்பட்டு, நானும் ஆய்வின்போது உடன் இருந்தேன். ஆய்வு அறிக்கையை, நீரி தந்தபின், அதனுடைய பிரதிகள் எனக்கும் வழங்கப்பட வேண்டும்; அந்த அறிக்கையின் மீதான எனது கருத்துகளை, உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார்.



அதற்கு நீதியரசர்கள், ரவீந்திரன், பட்நாயக் ஆகியோர், ‘நீரி நிறுவனம் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு, தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் உடன் இருந்து ஏற்பாடு செய்ய வேண்டும்; அந்த அறிக்கையின் பிரதி, வைகோவுக்கும் வழங்கப்பட வேண்டும்; அதன்பின்னர் வைகோ தன்னுடைய கருத்துகளை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்று அறிவித்தனர்.

18.7.2011 அன்று விசாரணைக்கு வந்தது. வைகோ ஆஜராகி வாதாடினார். ஏற்கனவே இதுகுறித்து, நாக்பூர் நீரி நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள சுற்றுச்சூழல் நிலைமையை ஆய்ந்து தருமாறு உச்சநீதிமன்றம் இட்ட ஆணைக்கு ஏற்ப, நீரி அறிக்கை தாக்கல் செய்து இருந்தது.

அந்த அறிக்கை, நிர்வாகத்துக்குச் சாதகமாக இருப்பதாகக் கூறி, நிர்வாகத்தின் வழக்கறிஞர், வழக்குத் தொடுத்த வைகோ மீது புகார் கூறினார். அதனை மறுத்து, மக்கள் நலனுக்காகவே தாம் போராடுவதாகவும், நீரி நிறுவனம், ஆய்வின்போது நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை என்று
வாதிட்டார்.வைகோ 

நீரி நிறுவன அறிக்கையை, உலகப்புகழ் பெற்ற சுற்றுச்சூழல் நிபுணர், அமெரிக்கா வில் உள்ள டாக்டர் மார்க் செர்னெய்க் அவர்களுக்கு அனுப்பி, அவர் நீரி அறிக்கையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி இருப்பதை, உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு, வைகோ கொண்டு வந்தார்.

இந்த ஸ்டெர்லைட் ஆலையை குஜராத் மாநிலத்தில் அமைக்க முயன்றபோது அந்த அரசு அனுமதிக்கவில்லை. 

அடுத்து கோவாவின் கதவைத் தட்டினர். அங்கும் அனுமதி கிடைக்கவில்லை.
அதற்குப்பின்னர், மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில், 1993 ஆம் ஆண்டு, இந்த ஆலையை நிறுவினர். கட்டடங்களைக் கட்டி, இயந்திரங்களையும் பொருத்திய பின்னர், தற்போது எவ்வாறு ஜெய்தாபூரில் அணு உலை அமைப்பதை எதிர்த்து, இரத்தினகிரி மாவட்ட விவசாயிகள் போராடுகின்றார்களோ, அதே விவசாயிகள், ஸ்டெர்லைட் ஆலையை உடைத்து நொறுக்கி, தங்கள்
எதிர்ப்பைக் காட்டினார்கள். 

மராட்டிய அரசு, தன் தவறை உணர்ந்து, ஸ்டெர்லைட்டுக்குக் கொடுத்த
அனுமதியை ரத்து செய்தது.

அங்கிருந்து மூட்டை கட்டிக் கொண்டு வந்த ஸ்டெர்லைட் நிர்வாகம், 94 இல் தமிழ்நாட்டில் அரசு அனுமதி பெற்று, எங்கள் தலையில் கல்லைப் போட்டது.
இந்த ஆலையை அமைப்பதற்கு அரசு அனுமதி கொடுத்தபோது, 

கடல் பூங்கா போன்ற சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால்தான், தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என நிபந்தனை விதித்து இருந்தது. ஆனால், 21 தீவுகளை
உள்ளடக்கிய தேசிய கடல் பூங்கா அமைந்து உள்ள துhத்துக்குடி கடலுக்கு அருகில், 15 கிலோ மீட்டருக்கு உள்ளாகவே இந்த ஆலையை ஸ்டெர்லைட் அமைத்து உள்ளது. 

இந்த ஒரு காரணத்துக்காகவே ஆலையை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் கூறி உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை, சட்டவிரோதமாக, தாங்கள் அமைக்க உத்தேசித்து உள்ள விரிவாக்கப் பகுதியில், அதுகுறித்து ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போதே, அந்தப் பகுதியில் எந்த வேலையும் செய்ய மாட்டோம் என்று உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு, 

18 கழிவுநீர்க் குட்டைகளை அமைத்து இருப்பது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் தெரியாது.

இந்த உண்மையை, ஆலைத் தொழிலாளர்கள் மூலம் அறிந்த நான், நீரி ஆய்வுக் குழுவிடம் சொல்லி, அந்தக் குட்டைகளைப் பார்வையிடச் செய்தேன். அதில் தேக்கப்படும் கழிவு நீர், சுற்றுச்சூழலுக்கு மிகமிக ஆபத்தானது. எனவே, இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வைகோ கூறியபோது,

ஆலைத்தரப்பு வழக்கறிஞர், மற்ற தொழிற்சாலைகள் எல்லாம் இருக்கிறதே? இதை மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள்? என்று கேட்டார். 

உலகத்திலேயே சுற்றுச்சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் பேராபத்தும், கடல் வளத்தையும், விவசாயத்தையும் நாசமாக்கும் விபரீதத்தையும், தாமிர நச்சு ஆலை ஏற்படுத்துவதால், அதை எதிர்க்கிறோம். அமெரிக்காவில், அசார்க்கா என்ற ஒரு தாமிர நச்சு ஆலை, மக்கள் போராட்டத்தால், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மூடுமாறு உத்தரவிட்டனர். 

1986 இல் அந்த ஆலை மூடப்பட்டது. இன்று வரையிலும், அந்த சுற்று வட்டாரத்தைப்  புனரமைக்க முடியவில்லை என்று வைகோ தெரிவித்தார்.

நீரி நிறுவனம் தந்த அறிக்கை குறித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும், தமிழ்நாடு அரசும் கொண்டு உள்ள கருத்துகளை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், நீதிபதிகள் அறிவித்தனர்.

No comments:

Post a Comment